இது 'A World Beyond' என்ற ஆங்கில நூலின் மொழிபெயர்ப்பாகும். இந்நூலை எழுதியவர் ரூத் மோன்கொமெரி (Ruth Montgomery) எனும் ஒரு பெண்மணியாகும். மனிதருக்குள் மேலுலக ஆத்மாக்கள் வந்து பேசுவதைப் போன்று மேற்குலகில் 'Automatic Writing' என ஒரு விடயமுள்ளது. அதாவது ஆத்மாக்கள் எங்கள் மூலமாக வந்து சில விடயங்களை எம்மைக் கொண்டு எழுதச் செய்வது என்பதாகும். இந்நூலானது அப்படியாகத்தான் எழுதப்பட்டது. 'ஆர்தர் போர்ட்' என்று இந்நூலாசிரியைக்குத் தந்தையைப் போலிருந்த ஒருவர் மேலுலகம் சென்ற பிற்பாடு அவர் மூலமாக எழுதப்பட்டது இந்நூலாகும்.

Thursday, December 31, 2020

ஒன்பதாம் அத்தியாயம்: பிரபலமானவர்களைப் பற்றிய அறிக்கைகள்

பெரும்பாலும் பத்திரிக்கை நிருபராக வேலை பார்த்த காரணத்தினாலோ என்னவோ எனக்கு மனிதர்களைப் பற்றி அறியும் ஆர்வம் சற்றுக் கூடுதலாகவே காணப்பட்டது. நான் தொடர்புப் பரிமாற்றம் செய்த நண்பர்களில் ஆர்தர் ஃபோர்டைப் போல வேறு எவரும் எனது கேள்விகளுக்குரிய பதில்களைக் கண்டறிந்து சொல்லவில்லை. அதாவது பிரபலமானவர்கள், பழைய நண்பர்கள், மற்றும் ஆவியாராய்ச்சித் துறையில் ஈடுபட்டவர்கள் போன்றோரைப் பற்றிய எனது கேள்விகளுக்குரிய பதில்களை வேறு எவரும் அவரைப் போல கடமையுணர்ச்சியுடன் கண்டறிந்து சொல்லவில்லை. அவர் எனது தந்தையாரினதும் ஏனைய எனது உறவினர்களினதும் செயற்பாடுகளைப் பற்றி எனக்கு எடுத்துரைத்தார். ஆனால் அதேநேரத்தில் பொதுவாக அரசியல், திரையரங்கு, ஆவியாராய்ச்சி போன்ற துறைகளில் பிரபலமானவர்களைப் பற்றியும் அவர் பல விபரங்களைத் தந்தார். இவற்றுள் பெரும்பாலானவை இப்புத்தகத்துக்காக நான் கேட்ட கேள்விகளுக்கு அவரளித்த பதில்களேயன்றி அவர் தன்னையொரு கிசுகிசுப் பத்திரிகையாளராக எண்ணியதாலல்ல என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நான் எப்போதாவது பிரமுகர்களின் பட்டியலைத் தட்டச்சு இயந்திரத்தில் டைப் செய்கையில் அதற்கு, "நாம் தகவல்களைத் தேடிச் சேகரித்த பின் உனக்கு அறியத்தருவோம்" என்பதே அவரது பதிலாக இருக்குமாகையால் இப்பெயர்களெல்லாம் பெரும்பாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தான் வெளிவந்தன. நான் தான் அவற்றை வகைப்படுத்தி ஒழுங்கமைத்தேன்.
மேமாதத்தின் தொடக்கத்தில் அவர், "மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் (Martin Luther King, Jr) இப்போ இங்கே இல்லை. சிறிதுகாலத்துக்கு அவர் இங்கே வரமாட்டார். ஏனெனில் யுத்தத்திலே இறப்பைத்தழுவி இங்கே புதிதாக வந்துள்ள ஆத்மாக்களுக்கு அவர் உதவி செய்கிறார். ஆனால் சிற்சில சமயங்களில் அவரைப் பார்க்க இயலுமாகவுள்ளது. அவர் வியட்நாம் போன்ற இடங்களிலேயுள்ள போர்முனைகளிலேயே கூடுதல் காலத்தைக் கழிக்கிறார். அவருக்குப் பழியுணர்ச்சி ஒன்றும் கிடையாது. தன்னுடைய பூவுலகவாழ்வின் சுடரை அணைத்த மனிதனைப் பற்றிக் கவலைப்பட நேரமில்லாமல் அவர் தனது மக்களின் நலன்களைப் பற்றியும் யுத்தத்தில் அவர்களின் உரிமைகளைப் பற்றியும் கவனிப்பதில் மும்முரமாக இருக்கிறார்.
"வின்ஸ்டன் சர்ச்சில் (Winston Churchill) பெரும்பாலான சமயங்களில் பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் (Franklin Roosevelt) உடன் சம்பாஷணைகளில் ஈடுபடுகிறார். இந்தப் பக்கத்திலே அவர்களிடையே கூடுதல் நெருக்கம் காணப்படுகிறது. உண்மையிலேயே பல விஷயங்களில் இருவருக்கும் தத்தம் நாட்டைச் சேர்ந்தவர்களிலும் பார்க்கக் கூடுதல் ஒற்றுமை காணப்படுகிறது. ரூஸ்வெல்ட் பிரித்தானிய அரசியல் நிலைமைகளால் கூடுதலாகக் கவரப்படுகிறார். அமெரிக்காவின் கலவரங்களில் வினி (Winnie) அக்கறை காட்டுகிறார். இருவருமே சமூகசேவைகளில் சுறுசுறுப்பான ஆர்வம் காட்டுகின்றனர். அத்துடன் வளர்ப்புப் பிராணிகள் சம்பந்தமாகத் தாங்கள் தீட்டிய திட்டங்களுக்கு நிதியுதவிகள் செய்யும்படி அறப்பணிகள் செய்பவர்களையும் நிறுவனங்களையும் தூண்டுகிறார்கள். யாருடைய திட்டத்துக்குக் கூடுதல் நிதியுதவி கிடைக்கிறது என்பதில் கிட்டத்தட்ட இருவருக்கும் ஒரு சிறு போட்டியே காணப்படுகிறது. திருமதி ரூஸ்வெல்ட்டை அதிகம் இங்கே காணக்கிடைப்பதில்லை. அவர் தென் ஆப்பிரிக்காவிலும் வேறு இடங்களிலும் ஏற்பட்டிருக்கும் நிலைமைகளில் தீவிரமாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். அங்கேயுள்ள கறுப்பு இனமக்களின் நோக்கங்களுக்கு ஆதரவாக அவர்களுக்கு சர்வதேச அரங்கில் நீதி கிடைக்கச்செய்ய முயற்சிக்கிறார். அவரது விருப்பங்களெல்லாம் பரந்து விரிந்து இருப்பதால், சில சமயங்களிலேயே இங்கே காணப்படுகிறார். ப்ராங்ளினையோ வேறு உறவினரையோ நண்பரையோ பார்வையிட்டுவிட்டு உடனே சென்றுவிடுவார். எல்லா இடத்திற்கும் சுற்றிச் சென்று உலகில் ஒழுங்குமுறையை நிலைநாட்டி, ஒடுக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்காகப் போராடுகிறார். அவர் ஒரு உன்னதமான ஆத்மா. ஆனால் சில சமயங்களில் சக்தியை விரயமாக்குகிறார் என்றே தோன்றுகிறது. ஏனெனில் சில பிரச்சனைகளை மனிதரிலும் பார்க்க இறைவனிடம் விடுபவர்களிடம் இருக்கும் சாந்தமும், அமைதியும் இவரிடம் சற்றுக் குறைந்தே காணப்படுகிறது.
மிக அண்மையில் வந்தவரான விட்னி யங் (Whitney Young) ஐப்பற்றி என்ன சொல்கிறாரென்று பார்ப்போம். "அவர் இப்போதே பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்கிறார். இறப்புக்கும் விழிப்புக்குமிடையே ஒரு கணமேனும் விரயம் செய்யவில்லை. அவர் ஒரு மிகச்சிறந்த ஆத்மா. அவர் நீதியும் நேர்மையும் வெற்றி பெறவேண்டும் என்று மனப்பூர்வமாக விரும்பினார். இங்கு வந்ததன் பிற்பாடு எந்த ஒரு பிரச்சனைக்கும் இரு பக்கங்கள் மட்டுமல்ல வேறு பக்கங்களும் இருக்கின்றன என்பதை அவர் உணர்ந்து கொண்டார். அவர்  இடையில் நின்று மத்தியஸ்தம் செய்பவர்களுக்கும் மற்றும் பேரம் பேசுபவர்களுக்கும் இவற்றை உணர்த்தி அவர்களின் கண்களைத் திறந்து வைக்க நினைக்கிறார். அதாவது ஆம், இல்லை அல்லது அநேகமாக என்று மட்டுமில்லாமல் எல்லோரும் ஒற்றுமையாக எப்படி ஒரு விஷயத்தைச் செய்து முடிப்பது என்று ஆராயவேண்டும்".
இன்னொருநாள், அவர் ஆகாயப்பதிவேடுகளைப் (akashic records) பார்த்திருக்கக் கூடும், பின்வருமாறு எழுதினார்: இப்போ நாம் ஜோர்ஜ் வாஷிங்டன் கார்வரைப் (George Washington Carver) பற்றிப் பார்ப்போம். ஒரு கறுப்பின மனிதர். நிலக்கடலையால் பலவிதமான அனுகூலங்களைக் காட்டினார். அவர் நீண்ட காலம் இங்கே (நாமிருக்கும் இடத்தில்) இருந்தார். திரையின் இருபுறங்களிலும் உள்ள விஞ்ஞானிகளுடன் சேர்ந்து, தெற்கத்திய பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக ஏனைய உற்பத்திப் பொருட்களாகிய ரேயான், டாக்ரோன், ஜவுளிகள் போன்றவற்றின் தரங்களை உயர்த்த வேலை செய்தார். ஆனால் மிகச்சமீபத்தில் மீண்டும் அமெரிக்காவில் ஹார்லெம் (Harlem) என்ற இடத்தில் ஒரு கறுப்பினச் சிறுவனாகப் பிறந்திருக்கிறார். அவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பாதுகாக்குமுகமாக இப்போ அவர் யாரென்று நாம் சொல்லமாட்டோம். அவர் ஒரு சுவாரஸ்யமான பேர்வழியாக இருப்பார். அவர் கார்வராக (Carver) வருவதற்குமுன் ஒரு வெள்ளையின மனிதராகப் பிறந்திருந்தார். அப்பொழுது அவர் அடிமைகளைக் கொடுமைப்படுத்தி இருந்தமையால், தனது கரங்களினால் பாதிப்படைந்த இனத்துக்குப் பரிகாரம் செய்யுமுகமாகத் தானாகவே முன்வந்து கார்வராக வந்திருந்தார். வெள்ளையின மனிதனாக ஏற்கனவே மிகவும் முன்னேறியிருந்தமையால், அந்த ஆளுமையையும், விஞ்ஞான அறிவையும் அவர் கார்வராக வருகையில் கூடக்கொண்டு வந்து கறுப்பின மக்களுக்கு உதவினார்.
"இம்முறை கார்வராக வந்து நிறைய விடயங்களைச் சாதித்ததால், அவர் ஏறக்குறைய எந்த இனத்திலும், எவ்வகை உடலையும் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பெறுகிறார். அப்படியிருக்க அவர் ஹார்லம் (Harlem) எனும் இடத்தைச் சேர்ந்த கறுப்பினத்தை தானாகவே தேர்ந்தெடுத்தார். ஏனெனில் அங்கிருந்துதான் கடைசியில் கறுப்பு இனத்துக்கு விமோசனம் வரவேண்டுமென எதிர்பார்க்கிறார். உலகநேரப்படி அவருக்கு இப்போ கிட்டத்தட்டப் பதின்மூன்று வயதிருக்கும். இப்பவே அவர் பெரிய பெரிய சாதனைகள் சாதிப்பதற்குரிய அறிகுறிகள் தென்படுகின்றன. அவரது குடும்பம் அமெரிக்க அரசியலில் மும்முரமாக ஈடுபடுகிறார்கள். இவ்வளவு தான் இப்போ என்னால் சொல்லமுடியும்.
கடந்த காலத்திலிருந்த பிரபலமான அரசியல் தலைவர்களைப் பற்றி நான் கேட்டேன். அதற்கு அவர் பின்வருமாறு எழுதினர்: இப்போ ஆபிரகாம் லிங்கனைப் (Abraham Lincoln) பற்றிப் பார்ப்போம். அவர் ஒரு பிரகாசமான ஆத்மா. எல்லா உயிர்களிடத்தும் கருணை காட்டும் மென்மையான ஆத்மா. இங்கே நீண்ட காலம் தங்கியிருந்த பின் அவர் மீண்டும் உடலெடுத்துள்ளார். இப்போ நியூ ஓர்லீன்ஸ் (New Orleans) இல் வாழ்கிறார். அங்கே அவர் தெற்கத்திய இனப்பிரச்சனையின் எல்லா விதமான முகங்களையும் எல்லா விதமான வெளிப்பாடுகளுடனும் ஆராய்ந்து கொண்டிருக்கிறார். அவர் இப்போ வளர்ந்து விட்டார். அவர் இதற்குச் சரியான தீர்வு கிடைக்க பல்கலைக்கழகங்களுடனும், அறக்கட்டளை நிறுவனங்களுடனும் சேர்ந்து பணியாற்றுகிறார்.
ஜார்ஜ் வாஷிங்டன் (George Washington)? அவர் சிறிதுகாலம் கண்ணில் தென்பட மாட்டார். ஏனெனில் சமீபத்தில் வியட்நாமில் ஒரு போராளியாக வாழ்ந்து முடித்தபின் இப்போ ஓய்வெடுக்கிறார். அவரது இறப்பானது அவ்வளவு அதிர்ச்சி நிறைந்ததாகையால், சிறிது காலத்துக்கு அவர் உறக்கம் கொள்வார். ஒரேயொரு விஷயத்தைத் தவிர அவரது கடைசிப் பிறப்பின் விபரங்களை நாம் இதற்கு மேல் சொல்வதற்கு விரும்பவில்லை. அதாவது அவர் ஒரு படைப்பிரிவைத் தைரியத்துடன், எதிரிகளின் படைவரிசைகளின் பின்னே வழிநடத்திச் சென்றபோது கைப்பற்றப்பட்டுவிட்டார்.
"சார்லஸ் த கால் (Charles de Gaulle) ஐரோப்பாவினதும் மத்தியகிழக்கு நாடுகளினதும் வளர்ச்சிகளை ஆவலுடன் கவனிக்கிறார். அங்கே பழக்கப்பட்டது போல இங்கே வந்ததும் வராததுமாக அவர் தனது கட்டுப்பாட்டைப் பெற்றுக்கொண்டார். அழகிய பிரான்ஸ் (La Belle France) என அவர் அழைக்கும் பிரான்ஸ் நாட்டுக்கு ஏதாவது துயர் வருமெனில் எப்பொழுதும் தீக்குதிரை போல நிற்பார். அவர் போர்த்தந்திரங்களிலும் பார்க்க சமாதான முறைகளைப் பற்றியே அதிகம் சிந்திக்கிறார். மத்தியகிழக்கின் நுணுக்கமான நிலைமைகளுக்கு ஒரு தீர்வைக்காணும் அதிகாரமுள்ள எந்தவொரு சமாதானத் தூதுக்குழுவுடனும் வேலை செய்ய ஆவலாயிருக்கிறார்".
இயல்பாகவே எனது சிந்தனைகள் சோவியத்யூனியனை நோக்கிப் போயின. அதற்கு ஆர்தர் பின்வருமாறு எழுதினர்: "ஸ்டாலின் மீண்டும் உடலெடுத்து விட்டார். ஆனால் அவர் ரஷ்யாவில் பிறக்கவில்லை. வேறொரு பிரச்சனையுள்ள இடத்துக்குப் போயிருக்கிறார். அங்கே அவர் ஒரு சர்வவல்லமை பொருந்திய அரசாங்கத்தை நிறுவ நினைக்கிறார். ஏனெனில் இந்தப்பக்கத்தில் அவர் பெரிதாக ஒன்றும் கற்கவில்லை. உறவுகளையோ தொடர்புகளையோ தனக்கு அனுகூலமாக மாற்றி அதனால் நன்மையடையும் தந்திரத்தைப் பரப்ப இன்னும் எண்ணுகிறார். உண்மையில் அவர் திரும்ப வருவதற்குத் தயாரில்லை. கடைசி நிமிடத்தில் இன்னொரு ஆத்மா விலகியதால் அவர் வரவேண்டியதாகி விட்டது. அதன் காரணமாக ஸ்டாலின் ரொடீஷியாவில் (Rhodesia) புதிதாகப் பிறந்த குழந்தையின் உடலை எடுத்துள்ளார். நீ அறிய விரும்பியதால் இதனைச் சொல்கிறேன். மன்னித்துவிடு.
கார்ல் மாக்ஸ் (Karl Marx) இன்னும் இங்கேதான் இருக்கிறார். ஸ்டாலினுக்கு அவரால் எந்தவிதமான பலனுமில்லை. இருவருமே ஒரே விதமாக ஒருவரையொருவர் தவிர்த்துக் கொண்டனர். நானறிந்தவரையில் இங்கே இருவரும் ஒருவிதமான கருத்துப் பரிமாற்றமும் செய்து கொள்ளவில்லை. தனது உன்னதமான கனவாகிய மனிதசமுதாயத்தின் சமத்துவக் கொள்கையை ஸ்டாலின் தலைகீழாகக் கவிழ்த்து விட்டாரென மாக்ஸ் எண்ணுகிறார். இப்போ அவர் முற்றுமுழுதான மாக்ஸிச இயக்கத்தைச் சரியாக விளங்கிக் கொள்வதற்கு அறிவாளிகளுக்கு உதவமுனைகிறார். மனித மனங்களிலே முன்னேற்றமான பாதிப்புகளை ஏற்படுத்தியவர் என்றுதான் தான் நினைவு கொள்ளப்பட வேண்டுமென விரும்புகிறார். ஆனால் அது தவறான எண்ணமாகும். பூவுலகில் எமக்குக் கிடைக்கும் மதிப்பெண்களைப் பற்றிக் கவலைப்படக் கூடாது. மக்களுக்கு என்ன செய்தோமென்பதே கருத்தில் கொள்ளப்படும். மனித இனத்தின் முன்னேற்றப்பாதைக்கு மாக்ஸ் உண்மையில் உதவினாரா இல்லையா என்பதை நான் சொல்லவியலாது".
தாமஸ் ஜெஃபர்சன் (Thomas Jefferson)? "ஆம் அவர் வேர்ஜீனியாவில் (Virginia) வசிக்கிறார். இன்னும் இளம்பருவத்திலேயே இருக்கிறார். அவர் பெரிதாக ஒன்றும் சாதிக்கவில்லை. ஜெஃபர்சனைப்போல இப்படி வளர்ச்சியின் உச்சக்கட்டத்தையடைந்த ஆத்மாக்களுக்கு நேர்வதைப்போல அவருக்கும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது".
"நீ கேட்ட இரு ராணிகளும் (queens) நீண்டகாலமாக இங்கே இல்லை. ஆனால் சந்தேகமின்றி இங்கிலாந்திலும், ஸ்காட்லாந்திலும் (Scotland) அவர்களின் ஆட்சிக்காலங்களின் பின்னர் பல தடவைகள் பிறப்பெடுத்து விட்டனர்". நான் எலிசபெத்தையும் (1 ), ஸ்காட்லாந்தின் அரசியாகிய மேரியைப் பற்றியும் கேட்ட கேள்விகளுக்கே மேலுள்ளவாறு பதிலுறுத்தார். அவர் ஆகாயப் பதிவேடுகளில் (akashic records) இவர்களின் கோப்புகளைப் பார்ப்பது அப்படியொன்றும் முக்கியமானதாக நினைக்கவில்லைப் போலத் தெரிந்தது.
அண்மையில் இறப்பென்னும் திரையைக் கடந்த தாமஸ் ஈ டூவி (Thomas E. Dewey) ஐப் பற்றி நான் கேட்டேன். அதற்கு ஃபோர்ட் பின்வருமாறு பதிலிறுத்தார்: அவர் ஒரு மிகச்சிறந்த மனிதர். அவர் இங்கு வந்ததும் விழித்துக் கொண்டார். வந்ததும் வராததுமாக அவர் தனது ஆராய்ச்சியைத் தொடர ஆயத்தமாகி விட்டார். அவர் செயல்திறன் மிக்கவர். பழகுவதற்கு சந்தோஷமான மனிதர். டூவி (Dewey) ஐப் போன்ற மனிதர்களைப் பற்றி ஐயப்பாடுகள் தேவையில்லை. உண்மையில் எதையும் முயன்று பார்க்கக் கூடியவர். அவர் கற்று முன்னேறுவதில் ஆர்வமாக உள்ளார். பாப் ராஃப்ட் (Bob Taft), அதாவது செனட்டர் ராபர்ட் ஏ. (Senator Robert A.) இன்னும் இங்கே தான் இருக்கிறார். அண்மைக் காலங்களில் இவரும் டூவியும் (Dewey) பலமுறை எண்ணப்பரிமாற்றங்கள் செய்வதைக் கண்டிருக்கிறேன். இந்தக் காலகட்டத்தில் தங்களது நாட்டில் நடக்கும் நடப்புகள் இருவருக்கும் மகிழ்ச்சியாக இல்லை. ஆனால், பூவுலகிலிருக்கும் சில கோபதாபிகளின் நெஞ்சங்களில் தொலைநோக்குச் சிந்தனைகளை ஊடுருவச் செய்வதைத் தவிர அவ்விஷயத்தில் ஆத்மரூபத்தில் இருக்கும் எம்மால் செய்யக்கூடியது பெரிதாக ஒன்றுமில்லை. ராஃப்ட் (Taft) இங்கே கற்பிக்கிறார். டூவி (Dewey) நிதி சம்பந்தமான கருத்தரங்கொன்றில், பங்குச்சந்தை முதலீட்டாளர்களில் (stock market investors) செல்வாக்கை உண்டாக்குவதன் மூலம், பொருளாதாரத்தைக் கூடிய விரைவில் மறுபடியும் சீர்திருத்த முயல்கிறார். அங்கே அவரது வேலை முடிந்ததும் வேறு என்ன செய்வதென முடிவு செய்வார்".
திரையுலக நட்சத்திரங்களின் முன்னேற்றங்களைப் பற்றி நான் முன்னம் ஒருதரம் வேண்டுகோள் விடுத்திருந்தேன். அதற்கு ஆர்தர் இப்பொழுது பின்வருமாறு எழுதினார்: "ஆம் மர்லின் மன்றோ (Marilyn Monroe) சிறிது சிறிதாகத் தனது இழந்த வலிமையைப் பெற்றுக்கொண்டிருக்கிறார். மருந்துகளாலும், தற்கொலையாலும் ஏற்பட்ட செயலிழந்த நிலை சிறிதுகாலம் நீடித்திருந்தது. அவர் எப்படியும் கடைசியில் தேறிவிடுவார். இப்பக்கத்தில் அவருக்கு நண்பர்களும், ரசிகர்களும் உதவுவதற்கு இருக்கிறார்கள். இவ்வளவு நேர்த்தியான அபூர்வமான அழகுடைய உடலுள் இருந்த உயிரைத் தான் போக்கியதை எண்ணிப் பச்சாதாபப்படுகிறார். இதற்கு முந்தைய ஒரு பிறவியில் அவர் ஒரு உயர்ந்த பெண்மணியாக இருந்திருக்கிறார். அதனால் தான் இப்பிறவியில் இப்படியொரு சாக்கடை வாழ்வை வாழ்வது (என்னதான் தானே தேர்ந்தெடுத்ததாய் இருந்தாலும்) அவருக்கு இரட்டிப்புக் கஷ்டமாக இருந்தது. அவர் அடக்கம், கருணை இரண்டையும் கற்பதற்காகத்தான் இப்பிறவியில் இப்படி வந்திருந்தார். அவர் அதை ஓரளவு நிறைவேற்றி விட்டார். அடுத்தமுறை அவர் ஆசாபாசங்களுக்கு இடம் கொடுக்காவிட்டால், தனது இலக்காகிய முழுமையான புனிதத்தன்மையை அடையக்கூடும்.
க்ளாக் கேபில் (Clark Gable) அங்கிருக்கையில் பாராட்டப்பட்டது போலவே இங்கும் பாராட்டப்படுகிறார். அவர் மிகவும் நல்லகாரியங்கள் செய்யக்கூடிய ஆற்றல் வாய்ந்த, ஆண்மை நிறைந்த ஆத்மா. அவரின் உதவிக்கரம் எங்கும் நீளும். எனவே அவரது முன்னேற்றத்தைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. அவர் மீண்டும் சினிமாத் தொழில் வளம் பெறும் வரை வேலையின்றி இருக்கும் நடிகர்களுக்கு உழைப்பதற்கு வழிகள் தேட உதவுகிறார். கூடிய விரைவில் அந்தத் தொழில் துறை வளம் பெறும். ஒழுக்கநெறிகளை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வருவது ஒன்று தான் செய்யக்கூடியது. அப்படிச் செய்தால் மீண்டும் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும்.
"ரூடோல்ஃப் வலண்டினோ (Rudolph Valentino) மீண்டும் உடலெடுத்துப் பல வருடங்களாகி விட்டன. அவர் திருமணம் செய்து கொண்டு பாரீஸ் நகரில் மகிழ்ச்சியாக வசிக்கிறார்".
திடீரென எனது பழைய நண்பன் அல்பன் W. பார்க்லியை (Alben W. Barkley) நான் மறந்து விட்டது நினைவுக்கு வந்தது. எமதன்புக்குரிய 'வீப்' (Veep). அவரது பெயரை நான் குறிப்பிட்டதும் ஃபோர்ட் ஒரு கணமும் தாமதியாமல் அவரைப் பற்றித் தெரிவித்தார் பின்வருமாறு: "அவர் வண்ண இறக்கைகளுடைய ஜேப்பறவை போல (Jaybird) மகிழ்ச்சியாக உள்ளார். இளமையாகக் களிப்பாக, அங்கே இருந்ததைப் போலவே மதிப்புடன் இங்கும் காணப்படுகிறார். ஜேனும் (Jane Hadley Barkley) அவரது முதல் மனைவியும் சிறந்த நண்பர்கள். அனைவரும் ஒன்றாக மகிழ்ச்சியாகக் கல்வி கற்கிறார்கள். அல்பன் ஜேனைச் சந்தித்தமை முதல் மனைவிக்கு நல்ல சந்தோஷம். அவர்கள் சந்தோஷமான மூவராகும். வீப் (Veep) சில வேளைகளில் செனட் சபையில் அதிகாரம் செலுத்துகிறார். ஜனாதிபதித் தேர்தலில் தான் நின்றிருக்கலாமென இன்னும் எண்ணுகிறார். 'எப்போதுமே எனக்கு வயதாவதில்லை' என நமுட்டுச் சிரிப்புடன் சொல்கிறார். அது எப்படிப்பட்டதொரு நினைவலைகளை உண்டாக்குகிறது! சிக்காகோ நகரில் 1952 இல் நடந்த வேட்பாளரை நியமிக்கும் மாநாட்டில் அவர் உண்மையாக ஆதரவளித்த தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் (labor leaders) அவருக்கு வயதாகி விட்டதெனச் சொல்லி அவர் ஜனாதிபதித் தேர்தலில் நிற்பதை நிராகரித்து விட்டதனால் ஏமாற்றமடைந்த 'வீப்'!
அமானுஷ்யமான விடயங்களில் எனக்கிருந்த ஆர்வத்தினால், ஆரம்ப காலங்களில் மக்களின் ஏளனத்தைப் பொருட்படுத்தாமல் தங்களின் மதிப்பையும் மரியாதையையும் பணயம் வைத்து மறுபிறவி மற்றும் இறந்தவர்களுக்கும் உயிர் வாழ்பவர்களுக்கும் இடையேயான தொடர்பு போன்றவற்றில் தாங்கள் கொண்ட நம்பிக்கைகளை வலியுறுத்திய தைரியசாலிகளான ஆத்மாக்களின் வளர்ச்சிகளைப் பற்றி அறிவதில் ஆர்வமாக இருந்தேன். ஏப்ரல் மாதத்தொடக்கத்தில் ஃபோர்ட் பின்வருமாறு எழுதினார்: "இன்று நீ கேட்டபடி எட்கர் கேசியைப் (Edgar Cayce) பற்றிப் பார்ப்போம். அவர் இங்கே வேறொரு தளத்தில் இருக்கிறார். மனிதனுள் இருக்கும் உள்ளுணர்வு எனும் புரிதலை எப்படி உபயோகிப்பதென ஏனையோருக்கு வழிகாட்டுவதில் அவர் முழுமூச்சாக ஈடுபடுகிறார். அமானுஷ்யத் துறைகளைப் பற்றிய நம்பகமற்ற தன்மையைப் போக்குவதில் அவர் ஓரளவு வெற்றி கண்டிருக்கிறார். அவருடன் யாரும் இப்போ நேரடியாகத் தொடர்பு கொள்ள இயலாது. இன்னும் சில நாட்களில் அவர் மீண்டும் பூவுலகுக்குத் திரும்புவார். அப்போது அவர் விரும்பியவாறு பிறப்பிறப்புச் சுழற்சியை நிறைவு செய்துகொள்ளலாம். அதாவது பூவுலகின் இன்னல்களை எதிர்கொள்ள வேண்டிய தேவை இல்லாத அளவு அவர் பூரணநிலையை அடையலாம். அவர் இங்கு வருகையில் மிகவும் களைப்படைந்து காணப்பட்டார். எனவே சற்று இளைப்பாறினார். ஆனால் இப்போது ஏ. ஆர். ஈ. எனப்படும் அறிவொளி ஆய்வுமைய (A.R.E Movement - Association for Research and Enlightenment) இயக்கத்தில் தீவிரமாகச் செயற்பாட்டிலுள்ளார். தங்கள் உணர்வுத் தளங்களில் அவரை அனுமதிக்க இயலுமாக உள்ளவர்களுடன் சேர்ந்து அவர் பணியாற்றுகிறார். அவர் ஒரு சிறந்த மனிதர். அத்துடன் மிக உயர்ந்த ஆத்மா. பூவுலகிலும் இங்கும் மிகவும் மதிக்கப்படுபவர். பூவுலகில் அவரது மனைவியாக இருந்த கெட்ரூட்டும் (Gertrude) அவருடன் சேர்ந்து பணி புரிகிறார். அவர்களிருவரும் ஒற்றுமையாக இருவரும் ஒருவர் போலவே வேலை செய்கிறார்கள். நான் அவரைச் சந்திக்கவில்லை. ஆனால் அவரது கம்பீரத்தை நேரே அனுபவித்தவர்கள் மூலம் கிடைத்த தகவல்கள் இவை. கேசி அவர்கள் ஆவியூடகங்களின் மூலம் (mediums) பேசமாட்டாரென அவரது மூத்தபுதல்வன் ஹ்யூ லின் (Hugh Lynn) எண்ணியது சரியே. ஆனால் ஆத்மீக விழிப்புணர்வு வேண்டுமென எவரேனும் விரும்பினால் அவர்களுக்கு உதவக் காத்திருக்கிறார்".
ஃபோர்ட் அவர்கள் தனது அமானுஷ்யத் திறமைகளை (psychic powers) மேலும் மெருகூட்டுவதற்குப் பிரபல யோகியான பரமஹம்ச யோகானந்தாவிடம் சிறிது நாட்கள் பயின்றிருந்தார். ஃபோர்ட் மேலுலகில் அவரைச் சந்தித்தாரா என நான் கேட்டதற்கு அவர் பின்வருமாறு பதிலளித்தார்: "இல்லை. ஏனெனில் அந்த அற்புத மஹா குரு ஒரு நுண்ணிய பரிமாணத்தில் உள்ளார். அவர் மிகத் தூய்மையானதொரு சூழ்நிலையில் மிகவும் உயர்ந்ததொரு பணியை மேற்கொள்வதாகச் சொல்லப்படுகிறது. அவர் நற்குணங்களின் வடிவமாகும். அதேயளவு உயர்வான நிலையையடைந்த ஏனையவர்களிலும் பார்க்க இவரால் பெரிய பணிகளைத் தொடர்ந்து நடத்த இயலும். அதற்குக் காரணம் அமானுஷ்ய விடயங்களில் அவருக்கு இருக்கும் அதிக பரீச்சயமும் கடந்த பிறவியை எடுப்பதற்கு முன் அத்துறையில் அவர் புரிந்த அளப்பரிய பணியுமாகும். குரு என்ற சொல்லின் முழுமையான அர்த்தத்துக்கு அவர் எடுத்துக்காட்டாவார்." 
முதன் முதலில் அமானுஷ்ய விஷயங்களுக்கு நான் அறிமுகமானது ஸ்டுவேர்ட் எட்வேர்ட் வைட் (Stewart Edward White) எழுதிய 'தடைகளற்ற பிரபஞ்சம்' (The Unobstructed Universe) எனும் நூலின் மூலமேயாகும். அப்புத்தகத்தில் அவர் சமீபத்தில் இறந்த தனது மனைவி பெற்றிக்கும் (Betty) ஜோன் (Joan) எனும் ஒரு பெண்ணுக்கும் இடையே நடந்த அற்புதமான மேலுலகத் தொடர்புகளைப் பற்றி விபரித்திருந்தார். ஜோன் அண்ட் டாபி (Joan and Darby) என்ற சொற்றொடர் மூலம் புகழ் பெற்ற ஜோன் என்ற பெண் 1920 ஆம் ஆண்டில் 'எமது கண்ணுக்குத் தெரியாத விருந்தினர்' (Our Unseen Guest) என்ற புத்தகத்துக்கு இணை ஆசிரியராகப் பணியாற்றியிருந்தார். அப்போ அவர் தான் யாரென்ற உண்மையை வெளி விடவில்லை. ஜோன் யாரென்ற உண்மையைச் சில வருடங்களுக்கு முன் அரைமயக்க நிலையிலிருந்த ஃபோர்டின் மூலம் பேசிய ஃப்ளெச்சர் (Fletcher) தெரிவித்திருந்தார். ஜோனை ருத் ஃபின்லி (Ruth Finley) என ஃப்ளெச்சர் அடையாளம் காட்டும் வரை அது ரகசியமாகவே இருந்தது. பெப்ரவரி மாதத்தின் நடுப்பகுதியில் ஃபோர்ட் எனது டைப்ரைட்டரில் பின்வருமாறு எழுதினார்: "நான் இப்பொழுது இருக்கும் தளத்தில் பெற்றி வைட் (Betty White) சிறிது காலமே இருக்க வேண்டியிருந்தது. அவர் விரைவாக மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது தளமென்று மேல் நோக்கிச் சென்று விட்டார். அவர் பூவுலகில் தனக்குரிய பணிகளை நன்றாக நிறைவேற்றி விட்டார். சித்தாந்த அறிவுகளில் அவருக்கிருந்த மிகுந்த ஆர்வத்தினால் இப் பக்கத்திலிருக்கும் துரிதமான வேகத்தைக் கடைப்பிடிக்க அவரால் முடிந்தது. ருத் ஃபின்லியும் இந்த நிலையில் பார்க்க மிகவும் முன்னேற்றம் அடைந்துள்ளார். அதே போல அவர்களின் கணவன்மார்களும் முன்னேறியுள்ளனர். அவர்களும் இவர்களின் பூவுலகப் பணிகளுக்கு நல்ல ஒத்துழைப்பு வழங்கியதனால் முன்னேற இயலுமாக உள்ளனர்".
இரு மாதங்களின் பின், பூவுலகில் வசிக்கையில் ஆத்மீக விஷயங்களில் மனதைச் செலுத்துபவர்கள் மேலுலகில் விரைவாக முன்னேற முடியும் என்பதை விளக்குகையில், திடீரென, "பெற்றி வைற் அப்படிப்பட்ட ஒரு ஆத்மா. அவர் பூவுலகில் வசிக்கையிலேயே இவ்வுலகுக்குப் பலமுறை வருகை தந்துள்ளார். எனவே இங்கே எப்படி இருக்குமென அவருக்கு முதலிலேயே தெரியும். அவரது கணவர் இங்கே வந்ததும் இருவருமாகச் சேர்ந்து உயர்வான தளமொன்றுக்கு முன்னேறிச் சென்றிருப்பதால் இனி அவர் ஆவியுலகத் தொடர்பு கொள்பவர்களுடன் (mediums) பேசமாட்டார். உள்ளும் வெளியும் உள்ள அண்டவெளிகளைப் பற்றிய ஆராய்ச்சியில் (exploration of inner and outer space) ஈடுபடும் விஞ்ஞானிகளுக்கு உதவுவதற்கு சிறந்த நிபுணத்துவம் வாய்ந்த அறிவாளிகள் தேவைப்படுவதால் அவர்களிருவரும் அங்கே சென்றிருக்கிறார்கள். உயர்வான விஷயங்களில் நிபுணத்துவம் பெற்றிருப்பதால், இன்னும் அவர்கள் பூரணத்துவம் அடையா விட்டாலும் கூட அவர்களைச் சுற்றி ஒரு பிரகாசமான ஒளிவீச்சுக் காணப்படுகிறது. அவர்கள் வெவ்வேறு தளங்களில் தங்கள் பணிகளை நிறைவேற்றச் செல்கையில் நான் அவர்களைக்  கண்டிருக்கிறேன்" என உரைத்தார்.
