இது 'A World Beyond' என்ற ஆங்கில நூலின் மொழிபெயர்ப்பாகும். இந்நூலை எழுதியவர் ரூத் மோன்கொமெரி (Ruth Montgomery) எனும் ஒரு பெண்மணியாகும். மனிதருக்குள் மேலுலக ஆத்மாக்கள் வந்து பேசுவதைப் போன்று மேற்குலகில் 'Automatic Writing' என ஒரு விடயமுள்ளது. அதாவது ஆத்மாக்கள் எங்கள் மூலமாக வந்து சில விடயங்களை எம்மைக் கொண்டு எழுதச் செய்வது என்பதாகும். இந்நூலானது அப்படியாகத்தான் எழுதப்பட்டது. 'ஆர்தர் போர்ட்' என்று இந்நூலாசிரியைக்குத் தந்தையைப் போலிருந்த ஒருவர் மேலுலகம் சென்ற பிற்பாடு அவர் மூலமாக எழுதப்பட்டது இந்நூலாகும்.

Sunday, March 21, 2021

முதலாவது அத்தியாயம்: ஆர்தர் ஃபோர்ட் உயிர்வாழ்கிறார் (Arthur Ford Lives)

 



தொலைபேசியின் கணீரென்ற ஒலி எனது ஆழமான உறக்கத்தைச் சற்றே கலைக்க முயன்றது. அப்பொழுது தான் விடிந்து கொண்டிருந்ததால் அது பிழையான அழைப்பாக இருக்குமென நித்திரைச் சோம்பலில் தீர்மானித்தேன். தலையணையில் மேலும் அழுந்தி, விடுபட்ட கனவைத் தொடர முயன்ற என்னைத் தொடர்ந்த தொலைபேசியின் கதறல் எடுக்கத் தூண்டியது. அடுத்த முனையிலிருந்து மிகப் பரிச்சயமான குரலொன்று, "ருத் (Ruth), நான் மேரியான் வொல்ஃப் (Marianne Wolf) ஃபிலதெல்ஃபியாவில் இருந்து (Philadelphia) பேசுகிறேன்" என்றது. 
மேரியான் தொடர்ந்து "ஆர்தர் இறந்து விட்டார்" என்ற போது அதைக் கிரகித்துக் கொள்ளவும் எனது இதயத்தில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல் இருந்தது. "இவ்வளவு அதிகாலையில் குழப்பியதற்கு மன்னித்துக் கொள் ருத். ஆனால் வானொலியில் செய்தி சொல்வதற்கு முன் உனக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்பதால் தான் அவசரப்படுகிறேன். மையாமியில் இன்று காலையில் தான் அவர் காலமானார்." என்றாள் மேரியான் தொடர்ந்து.
ஆர்தர் இறந்து விட்டாரென்பது உயிரை உலுக்கும் செய்தியாக இருந்தது. முதல் நாள் தான் அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொள்வதற்கு முயல்கையில் அவரது (ஃப்ளோரிடா) தொலைபேசி எண்ணைத் தவறவிட்டது தெரிந்தது. எனது நாட் குறிப்பில் அவருடன் கடிதமூலம் தொடர்பு கொள்வதற்கு எழுதிய குறிப்புக் கண்ணில் பட்டது. இரு மாதங்களுக்கு முன் நியூயோக் சிற்றியில் எனது புதிய புத்தகத்துக்காகச் சுற்றுலா சென்ற போது இரவு மீண்டும் ஹோட்டல் அறைக்கு வர எனக்கு ஆர்தரிடமிருந்து ஒரு செய்தி, 'எந்நேரமென்றாலும் வந்தவுடன் தன்னைத் தொலைபேசியில் தொடர்பு கொள்ளும்படி' இருந்தது. நான் உடனே அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். உரையாடல் பலமாக இருந்தது. நியூயோர்க்கிலிருக்கும் யூனிவேர்சலிஸ்ட் சர்ச்சில் (Universalist Church) நடந்த எனது உரையைப் பற்றிய செய்தி அவருக்கு எட்டியிருந்தது. அதில் அவரைப் பற்றிப் புகழ்ந்து பேசியிருந்தேன். அது அவருக்கு மிக மகிழ்வாக இருந்தது. அப்போது அவரது உடல் நிலை நன்றாக இருந்ததால் ஒரு விரிவுரையாடல் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார். அது தான் நான் அவரின் குரலை இறுதியாகக் கேட்டது.
இப்போ அவர் இவ்வுலகில் இல்லை. அன்று முழுவதும் (4.1.1971) அவர் இறந்த கவலையில் இருந்தேன். 69 ஆம் ஆண்டு நானும் பாப் (Bob) உம் மெக்சிகோவில் இருக்கும் குவேனவாகா (Cuernavaca) நகரத்துக்குச் சென்று வசிப்பதற்கு முடிவு செய்த போது ஆர்தரும் எங்களுடன் வர விரும்பினார். எங்களுக்கும் அவரை எங்களருகில் குடி வைக்க விருப்பமெனினும் அவரது உடல் நிலையை உத்தேசித்து அதற்கு மாறான வழியில் புத்தி சொன்னோம். அந்த உயர்வான பிரதேசம் (நிலமட்டத்திலிருந்து ஒரு மைல் உயரம்) அவரது இருதயத்திற்குக் கூடாது என்பதாலும் மெக்சிகோ சிற்றியிலிருந்து மிகக் கிட்டிய வைத்தியசாலையே ஐம்பது மைல் தொலைவில் இருப்பதாலும் நாம் அந்த எண்ணத்தை வரவேற்கவில்லை. அதன் பிறகு அவர் மியாமியில் இருந்து கொண்டார். அங்கே ஒரு இருதயச் சிகிச்சை கிளினிக் அருகே இருந்தது அவருக்கு மிகவும் உதவியாக இருந்தது. இனி அவரை மிகக் கடுமையாக வருத்திய 'அஞ்சைனா பெக்டோரிஸ்' (angina pectoris) என்ற இருதய நோயிலிருந்து அவர் விடுதலை பெற்று விட்டாரெனினும் எனது சுயநலம் அவர் மீண்டும் வரவேண்டுமென விரும்பியது. பன்னிரண்டு வருடங்களுக்கு மேலாக அவர் எனக்கு ஒரு தந்தையைப் போலிருந்தார். ஆர்தருக்குள் 'ஆத்மா' வந்த போது தான் எனது தந்தையுடன் தொடர்பு கொள்ள இயலுமாகவிருந்தது. ஆர்தருக்குள் வரும் ஃபிளெச்சர் (Fletcher) என்ற மறு உலக ஆத்மாவின் மூலம் எனது தந்தையும் என்னுடன் தொடர்பு கொண்டார்.
ஆர்தரைச் சந்தித்த பின்பு தான் எனக்குத் 'தன்னிச்சையான எழுதுகை' (automatic writing) வருவது தெரிந்தது. லிலி என்ற உயர் எண்ணம் கொண்ட ஆத்மா எனக்குள்ளால் 'தன்னிச்சை எழுதுகை' மூலம் தொடர்பு கொண்டது. எனது 'உண்மையின் தேடல்' (A Search for the Truth) என்ற புத்தகத்துக்கும் 'இங்கும், அங்கும்' (Here and Hereafter) என்ற அத்தியாயத்துக்கும் லிலி என்ற ஆத்மாவின் உரைகளே காரணங்களாக இருந்தன. அந்த இரு நூல்களுக்குப் பிறகு நான் தன்னிச்சை எழுதுகையைக் கைவிட்டு விட்டேன். அதற்குக் காரணங்களிருந்தன. முதலாவதாக இவ்வுலக வாழ்க்கையில் நான் கொஞ்சம் கூடுதல் ஈடுபாட்டுடன் இருந்த காரணம். அடுத்தது இறந்த ஆத்மாக்களுடன் தொடர்பு கொள்வதென்பது என் வரையிலாவது நிரூபிக்கப்பட்டு விட்டதுடன் எனக்குத் தொடர்ந்து ஒரு ஆவியுலக இடையீட்டாளராகச் (medium) செயல்படும் விருப்பமும் இல்லாதிருந்தது. எனவே நான் சாதாரண விஷயங்களுக்கு மாறித் 'தலைவர்களுக்கு வந்தனம்: ஆறு ஜனாதிபதிகளுடனான எனது வாழ்க்கை' (Hail to the Chiefs: My Life and Times with Six Presidents) என்ற புத்தகத்தை எழுதினேன். இதனால் 'வாஷிங்டன்' என்ற பத்திரிகையின் நிரந்தர எழுதுனர் என்ற பெயரை மீண்டும் நிலைநாட்ட இயலுமாக இருந்தது. இப்போ எனது அடுத்த புத்தகமான மெக்சிகோவின் வெற்றியைப் பற்றி, ஹெர்னான்டோ கோர்டேசுக்கு மொழி பெயர்ப்பாளராகச் செயற்பட்ட 'மாலின்ச்' என்ற சிவப்பிந்திய இளவரசியைக் கதாநாயகியாக்கி எழுதிக் கொண்டிருக்கிறேன். நான் இப்போ சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பியதை முன்னிட்டு எனது குடும்பத்தினர் நிம்மதி அடைந்துள்ளனர்.
அன்று அந்தத் துயரச் செய்தியைக் கேள்வியுற்ற பின்னர் திடீரென ஏதோ ஒரு உந்து சக்தி என்னை எனது தட்டச்சு இயந்திரத்துக்கு இழுத்துச் சென்று மீண்டும் தன்னிச்சை எழுதுகையை எழுதத் தூண்டியது. 'ஒன்றுமே கூட நடவாமல் போகலாம்' என நான் எண்ணினேன். ஏனெனில் சென்ற முறை நான் சடுதியாகத் தன்னிச்சை எழுதுகையைக் கைவிட்டு விட்டதனால் அப்போ எனக்கு உதவிய 'லிலி' என்ற அந்தச் சுறுசுறுப்பான ஆத்மா மீண்டும் எனக்கு உதவுமோ என்று சந்தேகமாக இருந்தது. ஆனால் அதுதான் நடந்தது. பாதுகாப்புக்கான வழமையான எனது பிரார்த்தனையை முடித்துத் தட்டச்சு இயந்திரத்தில் இயங்குவதற்குத் தயாரான நிலையில் எனது விரல்களை வைத்ததும் தான் தாமதம் எனது விரல்கள் தன்னிச்சையாக இயங்கத் தொடங்கிப் பின்வருமாறு எழுதியது: ரூத், லிலியும் குழுவினரும் இப்போ இங்கே இருக்கிறோம். ஆர்தர் ஃபோர்டும் இங்கேயிருக்கிறார். அவர் தான் வசந்தகாலம் போல இளமையுடன் இருப்பதாக உனக்குச் சொல்லச் சொன்னார். தான் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் உன்னைக் கவலைப்பட வேண்டாம் என்றும் சொல்லச் சொன்னார். அவர் உன்னால் கற்பனை கூடச் செய்ய முடியாத அளவு மகிழ்ச்சியாக உள்ளார். அவர் தன் மனத்துள்ளே இரகசியமாக இப்படிப்பட்டதொரு பயணத்தை வேண்டி நின்றார். ஆனால் அவர் எதிர்பார்த்ததிலும் பார்க்க இது அழகாக உள்ளதாகவும் அவருள் 'ஆத்மா' வந்த போது அனுபவித்ததிலும் பார்க்க இனிமையாக உள்ளதாகவும் சொல்கிறார். அவர் உலகிலேயே மிக மகிழ்ச்சியாக உள்ளார். அவருக்கு மிக வேதனையைத் தந்த அந்த உடலை விட்டுவிட்டு வந்ததற்காக அவர் மகிழ்கிறார்.
எனது நெஞ்சிலிருந்த பாரம் இறங்கி மனது இலேசான மாதிரியிருந்தது. மறுநாள் காலை 'லிலி' எனது தந்தை 'இரா விட்மர் ஷிக்' (Ira Whitmer Shick) உடன் தொடர்பு கொள்ளச் செய்தார். எனது தந்தை, "ரூத், ஆர்தரும் நானும் நண்பர்களாகி விட்டோம். அவர் மிக நல்லவர். இப்படிப்பட்டதொரு மிக இயல்பான தொடர்புக்கு உன்னைத் தூண்டியதற்கு அவரை நான் பாராட்டினேன். ஆனால் அவர் எனக்கும் அதில் பங்கு இருப்பதாகச் சொல்கிறார். நீயும் என்னுடன் தொடர்பு கொள்ள மிக ஆவலாய் இருந்ததாயும் சொல்கிறார்." என எழுதினார்.
பின்பு ஆர்தர் அவர் மூலம் வந்து, "ரூத், நான் இப்போ ஆர்ட் (ஆர்தரின் சுருக்கம்) எழுதுகிறேன். இப்போதைக்கு நான் உன்னுடன் தொடர்பு கொள்வதை வெளியில் சொல்ல வேண்டாம். ஏனெனில் பிறகு மற்றையவர்கள் தாமும் தொடர்பு கொள்வதாகச் சொல்வார்கள். எனக்கு இப்போ அதற்கு நேரமில்லை. மேரியானுக்கும் சுகம் சொல்லி விடவும். மேரியான் உனக்கு எனது மரணச் செய்தியை உடனே தெரிவித்ததற்கு அவளுக்கு என் நன்றியைத் தெரிவித்து விடு. பூதவுடலை நான் நீத்ததை எனது உற்ற தோழியான நீ உடனே அறியவேண்டுமென விரும்பினேன். நீயும் மேரியானும் என்னுடன் மிக அன்பாக இருந்தீர்கள். நான் அங்கு இருந்த போது எனக்கு நீங்கள் இருவரும் செய்த உதவிகளுக்கு மிக்க நன்றி. 'குட் பை' சொல்ல வேண்டிய அவசியமில்லை. நான் இங்கே தானிருக்கிறேன். உனக்குத் தெரிகிறமாதிரி நான் ஒரு இடமும் செல்லவில்லை. உனது தந்தையை எனக்கு மிகவும் பிடித்துக் கொண்டது. அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்வேன். இப்போதைக்கு இவ்வளவு தான் ரூத். இப்படிக்கு உன் நண்பன் ஆர்ட்" என எழுதினார்.
மறுநாட் காலை 'லிலி'யின் தூண்டுகையால் பழையபடி எனது தட்டச்சு இயந்திரத்தின் முன்னே அமர்வதற்குத் தயாரானேன், (முந்தைய எனது 'உண்மையைத் தேடி' என்ற நூலுக்கான விஷயங்களைச் சேகரிக்கும் போது செய்தது போல). லிலி எழுதினார்: ஆர்தர் இப்போ இங்கில்லை. அவர் தனது மரணச் சடங்குக்கான ஆயத்தங்களைப் பார்ப்பதற்கும் அவர் விட்டு வந்த எஸ்டேட்டை என்ன செய்வது என்று பார்க்கவும் சென்று விட்டார். ஆனால் இது ஒரு தற்காலிக நிலை தான். கூடிய விரைவில் எது எப்படியானாலும் எவர் எங்கு சென்றாலும் ஒரு மாற்றமும் இங்கில்லையென அவர் அறிந்து கொள்ளவார்.
பின்பு 'லிலி' மார்பெல் ஜூடி என்ற எனது அண்மையில் இறந்த அன்ரியைப் பற்றிச் சொன்னார். அவர் எப்படித் தனது பழைய நண்பர்களைச் சந்தித்து மகிழ்ந்தாரென உரைத்தார். பின்பு ஆர்தர் வந்தார். அவர் எழுதினார், "லிலி அற்புதமானவர். பூவுலகில் உன்னையறிந்ததன் பிற்பாடு அவரை நான் உணர்ந்திருக்கிறேன். அவர் ஒரு பிரகாசமான மிகச்சக்தி வாய்ந்த ஒளி நிறைந்த ஆத்மா ஆவார். அவர் உனதருகில் இருப்பது நல்லது. எனவே அவரை உதாசீனம் செய்யாதே. அத்துடன் அவரது உதவியை ஏற்கத் தயங்காதே" என்றார்.
ஆர்தர் இப்போ நான் எழுதிக்கொண்டிருக்கும் புத்தகமான 'மாலின்ச்'சைப் பற்றிக் கேட்டார். அதை விரைவில் முடிக்கும் படி கூறினார். இரெண்டொரு நாட்களில் இதற்கான காரணம் தெரியவந்தது. இறப்பின் பிற்பாடு உள்ள வாழ்வின் தன்மைகளைப் பற்றிய ஒரு புத்தகத்தைத் தன்னுடன் சேர்ந்து எழுதுவதற்காக என்னை எதிர்பார்த்தார். அவர் தனது வழமையான உற்சாகமான முறையில், தான் இப்போ உள்ள இடத்தைப் பற்றிய முழு விபரங்களையும் சேகரித்ததாகவும் அவை அப்புத்தகத்துக்கு உதவி, உண்மையான மறு உலக நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் என்றும் உறுதியளித்தார்.
