இது 'A World Beyond' என்ற ஆங்கில நூலின் மொழிபெயர்ப்பாகும். இந்நூலை எழுதியவர் ரூத் மோன்கொமெரி (Ruth Montgomery) எனும் ஒரு பெண்மணியாகும். மனிதருக்குள் மேலுலக ஆத்மாக்கள் வந்து பேசுவதைப் போன்று மேற்குலகில் 'Automatic Writing' என ஒரு விடயமுள்ளது. அதாவது ஆத்மாக்கள் எங்கள் மூலமாக வந்து சில விடயங்களை எம்மைக் கொண்டு எழுதச் செய்வது என்பதாகும். இந்நூலானது அப்படியாகத்தான் எழுதப்பட்டது. 'ஆர்தர் போர்ட்' என்று இந்நூலாசிரியைக்குத் தந்தையைப் போலிருந்த ஒருவர் மேலுலகம் சென்ற பிற்பாடு அவர் மூலமாக எழுதப்பட்டது இந்நூலாகும்.

Sunday, February 7, 2021

ஐந்தாவது அத்தியாயம்: ஞானாலயம் (Temple of Wisdom)


ஆர்தர் ஃபோர்டின் இறுதிச் சடங்குகள் நிறைவு பெற்றன. அவரது இறுதி ஆசையாக அவரது சாம்பல் மையாமிக்கு அருகே அத்திலாந்திக் சமுத்திரத்தினுள் தூவப்பட்டது. ஒரு மாதம் முடிவடைவதற்குள் அவர் தன்னுடைய தொடரும் வாழ்க்கையின் இன்னொரு புதிய அம்சத்தைப் பற்றிப் பின்வருமாறு விளக்கத் தொடங்கினார்: "எனது பழைய நண்பர்களைச் சந்தித்து உரையாடி, ஃப்ளெட்சருடனும் பல நாட்கள் உரையாடி மகிழ்ந்த பின் நான் ஒரு முக்கியமான இடத்தைத் தேடத் தொடங்கினேன். எனது முந்தைய பிறவிகளின் இடையே இங்கு வசிக்கையில் சற்றே நினைவில் உள்ளதும், எனக்குள் ஃப்ளெட்சரின் ஆத்மா வந்த போது நான் சற்றே உணர்ந்ததுமான அந்த ஞானாலயத்தைத் தான் தேடத்தொடங்கினேன் ."
"நான் அதிக நேரம் தேடவேண்டிய தேவையிருக்கவில்லை. யாரிடமேனும் அதற்கு வழியறிய வேண்டிய தேவையின்றி நானே அங்கு நின்றேன். எனது நினைவில் இருந்ததைப் போலவே அது ஒரு மலைச்சரிவுக்கு அப்பால் மறைவாயிருந்த குன்றிலிருந்து வரும் அருவிக்கருகில் இருந்தது. அது பழமை வாய்ந்ததாக இருந்தாலும் அந்த இயற்கை அழகுடன் மிக அழகாகப் பொருந்தியிருந்தது. அது நமது வாழ்க்கைப் பாதையின் ஒரு பகுதி போல இருந்தது. அங்கு ஆசிரியர்கள் எனக்காகக் காத்திருந்தனர். என்னைக் கண்டதும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். அதனுடைய அற்புதங்களையும் எண்ணங்களின் அழகையும் நான் மறக்கவில்லை என்பதையறிந்து மிகவும் மகிழ்வுற்றனர். வட்டமாக நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. நான் எனக்குப் பரிச்சயமான இடத்தில் அமர்ந்ததும் அவர்களில் வயதில் மூத்தவர் என்னைப்பார்த்து, 'ஆர்தர் நீங்கள் மிகக்குறுகிய காலமே இங்கிருந்து சென்றிருக்கிறீர்கள்' என்றார். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. கிட்டத்தட்ட எழுபது வருடங்கள் பூவுலக வாழ்க்கையை வாழ்ந்தது எனக்கு மிக நீண்ட பயணமாகவிருந்தது. ஆனால் இங்கே அது கண்மூடித் திறப்பதற்குள் முடிந்து விட்டது போலுள்ளது. முக்கால்வாசி நூற்றாண்டுக்கு முன் விட்ட இடத்திலிருந்து பாடத்தைத் தொடர்ந்தோம். காலம் மாறாமல் அப்படியே நின்றது போலிருந்தது."
"தியானத்தைப் பற்றிய உரையாடலுடன் ஆசிரியர் பாடத்தைத் தொடங்கினார். தியானம் பூவுலகிலும் இங்கும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை எனக்கு நினைவுபடுத்தினார். தியானம் என்பது இறைவனின் இதயத்துடன் எம்மைத் தொடர்புபடுத்தும் ஒரு வசீகரமான பாதையாகும். அதனால் தான் பூவுலகிலிருக்கும் போதே தியானம் செய்வது மிக மிக அவசியமானதாகும். ஏனெனில் பூவுலகில் அறிவது இங்கிருக்கும் சாராம்சத்தைத்தான். தியானம் செய்து கொண்டிருந்தால் தான் ஒரு தொடர்ச்சியிருக்கும். அத்தொடர்ச்சி உடைந்து விடக்கூடாது. பிறந்த குழந்தையே அங்கு தொடர்ந்து தியானம் செய்து படைத்தவனுடனான ஒருமையை உணர்ந்து கொண்டிருக்கும்."