ஃபோர்ட் பெற்றி மற்றும் ஸ்டூவர்ட் எட்வேட் வைற்றை இப்போ காண்பதால் அவரும் விரைவாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறார் என்பது தெளிவு. ஃபோர்டைப் பற்றி லிலி (Lily) சொன்ன தகவல்படி "அவர் தனது கடந்த பிறவி முழுதும் இப்பக்கத்துக்கு வருபவர்களுக்குச் செய்த உதவியின் பலனாகப் புதிதாக இங்கு வருபவர்களுக்கு ஆரம்பக்கட்டங்களில் அவர் உதவக்கூடியதாக உள்ளார். அத்துடன் அடுத்த கட்டத்துக்குச் செல்ல ஆயத்தமாகவும் ஆவலாகவும் கூட உள்ளார்."
ஆர்தர் ஜோனைப் (Joan) பற்றி (அதாவது ருத் ஃபின்லியைப் பற்றி) மீண்டும் குறிப்பிட்டார். அதாவது, "அலைநீளங்களிலும், அதிர்வுகளிலுமுள்ள வேற்றுமைகளால் அவர் இப்போ உங்களுடன் தொடர்பு கொள்ள இயலவில்லை. ஆனால் இப்புத்தகத்திற்காகப் பிரத்தியேகமாக உனக்குச் சில தகவல்களைத் தெரிவிப்பதற்காக அவரை அணுகிய போது அவர் எனக்கு மிகவும் உதவினார். அவர் இந்த நிலையிலேயே கூடுதலாக இருக்கிறார். அதுவும் அவரின் விருப்பத்தின் பேரிலேயே ஏனெனில் அவர் செய்யும் பணிகளுக்கு அவர் இன்னும் பூவுலகில் வசித்துக் கொண்டிருப்பவர்கள் பலருடன் தொடர்பு கொள்ள வேண்டியுள்ளது. அமானுஷ்ய விஷயங்களைப் பற்றிய உண்மைகளை நீ புத்தகங்களின் மூலம் வெளிக் கொணர எடுக்கும் முயற்சிகளை அவர் பாராட்டுகிறார். பூவுலகில் இருக்கையில் தான் யாரென்ற உண்மையைத் தைரியமாக உலகுக்குச் சொல்லாததை எண்ணி வருந்துவதாகவும் சொல்கிறார். இறைவன் இருக்கிறான், மற்றும் நாம் என்றுமே அழிவதில்லை போன்ற உண்மைகளை நம்பிக்கைகள் ஏதும் அற்றவர்களுக்குச் சொல்லாததை எண்ணியும் வருந்துகிறார்.
ஆர்தர் கோனான் டாயில் (Arthur Conan Doyle) மற்றும் ஆலிவர் லாட்ஜ் (Oliver Lodge) ஆகியோரை மேலுலகில் ஃபோர்ட் சந்தித்தாரா என நான் கேட்டதற்குப் பின்வருமாறு அவர் பதிலளித்தார்: "அவர்கள் இங்கே தான் இன்னமும் உள்ளார்கள். உங்கள் பாஷையில் சொல்வதானால் 'நாம் பயனுள்ள பல விஷயங்களைப் பற்றி சம்பாஷிப்போம்'. அவர்கள் மிகவும் வளர்ச்சி அடைந்துள்ளனர். தாங்கள் பிறக்கும் சூழ்நிலைகளைத் தாங்களே தெரிவு செய்து கொண்டு பூவுலகில் மீண்டும் பிறக்க அவர்களால் முடியும். ஆனால் அங்கே இப்போ நடைபெற்றுக் கொண்டிருக்கும் வன்முறைகள் அவர்களைத் தடுக்கின்றன. அதனால் தங்கள் பணிகளை இங்கேயே  செய்ய எண்ணுகிறார்கள். நிச்சயம் ஒரு நாள் அங்கே வருவார்கள். ஆனால் சிந்தனையற்ற இளைஞர்கள் கல்லூரி வளாகங்களுள் உள்ள நூலகங்களையும், விஞ்ஞானக் கட்டடங்களையும் எரிப்பது போன்ற வன்முறைகளால் கொந்தளித்துக் கொண்டிருக்கும் உலகுக்கு அவர்கள் வரமாட்டார்கள். 'அவ்விளைஞர்கள்' எம்மைப் போலவே இங்கே நீண்ட காலம் தங்கியிருந்த பின்னரும் கூட அங்கே வந்து இப்படிக் காட்டுமிராண்டித் தனமாக நடப்பது ஒரு துயரமான செயலாகும். எந்த உலகும் பூரணமானதல்ல என்பது உண்மை தான். ஆனால் அவர்கள் கல்வியாலும் அறிவாலும் மிகவும் வளர்ந்துள்ள இடத்தில் பிறந்துள்ளனர். அவர்கள் அவ்விடத்துக்குச் சற்றும் பொருத்தமில்லாதவர்கள். யோக்கியதையற்றவர்கள். போக்கிரிகள். இங்கிருக்கையிலும் அவர்கள் மாறவில்லை. போரினால் தாங்கள் தங்களது இளவயதிலேயே இறக்கவேண்டி வந்து விட்டதென அவர்கள் எண்ணுகிறார்கள். ஒற்றுமையாக முயன்றால் அனைவரும் கல்வியிலும் அறிவிலும் முன்னேறி சந்தோஷமாக வாழலாம். ஆனால் அவர்களோ அனைத்தையும் அழிப்பதில் முழுமூச்சாக உள்ளனர்."
ஆன்மீகத் துறையில் நான் அறியக்கூடிய பெருமைக்குரியவர்கள் வேறு எவரேனும் உள்ளனரா என நான் கேட்டதற்கு அவர், "இமானுவல் ஸ்வீடன்போர்க்கை (Emanuel Swedenborg) மறந்துவிட்டாயா?" எனக் கேட்டார். மேலும் அவர், " அவ்விடத்தில் ஒரு உன்னத ஒளியாக, ஆத்மீக முன்னேற்றத்துக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்காக அவர் இருந்தார். அந்த ஆத்மா மீண்டும் மண்ணுலகில் பிறப்பெடுக்காது. எமது ஆத்மீகப் பணிகளுக்கு அவரால் ஏற்பட்ட அளப்பரிய வளர்ச்சியை என்ன சொல்ல? மனிதர்கள் காதுகளை மூடி, வாயைத் திறந்ததற்குப் பதிலாக வாயை மூடிக் காதுகளைத் திறந்திருந்தால், எண்ணத்திலும் வளர்ச்சியிலும் மனிதகுலத்தைப் பல நூறாண்டுகளுக்கு முன்னே கொண்டு சென்றிருப்பார் அவர். தன்னைப் பைத்தியக்காரனென்றோ முட்டாளென்றோ எவர் என்ன சொன்னாலும் அதைப் பொருட்படுத்தாமல் தங்களை முழுமையாக உலகுக்கீந்த பெரியவர்கள் மிகமிக அபூர்வம்." என்று முடித்தார்.
இன்னொருநாள் ஆர்தரிடம் அவர் ஹௌடினியைப் (Houdini) பார்த்தாரா என நான் கேட்டேன். ஹௌடினி ஒரு பிரபலம் பெற்ற மாஜிக்நிபுணர். அவர் ஃபோர்ட் உயிருடனிருக்கையில் அவர் மூலமாகத் தனது மனைவிக்கு ஒரு குறியீட்டாலான செய்தியைத் (coded message) தெரிவித்திருந்தார். எனது கேள்விக்கு (ஹௌடினியை அங்கே சந்தித்தாரா என்ற) அவர் பின்வரும் சுவாரஸ்யமான பதிலை அளித்தார்: "அவர் இப்போ ஆத்மநிலையில் இல்லை. பூவுடல் எடுத்துவிட்டார். அவரது மனைவியும் தான். இருவரும் இப்போ சிறியவர்களாகையால் அவர்களிருவரும் இம்முறை வாழ்வில் என்ன செய்யப் போகின்றார்களென்று சொல்லவியலாது."
பின்பு போன தலைமுறையைச் சேர்ந்த அமெலியா எயார்ஹார்ட் (Amelia Earhart) எனும் புகழ்பெற்ற பெண்விமானியின் மர்மமான மறைவைப் பற்றிய கேள்விகளுக்கு ஃபோர்ட் பின்வருமாறு பதிலளித்தார்: "அவருடைய விமானத்தில் எரிபொருள் தீர்ந்ததனால் பசிபிக் சமுத்திரத்தில் விழுந்து மூழ்கினார். அது தான் அவர் விஷயத்தில் நடந்தது. அவரும் அவரது இணைவிமானியும் இங்கே தான் இருக்கிறார்கள். அவர்களிருவரும் தங்களது மறைவு உண்டாக்கிய அமளியையறிந்து புன்னகை பூத்தனர். அவர்கள் சிறிது காலத்துக்கு விமானத்தில் மீண்டும் பறக்கமாட்டார்கள். அவர்கள் அதனை விரும்பவில்லை. எரிபொருள் இயந்திரங்களிலும், ராடாரின் கூரிய உணர்வுத் திறன்களிலும் உள்ள இயக்கங்களைப் பற்றி அவர்களிருவரும் பிரமிக்கத்தக்க ஆராய்ச்சிகள் செய்கிறார்கள்."
விமானங்களைப் பற்றிய இக்கூற்றுக்கள் கஸ் (Gus) என்று அழைக்கப்படும் வேர்ஜில் க்றிஸம் (Virgil Grissom) ஐப்பற்றி அறியத்தூண்டியது. அவரும், அவருடன் வேறு இரண்டு விண்வெளி வீரர்களும் துக்ககரமாக, மாதிரி விண்வெளிக் கப்பலில் ஏற்பட்ட ஒரு வெடிப்பினால் இறந்து போயினர். எனது கேள்விக்கு மறுநாள் ஆர்தர் பின்வருமாறு பதிலளித்தார்: "இப்போ விண்வெளி வீரர் வேர்ஜில் க்றிஸமைப் பார்ப்போம். அவர் ஒரு உயர்வான மனிதர். ஒரு இலட்சியத்துக்காகத் தனது வாழ்வைக் கொடுத்தவர். மனோபலம் மிக்கவர். சாதனைக்காகத் தன் உயிரையே கொடுத்தவர். அவர் பக்கத்தில் ஒரு பிழையும் இல்லாமலே, இளவயதில், புகழின் உச்சியிலிருக்கையில் இறந்ததனால், சரியான சந்தர்ப்பமும், பொருத்தமான உடலும் அமைந்தால், மீண்டும் பிறக்கமுடியும். ஆனால் அவர் அப்படிப் பிறப்பாரா என்பது கேள்விக்குறியே. இப்பொழுது அவர் மும்முரமாகப் புகையற்ற, செயல்திறன்மிக்க உந்துகருவி ஒன்றில் வேலை செய்கிறார். அது வான்வெளிப் பயணங்களில் ஒரு புரட்சியை உண்டாக்கும். அவர் விண்வெளிப் பயணங்களைப் பற்றிக் கவனித்துக் கொண்டுதானிருக்கிறார். ஆனால் அவரது முக்கியமான கவனம் முழுவதும் தனது குடும்பத்தினரை அன்புடன் கவனிப்பதோடு இந்த உந்துவிசையால் விமானத்தையோ விண்வெளிக்கப்பலையோ கார்பன் அல்லது எரிபொருள் சம்பந்தப்படாமல் செலுத்துவதைப் பற்றியே உள்ளது. அது வளிமண்டலத்தில் ஏற்படும் காற்றோட்ட இயக்கங்களினால் உந்துகை விசையின் மூலம்  அதிவிரைவான வேகத்தில் விமானங்களை இயக்கும் ஒரு முறையாகும். இப்படியான புதிய கண்டுபிடிப்புகளின் அறிவைப் பூவுலகிலிருக்கும் மனிதனுக்குத் தெரிவிக்கும் முறையானது அம்மனிதனின் ஆழ்மனத்தில் அந்த எண்ணங்களைப் பதிய வைப்பதன் மூலம் என ஃபோர்ட் முன்னரே எனக்கு விளக்கிவிட்டார். ஆழ்மனதில் பதியவைக்கும் செய்கையைக் கூடுதலாக அம்மனிதர் உறங்குகையிலோ அல்லது தியானம் செய்கையிலோ செய்யலாம்.
எனது பதிப்பாசிரியர் எலிஸ் அம்பேர்ன் (Ellis Amburn) பின்வரும் பிரபலமானவர்களைப் பற்றிக் கேட்கும்படி சொன்னார்: பெய்த்தோவன் (Beethoven), ஏணஸ்ட் ஹெமிங்வே (Ernest Hemingway), நெப்போலியன், பிஷப் ஜேம்ஸ் ஏ. பைக் (Bishop James A. Pike) அத்துடன் 'பைக்'கின் தற்கொலை செய்துகொண்ட மகன். நான் அதனை ஆர்தர் ஃபோர்டுக்குத் தெரிவித்தேன். அவர் பின்வருமாறு அறிவித்தார்: "முதலாவதாக பெய்த்தோவன் மேல்மண்டலங்களுக்குச் சென்று விட்டார். அவர் நான்காவது நிலையில் நீண்ட காலமிருக்கிறார். அங்கே சந்தேகமின்றி அவர் இசையை உருவாக்கமுடியும். அதாவது சுழன்று கொண்டிருக்கும் பிரபஞ்சத்தின் அதிர்வுகளையும், அற்புதமான முறையிலுண்டாகும் கிரகங்களின் ஒலிகளையும் ஒன்று திரட்டி இனிமை வாய்ந்த இசையினை உருவாக்க முடியும். அவர் லட்விக் வான் பெய்த்தோவனாக (Ludwig Van Beethoven) வருவதற்குமுன் பலபிறவிகளில் இசைவல்லுனராக இருந்திருக்கிறார். இக்கடைசிப் பிறவியின் இடையில் அவருக்குக் காது கேட்காமல் போனதன் மூலம் அவர் தனது பூர்வகர்ம வினைப்பயன்களை அனுபவித்து முடித்திருக்கிறார். அதனால் அவர் இனிப் பிறவியெடுக்க வேண்டிய தேவையில்லை. மீண்டும் பிறவியெடுப்பதும் எடுக்காததும் அவரது விருப்பம். ஆனால் இப்போது அவர் உயர்வான தளத்தில் இருக்கிறார்."
"ஹெமிங்வே மனிதனாக இருக்கையில் முரட்டுத் தனமாக இருந்தார். முந்தைய பிறவிகளில் அவர் சிலவற்றில் ஒரு பெர்பெராகவும் (Berber), இன்னும் சிலவற்றில் ஒரு ஹன்னாகவும் (Hun) இருக்கும் போது சண்டை பிடிக்கவேண்டும் என்பதற்காகவே சண்டை பிடித்துக் கொடுமைப்படுத்துவதில் மகிழ்ச்சியுற்றார். அவர் கூர்மையான புத்தியுடையவராயினும் அவருக்கு வன்முறையில் விருப்பமிருந்தது. ஆனால் எழுத்தாளர் ஏர்னெஸ்ட் ஹெமிங்வேயாக வந்தபொழுது அவருள் இன்னும் கொஞ்சம் பழைய வன்முறை நாட்டங்கள், விருப்பங்கள் இருந்தாலும் நல்ல முறையில் முன்னேற்றம் கண்டார். ஆனால் அவரது வாழ்வை முடித்தவிதம் அவரது முன்னேற்றத்தைப் பின்னடையச் செய்துவிட்டது. அவர் இன்னும் அவ்விடயத்தைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறார். அவரிடம் எல்லாம் இருந்தது: புகழ், நண்பர்கள், செல்வம், திறமை. இருந்தும் அவர் தன் வாழ்வைத் தானே முடித்துக் கொண்டார். அப்படி ஒருநாளும் செய்யக்கூடாது! இவ்விடயத்தைப் பற்றி அதிகம் பேச விருப்பமில்லை. அது ஒரு சோக வரலாறு."
சிறிது இடைவேளைக்குப் பின் ஃபோர்ட் மீண்டும் பின்வருமாறு ஆரம்பித்தார்: "ரூத் ஆத்மீகவியலின் ஆரம்பத்திலிருந்தே எந்தப் போலியான ஆவியூடகங்களும் பரிதாபத்துக்குரிய அந்த நெப்போலியனின் ஆவி வந்துள்ளதாகத் தங்களுக்குள் 'ஆவி' வரும்போது சொல்வார்கள். இதை முதலில் தெளிவுபடுத்துவோம். அவர் உடனடியாகவே இன்னொரு பிறவி எடுத்துவிட்டார். ஏனெனில் அவர் இன்னொரு வெற்றிகரமான போரை விரும்பினார். அவர் அதைத் தனது அடுத்த பிறவியில் அடைந்தார். ஆனால் ஒரு களைப்புற்ற காலாட்படை வீரனாக. அதன் பிறகு மேலுமிரண்டு பிறவிகள், போர்த்துக்கல்லிலும், பிரேஸில் நாட்டிலும். அவையும் கூடக் குறுகிய காலத்துக்கே. அவன் எதையும் செய்வதில் நாட்டம் கொண்ட செயல் வீரன். இங்கே நீண்ட காலங்களுக்கு ஆழ்ந்து சிந்தித்தல், சீர்தூக்கிப்பார்த்தல் போன்றவற்றில் நேரம் கழிக்க அவனுக்கு விருப்பமில்லை. அதனால் அவனது பிறவிகளுக்குரிய பெற்றாரைத் தெரிவு செய்ய அவனால் இயலாது. பிறவிகளுக்கு இடையே அந்த உடன்படிக்கைக்கு வரக்கூடிய உரிமையைப் பெறும் நிலையை அவர் அடையத் தவறுகிறார். ஆனால் அவர் தீயவரில்லை.
பிஷப் (கிறிஸ்தவ ஆயர்) பைக்கினதும் (Pike) அவரது மகன் ஜேம்ஸ் ஏ. பைக்கினதும் (ஜூனியர்) மரணத்துக்குப் பின்னான வாழ்வைப் பற்றிய கேள்விகளுக்கு ஃபோர்டின் பதில்களை விபரிக்கு முன்பாக சர்ச்சைக்குரிய பிஷப்பும் ஆர்தரும் பூவுலகில் வசிக்கையில் அவர்கள் இருவருக்கும் இடையே உண்டான தொடர்புகளைப் பற்றி ஒரு தரம் பார்ப்பது நல்லதென எண்ணுகிறேன். சுருக்கமாகச் சொல்வதாயின் பைக்கின் இருபத்திரண்டு வயது மகன் நியூயோர்க்கிலுள்ள ஹோட்டல் அறையொன்றில் பெப்பிரவரி மாதம் 1966 ஆம் ஆண்டு தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்து போனார். சுமார் இரண்டு கிழமைகளுக்குப் பிறகு பிஷப் பைக் அப்போது கற்றுக் கொண்டிருந்த இங்கிலாந்திலுள்ள கேம்ப்ரிஜ் பல்கலைக்கழகத்தின் அபார்ட்மெண்டில் அமானுஷ்யமான சில நிகழ்வுகள் நிகழத்தொடங்கின. ஒருநாள் காலை அபார்ட்மெண்டில் இருந்த எல்லா மணிக்கூடுகளும் 8:19 மணிக்கு நின்றுவிட்டன. கேம்ப்ரிட்ஜின் அந்த நேரத்தில் தான் மகன் பைக் தனது உயிரை எடுத்தது. பின்னர் பூட்டூசிகள் (safety pins) அபார்ட்மெண்டில் தென்படத் தொடங்கின. அவையும் மணிக்கூட்டின் அதே நேரத்தைக் காட்டும் விதமாகத் திறந்திருந்தன. பைக்குடன் வேறு இருவர் அவரது அபார்ட்மெண்டில் வேலை செய்து கொண்டிருந்த போது அங்கே சுவரோடு இருந்த ஒரு அலுமாரிக்குள் இருந்து இருவருக்கும் விசித்திரமான சத்தங்கள் கேட்டு அதனைத் திறந்து பார்த்தபொழுது உடைகள் தாறுமாறாகக் குழம்பிக் கிடந்ததைக் கண்டனர். அவர்கள் திகைத்துப் போய் நிற்கையில் பைக்கின் இறந்துபோன மகனின் சவரம் செய்யும் கண்ணாடியானது பீரோவின் மேலிருந்து மெதுவாக மிதந்து நிலத்துக்கு வந்தது.
இவைபோன்ற விசித்திரமான நிகழ்வுகளைக் கேள்வியுற்ற சௌத்வாக்கின்  (Southwark) பிஷப்பும் அமானுஷ்ய அறிவியலைக் கற்றவருமான மேர்வின் ஸ்ரொக்வூட் (Mervyn Stockvood) என்பவர் திருமதி எட்னா ட்விக் (Edna Twigg) என்ற ஒரு பிரபல ஆவியூடகவியலாளருடன் பைக்கைத் தொடர்பு கொள்ளும்படி செய்தார். அந்தப் பெண்மணி பிஷப்பிற்கு மேலுலகச் செய்திகள் சிலவற்றைச் சொன்னார். அச்செய்திகள் தனது மகனிடமிருந்து தான் வந்ததென பிஷப் நம்பினார். பின்னர் ஒரு வருடம் கடந்த பின் 1967 செப்டெம்பரில், 'ரொரண்டோ ஸ்டார்' என்னும் பத்திரிகையின் சமய சம்பந்தமான எடிட்டர் அலன் ஸ்ப்ராகெட்டினால் (Allen Spraggett) தலைமை தாங்கி நடாத்தப்பட்ட தொலைக்காட்சிக் கலந்துரையாடல் ஒன்றில் பிஷப் பைக்கும், ஆர்தர் ஃபோர்டும் ஒன்றாகச் சந்தித்துக் கொண்டனர்.
கனேடியன் ஒளிபரப்பு நிறுவனத்தின் டொரோண்டோ ஸ்டுடியோவில் ஆர்தர் ஃபோர்ட் மயக்க நிலைக்குப் போக டெலிவிஷன் கமராக்கள் நாடு தழுவிய அளவில் பார்வையாளர்களுக்கு ஒரு விசித்திரமான காட்சியைப் பதிவுசெய்து கொண்டன. ஃபோர்டின் குரலை உபயோகித்து ப்ளெச்சர் (Fletcher) ஜூனியர் பைக்கை பேசும்படி செய்தார். அவர் தான் எல் எஸ் டியாக (LSD) உபயோகித்த போதைப் பொருள் என்னவென்று அடையாளம் காட்டினார். அத்துடன் அந்தத் 'தவறான பழக்கமானது' தனதுயிரை மாய்க்கப்பண்ணிவிட்டது எனவும் உண்மையில் தனது உயிரைத் தக்கவைக்க மிகவும் விரும்பினார் எனவும் சொன்னார். மிகப்பெரிய அளவில் சான்று பகரக்கூடியதான பல விஷயங்கள் ஆயர் பைக்குக்கும் ஆர்தர் ஃபோர்டுக்கும் தெரியாத பல விடயங்களும் வெளிவந்தன. இந்நிகழ்வைப் பற்றிய விபரங்களை ஆர்தர் ஃபோர்டின் Unknown but Known (தெரியாதது ஆனால் தெரிந்தது) என்ற புத்தகத்திலும் பைக்கின் சொந்த அனுபவத்தின் சான்றுகளை The Other Side (மறுபக்கம்) என்ற புத்தகத்திலும் வாசித்தறியலாம். பிஷப் (ஆயர்) பைக் பின்னர் புனித பூமிக்குச் சுற்றுப்பயணம் செல்கையில் இறந்து விட்டார். அங்கே பாலைவனத்தில் டெட் ஸீ (Dead Sea) எனும் கடற்கரைக்கருகில் காணாமல் போய்விட்டதாகத் தெரிகிறது. பின்னர் பலநாட்கள் சென்றபின் இறந்து கிடக்கக் கண்டு பிடிக்கப்பட்டார்.
எனவே நான் 'பைக்' குடும்பத்தைப் பற்றி ஆத்மரூபத்திலிருந்த ஃபோர்டிடம் கேட்ட பொழுது அவர் பின்வருமாறு பதிலளித்தார்: "ஆயர் பைக்கும் அவரது மகனுமா? ஆம் நான் இருவரையும் சந்தித்துள்ளேன். பைக் இங்கே வருவதற்குத் தயாராக இருக்கவில்லை. அவர் நிறைய வேலைகளைச் செய்து முடிக்க வேண்டுமென்று எண்ணியிருந்தார். ஆனால் அந்த விடயத்தில் அவரின் விருப்பத்துக்கு இடமில்லாமல் போய்விட்டது. அந்த வறண்ட பாலைவனத்தின் வெப்பத்தில் குடிநீரில்லாததால் அவரால் உயிர்பிழைக்க முடியாமல் போய்விட்டது. இங்கே வந்த புதிதில் உடனே உலகவாழ்க்கைக்குத் திரும்ப வேண்டுமென்று விரும்பினார். இப்போ அப்படியில்லை. அவர் மகனுடன் மறுபடி இணைந்து கொண்டார். தந்தை இங்கு இருப்பதால் மகனில் எவ்வளவோ முன்னேற்றம் காணப்படுகிறது. இப்போ வெகுவிரைவாக அவர் இந்தச் சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றுகிறார். அவர்கள் இதற்கு முந்தைய ஒரு பிறவியிலே நினைத்ததிலும் பார்க்க மிக நெருக்கமாக இருந்திருக்கிறார்கள். இப்போ அவர்கள் தத்துவவியலுடன் பிரபஞ்ச அறிவு உட்பட வேறு பாடங்களும் கற்கிறார்கள். ஏனெனில் சந்தர்ப்பம் வரும்போது மீண்டும் பூவுலகில் பிறப்பதற்குத் தங்களைத் தயார் செய்வதற்காக. நிச்சயமாக அவர்கள் தங்களின் கடந்த பிறவிகளைப் பற்றி மறுபரிசீலனை செய்த பின்பே பிறப்பெடுப்பதற்குரிய சூழ்நிலை, பெற்றார் ஆகியவற்றைத் தெரிவு செய்யக்கூடிய தகுதியைப் பெறுவர். பெரும்பாலும் தந்தைக்கு முன் மகன் பிறப்பெடுக்கலாம். மகன் தானே தனதுயிரை மாய்த்திருந்தாலும் அவர் போதையிலிருந்ததால் அவர் அதை வேண்டுமென்றே செய்யவில்லை. எனவே அது ஓரு விபத்தாகத்தான் கருதப்படுகிறதேயன்றி கடும் பிராயச்சித்தம் செய்வதற்குரிய செயலாகக் கருதப்படவில்லை. புலனுணர்வுகள் விரிவடைந்து விட்டது போன்ற பிரமையை உண்டாக்கித் துயரம் தரக்கூடிய செயல்களைத் தூண்டும் போதைப் பொருட்களைத் துறக்கும் படி அவர்கள் ஏனையோரை ஊக்குவிக்கிறார்கள்".
ஜெல்டா, எஃப். ஸ்கொட் பிட்ஸ்ஜெரால்ட் (Zelda, F. Scott Fitzgerald) என்பவர்களைப் பற்றிய புத்தகங்களை நான் வாசித்து அவர்களின் வாழ்வில் நிகழ்ந்த சோகச் சம்பவங்களை அறிந்து வருந்தியதால் ஆர்தர் ஃபோர்டிடம் அவர்களின் வளர்ச்சியைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவரது பதில், "அவர்கள் இருவருமே இங்கே இருக்கிறார்கள். இருவரும் கிட்டத்தட்ட ஒரே நிலையிலேயே இருக்கிறார்கள். சிறிது சண்டை சச்சரவுகளிருக்கும். ஆனால் அவர்கள் இருவரும் மிக நெருக்கமாக ஒன்றிணைக்கப்பட்டு உள்ளதால் எந்தவொரு சண்டையும் அவர்களை நீண்ட நேரம் பிரித்து வைக்க முடியாது. சொல்லப்போனால் அவர்களிருவரும் ஒரு குடத்தில் இருபட்டாணிகளாகும். அந்த இருவரிலும் அப்பெண் புத்திசாலி ஆனால் ஆணோ அற்புதமான நேர்த்தியவாதியாகும். அவர்கள் இங்கே பலகாலம் இருந்ததனால் அவர்களுக்கிடையே இருந்த முரண்பாடுகள் சரிசெய்யப்பட்டு வருகின்றன. அவர்களிருவரும் அவர்களைப் போலவே குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு இங்கே வருகையில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளுக்கு உதவுகிறார்கள். தற்சமயம் அங்கேயுள்ள எந்த ஒரு எழுத்தாளரின் ஊடாகவும் அவர்கள் வேலை செய்யவில்லை. அவர்கள் தங்களைப் போலவே நிறையத் திறமைகளிருந்தும், ஒழுங்கான பழக்கவழக்கம் இல்லாதவர்களுக்குப் பூவுலகைவிட்டு இங்கு வரும் போது அவ்வருகையை எளிதாக்குவதில் தீவிரமாகச் செயல்படுகிறார்கள். தங்களுக்கு எல்லாம் தெரியுமென நினைக்கும் இளம் புத்திசாலிகளுக்கு அது அவசியத்தேவையாகும். கட்டுப்பாடென்பது இருவருக்குமே எள்ளளவும் இருக்கவில்லை. சுயகட்டுப்பாடென்பதன் அவசியத்தை அவர்களிருவரும் இங்கே மீண்டும் மீண்டும் பயின்று கொண்டிருக்கிறார்கள்.
"முந்தைய பிறவிகளில் அவர்கள் பிரஞ்சுப் பிரஜைகளாகவும் அத்துடன் ஓவியக்கலையில் ஆர்வமுள்ளவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். எழுத்தில் காட்டிய தைரியத்தையே அப்போதும் காட்டினார்கள். அதாவது பலநிறங்களைக் கொண்ட குமிழ்களைக் கொண்டதான ஓவியங்களைத் துணிவுடன் வரைந்தார்கள். ஆனால் சுயகட்டுப்பாதென்பது சிறிதளவே காணப்பட்டது. அதனால் அவர்களின் அழியாப்புகழ் நிலைத்திருக்கவில்லை. இப்போ நாம் வேறு கண்ணோட்டத்தில் பார்க்க முயற்சிப்போம். அவர் முதிர்ச்சியில்லாதவர். தன் மனத்திலெழும் எண்ணக்கருவில் தேவையான நேரத்துக்குக் கவனத்தைச் செலுத்தி அதனை முழுமையாக நிறைவேற்றும் திறனற்றவர். அப்பெண்ணின் எண்ணங்களோ மிகப்பெரியவை. ஆனால் அவள் கல்வியறிவும், ஒழுக்கமும் குறைந்தவள். அதனால் நினைப்பதற்கு ஒழுங்கான சொல்வடிவம் கொடுக்கும் திறனற்றவள். அவளின் படைப்புகள் அசலானவை. ஆனால் சொல் வடிவமைப்பதற்குப் பக்கபலமாக சரியான கண்ணோட்டமும் தத்துவ ஞானமும் இல்லை. அவனுக்கோ நல்ல செயல்திறன் இருந்தாலும், சிறுபிள்ளைத்தனமான கோபங்களும், வர்ணஜாலம் மிக்க அவளின் சொல் திறமையில் பொறாமையும் கொண்டவர். அவர் அவளில்லாமலும் வாழமுடியாதவர், அதேநேரம் அவளுடன் சேர்ந்தும் வாழஇயலாதவர். இப்போ அவர்கள், பொறுமை, சகிப்புத்தன்மை, இரக்கம், புரிந்துணர்வு என்பனவற்றைக் கற்கிறார்கள். அதன் பின்பே அவர்கள் தாங்களே தங்களின் பெற்றாரைத் தெரிவு செய்து பிறக்க அனுமதிக்கப் படுவார்கள்.
தனது உற்சாகமூட்டும் நகைச்சுவை அகடவிகடங்களால் அல்கொங்குயின் வட்டமேசையைக் (Algonquin Round Table) கலக்கிக் கொண்டும் நாட்டுமக்களைச் சிரிக்க வைத்துக் கொண்டும் அதே நேரத்தில் தனிமையில் தற்கொலைகளுக்கு இரகசியமாக முயன்று கொண்டுமிருந்த டொறொத்தி பாக்கரைப் (Dorothy Parker) பற்றி ஆர்தர்: "சோகமான பெண்ணாத்மா. அவள் தனது உடலையும் திறமைகளையும் சீரழித்துக்கொண்டாள். அவளது உள்ளுணர்வின் உந்துகைக்கு அவள் உண்மையாக இருக்கவில்லை. இக்கடைசிப் பிறவியில் அவ்வுணர்வானது தன்னிலும் பார்க்கப் பெரிய ஒரு விஷயத்தை உணரமுற்பட்டது. இதற்கு முந்தைய பிறவியிலே அவள் யூகோஸ்லாவியாவில் ஒரு கன்னியாஸ்திரியாக இருந்தாள். அப்பொழுது மிகக் கவனமான எச்சரிக்கையான வாழ்க்கை வாழ்ந்ததனால், இப்பிறவியிலே எதையும் எதிர்க்கும் குணம் கொண்டிருந்தாள். அந்தக் கடுமையான துறவு வாழ்வில் சமய உணர்வு அளவுக்கதிகமாகத் திணிக்கப்பட்டதனால் இப்பிறவியில் சமயத்துக்கு ஒரு பங்களிப்பையும் அவள் செய்யவில்லை. அவள் போலித்தனங்களிலிருந்தும் அவையின் பிணைப்புகளிலிருந்தும் சுதந்திரமாக இருக்க விரும்பினாள். ஆனால் அவள் மறுபக்கத்தின் அந்த எல்லைக்குச் சென்றுவிட்டாள். அவள் புத்திசாலியென்பதால் அடுத்த பிறவியில் அநேகமாக ஒரு சமநிலைக்கு வருவாள். அவள் காற்றையே கட்டிப்போட நினைத்தாள். அதனால் நாமனைவரும் இறைவனின் ஒரு பகுதியே என்பதனை மறக்குமளவுக்குப் பின்னடைவு அடைந்திருக்கிறாள். உண்மையிலேயே துக்ககரமான சமாச்சாரம் தான். இப்போ ஓய்வெடுத்து வருகிறாள். குழப்பத்திலிருக்கிறாள். தனது பிழைகள் தன்னை எவ்வளவு தூரம் தவறான பாதையில் இட்டுச் சென்றன என்பதை உணர்ந்து விழித்தெழுந்தால் குழப்பத்திலிருந்து விடுபடுவாள்.
"அவளது தந்தை அவளுக்கு ஒரு தடைக்கல்லாக இருந்தார். ஆனால் அவள் வேண்டுமென்றே யூதப்பெற்றாரைத் தேர்வு செய்திருந்தாள். ஏனெனில் அதற்குமுன் கத்தோலிக்கக் கன்னியாஸ்திரி மடத்தில் இருந்ததனால் ஓரளவு சுதந்திரமான சமயக் கோட்பாடுகளுடைய விதமாகத் தெரிவு செய்திருந்தாள். அவளது தாய் ஒரு நல்ல பெண்மணி. ஆனால் அச்சிறுகுழந்தைக்கு உதவக்கூடிய காலம் வரையும் தனது உயிரைத் தக்கவைக்க அவளால் முடியவில்லை. உண்மையில் அக்குழந்தையும் அவளும் முந்தைய பிறவியில் மிக நெருங்கிய நண்பர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனால் அவள் தனது அந்தக் கடந்த பிறவிகளை மறுபரிசீலனை செய்து, அவற்றை அருகருகே வைத்து எங்கே பிழை ஏற்பட்டது என்பதைக் கண்டறிந்து தெளிவான ஆத்மாவுடன் பிழைத்தெழுவாள். சமயநம்பிக்கை அற்ற வாழ்வென்பது டொறொத்தி பார்கரைப் பொறுத்தவரையில் சாத்தியமற்றது. ஏனெனில் முந்தைய பிறவியிலும் அதற்கு முந்தைய பிறவிகளிலும் அது அவளில் மிக ஆழமாக ஊட்டப்பட்டுள்ளது.