இது 'A World Beyond' என்ற ஆங்கில நூலின் மொழிபெயர்ப்பாகும். இந்நூலை எழுதியவர் ரூத் மோன்கொமெரி (Ruth Montgomery) எனும் ஒரு பெண்மணியாகும். மனிதருக்குள் மேலுலக ஆத்மாக்கள் வந்து பேசுவதைப் போன்று மேற்குலகில் 'Automatic Writing' என ஒரு விடயமுள்ளது. அதாவது ஆத்மாக்கள் எங்கள் மூலமாக வந்து சில விடயங்களை எம்மைக் கொண்டு எழுதச் செய்வது என்பதாகும். இந்நூலானது அப்படியாகத்தான் எழுதப்பட்டது. 'ஆர்தர் போர்ட்' என்று இந்நூலாசிரியைக்குத் தந்தையைப் போலிருந்த ஒருவர் மேலுலகம் சென்ற பிற்பாடு அவர் மூலமாக எழுதப்பட்டது இந்நூலாகும்.

Tuesday, March 9, 2021

மூன்றாம் அத்தியாயம்: எண்ணங்கள் சடப்பொருட்களாகும் (Thoughts Are Things)

டைப்ரைட்டர் மூலம் ஆர்தர் என்னைத் தொடர்பு கொள்ளத் தொடங்கிச் சிறிது நாட்களில் ஒரு நாள் அவர் பின்வருமாறு எழுதினார்: "என்னைப் போல உள்ள ஒருவன் இங்கு வருகையில் என்ன நிகழுமென்பதை இன்று பார்ப்போம். அதாவது நோயுற்று நலிந்த உடலைவிட்டு மகிழ்வோடு வெளியேறித் தொடர்ந்தும் ஆன்மீக முன்னேற்றம் அடைவதற்கு விரும்புபவர்களின் வருகை எப்படி இருக்குமென்பதை இன்று பார்ப்போம். இங்கு என்ன எதிர்பார்க்கலாம் என்பது எனக்குத் தெரியும் என்பதை முதலிலேயே சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஏனெனில் என்னுள் ஆத்மா வந்து நான் ஆவியுலகுடன்  தொடர்பு கொள்ளும் போதெல்லாம்  இங்குள்ளவர்களை கவனித்திருக்கிறேன். அவர்களும் எனது பூவுலக நண்பர்கள் போல எமது பூவுலகிலேயே இருக்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும். அப்போதெல்லாம் நான் இங்குமங்கும் அலைந்து திரிந்ததைக் கண்டதால் அவர்கள் எனக்கு உதவி செய்ய ஆவலாயிருந்தார்கள். எனவே அவர்கள் என்னை மகிழ்வுடன் வரவேற்றார்கள். எனக்கு உதவி செய்ய முன் வந்தார்கள். நான் இங்கு வருவதற்கு அவசரப்படவில்லை என்பதை முதலில் விளங்கிக் கொள் ரூத். நான் பூவுலகில் இருந்து சேவை செய்யவே விரும்பினேன். ஆனால் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் நான் எனது உடலைக் கெடுத்துக் கொண்டேன். இது அங்குள்ளவர்களுக்கு ஒரு பாடமாக அமையட்டும். உங்களது உடல் ஒரு தேவாலயமாகும். அதனைப் பேணிப் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். நாம் எவ்வளவுக்கு எவ்வளவு அதனை மதித்து அதனை ஆத்மா வாழும் ஆலயமாக நடத்துகிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு அதுவும் எமது தேவைக்கேற்ப நடக்கும்.
இதற்கு முந்தைய பிறவிகளுக்கிடையில் இங்கு வந்ததைப் போல இம்முறையும் இங்கு வரும்படி நேர்ந்த போது என்னுள் எனது ஆத்மா திடீரென விழிப்படைந்ததை என்னால் உணர முடிந்தது. எனது மனமானது இறைவனில் ஒடுங்கியது. ஏற்படப்போகும் அந்த விடுதலைக்கேற்ப எனது உள்ளுணர்வைத் தயார் செய்ய முனைந்தேன். விடுதலையடைந்த ஆத்மாவின் உள்ளுணர்வானது மிக நன்றாக வேலை செய்யும். ஏனெனில் நாம் இறந்தபின் அந்த உள்ளுணர்வு தான் எம்முடன் இருக்கப் போவது. அது தான் ஆத்மாவின் மனம். இந்தக் காரணத்துக்காகவாவது திரையின் மறு பக்கத்தில் (பூவுலகில்) இருப்பவர்கள் உள்ளுணர்வையும் அறிவைப் போன்றே வளர்த்துக் கொள்ள வேண்டும். உள்ளுணர்வை விரிவடையச் செய்வதற்கு அதைச் சுதந்திரமாக விட வேண்டும். அதனுடைய அற்புத சக்திகளைச் செயற்பட விட வேண்டும். நாம் அதனை அடக்கி வைத்து விட்டு எமது வெளி மனத்தையே இதயத்தையும் மூளையையும் உபயோகிக்கப் பயன்படுத்துகிறோம்."
"இப்போ விடயத்துக்கு வருவோம். இறுதியில் அந்தக் கடைசி நெஞ்சு வலியின் பின்னர் எனக்கு நேரம் நெருங்கி விட்டதை வெகுவாக உணர்ந்தேன். இந்தக் கணத்தை ஆவலுடன் எதிர்பார்த்ததால் உடற் பந்தங்களில் இருந்தான விடுதலையை நான் வரவேற்றேன். எனது உயிரானது களைத்து விட்ட அந்த உடலிலிருந்து வெளியேறிய போது நான் எனது சூக்கும சரீரத்தில் இலகுவாக, முன்னரே நான் அதனை முழு உணர்வோடு அணிந்திருந்ததைப் போல நுழைந்து கொண்டேன். பாரமான உட ல் இல்லாது, பந்தங்களிலிருந்து விடுதலை அடைந்து காற்றில் மிதப்பதைப் போல உணர்ந்தேன். அந்த தேவலோக உணர்வானது விளக்க முடியாதது. என்ன ஒரு சுகம். ஒரு தடங்கல்களும் தடைகளும் வேதனைகளும் அற்று, ஆனால் முன்னர் இருந்ததைப் போலவே அதே இடத்தில் எப்போதும் போல இருப்பது எவ்வளவு ஆனந்தம். எந்த நேரத்திலும் எந்த ஒரு இடத்திற்கும் ஒரு பிரயாணச் சீட்டுக்கோ நடப்பதற்கோ அவசியமில்லாமற் போய் வரக்கூடிய அதிசய சுதந்திரம். மீண்டும் சுறுசுறுப்பான சிறுவனாக மாறுதிலும் பார்க்க இந்த நிலை நன்றாகவுள்ளது. ஏனெனில் எமது சுதந்திரத்தைப் பறிப்பதற்குத் தடைகளோ தடங்கல்களோ ஏதுமில்லை. நாம் எங்கே போக எண்ணுகிறோமோ அங்கே நாம் இருப்போம். சாதாரண ஆத்மாக்களாகிய நாம் இறைவன் போன்றே அனைத்து விஷயங்களிலும் இருப்போம்.