"ரூத், காலைவேளைகளில் உன்னுடன் நான் நடத்தும் இந்த உரையாடலுக்கு ஞானாலயத்தில் எமது கலந்துரையாடலை முன்னின்று நடத்தும் பழைய ஆத்மாக்கள் ஒரு கணமேனும் யோசிக்காமல் அனுமதி தந்துவிட்டனர். அவர்களும் என்னைப் போலவே இச்செய்தி பரப்பப்பட்டு அதனால் அனைவரும் பயன் பெறவேண்டும் என ஆர்வத்தோடு உள்ளனர். இப்புத்தக வேலை முடியும் வரை இந்தக் காலை வேளைகளில் நடைபெறும் உரையாடலைத் தொடரும்படி என்னிடம் சொன்னார்கள். இது ஒரு தற்காலிகமான ஏற்பாடு தான். இவ்வேலை முடிந்ததும் நான் வேறு வேலைகளுக்குச் சென்று விடுவேன். இங்கே இருக்கும் உயரிய ஆசிரியர்களுடன் சேர்ந்து, இங்கு வரும் ஒத்த மனநிலையில் உள்ள மாணாக்கருக்கு நான் பயிற்சியாளராக வரக்கூடிய விதமாக என்னைத் தயார் செய்யக் கூடிய வேறு கடமைகளுக்கு நான் செல்வேன். நான் பூவுலகில் இருக்கையில் நம்பிக்கைக்கு உண்மையுள்ளவனாக இருந்ததற்கும் தினமும் தவறாமல் தியானம் செய்ததுடன் எனது பேருரைகள், கலந்துரையாடல்கள் மூலம் தியானத்தின் மகிமையை உலகமெல்லாம் பரப்பியதற்குமான வெகுமதியின் ஒரு பகுதியே இது. இல்லையெனில் நான் மீண்டும் கீழ்மட்டத்தில் இருந்து மாணாக்கனாகத் தொடங்கியிருக்க வேண்டும். அது எவ்வளவு காலமோ தெரியாது. இங்கு நேரத்தை அறியும் வழிமுறைகள் இல்லாததால் எவ்வளவு காலம் பிடிக்குமென்று யாரால் சொல்லமுடியும்?"
"இந்த ஞானாலயத்தைப் பற்றி உனக்கு மேலும் சொல்ல விரும்புகிறேன். காலங்காலமாக இந்த ஞானாலயமானது இப்படியே இருந்து வருகிறது. தீப்ஸ் என்ற பழங்கால ராஜ்யத்திலும் அதே போலப் பழங்காலக் கிரேக்க ராஜ்யமான ஏதென்சு நகரிலும் கிட்டத்தட்ட இதே போன்ற சபைகள் ஸ்தாபிக்கப்பட்டன. இங்கேயிருக்கும் புனிதமான எண்ணவடிவிலான ஞானாலயத்தைப் போலவே பூவுலகில் உருவாக்க வேண்டுமென்று சில பழைய ஆத்மாக்கள் விரும்பி ஞானாலயத்தைப் பற்றிய போதிய அளவு நினைவினைக் கொண்டு பூவுலகில் பிறந்ததனால் உருவாக்கப்பட்டதே அவைகளாகும். இங்கு வழங்கப்படும் அறிவுரைகள் மனத்தாலேயே வழங்கப்படும். ஆனால் தெய்வீகமானது இங்கு வழங்கப்படும் கல்வியின் ஒவ்வொரு அணுத்துகளிலும் ஊடுருவியிருப்பதால் ஒவ்வொரு நாளும் ஒருவரது வாழ்க்கைச் சரிதத்தைப் பற்றிய மிகவும் இனிமையான சமயச் சொற்பொழிவைக் கேட்பது போலிருக்கும். எம்மை இறைவனின் மகிமைகளாலும் அண்டசராசரங்களின் வியப்புகளாலும் நிறைப்பதால் எமக்கேற்படும் ஆத்ம எழுச்சியானது சொல்லிலடங்கா."
"மரங்கள் அடர்ந்த சோலையுள்ள சாய்வான ஒரு மலைத்தொடரைக் கற்பனை செய்து கொள். மரங்களின் இலைகளினிடையே சூரியக்கதிர்கள் புகுந்து வந்து விழ மரங்களின் இலைகள் ஒன்றோடொன்று சேர்ந்து அழகான சித்திர வேலைப்பாடாய்த் தெரியும் அந்த வனத்திலுள்ள சிறிய ஒரு வெளியில் தான் எமது ஞானலயமுள்ளது. ஒதுக்குப்புறமாக, அமைதியாக இறைவனின் ஆடைகளான வெயிலாலும் நிழல்களாலும் சூழப்பட்டுள்ளது. நாம் எமது தூய எண்ணங்கள் மூலம் எமது கல்வியைத் தொடங்குகையில் பறவைகளின் இன்னிசை நிற்பாட்டப்பட்டிருக்கும். ஆனால் தியானம் செய்கையில் அவைகள் சொர்க்கலோக கீதங்களைத் தங்களது கூக்குரல்களால் எழுப்பும். அது இந்த அகிலமெல்லாம் நிலவும் அமைதியையும் ஒருமைப்பாட்டையும் சூழ்ந்து நிற்பதைப் போன்றிருக்கும். ரூத், அந்த ஒலியானது உள்ளக் கிளர்ச்சியைத் தூண்டி எனது ஆத்மாவின் அடி ஆழம் வரை ரீங்கரிக்கச் செய்கிறது. அத்துடன் அது ஒவ்வொரு உயிரினத்துடனும் என்னை இணைப்பதைப் போன்றிருக்கிறது. இந்த அதிசயங்களை எல்லாம் புரியவைப்பது கஷ்டம். ஆனால் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் பூவுலகில் இருக்கையிலே தெரிந்தவற்றுக்கும் இவற்றுக்கும் பெரிதாக ஒன்றும் வேறுபாடில்லை. இங்கிருக்கும் ஒளியானது தூய்மையானது மட்டுமல்ல தொடர்ச்சியானதும் கூட. ஏனெனில் இந்த ஒளியானது சூரியனிலிருந்து வருவதல்ல. மலைகள் சாஸ்வதமாகத் தாங்களே ஒளி வட்டங்களால் சூழப்பட்டிருக்கின்றன. மரங்களும் வியத்தகு விதத்தில் இந்தச் சூழ்நிலைக்கேற்ப தங்களை மாற்றிக் கொண்டன போலும். அவை தங்கள் பாஷையில் கருத்துப் பரிமாற்றம் செய்வதைப் போலுள்ளன. ஊர்வனவற்றின் மற்றும் பறப்பனவற்றின் பாடல்கள் இனிமையானவை. இப்பிரபஞ்சத்தின் வேகத்தினால் உருவாகும் அதிர்வலைகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருப்பதை பூவுலகிலிருக்கும் ஒருவரால் புரிந்து கொள்ள இயலாது."
"ஞானாலயத்தின் இன்னொரு வடிவை இப்போ பார்ப்போம். இங்கே ஒவ்வொருவரும் தத்தமது தேவைகளுக்கு ஏற்றவாறு தங்களுக்குப் பொருத்தமான நிலையில் ஆத்மீக முன்னேற்றம் அடைந்தவர்களுடன் சேர்ந்து கொள்வார்கள். அங்கே பூவுலகில் ஞாயிற்றுக் கிழமைகளில் நாம் ஒன்று கூடி ஓரிரு மணித்தியாலங்கள் இறைவனின் புகழைப் பாடிய பின் பணத்தட்டை அனுப்புவதைப் போல அல்ல இங்கே. இங்கே அங்கு நடைபெறுவது போல தனியே ஒரேயொரு பூசையல்ல. இங்கே ஒவ்வொருவரும் தனது தேவைகளுக்கு ஏற்ற விதத்தில் எடுத்துக் கொள்வார்கள். கிண்ணத்தைத் திருப்பி நிரப்ப வேண்டிய தேவையில்லை. ஏனெனில் அது அந்தந்த நேரங்களில் ஆத்மாக்களின் தாகங்களுக்கேற்ப ஊற்றெடுத்துக் கொண்டே இருக்கும். நாம் எமது ஆன்மீகத் தேவைகளைச் சரியாகக் கண்டு கொண்டோமெனில் ஞானக் கிண்ணத்திலிருந்து விரைவாக ஞானத்தை அருந்தலாம். அவரவரின் தேவைக்கு அதிகமாக ஒருவராலும் அதை அருந்த இயலாது. சிறிது சிறிதாக எமது ஆன்மீகத் தகைமைகளுக்கேற்ப நாம் எமது முன்னேற்றத்தைத் திட்டமிட இந்த ஞானப்பங்களிப்பில் நாம் பங்கெடுத்து அதனாலேயே எமது ஆத்மாவைச் சுத்திகரிப்போம். ஏனென்றால் இந்த ஞானாலயத்துக்கு வெகு அருகிலிருக்கும் இறைவன் எம் ஒவ்வொருவருக்கும் பேரானந்தப் பேரலையாக இருக்கிறான்."
பத்து வருடங்களுக்கு முன் 'லிலி' என் மூலமாக எழுதுகையில் நடந்தது போலவே ஆர்தர் என் மூலமாக எழுதுவதையும் என்னால் பல நாட்களின் பின் எல்லாவற்றையும் சேர்த்து ஒன்றாக மீளப் பார்க்கும் வரை நினைவுக்குக் கொண்டு வர இயலாதிருந்தது. ஆனால் ஆர்தரின் நினைவுச்சக்தி கூர்மையாக இருந்தது. மறுநாட்காலை அவர் பின்வருமாறு தொடங்கினார். "ரூத் நான் நேற்று உனக்குச் சொன்ன ஞானாலயமானது எல்லோருக்கும் உரியதல்ல. பூவுலகிலிருக்கையில் ஆத்மீக முன்னேற்றத்தில் நீண்ட அனுபவம் பெற்றுத் தியானமிருந்து உலகை இயக்கும் மஹாசக்தியுடன் தொடர்பு கொள்ளக் கூடியவர்களுக்கு மட்டும் தான். இங்கு வரக்கூடிய தகைமையைப் பெற்ற நாமெல்லோரும் உண்மையிலேயே பாக்கியசாலிகள். ஏனெனில் உலக பந்தங்களில் ஈடுபட்டு நேரத்தை வீணாக்குவதைத் தவிர்ப்பதன் மூலம் இங்கே வெகு விரைவாக முன்னேற முடியும். இதனை என்றாவது ஒருநாள் வாசிப்பவர்கள் இதனது முக்கியத்துவத்தை உணர்வார்களென நான் நம்புகிறேன். பூவுலகில் மனிதனின் ஆத்மாவைப் பற்றிய அறிவை அடைந்தவர்கள் இங்கே அடையப்பெறும் ஆனந்தமும் திருப்தியும் எண்ணிலடங்கா. இங்கே முன்னேறுவதற்கு அவர்களுக்கு மிகக்குறைவான பிறவிகளே போதுமானது. 
பூவுலகில், இறந்தவர்களின் ஆத்மாக்களுடன் தொடர்பு கொள்வதன் மூலம் ஆத்மா நிரந்தரமானது, அழிவில்லாதது என்பதை நிரூபிப்பதற்காக நாம் எடுத்த முயற்சிகள் அனைத்தையும் தமக்கு எல்லாம் தெரியும் என்பவர்கள் சிலர் நம்பாமல் கேலி செய்து சிரித்தார்கள். நாம் அதனையெல்லாம் பொறுத்துக் கொண்டு எமது நம்பிக்கைக்கு உண்மையாயிருந்தோம். ஏனெனில் இப்படி நம்பாமல் இருக்கும் நிலையும் எமது மிக நீண்ட முன்னேற்றப் பாதையின் ஒரு படிக்கல்லே என்பதனை  நாம் அறிவோம். அப்படிக் கேலி செய்பவர்கள் மீது இரக்கம் காட்டவேண்டும். ஏனெனில் ஆத்மா நிரந்தரமானது, என்றும் இருந்து கொண்டேயிருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ளக் கூடிய அளவு தங்கள் மனதை விரிய விடாமல் வைத்திருக்கிறார்கள்."
ஒருநாட்காலை எனக்கு ஜலதோஷம், தொண்டை நோ இருந்ததால் நான் வழமையான நேரத்துக்கு டைப்ரைட்டருக்கு முன் சென்று அமரவில்லை. இரு மணித்தியாலங்களின் பின் தான் ஓரளவு உடல் நிலை சரியான பின் சென்று அமர்ந்தேன். வழமையாக 'லிலி' தான் டைப்ரைட்டரில் உரையாடலைத் தொடங்குபவர். அன்று ஆர்தர் தான் தொடங்கினார். "ரூத், நான் ஆர்ட். மற்றையவர்கள் சென்று விட்டார்கள். ஆனால் உனக்கு உடல் நிலை சரியில்லாததால் குறிப்பிட்ட நேரத்துக்கு உன்னால் வர முடியவில்லை என்பதை நான் உணர்ந்தேன். எனக்கும் அங்கிருக்கையில் அப்படி நேர்ந்திருக்கிறது. உடல்நிலை சரியில்லை என்றால் முக்கியமான விடயங்களை நான் மறந்து விடுவேன். லிலி இங்கே நீண்ட காலமிருப்பதால் உடலின் தன்மைகளை அவர் மறந்துவிட்டார். ஆனால் நான் நீ ரெடியாகும் வரை காத்திருந்தேன்.
"இன்று நானுனக்கு இவ்வளவு காலமும் தெரியாத ஒரு விஷயத்தைச் சொல்லப் போகிறேன். இங்குள்ளவர்கள் ஒருவரையொருவர் பற்பல பிறவிகளில் சந்தித்திருப்பார்கள். உலகின் உயிரினங்களின் பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களில் சிலர் ஒன்றாக இருந்திருப்பார்கள். ஏதோ ஒரு கட்டத்தில் பூவுலகிலோ அல்லது மேலுலகிலோ எந்த இருவரின் பாதைகளும் நிச்சயம் சந்தித்திருக்கும். அதன் காரணமாக எந்த ஒருவரும் மற்றையவருக்குப் புதியவரல்ல. நாமெல்லோரும் ஒருவரின் பகுதியே மற்றையவர் என்பதையும் நாமெல்லோரும் இறைவனின் ஒரு பகுதியே என்பதையும் இதனால் இலகுவில் புரிந்து கொள்ளலாம். எல்லா ஆத்மாக்களும் இறைவனின் உருவாக்கங்களே. அது போலவே மரங்களும் பூக்களும் அருவிகளுமாகும். ஆனால் அவர் எம்முள் தனது ஆத்மாவை சுவாசித்ததால், அவர் தனது வடிவில் எம்மை உருவாக்கியதால் நாம் சிந்திக்கக் கூடிய வல்லமையையும் அதனால் சரி, பிழைகளை அறியக் கூடிய வல்லமையையும் பெற்றுள்ளோம்.
"சரி, பிழை என்பது வெவ்வேறு இன மக்களுக்கு வெவ்வேறு விதமாக இருக்கும். ஆனால் இன்னொரு உயிரை வருத்துவதென்பது தன்னையும் இறைவனையும் வருத்துவதற்குச் சமமாகுமென்பது வெளிப்படை. அது பிரதான குற்றமாகும். மற்றையவர்களுக்கு உதவினோமெனில், அது பிழையான வழிகளில் என்றாலும் நாம் பொதுவான இலட்சியமான இறைவனுக்கு உதவுவது என்ற வழியை நோக்கிச் செல்கிறோம். அந்தப் பிழையான வழிகள் சில சமயங்களில் சட்டத்துக்கு முரண்படலாம். உதாரணமாக அமெரிக்காவில் சில சமயம் நாம் சட்டத்தை மீறிச் செயற்பட்டாலும் இறைவனின் வழிகளுக்கு அது எதிராக இருக்க வேண்டிய அவசியமில்லை. சட்டங்களெல்லாம் பொதுவாகப் பெரிய அளவிலான மக்கள் தொகை ஒன்றாக நிம்மதியாக வாழ்வதற்காக ஏற்படுத்தப்பட்டவையே. அடிப்படைப் பாவமானது இன்னொருவரை உடல் ரீதியாகவோ, மனரீதியாகவோ வேண்டுமென்றே வருத்துவதாகும். நல்லதோ, கெட்டதோ எமது எண்ணங்களெல்லாம் செயல்களே. மற்றையவருக்கு எதிராக நாம் எதையாவது எண்ணினோமெனில் அது அவர்களின் தட்டிலிருந்து உணவையெடுத்து உண்பதைப் போல பாவமானதே.
மறுநாட்காலை லிலியின் அறிமுகத்துடன் ஆர்தர் தொடர்ந்தார். "ஹாய் ரூத், நீ சுகமானதையிட்டு மகிழ்ச்சி. இன்றைய பேச்சுக்கு வருவோம். நான் மறு உலகைப் பற்றி நிரம்பவே வாசித்து அறிந்திருந்ததாலும் எனக்குள் ஆத்மா வந்த நேரங்களில் மறு உலக அனுபவங்கள் இடையிடையில் வந்ததாலும் முன்பே சொல்லியது போல் நான் இங்கு வரும் போது இங்கு எப்படியிருக்குமென்று எனக்குத் தெரியுமென்று நான் நினைத்தேன். ஆனால் எனக்கும் இங்கே சில ஆச்சரியங்கள் காத்திருந்தன. உதாரணமாக நாம் முயற்சி எடுத்தால் தான் எவரது அறிவுரையையும் கேட்க முடியும். நாம் எண்ணுவதன் மூலமே எந்த இடத்துக்கும் சென்று எவரையும் பார்க்க முடியுமென்பது உண்மை. ஆனால் அதிலும் சில விதிவிலக்குகள் உள்ளன: ஒருவர் உங்களைப் பார்க்க விரும்பவில்லை என்றால் நீங்கள் அவரை அணுகவோ அவரது நடவடிக்கைகளைப் பார்க்கவோ முடியாது. அது இருவழிப் பாதையாக இருக்க வேண்டும். நான் ஃப்ளச்சருடன் பல மணி நேரங்களுக்கு உரையாட விரும்பலாம். ஆனால் நான் பூவுலகிலிருந்த போது அவர் என் மூலமாக நடத்திக் கொண்டிருந்த பணியை விடவும் அவருக்கு வேறும் பல பணிகளுள்ளன. எனவே எனது விருப்பங்களை அவரில் திணிக்க இயலாது. அவரும் என்னுடன் தத்துவ விஷயங்களைப் பற்றி சம்பாஷிக்க விரும்ப வேண்டும் அல்லது எனக்கு இடங்களைச் சுற்றிக் காட்ட விரும்பவேண்டும். உண்மையில் இங்கும் பார்ப்பதற்கு இடங்களுள்ளன.
"நான் ஒருவருக்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஏதாவது சொல்ல விரும்பினால், சில சமயங்களில் அவருக்கு அப்போ நேரமில்லாமல் போகலாம். இங்கே எந்த நேரத்திலும் பல்வேறு வகையான செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இன்னொரு ஆத்மா எம்மைச் சந்திக்க விரும்பின் நாமும் சில வேளைகளில் அவருக்கு உதவமுடியாமற் போகலாம். நான் சொல்வது உனக்குப் புரியுமென நினைக்கிறேன். இதனால் எங்களது தனியுரிமை பாதுகாக்கப்படுகிறது. அங்கேயும் கூட நீங்கள் ஒருவருடன் பேசவிரும்பாவிடின் தொலைபேசியைத் தவிர்ப்பதைப் போன்றதே இதுவும்."
"சிலர் இங்கு புதிதாக வரும் ஆத்மாக்களுக்குக் கற்றுத் தருகிறார்கள். சிலர் பூவுலகிலிருக்கும் போது நன்றாகக் கற்று உணராமல் விட்ட தத்துவவியல் மற்றும் வேறு முன்னேற்றம் தரக்கூடிய பாடங்களைக் கற்க முயல்கிறார்கள். சிலர் கோட்பாடுகளை ஆராய்வதில் முழுமூச்சாக ஈடுபடுகிறார்கள் அல்லது முற்பிறவிகளில் நிறைவேற்ற முடியாமல் போனவைகளைச் சரி செய்யும் முகமாக ஆழ்ந்த தியானத்தில் அல்லது வழிபாடுகளில் ஈடுபடுகிறார்கள். சொர்க்கத்துக்கு உங்களைப் போலவே நாமும் தூரத்திலேயே உள்ளோம். நாம் தூல சரீரத்தை விடுத்து சூக்கும சரீரத்தை எடுத்துள்ளதால் நாம் இறைவனுடன் இரண்டறக் கலந்து விட்டோமென நினைப்பது முட்டாள் தனமாகும். இறைவனுடன் இரண்டறக் கலப்பதானது, பல காலத்திற்கு இறைவனின் வழிமுறைகளுக்கு ஏற்ப நடப்பதற்கான முயற்சிகளுடன் ஏனையவர்களின் முன்னேற்றத்துக்கு உதவுவதனாலும் அடையப்படும். ஏனையோருக்கு நன்றியை எதிர்பாராமல் செய்யும் நற்காரியங்களால் இறைவனை அடையும் பாதையானது இலகுவாகவும் எளிதாகவும் மாற்றப்படும்.
எந்தவிதமான நன்றிக்கடனையோ வெகுமதியையோ எதிர்பாராமல் செய்யப்படும் எந்தவொரு காரியமும் ஆன்மீக முன்னேற்றத்தின் ஏணிப்படிகளே. வலதுகை கொடுப்பதை இடதுகை அறியாதிருப்பது நன்றென்பது நினவிலுள்ளதா? எனவே உலகில் வெகுமதிகளையோ நன்றிக்கடன்களையோ எதிர்பாராமல் கொடுப்பனவற்றைப் பிறர் அறியாமற் கொடு. கொடுப்பதிலேயே மகிழ்ச்சியுள்ளது. அதனை ஏனையவர்களுக்குச் சொல்வதிலே அல்ல. மனிதர்களிடமிருந்து வெகுமதி கிடைத்த பின் எப்படி நீ இறைவனிடமிருந்து வெகுமதி எதிர்பார்க்கலாம்? பூவுலகில் ஏனையோர்க்கு உதவுவதால் கிடைக்கும் புகழ்ச்சியும் பெருமையும் வெகுமதிகளே. எமக்கு நாம் உதவுவதற்கு நாம் புகழ்ச்சியை எதிர்பார்க்கிறோமா? இல்லையே. அப்படியாயின் ஏன் எம்மிலும் இறைவனிலும் ஒரு பகுதியாயிருக்கும் ஏனையோருக்கு உதவும் போது மட்டும் புகழ்ச்சியை எதிர்பார்க்கிறோம்?
"ஞானாலயமானது ஒரு இடமல்ல. அது ஒரு மனநிலையே. நிறைவான இனிமையான எண்ணங்களினாலும் உள்ளுணர்வுகளினாலும் ஆன ஒரு உயர்ந்த மனநிலையே. ஒவ்வொருவரும் அதனை எங்களது கண்ணோட்டத்திலேயே பார்ப்போம். எனக்கு அது அழகு நிறைந்த சத்தியங்களால் சூழப்பட்டிருக்கும் ஒரு ஸ்தலமாகும். நம் ஒவ்வொருவருக்கும் சத்தியத்தை உணரும் தன்மை உள்ளது. ஞானாலயமானது அந்தப் பேருண்மையின் ஓர் உயர்ந்த வடிவமே. ஆத்மாவைப் புரிந்து கொள்ளவும் ஆன்மீக முன்னேற்றத்தை அடையவும் விரும்புபவர்கள் இங்கு கற்பதற்கான சந்தர்ப்பத்தை விரும்புவார்கள். உள்ளூர நாம் முயலாவிடின் நாம் நிரந்தரமான எதையும் சாதிக்க முடியாது.
நாம் சிறந்த மனிதகுலமாகப், பண்பட்ட மனிதராக வரவேண்டுமெனில் (இந்த) வளர்ச்சிக்கான முயற்சியானது ஒவ்வொரு கட்டத்திலும் தொடரப்பட வேண்டும். தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம். மிக மேன்மையான இனமாக மனித இனம் வருவதற்கான சக்தியும் வலுவும் எமக்கு உள்ளது. அதற்கு என்ன செய்ய வேண்டுமென்றால்: ஒரு தனிமனிதனோ அன்றி ஒரு குறிப்பிட்ட இனமோ சக்தி வாய்ந்ததாக வர இயலாது. முழு மனித இனத்தின் முயற்சியாலேயே இது முடியும். அதனாற் தான் ரூத், ஏனையோர் கஷ்டப்படும் போது உதவிக்கரங்களை நீட்டுவது அவசியமாகிறது. இது ஒரு அதீதமான கற்பனையாளனின் கற்பனையில் எழுந்த (எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் என்ற) கனவுலகமல்ல. ஆனால் மனித சமுதாயத்தின் மறுமலர்ச்சி ஆகும். முன்னொரு காலத்தில் நாம் உயர்ந்த இனத்தின் ஒரு பகுதியாக இருந்தோம். நான் இப்போ உனக்குச் சொல்லிக் கொண்டிருக்கும் இந்த உண்மைகளை அறியும் தறுவாயில் இருந்தோம். அந்த அறிவை வைத்து என்ன செய்வதென்றும் அறிந்திருந்தோம். ஆனால் பேராசை, அவா, வெறுப்பு இவை போன்ற வேறும் பல கீழான உணர்ச்சிகள் மனித குலத்தைப் பௌதீக உலகில் ஆட்கொள்ளத் தொடங்கிவிட்டன"
மறுநாட்காலை சற்றுப் பிந்தி எழுந்தேன். அவசர அவசரமாக டைப்ரைட்டருக்குச் செல்ல ஆர்தர் "ரூத், இது ஆட்ர், மற்றவர்கள் போய்விட்டனர். ஆனால் நீ எப்படியும் வருவாய் என்ற நம்பிக்கையில் நான் காத்திருந்தேன்." என்றார். பின்னர் சற்றே வேடிக்கையாக பேசிய பின் பின்வருமாறு எழுதினார்: "ஞானாலயத்தைப் பற்றி மேலும் சில விஷயங்கள் சொல்கிறேன். இங்கு நாம் தத்துவம் சார்ந்த துறையில் உயர்வானவர்களைப் பற்றி அறியக்கூடியதாக உள்ளது. இங்கே இருப்பவர்கள், மற்றும் மீண்டும் பூவுலகில் பிறந்து விட்டவர்களைப் பற்றியும் கூட. அவர்கள் சென்று விட்டாலும் அவர்களின் பதிவுகள் இங்கே இருக்கும் (உனது முந்தைய பிறவிகளின் பதிவுகளிருப்பதைப் போல). பிரபஞ்சங்களின் இரகசியங்களிலிருந்து எமக்குத் தேவையான வழிகாட்டுதல்களைப் பெற நாம் ஞானாலயத்துக்குச் செல்வோம். எப்படிச் சரியான முறையில் எண்ணுவது எனவும் எப்படித் தியானம் செய்வது எனவும் கற்போம். எமது எண்ணும் கருவியானது எமது ஆத்மாவின் ஒரு பகுதியாகும். அதனால் தான் பூவுலகில் அதனை ஆழ்மனம் என அழைக்கிறார்கள். அது எப்போதும் எம்முடனேயே இருக்கும். ஆனால் எமது வெளி மனமானது எமது பௌதீக உடலினால் மட்டுமே இயக்கப்படுகிறது.
"உலகம் உருவாக்கப்பட்டதில் இருந்து நாம் கிரகிக்கும் எல்லா விடயங்களும் எமது ஆழ்மனதில் பதிந்திருக்கும். எமது ஆழ்மனதை படிவங்கள் நிறைந்த கோப்புகளைச் சேகரித்து வைக்கும் ஒரு மிகப்பெரிய அலமாரிக்கு ஒப்பிடலாம். எமக்குத் தெரிந்த எல்லா அலமாரிகளிலும் பார்க்க மிகப்பெரிய அலமாரி இதுவாகும். ஆனால் நாம் பௌதீக உடலுடன் இருக்கையில் சாதாரண வழிகளில் எமது ஆழ்மனதை உணர்வது கஷ்டமாகும். ஏனெனில் ஆழ்மனதின் அந்த அறிவுக் களஞ்சியத்தில் இருப்பவை நினைத்தவுடன் வெளியே கொணரமுடியாத உயர்ந்த விஷங்களாகும். கனவுகள் மூலமாகவும் தியானத்தின் மூலமாகவும் அந்த அறிவுடன் அவ்வப்போது தொடர்பு கொள்கிறோம். அதனுடன் ஹிப்னாட்டிசம் எனப்படும் ஆழ்மன அகழ்வின் போதும் அந்த விடயங்கள் சிலவற்றை மேலே கொண்டு வரப்பார்க்கலாம். எந்த வழிகளிலும் எல்லா விடயங்களையும் வெளிக்கொணர முடியாது. ஆனால் இங்கே ஞானாலயத்தில் எந்த நேரத்திலும் அவற்றை அறிய இயலுமாக உள்ளது. அத்துடன் ஆத்மாவின் சில சிறப்பு அம்சங்களை நாம் விருத்தி செய்து கொள்வோமாயின், எம் கடந்த பிறவி, அதற்கு முந்தைய பிறவிகளை மட்டுமல்ல யுகம் யுகமாக நாம் எடுத்திருக்கும் எல்லாப் பிறவிகளையும் நினைவுபடுத்த இயலுமாக இருக்கும்.
"இங்கே ஞானாலயத்தில் சோக்கிரட்டீஸ் இருந்திருக்கிறார். 'கான்ட்' (Kant) இருந்திருக்கிறார். 'ஜங்' (Jung) இருந்திருக்கிறார். மேலும் பூவுலகில் மதிப்பளிக்கும் பலர் இங்கே இருந்திருக்கிறார்கள். இங்கே அவர்கள் வெவ்வேறு தரங்களில் மரியாதைக்கு உரியவர்களாய் இருக்கிறார்கள். இங்கே இருக்கும் சில உயர்வான உள்ளங்கள் பூவுலகிலிருக்கும் போது கவனிக்கப்படவில்லை. ஆனால் அவர்கள் தங்கள் எளிமையான நம்பிக்கைகளிலிருந்து வளர்ச்சியடைந்து மிகப்பெரிய அறிஞர்களாக, குருவாக மாறி இங்கே ஞானாலயத்திற்குச் சேவை செய்கிறார்கள். பலருக்கு மறுமுறை பிறக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் அவர்கள் தங்கள் பிறவியின் பலனை நிறைவேற்றி விட்டார்களென்பது மட்டுமல்ல, இங்கே மேலுலகில் அவர்களின் பங்களிப்பு கணிசமான அளவு உள்ளதால் அவர்களின் பணி பூரணமாக்கப்பட்டு விட்டது. அவர்கள் இங்கே சுதந்திரமாக முன்னேற்றத்தின் பல்வேறு நிலைகளினூடாக மிக உயர்ந்த நிலை வரைக்கும் பிரயாணம் செய்யலாம். இருந்தும் அவர்கள் சேவை செய்வதில் மிக ஆர்வமாக உள்ளதால் இங்கே 'நாள்' என்று அழைப்பதன் சில பகுதியை ஞானாலயத்தில் இருக்கும் எம்மைப் போன்றவர்களின் முன்னேற்றத்துக்கு உதவுவதற்காகப் பயன்படுத்துகிறார்கள்.
"இங்கு வந்ததன் பிற்பாடு பல ஆத்மாக்கள் கற்க ஆசைப்பட்டு அதற்கான முயற்சியும் எடுப்பார்கள். ஆனால் அவர்களெல்லாம் ஞானாலயத்தில் சேர்வதற்கு இன்னும் சிறிது காலம் செல்லவேண்டும். ஏனெனில் ஞானாயத்தின் மறைபொருளான கல்வியை அவர்கள் விளங்கிக் கொள்வது கடினம். அது ஆன்மீகத்தில் குறிப்பிட்ட அளவு முன்னேற்றம் அடைந்தவர்களுக்குத் தான் புரியும். முந்தைய பிறவிகளில் ஆன்மீக முன்னேற்றம் அடையாதவர்களுக்கு இக்கல்வியை விளங்கிக் கொள்வது கொஞ்சம் கடினமாகும். அப்படிப்பட்டவர்களுக்கு இங்கே பல முன்னேற்றத்துக்குரிய பாடசாலைகள் உள்ளன. அவர்கள் அங்கு தத்துவவியலின் அடிப்படை உண்மைகளை மட்டுமல்லாது எமது வாழ்வின் நோக்கங்களையும் அறியமுடியும். நாம் இறைவனின் வடிவத்தை மட்டுமல்ல அவரின் தன்மைகளையும் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறோம். எனவே எமது யாத்திரையை நிறைவு செய்து கொண்டு இறைவனை அடைவதற்கு நாம் இப்பிரபஞ்சத்தின் தத்துவத்தையும் அதனது நியதிகளையும் புரிந்து கொள்ள வேண்டும். அப்படியென்றால் தான் நாம் இறைவனால் உருவாக்கப்பட்ட இவ்வுலகிலிருந்து முரண்பட்டு நிற்க மாட்டோம்.
"தொடக்கநிலைப் பாடசாலைகளில், ஆத்மாக்களுக்கு நேரத்தை எவ்வாறு உள்வாங்கிக் கொள்வது என்று கற்பிக்கப்படும். நாமே காலமாக மாறுவோம். அப்போ எந்த ஒரு விஷயமும் எமது ஒத்துழைப்பில்லாமல் நடைபெறாது. எம்மைப் பொறுத்தவரையில் என்றாலும் அப்படியாக இருக்கும். எனவே முயற்சி எடுக்காமல் சோம்பேறிகளாக இருந்தால் நாம் காலம் ஸ்தம்பித்து நிற்பவர்களாக இருந்து விடுவோம். ஆனால் நாம் முன்னேறி வளர்ச்சியடைய எண்ணினால் எமக்குள் உள்ள காலமானது சீரான வேகமொன்றில் நாம் கற்க வேண்டிய பாடம் முடிவடைந்து அடுத்தது தொடங்கும் வரை முன்னேறும். நேரமானது வேறுபடும் தன்மையுடையது. அது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். ஏனெனில் எந்த இரு ஆத்மாவும் ஒரு போதும் ஒரே விதமான ஆத்மீக முன்னேற்ற நிலைமையில் இருக்கமாட்டார்கள். அறிவறிந்த பழம் பெரும் ஆத்மாக்கள் எங்களின் அறிவுச்சாரங்களைத் திறந்து எம்மைப் புதிய பாதைகளின் மூலம் செல்ல வைப்பதன் மூலம் எமக்குள் இருக்கும் காலத்தை முன்னே செல்ல வைக்க உதவுகிறார்கள். இம்மேலுலகானது வளர்வதற்கும் முன்னேறுவதற்குமுரிய ஆவலைத் தூண்டக்கூடிய உலகாகும். பல தளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் அறிவு நிறைந்த ஞானவான்கள் இறைவனின் அருளால் எமது நன்மை கருதி நான் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தத் தளத்துக்கு ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு எமக்கு உதவுவதற்காக வருகை தருவது ஒரு அரிய சந்தர்ப்பமாகும். சில ஆத்மாக்கள் அநியாயமாக இதனை வீணடிப்பது அறியாமையாகும்.
இப்பிரபஞ்சத்துடன் ஒன்றிய நிலையிலிருந்து நாம் முரண்பட்டு நிற்பதை, இறப்பு எனும் வாயிலினூடாக மறுஉலகில் அடியெடுத்து வைக்கையில் அனைவரும் உணர்வோம் என்பதை ஃபோர்ட் வலியுறுத்தினார். "முதலில் இதனை உணர்பவர்கள் அதிகம் ஒன்றியிருப்பவர்களாகும். ஏனெனில் அவர்கள் அதிகமாக இணைந்திருப்பதால் சற்றே வேறுபாடு இருந்தாலும் அது வெளிப்படையாகத் தெரியும். இங்கிருக்கையில் சற்றுக் கூடுதலாக முரண்பட்டு இருப்பவர்களுக்குத் தாம் அப்படியிருப்பது தெரிவதற்குச் சற்றே அதிகநேரம் எடுக்கும் ஏனெனில் அவர்கள் அந்நிலைக்குப் பழகியிருப்பார்கள். ஆனால் எப்படியும் அதனை உணர்வார்கள். அதன்பின் அவர்கள் தமது இணைப்பை அதிகரித்துக் கொள்வார்கள். இவ்வாத்மாக்கள் தம்மைத் தாமே தயார் செய்து கொண்டபின் தங்களை வழிநடத்த ஒரு குருவைத் தேடுவார்கள். தேடுதல் தொடங்கிய அக்கணத்திலேயே குருவானவர் தோன்றுவதற்குத் தயாராவார். குருவானவர் அழைப்புக்காகவே காத்துக் கொண்டிருந்தவர். விருப்பமானது எண்ணத்தின் தந்தையாதலால் எண்ணம் உருவெடுத்த மறுகணமே தோன்றுவார்.
"குருவானவர், ஆர்வமுள்ள மாணவனை அதே போன்ற ஒத்த நிலையிலுள்ள ஏனைய மாணவர்கள் கல்வி கற்பதற்கு ஒன்று கூடியிருக்கும் ஒரு இல்லத்துக்கு அழைத்துச் செல்வார். ஒரு தோழமையான சூழ்நிலையில் அவர்கள் தங்கள் கல்வியைக் கற்பார்கள். இங்கும் சில பின்னடைவுகள் இருக்கலாம்.  இங்கேயுள்ள சில ஒழுங்கு முறைகளை ஏற்றுக் கொள்ளாவிட்டலோ அல்லது ஆத்மீக முன்னேற்றத்துக்குத் தேவையான சில பயிற்சிகளை தொடரா விட்டாலோ சில பின்னடைவுகள் ஏற்படுவதுண்டு. இருந்தும் அவர்கள் அந்தக் கடினமான மேல் நோக்கிய பாதையில் உற்சாகத்துடன் தொடர்வார்கள். அங்கு இறைவனின் மாபெரும் திட்டத்தின் அடிப்படை உண்மைகள் விளக்கமாக அறிவிக்கப்பட்டிருக்கும். தெய்வீக உள்ளுணர்வில் மாறாத நம்பிக்கை கொண்டு நாம் செயற்படுவதில் உள்ள நன்மைகளும் இறைவன் வகுத்த நியதிகளை நம்பிக்கையுடன் பின்பற்றுவதன் முக்கியத்துவமும் அறிவிக்கப்பட்டிருக்கும். இங்கே முன்னேற்றமடைந்துள்ள ஆத்மாக்கள் எதைப்பற்றியும் கேள்வி கேட்கமாட்டார்கள். ஏனெனில் இயற்கையின் விதிகளை மீறுவதால் நாம் மீண்டும் கீழ்நிலைக்குச் செல்வோம் என்பது தெரிந்ததே.
நியதிகள் உள்ளதே எமக்குப் போதுமானது. பூவுலகில் எதையும் தங்கள் எண்ணப்படியே நடாத்தியவர்கள் (உண்மையில் அது அவர்கள் கற்பனையே) ஆரம்பத்தில் இங்குள்ள நியதிகளை எதிர்க்க முற்படுவார்கள். ஆனால் அது அவர்களின் ஆத்மீக முன்னேற்றத்துக்குத் தான் தடையாக அமையும். பூவுலகிலிருக்கும் போதே ஆன்மீக நூல்களை வாசிப்பதன் மூலம் இறைவனின் வழிகளை அறிய முயன்றிருந்தால் அவர்களுக்கு இங்கு வந்ததன் மேல் சீரான முன்னேற்றம் இருக்கும். ஒழுக்கம், பணிவு போன்ற நற்பழக்கவழக்கங்கள் ஆன்மீக முன்னேற்றத்துக்கு நிச்சயமாக உதவும். இறைவனின் விருப்பப்படி நடப்பது மற்றும் உலக நியதிகளுக்கு இணங்க நடப்பது என்பன போன்றனவும். உலக நியதிகள் எல்லோரும் நிம்மதியாக, சந்தோஷமாக உயிர் வாழ்வதற்கே உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆன்மீக ஒழுக்கமானது ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் பிறக்கும் போதே புகுத்தப்பட்டுத் தொடர்ந்து அதனது வாழ்நாள் பூராவும் கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஒன்று. ஏனெனில் ஆன்மீக ஒழுக்கமானது மேலுலகில் மிகமிக முக்கியமான ஒன்று. பூவுலகிலும் பார்க்க இங்கே அதற்குப் பெரிய முக்கியத்துவம் உள்ளது.

No comments: