இது 'A World Beyond' என்ற ஆங்கில நூலின் மொழிபெயர்ப்பாகும். இந்நூலை எழுதியவர் ரூத் மோன்கொமெரி (Ruth Montgomery) எனும் ஒரு பெண்மணியாகும். மனிதருக்குள் மேலுலக ஆத்மாக்கள் வந்து பேசுவதைப் போன்று மேற்குலகில் 'Automatic Writing' என ஒரு விடயமுள்ளது. அதாவது ஆத்மாக்கள் எங்கள் மூலமாக வந்து சில விடயங்களை எம்மைக் கொண்டு எழுதச் செய்வது என்பதாகும். இந்நூலானது அப்படியாகத்தான் எழுதப்பட்டது. 'ஆர்தர் போர்ட்' என்று இந்நூலாசிரியைக்குத் தந்தையைப் போலிருந்த ஒருவர் மேலுலகம் சென்ற பிற்பாடு அவர் மூலமாக எழுதப்பட்டது இந்நூலாகும்.

Wednesday, August 14, 2019

பதினைந்தாம் அத்தியாயம் - தீர்க்கதரிசனம் (Prophecy)


மார்ச் மாதத்தின் ஆரம்பத்தில் ஒரு நாள், நேரத்தைப் பற்றிய மிக நீண்டதொரு உரையாடலின் போது ஆர்தர், "நாம் எப்போதும் இருந்து கொண்டே இருப்போம் என்பதை இங்கு வந்ததும் நாம் அறிந்து கொள்வதனால் இங்கே நேரம் என்பதற்கு ஒரு அர்த்தமும் இல்லை" என எழுதினார். தொடர்ந்து அவர், "எமக்கு ஆரம்பமும் இல்லை, முடிவும் இல்லை. எனவே இங்கே நேரமென்ற ஒன்று இல்லை. ஆனால் பூவுலகில் தூக்கம், விழிப்பு அத்துடன் பிறப்பு, இறப்புப்  போன்ற நிலைகளை ஒழுங்கு படுத்துவதற்கும், மற்றும் ஒருவரது நாளாந்தக் கடமைகளைச் சீராகச் செய்வதற்கும் நேரமானது இன்றியமையாதது என்பது வெளிப்படை" எனவும் எழுதினார். பின்னர் ஆவலைத் தூண்டும் விதமாகப் பின்வருமாறு எழுதினார், "திரையின் இப்பக்கத்திலிருக்கும் நாம், திரையின் அப்பக்கத்திலிருக்கும் உங்களிலும் பார்க்கச் சற்றே நீண்ட கால வரையறையைக்  காண்கிறோம். ஆனால் எக்காரணம் கொண்டும் வாழ்வின் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை காணமாட்டோம். உங்களிற் பார்க்க நாம் ஒன்றும் பெரிதாகத் தவறு இழைக்காதவர்கள் அல்ல. உங்களுக்கும் எமக்கும் உள்ள வித்தியாசம், நாங்கள் இறைதிட்டத்தின் நோக்கங்களைப் பற்றிய பரந்த அளவிலான பார்வையும், ஆழமான விழிப்புணர்வும் கொண்டுள்ளோம்.
"பூவுலகிற் பிறக்கையில், நாம் 'நேரம்' என்று அழைக்கப்படும் குறுகிய வட்டத்துள் ஒடுக்கப்படுகிறோம். அவ்வேளையில் பால் ஊட்டப்படுதலையோ அல்லது உணவு ஊட்டப் படுதலையோ கடந்து வேறொன்றையும் அறியோம். கைக்குழந்தையாய் இருக்கையில் இவைகளைப் பற்றித் தெரிந்திருந்தால் மட்டுமே போதுமானது. பின்னர் குழந்தைப் பருவத்திலிருந்து வளர்ந்து சிறுவர்கள் ஆகையில் இந்த வட்டமானது கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாகும். மேலும் அது வாழ்வின் ஒவ்வொரு கட்டமாகப் பெரிதாகிக் கொண்டே வரும். ஒரு சிறு குழந்தை இந்த விரிந்து பரந்த காலத்தைப் பார்க்கையில் முதலில் அதற்கு நேரமானது இழுபடுவதைப் போலத் தெரியும். அதாவது ஒரு பார்ட்டி அல்லது பாடசாலையின் திறப்புப் போன்ற ஒரு சந்தோஷமான அல்லது பயங்கரமான சம்பவம் நடைபெறும் வரை நேரமானது ஒரு சிறு குழந்தைக்கு இழுபடுவதைப் போன்று இருக்கும். அந்தக் கணம் வரையும் அவன் பூவுலகில் வாழ்ந்த காலத்துடன் ஒப்பிடுகையில் அவனுக்கு அது நீண்ட நேரமாகத் தெரியும். ஆனால் நாம் முதுமையை நெருங்குகையில் நேரமானது விரைவாக ஓடி மறையும். ஒரு வருடமானது சிறு குழந்தைக்கான ஒரு நாளைப் போன்று தோற்றமளிக்கும். இது பூதவுடலில் இருக்கையில் நாம் கழித்த காலத்துக்குச் சம விகிதத்தில் இருக்கும்".
ஆர்தர், அவர் இருக்கும் தளத்தில் சற்று நீளமான கால வரையறையைக் காண்பதாகக் கூறியமை எனக்கு அதைப் பற்றி மேலும் அறியும் ஆவலைத் தூண்டியதன் காரணமாக நான் அவரிடம், "வரும் காலத்தில் நடக்கக் கூடியதான விஷயங்களைப் பற்றிக் கூற இயலுமா" எனக் கேட்டேன். அதற்கு அவர், "அட்லாண்டிஸ் என்ற தொலைந்த கண்டமானது (The lost continent of Atlantis) அடுத்த பத்து ஆண்டுகளில் வெளிப்படுமென்றும் மற்றும் வியட்நாமில் எமது தீவிரப் பங்களிப்பானது விரைவில் ஒரு முடிவுக்கு வரும்" என்றும் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார். ஆனால் நான் வேறு பல விஷயங்களைப் பற்றி அறிய விரும்பினேன். அத்துடன் ஆர்தர் பூவுலகில் இருக்கையில் அவர் மூலமாகப் பிலெச்சர் (Fletcherபேசுகையில் தான் ஒரு மிகச் சிறந்த நிமித்திகன் என்பதை நிரூபித்திருந்தமை எனக்குத் தெரியும். ஜனாதிபதி கென்னடியின் படுகொலைக்கு ஒரு வருடத்தின் முன்பே ஒரு அமர்வின் போது ப்ளெச்சர், ஜனாதிபதி அவர்கள் வெள்ளை மாளிகையிலிருந்து தொலை தூரத்தில் ஒரு ஊர்வலத்தில் வைத்துக் கொல்லப்படுவார் என்பதை எனக்குச் சொல்லியிருந்தார். 1964 ஆம் ஆண்டுத் தேர்தலுக்கு ஒரு கிழமைக்கு முன், ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி, பிலதெல்பியாவில் நடைபெற்ற ஒரு அமர்வின் போது, ப்ளெச்சர் காலஞ்சென்ற ஹரோல்ட் இக்கீஸ் (Harold ickes) ஐ அறிமுகம் செய்து வைத்தார். அவர் FDR (பிராங்க்ளின் டெலானோ ரூஸ்வெல்ட்) இன் உட்துறைச் செயலாளராக இருந்தவர். அப்போது அவர், "கோல்ட்வோட்டர் (Goldwater) இன் வாக்காளர் வாக்குகள் குறைந்தபட்சம் நாற்பத்திமூன்றும், அதிகபட்சம் ஐம்பத்தியிரண்டும் என்று இக்கீஸ் சொல்கிறார்" என்பதாகச் சொன்னார். கோல்ட்வாட்டரின் வாக்காளர் வாக்குகள் ஐம்பத்தியிரண்டாக வந்தன. எனது சகோதரி மாக்ரெட்டைப் பற்றியும் ப்ளெச்சர் மிகத் துல்லியமாகக் கணித்துச் சொன்னார். எனவே அம்முற்றிலும் எதிர்பாராத நிகழ்ச்சி சில நாட்களில் நடந்தேறுகையில், அது என்னைச் சில்லிட வைத்தது.
எனவே, அவை உபயோகமாக உள்ளனவோ  இல்லையோ, ஆர்தர் போர்ட் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குச் சென்றதிலிருந்து அவரால் எனக்கு உரைக்கப்பட்ட முன் கணிப்புகளை எல்லாம் நான் இப்போ வெளியிடப் போகிறேன். அவையெல்லாம் நேரடி வாசகங்களாக இருப்பதனால், நான் அவற்றின் மேற்கோட்குறியீடுகளை நீக்கிவிட்டு எழுதுகிறேன்:
அடுத்த தேர்தலில் குடியரசுக்கட்சி (Republicans) ஆட்சிக்கு வரும். அதற்கான தகுதி அவர்களுக்கு உண்டு. ஜனநாயகக் கட்சி (Democrats) தங்களுக்குள் ஒரு டஜன் பிளவுகளை ஏற்படுத்திக் கொண்டு சண்டை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நிக்ஸன் செய்ய முயற்சிக்கும் எந்த விஷயத்துக்கும் எதிர்ப்புத் தெரிவிப்பதில் மட்டுமே ஒற்றுமையைக் காட்டுகிறார்கள். (இது நிச்சயமானது தானா அல்லது 1972 தேர்தலுக்கிடையில் நிலைமைகள் மாறலாமா என நான் கேட்டேன்) நிக்ஸன் நிச்சயம் வெல்வார். வெற்றி நிச்சயம். அக்னியூ (Agnew) வும் தேர்தலிற் போட்டியிடுவார்.
ஹென்றி "ஸ்கூப்" ஜாக்ஸன் (Henry "Scoop" Jackson) ஒரு நல்ல ஜனநாயகக் கட்சி வேட்பாளராக இருப்பார். ஆனால் அவர் நியமனம் பெற மாட்டார்.
ரெட் கென்னெடியை (Ted Kennedy) ஓர் செயற்திறன் மிக்க ஜனாதிபதி வேட்பாளராக நாம் காண்கிறோம். ஆனால் எதிர்வரும் ஐந்து வருடங்கள் வரையிலாவது அவரால் வெற்றிகரமாக வர இயலாது இருக்கும். அதன் பின்னர் நடப்பவைகள் இதற்கும் பிற்பாடும் நடக்கும் விடயங்களிற் தங்கியுள்ளன.
ஏத்தெல் கென்னடி (Ethel Kennedy) சிறிது காலத்துக்கு மறுமணம் புரியமாட்டார். எப்படிப்பட்ட ஒரு நல்ல தாய் அவர்! தனது குழந்தைகளின் அக்கறைகளில் மிகவும் ஆர்வமாக இருக்கிறார். அதனாற் தனக்குப் பிடித்த புதுமை விரும்பியான மனிதனால் தனது குழந்தைகளின் சந்தோஷம் பாதிப்படையாமல் இருப்பதற்காக அப்படிப்பட்ட ஒரு உறவை அவர் தவிர்த்தார்.
ஜாக்கி (Jackie) யினதும், அரிஸ்டாட்டில் ஒனாசிஸ் (Aristotle Onassis) இனதும் திருமணம்? அவ்வளவு பிழையென்றில்லை. ஜாக் (Jack) கென்னடியதும், அவரது சகோதர, சகோதரிகளிலும் பார்க்க அவர்களிருவருக்கும் இடையே பல்வேறு விஷயங்களில் நிறைய ஒற்றுமைகள் காணப்படுகின்றன. இருவருமே பணத்தையும், பதவியதிகாரத்தையும் விரும்புகிறவர்கள். அவர்களின் உறவிற் குழப்பங்கள் வருவதற்கான அறிகுறிகள் இதுவரையிற் காணப்படவில்லை. ஒரு வேளை இது நிலையான உறவாகவும் அமையலாம்.
ஜோர்டான் நீண்ட நாட்களுக்கு ஒரு தனி நாடாக இருக்காது. இஸ்ரேலாலும், சிரியாவாலும் விழுங்கப்பட்டு விடும். வருத்தப்பட வேண்டிய விடயம். ஹுஸைன் (Hussein) உண்மையில் ஒரு நல்ல மன்னர்.
அடுத்த பத்து வருடங்களுக்குள் எகிப்தில் வேறுபட்ட ஒரு அரசாங்கம் உருவாகும். இப்படிப்பட்ட திடமான, ஆனால் சுதந்திரமான அரசியல் நிலை மாற்றத்தால் நாடு மிகவும் பயனடையும். நல்ல இருதயமும், மூளையுமுள்ள பலம் வாய்ந்த ஒரு மனிதன் முன் வந்து அதிகாரத்தைக் கையிலெடுக்கையில் இவையாவும் நடைபெறும்.
துருக்கி பலமான நாடாகத் தொடர்ந்து இருக்கும். அது கம்யூனிசத்தை நோக்கிச் செல்லாது. கிரேக்க நாடும் அப்படித்தான்.
பிரான்ஸ்-ஏற்ற, இறக்கங்கள், அதற்கே உரித்தான பிரச்சனைகளுடனும்-அப்படியே இருக்கும்.
இங்கிலாந்து பலம் வாய்ந்த நாடாகத் தொடர்ந்து இருந்தாலும், அது தனது மேலாதிக்கத்தை மீளப் பெறாது.
வியட்நாம்? அமெரிக்கா கொஞ்சம் கொஞ்சமாகப் போர் முகப்பிலிருந்து பின்வாங்கும். ஆனாலும் சமாதானமென்பது உடனே ஏற்படவியலாதவாறு தேவையற்ற படுகொலைகள் இன்னும் நீண்ட காலத்துக்குத் தொடரும். கடைசியாகத் தென்கிழக்காசியாவில் சமாதானம் ஏற்படுகையில், அங்கே எம் சார்பிற் போர் புரிந்தவர்கள் நாடு திரும்புகையிற் கடும் வேலையில்லாத் திண்டாட்டத்தைச் சந்திக்க நேரும். எமது வேலைவாய்ப்புத் துறைகளின் வழிமுறைகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் அவர்கள் கஷ்டப்படுவார்கள். அவர்களின் சொந்தப் பிரச்சனைகளில் அவர்களுக்கு வழி காட்டுதல்கள் தேவைப்படலாம். உளவியல் ரீதியில் அவர்களைச் சீர் செய்யக்கூடிய கல்விக் கூடங்களின் மூலமே இதைச் செய்யமுடியும். அமெரிக்கா இப்பொழுதே போர்வீரர்களுக்கான வேலைத்திட்டங்களைத் தொடங்க வேண்டும். இல்லாவிடின் அமைதியின்மையை எதிர்கொள்ள நேரும். இரண்டாம் உலக மகாயுத்த வீரர்கள் போலவோ அன்றிக் கொரியன் போர் வீரர்கள் போலவோ இவர்கள் கற்பதில் அதிக ஆர்வம் காட்ட மாட்டார்கள். இவர்கள் செயல் வீரர்களாதலினால், நேரடியாகப் பணிகளிலோ, வேலைகளிலோ இறங்கவே விரும்புவர்.
ஐரோப்பா கம்யூனிசத்தை நாடாது. அத்துடன் 'சுதந்திரமானவை' என்றழைக்கப்படும் நாடுகளுடன் கம்யூனிச உலகமும் நீண்ட காலங்களுக்கு அருகருகே இருந்து கொண்டே இருக்கும். உலகியல் நாட்டம் கொண்ட கொம்யூனிஸ்ட் உலகமானது கடவுளின் பக்கம் கொஞ்சம் கொஞ்சமாகத் திரும்பத் தொடங்கும். காரணம் இந்த அமானுஷ்ய விஷயங்களைப் பற்றிய விஞ்ஞானப் புதிர்கள் தான். இவை சோவியத்தின் பௌதீக வல்லுனர்களையும், இயற்கை விஞ்ஞானிகளையும் மிகவும் கவர்கின்றன. அவர்கள் கடவுளை நோக்கித் திரும்புகையில், அவர்களது உள்ளமும், இதயமும் விரிவடையும். அப்போது முன்னேற்றமானது மிக விரைவாக இருக்கும். ரஷ்யாவானது சுதந்திரக் காற்றைக் கொஞ்சம் கொஞ்சமாக சுவாசிக்கத் தொடங்கும். சீனாவுக்கு ஐக்கியநாடுகள் சபையின் அங்கீகாரம் கிடைத்த பின் அது தன்னை மாற்றிக் கொள்ளும்.
ரஷ்யாவுக்கும், சீனாவுக்குமிடையில்? அவர்களுக்கிடையில் வரப்போகும் பதினைந்து வருடங்களுக்காவது பெரிதாக ஒரு பிரச்சனையும் வரக்கூடிய வாய்ப்புகளில்லை. போர் நடப்பதற்கான சாத்தியக்கூறுகளேதும் காணப்படவில்லை. சிற்சில மோதல்களும், உரசல்களுமே இருக்கும். ஆனால் மஞ்சள் இனமும், வெள்ளையினமும் சிறிது காலங்களுக்கு, அதாவது இனி வரும் பத்து வருடங்களுக்கு ஒன்றுடனொன்று முரண்பட்டுக்கொண்டே இருக்கப்போகின்றன. இது உண்மையில் பரிதாபத்துக்குரிய விஷயமாகும். ஏனெனில் நாமனைவரும் பல்வேறு பூவுடல்களை எடுக்கையில் இவ்விரு இனங்களிலும் மட்டுமல்லாது வேறு இனங்களிலும் கூடப் பிறந்துள்ளோம். உண்மையில் வெவ்வேறு இனங்கள், வெவ்வேறு நிற மனிதர்கள் என்று ஒன்றுமே இல்லை. நாமனைவருமே இறைவனென்று அழைக்கப்படுகின்ற அந்த ஒரேயொரு மூலாதாரத்தினின்றும் உற்பத்தியாகிக் கொண்டிருக்கின்ற வெவ்வேறு ஆத்மாக்கள் தான். அப்புறம் இனங்கள், மதங்களுக்கிடையே ஏன் இவ்வளவு கசப்புணர்வுகள்? இந்த நூற்றாண்டின் பின்னர், விருப்பங்கள், பகைகள் போன்றவற்றையெல்லாம் ஒரு பக்கமாக வைத்து விட்டு நீண்ட நெடும் அமைதியால் இவ்வுலகம் ஆளப்படக்கூடிய மாதிரியான காலமொன்று வரும். ஆனால் அப்படி நடக்கையில் அதைக் காண்பதற்கு நீ பூவுலகில் இருக்கமாட்டாய்.
ஜப்பான் வணிகத்துறையில் மேலாதிக்கத்தை அடையும். சாதுரியமான முறைகளில் வடிவமைக்கப்பட்ட தனது உற்பத்திகளால் அது சந்தைப்படுத்தும் தளங்களில் மிக விரைவில் முன்னேறும். ஆனால் எம்மாற் காணக்கூடிய வகையில், இந்நூற்றாண்டில் மீண்டும் போர் தொடர்பான பிரச்சனைகளேதும் வராது.
ஜேர்மனியின் நிதி நிலைமை இன்னும் சில ஆண்டுகளில் சற்றே தளர்ச்சி அடைந்தாலும், வலிமை மிக்க நாடுகளுள் ஒன்றாகத் தொடர்ந்து இருக்கும். இரு பகுதியும் ஓரளவு நெருக்கமாக வந்தாலும் முற்று முழுதாக இரு பகுதியும் இணைய மாட்டா.
மெக்சிக்கோவின் பொருளாதாரமானது நல்லதொரு தலைமையின் கீழ் ஸ்திரமாகும். அங்கே முதலீடு செய்வதன் மூலம், எதிர்கால முன்னேற்றத்துக்கு வழிவகுக்கலாம்.
அராபிய-இஸ்ரேலியப் பிரச்சனையானது சிக்கல்கள் நிறைந்த பிரச்சனையாகும். அது கைமீறிப் போவதற்குள் தீர்வொன்றை மாநாட்டின் மூலம் காணல் வேண்டும். இல்லாவிடின் அது இந்த நாகரீக உலகைப் பல்லாயிரம் ஆண்டுகட்குப் பின் தள்ளும். இந்த சகோதரப் படுகொலைகளானது எம்மை காயின் மற்றும் ஆபேலின் காலத்துக்கு (Cain and Abel) இட்டுச் செல்லும். மத்திய கிழக்கில் நீண்ட நாட்களுக்கு அமைதியின்மை நிலவும். இஸ்ரேல் தான் தான் எப்போதும் சரி, ஏனையோர் எப்போதும் பிழையென்ற எண்ணம் எவ்வளவு தவறானது என்ற பயங்கர உண்மையைச் சந்திக்கும் வரை இது தொடரும். அவர்கள் கடவுளாற் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் (chosen people) என்ற சொற்றொடரால் அழைக்கப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் கடவுளைத் தாங்களே தேர்ந்தெடுத்த மக்களிற் பார்க்க எந்த விதத்தில் உயர்ந்தவர்கள்? இஸ்ரேலானது இப்போது பல விடயங்களில் இறைபக்தியுள்ள நாடாகவில்லை. வெளியில் அவர்கள் கடவுளைத் தேடுவதுபோற் தெரிந்தாலும், அவர்களின் தலைவர்களிற் சிலர் கடவுளை விட்டுத் தூரத்தே செல்கிறார்கள். வெற்றி எப்போதும் அவர்கள் பக்கம் தான் என்றில்லை. மனிதர்களின் மனங்களில் மாற்றமேற்படும் போது தான் மத்தியகிழக்கின் பிரச்சனைகள் சுமூகமாகத் தீர்த்து வைக்கப்படும் என்று கூறுவது அபத்தமாகப் படலாம். மானுடர்கள் தங்கள் உணர்வு நிலைகளில் மாற்றலை உண்டாக்கி, வெறுப்பு, பேராசை என்பனவற்றைப் போக்கும் வரையும் அந்த நெருப்புக் கனன்று கொண்டே இருக்கும்.  என்றாலும் இது முழு உலகின் மோதல்கட்கு வழி வகுக்க மாட்டா. உலகமகா யுத்தம் வராது. ஆனால் தொடர்ந்து இது ஒரு முள்ளாக நெருடிக் கொண்டேயிருக்கும்.
கியூபாவானது காஸ்ட்ரோவின் தலைமையில் படிப்படியாகக் கீழ் நோக்கிப் போய்க்கொண்டிருக்கும். அதன் பின்னர் வரக்கூடிய ஆட்சியொன்று அமெரிக்காவுடன் ஒர் உடன்பாட்டுக்கு வந்து, உலகநாடுகளின் குடும்பத்திற் கியூபா தானும் ஒரு அங்கத்தினராகவும், அதேநேரம் அமெரிக்க மாநிலங்களின் அமைப்பிற் சேரக்கூடியதாகவும் அமையும். அடுத்த நான்கு, ஐந்து ஆண்டுகளில் இது நடைபெறுவதைக் காணலாம்.
சிலி (Chile)? வெகு விரைவில் அங்கே அரசாங்கம் கவிழ்க்கப்படும். கம்யூனிஸ்டுகளின் அதிகாரம் போய்விடும்.
மத்திய மற்றும் தென்னமெரிக்க நாடுகள்? கம்யூனிசத்தின் அதிகாரமானது சிற்சில இடங்களில் அதிகரித்து வருவது தெரிந்ததே. ஆர்ஜெண்டைனாவுக்கும் சிலிக்கும் உறுதியான ஒரு நல்ல மனிதன் தலைமைப் பொறுப்பையெடுக்கும் வரையும்  இப்படியான கலவரங்கள் பெருகிக்கொண்டே இருக்கும். இன்னும் ஏழு வருடங்களில் ஒரே விதமான கருத்துகளுடைய இரு மனிதர்கள் இந்த இரு நாடுகளையும் பொறுப்பெடுப்பார்கள்.
புற்றுநோய்க்குரிய தீர்வு? கடந்த வருடத்தில் அது ஆரம்பமாகிவிட்டது. இன்னும் ஏழு வருடங்களில், வைரஸ் தான் அதைத் தூண்டுவதாயினும் மனிதனின் மனப்பான்மைகளும், உணர்வுகளும் கான்ஸர் கட்டிகள் உருவாக்குவதிற் பெரும் பங்கு வகிக்கின்றன என்ற உண்மையானது உலகிற்குத் தெரியவரும். ஜேர்மனியில் இருந்து கூடிய விரைவில் இது சம்பந்தமான செய்தியை எதிர்பார்க்கலாம்.
பருவநிலைமாற்றங்கள்? தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கும் புகைமண்டலங்களும், மாசுக்களும் சூரியசந்திரர்களுக்கும், பூமிக்குமிடையில் ஒரு புகைத்திரையைத் தோற்றுவிப்பதன் மூலம் காலநிலை மாற்றங்கள் வரக்கூடும். இந்நூற்றாண்டின் இறுதித் தசாப்தம் வரையில் உஷ்ணப்பிரதேசங்கள் உஷ்ணமாகவும், குளிர்ப்பிரதேசங்கள் குளிராகவுமிருக்கும். சுழற்சியச்சின் ஒரு பாரிய பெயர்ச்சியானது காலநிலையிற் பெரியதொரு மாற்றத்தைக் கொண்டு வரும். அப்போது பூமியின் பசுமையான இடங்களை அடையாளம் காண்பது மிகக் கடினமாக இருக்கும். இந்த இடப்பெயர்ச்சியிலிருந்து பலர் பிழைக்க மாட்டார்கள். சிலர் தான் தப்பிப்பிழைப்பார்கள். கடற் கொந்தளிப்புகளும், பயங்கரமான காற்றழுத்தங்களும் சிறிது காலத்துக்கு இடம் பெற்றுப் பின் அனைத்தும் அடங்கி அமைதி பெறும். அப்போது வடக்கிலிருப்பவர்கள் வெப்பவலையத்திலும், மற்றவர்கள் நேர்மாறாகவும் வசிப்பார்கள். 2000 ஆண்டுக்கு முன் இது நடைபெறும்.
இந்த இடப்பெயர்ச்சியானது பூவுலகிற்கும் அதில் உயிர் வாழ்பவர்களுக்கும் நன்மை பயக்குமா அல்லது தீமையானதா? இருவிதமாகவும் சொல்லலாம். ஆரம்பத்திலேற்படும் திகிலூட்டக்கூடிய நிகழ்ச்சிகளுக்குப் பின்னர் சிலர் தங்களது பழைய முயற்சிகளான, பேரழிவுகளிற்  தாங்கள் லாபம் பெறுவதற்குரிய வழிகளைக் கண்டறியும் முயற்சிகளில் ஈடுபடுவார்கள்.அதே நேரத்தில் சிலர் பேரழிவுகளினாற் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி அவர்களது துன்பங்களைக் குறைக்க முயல்வார்கள். உதவும் கரங்களுமுண்டு அதே நேரத்திற் திருடும் கரங்களுமுண்டு.
இவையெல்லாம் நடக்கப் போவது உறுதியெனில் ஏன் நாம் சுற்றுச்சூழற் பாதுகாப்பையும், எமது வாழ்வியல்களையும் பற்றி யோசிக்க வேண்டும்? எதிர்காலத்துக்கு உதவக்கூடிய விடயங்களை நாம் அறிந்து கொள்ளலாமே? மீண்டும் மீண்டும் அந்தத் தவறுகளைச் செய்யாமல், அதே வேளையில் பல லட்சக்கணக்கான மக்கள் அசுத்தக் காற்றையும், படு மோசமான புகைகளையுமே சுவாசிக்கிறார்கள். சிறு குழந்தைகள் பிறக்கையிலேயே என்ன பாவம் செய்தன? மீண்டும் பிறக்கும் அந்த ஆத்மாக்கள் ஒரு தவறும் செய்யாமலேயே சுவாசிக்கும் காற்று உயிர் வாழ்வதற்கு இயலாதவாறு அசுத்தமாகிப் போவதற்கு என்ன பாவம் செய்தன?
கலிபோர்னியாவும், மான்ஹட்டனும் (Manhattan) இந்த நூற்றாண்டு முடிவதற்குள் கடலுள் அமிழ்ந்து விடுமா? இந்த எரிமலை வெடிப்பானது தள்ளிப்போயுள்ளது. கூடிய சீக்கிரத்தில் அது எட்கர் கேஸி (Edgar Cayce) கூறியவாறு நடைபெறவுள்ளது. கடற்கரைப் பகுதிகளைத் தவிர மெக்ஸிகோ அதிக பாதிப்புக்குள்ளாகாது. ஆபத்தில் முதலிடத்தில் நிற்பது கலிபோர்னியாவிலுள்ள ஸான் அண்ட்ரியாஸ் போல்ட் (San Andreas Fault) தான். அது பிளவுற்றுக் கடலினுள் அமிழும். மான்ஹட்டன் சற்றுப் பின்னரே, இதனது எதிர் விளைவாக நடைபெறும்.
மனிதன் எந்த அமைதிக்கும், சமாதானத்துக்குமாகப் பாடுபடுகின்றானோ, அந்தச் சமாதானமானது இந்த நூற்றாண்டு கடந்தும் சிறிது காலம் வரையும் அவன் கைகளுக்குள் பிடிபடாமல் நழுவிக் கொண்டேயிருக்கும். பின்னர் சடுதியாகத் துப்பாக்கிப் போர்கள் நிறுத்தப்பட்டுச் சமாதானமானது உருவாகும். இச் சமாதானமானது ஒரு தனி மனிதனால் உருவாக்கப்பட மாட்டாது. சமாதான விரும்பிகள் ஒரு இனமாகப் பெருமளவிற் பிறப்பெடுத்து, உலக அரசாங்கங்களைக் கட்டுப்படுத்தக்கூடிய அளவு வல்லமை பெறுவதன் மூலமே இக்கொலைகள் சடுதியாக நிறுத்தப்பட்டு சமாதானமானது உருவாக்கப்படும். பல நூறாண்டுகளாக நடைபெறும் இப்போர்களினாற் அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்கள் தான் இப்படிப் பிறப்பெடுப்பவர்களாகும். முன்னர் அவர்கள் தாங்கள் பாதிப்படைந்ததன் காரணத்தினால் மென் மேலும் உயிர்த்தியாகங்களைச் செய்து கொண்டிருக்க விரும்பியிருந்தார்கள். ஆனால் அதன் காரணத்தினால் இப்புவி முழுவதுமே தொடர்ச்சியான கொலைகளில் அமிழ்ந்து போயிருப்பதை இந்நூற்றாண்டில் கண்கூடாகக் கண்டதன் காரணத்தினால் அவர்கள் சமாதானத்தை நிலை நாட்டுவதற்காகப் புவியிற் பிறப்பதாக முடிவெடுத்துள்ளார்கள்.
இந்த மகிழ்ச்சியான செய்தியுடன் ஆர்தர் போர்ட் தனது எதிர்வு கூறலை நிறைவு செய்து கொண்டார்.