ஜனவரி மாதம் 19 ஆம் திகதி நியூயோர்க்கிலிருக்கும் எனது புத்தக வெளியீட்டாளர் வேறொரு வெளியீட்டகம் 'மாலின்ச்' என்ற பெயரில் இன்னொரு புத்தகம் வெளியிடப் போவதாக அறிவித்தார். ஒரு வருடத்தில் ஒரே விஷயத்தைப் பற்றி இரு புத்தகங்கள் வெளிவருவது புத்திசாலித்தனமல்ல என்பதால் நான் அரைகுறையாக விட்டிருந்த புத்தக எழுத்துக்களை மூட்டை கட்டி வைத்து விட்டேன். லிலியும் ஆர்தரும் மகிழ்ந்தார்கள். மறுநாள் லிலி, "இன்னொரு புத்தகம் வெளிவருவதைப் பற்றிய செய்தி உனக்கு வரும் வரையிலும் எமக்கும் தெரியாது. எம்மால் எதையும் அறிய முடியும், எமக்கு எல்லாம் தெரியுமென எண்ணி விடாதே. பூவுலகில் நடக்கும் பல விடயங்கள் (நாம் நெருக்கமாக வேலை செய்யும் உன்னைப் போன்றவர்களின் புத்தியை ஊடுருவும் வேளை தவிர) எமக்குத் தெரிவதில்லை. உனது புத்தகம் வெளியிட இயலாமல் போனதைப் பற்றி எமது அனுதாபங்கள். ஆனால் எமக்கு அச்செய்தி கவலையளிக்கவில்லை. ஏனெனில் எமது மிக முக்கியமான, உபயோகமான ஒரு திட்டம் இதனால் வீணாகத் தாமதமாகிறது. அதைப் பற்றித்தான் ஆர்தர் ஃபோர்ட் உன்னுடன் பேசியிருந்தார். உனக்குச் சம்மதமெனில் உடனேயே அத்திட்டத்தை ஆரம்பிக்கலாம். வாழ்வானது ஒரு கட்டத்திலிருந்து இன்னொரு கட்டத்துக்கு எப்படித் தொடரும் என்பதைப் பற்றிய விஸ்தாரமான உண்மைகளையும் எப்படி ஒவ்வொன்றும் வேறுபடுகிறது என்பதைப் பற்றியும் அறியலாம். பூதவுடலை நீத்து மேலுலகுக்குச் செல்வதனைப் பற்றியும் பின்பு மேலுலகிலே எங்களது வாழ்வின் படிகளையும் ஆராயலாம். மேலுலக வாழ்வின் ஒவ்வொரு உயர்வான கட்டங்களைப் பற்றியும் நான் விளக்குவேன்.
மிக்க ஆவலுடன் 'லிலி' சொன்னதன் படி ஒரு புதிய காகிதத்தை டைப் ரைட்டரில் பொருத்தினேன். ஆர்தர் எழுத ஆரம்பித்தார். "ருத் நீயும் நானும் முந்தைய பல பிறவிகளில் ஒன்றாக இருந்திருக்கிறோம். நாம் நண்பர்களாக இருந்திருக்கிறோம்; சகாக்களாக இருந்திருக்கிறோம். சில பிறவிகளில் உறவினர்களாகவும் சிலவற்றில் இல்லாமலும் இருந்திருக்கிறோம். பூதவுடலுடன் நானிருக்கும் போது இதை உணர்ந்திருக்கிறேன். அத்துடன் இப்போதும் அது நிரூபணமாகி உள்ளது. நாம் ஒரு பிறவியில் கூட எதிரிகளாக இருக்கவில்லை. அதுதான் கடைசிப் பிறவியான இப்போ முடிந்த பிறவியில் ஒற்றுமையாக நாம் வேலை செய்ததுடன் எமக்குள் உண்மையுள்ளவர்களாயும் இருந்திருக்கிறோம். முகவுரைக்கே இவ்வளவு வந்துவிட்டது. நாம் இப்போ ஆத்மாவுக்கு அழிவில்லை; அது நிரந்தரமானது என்ற உண்மைதனை ஏற்றுக்கொண்டு அதிலிருந்து எமது நூலைத் தொடர்வோம். சிலர் சொல்வது போல பிறப்பில் தொடங்கி இறப்பில் முடிவதல்ல எமது வாழ்க்கை. நாம் இல்லாத நாளே கிடையாது. நாம் என்றும் இருந்து கொண்டே இருக்கிறோம். ஆனால் அடிக்கடி உருவங்களிலும் நிலைகளிலும் மாறுதலடைந்து கொண்டிருக்கிறோம். நாம் இறைவனுக்கு நிகரானவர்கள். இறைவன் எங்களில் ஒரு பகுதியே. இந்த வசனம் சிலரைத் திடுக்குற வைக்கலாம். ஆனால் எல்லாரையுமல்ல. எவ்வளவு ஒரு விரிவான உணர்வு. நாம் ஒவ்வொருவரும் இறைவனுக்கு நிகரென்பதால் அனைவரும் சேர்ந்தால் நாம் இறைவனே. ஒரு முழுமையான இறைவனை உருவாக்க அனைவரும் தேவை என்பதால் ஏனையவர்களும் எங்களுக்கு மிக வேண்டியவர்களே. அத்துடன் உலகப் பொது நலனுக்கு எம்மைப்போல ஏனையவர்களும் அவசியமானவர்களே. எமது கைகள், கால்கள், கண்கள், காதுகள் எவ்வளவு எமக்கு முக்கியமானவையோ அவ்வாறே  ஏனையவர்களும் எமக்கு முக்கியமானவர்களே. எனவே அனைவரும் உயர்ந்தவர்களாகவும் முக்கியமானவர்களாகவும் இருக்கிறார்கள்."
"உயிருடனிருப்பவர்களோ இறந்தவர்களோ அனைத்து உயிரினங்களும் சேர்ந்தால் தான் முழுமையிருக்கும். ஒருவர் குறைந்தாலும் குறை இருக்கும். ஒருவர் அனைவருக்காகவும் அனைவரும் ஒருவருக்காகவும் இருப்பதென்பது இருப்பவர்களையும் இறந்தவர்களையும் சேர்த்துத்தான் என்பதை மறந்து விடாதே. ஏனெனில் அனைவரும் சேர்ந்து தான் பிரம்மத்தை உருவாக்கலாம். அது தான் நாம் கடவுளென்று அழைப்பது. பாதிரிமார்களுக்கு இந்த விளக்கம் விருப்பமில்லாதிருக்கலாம். ஆனால் நீ கொஞ்சம் சிந்தித்தாயானால் இது ஏசுபிரான் சொன்ன, "இறைவனின் ஆட்சி எம்முள்ளே" என்ற அறிவித்தலையும் அனுசரிக்கிறது. ஆனால் இப்போது சொல்லப்படுவது போல இறைவன் உயரே இருந்து கொண்டு எம்மைச் சரி பிழை பார்த்துக் கொண்டிருப்பது என்பதை மறுதலிக்கிறது. நாமனைவரும் சேர்ந்து தான் இறைவனை உருவாக்குகிறோம். நாம் அனைவரும் இறைவனின் ஒரு பகுதியே"
ஆர்தர் ஆத்மாவைப் பற்றிய இந்தத் தத்துவத்தையே விளக்கங்களுடன் தொடர்ந்து கொண்டிருந்திருப்பார். ஆனால் நான் இக்கட்டத்தில் குறிப்பாக ஆர்தரும் ஃப்ளெட்சரும் (Fletcher) மீண்டும் சந்தித்த விடயத்தைப் பற்றி அறிய விரும்பினேன். ஃப்ளெட்சர் என்பவர் ஃப்ளோரிடாவில் ஆர்தரின் சிறிய வயதுப் பிரஞ்சுக் கனேடியச் சிநேகிதன். முதலாம் உலகப் போரில் உயிரிழந்தவர். அவர் உயிரிழந்து சில வருடங்களின் பின் ஆர்தர் மூலமாக வந்து ஆவியுலகுக்கும் இவ்வுலகுக்குமிடையே தொடர்புகளை ஏற்படுத்தினார். பல ஆத்மாக்கள் ஆர்தருக்குள் வந்து இவ்வுலகிலிருக்கும் தமது உறவினர்களுடன் தொடர்பு கொள்வதற்கு இது உதவியது. ஆர்தரை அறிந்தவர்கள் அனைவருக்கும் இது தெரியும். எனது எண்ணம் ஆர்தருக்குத் தெரிந்து விட்டது போலும். ஏனெனில் மறுநாள் காலை அவர் தொடங்கும் போதே, "ஹாய் ருத், நான் இவ்வுலகுக்கு வந்தவுடன் எனது தாயார், சகோதரி, அத்துடன் நெருங்கிய உறவினர்களின் வருகையால் மகிழ்ந்தேன். பின்பு ஃப்ளெட்சர் வந்தார். அவரது முகம் மகிழ்ச்சியால் பளிச்சிட்டது. அதற்குக் காரணம் நான் அவ்வுலக வாழ்க்கையை எவ்விதப் பிரச்சனையுமின்றி இலகுவாகக் கடந்து விட்டது தான். அத்துடன் அவரது கடமையிலிருந்து நான் அவரை விடுவிப்பேன் என்பதும் காரணம். அவருக்கு அவரது கடமையை நிறைவேற்ற ஆசையிருந்தாலும் பொறுப்பாகவும் இருந்தது.
ஃப்ளெட்சரின் முதலாவது வசனமே, "பால்ய நண்பனே வருக, வருக! இருவருக்கும் விடுதலையடைந்த மாதிரி எவ்வளவு மகிழ்வாக உள்ளது! இனி நான் உயர்ந்த சேவைகளுக்குச் செல்லலாம்", என்பதாகும். ஆனால் முதலில் அவர் எனக்கு மறு உலகில் என்னென்ன எதிர்பார்க்கலாம் என்பதனை விரிவாக எடுத்துரைத்ததுடன் சில மிக அவசியமான அறிவுரைகளும் வழங்கினார். தான் ஐம்பது வருடங்களாக என் மூலமாக வந்து பூவுலகிலிருப்பவர்களுடன் தொடர்பு கொண்டதால் பூவுலக பந்தங்களில் இருந்து விடுபட முடியாமல் தவித்ததைப் போல என்னைத் தவிக்காமலிருக்கும் படி அறிவுரை வழங்கினார். அதுதான் இப்புத்தகத்தை எழுதுவதற்காக எல்லோரும் உன்னுடன் தொடர்பு கொள்வதில் ஆவலாக உள்ளோம் ருத். இப்படிப்பட்டதொரு குறுகிய காலத் திட்ட நடவடிக்கையை நிறைவேற்றுவதன் மூலம் நான் எனது விட்டகுறை தொட்டகுறையான கடமைகளை நிறைவேற்ற விரும்புகிறேன். அத்துடன் இத்துறையில் எனது வழிகாட்டலை எதிர்பார்த்த நல்ல மனிதர்களின் அறிவுகளுக்கு என்னாலான நிரந்தரப் பங்களிப்புகளையும் அளிக்க விரும்புகிறேன். அதன் பின் நான் மேலான சேவைகளுக்குச் செல்ல இயலும். ஃப்ளெட்சர் செய்ததைப் போல வருடக்கணக்கில் செய்தித் தொடர்பாளராக இரு உலகங்களுக்கும் இடையில் என்னைப் பந்தப்படுத்த எனக்கு விருப்பமில்லை. இது தான் என் எண்ணம்."
"இனி இந்த நிலையில் வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதைப் பார்ப்போம். இந்த நிலைக்கு நான் புதிது என்பதால் இங்கு நான்  அனுபவிப்பவைகளை முழுமையாகப் புரியவைக்க இயலாமல் இருக்கலாம். எனவே இங்கு வரப்போகும் எனது வளர்ச்சி நிலைகளுக்கு ஏற்ப உங்களையும் நான் உடன் அழைத்துச் செல்வேன். வாசகர்கள் தாமும் அதை நேரில் அனுபவிப்பதைப் போல உணரலாம். கடிகார நேரம் இங்கில்லை. இங்கு நேரம் வித்தியாசமாக உள்ளது. நேரத்தைப் பற்றி பெற்றி (Betty) என்பவரும் ஸ்டுவேர்ட் எட்வேர்ட் வைட் (Stewart Edward White) என்பவரும் 'தடைகளற்ற அகிலம்' (The Unobstructed Universe) என்ற புத்தகத்தில் எழுதியுள்ளனர். அதில் அவர்கள் செங்குத்தான நேரத்துக்கும் நட்சத்திரங்களால் ஆன (பூமியில் உள்ள) நேரத்துக்கும் இடையேயான தொடர்பைப் பற்றி எழுதியுள்ளனர். எனவே நேரத்தைப் பற்றிய விடயத்தை உயர்ந்த அறிவுள்ள அவர்களிடமே விட்டு விடுகிறேன். அவர்கள் இருவரின் நிலையும் இங்கே மிக முன்னேறியுள்ளது. நாம் எமது இந்த நூலைக் கடுமையான சொற்களை உபயோகித்து வாசகர்களைக் குழப்பாமல் எல்லோருக்கும் புரியக்கூடிய விதமாகக் கொண்டு செல்வோம். நாம் இங்கே காலத்தையும் இடத்தையும் தவிர்க்கலாம். பூவுலகின் எந்த இடத்துக்கும் எந்த நேரத்திற்கும் வெறுமனே எண்ணுவதன் மூலமே நாம் சென்று வரலாம். எதிர்காலம் எனப் பூவுலக வாசிகளால் அழைக்கப்படும் காலங்களையும் சற்றே நாம் அறியலாம். எனவே பூவுலகின் நேரம் எனும் எண்ணத்தின் எல்லைகளைத் தாண்டி நிற்கின்றோம் எனலாம். எந்த விஷயமும் நிகழ்வுகளும் முன்பே திட்டமிடப்பட்டுள்ளதால் தவறு நேர்வதற்குச் சந்தர்ப்பமில்லை. எவ்வளவு தூரத்துக்கு அனைத்து விடயங்களும் முதலிலேயே திட்டமிடப்பட்டுள்ளன என்பதைப் பூவுலகவாசிகள் அறிந்திருந்தால் பேரழிவுகளைத் தவிர்ப்பதற்கு சிரமப்பட மாட்டார்கள். ஏனெனில் நடைபெறும் விஷயங்களெல்லாம் முன்னால் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கையில் அதைப்பற்றிக் கவலைப்பட்டு ஆவதென்ன? வருவதை அப்படியே ஏற்றுக்கொண்டு, ஆக்க பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும். மற்றையவர்களுக்கு உதவியாக இருந்து எதிர்காலத்தை அச்சமின்றி எதிர்கொள்ள வேண்டும். இப்பூவுலகுக்கு நாம் வரும் போது செய்து முடிப்பதற்கு ஏற்றுக் கொண்ட வேலையின் நிமித்தமோ அல்லது எமக்காக ஏற்படுத்தப்பட்ட தெய்வீகத் திட்டத்தின் ஒரு பகுதியாகவோ அவை இருக்கும் போது பயமேன்? அத்திட்டத்தின் மேலுள்ள நம்பிக்கைக் குறைவே பயத்துக்குக் காரணம். நிதானமாக வருவதை எதிர்கொண்டு உங்களால் இயன்றளவு நல்லனவற்றைச் செய்து கொண்டு இருங்கள்."
மறு நாள் ஆர்தர் ஆத்ம உலகின் வருகையைப் பற்றிய உண்மையின் திரையை மேலும் சிறிது விலக்கினார், பின்வருமாறு: "இறப்பு என்பது எமது வரவுக்காகத் திறந்து வைக்கப்பட்டிருக்கும் வாயிலே அன்றி வேறல்ல. அது ஒரு மிகச்சிறிய மாற்றம். சில வேளைகளில் அது கவனிக்கப்படாமலும் கூடப் போகலாம். அந்த வாயிலின் மறுபக்கமுள்ளது தான் முக்கியம். மேலும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், ஒரு கட்டத்தில் உடல் வலுவிழந்து சோர்ந்து விடுகிறது; இதயம் நின்று விடுகிறது; இருதயம் நிற்பதற்கு உடல் உறுப்புகள் வேலை செய்வதை நிறுத்துவது மட்டும் காரணமல்ல. எமது ஆத்மா அதன் வரவுக்காகத் திறந்து வைக்கப்பட்டிருக்கும் வாயிலினூடாக நழுவி விடுவதும் ஒரு காரணம். சிலர் மகிழ்ச்சியுடனும் சிலர் தயக்கத்துடனும் செல்வர். ஆனால் எல்லோரும் அமைதிக்காகவும் சாந்திக்காகவுமான பிரபஞ்சத்தின் அழைப்புக்கு இணங்கியே செல்வர்.
சில வேளைகளில் அந்தக் குறிப்பிட ஆத்மா நித்திரையில் ஆழலாம். குறிப்பாகத் திடீர் அதிர்ச்சியின் காரணமாக அல்லது மனவலுவில்லாத ஆத்மாக்களாயின் இவ்வாறு நிகழும். அந்த ஆத்மா விழிக்கையில் தானாக இங்குள்ள ஏனையவர்களுடன் தொடர்பு கொள்ள விரும்பும் வரையும் நித்திரை கொள்ள விடப்படும். ஆனால் சில வேளைகளில் உடலை நீக்கும் நிகழ்வானது தென்றல் காற்றில் அசையும் இலையைப் போல மென்மையாக நிகழும். எனது விஷயத்தில் அப்படித்தான் நிகழ்ந்தது. ஏனெனில் இந்த நோயால் வாடும் உடலை நீக்கும் போது என்ன நிகழுமென்ற எதிர்பார்ப்பும் அறிவும் எனக்குப் போதுமான அளவு இருந்தது. உடல் வாதை நின்றது. ஆத்மா வெளியேறிற்று. இப்போ நான் உன்னால் கனவு கூடக் காண முடியாத அளவு அழகுக்குள் நிற்கிறேன். 'இங்கு' என்பதற்கும் 'அங்கு' என்பதற்கும் பெரிய வித்தியாசமில்லை. இங்கு உடல் தேவைகள் ஒன்றுமில்லை. உலகின் அழகு மட்டுமே உள்ளது."