முதலில் நான் எனது நண்பர்களைக் கண்டு அளவளாவினேன். பின்னர் ஃபிளச்சரைத் தேடினேன். அவர் புன்னகையுடன் எனது வரவைப் பார்த்திருந்தார். அவரைச் சிறுவனாகப் பூவுலகில் சந்தித்ததற்கு இங்கே அவரில் எவ்வளவு மாற்றங்கள். அவர் ஒரு மேன்மையான ஆத்மாவாக இருந்தார். அவருடன் மகிழ்ச்சியாக அளவளாவினேன். உன்னை அவர் இன்னும் நினைவில் வைத்திருக்கிறார். அது மட்டுமல்ல தன்னுடையதும் என்னுடையதுமான சேவைகளுக்கு நீ ஏனையோரின் அபிப்பிராய பேதங்களையும் மீறி, எமது செய்தியை இவ்வுலகுக்குக் கொண்டு வருவதற்கு தைரியமாக உதவியதையும் நினைவு கூர்ந்தார். இனி அவர் சற்று ஓய்வெடுக்கட்டும். அவருடைய சேவையானது பூர்த்தியடைந்து விட்டது. இனி அவர் உயர்வான நிலைகளுக்குச் செல்லலாம் அல்லது மீண்டும் பூமியில் பிறக்கலாம். அது அவரது இஷ்டம். இன்னமும் அவர் முடிவு செய்யவில்லை. ஆனால் ஒரு விடயம் மட்டும் உறுதி; அவர் ஒருவருக்கூடாகவும் இனி வர மாட்டார். எனவே அவரின் ஆத்மா தங்களுக்குள் வந்திருப்பதாகச் சொல்பவர்கள் அனைவரும் போலி ஊடகங்களாகும். நான் மேலுலகுக்கு வந்ததும் தனது வேலை முடிந்து விடுமென ஃபிளெட்சர் எப்போதும் உறுதியாகச் சொல்பவர்.
தான் இப்பொழுது அனுபவித்துக் கொண்டிருக்கும் சுதந்திரத்தை விளக்குமுகமாக ஆர்தர் பின்வருமாறு ஒரு நாள் எழுதினார்: "எங்கள் வாழ்க்கைக்கும் உங்கள் வாழ்க்கைக்கும் இடையில் பெரிதாக  ஒன்றும் வேறுபாடில்லை. நாம் வேறோர் உலகத்திலுமில்லை. இங்கே தான் இருக்கிறோம். வாஷிங்டனிலுள்ள உனது வரவேற்பறையில் நான் இருந்ததைப் போலவே இப்போதும் இக்கணத்திலும் இருக்கிறேன். ஒரேயொரு வேறுபாடு என்னவென்றால் இப்போ நாம் பலனளிக்கக் கூடிய விதத்தில் அடிக்கடி தொடர்பு கொள்கிறோம். நாம் இங்கே தானிருக்கிறோம். அதை முதலில் வலியுறுத்திச் சொல்ல வேண்டும். நீங்கள் எப்படி உலகின் ஒரு பகுதியாக இருக்கிறீர்களோ அப்படியே தான் நாமும் இருக்கிறோம். ஒரேயொரு வித்தியாசம் என்னவென்றால் உங்களின் இயக்கங்களைக் கட்டுப்படுத்தும் அடிப்படை விதிகள் நாம் பூதவுடலை நீக்கி விட்டதால் எம்மைக் கட்டுப்படுத்தா. நாம் ஆத்ம ரூபத்தில் இருப்பதால் சடப்பொருட்களின் ஊடாகவும் உயிருள்ள பொருட்களின் ஊடாகவும் செல்லமுடியும். அவையனைத்தும் எண்ண உருவங்களாகவே உள்ளன. நாம் அவற்றைக் வடிவங்களாகப் பார்க்காமல் எண்ண உருவங்களாகவே பார்ப்பதால் அவையொன்றும் எம்மைத் தடை செய்யா. நாம் எண்ண வடிவாலான இல்லங்களில் வசிக்க முடியும். அல்லது ஆற்றங்கரை போன்ற நீர்நிலைகளின் அருகே சூரிய வெளிச்சத்துடன் கூடிய மலைச்சரிவுகளில் வாழமுடியும். எங்கென்றாலும் நாம் இருக்க விரும்புமிடத்தில் இருக்கலாம். ஆனால் இவையெல்லாம் கட்டாயத் தேவைகளல்ல. ஏனெனில் எமக்கு வதிவிடம் அவசியமில்லை. நாம் காற்றைப் போல சுதந்திரமாக நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் இருப்போம். அதனால் நாம் அங்குமிங்குமாக அலைந்து திரிவதாக எண்ணக்கூடாது. நாம் இங்கு வந்தவுடன் ஏதாவதொரு குறிக்கோளை உருவாக்கிக் கொள்வோம். வளர்ச்சியென்பது பூவுலகில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதேயளவு இங்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. ஒரு குறிக்கோளுமின்றி அங்குமிங்குமாக அலைந்து திரிந்தால் நாம் வளர்ச்சியுற முடியாது." 
"அங்கு போலவே இங்கும் இறைவன் எவற்றையெல்லாம் நாம் செய்யவேண்டுமென விரும்புகிறானோ அவற்றை நிறைவேற்றுவதே எமது நோக்கமாகும். ஒருவர் போல மற்றொருவர் என்றுமே இருந்ததில்லை. எமது வாழ்க்கையின் நோக்கங்களும் அப்படியே. பிறவிகள் தோறும் நாம் அணிந்து கொள்ளும் உடலுக்கேற்ப மாறுபடும். இறைவனை இங்கு நாம் காண மாட்டோமெனினும் எமக்கு நன்மை பயப்பதான அவரது கருணா கடாட்சத்தை அபரிமிதமாக இங்கு நாம் உணர்கிறோம். எனவே இங்கு சிறிதளவு முன்னேற்றமே அடைந்தவர்களாயினும் சரி இறைவனின் நிலையான அருளை உணராமலிருக்க முடியாது. அவர் எமக்குரியவர். நாம் அவருக்கு உரியவர்கள். எமக்கிடையில் ஒரு பிரிவுமில்லை. ஏனெனில் எமது மூலாதாரம் அவரே. எப்படி எமது விரலொன்று மூளையின் கட்டுப்பாடின்றி இயங்க முடியுமென்று எம்மால் எண்ண முடியாதோ அதே போலத்தான் ஆத்மாவும் இறைவன் எனும் படைப்புச் சக்தியை விட்டு வேறுபட்டு இயங்க முடியாது. நாமனைவரும் ஒருவரே; நீ, நான், எமது அயலவர்கள், எமது எதிரிகள், எமது இறைவன் அனைவரும் ஒருவரே. இடையில் ஒரு பாகுபாடுமில்லை. ஒரு பிரிவுமில்லை. எமது விடுதலையைப் போன்றே எமது எதிரியின் விடுதலைக்கும் நாமே பொறுப்பேற்க வேண்டும். ஏனெனில் இறைவனின் இதயத்தில் நாமும் நம் எதிரியும் ஒருவரே. இறைவனுடன் இணைந்து நாம் உலகைப் படைத்துக் கொண்டிருக்கிறோம் எனும் போது எப்படி எமது கைவிரல்களும் கால்விரல்களும் எமது ஒரு பகுதியோ அப்படியே இறைவனும் எமது பகுதியே என்கிறோம்".
ஒரு வேளை முன்னே பாதிரியாராக இருந்த நினைவுகளிலிருந்து விடுபட முடியாமலிருக்கலாம், ஞாயிற்றுக் கிழமைகளில் தவறாமல் ஆர்தர் ஆன்மீக விடயங்களைக் கூடிய விளக்கங்களுடன் உரைப்பார். ஆர்தருடனான தன்னிச்சை எழுதுகை தொடங்கிய ஆரம்ப கால கட்டங்களில் இது வெளிப்படையாகத் தெரிந்தது. ஒவ்வொரு ஞாயிறும் லிலி ஆர்தரை, "இதோ ஆர்ட் தனது ஞாயிறுப் பிரசங்கத்துடன் (sermon)" என வெறுமே அறிமுகம் செய்து வைப்பார்.
