இது 'A World Beyond' என்ற ஆங்கில நூலின் மொழிபெயர்ப்பாகும். இந்நூலை எழுதியவர் ரூத் மோன்கொமெரி (Ruth Montgomery) எனும் ஒரு பெண்மணியாகும். மனிதருக்குள் மேலுலக ஆத்மாக்கள் வந்து பேசுவதைப் போன்று மேற்குலகில் 'Automatic Writing' என ஒரு விடயமுள்ளது. அதாவது ஆத்மாக்கள் எங்கள் மூலமாக வந்து சில விடயங்களை எம்மைக் கொண்டு எழுதச் செய்வது என்பதாகும். இந்நூலானது அப்படியாகத்தான் எழுதப்பட்டது. 'ஆர்தர் போர்ட்' என்று இந்நூலாசிரியைக்குத் தந்தையைப் போலிருந்த ஒருவர் மேலுலகம் சென்ற பிற்பாடு அவர் மூலமாக எழுதப்பட்டது இந்நூலாகும்.

Tuesday, February 24, 2015

முடிவுரை (Epilogue)

இப்புத்தகத்துக்கான விடயங்கள் அனைத்தும் 1971 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4 ஆம் திகதியிலிருந்து மே மாதம் 7 ஆம் திகதிக்கிடைப்பட்ட நான்கு மாதகாலத்திலேயே பெறப்பட்டது. இறுதிக் கட்ட அமர்வுகளின் போது ஒரு நாள் நான் ஆர்தர் போர்டை, "இப்புத்தகமானது வெளியிடப்படும் வரையிலாவது, நான் வாசகர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்காக அவருடனான தொடர்பை நான் தொடரலாமா" எனக் கேட்டேன். அதற்கு அவர், "நான் வெகு தொலைவிலில்லை. அத்துடன் 'லிலி' மூலமாக நீ என்னை எப்போதும் அணுகவியலும். கவலைப்படாதே, நான் நீ கூப்பிடும் தொலைவிலேயே உள்ளேன். அத்துடன் நான் உன்னை விட்டு வேறொரு இடத்துக்கும் சென்று விடவில்லை. வேறொரு தளத்தினில் நான் வேலை செய்து கொண்டிருக்கிறேன் அவ்வளவு தான்" என்றார்.
மே மாதத்தில் எமது கடைசி அமர்வின் போது, ஆர்தர், "எமது வேலையானது முடிவடையும் தறுவாயில் உள்ளது. எமக்கு மகிழ்ச்சியாகவுள்ளது. எம்மில் நீ வைத்த நம்பிக்கையும் மகிழ்ச்சியைத் தருகின்றது. நான் இனி எனது அடுத்த கடமைகளுக்குச் செல்லலாம். லிலியின் சேவையும் இனி அவசியமில்லை. ஆனால் இந்த நேரத்தில், (அதாவது காலை 8:30 மணிக்கு) உனக்கு எம்மிடமிருந்து செய்தியேதும் தேவைப்படின், எமது குழுவைச் சேர்ந்தவர்களின் பாதுகாப்பானது தவறாமற் கிடைக்கும். மிக அவசியமேற்படின் லிலியும் உதவிக்கு வருவார். நாம், தன்னிச்சையான எழுத்தை நீ ஆரம்பிப்பதற்கு முன் உன்னைத் தியானம் செய்யும் படியும் அத்துடன் எப்போதும் போல பாதுகாப்புக்கான கவசத்தை வேண்டும் படியும் பணித்திருந்தோம். இனி நீ அப்படிச் செய்யத் தேவையில்லை. இப்பொழுது உனக்கு சற்று ஓய்வு தேவை. நல்லவளாக இரு ரூத். அத்துடன் இப்புத்தகத்தில் உரைத்தவாறு நடந்து கொள். எமது எல்லோரது அன்பும் உன்னுடன் தான்; ஆர்ட், லிலி, மற்றும் குழுவினர். இறைவனுடன் செல். ஆமென்."
இன்னொரு பிரிவின் துயர். ஆனால் அவரின் மரணச் செய்தியறிந்த போதிலிருந்த தனிமையுணர்வில்லை. ஏனெனில் அவர் உயர் உணர்வு நிலைகளில், மிகவும் மகிழ்வாகத் தன்னை வேலைகளில் ஈடுபடுத்திக் கொண்டுள்ளார் என்பது எனக்கு இப்போ நன்கு தெரியும். நாம் மீண்டும் சந்திப்போம். அதே சமயத்தில் எனக்கும் இங்கே வேலைகளுள்ளன. நான் இப்போ முடிக்கப்போகும் பணியானது உண்மையிலேயே மனதுக்கு மிகவும் இதமானதாக இருப்பதை மறுக்க முடியாது. எனது கையெழுத்துப் பிரதியை நான் வழமை போல ஆரம்பித்தேன். அதாவது, அத்தியாயங்களை ஓரளவு சுமாராக எழுதிப் பின்னர் இறுதி வடிவம் பெறுவதற்கு முன் அவற்றைச் சீர் செய்வது. ஆனால் ஆர்தர் போர்ட்டின் வசனங்களுக்கு அதிகம் திருத்தம் தேவையில்லையென்பதை நான் வெகு விரைவிற் புரிந்து கொண்டேன். எனவே புத்தகத்தின் மிகுதியை நான் நடுவிற் கார்பன் பேப்பர்களை வைத்துத் தரமான காகிதத்திலேயே எழுதிமுடித்தேன்.
லிலி, உண்மையைத் தேடி.......(A Search for the Truth) என்ற புத்தகத்துக்குரிய செய்திகளைத் தருகையில் செய்தது போலவே ஆர்தரும் ஒற்றை இடைவெளி விட்டு மஞ்சள் காகிதத்தில் நிறுத்தற் குறிகளோ, முதலாக்கங்களோ (capitalization) இன்றி டைப் செய்திருந்தார். ஆனால் எல்லா வாக்கியங்களுமே பூரணமானவையாக இருந்தன. நான் அப்பிரதியில் நீக்கியவையெல்லாம் மீண்டும் மீண்டும் உரைக்கப்பட்ட எண்ணங்களும் மற்றது என்னையும், எனது குடும்பத்தாரையும் பற்றிய தனிப்பட்ட தகவல்களும் மட்டும் தான். ஸ்பெல்லிங் (எழுத்துகூட்டல்) ஆனது எப்போதும் எனக்கு ஒரு பிரச்சனையான விஷயமானதால் சந்தேகத்துக்கிடமான சொற்களின் ஸ்பெல்லிங்குகளை வெப்ஸ்ரஸ் டிக்ஷனரியில் (Webster's Dictionary) சரி பார்ப்பதால் கணிசமான நேரத்தை நான் வீணடித்தேன். வழமை போலவே எப்போதும் அவர் சரியாகவும், நான் தவறாகவும் தானிருந்தோம். அவரின் வார்த்தைப் பிரயோஹங்களும் என்னை அடிக்கடி டிக்ஷனரிக்கு (அகராதிக்குத்) தள்ளின. அவர் சிலசமயம் "torpor" (மந்தமான) என்ற சொல்லை உபயோகித்தபோது நான் அதனை "stupor" (மயக்கநிலை) என்ற சொல்லைத்தான் அவர் கருதுகிறார் என நினைத்துப் பின் ஆராய்ந்த பிற்பாடு இல்லையில்லை அவர் தான் சொல்ல நினைத்ததைச் சொல்ல மிகச் சரியான வார்த்தையைத் தான் தெரிவு செய்திருக்கிறார் என்று கண்டு கொண்டிருக்கிறேன். அவர் "wont to do" என்ற சொற்றொடரை உபயோகித்திருந்தார். வெப்ஸ்டரில் (Webster) 'wont' என்பதன் அர்த்தம் accustomed (பழக்கமாகி விட்டது) என்று இருந்தது. அவரது "centrifugal" எனும் சொல் என்னைக் குழப்பிவிட்டது. ஆனால் அகராதியில் (டிக்ஷனரி) அதனது அர்த்தம் "மையப்புள்ளியை விட்டு விலகிச் செல்லுதல்;வெளிநோக்கி முன்னேறல்" என்று இருந்தது. அவரது எழுத்துக்களில் அவரது ஆளுமையானது மிளிர்ந்தது. அத்துடன் அவரது நகைச்சுவைக்கும் குறைவில்லை.
அமானுஷ்யமான விடயங்களைப் பற்றிய எனது முந்தைய புத்தகங்களை வாசித்து அவற்றைப் பற்றி எனக்கு எழுதிய எனது ஆயிரமாயிரமான வாசகர்களுக்கு எனது நன்றியை நான் தெரிவிக்கிறேன். இது போன்ற ஏனையவர்களைக் காப்பாற்றும் முகமாக மிகுதியுள்ள இடத்தில் நான் மிக அதிகமாகக் கேட்கப்படும் கேள்விகளுக்கு விடையளிக்கலாம் என்று நினைக்கிறேன்.
"தன்னிச்சையான எழுதுகை (automatic writing) ஆபத்தானதா?" அதற்கு ஆம் என்பதே பதில். அதாவது ஒருவர் மனத்தளவிலும், உடலளவிலும் சமநிலையில் இருந்தாலேயன்றி, ஒரு தீய ஆவியோ, அன்றி விஷமம் நிறைந்த ஆத்மாவோ தொடர்பு கொள்ளக்கூடிய வழிகளை உருவாக்காமலிருப்பது நல்லது. ஏப்ரல் மாதத்தொடக்கத்தில் நடந்த ஒரு அமர்வின் போது ஆர்தர் போர்ட் ஒரு பெண்ணைப்பற்றி, "அவள் இறையுணர்வு (Christ-centered) கொண்டவளாகவும் அதே நேரத்தில் அவளது உள்ளுணர்வானது ரட்சகனுடைய ஆணைகளுக்கு அல்லது அவளது வெளியுணர்வுகளுக்குக் கீழ்ப்படிவதாகவும் இருக்கும்வரை அவளுக்கு ஆபத்து ஒன்றுமில்லை. பூவுலகிலுள்ள ஒருவரின் செயல்களைக் கட்டுப்படுத்தும் சாதாரண மனத்தின் ஆணைகளை அவள் பின்பற்றும் வரை அவளுக்கு ஒரு ஆபத்துமில்லை. ஆனால் எப்போ அவள் தனது ஆழ்மனத்தின் வசம் எண்ணங்களின் கடிவாளங்களைக் கொடுக்கிறாளோ அக்கணத்தில் அவளுக்குக் கஷ்டகாலம் ஆரம்பமாகும். ஏனெனில் ஆழ்மனத்தில் தான் எமது நினைவுகளெல்லாம் சேமிக்கப்பட்டுள்ளன. அதனால் அந்த மனத்தை ஆட்சி செலுத்த விட்டால் அந்த ஆத்மாவின் மறக்கடிக்கப்பட்ட, மனத்தின் இருண்ட குகைகளில் சேமிக்கப்பட்ட நினைவுகளெல்லாம் வெளியில் வந்து ஒரு குழப்பநிலை உருவாகும். இந்நினைவுகள் எல்லாவற்றையும் ஒரே நேரத்திற் கட்டவிழ்த்து விடக்கூடாது. இப்படிப்பட்ட நிலையில் (அதாவது ஆழ்மனம் இவ்வாறு ஆட்சி செய்யும் நிலையில்) அந்தப் பெண் இங்கு வரும்போது இந்தச் சூழலுக்கேற்ப தன்னை மாற்றுவதற்கு நிச்சயம் கஷ்டப்படுவாள். அதாவது போதிய வழிகாட்டலோ அன்றி நியாயத்தீர்ப்போ இன்றி ஆழ்மனதிலிருக்கும் நினைவுகள் கட்டவிழ்த்து விடப்படும்போது அப்பெண் பேய் பிடித்தது போல் காணப்படுவாள்; கலிலியாவின் கடற்கரையில் யேசு கிறிஸ்து பைத்தியக்காரரைப் பேயோட்டியது உண்மையில் ஆழ்மனத்தின் கட்டுப்பாட்டை நிறுத்தி வெளி மனத்தின் கட்டுப்பாட்டை மீண்டும் கொண்டு வந்தது ஆகும். உண்மையில் ஆழ்மனதுக்கும், வெளி மனதுக்குமிடையில் ஒரு சமநிலையை உருவாக்குவதற்கு உலகில் பற்பல வருடங்களெடுக்கும். பாதுகாப்பு வலையம், நேரக்கட்டுப்பாடு, மற்றும் இடைவெளிகள் போன்ற எச்சரிக்கைகளைக் கவனிக்காமல் ஆழ்மனதுக்கு முழுச்சுதந்திரம் வழங்கும் பூமியிலிருப்பவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டும். அவர்கள் ஆழ்மனதுக்கு முழு அதிகாரமளித்தால் அது கிணறு வெட்டப் பூதம் புறப்பட்ட கதையாக முடியலாம். Automatic writing அதாவது 'தன்னியல்பாக எழுதும் முயற்சியில் நீ தீவிரமாக நாட்டம் கொண்டால், நான் எனது 'உண்மையைத் தேடி' என்ற நூலில் உரைத்த பாதுகாப்புக்கான வழிமுறைகளை நீ கவனமாகக்  கைக்கொள்ள வேண்டுமென்பதை நான் வலியுறுத்துகிறேன். அவற்றை மீண்டும் நான் எழுதுகிறேன்: உனது நோக்கமானது ஆத்மீக முன்னேற்றத்துக்காகத் தானேயன்றி சிறுபிள்ளைத் தனமான வேடிக்கைக்காகவல்ல என்பதை உறுதிப்படுத்திக் கொள். நீ ஆத்மீகத் தேடலுக்காக ஒவ்வொரு நாளும் முறைப்படி தியானம் செய்பவராக இருந்தாலேயன்றி இதற்கு முயற்சிக்காதே. தன்னியல்பான எழுத்து ஆரம்பிப்பதற்கு முன் எப்போதும் பாதுகாப்புக்காகப் பிரார்த்தனை செய்துகொள். அத்துடன் பதினைந்து நிமிடங்களுக்குக் கூடுதலாக ஒருநாளும் எழுதாதே. ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்திலேயே, அதாவது உன்னுடைய வழிகாட்டிகள் (guides) உனக்கு உதவக்கூடிய நேரத்திலேயே எழுதுவாயாக. எப்போதாவது தீய ஆத்மாக்கள் வருகை தந்தாலோ அன்றித் தகாத வார்த்தைகள் பிரயோகிக்கப்பட்டாலோ உடனே எழுதுவதை நிறுத்திவிடு. அதன் அர்த்தமானது நீ ஆத்ம உலகத்தொடர்புக்குத் தயாரில்லை என்பதாகும்.
"நம்பிக்கைக்குரிய ஒரு ஆவியூடகவியலாளரையோ, ஒரு ஜோசியரையோ அல்லது கேஸியைப் போன்று எமது முற்பிறவிகளை உரைக்கக் கூடிய ஒருவரையோ (Cayce-type reading) தாங்கள் பரிந்துரை (recommend) செய்ய முடியமா?" மறைபொருளியல் சம்பந்தமான தொழில் செய்பவர்கள் எனக்கு வெகுவாகப் பரிச்சயமில்லாத காரணத்தால் என்னால் ஒருவரையும் பரிந்துரை செய்ய இயலவில்லை.
"'உண்மையைத்தேடி' (A Search for the Truth) என்ற நூலில் தாங்கள் எழுதியிருந்த திருவாளர் 'A' அவர்கள் (Mr A) எனது நோயைக் குணப்படுத்த முன் வருவார்களா?" துரதிஷ்ட வசமாகத் திருவாளர் 'A' அவர்கள் அனாமதேயத்தையே (அவர் பெயரைப் பகிரங்கப்படுத்தாமல் இருப்பது) வலியுறுத்துகிறார். அதற்குக் காரணமுள்ளது. பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் என்னிடம் அவரது உதவியை நாடி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். அத்துடன் அவரது சொந்தத் தொழிலான காந்த சிகிச்சை (magnetic healing) முறையைச் சமாளிப்பதற்கே அவர் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார். எனவே அவர் யாரென்பதை என்னால் வெளிப்படுத்த வியலாது.
"நான் எவ்வாறு பாதுகாப்பாக எனது அமானுஷ்யத் திறமைகளை வளர்த்துக் கொள்ள இயலும்? அத்துடன் எனது முற்பிறவிகளைப் பற்றிய உண்மைகளையும் எவ்வாறு அறியமுடியும்?" லாபநோக்கமற்று அமெரிக்காவிலுக்கும் கனடாவிலும் இயங்கும் இரு சங்கங்களைப் பற்றி நான் அறிவேன். அவை இரு நாடுகளிலுமுள்ள பல்வேறு நகரங்களிற் சத்சங்கங்கள் (study groups) நடத்தி வருகின்றன. இவற்றில் சேர்வதற்கு அநேகமாகக் கட்டணமேதுமில்லை. 800, Custer Avenue, Evanston, Illinois 60202 என்கின்ற விலாசத்துக்கோ அல்லது Association for Research and Enlightenment, தா . எ 595, Virginia Beach, Virginia 23451 எனும் விலாசத்துக்கோ தொடர்பு கொள்ளவும். அவர்களிடம் நீங்கள் அங்கத்தினராவதைப் பற்றியோ அல்லது உங்கள் நகரத்திற் கிளைகள் திறப்பதைப் பற்றியோ அறிந்து கொள்ளலாம். இதில் முதலாவதாக எழுதிய சங்கத்தைத் திறப்பதற்கு ஆர்தர் போர்டே உதவிகள் செய்திருக்கிறார். எப்போதும் ஒற்றுமையே பலம் என்பதால் யாராவது இருவரோ அல்லது மூவரோ சேர்ந்து தியானம் செய்தாலே போதுமானது. இவ்விரு சங்கங்களிலுமே அமானுஷ்ய விடயங்களடங்கிய நூல்களைக் கொண்ட நூலகங்களுள்ளன. அங்கத்தினர் அஞ்சல் மூலம் நூல்களை பெறலாம். 
"தங்கள் வழிகாட்டிகளிடம் தாங்கள் எனக்காக ஒரு கேள்வி கேட்க இயலுமா?" இல்லை ஏனெனில் தங்களுக்குரிய பணி இதுவல்லவென லிலி உறுதியாகச் சொல்லிவிட்டார், அத்துடன் ஆர்தர் போர்ட்டும் இப்போது வேறு பணிகளுக்கு மாறிவிட்டிருக்கிறார். 
எமது ஆத்மீகத் தகைமைகளைத், தியானம், பிரார்த்தனை மற்றும் பிறர்க்கு உதவுதல் போன்ற செய்கைகளின் மூலம் நாமே தான் வளர்த்துக்கொள்ள வேண்டும். வேறொருவர் எமது பாதையைச் செப்பனிட இயலாது. எமக்குரிய வழியை நாமேதான் கண்டறிய வேண்டும். அத்துடன் வாழ்வில் எமக்கேற்படும் இன்னல்களும் துயரங்களும் எம்மை இன்னும் திடசாலிகளாக்கவே வருகின்றன என்பதை நினைவிற் கொள்ள வேண்டும். எப்போதும் எம்மை யாராவது முன்னோக்கி உந்தித் தள்ளிக் கொண்டே இருப்பார்களென எதிர்பார்க்க இயலாது.  

                                                             முற்றுப் பெற்றது  
                              மொழிபெயர்ப்பு இனிதே நிறைவேறியது