"இங்கு எனது உள்ளுணர்வுகளில் நினைவிருந்ததைப் போலவே அனைத்தும் இருந்ததைக் கண்டேன். ஆனால் இங்குள்ள அழகையும் ஒரே மனப்பான்மை உடையவர்களின் மேலெழும் அன்பையும் ஒருவராலும் சரியாக நினைவுபடுத்த இயலாது. இறுதியாகக் களைத்து விட்ட உடலை விட்டு விட்டு வாயிலைக் கடந்து வீட்டுக்கு வந்து விட்டதைப் போலுள்ளது. ஒரு கணத்தில் நான் நினைக்க முதலே இங்கிருக்கிறேன் (சொந்தங்கள் புடை சூழ). எனது தாயார், "அல்லேலுயா ஆர்தர், கனான் பூமிக்கு வருக வருக" என்றார். இது அவர் உரைத்தது போல் 'கனான்' பூமியல்ல என்றாலும் எனது தாயார் ஒரு சிறிய நகரத்தில் 'ஏவாஞ்சலி' என்ற நம்பிக்கையுடன் இருந்ததால் அவரின் எதிர்பார்ப்பு அது.
அங்கிருக்கும் சிலரின் சிறு பிள்ளைத்தனமான எண்ணங்களைப் போக்க வேண்டும். அர்த்தமற்ற (மோட்சம், நரகம் என்பவை போன்ற) எதிர்பார்ப்புகள் இங்கு அவர்களின் முன்னேற்றத்துக்குத் தடையாக உள்ளன. உண்மைகளைப் போர்த்து மூடி வைத்தால் அவைகளை விலக்குவதற்கு நாளாகும். அதிலும் பார்க்க உண்மைகளை இப்போதே அறிந்து கொண்டால் இங்குள்ள விடயங்களில் கவனத்தைச் செலுத்தலாம். இங்கும் வேலைகள் உள்ளன. ஆனால் அவை காரணங்களுடன் தான் உள்ளன. இங்குள்ள வேலைகள் தேவைகளைப் பொறுத்து, ஒவ்வொருவரின் தன்மைகளுக்கு ஏற்ற வகையில் மாறுபடுகின்றன. ஒருவரையும் இங்கே வேலை செய்யக் கட்டாயப்படுத்துவதில்லை. ஒவ்வொருவரும் அவரவர் வேலையை அவரவரே தீர்மானித்துக் கொள்வார்கள். அது அவர்களின் ஆத்ம முன்னேற்றத்துக்கு உதவி செய்யுமானால் அதுவே போதும். சமயவாதிகள் சொல்வது போல அதுவே தேவதைகளின் இன்னிசையை எழுப்பப் போதுமானது. ஒருவரையும் வளர்வதற்கோ முன்னேறுவதற்கோ இங்கு ஒருவரும் கட்டாயப்படுத்துவது இல்லை. மாணவனைப் படிப்பதற்குக் கட்டாயப்படுதுவது போல் இங்கு ஒருவரையும் கட்டாயப்படுத்துவது இல்லை (அவராகத் தன் முன்னேற்றத்தை வேண்டும் வரையிலும்). எனவே பூவுலகிலும் பார்க்க இங்கே நாம் உறுதியான மனத்துடன் இருக்க வேண்டும். புரிகிறதா? பூவுலகில் எம்மைக் கட்டாயப்படுத்தி முன்னேற வைப்பதற்கு எமது பெற்றாரும் ஆசிரியர்களும் இருந்தார்கள். ஆனால் இங்கு எமது முன்னேற்றமானது எமது விருப்பங்களிலேயே தங்கியுள்ளது. எனவே மனவுறுதியில்லாதவர்கள் பாதையில் கால்களை வைத்து வழியைத் தேடாமல் சோம்பி இருக்க வேண்டியதுதான்."
"என்னைப் பொறுத்தவரையில் இப்போதைக்கு நான் புரிந்து கொண்டது இப்படித்தான். நான் இங்கே இப்போது புதிதாக வந்துள்ளவன் என்பதையும் மறக்கக்கூடாது. ஒவ்வொரு பிறப்புக்குப் பிறகும் நாம் இங்கே வந்து செல்வோமெனினும் ஒவ்வொரு முறையும் புதிது புதிதாகத் தான் இருக்கும். ஒவ்வொரு பிறப்பு முடிந்தும் நாம் இங்கு வரும் போது வித்தியாசமானவர்களாகவே வருவோம். நாம் புதிது புதிதாக எண்ண வடிவங்களை உருவாக்கி இருப்போம். இங்கு என்ன எதிர்பார்ப்பது என்று புதிய எண்ணங்கள் உருவாகியிருக்கும். அத்துடன் எண்ணங்களே பொருட்கள் என்பது உறுதி என்பதாலும் நாம் இறைவனுடன் சேர்ந்து இங்கு எமக்கானவற்றை உருவாக்குகிறோம். ரூத், அங்குள்ளவர்களுக்கு இந்தப் பெரிய உண்மையை உணர்த்தி அவர்களைத் தூக்கத்தில் இருந்து நீ எழுப்ப வேண்டும் என விரும்புகிறோம். அவர்கள் தமது எண்ணங்களினால் தமது எதிர்கால நிகழ்வுகளை மட்டும் உருவாக்கவில்லை தங்களது சொர்க்கம், நரகங்களையும் உருவாக்குகிறார்கள்."
"அவரது நிலைப்பாட்டை விளக்கும் முகமாக ஆர்தர் எனது அன்ரி மாபெலின் (Mabel) நிலையை எடுத்துரைத்தார். அவர் கிட்டத்தட்ட ஆர்தர் இறந்த அதே நேரத்தில் தான் இறந்தவர். அவர் தனது வாழ்நாள் முழுவதும் மணமாகாமல் ஒரு ஆசிரியையாக இருந்து கழித்தவர். அவர் தயாள மனப்பான்மை கொண்டவர். எல்லோருக்கும் அவர் மேல் நல்ல அபிப்பிராயமும் அபிமானமும் உண்டு. ஆனால் எப்படி எனது தாயார் தனது சிறு வயதை மத்திய மேற்குப் பின்னணியில் கழித்தார்களோ அதே போலவே இவர்களுக்கும் நடந்தது. இருவருமே எனது ஆவியுலக ஆராய்ச்சியை விரும்பாதவர்களே.
ஆர்தர் ஆண்டி மாபெலைப் பற்றிக் குறிப்பிடுகையில், "ஆரம்பத்தில் அவர் தனது பழைய நண்பர்களையும் உறவினர்களையும் மீளவும் சந்தித்ததில் மகிழ்ந்து, மாறி மாறி அனைவரையும் சுகம் விசாரித்தார். பின் அவரில் சிறு மாற்றம் தெரிந்தது. பூலகில் இருக்கும் போது அவர் ஒரு குறுகிய வட்டத்துள், சமயப்பற்றுள்ள ஒரு நல்ல பெண்ணாக இருந்தார். ஆனால் அவருக்கென்று சொந்தமாக ஒரு கருத்தும் இல்லாதிருந்தது. அதற்குரிய சூழ்நிலையும் இருக்கவில்லை. இங்கு வந்தும் அந்தக் கருத்து மாறவில்லை. சொர்க்கத்தைப் பற்றிய அவரது எதிர்பார்ப்புகளுக்கு இது மாறாக இருந்ததால் தான் தவறுதலான இடத்துக்கு வந்து விட்டதாக அவர் எண்ணினார். பிழையான இடம் சரியான இடமென்று ஒன்றுமே இங்கில்லை. எல்லாம் ஒன்று தான். அந்தப்பக்கத்தில் நீங்கள் உள்ளீர்கள், இந்தப்பக்கத்தில் நாங்கள் உள்ளோம். ஆனால் நாம் பூவுலகில் இருக்கும் போது எதை எதிர்பார்த்தோமோ அது மறு உலகில் எமது நிலையைப் பாதிக்கும். அந்தப் பாதிப்பு நல்ல விதமாகவும் இருக்கலாம் அல்லதாகவும் இருக்கலாம்."
"மாபெல் ஆண்டியின் எதிர்பார்ப்பின் படி சொர்க்கத்தில் தேவதைகளும் தேவகுமாரர்களும் கைகளில் யாழுடன் மாட மாளிகைகளுக்கும் கூட கோபுரங்களுக்கும் இடையே மிதந்து கொண்டிருப்பார்கள் என்பது தான் அவர் எண்ணம். அதனால் அவர் சற்று ஏமாற்றமடைந்து விட்டார். ஆனால் அந்த ஏமாற்றம் கூடிய விரைவில் (அவர் முன்னேறுகையில்) விலகிவிடும். அது அவரில் தான் தங்கியுள்ளது. அதற்கு அவர் முயற்சி எடுக்க வேண்டும். இல்லாவிடில் பல ஆயிரம் வருடங்களுக்குக் கூட ஒரு ஆத்மா பின் தங்கி இருக்க வேண்டிவரும். வளர்ச்சி தான் எங்கும் வேண்டும். இங்கேயும் அங்கேயும் ஆத்ம வளர்ச்சியும், ஆத்மீக முன்னேற்றமும் தான் மிக முக்கியமான விடயங்கள். அதற்கு நாம் தான் முயல வேண்டும். வளர்ச்சி தானாக வந்து விடாது. அதனால் தான் நாம் எல்லோரும் கடவுளே, கடவுளின் ஒரு பகுதியே என்ற நினைப்பை உங்களுக்கு ஏற்படுத்துகிறேன். ஏனெனில் வளர்ச்சி அடைகிறோமோ, வளராமலே கருவாக இருக்கிறோமோ எனத் தீர்மானிக்கும் நாம் தான் கடவுள்கள்."
"முன்னேற்றம் தான் அங்கேயும் இங்கேயும் மகிழ்ச்சிக்குத் திறவுகோல். ஆராய்ந்து, அறிந்து முன்னேறும் ஆசை உள்ளவர்களுக்கு இது ஏற்ற இடம். இங்கு ஆகாயம், மலர்கள், மரம், செடி, கொடிகள், சூரியோதய, அஸ்தமனங்கள் அனைத்தும் உங்களால் புரிந்து கொள்ள இயலாத அளவு மிகத் தெளிவாக, மிகப் பிரகாசமாக உள்ளன. இங்கு எனினும் அங்கு எனினும் ஒவ்வொரு விடயமும் எண்ண வடிவங்களால் ஆனவை என்பது தான் இதற்குக் காரணம். இங்கு நாம் தொடர்பு கொள்வதோ, வேலை செய்வதோ, வளர்ச்சியுறுவதோ அல்லது வெற்றி அடைவதோ எல்லாம் எண்ணங்களின் மூலம் தான். அதனுடன் இங்கு எமக்குப் பூவுலக மனங்களின் இடைஞ்சல் இல்லாததால் (அவை வெறும் கருவி இயந்திரங்களே), எமது எண்ணங்களெல்லாம் உடனே நிறைவேறும். நாம் எவரை நினைத்தாலும் உடனே நாம் அவரைக் காண்போம் (அது மனிதரென்றாலும், ஆத்மாவென்றாலும்). நாம் தொடர்ந்து எமது எண்ண வடிவங்களை உருவாக்குவதால் நாம் எங்கிருக்க விரும்புகிறோமோ அங்கே இருப்போம்."
"இங்கு எமக்கு அசுத்தமான, பாழடைந்த இடங்களோ அசுத்தக் காற்றுகளோ தெரியாது. ஏனெனில் நாம் அவற்றை (அரை குறையான எண்ணங்கள் என்பதால்) எமது எண்ணங்களில் உருவாக்குவதில்லை. எண்ணங்கள் தான் சடப்பொருட்கள் என்பது  உனக்குத் தெரியும் தானே. எனவே நாம் நமது எண்ணங்களில் நாம் காண விரும்புவைகளைப் புகுத்துவோம். பூவுலகில் உங்களது எண்ணங்களால் எப்படி நீங்கள் உங்களது வாழ்வை இனிமையானதாகவோ, கசப்பானதாகவோ உருவாக்குவதைப் போலவே இதுவும். கெட்டனவற்றை நினைத்தால் உங்களைச் சுற்றிக் கெட்டன நிகழும். நல்லனவற்றை நினைத்தால் நல்லனவே நடக்கும். அன்பைப் பற்றி எண்ணினால் நீ அன்பால் ஆளப்படுவாய். வெறுப்பைப் பற்றி எண்ணினால் உலகில் வெறுப்பாளர்கள் நிறைந்திருப்பதைக் காண்பாய். இங்கு நாம் தீய எண்ணங்களைத் தவிர்ப்பதற்கு விரைவில் கற்றுக் கொள்வோம். எமது ஆத்மீக மனங்கள் தமது எண்ண வடிவங்களை வெளியிடுவதால் எமக்கு எமது எண்ணக் கருத்துக்கு ஒத்ததான எண்ணக் கருத்துகளைக் கண்டு பிடிக்க இலகுவாகும். எனவே ஒத்த கருத்துள்ளவர்கள் இலகுவாக ஒன்று சேரலாம். வெறும் நினைவாலேயே நாம் காற்றோட்டமுள்ள, சூரியவெளிச்சமுள்ள கடற்கரையோ அல்லது மலைப்பாங்கான அழகான பிரதேசமோ உருவாக்கலாம் எனும் போது ஏன் பாழடைந்த இடங்களையோ அல்லது இறுக்கமான காற்றோட்டம் இல்லாத கட்டடங்களையோ எண்ணப் போகிறோம்."
ஆர்தர் இப்பூவுலகிலிருந்த போது அவருடன் நான் இறுதியாகத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது எனது எடிட்டர் எலிஸ் அம்பேர்ன் (Ellis Amburn) என்பவருக்காக எமது அறிவுக்கு அப்பாற்பட்ட விடயங்களைப் பற்றியும் ஆவியுலக ஆராய்ச்சியைப் பற்றியும் ஒரு புத்தகம் எழுதும்படி வேண்டினேன். அதற்கு ஆர்தர் சம்மதித்திருந்தார். ஆனால் அதற்குள் அவர் இறந்து விட்டார். இப்போ அவர் அதைப் பற்றியும் பின்வருமாறு சொன்னார், "நான் அங்கிருக்கும் போது அவருக்காக எழுதாமல் விட்ட புத்தகத்துக்கு உரிய பரிகாரத்திலும் பார்க்கக் கூடுதலாக இவ்விடயம் இருக்குமென்று அம்பேர்னிடம் சொல்லு. நான் அங்கிருக்கும் போது எழுதிய வேறு புத்தகங்களில் இன்னும் சில விடயங்கள் சேர்க்க வேண்டியதாய் இருக்குமென்றாலும் மனிதர்களைக் குழப்பிக் கொண்டிருந்த பல விடயங்களைக் கண்டறிய இயலுமாக உள்ளது இப்போது. இங்கு எமது நிலையைப் பற்றிய எல்லா விடயங்களையும் உங்களுக்குச் சொல்லுமாறு லிலியும் அவரது குழுவினரும் சொல்கிறார்கள். பூவுலகிலிருக்கும் போதே ஏன் மேலுலகிற்குரிய ஆயத்தங்களைச் செய்ய வேண்டுமென்பதன் முக்கியத்துவத்தையும், தியானம் செய்வது, வழிபாடு செய்வதன் காரணங்களையும், இவையிரண்டினதும் நெருங்கிய தொடர்புகளையும், அத்துடன் மேலுலகத்தின் வாழ்க்கை முறைகளையும் சொல்லச் சொல்கிறார்கள். அங்கு ஒவ்வொரு நாளும் இதற்குரிய ஆயத்தங்களைச் செய்யாவிடின் அவையெல்லாம் வீணான நாட்களே என்பதனைச் சில உணரக்கூடியவர்களுக்கு உணர்த்தி அவர்களை எழுப்பிவிட இயலுமென நாம் எண்ணுகிறோம்.
உதாரணத்துக்கு ஒரு சிறுவனின் பாடப் புத்தகத்தை எடுத்துக் கொள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடமாக (முதல் நாளிலும் கூடிய தரமாக) அவன் படித்துப் பரீட்சை நாளில் ஆசிரியர் அவனது தராதரத்தை அளவிடக்கூடியதாக உள்ளது. அது போலவே இவ்வுலக வாழ்க்கையும். நாம் அங்கு படித்து அறிந்து வளர்ச்சியுற்று முன்னேறி மேலுலகில் எமது முன்னேற்றத்தைப் பற்றி அறியப் போகிறோம். ஆத்மீக அடிப்படையில் இது ஒரு பள்ளிக்கூடம் போலவே. ஒவ்வொரு நாளும் புதுப் பிரச்சனைகள், புதிய வழிமுறைகள், எமது ஆத்மீக முன்னேற்றத்தை அறிவதற்குப் புதிய முறைகள் வருகின்றன. தியானம் செய்யாத ஒவ்வொரு நாளும் வீணாகிப் போன நாட்களே. அத்துடன் காலம் விரைவாகப் பறந்து விடும். நான் இங்கு அறிந்தவற்றை அங்குள்ளவர்கள் உணர்ந்தார்களேயானால், பூவுலக வாழ்க்கைக் காலமென்பது மின்னல் போன்ற மிகச் சிறிய காலமே என்பதனையும், அந்தப் பூவுலக வாழ்க்கைக்கிடையில் நாம் கழிக்கும் காலமென்பது மிக நீண்ட காத்திருக்கும் காலங்கள் என்பதனையும் உணர்வார்கள்" என்றார். அத்துடன் அவர் லிலி, ஃப்ளெச்சர், மற்றும் எய்லீன் காரட் (Eileen Garrett) என்ற எனக்கும் ஆர்தருக்கும் பிரத்தியேகமாகத் தெரிந்த பிரபல அயர்லாந்து அமெரிக்க ஆவியூடகவியலாளர் மூலமாக வேலை செய்தவர்கள் போல அசாதாரணமான வேலை செய்து இங்குள்ள விஷயங்களை அங்கு வசிக்கும் திறந்த மனதுள்ளவர்களுக்கு அறியத்தந்தால் அது அவர்களின் முன்னேற்றத்துக்கு வழிகோலி அந்தக் காலங்களைக் குறைக்க உதவும் எனவும் உரைத்தார்.
அத்துடன் ஆர்தர் இடையில் தான் எய்லீனைச் சந்தித்ததைப் பற்றி, "நான் எய்லீனை இங்கே பல தடவைகள் சந்தித்திருக்கிறேன். அவருக்கு அங்கிருந்ததைப் போல மூட்டுவாத நோய்களோ, மனவருத்தங்களோ இன்றி மிகவும் சாந்தமாக, அமைதியாக, அழகாக, முழு விழிப்புணர்வுடன் காணப்படுகிறார் (அங்கேயுள்ள மாயத்திரை விலகி வழிவிட்டு வந்ததைப் போல). அவர் அங்கு செய்ததைப் போல இங்கு வேலை செய்ய ஆர்வமாக உள்ளார். ஆனால் சரியான தொடர்பு தேவைப்படுகிறது அவருக்கு" என்றுரைத்தார்.

Friday, March 12, 2021

இரண்டாவது அத்தியாயம்: ஆர்தர் ஃபோர்டின் வாழ்க்கைச் சரிதம் (The Arthur Ford Saga)




ஆர்தர் ஃபோர்ட் அமெரிக்காவின் மிகப்பிரபலம் வாய்ந்த ஆவியூடகவியலாளராக (medium) இருக்கையில் அவருக்குக் கடுமையான இருதயநோய் வந்து இறந்தார். அவர் நன்கு படித்தவர். பல நூல் கற்றவர். பண்புள்ளவர். நகைச்சுவையாகப் பேசுபவர். அவரின் குறும்புத்தனமான, நையாண்டித்தனமான பேச்சுகளினால் அவரைச் சுற்றி இருப்பவர்கள் எப்போதுமே மகிழ்ச்சியாகக் காணப்படுவர். அவர் சுய நினைவுடன் இருக்கையிலும் அவருள் 'ஆத்மா' வந்து பேசுகையிலும் அனைவரையும் அவர் கவரக்கூடியவர். அவரது 50 ஆண்டு கால 'ஆவியூடகவியலில்' அவர் சக்தி வாய்ந்த வலிமையான ஆத்மாக்கள், சக்தி குறைந்த சாதாரண ஆத்மாக்கள் எல்லாவற்றுக்கும் ஒரேவிதமாக, வேறுபாடின்றி ஊடகமாகச் செயற்பட்டிருக்கிறார். அவர் இன வேறுபாடு பார்ப்பவரல்ல. கடுமையான இருதய நோயிலிருந்து அப்போது தான் அவர் மீண்டு கொண்டிருந்த போதும்  மார்டின் லூதர் கிங் வாஷிங்டனில் நடாத்திய முதலாவது நடைபவனியில் ஏனைய மதகுருமார்களுடன் தானும் சென்று பங்கு பற்றினார். ஏனெனில் அவருக்கு மனித உரிமைகளில் அவ்வளவு நம்பிக்கை இருந்தது. 
அவர் மிகுந்த ஞானதிருஷ்டி உள்ளவர். அத்துடன் ஒருவர் உபயோகித்த பொருட்களை வைத்து அவரைப் பற்றிய முழு விபரங்களையும் சொல்லக்கூடிய வல்லமையுள்ளவர். அவர் நேரடி ஆவியூடகமாகச் செயற்படவில்லை. ஆனால் முழு விழிப்பு நிலையிலேயே இறந்தவர்களிடம் இருந்து விபரங்களை அறியும் ஆற்றல் கொண்டிருந்தார். அவருள் ஃபிளெச்சர் (Fletcher) என்கிற ஆத்மாவே வந்து அவர் மூலம் இறந்த ஆத்மாக்களைத் தொடர்பு கொள்ளும். இறந்த ஆத்மாக்கள் நேரடியாகக் குழல் கருவி மூலம் (trumpet) பேசுவது போல் பேசுவதில்லை. எனவே அவர் முழு வெளிச்சத்திலும் ஒரு கறுப்புத் துணியைத் தன் கண்களைச் சுற்றிக் கட்டிவிட்டு அரைத் தூக்க நிலைக்குச் (trance sleep) சென்று குறி சொல்வார்.
நேரடி ஆவியூடகமாகத் தொழிற்படுபவர்கள் முழு இருட்டில் தான் இயங்க முடியுமென்பர். வெளிச்சத்தில் ஆவிகளின் குழல் கருவிகள் (trumpet) இயங்காது என்பர். அவர்கள் சொல்வது சரியாகவும் இருக்கலாம். ஆனாலும் அப்படிச் செய்வது துரதிஷ்டவசமாக நம்பகத்தன்மையைக் குறைத்துக் காட்டும். ஆனால் ஃபோர்ட் (Ford) ஊடகமாகத் தொழிற்படும் போது நாம் எப்போதும் குறிப்புகள் எடுக்கலாம். டேப்ரிகார்டரிலும் பதிவு செய்யலாம்.
ஃபோர்ட் அடக்கமானவர். அமரிக்கையானவர். மறு உலகுக்கும் இவ்வுலகுக்கும் இடையே ஊடகமாகத் தொழிற்படக்கூடிய அவருக்குக் கிடைத்த அந்த வரப்பிரசாதத்தையே பெரிய பாரமாகக் கருதுபவர். ஆனால் இப்பிறவியை எடுத்ததற்கான காரணமே இப்படி ஊடகமாகத் தொழிற்படுவதற்குத் தானென நம்புபவர். எனவே அவர் வருந்தி ஒரு போதும் நான் கண்டதில்லை.
அவரது சொந்த மாநிலமான ஃப்ளோரிடாவில் (Florida) இருக்கும் டைட்டஸ்வில் (Titusville) என்ற இடத்தில் அவர் சிறுவனாயிருந்த போது அவரது குடும்பத்தின் பொது உலகத்தொடர்புகள் அனைத்தும் கிறிஸ்தவக் கோயிலைச் சார்ந்தே இருந்தன. அவரது தாயாரின் பக்கம் பல தலைமுறைகளாக ஸதேர்ன் பப்டிஸ்ட் (Southern Baptist) என்ற கிறிஸ்தவ மதத்தின் ஒரு பிரிவினைச் சார்ந்தவர்களாகவே இருந்து வந்துள்ளனர். ஆர்தர் காலை மாலைப் பூசைகளுக்குத் தவறாமற் செல்வதாலும் அங்கேயிருந்த சிறுவர்களுக்கான சங்கத்தில் முழுமையாக ஈடுபட்டதாலும் அவர் ஒரு பாதிரியாராக வருவாரென அவரது அன்னை நம்பியிருந்தார். அன்னை பப்டிஸ்ட் மதத்திலேயே இறுதிவரைக்கும் இருந்தார். ஆனால் ஆர்தர் யூனிடேரியன் சர்ச் (Unitarian Church) என்னும் சபையினால் வெளியிடப்பட்ட நூல்களைப் படித்துப் புரட்சிகரமாகச் சிந்திக்கத் தொடங்கினார். சமயக் கொள்கைகளுக்கு மாறான கருத்துகளைக் கொண்டதனால் அவரது சர்ச்சிலிருந்து அவர் விலக்கப்பட்டார். ட்ரான்ஸ்லவேனியாப் பல்கலைக்கழகத்துக்கு (Transylvania University) அவருக்கு ஸ்கொலர்ஷிப் (scholarship) கிடைத்தது. முதலாம் உலகப்போர் முடிந்ததும் டிசைப்பில்ஸ் ஒவ் க்ரைஸ்ட் சர்ச் (Disciples of Christ Church) என்ற சபையில் பாதிரியாரானார். எப்போ அவர் தனக்கு மறு உலகத்துடன் தொடர்பு கொள்ள முடியுமென்பதைக் கண்டு கொண்டாரோ அன்றிலிருந்து அந்த வல்லமையை அவர் பொது நலனுக்காக உபயோகிக்கத் தொடங்கினார். அதன்பின் தனது வாழ்வின் பெரும் பகுதியை அவர் தன்னுடன் இருந்த பாதிரிமார்களின் அறியாமையைப் போக்குவதற்கே செலவழித்தார். அதாவது ஐம்புலன்களின் அறிவுகளுக்கு அப்பாலும் தொடர்ந்து கொண்டிருக்கக் கூடியதான வாழ்வின் தொடர் நிலையைப் புரிய வைப்பதற்கு முயன்றார்.
ஆர்தர் ஃபோர்ட் அமெரிக்காவின் கென்ரக்கி என்ற மாநிலத்தில் உள்ள லெக்ஸிங்டன் நகரில் இருக்கும் ட்ரான்ஸ்லவேனியா பல்கலைக்கழகத்தில் பாதிரியார் ஆவதற்காகப் பயின்று கொண்டிருக்கையில் முதலாம் உலகப் போர் ஆரம்பித்தது. 90 நாட்கள் பயிற்சி பெற்ற பின்பு அவர் இரண்டாம் லெப்டினன்டாக காம்ப் க்ராண்ட் (Camp Grant) எனும் இராணுவ முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் தன்னம்பிக்கை கொண்டதொரு இளம் ஆபீசராக வேலை செய்தார். அப்போது தான் அந்த நிகழ்ச்சி நடந்தது. ஒரு நாள் அவருக்கு ஒரு விசித்திரமான கனவு வந்து பதறி எழுந்தார். இன்ஃப்ளுவன்ஸா (influenza) என்ற நோயால் அன்று இரவு இறந்தவர்களின் பட்டியலில் அந்தக் காம்பில் உள்ளவர்களின் பெயர்கள் இருக்கக் கண்டார். உண்மையான பட்டியலைப் பார்த்தால் மனதுக்குச் சற்று ஆறுதலாக இருக்குமென எண்ணிப் போய்ப் பட்டியலைப் பார்த்தார். அதில் அதே பெயர்கள் கனவில் கண்ட அதே வரிசையில் இருக்கக் கண்டார். அடுத்து வந்த இரண்டு நாட்களும் இதே விதமாகத் தொடர்ந்து நிகழ்ந்தது. சிலர் அவரைச் சந்தேகித்ததால் அவர் எழுந்த உடனேயே கனவைச் சொல்லி விடுவார். அதன் படியே நிகழ்ந்திருக்கும். அதன் பின்னர் கடல் கடந்து போரிட்டுக் கொண்டிருந்த ரெயின்போ (Rainbow) பிரிவில் இறந்தவர்களின் பெயர்களும் கனவில் வரத்தொடங்கின. அதே விதமாகவே தினம் தினம் பத்திரிகைகளிலும் பெயர்கள் வந்து கொண்டிருந்தன.
உலகப்போர் முடிவடைந்ததும் அவர் ட்ரான்ஸ்லவேனியாவுக்குத் திரும்பினார். அவரைக் குழப்பிய கனவுகளும் அத்துடன் நின்று விட்டிருந்தன. அந்தக் கனவுகளால் அவர் தனக்குப்  பித்துப் பிடித்து விட்டதோ எனவும் பயந்திருந்தார். பேராசிரியரும் உளவியல் பயிற்சியாளருமான 'எல்மர் ஸ்நொடி' என்பவர் ஆர்தருக்குப் பொது அறிவுக்கப்பாற்பட்ட விடயங்களைப் பற்றிய புத்தகங்களை அறிமுகம் செய்து வைத்தார். அப்புத்தகங்களில் இருந்து தான் அவர் தனக்கு ஏற்பட்டதைப் போன்ற அனுபவங்கள் வேறு பலருக்கும் ஏற்பட்டுள்ளன என்பதனை அறிந்து கொண்டார். அவர்களுள் ஜோன் வெஸ்லி, மார்ட்டின் லூதர், இமானுவேல் ஸ்வீடன் போர்க், டுலைட் மோடி, பல கத்தோலிக்கத் துறவிகள் என்போரும் அடங்குவர். இச்செய்திகள் அவருக்குச் சற்றே ஆறுதலைத் தந்தன. அவர் சில பேராசிரியர்களுடனும் சில துறவிகளுடனும் சேர்ந்து இத்துறையில் (அமானுஷ்ய) சில ஆராய்ச்சிகளைச் செய்தார். இத்துறையில் அவர் மிகவும் ஆர்வமுடையவராக இருந்ததனால் நியூயோர்க்கில் இத்துறையிலான ஆராய்ச்சிகள் செய்யும் சங்கத்தைப் (American Society for Psychical Research) பற்றிய முழு விபரங்களையும் பார்வையிடச் சென்றார். அவர் கென்டக்கி, பார்போர்வில்லில் (Barbourville, Kentucky) இருக்கும் சர்ச்சில் பாதிரியாராக இருக்கையிலும் இத்துறையில் ஆய்வுகளை மேற்கொண்டார். இரண்டாமாண்டு பாதிரியார் சேவையின் போது ஸ்வாத்மொர் ஷாத்தகுவா (Swarthmore Chautauqua) சங்கத்தின் ஸ்தாபகரும் தலைவருமான டாக்டர் பால் பியர்சன் (Dr Paul Pearson) என்பவரைச் சந்தித்தார். அவர் ஆர்தர் ஃபோர்டைத் தனது சங்கத்தில் பொது அறிவுக்கு அப்பாற்பட்ட விஷயங்களைப் பேசும் பேச்சாளராகச் சேரத்தூண்டினார்.
அவர் இலையுதிர் காலத்தில் (autumn season) மீண்டும் பாதிரிச் சேவைக்குத் திரும்புவதாக இருந்தது. ஆனால் அது நடக்கவில்லை. அப்போது இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு வந்து பேருரைகள் நிகழ்த்திக் கொண்டிருந்த சுவாமி யோகானந்தா என்ற துறவியின் சிஷ்யனாகச் சிறிது நாட்கள் பயின்று கொண்டிருந்தார். அது சுவாமி யோகானந்தா தனது சித்திகளால் நியூயோர்க்கிலும் லண்டனிலும் பிரபலமாகிக் கொண்டிருந்த நேரம். 1924 ஆம் ஆண்டு ஃபிளெச்சர் (Fletcher) என்கிற ஆத்மா ஆர்தருக்குள் வந்து இறந்தவர்களுக்கும் இருப்பவர்களுக்கும் இடையில் தொடர்புகளை ஏற்படுத்தியது. சேர் ஆர்தர் கோனான் டொயில் என்பவர் ஆர்தர் ஃபோர்டை இறந்தவர்களுக்கும் உயிரோடிருப்பவர்களுக்கும் இடையில் ஊடகமாகத் தொழிற்படும்படி தூண்டினார். பாதிரிமார்களும் ஆவியுலக ஊடகர்களும் (mediums) இறைவனின் விருப்பத்தையே பூர்த்தி செய்வதாக அந்த 'ஷெர்லொக் ஹோம்ஸின்' ஆசிரியர் நம்பினார். மீடியமாகத் தொழிற்படுபவர்கள் மிகக்குறைவாக இருப்பதாலும் ஆர்தரை இத்தொழிலையே செய்யும்படி அவர் தூண்டினார்.
1928 ஆம் ஆண்டில் காலம் சென்ற ஹௌடினி (Houdini) எனும் பிரபலமிக்க மந்திரவாதியின் 'இரகசியச் சொல்லை' (code) ஆர்தர் கண்டு பிடித்தார். இறந்து போன அம்மந்திரவாதி ஆர்தருக்குள் வந்து தனது மனைவி பியட்ரிஸ் ஹௌடினிக்கு அச்சொல்லைச் சொல்லியது. ஆர்தர் பொய் சொல்வதாகப் பலரும் நம்பினர். ஆனால் (ஆர்தரால் உரைக்கப்பட்ட) அச்சொல்லானது தனக்கும் இறந்து போன தனது கணவருக்கும் மட்டுமே தெரியுமென அம்மந்திரவாதியின் மனைவி ஏற்றுக்கொண்டு அதனை எழுதிக் கொடுத்தார். ஆர்தரது ஆவியூடகச் செயற்பாட்டின் நம்பகத்தன்மையை அந்நாட்களில் பிரபலமாயிருந்த பலரும் மீண்டும் மீண்டும் பரிசோதித்து நிரூபித்திருந்தனர். அவர்களுள் பிரபல ஆங்கில வைத்தியர் சேர் ஒலிவர் லொட்ஜ், ஹார்வோட் பல்கலைக்கழகத்தின் உளவியல் துறைப் பேராசிரியர் வில்லியம் மக்டௌகால், நாவலாசிரியர்கள் உப்ரன் சென்க்ளையர் (Upton Sinclair), ஜாக் லண்டன், ஜெரால்ட் ஹெர்ட், ஹியூ வால்போல், அத்துடன் சேர் ஆர்தர் கோனான் டொயில், YMCA வின் உலகப் பொதுச்செயலாளர் டாக்டர் ஷேர்வூட் எடி (Sherwood Eddy), அத்துடன் பற்பல எழுத்தாளர்கள், கலைஞர்கள், செனட்டர்கள், காங்கிரஸ் உறுப்பினர்கள், வெள்ளை மாளிகையில் உள்ளவர்களும், அத்துடன் ஐரோப்பியாவின் அறிஞர்களும் அடங்குவர். மூன்று கண்டங்களில் அவரின் விரிவுரைகள் நடந்து கொண்டிருந்தன. அவரது புகழ் உச்சக்கட்டத்தில் இருக்கும் போது தான் அவருக்கு ஒரு விபத்து ஏற்றப்பட்டது. சௌத் கரோலைனாவிலிருந்து நியூயோர்க்குக்குக் காரில் வந்து கொண்டிருக்கும் போது நோர்த் கரோலைனா லைனுக்குக் கிட்டே அவரது கார் புகையிலை ஏற்றி வந்த ட்ரக் வண்டியுடன் மோதியதில் கூட இருந்த அவரது சகோதரியும் சிநேகிதனும் கொல்லப்பட்டனர். ஆர்தரும் மிகுந்த உட்காயங்களுடன் இறக்கும் தருவாயில் இருந்தார். காயங்களினால் ஏற்பட்ட நோவிலிருந்து விடுவிக்கும் முகமாக டாக்டர் அவருக்கு வல்லமை வாய்ந்த மயக்க மருந்துகளைத் தந்து அவரது இறுதி நாட்களை அமைதியாகக் கழிக்கும்படி செய்திருந்தார். துரதிஷ்டவசமாக அவருக்கு வைத்தியம் பார்த்த டாக்டருக்கு அவரது நலனிலும் பார்க்க அவரது அதீத சக்திகளில் கூடுதல் நாட்டமிருந்தது. அரை மயக்க நிலையிலிருந்த ஆர்தர் அந்தச் சிறிய வைத்தியசாலைக்கு வந்த நோயாளிகளின் நோய்களை இலகுவில் கண்டுபிடித்தார். இதனைக் கண்ட அந்த டாக்டர் ஆர்தருக்குத் தொடர்ந்து மயக்க மருந்துகளை (Morphine) கொடுத்து அவரை எந்த நேரமும் மயக்க நிலையிலேயே வைத்திருந்தார். அவரது காயங்களெல்லாம் ஆறியும் கூட இந்த நிலை தொடர்ந்தது.
ஆர்தருக்கு மயக்க மருந்துப் பழக்கம் தவிர்க்க இயலாததாக இருந்ததையும் (Drug addiction) அந்த டாக்டரின் செயலையும் அறிந்த வேறொரு டாக்டர் ஆர்தரை அந்த ஆஸ்பத்திரியிலிருந்து வெளியேற்றி நியூயோர்க்குக்கு அனுப்பி வைத்தார். இருப்பினும் ஆர்தரால் அந்த மருந்துப் பழக்கத்தை விட முடியாமலும் மருந்து எடுக்காவிடின் பைத்தியம் பிடிக்கும் போலவும் (withdrawal phase) சங்கடப்பட்டார். இதிலிருந்து விடுபட அவரது டாக்டர் நண்பர் ஒருவர் மதுவை நாடும்படி ஆலோசனை வழங்கினார். மதுவானது நாடி நரம்புகளை நேராக்கி நித்திரை வரச்செய்யும் என்பது அந்த டாக்டரின் எண்ணம். ஆர்தர் அதற்கு முன்பு ஒருநாளும் மது அருந்தியதில்லை. நண்பனின் ஆலோசனையின் படி இந்த மருந்துப் (drug) பழக்கத்தைப்  போக்குவதற்காகக் குடிக்கத் தொடங்கினார். அதற்கு முன்னர் அவர் எப்போதுமே மது அருந்தாமலிருந்தும் கூடக் குடிக்கத் தொடங்கியதும் பழைய குடிகாரர்கள் போல எவ்வளவு குடித்தாலும் தாங்கும் வல்லமையிருந்தது. ஒரு போத்தலிலும் கூட ஸ்காச் (scotch) குடித்தால் தான் அவருக்கு அதன் விளைவு தெரியும். நித்திரையும் அதன் பின்னர் தான் வரும். அடுத்து வந்த இருபது வருடங்களுக்கு அவர் மதுப்பழக்கத்துடன் போராடினார். உலகெங்கிலும் பற்பல நாடுகளுக்குச் சென்று பற்பல மேடைகளிற் பேருரைகள் நிகழ்த்திக் கொண்டிருந்த போதும் கூட அவர் இக் குடிப்பழக்கத்துடன் போராடிக் கொண்டேயிருந்தார். அவர் இப்போ மோர்ஃபின் (Morphine) என்ற மருந்துப் பழக்கத்திலிருந்து குடிப்பழக்கத்துக்கு மாறி விட்டார். அவர் இப்பழக்கத்திலிருந்து விடுபடுவதற்காகப் பற்பல வழிகளைக் கையாண்டார். ஆனால் அவரால் இப்பழக்கத்திலிருந்து விடுபட முடியவில்லை. விரக்தியடைந்த அவர் அல்கஹொலிக்ஸ் அனோனிமஸ் என்ற குடிப்பழக்கத்திலிருந்து விடுபட உதவும் சங்கத்தில் சேர்ந்து தன்னை ஒருவாறு இப்பழக்கத்திலிருந்து விடுவித்துக் கொண்டார். என்னதான் அவர் குடிபோதையில் இருந்தாலும் 'மறு உலகத்துடன் தொடர்பு கொள்ளும்' தன்மைகளும் அப்படியே தானிருந்தன. இங்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பலரைத் தனது சித்திகளால் ஆச்சரியத்திலாழ்த்தினார் அவர்.
அவர் இவ்வளவு உலகப் புகழ் பெற்றிருந்தும் கூட 1956 ஆம் ஆண்டு வரை ஆர்தர் ஃபோர்டைப் பற்றி நான் அறிந்திருக்கவில்லை. இண்டர்நேஷனல் நியூஸ் சர்வீஸ் (International News Service) என்ற பத்திரிகையில் பொது அறிவுக்கு அப்பாற்பட்ட சித்திகளை (psychic phenomena) ஆராய்ந்து நான் ஒரு தொடர் எழுதவிருந்தேன். அதற்காக அங்கேயிருந்த நூலகத்துக்குச் சென்று ஆராய்ந்து கொண்டிருந்தேன். அங்கேயிருந்த நூல்கள் எல்லாமே ஆர்தர் ஃபோர்டையே மேற்கோள் காட்டியிருந்தன. நிரூபிக்கப்பட்ட அவரது ஆவியுலகத் தொடர்புகளைப் பற்றிப் பற்பல எழுத்தாளர்கள் தங்களது நேரடி அனுபவங்களை விபரித்திருந்தனர். அப்போது நான் ஆவியுலகத்துடன் தொடர்பு கொள்வது பற்றிய நம்பிக்கை இல்லாதவளாக இருந்தும் கூட எனக்கு அவை ஆவலைத் தூண்டின. சில வருடங்களின் பின் வாஷிங்டனிலிருக்கும் சுவீடன்போர்ஜியன் சர்ச்சுக்கு (Swedenborgian church) அவர் உரையாற்ற வருவதாக அறிந்து அங்கு சென்று அவரின் உரையைக் கேட்டேன். பின்னர் அவரை நேரே சந்தித்துப் பேட்டி கண்டேன். நான் அப்போது எழுதிக் கொண்டிருந்த தொடருக்கு அது மிகவும் தேவையாக இருந்தது.
எங்களது பேட்டியின் போது முக்கியமாகப் பேசப்பட்ட விஷயம் என்னவெனில் ஆர்தரும் வேறு சிலரும் சேர்ந்து புதிதாகத் தொடங்கிய ஒரு ஆத்மீக ஆராய்ச்சியாளர் சங்கத்தைப் (Spiritual Frontiers Fellowship) பற்றியதாகும். அதைத் தொடங்கியவர்களுள் சமயத் துறவிகள், காலேஜ் பேராசிரியர்கள், பெரிய பதவிகளில் இருப்பவர்களும் அடங்குவர். அச்சங்கமானது அங்கேயிருந்த சர்ச்சுகளின் ஆதரவுடன் எமது அறிவுக்கு அப்பாற்பட்ட விஷயங்களை (psychic phenomena) ஆராய்வதற்காக உண்டாக்கப்பட்ட சங்கம். மீடியம் என்று சொல்லப்படுகின்ற, 'ஆவிகளுக்கும் எங்களுக்கும் இடையில் ஊடகமாகச் செயற்படுபவர்களைப்' பற்றி நான் ஒரு பத்திரிகையில் தாக்கி எழுதியிருந்தேன். அதை அவர் வாஷிங்டனை விட்டுப் புறப்படுவதற்கு முன் ஏற்றுக்கொண்டேன். அவர் எனக்காக அங்கேயே மயக்கநிலைக்குச் சென்று (trance) ஆவிகளுடன் உரையாடச் சம்மதித்தார். அப்போது நடந்த ஆச்சரியப்படத்தக்க விஷயங்களை நான் எனது "உண்மையைத் தேடி" (A Search for the Truth) என்ற நூலில் எழுதியிருக்கிறேன்.
நான் ஆர்தரின் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் பற்றிப் பத்திரிகையில் எழுதியிருந்தேன். அதன் பின்னர் எப்பொழுது அவர் வாஷிங்டன் வந்தாலும் எங்களது வீட்டிற்கு வருவார். அந்த நேரங்களில் முன் பின் அறிமுகமில்லாத எவரையேனும் அழைத்து வந்தாலும் கூட அவர்களின் இறந்த உறவினர்களைத் தொடர்பு கொள்வதன் மூலம் அவர்களைப் பற்றிய உண்மைகளைக் கண்டறிவார். ஃபிளெச்சர் என்கிற ஆத்மாவின் உதவியுடனேயே இது நடைபெறும். இறந்த உறவினர்களின் பெயர்களை எல்லாம் சொல்வார். தொடர்ந்து வந்த ஆண்டுளில் ஆர்தர் எங்களது வாஷிங்டன் வீட்டிலும் வேர்ஜீனியா பீச் வீட்டிலும் அடிக்கடி வந்து தங்குவார். அடிக்கடி நகைச்சுவைபடக் கடிதங்கள் எழுதுவார். தொலைபேசியிலும் பல மணி நேரம் பேசிக்கொண்டிருப்போம். மேடைப் பேச்சுகளின் போதும் சந்தித்து இருக்கிறோம். தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு மேல் தொடர்பில்லாமல் ஒரு போதும் இருந்ததில்லை. ஆனால் அவர் மறு உலகை அடைந்த பின் தான் ஒழுங்காகத் தொடர்பு கொள்கிறோம். ஏனெனில் ஒவ்வொரு நாட்காலையிலும் ஒரே நேரத்துக்குச் சந்தித்து மகிழ்கிறோம். 

Tuesday, March 9, 2021

மூன்றாம் அத்தியாயம்: எண்ணங்கள் சடப்பொருட்களாகும் (Thoughts Are Things)

டைப்ரைட்டர் மூலம் ஆர்தர் என்னைத் தொடர்பு கொள்ளத் தொடங்கிச் சிறிது நாட்களில் ஒரு நாள் அவர் பின்வருமாறு எழுதினார்: "என்னைப் போல உள்ள ஒருவன் இங்கு வருகையில் என்ன நிகழுமென்பதை இன்று பார்ப்போம். அதாவது நோயுற்று நலிந்த உடலைவிட்டு மகிழ்வோடு வெளியேறித் தொடர்ந்தும் ஆன்மீக முன்னேற்றம் அடைவதற்கு விரும்புபவர்களின் வருகை எப்படி இருக்குமென்பதை இன்று பார்ப்போம். இங்கு என்ன எதிர்பார்க்கலாம் என்பது எனக்குத் தெரியும் என்பதை முதலிலேயே சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஏனெனில் என்னுள் ஆத்மா வந்து நான் ஆவியுலகுடன்  தொடர்பு கொள்ளும் போதெல்லாம்  இங்குள்ளவர்களை கவனித்திருக்கிறேன். அவர்களும் எனது பூவுலக நண்பர்கள் போல எமது பூவுலகிலேயே இருக்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும். அப்போதெல்லாம் நான் இங்குமங்கும் அலைந்து திரிந்ததைக் கண்டதால் அவர்கள் எனக்கு உதவி செய்ய ஆவலாயிருந்தார்கள். எனவே அவர்கள் என்னை மகிழ்வுடன் வரவேற்றார்கள். எனக்கு உதவி செய்ய முன் வந்தார்கள். நான் இங்கு வருவதற்கு அவசரப்படவில்லை என்பதை முதலில் விளங்கிக் கொள் ரூத். நான் பூவுலகில் இருந்து சேவை செய்யவே விரும்பினேன். ஆனால் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் நான் எனது உடலைக் கெடுத்துக் கொண்டேன். இது அங்குள்ளவர்களுக்கு ஒரு பாடமாக அமையட்டும். உங்களது உடல் ஒரு தேவாலயமாகும். அதனைப் பேணிப் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். நாம் எவ்வளவுக்கு எவ்வளவு அதனை மதித்து அதனை ஆத்மா வாழும் ஆலயமாக நடத்துகிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு அதுவும் எமது தேவைக்கேற்ப நடக்கும்.
இதற்கு முந்தைய பிறவிகளுக்கிடையில் இங்கு வந்ததைப் போல இம்முறையும் இங்கு வரும்படி நேர்ந்த போது என்னுள் எனது ஆத்மா திடீரென விழிப்படைந்ததை என்னால் உணர முடிந்தது. எனது மனமானது இறைவனில் ஒடுங்கியது. ஏற்படப்போகும் அந்த விடுதலைக்கேற்ப எனது உள்ளுணர்வைத் தயார் செய்ய முனைந்தேன். விடுதலையடைந்த ஆத்மாவின் உள்ளுணர்வானது மிக நன்றாக வேலை செய்யும். ஏனெனில் நாம் இறந்தபின் அந்த உள்ளுணர்வு தான் எம்முடன் இருக்கப் போவது. அது தான் ஆத்மாவின் மனம். இந்தக் காரணத்துக்காகவாவது திரையின் மறு பக்கத்தில் (பூவுலகில்) இருப்பவர்கள் உள்ளுணர்வையும் அறிவைப் போன்றே வளர்த்துக் கொள்ள வேண்டும். உள்ளுணர்வை விரிவடையச் செய்வதற்கு அதைச் சுதந்திரமாக விட வேண்டும். அதனுடைய அற்புத சக்திகளைச் செயற்பட விட வேண்டும். நாம் அதனை அடக்கி வைத்து விட்டு எமது வெளி மனத்தையே இதயத்தையும் மூளையையும் உபயோகிக்கப் பயன்படுத்துகிறோம்."
"இப்போ விடயத்துக்கு வருவோம். இறுதியில் அந்தக் கடைசி நெஞ்சு வலியின் பின்னர் எனக்கு நேரம் நெருங்கி விட்டதை வெகுவாக உணர்ந்தேன். இந்தக் கணத்தை ஆவலுடன் எதிர்பார்த்ததால் உடற் பந்தங்களில் இருந்தான விடுதலையை நான் வரவேற்றேன். எனது உயிரானது களைத்து விட்ட அந்த உடலிலிருந்து வெளியேறிய போது நான் எனது சூக்கும சரீரத்தில் இலகுவாக, முன்னரே நான் அதனை முழு உணர்வோடு அணிந்திருந்ததைப் போல நுழைந்து கொண்டேன். பாரமான உட ல் இல்லாது, பந்தங்களிலிருந்து விடுதலை அடைந்து காற்றில் மிதப்பதைப் போல உணர்ந்தேன். அந்த தேவலோக உணர்வானது விளக்க முடியாதது. என்ன ஒரு சுகம். ஒரு தடங்கல்களும் தடைகளும் வேதனைகளும் அற்று, ஆனால் முன்னர் இருந்ததைப் போலவே அதே இடத்தில் எப்போதும் போல இருப்பது எவ்வளவு ஆனந்தம். எந்த நேரத்திலும் எந்த ஒரு இடத்திற்கும் ஒரு பிரயாணச் சீட்டுக்கோ நடப்பதற்கோ அவசியமில்லாமற் போய் வரக்கூடிய அதிசய சுதந்திரம். மீண்டும் சுறுசுறுப்பான சிறுவனாக மாறுதிலும் பார்க்க இந்த நிலை நன்றாகவுள்ளது. ஏனெனில் எமது சுதந்திரத்தைப் பறிப்பதற்குத் தடைகளோ தடங்கல்களோ ஏதுமில்லை. நாம் எங்கே போக எண்ணுகிறோமோ அங்கே நாம் இருப்போம். சாதாரண ஆத்மாக்களாகிய நாம் இறைவன் போன்றே அனைத்து விஷயங்களிலும் இருப்போம்.
முதலில் நான் எனது நண்பர்களைக் கண்டு அளவளாவினேன். பின்னர் ஃபிளச்சரைத் தேடினேன். அவர் புன்னகையுடன் எனது வரவைப் பார்த்திருந்தார். அவரைச் சிறுவனாகப் பூவுலகில் சந்தித்ததற்கு இங்கே அவரில் எவ்வளவு மாற்றங்கள். அவர் ஒரு மேன்மையான ஆத்மாவாக இருந்தார். அவருடன் மகிழ்ச்சியாக அளவளாவினேன். உன்னை அவர் இன்னும் நினைவில் வைத்திருக்கிறார். அது மட்டுமல்ல தன்னுடையதும் என்னுடையதுமான சேவைகளுக்கு நீ ஏனையோரின் அபிப்பிராய பேதங்களையும் மீறி, எமது செய்தியை இவ்வுலகுக்குக் கொண்டு வருவதற்கு தைரியமாக உதவியதையும் நினைவு கூர்ந்தார். இனி அவர் சற்று ஓய்வெடுக்கட்டும். அவருடைய சேவையானது பூர்த்தியடைந்து விட்டது. இனி அவர் உயர்வான நிலைகளுக்குச் செல்லலாம் அல்லது மீண்டும் பூமியில் பிறக்கலாம். அது அவரது இஷ்டம். இன்னமும் அவர் முடிவு செய்யவில்லை. ஆனால் ஒரு விடயம் மட்டும் உறுதி; அவர் ஒருவருக்கூடாகவும் இனி வர மாட்டார். எனவே அவரின் ஆத்மா தங்களுக்குள் வந்திருப்பதாகச் சொல்பவர்கள் அனைவரும் போலி ஊடகங்களாகும். நான் மேலுலகுக்கு வந்ததும் தனது வேலை முடிந்து விடுமென ஃபிளெட்சர் எப்போதும் உறுதியாகச் சொல்பவர்.
தான் இப்பொழுது அனுபவித்துக் கொண்டிருக்கும் சுதந்திரத்தை விளக்குமுகமாக ஆர்தர் பின்வருமாறு ஒரு நாள் எழுதினார்: "எங்கள் வாழ்க்கைக்கும் உங்கள் வாழ்க்கைக்கும் இடையில் பெரிதாக  ஒன்றும் வேறுபாடில்லை. நாம் வேறோர் உலகத்திலுமில்லை. இங்கே தான் இருக்கிறோம். வாஷிங்டனிலுள்ள உனது வரவேற்பறையில் நான் இருந்ததைப் போலவே இப்போதும் இக்கணத்திலும் இருக்கிறேன். ஒரேயொரு வேறுபாடு என்னவென்றால் இப்போ நாம் பலனளிக்கக் கூடிய விதத்தில் அடிக்கடி தொடர்பு கொள்கிறோம். நாம் இங்கே தானிருக்கிறோம். அதை முதலில் வலியுறுத்திச் சொல்ல வேண்டும். நீங்கள் எப்படி உலகின் ஒரு பகுதியாக இருக்கிறீர்களோ அப்படியே தான் நாமும் இருக்கிறோம். ஒரேயொரு வித்தியாசம் என்னவென்றால் உங்களின் இயக்கங்களைக் கட்டுப்படுத்தும் அடிப்படை விதிகள் நாம் பூதவுடலை நீக்கி விட்டதால் எம்மைக் கட்டுப்படுத்தா. நாம் ஆத்ம ரூபத்தில் இருப்பதால் சடப்பொருட்களின் ஊடாகவும் உயிருள்ள பொருட்களின் ஊடாகவும் செல்லமுடியும். அவையனைத்தும் எண்ண உருவங்களாகவே உள்ளன. நாம் அவற்றைக் வடிவங்களாகப் பார்க்காமல் எண்ண உருவங்களாகவே பார்ப்பதால் அவையொன்றும் எம்மைத் தடை செய்யா. நாம் எண்ண வடிவாலான இல்லங்களில் வசிக்க முடியும். அல்லது ஆற்றங்கரை போன்ற நீர்நிலைகளின் அருகே சூரிய வெளிச்சத்துடன் கூடிய மலைச்சரிவுகளில் வாழமுடியும். எங்கென்றாலும் நாம் இருக்க விரும்புமிடத்தில் இருக்கலாம். ஆனால் இவையெல்லாம் கட்டாயத் தேவைகளல்ல. ஏனெனில் எமக்கு வதிவிடம் அவசியமில்லை. நாம் காற்றைப் போல சுதந்திரமாக நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் இருப்போம். அதனால் நாம் அங்குமிங்குமாக அலைந்து திரிவதாக எண்ணக்கூடாது. நாம் இங்கு வந்தவுடன் ஏதாவதொரு குறிக்கோளை உருவாக்கிக் கொள்வோம். வளர்ச்சியென்பது பூவுலகில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதேயளவு இங்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. ஒரு குறிக்கோளுமின்றி அங்குமிங்குமாக அலைந்து திரிந்தால் நாம் வளர்ச்சியுற முடியாது." 
"அங்கு போலவே இங்கும் இறைவன் எவற்றையெல்லாம் நாம் செய்யவேண்டுமென விரும்புகிறானோ அவற்றை நிறைவேற்றுவதே எமது நோக்கமாகும். ஒருவர் போல மற்றொருவர் என்றுமே இருந்ததில்லை. எமது வாழ்க்கையின் நோக்கங்களும் அப்படியே. பிறவிகள் தோறும் நாம் அணிந்து கொள்ளும் உடலுக்கேற்ப மாறுபடும். இறைவனை இங்கு நாம் காண மாட்டோமெனினும் எமக்கு நன்மை பயப்பதான அவரது கருணா கடாட்சத்தை அபரிமிதமாக இங்கு நாம் உணர்கிறோம். எனவே இங்கு சிறிதளவு முன்னேற்றமே அடைந்தவர்களாயினும் சரி இறைவனின் நிலையான அருளை உணராமலிருக்க முடியாது. அவர் எமக்குரியவர். நாம் அவருக்கு உரியவர்கள். எமக்கிடையில் ஒரு பிரிவுமில்லை. ஏனெனில் எமது மூலாதாரம் அவரே. எப்படி எமது விரலொன்று மூளையின் கட்டுப்பாடின்றி இயங்க முடியுமென்று எம்மால் எண்ண முடியாதோ அதே போலத்தான் ஆத்மாவும் இறைவன் எனும் படைப்புச் சக்தியை விட்டு வேறுபட்டு இயங்க முடியாது. நாமனைவரும் ஒருவரே; நீ, நான், எமது அயலவர்கள், எமது எதிரிகள், எமது இறைவன் அனைவரும் ஒருவரே. இடையில் ஒரு பாகுபாடுமில்லை. ஒரு பிரிவுமில்லை. எமது விடுதலையைப் போன்றே எமது எதிரியின் விடுதலைக்கும் நாமே பொறுப்பேற்க வேண்டும். ஏனெனில் இறைவனின் இதயத்தில் நாமும் நம் எதிரியும் ஒருவரே. இறைவனுடன் இணைந்து நாம் உலகைப் படைத்துக் கொண்டிருக்கிறோம் எனும் போது எப்படி எமது கைவிரல்களும் கால்விரல்களும் எமது ஒரு பகுதியோ அப்படியே இறைவனும் எமது பகுதியே என்கிறோம்".
ஒரு வேளை முன்னே பாதிரியாராக இருந்த நினைவுகளிலிருந்து விடுபட முடியாமலிருக்கலாம், ஞாயிற்றுக் கிழமைகளில் தவறாமல் ஆர்தர் ஆன்மீக விடயங்களைக் கூடிய விளக்கங்களுடன் உரைப்பார். ஆர்தருடனான தன்னிச்சை எழுதுகை தொடங்கிய ஆரம்ப கால கட்டங்களில் இது வெளிப்படையாகத் தெரிந்தது. ஒவ்வொரு ஞாயிறும் லிலி ஆர்தரை, "இதோ ஆர்ட் தனது ஞாயிறுப் பிரசங்கத்துடன் (sermon)" என வெறுமே அறிமுகம் செய்து வைப்பார்.
ஆர்தர் ஃபோர்ட் இறந்து மூன்று கிழமைகள் ஆவதற்குள் ஒருநாள் (ஜனவரி 24/1971), அவர் பின்வருமாறு எழுதினார்: "ஹாய் ரூத், இனிய ஞாயிறு உதயமாகட்டும்! இன்று நாம் பூவுலகில் இருப்பவர்களுக்குத் தேவையான மேலதிக ஆன்மீக விடயங்களை ஆராய்வோம். நானும் அதிலொரு பகுதியாக இனிமேல் இருக்கப் போவதில்லை என்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது என்பதைச் சொல்லியாக வேண்டும். நாம் முதலில் இறைத்தன்மையைப் பற்றி ஆராய்வோம். இறைத்தன்மை என்பது எல்லாவற்றையும் ஒன்றாகப் பிணைத்து வைத்திருக்கும் ஒரு அழிவற்ற சக்தியாகும். இந்த சக்தி மிக வலிமை வாய்ந்தது. கண் இமைக்கும் தருணத்துக்கு என்றாலும் இது நிற்குமேயானால் ஒன்றுமே பிழைத்திருக்க மாட்டா. இதுவே அண்டசராசரங்களையும் ஒன்றிணைக்கும் சக்தியாகும். ஒரு முழுமையான அணு. சிலர் சொல்வது போல அது ஒரு ஆத்மா அல்ல. அது ஒரு சக்தியாகும். நன்மையைத் தவிர வேறொன்றும் அறியாத மிகப்பெரிய விசையாகும். அது ஒரு கெட்ட சக்தி என்றால் எவ்வாறு அது எல்லாவற்றையும் இணைக்கும்? இந்த விசை அல்லது கடவுள் தன்மை என்பது முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டதொரு உண்மை. உலகளாவிய நன்மை. எல்லாம் அடங்கிய ஒன்று. ஆனால் இந்த மையவிலக்கு விசையின் எல்லைக்குள்ளும் விரோதம், பேராசை, தீவினை போன்ற கெட்ட தன்மைகளுக்கும் இடம் உள்ளது. இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு உயிரினத்துக்குள்ளும் கொஞ்சம் கெட்ட தன்மையும் இருக்கும். அது இறைத்தன்மையை எதிர்க்கும். இதிலிருந்து மீள நாம் மீண்டும் பூரணமான நல்லிணக்கத்தோடு ஒன்றுபட வேண்டும். அப்படிச் செய்தால் ஒரு கெடுதலுமில்லை; ஒரு பேராசையுமில்லை; ஒரு வருத்தமுமில்லை; ஒரு பிரிவினையுமில்லை. மீண்டும் மீண்டும் பூவுலகில் பிறந்து நாம் இந்த உண்மையைக் கற்றுக் கொள்வோம். எங்களது எல்லாக் கெடுதலுக்கும் காரணம் பிரிவினை தான்.
ஒரு ரோஜாப் பூவைப் பார். அதனுடைய இலைகள், தண்டு, இதழ்கள் என்று எல்லாவற்றிலும் பூரணத்தன்மை இருப்பதாக நீ சொல்லலாம். ஆனால் பொறு. அதிலொன்று குறையவில்லையா? ஒரு இலை குறையலாம் அல்லது ஒரு இதழ் சற்று அதிகம் சுருண்டிருக்கலாம். அதற்கு அப்பூவையா குற்றம் சொல்வது? அல்லது வண்டையா? அல்லது காற்றையா அல்லது ஏதோ ஒரு வெளிக்காரணி அதன் பூரணத்துவத்தைக் குறைத்து விட்டதா? ஏதோவொன்று நடந்திருக்கிறது. ஆனால் அது என்ன? இறைவன் எல்லா மலர்களுக்கும் ஒரே விதமான வடிவமைப்பையே ஒழுங்கமைத்திருப்பான். எனவே அதற்கு மாறாக அதிலொரு குறையென்றால் அவனைக் குற்றம் சொல்ல இயலாது. எனவே மனிதனில் தான் எதுவும் தங்கியுள்ளது. இறைவன் அல்லது (நீங்கள் விரும்பின்) அந்த மிகப்பெரிய சக்தி மனித குலத்துக்கென ஒரு வடிவமைப்பைக் கொடுத்திருக்கிறான். ஒவ்வொரு பகுதியும் மற்றையதுடன் முறையாகப் பொருந்தி ஒரு பூரணவடிவத்தினை உருவாக்கும். உலகில் பிறந்த முதலாவது மனிதன் ஒரு குறைபாடுகளுமின்றிப் பூரணமாயிருந்தான். நீங்கள் அவனை 'ஆதாம்' என்றும் அழைக்கலாம் அல்லது வேறு எப்படியென்றாலும் அழைக்கலாம். இறைவனெனும் அந்த மிகப்பெரிய சக்தியின் படைப்பு அவன். இம்மனிதன் அந்த மையவிசையினால் அனுப்பப்பட்ட எண்ணத்தின் உருவம். அதன் பின் ஏனைய மனிதர்கள் (ஆண்களும், பெண்களும்) உருவாகப் பிரச்சினைகள் தலை தூக்கின. உடல்களில் வதிய முன்னர் ஒற்றுமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்த ஆத்மாக்கள் பின்னர், எந்த நிலமானது அனைவரது உபயோகத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் என எல்லாவற்றிலும் தன்னிறைவு பெற்று, ஆசீர்வதிக்கப்பட்டதோ அந்த நிலத்தில் தம் பங்குக்காகச் சண்டையிட்டன.
இச் சண்டையானது அவலட்சணமான நினைவு வடிவங்களை (thought patterns) உருவாக்கியது. எண்ணங்களே உருவெடுக்கின்றன ஆதலினால் இவை அடிப்படையான மனித குலத்தின் கட்டமைப்பில் சிறிய, பெரிய குறைபாடுகளை உருவாக்கின. அதாவது கால் விரலொன்றில்லாமை, குறைபாடுடன் கூடிய தலை, கறைபட்ட மனங்கள். இப்படியாக இந்த ஆத்மாக்கள் தொடர்ந்து பிறவிகளெடுத்துக் கொண்டிருக்கையில் இறைவன் மீண்டும் ஒரு பூரண உதாரண புருஷனாக நசரேயனாகிய இயேசுவை அனுப்பி வைத்தார். மீண்டும் ஒரு பூரணத்துவமான பிறவி; குற்றங்குறைகளற்ற வடிவம். விவேகமுள்ள அனைவரும் அவரைப் பின் தொடர்ந்து அப்பூரண வடிவான இறைபுத்திரனை வணங்கினர். ஏனையோர் எள்ளி நகையாடி இப்பூரண வடிவைத் தமக்கே உரிய காமக்குரோத வழிகளில் எவ்வாறெல்லாம் மறைக்க இயலுமோ அவ்வாறெல்லாம் மறைக்க முயன்றனர் என்பதெல்லாம் அறிந்ததே. ஆனால் எமது ஆத்மாக்கள் இறைவனின் அன்பைத் தேடிகொண்டிருக்கும் வரையிலும் நாம் பூரணத்வத்தைத் தேடிக்கொண்டேயிருப்போம். இது தான் மைய விசையுடன் அனைத்தையும் இணைக்கும் சக்தியாகும். அதுவே அன்பின் சக்தி. எனவே ஒருவரையொருவர் நேசியுங்கள்; இறைவனை நேசியுங்கள்; உங்களையும் நேசியுங்கள். இந்தச் சர்வ வல்லமை பொருந்திய சக்தியுடன் ஒன்று சேர்வதற்கு உங்களைத் தகுந்தவராக்குங்கள்."
இந்நூலுக்கான முயற்சி நடக்கையில் இறைவனைப் பற்றி ஆர்தர் உரைக்கையில் எப்போதும் அது ஒரு விசை என்பதாகவே சொல்லிக் கொண்டிருந்ததால் ஒரு நாள் நான், "இறைவன் என்பவர் யார் அல்லது என்ன? பூவுலகில் நீங்கள் இருந்த சமயத்திலும் பார்க்க இப்போ இறைவனை நீங்கள் கூடுதலாக அறிவீர்களா?" எனக் கேட்டேன். அதற்கு அவர், "உண்மையில் மிக அதிகமாக என்று சொல்லலாம்" என்றார். அத்துடன் "இறைவன் தான் இந்த அண்ட சராசரங்களின் மையம். அதிலிருந்து தான் அனைத்தும் உருவாகிக் கொண்டு இருக்கின்றன. அவனே உண்மையும் சக்தியுமாவான். அவனே சடப்பொருளும் ஆத்மாவுமாகும். அத்துடன் பூவுலகிலும் மேலுலகிலும் உள்ள அனைத்துப் பொருட்களும் அவனேயாவான். அவன் அழிவில்லாதவன். அவனறியாததொன்றில்லை. எல்லாமறிந்தவன் அவன். அத்துடன் எமக்குத் தெரிகிறதோ இல்லையோ எங்களது மூலப்பொருள் அவனேயாவான். அவனில்லாமல் ஒன்றுமே இல்லை. அவருடைய முழுமையான ஏக சக்தியே இந்த அண்ட சராசரங்களையும் அதிலிருப்பவை அனைத்தையும் ஒருங்கே இணைக்கிறது. அந்தத் தூயவனில்லையேல் ஒன்றுமில்லை. இறைவன் இருக்கிறான். முடிவில்லாத பரமாத்மா அவன். அவனுடைய மகிமை அளவிடற்கரியது. எனவே எம்மால் அவனை முழுமையாக விளங்கிக் கொள்ள இயலாது. இறைவனின்றி எதுவுமில்லை. எதுவுமேயில்லை. அவனால் தான் உலகில் சத்தியம், ஒளி, பிரகாசம், அமைதி எல்லாம் உள்ளன. அவனே வாழ்வாவான். இது தான் நிஜம். எனவே அவனில்லையெனில்  வாழ்வில்லை; உயிர்களில்லை. நாம் அவனில் ஒரு பகுதி. அதே போல அவன் எங்களில் ஒரு பகுதி. எமது செய்கைகளிலும் குணநலன்களிலும் குறைபாடுகளிருப்பதால் பூரணத்துவத்தை அடைய நாம் மீண்டும் மீண்டும் பிறந்து முயற்சித்துக் கொண்டேயிருக்க வேண்டும். அந்தப் பூரணத்துவத்தை அடைந்தால் நாமும் இறைவனுடன் இரண்டறக் கலக்கலாம். குறைபாடுகளுள்ள ஒன்று ஒரு நாளும் இறைவனின் ஒரு பகுதியாக மாற இயலாது என்பது நியதி. ஏனெனில் குறைகளுள்ளவர் முறையாக இயங்க இயலாது. அந்த நியதி என்றும் மாறாது. அதனால் தான் நாம் சளைக்காமல் மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து, எமது குறைபாடுகளை நிவர்த்தி செய்து பூரணத்துவத்தை அடைந்து, இறைவனின் குறைவற்ற நிறைவான ஒரு பகுதியாக அவனுடன் இரண்டறக் கலக்க முயற்சிக்கிறோம்" என்றார்.
மீண்டும் புரியாமல், "நீங்கள் இப்படியுரைக்கும் போது அது இறைவனை குணநலன்கள் ஏதுமற்ற ஒரு விசை போன்றே எண்ணத் தூண்டுகிறது. அப்படியெனில் அவர் எமது தனிப்பட்ட வழிபாடுகளைச் செவி மடுக்க மாட்டாரா?" எனக் கேட்டேன்.
அதற்கு ஆர்தரின் பதில் "இறைவனானவன் அனைத்தையும் அறிந்தவனாவான். அவன் எமது வேண்டுதல்களையும் வழிபாடுகளையும் செவிமடுக்கிறான் என்பது மட்டுமல்ல நாம் வேண்டுவதற்கு முன்னமே என்ன எங்களது வேண்டுகோள் என்பதனையும் அறிவானவன். சத்திய ரூபமவன். எல்லாமறிந்தவன். அவனில்லையேல் எல்லாமே இருள் மயமாகி விடும். உண்மையும் ஒளியும் அன்புமானவன் அவன். அவன் எம்மைப் படைத்தவனுக்கும் மேலானவன். எமது தந்தைக்கும் மேலானவன். அவன் எங்கள் ஒவ்வொருவரிலும் தனித்தனியே அன்பு செலுத்துகிறான் என்பது தான் உண்மை. அத்துடன் அவனை உண்மையுடனும் அன்புடனும் அணுகினால் அறிவுள்ள பெற்றோரைப் போல எமக்குத் தேவையானவற்றை (அது வேறெவரையும் பாதிக்காது எனில்) தருவான். எல்லா வேண்டுதல்களும் நிறைவேறுமென்று இல்லை. உண்மையான அன்பான இதயத்திலிருந்து உதயமாகும் வேண்டுதல்கள் நிறைவேற்றப்படும். அவன் ஆறுதல் அளிப்பான், அன்பளிப்பான், சுகமளிப்பான். அவன் எம்மை இரவும் பகலும் வருடத்தின் எல்லாப் பருவங்களிலும் கவனித்துக் கொண்டே இருக்கிறான். இறைவனே அனைத்தும் ரூத்!"
மறு நாள் காலை ஆர்தர், "இன்று உறங்குவது போல இறப்பவர்களின் நிலை மாற்றங்களைப் பார்ப்போம்" எனக் கூறினார். "திடீர் மரணங்களையோ அல்லது எதிர்பாராத மரணங்களையோ பற்றி இப்போ நாம் உரையாடப் போவதில்லை. அவற்றைப் பற்றிப் பின்னர் பார்ப்போம். நோயுற்று நலிந்த அல்லது களைத்துப் போன ஒரு உடலை விட்டு ஆத்மா வெளியேறும் இயற்கையான மாறுதலைப் பற்றிப் பார்ப்போம். ஆத்மா தனது உறையிலிருந்து ஒரு வேதனையோ அல்லது புலப்படும் படியான உணர்வோ இன்றி இலகுவாக வெளியேறும். ஒரு கணத்துள் மிகுந்த வேதனையளித்த உடலை அணிந்திருந்தவர் மறு கணத்தில் சொர்க்க லோக உடையணிந்து சொர்க்கபுரியில் இருப்பார். ஆனால் இது சொல்வதைப் போல அவ்வளவு எளிதானதல்ல. இந்த நிலைக்கு நாம் பக்குவப்பட்டிருந்தால் மட்டுமே அது எளிதாக முடியும். நாங்கள் மிகுந்த அழகான, இன்னிசை நிறைந்த உலகிலேயே கண்விழிப்போம். இங்கிருக்கும் மரங்களெல்லாம் உண்மையானவையே. அங்கிருப்பவைகளைப் போல பிரதி பிம்பங்களல்ல. மலர்களெல்லாம் தூய்மையான எண்ண வடிவங்கள். ஆதலினால் அவை பூவுலகில் இருப்பவற்றிலும் பார்க்க மிக மிக அற்புதமாக உள்ளன. இங்கேயிருப்பன அனைத்தும் எண்ணத்தின் வடிவங்களாக இருப்பதால் பறவைகள், மிருகங்கள், ஆத்மாக்கள், மாடமாளிகைகள் உட்பட எல்லாமே பூரண வடிவில் உள்ளன.
"இங்கே கண் விழிக்கும் பொழுது இந்தக் கண்ணைப் பறிக்கும் அழகுகளைக் கனவில் காண்பது போலக் காண்கிறோம். இது உண்மையா? ஏற்றுக் கொள்ளக் கூடியதா? உண்மையாக மனிதனால் இவற்றை ஏற்றுக் கொள்ள முடியாது தான். ஆனால் அன்பு எனும் சக்தியால் முடியும். இந்த நிலையில் என்ன வேண்டுமென்றாலும் அது கிடைக்கும் இன்னொரு உடலைத் தவிர. இன்னொரு உடலை எடுப்பதென்பது எந்நிலையிலும் எமது கட்டுப்பாட்டுள் இல்லை. அது நீண்ட காலம் நாம் பக்குவமடைந்திருந்தால் அத்துடன் ஆன்மீக முன்னேற்றமும் எமக்கு இருக்குமென்றால் எமக்கு அளிக்கப்படும் முன்னுரிமையாகும். அல்லது அகால மரணத்தால் (விபத்துப் போன்ற) இறந்திருந்தால் உடனே நாம் விரும்பினால் பூவுலகுக்குத் திரும்பலாம். இதைப் பற்றிப் பின்னர் நாம் விரிவாகப் பார்ப்போம்.
எமது உடல் வயதாகிக் களைத்து விட்டதால் நாம் சிறப்புகள் நிறைந்த இந்த மேலுலகில் வாழ்வைத் தொடர்வதற்கு ஆவலாக இருப்பதாக எண்ணிக் கொள்வோம். சிறிது நாட்களுக்கு நாம் எமது பழைய நண்பர்களைக் கண்டு அளவளாவி ஆறுதலடைவோம். பூவுலகில் போலவே எமது குண நலன்களின் தன்மையைப் பொறுத்து நாம் மகிழ்ச்சியாகவோ அல்லது குழப்பமாகவோ இருப்போம்.
சிறிது சிறிதாக நாம் ஆத்மாவின் புதிய நிலைக்குத் தயாராகிக் கொண்டு வருகையில் நேரம் விரைந்து செல்வதை உணரத் தொடங்குவோம். நாம் விரும்பின் இறைவனின் திட்டத்திற்கிசைய நடக்கத் தொடங்கியிருக்கலாம் என்பதையும் நாம் உணரத் தொடங்குவோம். இப்போது தான் எமது உண்மையான தன்மை வெளிப்படத் தொடங்கும். நாம் கொண்டாட்டக் களியாட்டங்களில் ஈடுபட்டு இன்பத்தை அனுபவிக்கப் போகிறோமா அல்லது ஆன்மீக முன்னேற்றத்தில் ஈடுபடப் போகிறோமா? நாம் ஆன்மீக முன்னேற்றத்தைத் தெரிவு செய்வோமாயின் எமது சுய முன்னேற்றத்துக்கும் உயர்ச்சிக்குமாகவா அல்லது நாம் சேர்ந்த குழுவினது முன்னேற்றத்துக்கும் உயர்ச்சிக்குமாகவா? இன்னொரு வகையில் சொல்ல வேண்டுமாயின் எங்களுக்கு வரும் முன்னேற்றம் போல் ஏனையவர்களுக்கும் வரவேண்டுமென விரும்புகிறோமா? நான் முதலில் சொன்னதை நினைவு படுத்திக் கொள். ஒரு 
இனத்தின் வளர்ச்சியென்பது அனைவரும் சேர்ந்து ஆன்மீக முன்னேற்றத்துக்காகவும் நிறைவுக்காகவும் ஒரு முகமாக முன்னோக்கி உழைப்பதில் தான் உள்ளது. எனவே நாம் விரைவாக முன்னேற விரும்பினால் எமக்கொத்த கருத்துடையவர்கள் முன்னேறுவதற்கு வழிகள் உள்ளனவா என்பதையும் கவனிக்க வேண்டும்".  
மறு நாள் விட்ட இடத்திலிருந்து ஆர்தர் பின்வருமாறு தொடர்ந்தார், "அந்த ஆத்மாவானது மற்றையவர்களுக்கு எதிராகப் பயங்கரமான பாவங்களை இழைத்ததால் கறைபட்டிருந்தால் (அவையே உண்மையான பாவங்கள்) மிக நீண்ட, ஆழமான தூக்கத்தில் ஆழும்; அல்லது அந்த ஆத்மாவானது மிக அதிகமான பாவங்களால் சூழப்பட்டிருந்தால் தான் விட்டுவிட்டு வந்தவர்களைத் தொந்தரவு செய்யும். நாம் இங்கு அதனைப் 'பேய் பிடித்தல்' என்று சொல்வதில்லை. தொந்தரவு செய்வது என்போம். சில வேளைகளில் அந்த ஆத்மா ஆவியுலகுக்குத் தான் வந்துவிட்டதை உணர்வதில்லை. அப்படியான நேரத்தில் அந்த ஆத்மா அந்தரத்தில் அலைந்து கொண்டு, "ஏன் இங்கு ஒருவரும் என்னைக் கவனிக்கவில்லை" என யோசித்துக் கொண்டு திரியும். சில வேளைகளில் பூவுலகப் பொருட்களிலும் உடமைகளிலுமுள்ள ஆசைகளை விட முடியாமல் பிடிவாதமாக மீள உலகுக்கு வரும். இவ்வாறு குழப்பமடைந்த ஆத்மாக்களுக்கு எம்மால் அவ்வளவாக உதவ முடியாது. ஆனால் உங்களைப் போல இன்னமும் பூவுலகிலிருப்பவர்களின் வழிபாடுகளின் மூலம் அவர்களுக்கு உதவமுடியும். அவர்களுக்காக வணங்குங்கள்.
திடீரென விபத்துக்களிலும் சண்டைகளிலும் இறந்தவர்கள், ஆவியுலகில் தாம் இருப்பதையறிந்து அதிர்ச்சியடைவார்கள். தம்மால் இனிமேல் பணம் சம்பாதிப்பது, பந்து விளையாடுவது போன்ற வழமையான பழகிய விஷயங்களைச் செய்ய இயலாது என்ற விஷயம் அதிர்ச்சியாகவிருக்கும். அப்படிப்பட்டவர்களைச் சமாளிப்பது சற்று சிரமமாகவிருக்கும். ஏனெனில் அவர்கள் சிறிய வயதில் கேள்விப்பட்ட சொர்க்க பூமி இது தானென அவர்களை நம்ப வைப்பது ரொம்பக் கஷ்டம். அவர்களுக்கு சிறிது சிறிதாக எடுத்துச் சொல்ல முயற்சிப்போம். எல்லா விடயங்களும் பூவுலகில் இருப்பதைப் போலவே இருப்பதாக உணர்வார்கள். ஆனால் ஒரேயொரு வித்தியாசம் இருக்கும். எல்லா எண்ண வடிவங்களும் உயிர்ப்புடனுள்ளதால் அவை பூவுலகில் உள்ளவற்றிலும் பார்க்கப் பிரகாசமாகப், பளபளப்பாக ஒளிர்ந்து கொண்டிருக்கும். 
புதிதாக வருபவர்களை நாம் அன்புடன் வரவேற்போம். தியான முறைகளின் மூலமோ அல்லது மேலுலகங்களைப் பற்றிய ஆராய்ச்சிகளின் மூலமோ இப்படிப்பட்ட ஒரு மாறுதலுக்குத் தன்னைத் தயார்ப்படுத்தியிருந்தால் தவிர ஏனையவருக்கு வந்ததும் ஆச்சரியமாயிருக்கும். அவருக்குப் பசித்தால் நாம் உணவை உண்டாக்கிக் கொடுப்போம். அது எண்ண வடிவாலானதாய் இருந்தாலும் அவருக்குப் பூவுலகில் தான் உயிர் வாழ்வதற்கு உதவிய உண்மையான உணவாகவிருக்கும். அவருக்குத் தாகமாயிருந்தால் பருகுவதற்கு ஏதேனும் பானம் கொடுப்போம். அவர் சிறிது சிறிதாக மாறுதலுக்குப் பழகிக் கொண்டு வந்தாலும் இன்னும் தனக்கு உணவும் குடிநீரும் தேவையில்லை என்பதை உணரவில்லை. அவரின் உறவினர்களைக் காணாமல் தேடுவார். சில உறவினர்கள் இன்னும் பூவுலகில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். சிலர் இங்கிருப்பார்கள். சிலர் மேலும் உயர்ந்த நிலைகளுக்குப் போயிருப்பார்கள். சிலர் மறுபிறவி எடுத்திருப்பார்கள். நாம் அவர்களைச் சிறிது நேரம் பொறுத்திருக்கச் சொல்லுவோம். சிறிது நேரத்துள் அவருக்கு மேலும் பல விஷயங்கள் புரிபடத்தொடங்கும். இதற்கிடையில் அவரின் கற்பனை வளத்துக்குத் தகுந்த மாதிரி அவர் நடக்கத் தொடங்குவார். இயற்கையெழில் நிறைந்த கிராமிய வளங்களைச் சிலர் ஆராய்வார்கள். கண்ணைப் பறிக்கும் வண்ணங்களிலும் இனிமை தரும் பசுமையிலும் வியப்புறுவார்கள். சிலர் பெரிய நகரங்களிலிருக்க விரும்பின் உடனடியாக அங்கேயிருப்பார்கள். நகரங்களின் வாகன இரைச்சலிலும் நெரிசலிலும், பரபரப்பாக, அப்படித்தான் இருக்க வேண்டும் என்பது போல இருப்பார்கள். சிறிது காலத்துக்கு அவர்கள் எண்ணப்படியே விட்டுவிடுவோம். எதுவென்றாலும் அவர்கள் எண்ணப்படி செய்யும் படி விட்டுவிடுவோம். ஆனால் எந்நேரமும் உதவக்கூடிய நிலையில் தான் இருப்போம். ஒருவாறு இந்த வாழ்க்கையில் சலிப்புற்றுத் தமது இன்றைய நிலையைப் பற்றி ஆராயத் தொடங்குவார்கள். படிக்கக் கூடிய மனநிலையி ல் இருப்பவர்கள் வகுப்புகளுக்குச் செல்ல விரும்புவார்கள். அவர்களுக்கு வகுப்புகள் உண்டு. சிலர் பூவுலகத் தொடர்புகள் மூலம் ஆராய்ச்சிகள் செய்யும் அமைப்புகளுடன் சேர்ந்து கொள்வார்கள்.
"ஆனால் தனிப்பட்ட ஒருவரின் நிலையை இப்போது ஆராய்வோம். ஒருவர் திடீரெனக் கடுமையான சுகவீனமுற்று இங்கே வருகிறார். அவருடைய சூக்கும சரீரத்தின் கண்களைத் திறக்கிறார். அவர் தன் முன்னே பசிய புற்றரையையும் பச்சைப்பசேலென்ற மரங்களையும் சிறிய நீரோடையுடன் கூடிய வனத்தையும் காண்கிறார். அது மிக ரம்யமாக இருந்தாலும் இது கனவோ என எண்ணுகிறார். ஏனெனில் தான் சுகயீனமாக இருந்தது அவருக்குத் தெரியும். ஒரு சில அடிகள் அந்த நீரோடையை நோக்கி எடுத்து வைத்துப் பார்க்கிறார். ஒருவித சங்கடமும் இன்றித் தன்னால் இலகுவாக நடக்கக் கூடியதாக இருப்பதை உணர்கிறார். அநேகமாக அந்த ஓடையில் அதிகம் மீன்கள் பிடிபடலாம். அந்தப் புல்மேட்டின் மீது அவர் நடந்து திரிகையில் ஒருவரும் கண்ணில் படவில்லை. அந்த நீரோடை எவ்வாறு இவ்வளவு தூய்மையாகவும் பளிங்கு போலும் உள்ளது என வியக்கிறார். பளிங்கு போல ஓடிய ஓடையில் மீன்கள் அங்குமிங்கும் துள்ளிக் குதித்தன. மீன்களைப் பார்த்ததும் அவருக்கு மீன்பிடிக்கும் எண்ணம் மீண்டும் வரத் தூண்டில் ஒன்று கொண்டு வந்திருக்கலாம் என எண்ண உடனே அவர் கையில் ஒரு தூண்டில் வருகிறது. அவர் மீன் பிடிக்கத் தொடங்குகிறார். அவர் தூண்டிலைப் போட்டவுடன் ஒரு பெரிய மீன் பிடிபடுகிறது. அவருக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. வீட்டுக்குச் சென்றதும் உடனே அவற்றைத் தன் மகன்களுக்குக் காட்ட வேண்டும் என எண்ணுகிறார். தொடர்ந்து பல மீன்களைப் பிடிக்கிறார். மீன் பிடிப்பதில் உள்ள தனது ஆசை குறையும் வரை அவர் விடாமல் தொடர்ந்து மீன் பிடித்துக் கொண்டேயிருக்கிறார். இப்போ தனக்கும் தனது நண்பர்களுக்கும் தேவையான மீன்களிலும் பார்க்கக் கூடுதலாகப் பிடித்து விட்டதை உணர்கிறார். எங்கே காரை விட்டுவிட்டு வந்ததென வியக்கிறார். அப்பொழுது தான் முன்பின் தெரியாத ஒரு பிரதேசத்தில் தான் நிற்பதை உணர்கிறார். இங்கு எப்படி வந்தார்? எப்பொழுது வந்தார்? ஒருவேளை இது கனவென்றால் புதிதாகப் பிடிக்கப்பட்ட மீன்களைத் தொட்டுப் பார்க்க முடிகிறது. மணமும் வருகிறது. தூல சரீரத்தின் புலன்களைப் போலவே சூக்கும சரீரத்தின் புலன்களும் வேலை செய்யும். உண்மையில் அவை கூடுதலாக வேலை செய்யும்."
என்ன விசித்திரம்! காரை ஒரு இடமும் காணவில்லை! அத்துடன் மனிதர்கள் இருப்பதற்கான அறிகுறி ஒன்றுமே அங்கு காணப்படவில்லை. அடுத்ததாக என்ன செய்வதென யோசிக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக இருள் சூழத் தொடங்குகிறது. அல்லது அப்படி அவர் எண்ணுகிறார். வீட்டில் தன்னைக் காணாமல் தேடுவார்களே எனத் தீவிரமாக யோசிக்கிறார். அவருக்குத் திடீரென வீட்டுக்குச் செல்ல வேண்டும் போல் தீவிர எண்ணம் வருகிறது. அப்பொழுதே அவர் தனது சொந்த ஊரில் நிற்கிறார். அவரது உடலுக்கு மேல் முன்பின் தெரியாதவர்கள் குனிந்து நின்று கொண்டிருக்கிறார்கள். என்ன செய்கிறார்கள் அவர்கள்? ஒருவேளை மருந்து தருகிறார்களோ? இல்லையில்லை. இது நோயாளியின் கட்டிலல்ல. ஆனால் பிரேதச் சாலை போலுள்ளது. எங்கோ பெரிய தவறு நேர்ந்திருக்கிறது. அவசரமாக வீட்டுக்குச் செல்கிறார். அங்கே அவரது மனைவி கறுப்பு ஆடையுடன் இருக்கிறாள். அமைதியாக ஆட்கள் வந்து சென்று கொண்டிருக்கின்றனர். எங்கோ பெரிய தவறொன்று நேர்ந்திருக்க வேண்டும். இல்லையெனில் தான் ஒரு நாளுமில்லாத விதமாகப் பிடிபட்ட மீனை அவர்களுக்குக் காட்டுவதற்கு முன்னால் நின்று கொண்டிருக்கும் போது இவர்கள் ஏன் தனக்காக அழுகிறார்கள்? அவர் கதவருகில் நிற்பதை அவரது மனைவி பார்க்கிறாள். ஆனால் அவருடன் பேசுவதற்குப் பதிலாக அழத் தொடங்கி விடுகிறாள். "என்ன பிரச்சனை ஹணி" எனக் கேட்கிறார். ஆனால் அவர் பேசுவதை ஒருவரும் கவனித்ததாகத் தெரியவில்லை. "என்ன நடந்தது?" எனக் குரலை உயர்த்திக் கேட்டதற்கும் மௌனமே பதிலாகக் கிடைத்தது. 
அவர் மனைவியிடம் சென்று அவளின் தலையைத் திருப்பி அவளிடம் கேட்கிறார், "ஏன் அழுகிறாய்? நான் இதற்கு முன்னே இவ்வளவு நன்றாக இருந்ததேயில்லை. எனவே கண்களைத் துடை. இரவுச் சாப்பாட்டுக்கு மீனைத் தயார் செய்யலாம்" என்றார். மனைவி அதற்குப் பதிலேதும் கூறவில்லை. அவர் குழம்பினார். ஏன் அனைவரது நடவடிக்கைகளும் விசித்திரமாகவுள்ளன? அத்துடன் ஏன் அனைவரும் அவருடன் பேச மறுக்கின்றனர்? உறவினர்களும் நண்பர்களும் அவரை வெறுக்கும்படி அவர் என்ன செய்தார்? மீனை வைத்து விட்டுச் சமையலறை மேசையருகில் மனச்சோர்வுடன் சென்று அமர்கிறார் அவர். எப்போ இந்த ஆட்களெல்லாரும் செல்வார்கள்? தனது மனைவி வந்து தனக்கு இரவுச் சமையலுக்கு உதவி செய்வாள்? தான் பிடித்த மீனெல்லாம் செதில் நீக்கப்பட்டுக் கழுவப்பட்டிருந்தால் நன்றாயிருக்குமென எண்ணிக் கொண்டே மீனைப் பார்க்கிறார். அவையெல்லாம் வெட்டிக் கழுவப்பட்டு சமையலுக்குத் தயார் நிலையிலிருப்பதைக் கண்டு வியக்கிறார். அவர் சற்றே கண்ணயர்ந்த வேளையில் அவர் மனைவி ஏனையவர்களிடமிருந்து மெதுவாக நழுவி வந்து மீனைக் கழுவி வைத்து விட்டுச் சென்றிருக்க வேண்டும். ஆனால் கண்ணயர்ந்ததாக அவருக்கு நினைவில்லை . அவர் மனைவி அதன் பின்னர் அங்கு வரவுமில்லை. கதவைத் திறந்து மனைவியை அவர் அழைத்த போதும் அவள் வரவில்லை. அவர் தனிமையாய் உணர்ந்தார். வீடு நிறைய ஆட்கள். அப்படியிருந்தும் ஒருவரும் அவரையோ அவர் கொணர்ந்த மீனையோ சற்றும் கவனிக்கவில்லை. அந்த நேரத்தில் தான் அவர், "நான் இறந்து தான் இருக்க வேண்டும் போல" என உரக்கச் சொல்லிக் கொண்டார். அவர் அந்த வார்த்தைகளை உதிர்த்த மறுகணம் மீண்டும் அந்த ஓடையருகிலுள்ள புற்றரையில் நிற்கிறார். ஆனால் இம்முறை அங்கு வேறு சிலரும் இயற்கையழகை ரசித்துக் கொண்டு நிற்கின்றனர். தனது குடும்பத்தினரால் அலட்சியப் படுத்தப்பட்டதால் சிறிது தயக்கத்துடனே அவர் மெல்லிதாக ஒரு 'ஹலோ' சொல்கிறார். உடனே அவர்களைவரும் அவரை நட்புடன் சூழ்ந்து கொள்கின்றனர். அவர்கள் அவரிடம் அவர் பிடித்த மீன்களைப் பற்றிக் கேட்கின்றனர். அந்த இயற்கையழகு அவருக்குப் பிடித்திருக்கின்றதா எனக் கேட்கின்றனர். அவர் எங்கிருந்து வந்தாரெனக் கேட்கின்றனர். தனது காரை எங்கேயோ மாறி விட்டுவிட்டதாக அவர் உரைக்கிறார். அதற்கு அவர்களில் ஒருவர் இனி அவருக்குக் காரின் தேவை இருக்காது எனவும் எங்கு போக வேண்டுமென அவர் விரும்புகிறாரோ அங்கே நினைத்த மாத்திரத்தில் அவர் இருப்பார் எனவும் உரைக்கின்றார். இதைக் கேட்டதும் அவர் தடுமாற்றமடைந்து அப்படியே மயக்கமாகிறார். ஒருவாறு அவர் மயக்கம் தெளிந்து எழுந்த போது ஒருவரைத் தவிர ஏனைய அனைவரும் போய் விட்டிருக்கின்றனர். நீண்ட வெண்மையான தாடியுடனிருந்த அவர், "மகனே நாம் பாடசாலையில் சேர்வதற்கான நேரம் வந்துவிட்டது" என்கிறார். "பாடசாலை" என இவர் வியக்கிறார். "வயதானவரே, நான் என்றோ படித்து முடித்து விட்டேன். அதைப் போல நீங்களும் தான் முடித்திருக்க வேண்டும்" என்கிறார். "நண்பனே, இது வித்தியாசமான பாடசாலை" என்கிறார் அந்த  வயதானவர். மீண்டும் அவர் "இது தான் உண்மையான பாடசாலை. இங்கே எங்களுக்கு எப்படி ஞாபகப்படுத்துதல், எப்படி மறத்தல், படிக்காமலே எவற்றையெல்லாம் அறியலாம் என்றெல்லாம் கற்றுத்தரப்படும்." என்கிறார். "அந்த மனிதர் பெரிய குழப்பத்துக்குள்ளாகிறார். இருந்தும் அந்த வயதானவரைப் பின் தொடர்ந்து ஒரு பாடசாலைக் கட்டடத்துக்குச் செல்கிறார். அங்கே அவருக்கு அறிமுகமில்லாத பலர் வகுப்பறை போல தென்பட்ட ஒரு அறையில் இருக்கின்றனர். அவர்களில் ஒருவரைப் பார்த்தால் லயன்ஸ் கிளப்பில் சந்திக்கும் ஒரு சட்டத்தரணியைப் போலிருக்கிறார். ஆனால் அவர் இரண்டொரு கிழமைக்கு முன் இறந்து விட்டதால் அது வேறு யாரோவென நினைக்கிறார். வகுப்பு ஆரம்பிக்கப்படுகிறது. அந்த வயதானவர், "நீங்கள் எல்லோரும் ஏன் இங்கே வந்துள்ளீர்களென உங்களுக்குத் தெரியுமென நினைக்கிறேன்" என எல்லோரையும் பார்த்துக் கேட்கிறார். எல்லோரும் மௌனமாக இருக்கையில் புதிதாக வந்த இவர் மட்டும் தனது கையை உயர்த்தி உரத்த குரலில், "எனக்கு நான் இங்கே ஏன் வந்தேனெனத் தெரியவில்லை சேர்" என்கிறார். ஏனையவர்கள் இவரைத் திரும்பிப் பார்க்கின்றனர். அனைவரின் பார்வையிலும் ஒரு புரிதல் தெரிகிறது. அவர்களுக்கும் முதலில் ஒன்றும் புரியாமலிருந்து பின்னர் புரிந்து கொண்டிருக்கலாம். அந்த வயதானவர் மெதுவாகச் சொன்னார், "கவனமாகக் கேள் மகனே, ஏனெனில் இது மிக முக்கியமாகத் தெரியவேண்டிய விஷயங்களில் ஒன்று. இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் நான் ஒரு விஷயம் சொல்லப் போகிறேன். எமது மேலுலகத்துக்குப் புதிதாக வந்துள்ள ஜேம்ஸை நாம் வரவேற்போம். அவர் இந்த மாற்றத்துக்கு இன்னும் பழக்கப்படவில்லை. ஆனால் இதே குழப்ப நிலையில் தான் இங்கிருக்கும் பலர் சமீபகாலம் வரையில் இருந்ததனால் நாமனைவரும் சேர்ந்து அவரின் மனக்காயங்களை ஆற்றுவோம். ஜேம்ஸ், நாங்கள் கைகள், கால்களிலும் பார்க்க உங்களுக்கு மிக அண்மையிலுள்ளோம். எனவே நீங்கள் தனியே நின்று குழம்பத் தேவையில்லை. தற்போதைக்கு உங்கள் உற்றார் உறவினர்களை நீங்கள் பார்க்கவும் அவர்களுடன் பேசவும் இயலுமாக உள்ள போதும், அவர்களால் உங்களைப் பார்க்கவோ பேசவோ இயலாதென்பதை மட்டும் ஏற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் அவர்களிலும் பார்க்க உயிரோட்டமாக உள்ளதை இது நிரூபிக்கின்றது. உங்களது அறிவுத்திறன், உணர்வுகள், புலன்கள் உட்பட அனைத்தும் முன்பிலும் பார்க்க மிகக் கூர்மையானதால் நீங்கள் பூதவுடலை விட்டு வெளியேறிவிட்டீர்கள். ஆனால் அவர்களைப் பொறுத்தவரை இப்போதைக்கு அவர்கள் உங்களை வெறும் காற்றாகவே பார்ப்பார்கள். மண்ணுக்கடியில் புதைந்திருப்பதாகவே எண்ணுவார்கள். இது ஒரு பரிதாபத்துக்குரிய நிலை தான்... ஆனால் இதிலிருந்தே நாளை நாம் பாடத்தை ஆரம்பிப்போம்."
ஆர்தர் ஃபோர்டும் இதில் நிறுத்தினார். மறுநாள் பிரதான விஷயத்திலிருந்து சற்றே விலகி, "இப்புத்தகம் பூவுலகிலிருந்து மேலுலகுக்குச் செல்லும் வெவ்வேறு வகையான ஆத்மாக்களின் உண்மை நிலைப்பாட்டைப் பற்றியதாகும்" என்றார். தொடர்ந்து அவர், "மாடமாளிகைகளுக்கு ஆசைப்படுபவர்களுக்கு அவை உடனே கிடைக்கும். ஆனால் ஆன்மீகப் பசி உள்ளவர்களுக்கு அவர்கள் வேண்டியது தாராளமாகக் கிடைக்கும். அது தான் உண்மையான நோக்கம். அதாவது பொருளாசைக்கும் ஆன்மீகத்துக்கும் இடையிலான மோதல். ஒவ்வொரு ஆத்மாவும் தனக்குரிய வழியைத் தானே தான் தெரிவு செய்ய வேண்டும்" என்றார்.
"நேற்றுச் சொன்ன மனிதனின் கதைக்கு வருவோம். மீன் பிடித்தல் மட்டுமே பூவுலகில் அவரது பொழுது போக்காக இருந்தது. அவர் இங்கே வருமுன் தான் ஒரு அழகான ஏரியில் நிறைய மீன்கள் பிடிப்பதாகக் கற்பனை செய்திருந்தார். ஆனால் தான் பிடித்து வந்த மீனைப் பற்றிப் பேசுவதற்கோ அன்றி அதைச் சமைப்பதற்கோ ஒருவரும் இல்லாததைக் கண்டு அவர் ஏமாற்றமுற்றார். பூவுலகிலிருப்பவர்கள் ஒருவருக்கும் அவர் அங்கேயிருப்பது தெரியாதாகையால் அவரது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. சிறிது காலத்தில் அவர்களால் தன்னைப் பார்க்க இயலாதென்பதை அவர் புரிந்து கொண்டார். அத்துடன் புதிய வாழ்க்கைக்கு முன்னரிலும் பார்க்கக் கூடிய கவனம் தேவைப்படுகிறது என்பதையும் புரிந்து கொண்டார். அத்துடன் அவர்களைக் கேள்வி கேட்பதற்கோ பலவந்தப்படுத்துவதற்கோ அவசியம் இல்லாதவாறு விதிகள் ஸ்திரமாக இருப்பதையும் புரிந்து கொண்டார். இப்போ அவர் தன்னைச் சூழ்நிலைகளுக்கேற்ப மாற்றிக் கொண்டார். தனது பழைய வீட்டில் சுற்றிக் கொண்டிருப்பதையும் விட்டு விட்டார். நாம் ஒவ்வொருவரும் இப்படியான கட்டங்களைக் கடக்க வேண்டுமெனப் புரிந்து கொண்டார். எவ்வளவு விரைவில் நாம் விடயங்களைப் புரிந்து, புதிய வழிகளை அறிந்து கொள்கிறோமோ அவ்வளவுக்கு நாம் மகிழ்ச்சியடைவோம் எனவும் புரிந்து கொண்டார். நான் முன்பே கூறியது போல இது ஒரு உழைக்கும் உலகம். சோம்பேறிகள் அப்படியே இருந்து தங்களது விதியை தாங்களே தீர்மானிப்பார்கள். ஒருவரும் அவர்களை உழைப்பதற்குக் கட்டாயப்படுத்த மாட்டார்கள். அவர்களின் அந்தராத்மா அவர்களில் தான் அனைத்தும் தங்கியுள்ளதென்று சொல்லும் வரை அவர்கள் வளர்ச்சியுற மாட்டார்கள்.