ஆர்தர் ஃபோர்ட் இறந்து மூன்று கிழமைகள் ஆவதற்குள் ஒருநாள் (ஜனவரி 24/1971), அவர் பின்வருமாறு எழுதினார்: "ஹாய் ரூத், இனிய ஞாயிறு உதயமாகட்டும்! இன்று நாம் பூவுலகில் இருப்பவர்களுக்குத் தேவையான மேலதிக ஆன்மீக விடயங்களை ஆராய்வோம். நானும் அதிலொரு பகுதியாக இனிமேல் இருக்கப் போவதில்லை என்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது என்பதைச் சொல்லியாக வேண்டும். நாம் முதலில் இறைத்தன்மையைப் பற்றி ஆராய்வோம். இறைத்தன்மை என்பது எல்லாவற்றையும் ஒன்றாகப் பிணைத்து வைத்திருக்கும் ஒரு அழிவற்ற சக்தியாகும். இந்த சக்தி மிக வலிமை வாய்ந்தது. கண் இமைக்கும் தருணத்துக்கு என்றாலும் இது நிற்குமேயானால் ஒன்றுமே பிழைத்திருக்க மாட்டா. இதுவே அண்டசராசரங்களையும் ஒன்றிணைக்கும் சக்தியாகும். ஒரு முழுமையான அணு. சிலர் சொல்வது போல அது ஒரு ஆத்மா அல்ல. அது ஒரு சக்தியாகும். நன்மையைத் தவிர வேறொன்றும் அறியாத மிகப்பெரிய விசையாகும். அது ஒரு கெட்ட சக்தி என்றால் எவ்வாறு அது எல்லாவற்றையும் இணைக்கும்? இந்த விசை அல்லது கடவுள் தன்மை என்பது முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டதொரு உண்மை. உலகளாவிய நன்மை. எல்லாம் அடங்கிய ஒன்று. ஆனால் இந்த மையவிலக்கு விசையின் எல்லைக்குள்ளும் விரோதம், பேராசை, தீவினை போன்ற கெட்ட தன்மைகளுக்கும் இடம் உள்ளது. இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு உயிரினத்துக்குள்ளும் கொஞ்சம் கெட்ட தன்மையும் இருக்கும். அது இறைத்தன்மையை எதிர்க்கும். இதிலிருந்து மீள நாம் மீண்டும் பூரணமான நல்லிணக்கத்தோடு ஒன்றுபட வேண்டும். அப்படிச் செய்தால் ஒரு கெடுதலுமில்லை; ஒரு பேராசையுமில்லை; ஒரு வருத்தமுமில்லை; ஒரு பிரிவினையுமில்லை. மீண்டும் மீண்டும் பூவுலகில் பிறந்து நாம் இந்த உண்மையைக் கற்றுக் கொள்வோம். எங்களது எல்லாக் கெடுதலுக்கும் காரணம் பிரிவினை தான்.
ஒரு ரோஜாப் பூவைப் பார். அதனுடைய இலைகள், தண்டு, இதழ்கள் என்று எல்லாவற்றிலும் பூரணத்தன்மை இருப்பதாக நீ சொல்லலாம். ஆனால் பொறு. அதிலொன்று குறையவில்லையா? ஒரு இலை குறையலாம் அல்லது ஒரு இதழ் சற்று அதிகம் சுருண்டிருக்கலாம். அதற்கு அப்பூவையா குற்றம் சொல்வது? அல்லது வண்டையா? அல்லது காற்றையா அல்லது ஏதோ ஒரு வெளிக்காரணி அதன் பூரணத்துவத்தைக் குறைத்து விட்டதா? ஏதோவொன்று நடந்திருக்கிறது. ஆனால் அது என்ன? இறைவன் எல்லா மலர்களுக்கும் ஒரே விதமான வடிவமைப்பையே ஒழுங்கமைத்திருப்பான். எனவே அதற்கு மாறாக அதிலொரு குறையென்றால் அவனைக் குற்றம் சொல்ல இயலாது. எனவே மனிதனில் தான் எதுவும் தங்கியுள்ளது. இறைவன் அல்லது (நீங்கள் விரும்பின்) அந்த மிகப்பெரிய சக்தி மனித குலத்துக்கென ஒரு வடிவமைப்பைக் கொடுத்திருக்கிறான். ஒவ்வொரு பகுதியும் மற்றையதுடன் முறையாகப் பொருந்தி ஒரு பூரணவடிவத்தினை உருவாக்கும். உலகில் பிறந்த முதலாவது மனிதன் ஒரு குறைபாடுகளுமின்றிப் பூரணமாயிருந்தான். நீங்கள் அவனை 'ஆதாம்' என்றும் அழைக்கலாம் அல்லது வேறு எப்படியென்றாலும் அழைக்கலாம். இறைவனெனும் அந்த மிகப்பெரிய சக்தியின் படைப்பு அவன். இம்மனிதன் அந்த மையவிசையினால் அனுப்பப்பட்ட எண்ணத்தின் உருவம். அதன் பின் ஏனைய மனிதர்கள் (ஆண்களும், பெண்களும்) உருவாகப் பிரச்சினைகள் தலை தூக்கின. உடல்களில் வதிய முன்னர் ஒற்றுமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்த ஆத்மாக்கள் பின்னர், எந்த நிலமானது அனைவரது உபயோகத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் என எல்லாவற்றிலும் தன்னிறைவு பெற்று, ஆசீர்வதிக்கப்பட்டதோ அந்த நிலத்தில் தம் பங்குக்காகச் சண்டையிட்டன.
இச் சண்டையானது அவலட்சணமான நினைவு வடிவங்களை (thought patterns) உருவாக்கியது. எண்ணங்களே உருவெடுக்கின்றன ஆதலினால் இவை அடிப்படையான மனித குலத்தின் கட்டமைப்பில் சிறிய, பெரிய குறைபாடுகளை உருவாக்கின. அதாவது கால் விரலொன்றில்லாமை, குறைபாடுடன் கூடிய தலை, கறைபட்ட மனங்கள். இப்படியாக இந்த ஆத்மாக்கள் தொடர்ந்து பிறவிகளெடுத்துக் கொண்டிருக்கையில் இறைவன் மீண்டும் ஒரு பூரண உதாரண புருஷனாக நசரேயனாகிய இயேசுவை அனுப்பி வைத்தார். மீண்டும் ஒரு பூரணத்துவமான பிறவி; குற்றங்குறைகளற்ற வடிவம். விவேகமுள்ள அனைவரும் அவரைப் பின் தொடர்ந்து அப்பூரண வடிவான இறைபுத்திரனை வணங்கினர். ஏனையோர் எள்ளி நகையாடி இப்பூரண வடிவைத் தமக்கே உரிய காமக்குரோத வழிகளில் எவ்வாறெல்லாம் மறைக்க இயலுமோ அவ்வாறெல்லாம் மறைக்க முயன்றனர் என்பதெல்லாம் அறிந்ததே. ஆனால் எமது ஆத்மாக்கள் இறைவனின் அன்பைத் தேடிகொண்டிருக்கும் வரையிலும் நாம் பூரணத்வத்தைத் தேடிக்கொண்டேயிருப்போம். இது தான் மைய விசையுடன் அனைத்தையும் இணைக்கும் சக்தியாகும். அதுவே அன்பின் சக்தி. எனவே ஒருவரையொருவர் நேசியுங்கள்; இறைவனை நேசியுங்கள்; உங்களையும் நேசியுங்கள். இந்தச் சர்வ வல்லமை பொருந்திய சக்தியுடன் ஒன்று சேர்வதற்கு உங்களைத் தகுந்தவராக்குங்கள்."
இந்நூலுக்கான முயற்சி நடக்கையில் இறைவனைப் பற்றி ஆர்தர் உரைக்கையில் எப்போதும் அது ஒரு விசை என்பதாகவே சொல்லிக் கொண்டிருந்ததால் ஒரு நாள் நான், "இறைவன் என்பவர் யார் அல்லது என்ன? பூவுலகில் நீங்கள் இருந்த சமயத்திலும் பார்க்க இப்போ இறைவனை நீங்கள் கூடுதலாக அறிவீர்களா?" எனக் கேட்டேன். அதற்கு அவர், "உண்மையில் மிக அதிகமாக என்று சொல்லலாம்" என்றார். அத்துடன் "இறைவன் தான் இந்த அண்ட சராசரங்களின் மையம். அதிலிருந்து தான் அனைத்தும் உருவாகிக் கொண்டு இருக்கின்றன. அவனே உண்மையும் சக்தியுமாவான். அவனே சடப்பொருளும் ஆத்மாவுமாகும். அத்துடன் பூவுலகிலும் மேலுலகிலும் உள்ள அனைத்துப் பொருட்களும் அவனேயாவான். அவன் அழிவில்லாதவன். அவனறியாததொன்றில்லை. எல்லாமறிந்தவன் அவன். அத்துடன் எமக்குத் தெரிகிறதோ இல்லையோ எங்களது மூலப்பொருள் அவனேயாவான். அவனில்லாமல் ஒன்றுமே இல்லை. அவருடைய முழுமையான ஏக சக்தியே இந்த அண்ட சராசரங்களையும் அதிலிருப்பவை அனைத்தையும் ஒருங்கே இணைக்கிறது. அந்தத் தூயவனில்லையேல் ஒன்றுமில்லை. இறைவன் இருக்கிறான். முடிவில்லாத பரமாத்மா அவன். அவனுடைய மகிமை அளவிடற்கரியது. எனவே எம்மால் அவனை முழுமையாக விளங்கிக் கொள்ள இயலாது. இறைவனின்றி எதுவுமில்லை. எதுவுமேயில்லை. அவனால் தான் உலகில் சத்தியம், ஒளி, பிரகாசம், அமைதி எல்லாம் உள்ளன. அவனே வாழ்வாவான். இது தான் நிஜம். எனவே அவனில்லையெனில்  வாழ்வில்லை; உயிர்களில்லை. நாம் அவனில் ஒரு பகுதி. அதே போல அவன் எங்களில் ஒரு பகுதி. எமது செய்கைகளிலும் குணநலன்களிலும் குறைபாடுகளிருப்பதால் பூரணத்துவத்தை அடைய நாம் மீண்டும் மீண்டும் பிறந்து முயற்சித்துக் கொண்டேயிருக்க வேண்டும். அந்தப் பூரணத்துவத்தை அடைந்தால் நாமும் இறைவனுடன் இரண்டறக் கலக்கலாம். குறைபாடுகளுள்ள ஒன்று ஒரு நாளும் இறைவனின் ஒரு பகுதியாக மாற இயலாது என்பது நியதி. ஏனெனில் குறைகளுள்ளவர் முறையாக இயங்க இயலாது. அந்த நியதி என்றும் மாறாது. அதனால் தான் நாம் சளைக்காமல் மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து, எமது குறைபாடுகளை நிவர்த்தி செய்து பூரணத்துவத்தை அடைந்து, இறைவனின் குறைவற்ற நிறைவான ஒரு பகுதியாக அவனுடன் இரண்டறக் கலக்க முயற்சிக்கிறோம்" என்றார்.
மீண்டும் புரியாமல், "நீங்கள் இப்படியுரைக்கும் போது அது இறைவனை குணநலன்கள் ஏதுமற்ற ஒரு விசை போன்றே எண்ணத் தூண்டுகிறது. அப்படியெனில் அவர் எமது தனிப்பட்ட வழிபாடுகளைச் செவி மடுக்க மாட்டாரா?" எனக் கேட்டேன்.
அதற்கு ஆர்தரின் பதில் "இறைவனானவன் அனைத்தையும் அறிந்தவனாவான். அவன் எமது வேண்டுதல்களையும் வழிபாடுகளையும் செவிமடுக்கிறான் என்பது மட்டுமல்ல நாம் வேண்டுவதற்கு முன்னமே என்ன எங்களது வேண்டுகோள் என்பதனையும் அறிவானவன். சத்திய ரூபமவன். எல்லாமறிந்தவன். அவனில்லையேல் எல்லாமே இருள் மயமாகி விடும். உண்மையும் ஒளியும் அன்புமானவன் அவன். அவன் எம்மைப் படைத்தவனுக்கும் மேலானவன். எமது தந்தைக்கும் மேலானவன். அவன் எங்கள் ஒவ்வொருவரிலும் தனித்தனியே அன்பு செலுத்துகிறான் என்பது தான் உண்மை. அத்துடன் அவனை உண்மையுடனும் அன்புடனும் அணுகினால் அறிவுள்ள பெற்றோரைப் போல எமக்குத் தேவையானவற்றை (அது வேறெவரையும் பாதிக்காது எனில்) தருவான். எல்லா வேண்டுதல்களும் நிறைவேறுமென்று இல்லை. உண்மையான அன்பான இதயத்திலிருந்து உதயமாகும் வேண்டுதல்கள் நிறைவேற்றப்படும். அவன் ஆறுதல் அளிப்பான், அன்பளிப்பான், சுகமளிப்பான். அவன் எம்மை இரவும் பகலும் வருடத்தின் எல்லாப் பருவங்களிலும் கவனித்துக் கொண்டே இருக்கிறான். இறைவனே அனைத்தும் ரூத்!"
மறு நாள் காலை ஆர்தர், "இன்று உறங்குவது போல இறப்பவர்களின் நிலை மாற்றங்களைப் பார்ப்போம்" எனக் கூறினார். "திடீர் மரணங்களையோ அல்லது எதிர்பாராத மரணங்களையோ பற்றி இப்போ நாம் உரையாடப் போவதில்லை. அவற்றைப் பற்றிப் பின்னர் பார்ப்போம். நோயுற்று நலிந்த அல்லது களைத்துப் போன ஒரு உடலை விட்டு ஆத்மா வெளியேறும் இயற்கையான மாறுதலைப் பற்றிப் பார்ப்போம். ஆத்மா தனது உறையிலிருந்து ஒரு வேதனையோ அல்லது புலப்படும் படியான உணர்வோ இன்றி இலகுவாக வெளியேறும். ஒரு கணத்துள் மிகுந்த வேதனையளித்த உடலை அணிந்திருந்தவர் மறு கணத்தில் சொர்க்க லோக உடையணிந்து சொர்க்கபுரியில் இருப்பார். ஆனால் இது சொல்வதைப் போல அவ்வளவு எளிதானதல்ல. இந்த நிலைக்கு நாம் பக்குவப்பட்டிருந்தால் மட்டுமே அது எளிதாக முடியும். நாங்கள் மிகுந்த அழகான, இன்னிசை நிறைந்த உலகிலேயே கண்விழிப்போம். இங்கிருக்கும் மரங்களெல்லாம் உண்மையானவையே. அங்கிருப்பவைகளைப் போல பிரதி பிம்பங்களல்ல. மலர்களெல்லாம் தூய்மையான எண்ண வடிவங்கள். ஆதலினால் அவை பூவுலகில் இருப்பவற்றிலும் பார்க்க மிக மிக அற்புதமாக உள்ளன. இங்கேயிருப்பன அனைத்தும் எண்ணத்தின் வடிவங்களாக இருப்பதால் பறவைகள், மிருகங்கள், ஆத்மாக்கள், மாடமாளிகைகள் உட்பட எல்லாமே பூரண வடிவில் உள்ளன.
"இங்கே கண் விழிக்கும் பொழுது இந்தக் கண்ணைப் பறிக்கும் அழகுகளைக் கனவில் காண்பது போலக் காண்கிறோம். இது உண்மையா? ஏற்றுக் கொள்ளக் கூடியதா? உண்மையாக மனிதனால் இவற்றை ஏற்றுக் கொள்ள முடியாது தான். ஆனால் அன்பு எனும் சக்தியால் முடியும். இந்த நிலையில் என்ன வேண்டுமென்றாலும் அது கிடைக்கும் இன்னொரு உடலைத் தவிர. இன்னொரு உடலை எடுப்பதென்பது எந்நிலையிலும் எமது கட்டுப்பாட்டுள் இல்லை. அது நீண்ட காலம் நாம் பக்குவமடைந்திருந்தால் அத்துடன் ஆன்மீக முன்னேற்றமும் எமக்கு இருக்குமென்றால் எமக்கு அளிக்கப்படும் முன்னுரிமையாகும். அல்லது அகால மரணத்தால் (விபத்துப் போன்ற) இறந்திருந்தால் உடனே நாம் விரும்பினால் பூவுலகுக்குத் திரும்பலாம். இதைப் பற்றிப் பின்னர் நாம் விரிவாகப் பார்ப்போம்.
எமது உடல் வயதாகிக் களைத்து விட்டதால் நாம் சிறப்புகள் நிறைந்த இந்த மேலுலகில் வாழ்வைத் தொடர்வதற்கு ஆவலாக இருப்பதாக எண்ணிக் கொள்வோம். சிறிது நாட்களுக்கு நாம் எமது பழைய நண்பர்களைக் கண்டு அளவளாவி ஆறுதலடைவோம். பூவுலகில் போலவே எமது குண நலன்களின் தன்மையைப் பொறுத்து நாம் மகிழ்ச்சியாகவோ அல்லது குழப்பமாகவோ இருப்போம்.
சிறிது சிறிதாக நாம் ஆத்மாவின் புதிய நிலைக்குத் தயாராகிக் கொண்டு வருகையில் நேரம் விரைந்து செல்வதை உணரத் தொடங்குவோம். நாம் விரும்பின் இறைவனின் திட்டத்திற்கிசைய நடக்கத் தொடங்கியிருக்கலாம் என்பதையும் நாம் உணரத் தொடங்குவோம். இப்போது தான் எமது உண்மையான தன்மை வெளிப்படத் தொடங்கும். நாம் கொண்டாட்டக் களியாட்டங்களில் ஈடுபட்டு இன்பத்தை அனுபவிக்கப் போகிறோமா அல்லது ஆன்மீக முன்னேற்றத்தில் ஈடுபடப் போகிறோமா? நாம் ஆன்மீக முன்னேற்றத்தைத் தெரிவு செய்வோமாயின் எமது சுய முன்னேற்றத்துக்கும் உயர்ச்சிக்குமாகவா அல்லது நாம் சேர்ந்த குழுவினது முன்னேற்றத்துக்கும் உயர்ச்சிக்குமாகவா? இன்னொரு வகையில் சொல்ல வேண்டுமாயின் எங்களுக்கு வரும் முன்னேற்றம் போல் ஏனையவர்களுக்கும் வரவேண்டுமென விரும்புகிறோமா? நான் முதலில் சொன்னதை நினைவு படுத்திக் கொள். ஒரு 
இனத்தின் வளர்ச்சியென்பது அனைவரும் சேர்ந்து ஆன்மீக முன்னேற்றத்துக்காகவும் நிறைவுக்காகவும் ஒரு முகமாக முன்னோக்கி உழைப்பதில் தான் உள்ளது. எனவே நாம் விரைவாக முன்னேற விரும்பினால் எமக்கொத்த கருத்துடையவர்கள் முன்னேறுவதற்கு வழிகள் உள்ளனவா என்பதையும் கவனிக்க வேண்டும்".  
மறு நாள் விட்ட இடத்திலிருந்து ஆர்தர் பின்வருமாறு தொடர்ந்தார், "அந்த ஆத்மாவானது மற்றையவர்களுக்கு எதிராகப் பயங்கரமான பாவங்களை இழைத்ததால் கறைபட்டிருந்தால் (அவையே உண்மையான பாவங்கள்) மிக நீண்ட, ஆழமான தூக்கத்தில் ஆழும்; அல்லது அந்த ஆத்மாவானது மிக அதிகமான பாவங்களால் சூழப்பட்டிருந்தால் தான் விட்டுவிட்டு வந்தவர்களைத் தொந்தரவு செய்யும். நாம் இங்கு அதனைப் 'பேய் பிடித்தல்' என்று சொல்வதில்லை. தொந்தரவு செய்வது என்போம். சில வேளைகளில் அந்த ஆத்மா ஆவியுலகுக்குத் தான் வந்துவிட்டதை உணர்வதில்லை. அப்படியான நேரத்தில் அந்த ஆத்மா அந்தரத்தில் அலைந்து கொண்டு, "ஏன் இங்கு ஒருவரும் என்னைக் கவனிக்கவில்லை" என யோசித்துக் கொண்டு திரியும். சில வேளைகளில் பூவுலகப் பொருட்களிலும் உடமைகளிலுமுள்ள ஆசைகளை விட முடியாமல் பிடிவாதமாக மீள உலகுக்கு வரும். இவ்வாறு குழப்பமடைந்த ஆத்மாக்களுக்கு எம்மால் அவ்வளவாக உதவ முடியாது. ஆனால் உங்களைப் போல இன்னமும் பூவுலகிலிருப்பவர்களின் வழிபாடுகளின் மூலம் அவர்களுக்கு உதவமுடியும். அவர்களுக்காக வணங்குங்கள்.
திடீரென விபத்துக்களிலும் சண்டைகளிலும் இறந்தவர்கள், ஆவியுலகில் தாம் இருப்பதையறிந்து அதிர்ச்சியடைவார்கள். தம்மால் இனிமேல் பணம் சம்பாதிப்பது, பந்து விளையாடுவது போன்ற வழமையான பழகிய விஷயங்களைச் செய்ய இயலாது என்ற விஷயம் அதிர்ச்சியாகவிருக்கும். அப்படிப்பட்டவர்களைச் சமாளிப்பது சற்று சிரமமாகவிருக்கும். ஏனெனில் அவர்கள் சிறிய வயதில் கேள்விப்பட்ட சொர்க்க பூமி இது தானென அவர்களை நம்ப வைப்பது ரொம்பக் கஷ்டம். அவர்களுக்கு சிறிது சிறிதாக எடுத்துச் சொல்ல முயற்சிப்போம். எல்லா விடயங்களும் பூவுலகில் இருப்பதைப் போலவே இருப்பதாக உணர்வார்கள். ஆனால் ஒரேயொரு வித்தியாசம் இருக்கும். எல்லா எண்ண வடிவங்களும் உயிர்ப்புடனுள்ளதால் அவை பூவுலகில் உள்ளவற்றிலும் பார்க்கப் பிரகாசமாகப், பளபளப்பாக ஒளிர்ந்து கொண்டிருக்கும். 
