இது 'A World Beyond' என்ற ஆங்கில நூலின் மொழிபெயர்ப்பாகும். இந்நூலை எழுதியவர் ரூத் மோன்கொமெரி (Ruth Montgomery) எனும் ஒரு பெண்மணியாகும். மனிதருக்குள் மேலுலக ஆத்மாக்கள் வந்து பேசுவதைப் போன்று மேற்குலகில் 'Automatic Writing' என ஒரு விடயமுள்ளது. அதாவது ஆத்மாக்கள் எங்கள் மூலமாக வந்து சில விடயங்களை எம்மைக் கொண்டு எழுதச் செய்வது என்பதாகும். இந்நூலானது அப்படியாகத்தான் எழுதப்பட்டது. 'ஆர்தர் போர்ட்' என்று இந்நூலாசிரியைக்குத் தந்தையைப் போலிருந்த ஒருவர் மேலுலகம் சென்ற பிற்பாடு அவர் மூலமாக எழுதப்பட்டது இந்நூலாகும்.

Tuesday, February 16, 2021

நான்காவது அத்தியாயம்: மேலுலகக் கணனிகள் (Heavenly Computers)

மீன்பிடிக்கும் அந்த மனிதரையும் அவரது செய்கையை ஒருவரும் பாராட்டாமல் போனதையும் நினைக்கப் பரிதாபமாக இருந்தது. ஆனால் ஆர்தர் ஃபோர்ட் இவரிலும் பார்க்க அதிகப் பிரச்சினை உள்ளவர்களும் மேலுலகில் உள்ளனர் என்றார். இங்குள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்ப தங்களை மாற்றுவதற்குச் சிரமப்படுபவர்கள் மறு உலகவாழ்வு ஒன்று இருப்பதை நம்ப மறுத்தவர்களாகவோ அல்லது இதற்குக் கொஞ்சம் கூடத் தங்களைத் தயார் செய்யாதவர்களாகவோ இருக்க வேண்டும். எனவே எதிர்பாராத இந்தச் சூழ்நிலைக்கு ஏற்பத் தங்களை மாற்ற முயலாதிருப்பர். உதாரணமாக இறை நம்பிக்கையற்ற நாத்திகவாதி ஒருவர் தனது வாழ்வு முழுவதும் மறு உலகமொன்று இல்லையென வாதிட்டார். தன் இறப்பின் பின் மறு உலகில் கண்விழித்தார். ஆரம்பத்தில் அவருக்கு வியப்பாகவிருந்தது. பின்னர் கோபமுற்றார். ஏனெனில் இது தனது மனப்பிரமை அல்லது கற்பனை என எண்ணினார். அவருக்கு உதவுவதற்கு வந்தவர்களையும் தனது விபரீதக் கற்பனையின் விளைவுகளென எண்ணினார். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாகத் தயங்கித் தயங்கித் தனது பிழையை ஏற்றுக் கொண்டார். கொஞ்சம் கொஞ்சமாக அவருக்கு எல்லாமே புரிபடத் தொடங்க இம் மேலுலகினைப் பற்றிய அனைத்து விடயங்களையும் அறிவதற்கு வெகு ஆவலானார். அவரைப் பொறுத்தவரையில் முன்னர் இப்படியான ஒன்றே இல்லையென்று இருந்தவர்.
இன்னொரு உதாரணத்தை எடுப்போம். இம்மனிதர் கடவுள் இல்லையென்றே மனதில் திடமாக நம்பியவர். இறப்புக்குப் பின் வாழ்வு இல்லையென்றே இருந்தவர். அவர் பூவுலகில் ஏனையவர்களுக்கு எல்லாம் கொடுமை இழைத்தார். ஏனையவர்களுக்கு உதவும் மனப்பான்மையே அவரிடமில்லை. மொத்தத்தில் அவர் ஒரு நல்ல பிரஜையாக இருக்கவில்லை. அவர் மேலுலகுக்கு வந்த போது கடுங்கோபமுற்றார். ஏனெனில் அவர் தானே உருவாக்கிய ஒரு உலகில் இருந்தார். அவரைச் சூழ்ந்து பேராசை கொண்ட ஆத்மாக்களிருந்தன. அவைகளும் அதே சூழ்நிலையில் தான் அங்கு வந்திருந்தன. ஒத்த கருத்துள்ளவர்கள் ஒன்று சேர்வார்கள் என்பதற்கிணங்க அவர் அவைகளின் நடுவேயிருந்தார். அந்த ஆத்மாக்கள் தாங்களே உருவாக்கிய நரகத்துக்கு இவரை வரவேற்றனர். அவர் அதிர்ச்சியுற்றார். அவர் இப்படிப்பட்ட மனிதர்களிடையே இருக்க விரும்பவில்லை. அவர்கள் குரூரம் நிறைந்தவர்களாகக் காட்டுமிராண்டித் தனமான பழக்க வழக்கங்களுடன் காணப்பட்டனர். அவர் யாருக்காகவும் விட்டுக்கொடாதவர், படித்தவர், உடை நுனியில் கூட அழுக்குப் படாத மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர். தன்னைத் தவிர வேறு எவரைப் பற்றியுமே கவலைப்படாதவர். அந்தத் துஷ்டர்கள் கூட்டத்திலிருந்து விலகுவதற்கு முயன்றார். ஆனால் அவர்கள் இவரைச் சூழ்ந்து கொண்டனர். அவர் உதவிக்கு யாரையாவது அழைத்தார். நல்ல குணமுடைய ஒருவராலும் அந்தத் தீயவர்கள் வட்டத்துள் புக முடியாததனால் அவரைக் காப்பாற்ற ஒருவராலும் முடியவில்லை. சுருக்கமாகச் சொன்னால் அவருடைய சவக்குழியை அவரே தோண்டிக் கொண்டார். அதற்குள் அவர் சிறிது நாட்கள் இருக்க விடப்பட்டுள்ளார். 
இப்போ அவருக்குத் தான் புரிந்த முட்டாள் தனமான காரியங்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிபடத் தொடங்கின. இதிலிருந்து எப்படி விடுபடுவதென்று தெரியாமல் மனம் கலங்கினார். அவர் தனது தவறை உணர்ந்து உள்ளூர மனம் வருந்தி, அரிதாகக் கிடைத்த இந்த மானுடப் பிறவியைத் தன்னைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்ததால் வீணாக்கி விட்டதாக உணர்ந்து கொள்ளும் வரை அங்கேயே விடப்படுவார். அவர் முழுவதுமாகப் பச்சாதாபப்பட்டு உணர்ந்து திருந்தியதன் பின் திருந்தாத ஆத்மாக்களின் பிடியிலிருந்து தானே தன்னை விடுவித்துக் கொள்ளலாம். அதன் பின்னர் அவர் தனது முந்தைய தவறுகளை மறுபரிசீலனை செய்யும் முகமாக நீண்ட காலத்துக்கு ஆத்மீகத் தேடலில் ஈடுபடுவார். அது சில சமயங்களில் மிக மிக நீண்ட பணியாக அமைவதுண்டு. ஏனெனில் அவர் அந்தப் பாதையில் தனியே செல்ல வேண்டும். அவர் மட்டுமே தனது குற்றங்களைச் சரியாகக் கணிப்பிடவும் அதற்கு மன்னிப்புக் கேட்கவும் இயலும். அதே நேரம் அவர் நாடும் பட்சத்தில் அவருக்கு உதவுவதற்கு இங்கே பல கரங்கள் காத்திருக்கின்றன.
ஃபோர்ட் அடுத்ததாகத் தனது கவனத்தை அகால மரணங்களில் செலுத்தினார். "இன்று நாம் விபத்து, கொலை, போர் போன்றவற்றினால் எந்தவிதமான ஆயத்தமுமில்லாமல், அவர்கள் தரப்பில் ஏதும் பிழையுமில்லாமல் திடுமென மேலுலகில் நிற்பவர்களைப் பற்றிப் பார்ப்போம். முதலில் தாம் மேலுலகில் இருப்பதையும் பூவுலகில் இருப்பவர்களால் தங்களை அடையாளம் காண இயலாமல் இருப்பதையும் அறிந்து அதிர்ச்சியுறுவார்கள். ஆனால் அவர்கள் பூவுலகில் இருக்கும் போது மறுவுலக வாழ்வை மறுப்பவராயில்லாமல் இருந்தால், ஓரளவு விரைவாக இச் சூழ்நிலைக்குத் தங்களைப் பழக்கப்படுத்திக் கொள்வார்கள். நீண்ட நாட்களுக்குச் சுகயீனமுற்று இறப்பை எதிர்பார்த்துக் கொண்டு இருந்தவர்களிலும் பார்க்க இவர்கள் சில நேரங்களில் நீண்ட காலத்துக்குத் தூக்கம் கொள்வார்கள். ஆனால் அவர்கள் பெரும் பிழையேதும் புரியவில்லை என்றால் இங்குள்ள சூழ்நிலைக்கு அவர்களைப் பழக்கப்படுத்திக் கொள்வதற்கு இங்கு பல உதவும் கரங்கள் காத்திருக்கின்றன. அதனால் அவர்கள் விரைவில் புரிந்து கொள்ளத் தொடங்குவார்கள். சில சமயங்களில் இவர்கள் ஏனையோரிலும் பார்க்க மிக ஆர்வமாக இங்குள்ள பணிகளைச் செய்வதற்கு சித்தமாவார்கள்."
"மனதில் கசப்பான உணர்வுகளை அதிகம் கொண்டவர்கள் இச்சூழலுக்குத் தங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ள மிகவும் கஷ்டப்படுவார்கள். போருக்குத் தாங்கள் அனுப்பப்படுவதை வெறுக்கும் படைவீரர்களும் இதிலே அடங்குவர். தாங்கள் அனுபவித்துக் கொண்டிருந்த இளமையான பலம் நிறைந்த உடலை இழந்து விட்டதை அறிந்து ஆத்திரமடைவர். இது எல்லாப் படை வீரர்களுக்கும் சேவை செய்பவர்களுக்கும் பொருந்தாது என்பதைத் தெளிவு படுத்திக்கொள்ள விரும்புகிறேன். நான் இப்போ சொல்வது மனித குலத்தின் விடுதலைக்காகத் தங்களது உயிரைக் கொடுக்க விரும்பாத, போர்களை வெறுப்பவர்களைப் பற்றியே சொல்கிறேன். அவர்களைப் பொறுத்தவரை போரென்பது அவசியமற்றது. அவர்கள் பூவுலகிலிருக்கும் போதும் மேலிடத்தில் எடுக்கப்படும் முடிவுகளை எதிர்த்தார்கள். இங்கு வந்ததன் பிற்பாடும் அதே மனநிலையிலேயே இருப்பார்கள். அதாவது இங்கிருக்கும் அன்பான ஆத்மாக்கள், அவர்கள் தங்களது ஆத்ம முன்னேற்றத்தைத் தாங்களே தடுத்துக் கொண்டிருப்பதை அவர்களுக்கு உணர்த்தும் வரை அவர்கள் அப்படியே இருப்பார்கள். எங்களால் மாற்ற முடியாத விஷயங்களுக்காக வீணாக மனஉளைச்சல் பட்டுக் கொண்டு வாழ்க்கையை வீணடிப்பதில் அர்த்தமேயில்லை."
"நாம் இப்போ வாழ்க்கையை வெறுத்துத் தற்கொலை செய்து கொண்டவர்களைப் பற்றிப் பார்ப்போம். இங்கு வருகையில் அவர்கள் மனப்போராட்டதுடன் இருப்பார்கள். ஏனைய உயிர்களைக் கொல்வது போல் தன்னுயிரைத் தான் எடுப்பதற்கும் ஒருவருக்கும் உரிமையில்லை. ஏனெனில் அனைவரும் இறைவனின் ஒரு பகுதியே. தற்காலிக மூளை மாறாட்டத்தில் தற்கொலை செய்தவர்கள் வெகு விரைவில் தங்களைத் தற்கொலைக்குத் தூண்டிய போலியான காரணிகளை உணர்ந்து அவற்றிலிருந்து விடுபடுவார்கள். அவர்களது உணரும் திறன்மூலம் பிரச்சனைகளைப் புரிந்து கொண்டு இப்படி நடந்ததற்கான காரணிகளை விளங்கிக் கொள்ளும் போது விபத்தினால் இங்கு வந்தவர்களைப் போலவே இவர்களும் மிக விரைவில் புதிய சூழலுக்குத் தங்களைத் தயார் செய்து கொள்வார்கள்.
ஆனால் எல்லோரும் அப்படி அதிர்ஷ்டம் செய்தவர்களல்ல. ஏனெனில் சிலர் தாமே சிந்தித்துத் தம் பிரச்சனையிலிருந்து தப்புவதற்குத் தங்கள் உடலை அழித்தால் ஆத்மாவும் அழியும் என எண்ணித் தங்கள் உடலைத் தாங்களே மாய்த்துக் கொள்கிறார்கள். ஆனால் அவர்களின் ஆத்மாவை அவர்களால் அழிக்க முடியாதாகையால் அவர்களின் பிரச்சனை முன்னிலும் பார்க்க இப்போ மிகக் கூடுதலாக இருக்கும். ஏனெனில் எந்தப் பிரச்சனையும் தற்கொலை செய்வதால் தீராது. ஆனால் அடுத்த பிறவி வரும் வரை தள்ளிப் போடப்படும். இங்கே அவர்களை மிகத்துன்பப்படும் ஆத்மாக்கள் என அழைப்போம். அவர்கள் தம்மைத் தாமே அழித்துக் கொண்டதை எண்ணி ஒவ்வொரு கணமும் வெட்கப்பட்டுக் கொண்டும் உடலுடன் இருக்கும் போதே பிரச்சனையைத் தீர்க்காததை எண்ணித் தங்களிலேயே கோபப்பட்டுக் கொண்டும் இருப்பார்கள். இங்கிருப்பதிலும் பார்க்க அங்கிருக்கையில் பிரச்சனையைத் தீர்ப்பது எளிது. பௌதீக உலகின் பிரச்சனைத் தீர்ப்பதற்கு இங்கே வழிகள் கைவசமில்லை என்பது தெரியும் தானே. அதனால் மறுபிறவி எடுக்கும் போது கூடுதலாக என்னென்ன பொறுப்புகளைச் சுமக்க வேண்டி வருமென அறிவதற்காகத் தனது தவறுகளை மீண்டும் மீண்டும் மறுபரிசீலனை செய்து கொண்டிருக்கும் மிக நீண்ட மனவாதையான காலங்களைக் கடக்க வேண்டியிருக்கும்."
"கொலையாளிகளுக்கும் இதே போன்ற மனவாதைகள் தான் இருக்கும். தன்னால் கொலையுண்டவரும் அதேயிடத்தில் இருப்பார் ஆதலால் அவருடைய வாழ்க்கையை அவருக்குத் திருப்பிக் கொடுக்க இயலாத பயங்கர நிலையில் அவர் இருப்பார். கொலையுண்டவரின் பூவுலக வாழ்க்கையில் அவரது சொந்தக் கர்மாவை உரிய காலத்தில் முடிப்பதற்குரிய சந்தர்ப்பத்தைக் களவாடிய குற்ற உணர்வினால் மனவாதைகளுக்கு உள்ளாவார். இறைவனது படைப்புகளுக்கு எதிரான இப்படிப்பட்ட பாவச்செயல்களுக்கு  அவ்வளவு எளிதாகப் பரிகாரம் செய்ய இயலாது. எனவே இன்னொரு பிறவி எடுப்பதற்கான மனதிடம் வரும் வரையில் அவர் மனவாதைகளினால் துன்புறுவார். இறுதியில் அவர் அடுத்த பிறவியில் தனது கர்மவினைகளைத் தீர்ப்பதாக மனத்திடம் கொள்வார்."
"இப்போ நாம் நோயுற்று, நலிந்து, அனுபவித்த வேதனைகளிலிருந்து விடுபடுவதற்காகச் சாவை ஆவலுடன் எதிர்நோக்குபவர்களைப் பார்ப்போம். இவர்கள் இங்குள்ள நிலைமையை மிக இலகுவாக ஏற்றுக் கொள்ளக் கூடியவர்கள். அவர்கள் இங்கே மிக மகிழ்ச்சியாக உள்ளனர். மிக நிச்சயமாக நானும் அவர்களில் ஒருவனே. அங்கே இருக்கையில் இறப்பின் பின்னரான எமது வாழ்க்கையை நிரூபிப்பதற்கு நான் ஆவலாயிருந்தாலும் நோய்வாய்ப்பட்ட எனது உடலின் வேதனை என்னை இறப்பை ஆவலுடன் எதிர்பார்க்க வைத்தது. இங்கு வந்ததன் பின் ஒவ்வொரு கணத்தையும் மிக மகிழ்ச்சியாக அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். இப்படி இயல்பாக இங்கு வருபவர்களைப் பார்க்கையில் களிப்பாக இருக்கும், ஏனெனில் அவர்களின் இதயம் ஏனையோரில் உள்ள அன்பால் நிறைந்திருக்கும். எவர்க்கும் எந்த நேரமும் உதவிடத் தயாராக இருப்பார்கள். சிலர் புதிதாக வந்திருக்கும் குழந்தைகளை (அவர்களின் அன்னையர் இங்கு இல்லாததால்) கவனித்துக் கொள்வார்கள். மேலும் சிலர் இங்கு புதிதாக வருபவர்கள் இப்புதிய சூழ்நிலைக்கு மனதளவிலும் ஆத்ம அளவிலும் இணைந்து போவதற்கு உதவுவார்கள். அதே நேரத்தில் மேலும் சிலர் பூவுலகில் உற்றவர்களை இழந்து வருந்துபவர்களுக்கு அன்பான எண்ணங்களை அனுப்பி ஆறுதல் படுத்துவார்கள்.
அடுத்ததாக, தான் வேறொரு இடத்தில், வேறொரு சமயத்தில் இருப்பதை உணர்ந்தாலும் எங்கே, எப்போ என்பது புரியாமல் இருப்பவர்களைப் பற்றிப் பாப்போம். அவர் மறு உலக வாழ்வைப் பற்றி எந்த ஒரு விதமான எண்ணமுமின்றி, அவ்வாழ்க்கைக்கு எவ்விதமாகவும் தயாரில்லாமல் இருந்திருக்கிறார். இங்கு வந்தவுடன் முதலில் திகைப்பில் ஆழ்வார். ஆனால் பின்னர் ஆவல் மிகுந்த வியப்புடன் காணும் அனைவரிடமும் கேள்விக்கணைகள் தொடுப்பார்: 'எங்கே இருக்கிறோம்?', 'ஏன் நான் பேசினாலும் சிலர் என்னிடம் பேசுகிறார்களில்லை', 'ஏன் எனது மனைவி நான் சொல்வதை கவனிக்காமல் தன் பாட்டில் தனது வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறாள்?'. இறப்புக்குப் பிறகான மறுவாழ்வைப் பற்றிய உண்மைகள் இங்கே எப்போதுமே இருந்திருந்தாலும் அவர் உடலுடன் இருக்கையிலேயே வெகு இலகுவாக அறியக்கூடியதாக இருந்த அவ்வுண்மைகள் அவரை வியப்பிலாழ்த்த அவர் இப்போது தான் விடைகளைத் தேடி அங்குமிங்கும் அலைந்து திரிவார். 
அவர் வேறொரு முன்னேற்றமான வாழ்க்கை முறைக்குத் தன்னைத் தயார் செய்யவில்லை என்றால் படிப்படியாக நம்பிக்கை இழந்தவராக ஆகிவிடுவார். அவர் தனது பழைய வாழ்க்கை முறையான வெற்றியைக் குறிவைத்தல், பணம் சேர்த்தல் என்பனவற்றில் ஈடுபட விரும்புவார். சில காலத்தின் பின்னர் இங்கிருக்கும் சில பழைய ஆத்மாக்கள் அவரை வழி நடத்தத் தொடங்குவார்கள். அவர்கள் அவருக்குப் பல விஷயங்களைப் புரியவைப்பார்கள். இன்னமும் இப்பூவுலகில் அலைந்து திரியவைக்கும் அவரது ஆணவத்தை விட்டொழித்து, சமாதானமானார் என்றால் அதன் மூலம் அவருக்குக் கிடைக்க இருக்கும் ஆச்சரியமளிக்கக் கூடிய அனுபவங்களைப் பற்றிச் சொல்வார்கள். சிலவேளைகளில் அவருக்குப் புரியவைப்பதற்குக் கூடுதல் காலம் தேவைப்படலாம். அதாவது பூவுலகில் நேரத்தை வீணடிப்பதிலும் பார்க்க மேற்சொன்ன வழிகளைக் கையாள்வதில் முன்னேறுவதற்கு கூடிய சந்தர்ப்பம் இருப்பதை அவருக்குப் புரியவைக்கக் கூடுதல் காலம் தேவைப்படலாம். அவர் படிப்படியாகப் பூவுலகத் தளைகளில் இருந்து விடுவிக்கப்படுவார்.
"அதன் பின் அவர் தன் நிலையை உணர்ந்து இங்கேயுள்ள வழிமுறைகளைக் கையாள்வார். அவையாவன: தனிமையில் தன்னைத்தானே உணர்தல், ஏனையோருக்கு உதவுதல், தியானம், இப்போ கடைசியாகக் கடந்து வந்த வாழ்க்கையைப் பற்றிய ஆழ்ந்த மறுபரிசீலனை என்பவை போன்றன. இந்த நிலையானது அவர் தனது கடந்த காலத் தவறுகளை ஆராய்ந்தறிந்து அடுத்து வரும் பிறவியில் சிறப்பாகச் செய்வதற்கு உறுதியான தீர்மானம் எடுக்கும் வரையிலும் தொடரும். இதன் பின்பும் அவர் நிம்மதியின்றித் தான் தனது தவறுகளை உணர்ந்து விட்டதை நிரூபிக்க விரும்பின் முதலாவதாக வரக்கூடிய சந்தர்ப்பத்தில் மீண்டும் பிறவியெடுக்க விரும்பலாம். அப்படிப்பட்ட பட்சத்தில் அவர் சந்தர்ப்பம் வரும் போது அவரது குறைகளைக் களையக்கூடிய சந்தர்ப்ப சூழ்நிலைகளை உருவாக்கக்கூடியதான பல தாய்மார்களில் ஒரு தாயை அவர் தேர்வு செய்யக்கூடியதாக இருக்கும்."
ஒரு ஆத்மா பிறவி எடுப்பதற்குரிய வழிமுறைகளைப் பற்றி மேலும் விபரிக்குமாறு நான் அவரைக் கேட்டேன். அதற்கு அவர், "ஒரு ஆத்மாவுக்கு மிகவும் அவசியமாக விட்டொழிக்க வேண்டிய கர்மாக்களைப் பற்றி ஆழ்ந்து ஆராய்ந்து அறிவதற்கும் மேலும் முன்னேறுவதற்கு என்னென்ன குணாதிசயங்கள் அதிகமாகத் தேவைப்படுமோ என்பதைத் தீர்மானிப்பதற்கும் போதுமான அளவு கால அவகாசம் தேவை. அதன் பின்னரே அவ்வாத்மா பிறவி எடுப்பதற்குரிய சந்தர்ப்பம் வருவதுண்டு" என்றார்.
அவர் தொடர்ந்து, "இவற்றைத் தீர்மானித்ததன் பின் முற்பிறவிப் பாவங்களைத் தீர்த்து முன்னேறுவதற்கு ஏற்ற வகையிலான குணாதிசயங்களைப் பெறக்கூடிய அனுபவங்கள் வரக்கூடியதான சந்தர்ப்பங்களையும் சூழ்நிலைகளையும் கண்டுபிடிக்க வேண்டும். பொறுமை என்னும் குணாதிசயம் தேவைப்படின் அவரது பொறுமையின்மையைச் சோதிப்பதற்கு ஏற்ற சூழ்நிலைகளைத் தேடிப்பிடிப்பார். அன்பு செலுத்துவதைப் பற்றி அறியவேண்டுமெனில் அன்பு குறைவான ஒரு சூழ்நிலையைத் தெரிவு செய்ய வேண்டும். அப்படியென்றால் தான் அன்பு செலுத்தாதவர்களிடையே தனது அன்பு செலுத்துவதற்கான பரீட்சையை செய்து பார்க்கலாம். இவ்வாறே வேறு குணாதிசயங்களுக்கும் ஏற்ற சூழ்நிலைகள் தெரிவு செய்யப்படும். அவர் தனது பெற்றோரைத் தெரிவு செய்யும் தகைமையைப் பெற்றிருந்தால் முந்தைய பிறவிகளில் தன்னோடு தொடர்புள்ளவர்கள், தளைகள் உள்ளவர்களிடையே பொருத்தமானவர்ளைத் தேடிப்பார்ப்பார். அத்தளைகள் நல்லவிதமாகவும் இருக்கலாம் அல்லாததாகவும் இருக்கலாம்.
"பிள்ளைகளைக் கருத்தரித்திருக்கும் தாய்மார்களிடையே ஆண்பிள்ளை, பெண்பிள்ளைகளைக் கருத்திற் கொண்டு தான் எடுக்கப் போகும் பிறவியில் ஆணாகவோ, பெண்ணாகவோ பிறப்பதென்பதைப் பொறுத்து எந்தத் தாயைத் தெரிவு செய்ய இயலுமோ அதற்கேற்ப தெரிவு செய்வார். உயர்தரமான எண்ண ஓட்டங்கள் இருந்தால் கல்வி கற்பதற்குரிய சந்தர்ப்ப சூழ்நிலைகளையும் பார்ப்பார். ஆத்மாவானது பிறவியெடுக்க எத்தனிக்கையில் தான் பிறக்கப் போகும் சூழ்நிலைகள் சம்பந்தமான விடயங்களை இங்கேயுள்ள, நாம் நகைச்சுவையாக 'மேலுலகக் கணனி' (heavenly computer) என அழைக்கும் ஒருவித கொம்பியூட்டர் அமைப்பு முறையுடன் தொடர்பு கொண்டு தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும். அது மனித மூளைக்குக் கொஞ்சமும் எட்டாத மிக மிகச் சிக்கலான ஒரு பதிவு முறையாகும். ஆனால் இங்கு இது மிகச் சரியான முறையாகும். ஒரே நேரத்தில் பல ஆத்மாக்கள் பிறவி எடுக்க விரும்புவதால் இப்பதிவு முறை ஏற்புடையதாகும். ஒரு குறிப்பிட்ட தாய்க்குப் பலர் போட்டியிட்டால் இங்கே பதியப்பட்டிருக்கும் அவர்களின் தகைமைகளின் அடிப்படையில் அந்தத் தாய்க்குப் பொருத்தமானவர் தீர்மானிக்கப்படுவார்.
பூவுலகிலிருக்கும் கொம்பியூட்டர் முறையானது இங்கிருக்கும் கொம்பியூட்டரின் பகுதிகளில் வேலை செய்தவர்களின் மனங்களின் மூலம் அங்கு கொண்டு வரப்பட்டு உருவானதே. இங்கேயுள்ள எல்லையில்லாத அறிவுப்புலனின் ஒரு பகுதியைப் பெற்றே உருவானதாகும். அதே போலவே எடிசன் போன்ற ஏனைய விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளும். நினைவு படுத்திப்பார், "இந்த இடம் ஒளிரட்டும்" என்றவுடன் ஒளிவரவில்லையா? இங்கேயிருக்கும் அதே வடிவத்தையே மனித இனத்தின் பாவனைக்காக என்றே இருக்கும் இயற்கை மூலதனங்களைக் கொண்டு எடிசன் பெளதீகமாக உருவாக்கினார்.
"பிறவி எடுக்கப் போகும் ஆத்மாவானது தனது விருப்பத்தை மேலும் உறுதி செய்து கொள்ளத் தனது வருங்காலப் பெற்றோருக்கு அண்மையில் சிறிது காலம் சார்ந்திருக்கும். பின்னர் நேரகாலம் கூடி வரும் போது குழந்தை பிறக்கும் தருணத்தில் ஆத்மாவானது உடலுள் புகும். சாதாரணமாகப் பிறக்கும் சமயத்தில் தான் இது நிகழும். சில தருணங்களில் பிறப்பதற்குச் சற்று முன்னரோ அல்லது சற்றுப் பின்னரோ புகலாம். ஆத்மா கூடுதல் நேரத்திற்குத் தயங்கினால் அக்குழந்தை உயிர்வாழாது".
இறந்தே பிறக்கும் குழந்தைகளின் விஷயத்தில் என்ன நடக்கிறதென்பதைக் கேட்டேன். அதற்கு அவர், "குழந்தையின் உடல் வளர்ச்சி முற்றுப் பெற்றிருக்காது. அதனால் ஆத்மா அவ்வுடலினுள் புகாது. அப்படியான சந்தர்ப்பத்தில் அந்த ஆத்மா மீண்டும் ஒரு ஊடகத்தைத் தேட வேண்டும். அந்தக் குறிப்பிட்ட பெற்றோருடனேயே வாழ விரும்பின் சரியான தருணத்துக்குக் காத்திருக்க வேண்டும். குழந்தை கென்னடியின் விஷயத்தில் அதுவே நிகழ்ந்தது. அவர் தன்னுடைய பழைய உறவினர்களுடன் மறுபடியும் சேர்வதற்கு முயன்ற வேளையில் அக்குறிப்பிட்ட உடல் முற்றாக வளர்ச்சியுறாத காரணத்தால் உயிர் வாழ இயலாமல் போனதால் மீண்டும் ஒரு சந்தர்ப்பத்துக்காகக் காத்திருக்க முடிவு செய்தார். ஆனால் அச்சந்தர்ப்பம் வரவேயில்லை. எனவே அவர் இன்னும் இங்கேயே இருக்கிறார். இப்போதெல்லாம் அவர் தனது தந்தையாருடனும் சிறிய தந்தையாருடனும் அதிகம் காணப்படுகிறார்.
அன்று முழுவதும் பெற்றோரைத் தெரிவு செய்யும் இந்த முறையினை எண்ணியெண்ணி நான் வியந்து கொண்டிருந்தேன். மறுநாட் காலை ஆர்தர் தனது பேருரையைப் பின்வருமாறு தொடங்கினார்: "இன்று, உன்னை வெகுவாகக் கவர்ந்த மேலுலகக் கம்பியூட்டரைப் பற்றிப் பார்ப்போம். ஒரு ஆத்மாவானது மறுபிறவி எடுக்க விழைகையில் அவ்வாத்மா தனது தகைமைகளையும் (அவர் விளங்கிக் கொண்ட மாதிரி) அதே நேரத்தில் அந்தக் குறிப்பிட்ட ஊடகத்தினைத் தனது பூவுலகப் பிரவேசத்துக்குத் தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தையும் எண்ண அலைகளாகப் பதிவார். அதைப் போலவே ஏனையவர்களும் தங்களது தேர்வுகளை விண்ணப்பித்திருக்கும் பொதுவான எண்ண வடிவத்துள் இவரது எண்ண அலையும் வந்து சேரும். பின்னர் அந்தக் குறிப்பிட்ட சூழ்நிலையில் தன்னைத் தக்க வைக்க மிகவும் பொருத்தமானவர் தேர்ந்தெடுக்கப்படுவார். தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் அவருக்கு அது தானாகவே தெரியவரும். ஏனையோருக்கும் தங்களது கர்மவினைகளுக்கு ஏற்ற விதமாக வேறு சாத்தியக் கூறுகளைத் தேட வேண்டும் என்பதும் தெரியவரும்.
"பூவுலகில் இருப்பவர்களுக்கு நான் சொல்வதைப் புரிந்து கொள்வதும் ஏற்றுக் கொள்வதும் கடினம் என எனக்குத் தெரியும். ஆனால் இங்கே இருப்பவர்களுக்கு இது மிகவும் யதார்த்தமான வழியே. இங்கேயிருப்பவர்கள் இயங்கும் விதமானது உங்களது வழக்கப்படி பார்த்தால் கிட்டத்தட்ட எண்ணங்கள் மூலமாகவோ அல்லது அதீத புலனுணர்வுகள் மூலமாகவோ தான் என்பதை மறந்துவிடாதே. நாங்கள் ஒலிகள் மூலமாகவோ அல்லது கருவிகள் மூலமாகவோ தொடர்பு கொள்ள வேண்டிய தேவையில்லாததால் இயல்பாகவே எண்ண வடிவங்கள் மூலமாகத் தொடர்பு கொள்ள வேண்டுமென்பது வெளிப்படை."
நான் அவரை இடை மறித்து ஊனமுற்ற உடலுடன் பிறப்பவர்களைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர், "ஆச்சரியப்படும் விதமாக சாதாரண ஆரோக்கியமான உடலுடன் பிறக்கும் குழந்தைகளைப் போலவே உடல் ஊனமுற்ற குழந்தைகளுக்கும் ஏறத்தாழ ஒரேயளவு ஆத்மாக்களே இங்குள்ளன. இது இங்கே அறியப்படும் ஒரு முக்கியமான பாடமாகும். பௌதீக உடலில் எவ்வளவு குறைகள் இருக்கின்றனவோ அவ்வளவு விரைவில் அந்த ஆத்மா தனது கர்மவினைகளைப் போக்கி ஆத்மீக முன்னேற்றம் அடைய முடியும். 'இடையூறுகள்' எல்லாம் 'வெற்றிகரமாகக் கையாளப்படின்' அவை உயர்வுக்கான படிகளே. ஊனமுற்ற உடலை மகிழ்வுடன் ஏற்று வாழ்வை வெற்றிகரமாக வாழ்பவர் எல்லா வளங்களுடனும் வாழ்பவரிலும் பார்க்க விரைவாக முன்னேற்றமடைந்து விடுவார். வெகுமதியானது சடப்பொருள் வடிவிலில்லை ஆனால் ஆத்மீக ரீதியில் தான் உள்ளது. ஒரு வாழ்க்கைக் காலத்தில் எவ்வளவுக்கெவ்வளவு இடையூறுகளை ஒரு ஆத்மா தாண்டிச் செல்கின்றதோ அவ்வளவுக்கவ்வளவு அந்த ஆத்மா அதன் பின் (தனது கர்மவினைகளைக் கழிப்பதற்குப்) பிறவியெடுக்க வேண்டிய தருணங்கள் குறைவு."
அடுத்ததாக நான், பிறக்கும் போதோ அல்லது சிறு வயதிலேயோ மனநிலை பாதிக்கப்பட்டவர்களைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர் பின்வருமாறு பதிலளித்தார்: "இந்த நிலைமையானது மிகவும் கவலைக்குரிய நிலைமையாகும். நாம் அவர்களைப் பற்றி நினைப்பதைக் கூட விரும்புவதில்லை. இவையெல்லாம் தங்களை முன்னேற விடாமல் தடுக்கும் முன்செய்த வினைகளைப் போக்குதற்கு மிகவும் போராடும் ஆத்மாக்கள் தாம் ஆன்மீகத்தில் முன்னேறுவதற்காக இப்படியான சித்திரவதைகளையும் ஏற்பதற்கு விரும்புவார்கள். சிலசமயங்களில் முற்பிறவிகளில் செய்த கர்மவினைகளைக் கழிப்பதற்கான காரணத்துடன் இம்மாதிரியான பாதிக்கப்பட்ட உடல்களுடன் பிறப்பார்கள். மேலும் சில சமயங்களில் முற்பிறவிகளில் தங்களால் இழைக்கப்பட்ட கர்மவினைகளுக்காக உண்மையிலேயே கழிவிரக்கப்பட்டுத் தாங்களாகவே இப்படிப்பட்ட உடல்களை எடுப்பார்கள். ஆனால் மிகக்கூடுதலான சந்தர்ப்பங்களில் முந்தைய பிறவிகளில் இழைக்கப்பட்ட மிகப்பெரிய பாவங்களால் மனவாதைக்கு உட்பட்டுத் தங்களுக்குரிய முடிவுகளைத் தாங்களே எடுக்க இயலாமலிருக்கும் ஆத்மாக்களில் கருணை கூர்ந்து உயர்ந்த சக்திகள் அவர்களுக்காக அப்படிப்பட்ட உடலைத் தீர்மானிப்பார்கள். மருத்துவமானது இப்படிப்பட்ட மூளைப் பாதிப்பானது கரு உருவாகையில் ஏற்படும் குறைபாடு என்றோ அல்லது குழந்தை பிறக்கையில் நிகழ்ந்த பாதிப்பென்றோ சொல்லலாம். அதுவே உண்மையுமாகும். ஆனால் அந்த உடலில், பிறக்கும் தருணத்திலோ முன்பின்னோ நுழையும் ஆத்மாவானது இந்தப் பாதிப்பை உணர்ந்தே இருக்கும். அதனால் அது தனது முன்செய்த வினைகளுக்குரிய தண்டனையைத் தானே அனுபவிக்கிறது.
பருவவயதில் அல்லது பருவமுதிர்ச்சி அடைந்த பின்னர் உடலில் ஏற்படும் மிகப் பெரிய காயங்களைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர், "சில வேளைகளில் அப்படிப்பட்ட விபத்துகள் எந்தவிதமான முன் எச்சரிக்கயுமின்றி அந்த ஆத்மாவின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சூழ்நிலையில் நடப்பதால் தவிர்க்க முடியாமலிருக்கும். ஆனால், கூடுதலாக அந்த உடலில் வதியும் ஆத்மா தன்னையறியாமலே தனது கர்மவினைகளைத் தீர்க்குமுகமாக அப்படிப்பட்ட விபத்துகளை வலியவே வர அனுமதிக்கிறது.
பூவுலகிற்கு வரும் ஆத்மா எப்படி ஆண், பெண் பாலைத் தீர்மானிக்கிறதென கேட்டதற்கு அவர், "கூடுதலாக ஆத்மா முந்தைய பிறவிகளில் தான் தீர்மானித்த அதே பாலையே எடுப்பதற்கு விழையும். ஆனால் சில சமயங்களில் சில குணாதிசயங்களை அறிவதற்காக அது மற்றைய பாலுக்கு மாறலாம். ஏனெனில் சில குணாதிசயங்கள் ஒருவகைப் பாலிலும் பார்க்க மற்றையதில் உணர இலகுவாக இருக்கும். மென்மைத் தன்மை. முந்தைய பிறவிகளில் முரடாக இருந்த ஒரு ஆண் சில சமயங்களில் வரும் பிறவியில் மென்மையான குணங்களைப் பெறுவதற்காக மென்மைத் தன்மை தேவைப்படும் சந்தர்ப்ப சூழ்நிலைக்காகப் பெண்ணாகப் பிறக்கலாம். தைரியம். முந்தைய பல பிறவிகளில் கோழையாக இருந்த ஒரு பெண் தனது பூவுலகப் பயங்களைப் போக்குவதற்காக ஒரு ஆண் குழந்தையாகப் பிறக்கலாம்.
இப்போ, 'பால்ஸி' எனப்படும் கைகால் நடுக்கமுள்ள ஒரு பெண்ணைப் பற்றிப் பார்ப்போம். தன்னுடைய இவ்வுலக வாழ்க்கையில் தான் ஒரு குற்றமுமே இழைக்காத போது ஏன் தனக்கு இப்படியொரு கஷ்டம் வந்ததென அவர் எண்ணினார். 'ஆகாஷிக் ரெக்கார்ட்ஸ்' எனப்படும் வான் படிமங்களை நாம் பார்வையிட்ட போது அவர் முந்தைய பிறவியொன்றில் பழைய ரோமாபுரியில் ஒரு கொடிய போர்வீரனாக இருக்கையில் மற்றையவர்களைப் பயத்தால் நடுங்க வைத்து அதில் இன்பம் கண்டிருக்கிறார். காட்டு விலங்குகளைச் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட கிறிஸ்தவர்களின் முன் ஏவிவிட்டு அவர்கள் நடுங்குவதைப் பார்ப்பார். கடைசியில் இப்பிறவியில் பலவீனமான நடுக்கமுள்ள ஒரு பெண்ணாகப் பிறந்து அக்குறையுடனும் நல்லதொரு வாழ்க்கையை வாழ்வதன் மூலம் ஆத்மீகத்தில் பெரிய முன்னேற்றமடைவார்."
"எல்லோரும் தன் மீது அன்பு பாராட்ட வேண்டுமென எண்ணும் ஒரு மனிதனைப் பார்ப்போம். அவர் அனைவரது அன்பைப் பெறுவதற்காகவும் பலருக்குப் பல உதவிகள் புரிவார். அவருக்கு முகத்திலும் கழுத்திலும் பெரிய தழும்புகள் இருப்பதால் ஏனையோர் அவரைப் பார்த்து ஒதுங்கினாலும் அவருடைய உபசரிப்பினால் அவரைச் சகித்துக் கொள்வார்கள். இவ்வளவு அன்பான மனிதன் இவ்வளவு பாரமான சிலுவையைச் சுமக்க வேண்டி இருக்கிறதே என எல்லோரும் அவர் மீது இரக்கப்படுவார்கள். அவர்கள் சொல்வது சரிதான். ஆனால் அவர் அப்படிப்பட்ட குறைபாடுள்ள உடலைத் துணிவாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார். ஏனெனில் முந்தைய பிறவியொன்றில் ஒரு சிறு பிள்ளையை அதன் முகத்திலும் கழுத்திலும் கடுமையாகத் தாக்கியதில் அக்குழந்தையின் எலும்புகள் நொறுங்கி அது இறந்து விட்டது. கண்ணுக்குக் கண்ணென்று உயர்ந்த நூல் சொல்கிறது. அதைத்தான் நாமுணர்ந்து நமது பாவங்களைக் கழித்து இறைவனை அடைவோமாக."

No comments: