இது 'A World Beyond' என்ற ஆங்கில நூலின் மொழிபெயர்ப்பாகும். இந்நூலை எழுதியவர் ரூத் மோன்கொமெரி (Ruth Montgomery) எனும் ஒரு பெண்மணியாகும். மனிதருக்குள் மேலுலக ஆத்மாக்கள் வந்து பேசுவதைப் போன்று மேற்குலகில் 'Automatic Writing' என ஒரு விடயமுள்ளது. அதாவது ஆத்மாக்கள் எங்கள் மூலமாக வந்து சில விடயங்களை எம்மைக் கொண்டு எழுதச் செய்வது என்பதாகும். இந்நூலானது அப்படியாகத்தான் எழுதப்பட்டது. 'ஆர்தர் போர்ட்' என்று இந்நூலாசிரியைக்குத் தந்தையைப் போலிருந்த ஒருவர் மேலுலகம் சென்ற பிற்பாடு அவர் மூலமாக எழுதப்பட்டது இந்நூலாகும்.

Wednesday, November 25, 2020

பத்தாம் அத்தியாயம்: முறைமையான முன்னேற்பாடு (Proper Preparation)


இறந்தவர்கள் விண்வெளியில் மிதப்பதில்லை என்னும் எண்ணத்தை வலியுறுத்துவதற்கு ஆர்தர் தீர்மானித்தார். அவர்களும் நாம் இருப்பதைப் போல இங்கேதான், ஆனால் வேறொரு பரிமாணத்தில் இருக்கிறார்கள். ஒருநாள் அவர் பின்வருமாறு எழுதினார்: "எல்லாம் ஒரே பிரபஞ்சமே. நாம் வேறெங்குமில்லை. நீங்களிருக்கும் அதே இடத்தில் தான் நாமும் இருக்கிறோம். ஒரேயொரு வித்தியாசம். நாம் வாழும் முறை வேறு. நாம் உங்கள் படுக்கைகளில் படுக்கமாட்டோம். உங்கள் நாற்காலிகளில் அமரமாட்டோம். ஆனால் ரத்தமும் தசையுமாக உலவும் மக்களிடையே  தான் நாமும் எமது நாளாந்தப் பணிகளை ஆற்றுவோம். நாம் உங்களுடன் கலந்து இருக்கிறோம். சில சமயங்களில் உரையாடுவோம். ஆனால் தேவையின்றித் தலையிட மாட்டோம். யாருடைய உயிரையேனும் காப்பாற்றவேண்டி வந்தாலோ அல்லது தொலைந்து போய்விட்ட மனிதனை அல்லது தனது சூழ்நிலைகளை உணராத மனிதனை வழிநடத்துவதற்கோ இல்லாமல் தேவையற்ற தலையீட்டைத் தவிர்ப்போம். நாமும் அதே பாதைகளில் தான் கூடுதலாகப் பயணிப்போம். ஆனால் பௌதீகத் தடைகளில்லாததால் நாம் மூலைகளில் திரும்புவதைப் பற்றியோ அல்லது குன்றுகளையும் கட்டிடங்களையும் சுற்றி வருவதைப் பற்றியோ கவலைப்படத் தேவையில்லை. எங்களைப் பொறுத்தவரை அவை அங்கேயில்லை. ஏனென்றால் நாம் ஒளியும் சக்தியும் சேர்ந்த வடிவம். அவையும் அதைப் போலவே. எனவே ஒன்று மற்றையதன் சுதந்திரமான போக்கைத் தடை செய்யா. நாமும் பௌதீக உயிரினங்களும் ஒன்றாகவே உயிர்வாழ்கிறோம். ஆனால் முக்கியமான வித்தியாசம் என்னவென்றால், அவர்களுக்கு நாமும் அவர்களுடன் இருப்பது தெரியாது. எமக்கு அவர்கள் எங்களுடன் இருப்பது தெரியும். நாம் தொடுதல், மணத்தல், கேட்டல் ஆகிய செய்கைகளைச் செய்யாவிடினும், பௌதீக உயிரினங்களின் எண்ணங்களை நாம் பலமாக உணர்வோம். ஏனெனில் எண்ணங்கள் செய்கைகளாகவே கருதப்படுகின்றன."  
மேலும் போர்ட், பூவுலகில் இருக்கையிலே மேலுலக வாழ்வைப் பற்றிய எண்ணங்களை எண்ணும் விதமாகத் தங்களைத் தயார் செய்பவர்கள் இலகுவாக மேலுலகத் தொடர்புகளைக் கிரகித்துக் கொள்ள இயலும்  என்றார். அவர் மேலும் எழுதுகையில், "உதாரணமாக, உங்கள் பக்கத்திலிருக்கும் ஐன்ஸ்டைன், ஒபன்ஹைமர் (Oppenheimer) அல்லது வேறொரு சிறந்த பௌதீகவியலாளர் (physicist) போல ஒரு அறிவாளி பிரபஞ்ச விதிகளை உணர்ந்து அவற்றை உபயோகிக்கிறார். அவர்களால் குறைந்த பட்சம் ஆழ்மனத்திலாவது பிரபஞ்ச விதிகளை நினைவுகூர இயலுமாக உள்ளதால், அவர்கள் அங்கே அறிவாளிகளாகக் கருதப்படுகிறார்கள். உண்மை என்னவென்றால், இங்கே அவர்கள் மிகவும் முன்னேறிய ஆத்மாக்களாகவும் அதேநேரம் பெளதீகவியலில் (physics) நாட்டமுள்ளவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். எனவே அவர்கள் பூமியில் பிறக்கையில் இங்கேயிருக்கும் மற்றவர்களின் உதவியுடன், அவர்களால் 'அதிசயங்கள்' என்று சொல்லப்படும் செயல்களைச் செய்ய இயலுமாகவுள்ளது. அதேபோலத்தான் எழுத்தாளர்களும். அதாவது சராசரியான எழுத்தாளர்களை விட உயர்வானவர்கள் - ஒரு ஷேக்ஸ்பியர், ஒரு பேக்கன் (Bacon), ஒரு ப்ரௌனிங் (Browning), ஒரு விக்டர் ஹ்யூகோ (Victor Hugo), அல்லது அது போன்ற வேறு சிறந்தவர்கள் எவரேனும், அவர்கள் இங்கே தாம் அறிந்த விதிகளைப் பூமியில் பிறந்த பிறகும் நினைவு படுத்தக்கூடிய விதமாக எடுத்துச் சென்றிருக்கிறார்கள். அத்துடன் நல்லிணக்கமானது தானே ஒரு மாறாத விதியென்பதால், அவர்களால் இனிய இசைகளை உருவாக்கவோ அல்லது எழுத்தில் காட்டவோ முடிந்தது. அவர்களால் பௌதீக உலகின் இலக்கியங்களை, கலைகளை, இசைகளைப் பிரபஞ்ச விதிகளின் சந்தத்துக்கும் இசைவுக்கும் ஏற்ற முறையில் மேம்படுத்த முடிந்தது. ஈரேழு வரிப் பாடல்கள் (sonnets), பிரபஞ்ச சந்தமானது பதினான்கு வரிகளைக் கொண்ட தாளத்திற்குள் சிறைப் பிடிக்கப்பட்டிருப்பதற்கு ஒரு நல்ல உதாரணமாகும். ஒருவரின் ஒலிவரம்புக்கு அப்பால் அவரை அழைத்துச் செல்லும் இசையோ அல்லது பூவுலகில் பணத்துக்காக என்று இல்லாமல் அதற்கு அப்பால் எம்மை இட்டுச் செல்லும் இசையோ முன்னேற்றமடைந்த ஆத்மாக்கள் மீண்டும் பிறவியெடுக்கையில் தங்களுடன் இந்த நினைவுகளைக் கொண்டுவந்து மீண்டும் நினைவு படுத்துவதால் உண்டாகும் இசைகளாகும். ஒலிகளில் மெல்லிய ஏற்றத்தாழ்வுடன் கூடிய இசைகள் (cadence), சந்தங்கள், ஒருங்கிணைந்த, இசைவான ஒலிகளாலான சிம்ஃபனி (symphony) போன்றன இந்தப்பக்கத்தில் இருக்கும் ஒலிகளின் எதிரொலிகளாகும். கேட்டவை இனிமையான இசைகள். ஆனால் கேட்காவை இன்னும் இனியவை. எவ்வாறு ஸ்வரங்களும் தாளங்களும் ஒருங்கிணைந்து இனிமையான இசையை உருவாக்குகின்றன என்பதனை நாமறிவோம். எனவே நீங்கள் கேட்கும் உயர்தரமான இசையெல்லாம் இங்கிருந்து வருபவையே. 
"என்றுமே நிரந்தரமாக இருந்து கொண்டிருக்கும் உண்மையான வாழ்வுக்குத் தங்களைத் தியானத்தின் மூலமோ அல்லது கனவுகளின் மூலமோ தயார் செய்பவர்கள் தான் பூவுலகில் அறிவாளிகளாகக் கருதப்படுபவர்கள். அவர்களால் பிரபஞ்ச அறிவை ஊடுருவிப்பார்த்து பூவுலகில் இன்னமும் கண்டுபிடிக்கப்படாமலிருக்கும் விதிகளைப் பிரயோகிக்க முடிகிறது. அப்படியென்றால் பூவுலகில் இருக்கும் அனைவரும் ஏன் தங்களது நேரங்களைத் தியானம் செய்வதிலும், கனவுகளைப் பற்றிய ஆராய்ச்சியிலும் செலவழிப்பதில்லை? ஏனெனில் எல்லையற்ற விவேகம், அறிவு ஆகியவற்றைக் கொண்ட இப்படிப்பட்டதொரு பிரம்மாண்டமான மூலதனத்தைப் பற்றிய அறிவு அவர்களுக்கு இல்லை. ஒவ்வொருநாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குத் தங்கள் மனதை அமைதிப்படுத்தித், தங்களின் உள்ளே உள்ள சக்திகளைக் கவனித்தால், ஒரு நொடியில் அந்த மூலதனத்தை அடையலாம். அதன் மூலம் ஆத்மாவின் ஜன்னலானது திறக்கப்பட்டுத் திரையின் மறுபக்கத்துடன் தொடர்புகள் உருவாக்கப்படும்."
கடந்த பதினோரு வருடங்களாக நான் தியானத்தைப் பற்றி எழுதி, சொற் பொழிவாற்றி வருவதுடன் யாருடனாவது ஆத்மீக விடயங்கள் பற்றிக் கதைக்க நேர்ந்தால் அவர்களைத் தியானம் செய்வதற்குத் தூண்டிக் கொண்டும் இருக்கிறேன். நானும் தியானம் செய்திருக்கிறேன். ஆனால் மற்றவர்களுக்குச் சொல்வதைப் போல நான் சிரத்தையெடுத்துச் செய்வதில்லை. ஆர்தர் போர்ட் சொல்லும் ஒழுங்குமுறை கட்டுப்பாடுகள் என்னிடம் குறைவாகவே காணப்படுகின்றன. எனக்கு தியானம் பற்றிய 'விபரங்கள்' தெரிந்த அளவு தியானம் தெரியவில்லை. 'உண்மையைத் தேடி' (A Search for the Truth) என்ற எனது நூலில், பிரார்த்தனையும் தியானமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள், ஏனெனில் பிரார்த்தனையின் போது நாம் கடவுளிடம் பேசுகிறோம், அதே சமயம்  தியானத்தின் போது நாம் அவன் சொல்வதைக் கேட்கிறோம் என எழுதியிருக்கிறேன். இவ்விஷயத்தில் எனக்கு இன்னும் சற்று அதிகமான அறிவு வேண்டுமென ஆர்தர் ஃபோர்ட்  உணர்ந்தது ஒருநாள் நான் கேட்காமலேயே அவர் அதைப் பற்றி எழுதியதில் இருந்து தெரிந்தது, பின்வருமாறு:-
"வாழ்வின் அடுத்த கட்டமாகிய மேலுலக வாழ்வுக்குத் தயார் செய்வதற்கு, இப்போ நாம் தியானத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பார்ப்போம். அப்படித் தயார் செய்வது முக்கியமாகும். ஏனெனில் தியானமானது அடுத்த கட்ட வாழ்வைப் புரிந்து கொள்ள உதவும். தியானம் செய்கையில் நாம் இறைவனின் அருகிலிருக்கிறோம். ஆத்மாக்களாகிய நாம் இறைவனின் அண்மையை உணர்ந்து நீண்ட நாட்களாகி விட்டிருக்கிறது. இங்கே தான் நாம் இறைவனைச் சந்திக்கிறோம். எம்முள்ளே. எம்முள்ளே இறைவனைக் காண்பதன் மூலம் நாம் எமது கடந்த காலத் தவறுகளை மதிப்பீடு செய்வதும் பின்னர் மேல் நிலைகளுக்குச் செல்வதற்கான தயாரிப்பில் ஈடுபடுவதா அல்லது மறுபடியும் பூவுடலெடுத்து உலகவலம் வருவதா என்பதைத் தீர்மானிப்பதும் இலகுவாகும் என்பதை அறிந்துகொண்டோம். எனவே அங்கிருக்கையில் எவ்வளவுக்கெவ்வளவு தியானத்தைப் பற்றி அறிகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு வேகமாக இங்கே முன்னேறலாம். தியானமிருக்கையில் முதலில் ஆழமாக மூச்சை உள்ளிழுத்து வெளியில் விட மறக்கவேண்டாம். அதன்மூலம் பொதுவாக எமது உடலிலுள்ள தீங்கிழைக்ககூடிய, விஷம்வாய்ந்த வாயுக்களை வெளியேற்றக் கூடியதாகவிருக்கும். அதன்பின்னர் கொடுக்கப்பட்ட மந்திரத்தையோ அல்லது 'ஓம்' (aum) என்ற ஒலியையோ எண்ணுவதன் மூலம் இம்முழுப் பிரபஞ்சத்துடன் நீங்கள் ஒன்று கலப்பதை உணரமுடியும். உங்களைச் சூழ்ந்துள்ள இயற்கையினதோ அல்லது இறையுணர்வினதோ ஒரு அங்கமாக மாறுங்கள். படைப்பின் ஒரு பகுதியாகுங்கள். பிரபஞ்சத்தின் நாடித்துடிப்புடன் நீங்கள் ஒன்றிணையும் போது உங்கள் தனிப்பட்ட அகங்காரங்கள் அனைத்தையும் மறந்துவிடுங்கள். இப்பிரபஞ்சத்தின் ஒரு பகுதியாக இணைந்திருப்பதை மட்டுமுணருங்கள். சற்று நேரத்தில் நீங்கள் கனமில்லாமலும், நுட்பமாகவும் உணரக்கூடும். சில வேளைகளில் சிலகட்டங்களில் ஆத்மாவைப் போல் சுதந்திரமாக முன்பின் தெரியாத ஒரு உலகில் உலவித்திரிவதைப் போல் நீங்கள் உணரக்கூடும். தொடர்ந்து முயலுங்கள். இரண்டறக்கலந்த அந்த உணர்வைத் தக்கவைத்துக் கொள்ளுங்கள். விரைவில் நீங்கள் படைப்புகள் அனைத்தினதும் ஒரு பகுதியாக உணர்வீர்கள். இன்னும் ஆழமாகச் செல்லுங்கள். அவ்வப்போது இறையவனின் ஆத்மா உங்களது அடிப்படைத் தளத்தினூடாகப் பாய்வதற்கு அனுமதியுங்கள். ஒவ்வொருநாளும் பதினைந்து அல்லது இருபது நிமிடங்கள் இந்தவிதம் அமைதியாக இருங்கள். இவ்வாறு இறைவனை அவன் விரும்பியவாறு உங்களுடன் உரையாட அனுமதியுங்கள்.
"இப்பப் பிரார்த்தனையைப் பற்றிப் பார்ப்போம். இது தியானத்துக்கு முற்றிலும் மாறுபட்டதாகும். பிரார்த்தனையானது இறைவனின் இருதயத்தைத் தொடுவதற்குரிய ஒரு முனைப்புள்ள செய்கையாகும். உங்களின் எண்ணங்களின் அடிப்படையையும், நோக்கங்களின் அடிப்படையையும் கண்டுபிடித்து இந்தவகை முயற்சிக்கு உங்களைத் தயார்படுத்துங்கள். அப்பொழுதுதான் நாம் தூய கரங்களுடன் இறைவனை அணுகலாம். நல்லதையே நினையுங்கள். நீங்கள் யாருக்காகக் கடவுளின் ஆசி வேண்டிப் பிரார்த்திக்கிறீர்களோ கடவுள் நிச்சயமாக அங்கே நிற்பார். இறைவனின் எல்லையற்ற முழுமையின் ஒரு பாகமாவதற்கு முயலுங்கள். எவ்வாறு இறைவனின் ஆசியானது உங்களுக்கு அனாயாசமாக வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறதோ அவ்வாறே வழங்கும்படி அவனை வேண்டுங்கள். அதுதான் நம்பிக்கை. உங்களை அவன் படைத்ததன் நோக்கத்தை அறியமுயலுங்கள். அவனது முன்னிலையை உணருங்கள். பின்னர் நீங்கள் எதனை இறைவனிடம் யாசிக்கிறீர்களோ அது சுயநலமற்ற நல்ல நோக்கத்துக்காக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். மற்றவருக்குத் துன்பத்தைக் கொடுக்கக் கூடிய விதமாகவோ அல்லது உங்கள் போட்டியாளர்கள், நண்பர்களிலும் பார்க்க மேலே வரவேண்டுமென்றோ செய்யப்படும் பிரார்த்தனைகளால் எதுவித பயனுமில்லை என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். உங்களது விருப்பங்களிலும் பார்க்க இறைவனின் விருப்பப்படி நடக்க வேண்டுமென்று வேண்டுங்கள். உங்களது பிரார்த்தனை உடனே பயனைளிக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பது போலப் பிரார்த்தியுங்கள். இவ்வழிமுறைகளை நீங்கள் கைக்கொள்வீர்களேயானால் எந்தப் பிரச்சினையையும் நீங்கள் எதிர்கொள்ளலாம். இங்கே நாம் இறைவனின் அன்பை எவ்வளவு சக்தியுடன் உணர்கிறோமோ அதே அளவு சக்தியுடன் அவனின் முன்னிலையையும்  உணர்கிறோம். எனவே இறைவனை வணங்கவோ பிரார்த்திக்கவோ மறுப்பவர்களை விட ஏனைய அனைவருமே முன்னேறிக் கொண்டிருக்கும் எங்கள் உணர்வுகளின் மூலம் இறைவனுடன் பல தடவைகள் ஒன்றாக இருந்திருக்கிறோம். சிலர் உயரிய உணர்வு நிலைகளுக்குச் செல்வார்கள். அவர்கள் மீண்டும் பிறப்பெடுக்க மாட்டார்கள். லிலி (Lily) அதனைப் பற்றிச் சொல்லவருகிறார்." 
அதன்பின்னர் லிலி ரைப்றைட்டரை ஆட்கொண்டார். அவர் பின்வருமாறு எழுதினார், "ஆத்மாவானது இறைவனின் இதயத்தை அடைய முயற்சிக்கையில் அந்த ஆத்மாவானது உள்ளத்தால் முழுமையாகச் சரணடைந்து விடுவதால், அவர் எண்ண முன்பே தான் உயர்த்தப்படுவதாக அவர் உணர்வார். பேரானந்தப் பெருவெள்ளத்தில் திளைத்துத் தளைகளேதுமற்று உயரப்பறப்பதாக உணருவார். அந்தக் கிளர்ச்சியானது அவ்வளவு பிரமாண்டமாக இருப்பதால், அந்த ஆத்மாவானது தன்னைத் தூய ஆத்மநிலைக்குப் பறிகொடுப்பதால், பூவுலக இன்பங்களொன்றும் அவரை வசீகரிக்காது. அதனால் அவ்வாத்மா பூவுலகுக்குத் திரும்புவதிலும் பார்க்க இங்கே முன்னேறவே விரும்பும். அதற்குப் பிரார்த்தனையும், தியானமும் வழிவகுக்கும். நான் அந்தவகை அத்வைதக் கிளர்ச்சியை அனுபவித்ததால், பௌதீக உடலெடுக்க மாட்டேன். ஏனெனில் உடலெடுப்பதன்மூலம் அந்த மெய்மறந்த இன்பத்தை இழக்க நான் விரும்பவில்லை. உயர்வான உணர்வு நிலைகளில் நாம் எம்மை மறந்த தூய ஆத்மாவாகும். அந்த நிலையில் இறையுணர்வை நாம் வணங்குகிறோம். நாம் இறைவனைப் பார்க்கா விட்டாலும் சில நேரங்களில் அவனது ஒளிக்கு ஏற்ப இசைவாக்கமடைகிறோம்.
"நான் இப்போ சொல்லும் நிலைதான் முடிவான நிலையென்றில்லை. இது ஆத்மீகப்பாதையின் ஒரு படிக்கல்லாகும். நாம் அந்த ஒளியின் முன்னிலையில் நடக்கையில் பிரபஞ்ச ரகசியத்தின் தூய்மையான பிரகாசத்தைச் சிறிது காலத்துக்கு அனுபவிக்கிறோம். நாம் நிரந்தரமாக அந்தப் பிரகாசத்திலேயே தங்கிவிடமாட்டோம். ஏனெனில் நாம் அவ்வளவு பூரணத்துவம் பெறவில்லை. எனவே நாம் பிறப்பெடுப்பதிலும் பார்க்க ஆத்மீக முன்னேற்றத்துக்காகச் செய்வதற்கு ஏற்றுக்கொண்ட கடமைகளுக்குத் திரும்புவோம். அதனால் தான் நீண்ட நாட்கள் மௌனத்துக்குப் பிறகும், ஃபோர்ட் இங்கே வந்தபிற்பாடு நீ உனது கரங்களை தட்டச்சுப்பொறியில் வைக்கையில் நான் இங்கிருந்தேன். இது நான் விரும்பி ஏற்றுக்கொண்ட பணியென்பதாலேயே நான் இங்கே இன்னமும் இருக்கிறேன். எனவே நீ அடிக்கடி செய்வது போல் இப்பணியில் விருப்பம் குறைந்து நிற்பாட்டும் போது நான் வேறு பணிகளுக்குச் சென்றுவிடுவேன். ஆனால் தேவையேற்படின் நான் இங்கிருப்பேன். 
எனது பொறுப்பில்லாத் தனத்தைச் சுட்டிக்காட்டி எனை வெட்கப்படும்படி செய்வது லிலியின் வழக்கமாகும். இதுவுமும் அதற்கு விதிவிலக்கல்ல.
பூவுலகிலிருக்கையிலேயே மேலுலகில் தொடரப்போகும் வாழ்வுக்குத் தங்களைத் தயார் செய்பவர்களைப் பற்றிப் புகழ்ந்து பேசுவதற்கு ஒருநாளும் ஃபோர்ட் பின்தங்கியதில்லை. ஒருநாள் அவர் பின்வருமாறு எழுதினார்: "இன்று காலை சமீபத்தில் பூவுலகில் இறந்த ஒருவரைப் பற்றிப் பாப்போம். அவர் திடீரென்று தான் மேலுலகில் நிற்பதை முழுமையான விழிப்புணர்வுடன் கண்டுகொண்டார். அவர் சிந்தனை நிறைந்த புத்தகங்களை வாசித்ததன் மூலமும், சத்சங்கங்கள் மூலமும், தியானமிருப்பதன் மூலமும் இறைவனின் எண்ணத்தைப் பூர்த்தி செய்வதற்கும் ஏனையோருக்கு வழிகாட்டவும் பழகியிருந்தார். அதனால் அவர் இங்கே தனது சூட்சும சரீரத்தில் கால் வைக்கையில் ஒரு கணமேனும் தவறவில்லை. அங்கிருக்கையில் இருந்தது போலவே இங்கேயும் நம்பிக்கை அளிக்கப்பட்டார். ஏனெனில் அவருக்கு நம்பிக்கையும், புரிந்துணர்வும், ஏனையோரில் சகிப்புத்தன்மையுமிருந்தது. அவர் தனது நண்பர்கள், உறவினர்களுக்கு வணக்கத்தைத் தெரிவித்தபின், இப்பிரபஞ்சத்தின்  பேரலைகள் அவரை மெய்மறந்த இன்பத்திலாழ்த்த அவர் அமைதியாகத் தியானத்தில் ஆழ்ந்தார். உடனேயே அவர் யார்யாருக்கெல்லாம் உதவிகள் வேண்டுமோ அவர்களையெல்லாம் தேடிச்சென்றார். அதாவது புதிதாக இறப்பெனும் மாயத்திரையைக் கடந்து வந்த, ஆனால் குழப்பத்திலுள்ள ஆத்மாக்களையும், துயில்கின்ற ஆத்மாக்களையும் தேடிச்சென்றார். அம்மனிதர் ஒரு கணமேனும் தான் நீத்த உடலைப்பற்றி வருந்தவில்லை. ஏனெனில் தனது அன்புக்குப் பாத்திரமானவர்களை அவர்கள் இங்கே வருகையில் தான் மீண்டும் பார்க்க இயலுமென்பது அவருக்குத் தெரியும். அத்துடன் அவரால் இயன்றவரையும் தனது விவகாரங்களைத் தான் முடித்து விட்டு வந்ததும் அவருக்குத் தெரியும். வேறு விதமாகக் கூறினால், 'அவர் கதவைத் தாண்டி வெளியில் செல்ல முன்னமே அவரது புத்தகங்கள் வரிசைப் படுத்தப்பட்டு விட்டன' எனலாம். எனவே அவரது முன்னேற்றமானது தொடர்ந்து மேல் நோக்கியே இருக்கும். வியக்கத்தக்க விதத்தில் இங்கே இப்படிப் பலருள்ளனர். எல்லோருக்கும் இங்கே எப்படியிருக்குமென்று துல்லியமாகத் தெரியாவிடினும், அவர்கள் கடவுள் 'இங்கே' எதையெதையெல்லாம் வழங்குகிறாரோ அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ளத் தயாராக வருகிறார்கள். அத்துடன் குறிப்பாக இங்கே ஏராளமான வேலைகள் செய்யக்கூடிய விதமாக இருப்பதையறியும் போது அவர்கள் மிகவும் மகிழ்கிறார்கள். யார் தான் தங்களது வாழ்நாள் முழுவதையும் யாழை மீட்டிக்கொண்டும் முகிலின் மேல் சவாரி செய்து கொண்டும் இருக்க விரும்புவார்கள்? இங்கே எவருமே செவிடர்கள் கிடையாது அத்துடன் பிரபஞ்சத்துடன் இணைந்து போனால் எவரும் மனதுக்கிசைவான இசையை உருவாக்கலாம்.
 "நான் சொல்லும் இக்குறிப்பிட்ட மனிதர் வேகமாக முன்னேறுவதால், கூடிய விரைவில் அவருக்கு மீண்டுமொரு பிறவி எடுக்கவோ அல்லது உயர்வான நிலைகளுக்கு முன்னேறுவதற்கோ சந்தர்ப்பமளிக்கப்படும். அவர் உடனடியாகப் பிறவியெடுப்பது அவ்வளவு சாத்தியமில்லை. ஏனெனில் அவர் குறிப்பிடத்தக்க விதத்தில் எந்த ஒரு விஷயத்தையும் அரைகுறையாக விட்டுவிட்டு வரவில்லை. அத்துடன் அவர் ஒரு ஒழுக்கமான, தயையுள்ள, ஒருவருக்கும் வேண்டுமென்றே தீங்கிழைக்காத ஒருவராக இருந்திருக்கிறார். எனவே அவர் அடுத்தகட்ட நிலைக்கு முன்னேற்றமடைவதற்கு உதவுக்கூடிய ஆசிரியர்களுடன் சேர்ந்து பிரத்தியேகமான வேலைகள் செய்வார். பூவுலக பந்தங்களிலிருந்து ஒருவர் விடுபட்டு அடுத்த கட்டத்துக்கான உயர்வான படிகளுக்குத் தயாராவதற்காக அவர்களின் அலையதிர்வு மாற்றத்தின் ஆரம்பகட்டங்களின் போது அவர்கள் வழிகாட்டுவார்கள். ஒருவர் இப்படிச் செய்வதற்கான உரிமையை ஈட்டிய பிற்பாடே அவர் தனது அதிர்வுத்தளத்தைப் போதுமான அளவுக்கு, அதாவது அடுக்கு மண்டலத்துக்கு (stratosphere) ஏற்ற அளவுக்கு உயர்த்தலாம். எம்மால் அவர்களைச் சில சமயங்களில் பார்க்க முடிவதை விட அவர்களால் எங்களைத் தெளிவாகப் பார்க்க முடியும். என்றாலும் அவர்களும் இங்கே தான் இருக்கிறார்கள் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். அவர்களின் அதிர்வுகள் (vibrations) அவர்களை எங்களின் பார்வை மண்டலத்திலிருந்தும், கேள்வி மண்டலத்திலிருந்தும் அதிகமாக விலக்கி வைத்திருக்கும் (உங்களின் பார்வை, கேள்வி மண்டலங்களில் இருந்து எம்மை எமது அதிர்வுகள் விலக்கி வைத்திருப்பதைப் போல). அவர்களில் கூடுதலாக முன்னேற்றம் அடைந்தவர்கள் பிரத்தியேகக் காரணங்களுக்காகத், தேவையேற்படின், அவர்களை எங்களுக்குத் தெரியுமாறு செய்ய இயலும். உதாரணமாக லிலி (Lily) வடிவமும், வஸ்துவும் கொண்ட சூக்கும சரீரத்திலும் பார்க்கக் கூடுதலாகப் பிரகாசமுள்ள வெண்ணொளியாகத்தான் என் முன் தோன்றுவார். ஆனால் அவரது ஆளுமையானது அவர் பௌதீக உடலுடனிருக்கையில் இருந்ததைப் போலவே கதிர் வீசும். நான் முன்னர் பல தடவைகள் இந்த அடுத்த கட்டத்துக்குப் போய் அங்கே எவையெல்லாம் இன்றியமையாதென நான் உணர்ந்தேனோ அவற்றையெல்லாம் அங்கே கற்றறிந்த பிற்பாடு நான் கற்றவற்றை எல்லாம் செயல்படுத்திப் பார்க்கும் பொருட்டு நானாகவே விரும்பிப் பௌதீக உலகில் பிறந்தேன் என்பதை லிலி எனக்குச் சொல்லியிருக்கிறார். இந்தவிதமாகத்தான் ஆர்தர் ஃபோர்டாக இந்தக் கடைசித் தடவை போய்வந்தது. முகாமில் பெயர்ப்பட்டியல்களை நித்திரையில் பார்த்து ஏன் திடுக்குற்று விழித்தேனென்று இப்பொழுது தெரிகிறது. ஏனென்றால் நான் இங்கே உயர்நிலையில் இருக்கையில் பிரபஞ்சத்தில் எங்கே என்ன நடந்தாலும் எனக்குத் தெரியவருமாறு ஒரு தகவல்களைப் பெறும் ஸ்தானத்தைப் போல என்னைப் பயிற்சிப் படுத்திக் கொண்டிருந்தேன். அந்த அடுத்த நிலையானது எனக்குத் தெளிவற்ற முறையில் நினைவிலுள்ளது. இந்த எங்களது திட்டமானது நிறைவேற்றப்பட்டபின் மீண்டும் அந்த நிலைக்குச் சென்று வர ஆர்வமாகவுள்ளேன்.
அடுத்ததாக எதிர்மறையாக சமய நம்பிக்கைகள் ஏதுமற்ற ஒருவரைப் பற்றி ஆர்தர் சொன்னார்: "அவர் இறக்கையில் அது தான் அனைத்து விடயங்களினதும் இறுதி முடிவாக இருக்குமென எதிர்பார்த்தார். ஆனால் அதற்குப் பதிலாகச் சிலநாட்களின் பின் இப்பக்கத்தில்  அசையத்தொடங்கி உயிர் வாழ்க்கையின் அறிகுறிகளைக் காட்டத்தொடங்கினார். அவர் படிப்படியாகக் கண்களைத் திறந்து செயற்பாடுகளைக் கவனிக்கத் தொடங்கினார். அவரால் ஒன்றையும் நம்பமுடியவில்லை. ஏனென்றால் தான் இறந்தது அவருக்கு நன்றாகத் தெரியும். கழுத்துத் திருகப்பட்ட கோழியின் கடைசிநேரப் படபடப்புப் போல இது ஒரு கெட்ட கனவாக இருக்குமென நினைத்தார். இந்த மாயத்தோற்றத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அவர் போராடினார். ஆனால் அதற்குப் பதிலாக அவரது பெயரைச் சொல்லி அழைத்த சிலரை அவர் கண்டார். அவர்களோ அவர் முதலில் பூதவுடலுடன் இருக்கையில் அவருக்குப் பரீட்சயமானவர்கள் என்பதையும் கவனித்தார். அவர் சங்கடப்பட்டு நெளிந்தார்; ஆட்சேபித்தார்; இறுதியில் அதற்கு விளக்கம் கோரினார். அதற்கு அவரது பழைய சிநேகிதர்கள் புன்னகை புரிந்து கொண்டு, "சார்லி, முதலிலேயே உனக்கு நாங்கள் இறப்பின் பின்னும் தொடர்ந்து இருந்து கொண்டே இருப்போமென்று சொல்வதற்கு முயன்றோம். ஆனால் அதை நீ கவனிக்கவில்லை" என்றனர். அவர் மீண்டும் சங்கடப்பட்டு நெளிந்தார். அடித்துகொண்டார். இந்தப் புதிய பிரக்ஞை நிலையிலும் அவர் தான் தவறாக எண்ணி விட்டதாக நிரூபணமாவதை விரும்பவில்லை. பூவுலகிலிருக்கையில் அவர் மனதைப் பூட்டியே வைத்திருந்தார். எப்பொழுதும் அவர் சொல்வது சரியாகவே இருக்கும். இறப்பின் பின் வாழ்வு தொடரும் என்று நம்புபவர்கள் எவராகவிருந்தாலும் அவர்களுக்குப் பித்துப் பிடித்து விட்டதென்று நிராகரித்து விடுவார். அவர் அந்தக் காட்சிகளையும், ஒலிகளையும் தன் பார்வையிலிருந்தும், செவிப்புலனிலிருந்தும் மூடிவிட முனைந்தார். ஆனால் சற்று நேரத்தில் பார்த்தபோது அந்தக் காட்சி மாறிக்காணப்பட்டது. அழகான மரங்கள், மலர்கள், அன்பான மனிதர்களுக்குப் பதிலாக அவர் ஒரு ஆழமான, இருண்ட, முடிவற்ற, பயங்கரப் பிளவைக் கண்டார். அவர் பயந்து பின்வாங்கினார்.
"அந்தப் பிளவு அகன்றது. தான் அதற்குள் கீழே கீழே விழுந்து கொண்டு போவதைப் போல உணர்ந்தார். உதவி கேட்டுக் கூச்சலிட்டார். ஆனால் ஒரு நண்பர்களும் அவரது பயத்தினைப் போக்குவதற்கு அருகிலில்லை. அவர் விழுந்து கொண்டேயிருந்தார். அல்லது அவர் அப்படி உணர்ந்தார். பழைய காலத்துப் போதகர்கள் எச்சரித்ததைப் போல இது தான் நரகத்துக்குப் போகும் வழியா? அவர் சட சடவென்று விழுந்து கொண்டே போனார். அவர் மனவேதனையுற்றார். உடலுடனிருக்கையில் தான் நம்பிக்கையற்றவராக இருந்ததை மென்மையாகச் சுட்டிக்காட்டிய நட்பான மனிதர்களெல்லாம் எங்கே? ஏன் அவர்கள் இப்போ உதவுகிறார்களில்லை. ஆனால் பூதவுடலுடனிருக்கையில் நம்பிக்கையுள்ளவர்களை விலக்கி வைத்ததைப் போல அவர் தனது நம்பிக்கையின்மையால் அவர்களையெல்லாம் துரத்தி விட்டார். கடைசியில் மீண்டும் அந்த ஆதரவான நண்பர்கள் தன்னருகிலிருந்தால் நல்லதென எண்ணினார். அவர்கள் கூறிய அந்த அனைத்து ஆத்மாக்களுக்காகவும் காத்திருக்கும் நித்திய நிலையினைப் பற்றி அறிய விரும்பினார். அந்தப் படுகுழியில் விழுந்து கொண்டிருக்கையில் அவர் அவர்களுக்காக ஏங்கினார். அவரது விருப்பமானது எவ்வளவு சீக்கிரம் வெளிப்படுத்தப்பட்டதோ அவ்வளவு சீக்கிரத்தில் அவர்கள் மீண்டும் அவருடன் புல்வெளியில் நின்றனர். அவர் தானாகவே இறைவனுக்கு நன்றி செலுத்தினார். அந்தப் படுகுழி மறைந்து விட்டிருந்தது. அத்துடன் அவரும் இப்போ தனியே விடப்படவில்லை. விருப்பமானது, செய்கையைப் போல திண்ணமானதென்று நண்பர்கள் உத்தரவாதமளித்தனர். எண்ணமானது செய்கைக்குச் சமமானதாகும். ஆறுதல் தரும் நண்பர்களுக்காக ஆசைப்பட்டதுடன், முடிவற்ற வாழ்வைப் பற்றி மேலுமறிய ஆசைப்பட்டதனால் அவர் அவர்களது முன்னிலையை எண்ணவடிவினூடாக உருவாக்கியிருக்கிறார். அவர் அவர்களது வழிமுறைகளை ஆவலுடன் கேட்டுக்கொண்டார். அடிப்படையில் அவர் நல்ல எண்ணங்கள் கொண்ட ஒரு நல்ல மனிதரென்பதால், அவர் மனத்தைப் பூட்டிவைத்திருந்தாலும், அவர் ஞானத்தைப் போதிக்கும் பாடசாலைகளில் சேர்த்துக்கொள்ளப் படுவார். கூடிய விரைவில் ஏனைய நம்பிக்கையற்றவர்கள் ஆத்ம உலகில் விழிப்படைகையில் அவர்களுக்கு உதவுவதற்குத் தானே முன்வருவார்".
மற்றுமொருமுறை ஃபோர்ட் எந்த நம்பிக்கையும் அற்றவர்களைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்கையில் பின்வருமாறு சொன்னார்: "வாசலின் இந்தப் பக்கத்திலே தாங்கள் இருப்பதைக் கண்ணுறும் அப்படிப்பட்ட ஆத்மாக்கள் இப்படியொரு இடமேயில்லை என நினைப்பதால், அதனை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். மற்றவர்கள் அந்த மந்த நிலையிலிருந்து அவரை எழுப்ப முயன்றால் அவர் அவர்களைத் தங்களின் சொந்தக் கற்பனை என நினைத்து விரோதத்துடன் பார்ப்பார்கள். சொர்க்கமோ, நரகமோ என்று ஒன்றும் இல்லாததால் உடல் இறந்தபின்னர் தண்டனைகளோ, வெகுமதிகளோ இருக்காது என நினைப்பதால் தனது ஆத்மாவும் உடலுடன் அழிந்து விடுமென நினைப்பார்கள். இந்த 'மாயத்தோற்றங்கள்' என நினைப்பவை விலகிச் செல்லும்வரை பல காலத்துக்கு இப்படிப்பட்ட ஆத்மா மயக்க நிலையில் இருக்கக்கூடும். சாடைமாடையாகத் தன்னைச் சுற்றிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தொழிற்பாடுகளை அவர் உணரக்கூடுமெனினும், அவரைப் பொறுத்தவரை அவை உண்மையாக நடைபெறவில்லை. சில வேளைகளில் தான் உயிருடன் இருப்பதை ஆத்ம மனம் ஏற்றுக்கொள்ளவியலாத ஒரே காரணத்தினால் அப்படிப்பட்ட ஆத்மா பலப்பல ஆண்டுகளை இப்படி வீணாக்கக்கூடும். ஆனால் பெரும்பாலும் ஆத்மாவானது பூதவுடலின் அந்த அடம் பிடிக்கும் மனத்தின் பிடியைக் களைந்தெறிந்து விட்டு இதுதான் உண்மை நிலையென்று புரிந்து கொண்டு விழித்தெழும். மாயையான அந்தப் பௌதீக நிலையிலிருந்து தான் இப்போ விடுபட்டு வந்துவிட்டதாக உணரும். அந்த மாய உலகமானது, உண்மையான செழிப்பு நிறைந்த இந்த ஆத்ம உலகின் ஒரு நிழல் வடிவமே என உணரும். சில நேரங்களில் இந்த விதமாக நேர்மையான ஐயப்பாடுடையவர்கள், நல்லவர்கள் ஆனால் பிடிவாதத்துடன் வாழ்வின் ஆத்மீக அம்சத்தைப் பொறுத்த வரையில் மனத்தை மூடிவைத்திருப்பவர்கள், இங்கே வந்து தங்களது கண்களை மறைக்கும் மாயத்திரை விலகியபின் வெகு விரைவாகக் கற்றறிவார்கள். அவர்கள் தாங்கள் இழந்த நேரத்தை ஈடு செய்வதற்காக மிக ஆவலுடன் கல்விகற்கும் பாடசாலைகளில் முழுமனதாக மூழ்கிப்போவார்கள். அத்துடன் என்றும் அழியாத வாழ்வைப் பற்றி ஆவலுடன் ஆசிரியர்களைக் கேள்விமேல் கேள்விகள் கேட்டுக் கொண்டிருப்பார்கள். ஆனால் ஆணவம் சூழ்ந்துள்ளவர்களின் மனங்கள் உருக்கிரும்பாலான பொறி போன்றன. அவர்கள் விரைவில் குணமடைய மாட்டார்கள். அவர்கள் அரைத்தூக்க நிலையில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளைக் கழிப்பார்கள். இங்கே பலர் அப்படியுள்ளனர். அவர்கள் மிகவும் பரிதாபத்துக்கு உரியவர்களாகும்".
ஆர்தர், பூதவுடலுடன் இருக்கையில் என்றும் நிலையான வாழ்வைப் பற்றி  ஒரு அக்கறையுமில்லாத ஏனையவர்கள் பலரைப் பற்றிச் சொன்னார். அவர்கள் ஆத்ம உலகில் பாடசாலைகள் உள்ளன என்ற எண்ணத்தையே மறுப்பவர்களாகும். அதனால் உலகின் பல பாகங்களுக்கும் அலைந்து திரிந்து, மற்றையவர்களை வெற்று சம்பாஷணைகளில் ஈடுபட வைப்பார்கள். அப்படிப்பட்ட நபர் அல்லது ஆத்மாவானது, இலட்சியமேதுமற்றது. மந்தகதியில் உள்ளது. முன்னேற்றத்துக்கு எந்தவிதமான முயற்சியும் எடுக்காதது. அத்துடன் போர்ட் பின்வருமாறு எழுதினார்: "அவர் ஆத்மீக முன்னேற்றத்துக்கு முயற்சிக்கும் நோக்கத்துடனோ, அன்றியோ மீண்டும் பிறப்பெடுக்கலாம். ஆனால் அவர் ஆத்மீக முன்னேற்றத்துக்கு முயலாவிடின், ஓடுபொறியில் (treadmill) மாட்டிக்கொண்டதைப் போல, மீண்டும், மீண்டும், மீண்டும் ஒரு நோக்கமுமில்லாமல் பிறப்பெடுத்துக் கொண்டேயிருப்பார். ஏனெனில் அவர் தனது இதயத்தையும், மனதையும், ஆத்மாவையும் ஆத்ம உலகின் இயல்புகளுக்கும், என்றும் சாஸ்வதமான வாழ்வின் நிஜங்களுக்கும் தயாராகத் திறப்பதற்கு எந்தவிதமான விருப்பத்தையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை".
இறப்பின் பின்பும் சுறுசுறுப்பான, வேலை செய்யக்கூடிய உலகம் உள்ளது என்ற எண்ணத்தை  விரும்பாதவர்களுக்கு ஃபோர்ட் ஒரு மாற்று வழியைச் சொன்னார். நாம் விரும்பின் சும்மா வீண்பொழுதும் போக்கலாம்-அழிவுப் பாதையை நோக்கி. கொலையாளிகள், தற்கொலை செய்தவர்கள், சித்ரவதை செய்தவர்கள், திருடர்கள் போன்றோரின் நிலை என்னவென்று ஆர்தரை நான் கேட்டேன். அதற்கு அவர் தொடர்ந்து வந்த சில நாட்கள் பின்வருமாறு எழுதினார்:
"இன்னொரு உயிரைத் தன் சொந்த லாபத்துக்காகவோ, திருப்திக்காகவோ வேண்டுமென்றே கொலை செய்யும் கொலைகாரனைப் பற்றிப் பாப்போம். இது அருவருக்கத்தக்க விஷயமாகும். இவர்கள் பெருவெறுப்புகளும், பழிவாங்கும் உணர்வுகளும் கொண்டுள்ளவர்கள். அப்படிப்பட்ட ஒருவர் இறப்பெனும் திரையைத்தாண்டி இங்கு வரும்போது ஒன்றையுமே எதிர்பார்க்கமாட்டார். எனவே பொதுவாக நீண்ட நாட்களுக்கு அவருக்கு அதுவே அதாவது ஒன்றுமேயில்லாத நிலையே தெரியும். ஏதாவது ஒரு விடயம் அவரை எழுப்பும்வரை அவர் இறக்கையில் இருந்த மனநிலையிலேயே சிறிதுகாலத்துக்கு இருப்பார். அவர் விழிக்கையில் தான் எதிர்பார்த்த நரகமானது அவருக்காகக் காத்திருப்பதை உணர்வார். பேய், பிசாசுகள், பூதங்களைப் பார்க்கமாட்டார். ஆனால் வெறுப்புகளாலும், பேராசை, குரோதம் போன்ற இன்னபல அழிவுக்கு வழிகோலும் உணர்வுகளால் சிதைந்துபோன அவரது சொந்த முகத்தின் உருவத் தோற்றங்களையே காணுவார். அவர் அந்தக் காட்சிகளைப் பார்த்துப் பயந்து ஒடுங்கிப் போனார். அவர் தன்னைத் தானே பார்த்ததை உணர்ந்தார். அவர் தன்னைப் பேய் பிடித்திருப்பதைப் போல உணர்ந்தார். அவரது அடிப்படையான இயல்பைத் தவிர, வேறொருவரின் உதவியில்லாமலே தன்னைத் தானே அழித்துகொண்டிருக்கிறார். அவர் தான் ஒரு முழு வாழ்வுக்கான சந்தர்ப்பத்தை வீணடித்தது மட்டுமன்றி, இனி வரும் பிறவிகளின் முன்னோக்கிய வளர்ச்சிகளுக்கும் தான் முட்டுக்கட்டை போட்டிருப்பதை உணர்ந்து திகைத்தார். இந்தக் கடைசிப் பிறவி எடுப்பதற்கு முன் அந்தப் பிறவியில் என்ன செய்வதற்குத் தான் தீர்மானித்திருந்தார் என்பது இப்போ அவருக்கு நினைவுக்கு வரத்தொடங்கியது. அவர் பேராசை, பெருவெறுப்பு, சலனங்கள் போன்றவற்றை வெல்வதாக உறுதி எடுத்திருந்தார். ஆனால் அதற்குப் பதிலாக அவர் தான் தெரிவு செய்திருந்த சந்தர்ப்பங்களாலேயே தன்னைத்தானே நேருக்குநேர் சந்தித்திருந்தார். ஞானாலயத்திலோ அன்றி உயர்தரமான கல்விகற்கும் பாடசாலையிலோ அவர் சேரமாட்டார்.
"இந்த ஆத்மாவானது தான் முற்றிலுமாகத் தொலைந்துவிட்டதை உணரும்வரை நீண்ட நெடுநாட்களுக்குக் கடும் வாதையிலிருக்கும். இறுதியாக அவர் முழுக்க நம்பிக்கை இழந்து கடைசியில் தன்னைக் காப்பாற்றும் படி ஆண்டவனை நோக்கி அழுவார். அந்த ஓலமானது இறைவனுக்குக் கேட்கும். அவரது வேதனையைத் தணிக்க ஏனைய ஆத்மாக்கள் அனுப்பி வைக்கப்படும். உண்மையிலேயே அவர் ஆத்மீக முன்னேற்றத்துக்கு ஆசைப்படுவாராக இருந்தால், அவர் மிக மிக மிக மெதுவாக முன்னேறத் தொடங்குவார். அதாவது கடவுளால் கொடுக்கப்பட்ட ஒரு உயிரைப் பறித்ததற்குரிய அபராதங்களைப் பற்றி உணரக்கூடிய வரையில் முன்னேறுவார். அவர் போதுமான அளவு திடமாக வந்தபின் யாருடைய உயிரைப் பறித்தாரோ அவரைச் சந்திப்பார். அந்தச் சந்திப்பின் பக்க விளைவானது சொர்க்கத்தில் மணிகளை ஒலிக்கப் போதுமானதாக இருக்கும். அநேகமாக, அந்த மற்ற ஆத்மாவானது தனது பூவுலக வாழ்க்கைக் காலத்தை  இடையிலேயே வெட்டிவிட்ட, அந்த அழுந்திக் கொண்டிருக்கும் ஆத்மாவை மன்னிக்கக் கூடிய அளவுக்குத் தன்னைத்தானே வெற்றிகொண்டிருக்கும். அந்த மன்னிப்பானது, அந்தக் கொலையாளியைப் படிப்படியாக மற்றைய ஆத்மாக்களின் சமூகத்தில் தனது இடத்தை எடுக்கச் செய்யக்கூடிய அளவுக்கு உயர்த்துவதுடன், இறுதியாகப் பாவ விமோசனத்தைப் பற்றிய அறிவைப் பெறவும் உதவும். உங்கள் உலகில் இருப்பதைப் போலவே இங்கும் எந்த ஒரு ஆத்மாவுக்கும் இறையவனுடையதோ அல்லது அவனைப் போலவே இருக்கும் நல்ல ஆத்மாக்களினதோ உதவியேதும்  இல்லாமல் போகாது என்பதை நினைவில் கொள். 'கேளுங்கள் தரப்படும், தேடுங்கள் கிடைக்கும், தட்டுங்கள் உங்களுக்காகத் திறக்கப்படும்.' அது தான் பிரபஞ்ச விதி. கேளுங்கள், பெறுங்கள்; தட்டுங்கள், உங்கள் உள்ளக்கதவுகளைத் திறந்து, இப்பிரபஞ்சம் முழுக்க நிரம்பிய அன்பின் கதிர்வீச்சுகளை உங்களினூடாகப் பாயவிடுங்கள்."
ஜாக் கென்னடி தனது கொலையாளியாகிய லீ ஹாவே ஒஸ்வோல்டை மேலுலகில் சந்தித்தித்தவரா எனக்கேட்டேன். அதற்கு போர்ட் பின்வருமாறு எழுதினார்: "ஒஸ்வோல்ட் பற்பல நூற்றாண்டுகளுக்குத் துயிலிலிருந்து விழித்தெழ மாட்டார். கடைசியாக அவர் விழிக்கையில் அவருடைய கடினமான இருதயத்தை இளக வைக்கும் வகையில் அவர் பெரிய குற்ற உணர்ச்சியால் வருந்துவார். ஏனெனில் அவரது குற்றமானது ஒரு காரணமுமற்ற, ஒரு வகை விளக்கமும் கொடுக்கமுடியாத மிருகத்தனமான குற்றமாகும். அந்தக் குற்றத்தின் அதிர்ச்சியானது இனி வரும் பல  காலங்களுக்குத் தாக்குப் பிடிக்க முடியாத அளவு மிகப் பெரியதாகும். ஜாக் தான் மிகப் பிரமாதமாகத் தொடங்கிய வேலையை முடிக்க முடியாமல் போனதையிட்டு தான் தோற்றுவிட்டதாக உணர்ந்தாலும், அவருக்குக் காழ்ப்புணர்ச்சியொன்றும் இல்லை. பொபி கென்னடி ஸேர்ஹான் ஸேர்ஹான் (Sirhan Sirhan) ஐப் பற்றி என்ன நினைக்கிறார் என்பதையும் கேட்டேன். அதற்குரிய பதிலானது, "ஸேர்ஹான் ஒஸ்வோல்டிலும் பார்க்க மோசமான நிலையிலிருப்பதாக அவர் உணர்கிறார். ஒஸ்வோல்ட் அதிர்சியால் உண்டாகிய துயிலில் சுய உணர்வின்றி இருக்கிறார். ஆனால் ஸேர்ஹானோ அந்த இரத்தக்கறை படிந்த கரங்களுடன் இன்னமும் உயிர் வாழ்கிறார்" என்பதாகும்.
தற்கொலையைப் பற்றிச் சொல்கையில், பூதவுடலுடன் இருக்கையிலேயே பிரச்சனைக்கான காரணத்தைச் சரிசெய்வது, இறப்பின் மறுபக்கத்தில் இருப்பதிலும் பார்க்க மிக மிக இலகுவானதென ஃபோர்ட் வலியுறுத்தினார். அவர் மேலும், "ஒருவர் மனத்தளர்ச்சியின் காரணமாகவோ அன்றி விரக்தியின் காரணமாகவோ தனது உயிரைத் தானே எடுத்துக் கொள்வாராயிருந்தால், இங்கே அதற்குரிய தீர்வை இலகுவில் கண்டுபிடிக்க முடியாது. ஏனெனில் இறைவனால் ஏற்றிவைக்கப்பட்டதை அணைப்பதற்கு எமக்கு ஒரு உரிமையும் கிடையாது. எங்களது கர்மவினைகளைக் கழிப்பதற்கென்று பூதவுடல் எடுக்க எமக்குத் தரப்பட்ட சலுகையை அவ்வளவு எளிதாகத் தள்ளுபடி செய்யவியலாது. ஏனையோர் ஆத்மீக முன்னேற்றத்துக்குத் தங்களது முறைக்காகக் காத்திருக்கிறார்கள். எனவே எம்மைப் படைத்தவனால் எமக்கு வழங்கப்பட்ட உயிரை ஆத்திரத்தில் எடுத்தால் இங்கே அதற்குப் பதில் சொல்லியாக வேண்டும். அத்துடன் முன்னிலும் பார்க்கப் பத்து மடங்கு அதிகரித்திருக்கும் கர்மவினையைப் போக்குவதற்காகப் பிறவியெடுக்க வேண்டுமெனினும் இப்போ பிறவியெடுக்கும் சந்தர்ப்பம் மேலும் தாமதப்படும்."
பூவுலகில் குழந்தையாயிருக்கையில் தனது பெற்றோரால் கைவிடப்பட்ட ஒருவர் கடைசியாக அவர்களை ஆத்ம உலகில் முதன்முறையாகச் சந்தித்த விஷயத்தைப் பற்றி ஃபோர்ட் தானாகவே சொல்லத்தொடங்கினார். "என்ன நடந்திருக்கும்?" எனப் பீடிகை போட்டார். தொடர்ந்து, "நன்றாக எண்ணிப் பார்த்தால் உனக்குப் புரியும்: ஒன்று கூடலே. ஆத்மீக ரீதியில் சிரிப்பும், கண்ணீரும் தான். ஏன்? ஏனெனில் இந்தப் பக்கத்தில் நாம் இன்னொருவருக்கு எதிராகக் காழ்ப்புணர்ச்சிகளைக் கொண்டிருக்க விரும்பமாட்டோம். அதாவது நாம் ஆத்மீக வழியில் முன்னேறிக் கொண்டிருக்கையில் அதற்குரிய விதிமுறைகளின்படி அது சாத்தியமற்றது. பச்சாதாபம்? சுயநிந்தனை?தவிர்ப்பது நல்லது. ஆத்மீக முன்னேற்றத்துக்கு இவையெல்லாம் தடைக்கற்களே. நாம் பூவுலகில் விட்ட தவறுகளைத் திருத்துவதற்காக எம்மை நாமே பூவுலகில் சந்திக்கப் போகும் அந்தத் தருணத்துக்காக, அடுத்த பிறவிக்காக அவற்றை ஒதுக்கி வையுங்கள். ஆனால் ஆத்மீகத் தளத்தில் இப்படிப்பட்ட உணர்வுகளை ஆத்மீக முன்னேற்றத்தை நலிவுற வைக்காமல் வளர்க்கவியலாது.
"நாம் வேறொரு கோணத்தில் பார்ப்போம். சிறை முகாமிலோ அல்லது போர்க் களத்திலோ ஒரு மனிதன் இன்னொரு மனிதனால் சித்திரவதை செய்யப்பட்டார் என்று வைத்துக் கொள்வோம். இறுதியாக இந்தப் பக்கத்தில் இருவரும் ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள் எனின் என்ன நடக்கும்? உதாரணத்துக்கு, அவர்களுக்கிடையில் இருவரையும் ஒருவரையொருவர் நெருங்க வைக்கக் கூடிய விதத்தில் ஏதாவது பொதுவான எண்ண அலைகள் இல்லையெனில், அதாவது இருவரும் வெவ்வெறு அலைநீளங்களில் இருந்தால் அவர்கள் இங்கே சந்திப்பதற்கான சாத்தியம் மிகமிகக் குறைவே. ஆனால் ஒருவேளை இருவரும் ஒரே இயல்புடைய தளத்திற்கு ஈர்க்கப்படக்கூடிய விதத்தில் போதுமான அளவு ஒரே விருப்பங்கள், ஆர்வங்களிருந்து இருவரும் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள் என்று வைத்துக்கொள். ஒருவர் மற்றவரை மன்னிப்பாரா? அல்லது மற்றவர் தன்னைத்தானே கடிந்துகொண்டு மன்னிப்பு வேண்டுவாரா? ஒருநாளுமில்லை. அது பூவுலகத் தளத்தின் செயற்பாடாகும். ஆனால் இங்கே அவர்களிருவரும், யார் சித்திரவதையைச் செய்தாரோ அவர் பூவுலகில் தானே அந்தச் சித்திரவதையை அனுபவிப்பதன் மூலம் அதை ஒரு கட்டத்தில் ஈடு செய்வாரென்பதை எளிதாக ஏற்றுக் கொள்வார்கள். மற்றவர், அதாவது சித்திரவதையை அனுபவித்தவர் தனது கடந்த காலச் செய்கையொன்றுக்கு உரிய கடனை இப்படிப்பட்ட சித்திரவதையை அனுபவித்ததன் மூலம் ஒரு வழியில் அடைத்து விட்டதாகவும், அந்தக் குற்றம் எழுதப்பட்ட எழுதுபலகையானது இப்போ சுத்தம் செய்யப்பட்டு விட்டதென (slate is clean) உணர்வார். இங்கே ஆத்ம உலகில் சுயநிந்தையிலும், மற்றைய ஆத்மாக்களைப் பழிவாங்கும் எண்ணங்களிலும் நாம் நேரத்தை வீணடிக்கமாட்டோம். உண்மை, சில இன்னும் உலகியல் வாழ்வில் முழுவதுமாகச் சிக்குண்டு, பூவுலகிலிருக்கும் தனது எதிரியென்று சொல்லப்படுபவரின் மேல் பழிவாங்கும் ஆத்மாக்களுமுள்ளன. அத்துடன் ஒருவேளை அவர் பூதவுடலுடன் இருக்கையில் பழிவாங்குவதாகச் சபதமெடுத்திருந்தால், அவர் அந்த மனிதனுடனேயே திரிந்து பழிவாங்குவதாகச் சூளுரைத்து, அந்த மனிதனுக்கெதிராகத் தனது ஆசையைப் பூர்த்தி செய்வதற்கான சந்தர்ப்பங்களைத் தேடிக்கொண்டிருப்பார். சிலர் இதனைப் பேய் பிடித்திருக்கிறது என்பர். அப்படிச் செய்வது சிறுபிள்ளைத்தனமானது, முதிர்ச்சியற்றது, முற்றிலும் பிழையானது. ஏனென்றால், இங்கே எமக்கு மேன்மையான அறிவைப் பெறக்கூடியதாகவுள்ளது. அப்படியிருக்கப் பழிவாங்கும் ஆத்மாவானது, பூவுலகிலிருக்கும் பாவப்பட்ட சாத்தனுடைய கணக்கைத் தீர்க்குமுகமாக இங்கிருக்ககூடியதான அறிவு விருந்தை அலட்சியம் செய்கிறது. அது கேலிக்கிடமானது. அப்படிப்பட்ட ஆத்மாவானது தனது ஆத்மீக வளர்ச்சியை பல்லாயிரக்கணக்கான நாட்களோ அன்றி வருடங்களோ தாமதம் செய்கிறது. அதாவது, இங்கே எது சரி எது பிழையென மிகத்தெளிவாக அறிய இயலுமாக இருப்பதால் பூவுலகில் செய்யப்படும் கொலையிலும் பார்க்க மேலுலகில் தொடரும் பழிக்குப்பழி முயற்சியானது மிக மோசமானதென்பதை அவர் உணரும்வரை அது தாமதப்படும்".
சேரிப்பகுதியொன்றில் வசித்த ஒருவரைப் பற்றிய போர்டின் கலந்துரையாடல்  எனக்குக் குறிப்பாகப் பிடித்திருந்தது. அவர் பின்வருமாறு எழுதினார்: "ஒரு பூரணமான வாழ்க்கை வாழ விரும்பி, அப்படியே முடிவு செய்த ஒரு ஆத்மாவைப் பற்றி இப்பொழுது நாம் பார்ப்போம். ஆனால் சேரிச்சூழலில் பல விதமான தூண்டுதல்களால் உந்தப்பட்டு அவர் தவறிழைத்தார். வறுமை, பசி, குளிர், அத்துடன் அன்பு செலுத்த ஒருவருமேயில்லாத நிலையில் அவர் பசியைப் போக்கவும் குளிரைப் போக்கவும் திருடினார். அவர் இறக்கும் தறுவாயில், தனது பாவங்களுக்காகப் பச்சாதாபப் பட்டார். மற்றவர்களுக்கு இழைத்த நஷ்டங்களுக்கு ஈடுசெய்ய அவரால் முடியவில்லை. எனவே அவர் இந்தப் பக்கத்துக்கு வருகையில் வீணாகிப் போய்விட்டதாக நினைத்த அந்த வாழ்வுக்காக முழுக்க முழுக்கப் பச்சாதாபப் பட்டுக்கொண்டு வந்தார். ஆனால் உண்மையிலேயே அது வீணாகிப் போன வாழ்வா? அவர் தனது உடலைப் பாதுகாப்பதற்காகத் திருடும் போதும் கூட மற்றவர்களைப் பற்றியே எப்பொழுதும் நினைத்திருந்தார். அவர் கெட்டவரல்ல. உணவுத்தேவை, குளிருக்கேற்ற வெதுவெதுப்புத் தேவையெனும் போது தடுமாற்றங்களை அவரால் தடுக்கமுடியவில்லை. இங்கே முதலில் அவர் தன்னைத் தானே மன்னிப்பதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும். அதன்பின்னர் இன்னும் பூவுலகில் தேவைகளுடன் இருப்பவர்களுக்கு எந்த வகையில் உதவ இயலுமென்று பார்த்து அதனை அவர் செய்வார். அவர்கள் திருடாமல், உணவையும், குளிரைப் போக்கும் உடைகளையும் அடைவதற்கேற்ற வகையில் மற்றவர்களின் இதயங்களில் ஏனையோருக்கு உதவும் ஆசையை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களுக்கு உதவுவார். ஏனைய வறியவர்களுக்கும் அவர்கள் தூண்டுதல்களுக்கு இலக்காகாமல் இருக்க மிக ஆவலுடன் அவர் உதவுவார். இப்படியாக அவர் மற்றவர்களுக்கு உதவுவதற்காக நீண்ட நாட்கள் கடுமையாக உழைப்பதன் மூலம் தனது ஆத்மாவை மிக உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்வார். அதனால் பெரும்பாலும் அவர் மீண்டும் பூதவுடலெடுத்துத் தன்னைப் பூரணப்படுத்த வேண்டிய தேவை ஏற்படாது.
"எனவே பச்சாதாபப்படுகின்ற ஒரு பாவியானவன் நேர்மையான ஒரு மதவைராக்கியிலும் பார்க்கக் கூடுதலாக இங்கே வரவேற்கப்படுகின்றான்."
வாழ்வின் அடுத்த கட்டத்தில் எங்களது சொந்த மனச்சாட்சியைத் தவிர வேறு நியாயத் தீர்ப்புகள் இங்கு இல்லையென்று ஆர்தர் வலியுறுத்தினார். அவர் தொடர்ந்து சொல்கையில், "மனச்சாட்சியின் குரலானது இறைவனின் ஒரு பகுதியாகும். ஏனெனில் நாமே எம்மைப் படைத்தவனின் ஒரு பகுதி தானே. ஆனால் நியாயத் தீர்ப்பானது, எமது பௌதீக விழிகளிலிருந்து கட்டுகள் விலகிய பின் எங்களிலிருந்தே பகுதி பகுதியாக வரும். திரை விலகியவுடன் நாம் எங்கே தவறிழைத்தோம், எங்கே சரியாக நடந்து கொண்டோமென எம்மால் தெளிவாகப் பார்க்க முடியுமாகையால், நாம் உணர்வு பூர்வமாக முன்னேறியிருப்போம். எங்களது சில முக்கியமற்ற, நினைவிலிருந்து மறைந்து போன செய்கைகள் அந்த முன்னேறிய நிலையில் மிகப்பெரியதாகத் தெரிவது மகிழ்ச்சியாகவிருக்கும். நீட்டப்பட்ட உதவிக்கரம், லாபநோக்கின்றிச் செய்யப்பட்ட ஒரு நற்செய்கை, பாதிக்கப்பட்ட ஒருவரின் மனஉளைச்சலைப் போக்கிய ஒரு கடிதம், முன்பின் தெரியாத, மனச்சோர்வுடன் உள்ள ஒருவரைப் பார்த்து சிந்திய புன்னகை. இப்படியான மிகச்சிறிய, மறக்கப்பட்ட செயல்களெல்லாம், சொர்க்கத்தில் வரவு வைக்கப்படும் என நினைக்க வைக்கும் ஆர்ப்பாட்டமான, பகட்டான பண உதவியிலும் பார்க்கக் கூடுதலாக எம்மை முன்னேறச்செய்யும். அதேபோல மேலுலகில் முன்னேற்றத்துக்கு உதவுமென நினைத்த சில விஷயங்கள் உண்மையிலேயே எமது முன்னேற்றத்தைத் தடுத்திருந்தனவென அறிந்து ஏமாற்றமடைவோம். மற்றவர்களுக்கு உதவுவதாக எண்ணி இலவசமாகப் புத்திமதிகளை வழங்கியிருப்போம்; யாரையேனும் மேலதிகமாகப் புகழ்ந்துபேசி அல்லது முகஸ்துதிகள் செய்திருப்போம்; யாருக்கேனும் செய்த உதவிகளைப் பெருமையுடன் வெளியில் சொல்லித் திரிந்திருப்போம். நாம் செய்த நல்ல காரியங்களைப் பற்றி அங்கே அதிகம் சொல்லித்திரிந்தால், பூவுலகில் எமக்குப் போதுமான வெகுமதி கிடைக்கும். அதனால் இங்கே ஒன்றும் கணக்கில் வைபடமாட்டாது. வலதுகை கொடுப்பதை இடதுகை அறியாமலிருத்தல் நல்லது. மறந்துவிடுங்கள். பூவுலகில் வெகுமதி கிடைக்கபெற்ற நல்ல விஷயங்கள் ஒன்றையும் நாம் ஆத்ம உலகுக்கு எடுத்துச் செல்லமாட்டோம். இன்னொருவருக்குத் தேவையேற்பட்ட ஒரேயொரு காரணத்துக்காக நாம் நன்றியோ, கைமாறோ எதையும் எதிர்பார்க்காமல் செய்த உதவிக்காக இங்கே முழுமையான வெகுமதியை அடைகிறோம். எனவே அங்கே உங்களைப் பாராட்டாதவர்களுக்கு எதிராக எந்தவிதமான கோபத்தையும் மனதில் கொள்ளவேண்டாம். உங்களுக்கு இயலுமான வேளையில் உதவியைச் செய்துவிட்டு அதனைப் பின் மறந்துவிடுங்கள். எம்மைப் படைத்தவனின் கருவிபோன்று உங்கள் வாழ்வை வாழுங்கள். திருப்திகரமான வாழ்க்கை வாழ்வதற்கேற்ப நீங்கள் உழைக்க வேண்டும் என்பதைத் தவிர வேறொன்றையும் உங்களுக்காகக் கேட்காதீர்கள். தர்மம் செய்வதை விளம்பரப்படுத்தாதீர்கள். வற்றாத கேணியொன்றை உங்களுக்காக உருவாக்குங்கள். அந்தக் கேணியிலிருந்து அன்புக் குமிழிகள் உருவாகிக்கொண்டே இருக்கட்டும். அந்த அன்பைத் தடையின்றி வழங்கினால், நிறைந்து வழிய வழிய அன்பு தொடர்ந்து பெருகிக்கொண்டே இருக்கும்.