புதிதாக வருபவர்களை நாம் அன்புடன் வரவேற்போம். தியான முறைகளின் மூலமோ அல்லது மேலுலகங்களைப் பற்றிய ஆராய்ச்சிகளின் மூலமோ இப்படிப்பட்ட ஒரு மாறுதலுக்குத் தன்னைத் தயார்ப்படுத்தியிருந்தால் தவிர ஏனையவருக்கு வந்ததும் ஆச்சரியமாயிருக்கும். அவருக்குப் பசித்தால் நாம் உணவை உண்டாக்கிக் கொடுப்போம். அது எண்ண வடிவாலானதாய் இருந்தாலும் அவருக்குப் பூவுலகில் தான் உயிர் வாழ்வதற்கு உதவிய உண்மையான உணவாகவிருக்கும். அவருக்குத் தாகமாயிருந்தால் பருகுவதற்கு ஏதேனும் பானம் கொடுப்போம். அவர் சிறிது சிறிதாக மாறுதலுக்குப் பழகிக் கொண்டு வந்தாலும் இன்னும் தனக்கு உணவும் குடிநீரும் தேவையில்லை என்பதை உணரவில்லை. அவரின் உறவினர்களைக் காணாமல் தேடுவார். சில உறவினர்கள் இன்னும் பூவுலகில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். சிலர் இங்கிருப்பார்கள். சிலர் மேலும் உயர்ந்த நிலைகளுக்குப் போயிருப்பார்கள். சிலர் மறுபிறவி எடுத்திருப்பார்கள். நாம் அவர்களைச் சிறிது நேரம் பொறுத்திருக்கச் சொல்லுவோம். சிறிது நேரத்துள் அவருக்கு மேலும் பல விஷயங்கள் புரிபடத்தொடங்கும். இதற்கிடையில் அவரின் கற்பனை வளத்துக்குத் தகுந்த மாதிரி அவர் நடக்கத் தொடங்குவார். இயற்கையெழில் நிறைந்த கிராமிய வளங்களைச் சிலர் ஆராய்வார்கள். கண்ணைப் பறிக்கும் வண்ணங்களிலும் இனிமை தரும் பசுமையிலும் வியப்புறுவார்கள். சிலர் பெரிய நகரங்களிலிருக்க விரும்பின் உடனடியாக அங்கேயிருப்பார்கள். நகரங்களின் வாகன இரைச்சலிலும் நெரிசலிலும், பரபரப்பாக, அப்படித்தான் இருக்க வேண்டும் என்பது போல இருப்பார்கள். சிறிது காலத்துக்கு அவர்கள் எண்ணப்படியே விட்டுவிடுவோம். எதுவென்றாலும் அவர்கள் எண்ணப்படி செய்யும் படி விட்டுவிடுவோம். ஆனால் எந்நேரமும் உதவக்கூடிய நிலையில் தான் இருப்போம். ஒருவாறு இந்த வாழ்க்கையில் சலிப்புற்றுத் தமது இன்றைய நிலையைப் பற்றி ஆராயத் தொடங்குவார்கள். படிக்கக் கூடிய மனநிலையி ல் இருப்பவர்கள் வகுப்புகளுக்குச் செல்ல விரும்புவார்கள். அவர்களுக்கு வகுப்புகள் உண்டு. சிலர் பூவுலகத் தொடர்புகள் மூலம் ஆராய்ச்சிகள் செய்யும் அமைப்புகளுடன் சேர்ந்து கொள்வார்கள்.
"ஆனால் தனிப்பட்ட ஒருவரின் நிலையை இப்போது ஆராய்வோம். ஒருவர் திடீரெனக் கடுமையான சுகவீனமுற்று இங்கே வருகிறார். அவருடைய சூக்கும சரீரத்தின் கண்களைத் திறக்கிறார். அவர் தன் முன்னே பசிய புற்றரையையும் பச்சைப்பசேலென்ற மரங்களையும் சிறிய நீரோடையுடன் கூடிய வனத்தையும் காண்கிறார். அது மிக ரம்யமாக இருந்தாலும் இது கனவோ என எண்ணுகிறார். ஏனெனில் தான் சுகயீனமாக இருந்தது அவருக்குத் தெரியும். ஒரு சில அடிகள் அந்த நீரோடையை நோக்கி எடுத்து வைத்துப் பார்க்கிறார். ஒருவித சங்கடமும் இன்றித் தன்னால் இலகுவாக நடக்கக் கூடியதாக இருப்பதை உணர்கிறார். அநேகமாக அந்த ஓடையில் அதிகம் மீன்கள் பிடிபடலாம். அந்தப் புல்மேட்டின் மீது அவர் நடந்து திரிகையில் ஒருவரும் கண்ணில் படவில்லை. அந்த நீரோடை எவ்வாறு இவ்வளவு தூய்மையாகவும் பளிங்கு போலும் உள்ளது என வியக்கிறார். பளிங்கு போல ஓடிய ஓடையில் மீன்கள் அங்குமிங்கும் துள்ளிக் குதித்தன. மீன்களைப் பார்த்ததும் அவருக்கு மீன்பிடிக்கும் எண்ணம் மீண்டும் வரத் தூண்டில் ஒன்று கொண்டு வந்திருக்கலாம் என எண்ண உடனே அவர் கையில் ஒரு தூண்டில் வருகிறது. அவர் மீன் பிடிக்கத் தொடங்குகிறார். அவர் தூண்டிலைப் போட்டவுடன் ஒரு பெரிய மீன் பிடிபடுகிறது. அவருக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. வீட்டுக்குச் சென்றதும் உடனே அவற்றைத் தன் மகன்களுக்குக் காட்ட வேண்டும் என எண்ணுகிறார். தொடர்ந்து பல மீன்களைப் பிடிக்கிறார். மீன் பிடிப்பதில் உள்ள தனது ஆசை குறையும் வரை அவர் விடாமல் தொடர்ந்து மீன் பிடித்துக் கொண்டேயிருக்கிறார். இப்போ தனக்கும் தனது நண்பர்களுக்கும் தேவையான மீன்களிலும் பார்க்கக் கூடுதலாகப் பிடித்து விட்டதை உணர்கிறார். எங்கே காரை விட்டுவிட்டு வந்ததென வியக்கிறார். அப்பொழுது தான் முன்பின் தெரியாத ஒரு பிரதேசத்தில் தான் நிற்பதை உணர்கிறார். இங்கு எப்படி வந்தார்? எப்பொழுது வந்தார்? ஒருவேளை இது கனவென்றால் புதிதாகப் பிடிக்கப்பட்ட மீன்களைத் தொட்டுப் பார்க்க முடிகிறது. மணமும் வருகிறது. தூல சரீரத்தின் புலன்களைப் போலவே சூக்கும சரீரத்தின் புலன்களும் வேலை செய்யும். உண்மையில் அவை கூடுதலாக வேலை செய்யும்."
என்ன விசித்திரம்! காரை ஒரு இடமும் காணவில்லை! அத்துடன் மனிதர்கள் இருப்பதற்கான அறிகுறி ஒன்றுமே அங்கு காணப்படவில்லை. அடுத்ததாக என்ன செய்வதென யோசிக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக இருள் சூழத் தொடங்குகிறது. அல்லது அப்படி அவர் எண்ணுகிறார். வீட்டில் தன்னைக் காணாமல் தேடுவார்களே எனத் தீவிரமாக யோசிக்கிறார். அவருக்குத் திடீரென வீட்டுக்குச் செல்ல வேண்டும் போல் தீவிர எண்ணம் வருகிறது. அப்பொழுதே அவர் தனது சொந்த ஊரில் நிற்கிறார். அவரது உடலுக்கு மேல் முன்பின் தெரியாதவர்கள் குனிந்து நின்று கொண்டிருக்கிறார்கள். என்ன செய்கிறார்கள் அவர்கள்? ஒருவேளை மருந்து தருகிறார்களோ? இல்லையில்லை. இது நோயாளியின் கட்டிலல்ல. ஆனால் பிரேதச் சாலை போலுள்ளது. எங்கோ பெரிய தவறு நேர்ந்திருக்கிறது. அவசரமாக வீட்டுக்குச் செல்கிறார். அங்கே அவரது மனைவி கறுப்பு ஆடையுடன் இருக்கிறாள். அமைதியாக ஆட்கள் வந்து சென்று கொண்டிருக்கின்றனர். எங்கோ பெரிய தவறொன்று நேர்ந்திருக்க வேண்டும். இல்லையெனில் தான் ஒரு நாளுமில்லாத விதமாகப் பிடிபட்ட மீனை அவர்களுக்குக் காட்டுவதற்கு முன்னால் நின்று கொண்டிருக்கும் போது இவர்கள் ஏன் தனக்காக அழுகிறார்கள்? அவர் கதவருகில் நிற்பதை அவரது மனைவி பார்க்கிறாள். ஆனால் அவருடன் பேசுவதற்குப் பதிலாக அழத் தொடங்கி விடுகிறாள். "என்ன பிரச்சனை ஹணி" எனக் கேட்கிறார். ஆனால் அவர் பேசுவதை ஒருவரும் கவனித்ததாகத் தெரியவில்லை. "என்ன நடந்தது?" எனக் குரலை உயர்த்திக் கேட்டதற்கும் மௌனமே பதிலாகக் கிடைத்தது. 
அவர் மனைவியிடம் சென்று அவளின் தலையைத் திருப்பி அவளிடம் கேட்கிறார், "ஏன் அழுகிறாய்? நான் இதற்கு முன்னே இவ்வளவு நன்றாக இருந்ததேயில்லை. எனவே கண்களைத் துடை. இரவுச் சாப்பாட்டுக்கு மீனைத் தயார் செய்யலாம்" என்றார். மனைவி அதற்குப் பதிலேதும் கூறவில்லை. அவர் குழம்பினார். ஏன் அனைவரது நடவடிக்கைகளும் விசித்திரமாகவுள்ளன? அத்துடன் ஏன் அனைவரும் அவருடன் பேச மறுக்கின்றனர்? உறவினர்களும் நண்பர்களும் அவரை வெறுக்கும்படி அவர் என்ன செய்தார்? மீனை வைத்து விட்டுச் சமையலறை மேசையருகில் மனச்சோர்வுடன் சென்று அமர்கிறார் அவர். எப்போ இந்த ஆட்களெல்லாரும் செல்வார்கள்? தனது மனைவி வந்து தனக்கு இரவுச் சமையலுக்கு உதவி செய்வாள்? தான் பிடித்த மீனெல்லாம் செதில் நீக்கப்பட்டுக் கழுவப்பட்டிருந்தால் நன்றாயிருக்குமென எண்ணிக் கொண்டே மீனைப் பார்க்கிறார். அவையெல்லாம் வெட்டிக் கழுவப்பட்டு சமையலுக்குத் தயார் நிலையிலிருப்பதைக் கண்டு வியக்கிறார். அவர் சற்றே கண்ணயர்ந்த வேளையில் அவர் மனைவி ஏனையவர்களிடமிருந்து மெதுவாக நழுவி வந்து மீனைக் கழுவி வைத்து விட்டுச் சென்றிருக்க வேண்டும். ஆனால் கண்ணயர்ந்ததாக அவருக்கு நினைவில்லை . அவர் மனைவி அதன் பின்னர் அங்கு வரவுமில்லை. கதவைத் திறந்து மனைவியை அவர் அழைத்த போதும் அவள் வரவில்லை. அவர் தனிமையாய் உணர்ந்தார். வீடு நிறைய ஆட்கள். அப்படியிருந்தும் ஒருவரும் அவரையோ அவர் கொணர்ந்த மீனையோ சற்றும் கவனிக்கவில்லை. அந்த நேரத்தில் தான் அவர், "நான் இறந்து தான் இருக்க வேண்டும் போல" என உரக்கச் சொல்லிக் கொண்டார். அவர் அந்த வார்த்தைகளை உதிர்த்த மறுகணம் மீண்டும் அந்த ஓடையருகிலுள்ள புற்றரையில் நிற்கிறார். ஆனால் இம்முறை அங்கு வேறு சிலரும் இயற்கையழகை ரசித்துக் கொண்டு நிற்கின்றனர். தனது குடும்பத்தினரால் அலட்சியப் படுத்தப்பட்டதால் சிறிது தயக்கத்துடனே அவர் மெல்லிதாக ஒரு 'ஹலோ' சொல்கிறார். உடனே அவர்களைவரும் அவரை நட்புடன் சூழ்ந்து கொள்கின்றனர். அவர்கள் அவரிடம் அவர் பிடித்த மீன்களைப் பற்றிக் கேட்கின்றனர். அந்த இயற்கையழகு அவருக்குப் பிடித்திருக்கின்றதா எனக் கேட்கின்றனர். அவர் எங்கிருந்து வந்தாரெனக் கேட்கின்றனர். தனது காரை எங்கேயோ மாறி விட்டுவிட்டதாக அவர் உரைக்கிறார். அதற்கு அவர்களில் ஒருவர் இனி அவருக்குக் காரின் தேவை இருக்காது எனவும் எங்கு போக வேண்டுமென அவர் விரும்புகிறாரோ அங்கே நினைத்த மாத்திரத்தில் அவர் இருப்பார் எனவும் உரைக்கின்றார். இதைக் கேட்டதும் அவர் தடுமாற்றமடைந்து அப்படியே மயக்கமாகிறார். ஒருவாறு அவர் மயக்கம் தெளிந்து எழுந்த போது ஒருவரைத் தவிர ஏனைய அனைவரும் போய் விட்டிருக்கின்றனர். நீண்ட வெண்மையான தாடியுடனிருந்த அவர், "மகனே நாம் பாடசாலையில் சேர்வதற்கான நேரம் வந்துவிட்டது" என்கிறார். "பாடசாலை" என இவர் வியக்கிறார். "வயதானவரே, நான் என்றோ படித்து முடித்து விட்டேன். அதைப் போல நீங்களும் தான் முடித்திருக்க வேண்டும்" என்கிறார். "நண்பனே, இது வித்தியாசமான பாடசாலை" என்கிறார் அந்த  வயதானவர். மீண்டும் அவர் "இது தான் உண்மையான பாடசாலை. இங்கே எங்களுக்கு எப்படி ஞாபகப்படுத்துதல், எப்படி மறத்தல், படிக்காமலே எவற்றையெல்லாம் அறியலாம் என்றெல்லாம் கற்றுத்தரப்படும்." என்கிறார். "அந்த மனிதர் பெரிய குழப்பத்துக்குள்ளாகிறார். இருந்தும் அந்த வயதானவரைப் பின் தொடர்ந்து ஒரு பாடசாலைக் கட்டடத்துக்குச் செல்கிறார். அங்கே அவருக்கு அறிமுகமில்லாத பலர் வகுப்பறை போல தென்பட்ட ஒரு அறையில் இருக்கின்றனர். அவர்களில் ஒருவரைப் பார்த்தால் லயன்ஸ் கிளப்பில் சந்திக்கும் ஒரு சட்டத்தரணியைப் போலிருக்கிறார். ஆனால் அவர் இரண்டொரு கிழமைக்கு முன் இறந்து விட்டதால் அது வேறு யாரோவென நினைக்கிறார். வகுப்பு ஆரம்பிக்கப்படுகிறது. அந்த வயதானவர், "நீங்கள் எல்லோரும் ஏன் இங்கே வந்துள்ளீர்களென உங்களுக்குத் தெரியுமென நினைக்கிறேன்" என எல்லோரையும் பார்த்துக் கேட்கிறார். எல்லோரும் மௌனமாக இருக்கையில் புதிதாக வந்த இவர் மட்டும் தனது கையை உயர்த்தி உரத்த குரலில், "எனக்கு நான் இங்கே ஏன் வந்தேனெனத் தெரியவில்லை சேர்" என்கிறார். ஏனையவர்கள் இவரைத் திரும்பிப் பார்க்கின்றனர். அனைவரின் பார்வையிலும் ஒரு புரிதல் தெரிகிறது. அவர்களுக்கும் முதலில் ஒன்றும் புரியாமலிருந்து பின்னர் புரிந்து கொண்டிருக்கலாம். அந்த வயதானவர் மெதுவாகச் சொன்னார், "கவனமாகக் கேள் மகனே, ஏனெனில் இது மிக முக்கியமாகத் தெரியவேண்டிய விஷயங்களில் ஒன்று. இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் நான் ஒரு விஷயம் சொல்லப் போகிறேன். எமது மேலுலகத்துக்குப் புதிதாக வந்துள்ள ஜேம்ஸை நாம் வரவேற்போம். அவர் இந்த மாற்றத்துக்கு இன்னும் பழக்கப்படவில்லை. ஆனால் இதே குழப்ப நிலையில் தான் இங்கிருக்கும் பலர் சமீபகாலம் வரையில் இருந்ததனால் நாமனைவரும் சேர்ந்து அவரின் மனக்காயங்களை ஆற்றுவோம். ஜேம்ஸ், நாங்கள் கைகள், கால்களிலும் பார்க்க உங்களுக்கு மிக அண்மையிலுள்ளோம். எனவே நீங்கள் தனியே நின்று குழம்பத் தேவையில்லை. தற்போதைக்கு உங்கள் உற்றார் உறவினர்களை நீங்கள் பார்க்கவும் அவர்களுடன் பேசவும் இயலுமாக உள்ள போதும், அவர்களால் உங்களைப் பார்க்கவோ பேசவோ இயலாதென்பதை மட்டும் ஏற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் அவர்களிலும் பார்க்க உயிரோட்டமாக உள்ளதை இது நிரூபிக்கின்றது. உங்களது அறிவுத்திறன், உணர்வுகள், புலன்கள் உட்பட அனைத்தும் முன்பிலும் பார்க்க மிகக் கூர்மையானதால் நீங்கள் பூதவுடலை விட்டு வெளியேறிவிட்டீர்கள். ஆனால் அவர்களைப் பொறுத்தவரை இப்போதைக்கு அவர்கள் உங்களை வெறும் காற்றாகவே பார்ப்பார்கள். மண்ணுக்கடியில் புதைந்திருப்பதாகவே எண்ணுவார்கள். இது ஒரு பரிதாபத்துக்குரிய நிலை தான்... ஆனால் இதிலிருந்தே நாளை நாம் பாடத்தை ஆரம்பிப்போம்."
ஆர்தர் ஃபோர்டும் இதில் நிறுத்தினார். மறுநாள் பிரதான விஷயத்திலிருந்து சற்றே விலகி, "இப்புத்தகம் பூவுலகிலிருந்து மேலுலகுக்குச் செல்லும் வெவ்வேறு வகையான ஆத்மாக்களின் உண்மை நிலைப்பாட்டைப் பற்றியதாகும்" என்றார். தொடர்ந்து அவர், "மாடமாளிகைகளுக்கு ஆசைப்படுபவர்களுக்கு அவை உடனே கிடைக்கும். ஆனால் ஆன்மீகப் பசி உள்ளவர்களுக்கு அவர்கள் வேண்டியது தாராளமாகக் கிடைக்கும். அது தான் உண்மையான நோக்கம். அதாவது பொருளாசைக்கும் ஆன்மீகத்துக்கும் இடையிலான மோதல். ஒவ்வொரு ஆத்மாவும் தனக்குரிய வழியைத் தானே தான் தெரிவு செய்ய வேண்டும்" என்றார்.
"நேற்றுச் சொன்ன மனிதனின் கதைக்கு வருவோம். மீன் பிடித்தல் மட்டுமே பூவுலகில் அவரது பொழுது போக்காக இருந்தது. அவர் இங்கே வருமுன் தான் ஒரு அழகான ஏரியில் நிறைய மீன்கள் பிடிப்பதாகக் கற்பனை செய்திருந்தார். ஆனால் தான் பிடித்து வந்த மீனைப் பற்றிப் பேசுவதற்கோ அன்றி அதைச் சமைப்பதற்கோ ஒருவரும் இல்லாததைக் கண்டு அவர் ஏமாற்றமுற்றார். பூவுலகிலிருப்பவர்கள் ஒருவருக்கும் அவர் அங்கேயிருப்பது தெரியாதாகையால் அவரது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. சிறிது காலத்தில் அவர்களால் தன்னைப் பார்க்க இயலாதென்பதை அவர் புரிந்து கொண்டார். அத்துடன் புதிய வாழ்க்கைக்கு முன்னரிலும் பார்க்கக் கூடிய கவனம் தேவைப்படுகிறது என்பதையும் புரிந்து கொண்டார். அத்துடன் அவர்களைக் கேள்வி கேட்பதற்கோ பலவந்தப்படுத்துவதற்கோ அவசியம் இல்லாதவாறு விதிகள் ஸ்திரமாக இருப்பதையும் புரிந்து கொண்டார். இப்போ அவர் தன்னைச் சூழ்நிலைகளுக்கேற்ப மாற்றிக் கொண்டார். தனது பழைய வீட்டில் சுற்றிக் கொண்டிருப்பதையும் விட்டு விட்டார். நாம் ஒவ்வொருவரும் இப்படியான கட்டங்களைக் கடக்க வேண்டுமெனப் புரிந்து கொண்டார். எவ்வளவு விரைவில் நாம் விடயங்களைப் புரிந்து, புதிய வழிகளை அறிந்து கொள்கிறோமோ அவ்வளவுக்கு நாம் மகிழ்ச்சியடைவோம் எனவும் புரிந்து கொண்டார். நான் முன்பே கூறியது போல இது ஒரு உழைக்கும் உலகம். சோம்பேறிகள் அப்படியே இருந்து தங்களது விதியை தாங்களே தீர்மானிப்பார்கள். ஒருவரும் அவர்களை உழைப்பதற்குக் கட்டாயப்படுத்த மாட்டார்கள். அவர்களின் அந்தராத்மா அவர்களில் தான் அனைத்தும் தங்கியுள்ளதென்று சொல்லும் வரை அவர்கள் வளர்ச்சியுற மாட்டார்கள்.

No comments: