இது 'A World Beyond' என்ற ஆங்கில நூலின் மொழிபெயர்ப்பாகும். இந்நூலை எழுதியவர் ரூத் மோன்கொமெரி (Ruth Montgomery) எனும் ஒரு பெண்மணியாகும். மனிதருக்குள் மேலுலக ஆத்மாக்கள் வந்து பேசுவதைப் போன்று மேற்குலகில் 'Automatic Writing' என ஒரு விடயமுள்ளது. அதாவது ஆத்மாக்கள் எங்கள் மூலமாக வந்து சில விடயங்களை எம்மைக் கொண்டு எழுதச் செய்வது என்பதாகும். இந்நூலானது அப்படியாகத்தான் எழுதப்பட்டது. 'ஆர்தர் போர்ட்' என்று இந்நூலாசிரியைக்குத் தந்தையைப் போலிருந்த ஒருவர் மேலுலகம் சென்ற பிற்பாடு அவர் மூலமாக எழுதப்பட்டது இந்நூலாகும்.

Thursday, January 7, 2021

எட்டாம் அத்தியாயம்: கதைசொல்வதில் வல்லுநர் (Storyteller Extraordinary)

தான் புனிதத்தொண்டர் (sainthood) அந்தஸ்துக்குப் பொருத்தமானவர் எனத் தன்னைப் பற்றி எண்ணிய ஒருவரைப் பற்றி மார்ச் முப்பதாம் திகதி எழுதுகையில் ஆர்தர் ஃபோர்ட் தனது கதைசொல்லும் திறமையை நிரூபித்துக்காட்டினார். இரண்டு நாட்கள் நடந்த அந்த உரையாடல் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. இறப்பைக் கடந்து அம்மனிதர் அங்கே சென்றதும் தன்னை இறைவனின் சிம்மாசனத்துக்கு புனித காப்ரியால் (Saint Gabriel) அழைத்துச் செல்வாரென எதிர்பார்த்தார். பின்வருமாறு அமைந்தது அக்கதை:
"அம்மனிதர் தான் ஒரு தவறும் இழைக்கவில்லை என அனைவருக்கும் சொன்னார். களவெடுத்தலோ கொள்ளையடித்தலோ அடுத்தவரை ஏமாற்றுதலோ அல்லது கற்பழித்தலோ போன்ற ஒரு பாவங்களையும் அவர் இழைத்ததில்லை. ஆதலால் தான் ஒரு தவறும் செய்யவில்லை எனத் திடமாக நம்பினார். அவர் சர்ச் ஒன்றிலும், சில தொண்டு நிறுவனங்களிலும் வேலை செய்தவர். அத்துடன் சொர்க்கத்தில் இறைவனை அடைவதற்கு முன் இந்தப் பிறவி தான் ஒரேயொரு பிறவியென நம்பியவர். கடைசியில் குணப்படுத்த முடியாத ஆனால் குறுகிய ஒரு நோய் வந்ததால் தனது உறவுகளுக்கு நிறைவேற்ற வேண்டிய கடமைகளைச் சரிவர ஒழுங்காக நிறைவேற்றக் கூடியதாக இருந்தது. அவர் தன்னுடைய சொத்தில் மனைவி, பிள்ளைகளுக்குச் சேரவேண்டிய பங்குகளைச் சரியாகப் பகிர்ந்து விட்டுப் பின்பு சில தொண்டு நிறுவனங்களுக்கும் பண உதவிகள் செய்திருந்தார். அவர் இறப்பை அமைதியான இதயத்துடன் தழுவிக்கொண்டார். இறந்த பின் சிலருக்கு ஆத்மஉலகில் திடீரென விழிக்கையில் ஏற்படும் மிகநீண்ட அதிர்ச்சிக் காலமொன்றும் இவருக்கு இருக்கவில்லை. இறந்தவுடனேயே இங்கே கண்விழித்துவிட்டார். ஏனென்றால் அவர் இறப்புக்காகத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்தார். இங்கே விழித்ததும் அவர் ஒரு அழகான இயற்கை வனப்பு நிறைந்த பூமியைக் கண்டார். சற்றே தொலைவில் சில ஒளிரும் உருவங்கள் அலை அலையான வெள்ளையாடையில் நிற்பதைக் கண்டார். அவர்களெல்லாம் தன்னைத் தீர்ப்பு வழங்கும் ஆசனத்துக்கு அழைத்துச் செல்ல வந்திருக்கிறார்களென அளப்பரிய ஆவலுடன் எதிர்பார்த்தார். அந்தத் தீர்ப்பு வழங்கும் ஆசனத்தைப் பற்றித் தான் எதுவும் பயப்படுவதற்கில்லை என நினைத்தார். அந்த உருவங்கள் அவரை அணுகின. ஆனால் அவர்களோ அவரை வரவேற்பதற்குப் பதில் அவரைக்கடந்து நீரோடையொன்றின் மறுபக்கத்துக்குச் சென்று விட்டார்கள். அப்போதுதான் அவர் அந்த நீரோடையைக் கவனித்தார். அவர்கள் தன்னைக் காணவில்லையென நினைத்த அவர் அவர்களை அழைக்கக் குரல் கொடுக்க முயன்றார். அவருக்குக் குரல் வரவில்லை. அவர் தனது கைகளை ஆட்டினார். ஆனால் அவர்கள் இப்பக்கம் பார்க்கவில்லை. பின்னர் அவர்களும் பார்வையிலிருந்து மறைந்து விட்டனர்.
"சற்று நேரத்தில் சில சிறுவர்கள் கண்ணில் பட்டனர். ஏன் அவர்கள் தன்னைக் கவனிக்கவில்லை என வியந்தார். எவ்வளவுக்கு எவ்வளவு நிச்சயமாக அவர்களைத் தான் பார்க்கக் கூடியதாக உள்ளதோ, அவ்வளுவுக்கு அவ்வளவு நிச்சயமாக அவர்களும் தன்னைப் பார்க்கக் கூடியதாக உள்ளது. மீண்டும் அவர் குரல் கொடுத்தார். ஆனால் தனது எண்ணங்களை அவர்களின் மனதில் பதிய வைப்பது ஒன்றுதான் தான் செய்யவேண்டியது என அவர் உணரும்வரை அவர்கள் அவரைக் கவனிக்கவில்லை. இப்போ அவர்கள் அவரைச் சூழ்ந்து அவரை வரவேற்பது போல் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். அவர் அவர்களிடம் புனித கப்ரியால் (Saint Gabriel) எங்கே எனக் கேட்டார். அதற்கு அவர்கள் தாங்கள் ஒரு தேவதைகளையும் இன்னும் சந்திக்கவில்லை என்றனர். அவர்கள் எவ்வளவு காலம் இங்கே இருக்கிறார்கள் எனக் கேட்டதற்குச் சரியான பதிலைச் சொல்ல ஒருவராலும் இயலவில்லைப் போல் இருந்தது. ஒரு சிறுமி அவரை நீரோடைக்கு அழைத்துச் செல்கிறேன் என்று கையை நீட்டினாள். அங்கே மீனினங்கள் நீரோடையில் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தன. அவர் தனக்கு மீன் பிடிப்பதற்கு இப்போ நேரமில்லை என்றார். அவர்கள் அவருக்கு ஒரு புதுவிதமான விளையாட்டைச் சொல்லித்தருவதாக அழைத்தார்கள். தனது பொன்னான நேரத்தைச் சிறு பிள்ளைத்தனமான விளையாட்டுகளில் செலவழிக்க இயலாதென்றார். அவர் அவ்விடத்தை விட்டுச் செல்வதற்கு அவசரப்பட்டார். அவர் ஒரு தெருவைக்கடந்து எங்காவது ஏதாவது உறைவிடம் தெரிகின்றனவா என ஆவலுடன் தேடினார். கடைசியில் ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாழியின் குடிலைக் கண்டார். அங்கே ஒரு வயதானவர் நீண்ட தாடி வைத்துக் கொண்டு மும்முரமாகச் செருப்புகள் தைத்துக் கொண்டு இருந்தார். இந்தச் சந்தர்ப்பத்துக்காகவே அவர் இளவயதிலும் பார்க்க முதிய பருவத்தைப் பிரத்தியேகமாகத் தேர்ந்தெடுத்திருந்தார்.
"ஆத்ம உலகில் உடலுக்குத் தேவையான உடைகளை உடல் தானே வழங்கிக் கொள்வதால் புதிதாக வந்தவர் அச் செருப்புத் தைப்பவரைப் பார்த்து அக்காலணிகளை அவர் எங்கே விற்பதற்கு உதேசித்திருக்கிறார் எனக்கேட்டார். அதற்கு அவ்வயதானவர் எதையும் விற்பதில் அர்த்தமில்லை என்றும் தான் சிறுவர்களுக்கு உறுதியான திடமான காலணிகளை அவை தேய்ந்து பழுதாகாமல் இருக்க என்ன செய்யவேண்டும் என்பதை ஆராய்ந்து, அதனைப் பூரணமாக்க முயற்சித்துக் கொண்டிருப்பதாகக் கூறினார். புதிதாக வந்தவர் புனித பீட்டர் அல்லது புனித கப்ரியாலிடம் போவதற்குரிய வழி எப்படி எனக் கேட்டார். அதற்கு அந்த வயதானவர் வழி உள்ளே இருக்கிறது என்றார். நிலக்கீழ் வழித்தடத்தைத் தான் அவர் கருதுகிறார் என இவர் முதலில் எண்ணினார். ஆனால் அவர் அதற்குப் போகும் வழியைத் தேடுவதற்கு முன் அவ்வயதானவர், 'சற்றே பொறுங்கள். அச்சிறுவர்கள் உங்களுக்குப் பணிவைப் பற்றிச் சொல்லித்தரட்டும்' என்றார். புதிதாக வந்தவர் சுற்றும் முற்றும் பார்த்தார். ஆனால் அங்கே அந்த வயதானவரைத் தவிர வேறு ஒருவரும் கண்ணில் படவில்லை. சிறுவர்கள் போய் விட்டிருந்தனர்.
"அவர் வயதானவரை விழித்து 'வயதானவரே, கடவுளிடம் போவதற்குரிய வழியை எனக்குச் சொல்வதற்கு ஏன் ஒருவரும் இங்கே இல்லை?" என்றார். செருப்புத்தைப்பவர் தனது வேலையைத் தொடர்ந்து செய்துகொண்டிருந்தார். அவர் பதில் சொல்ல நீண்ட நேரம் எடுத்ததனால் புதியவர் பொறுமையிழந்து, "எனக்குச் சொர்க்கத்தில் தந்தையுடன் அவசரமான அலுவல் இருக்கிறது, அவரை நான் எங்கே காணலாம்?" என்றார்.
"அந்தச் செருப்புத்தைப்பவர் ஒரேயொரு கணம் இவரை நிமிர்ந்து பார்த்துவிட்டு, 'உள்ளே பார்' என்றார். அவர் செருப்புத்தைப்பவரின் குடிலைச் சுற்றிப்பார்த்தார். தம்மிருவரைத் தவிர வேறொரு ஆத்மாவையும் அவர் காணவில்லை. "என்ன பகிடி விடுகிறாயா? நான் தீர்ப்பு வழங்கும் ஆசனத்தைத் தேடுகிறேன்" என்று கடுப்பாகச் சொன்னார். 
"எனக்குத் தெரியும். அதனால் தான் உங்களை உள்ளே பார்க்கச் சொன்னேன். நாம் ஒவ்வொருவரும் எம்மைப் படைத்தவனுடன் இணைவதற்குமுன் எம்மை நாமே பரிசீலிக்க வேண்டும்" என்று அந்த வயதானவர் பதிலிறுத்தார். புதியவர் ஆச்சரியமாகப் பார்த்தார். ஆனால் பிடிவாதமாக, 'நானொரு பிழையும் செய்யவில்லையே. எனது வாழ்வு ஒரு மாசுமறுவற்ற வாழ்வு. இப்போ நான் எனது இறைவனைச் சந்திக்க ஆயத்தமாக உள்ளேன்.' என்றார். அச்செருப்புத்தைப்பவர் பதில் சொல்லு முன் சிலகணங்கள் மௌனமாக இருந்துவிட்டுப் பின், 'நண்பனே, உனது கர்வத்தைப்பற்றி என்ன சொல்கிறாய்? நீ ஒரு பாவமும் செய்யவில்லையென்று திடமாக நம்புவதைப் பற்றி என்ன சொல்கிறாய்?' என்றார். புதியவர் குழம்பினார். 'ஆனால் நிச்சயமாக, நான் குற்றமற்ற வாழ்வு வாழ்ந்தேனென்பதை ஒத்துக்கொள்வதில் ஒரு பிழையும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. நான் குற்றமற்ற வாழ்வு வாழ மிகக்கடினமாக உழைத்தேன். எனவே இப்போ சொர்க்கத்தில் அதற்குரிய வெகுமதியை எதிர்பார்க்கிறேன்' என்றார்.
"இங்கே உங்களுக்கு அவை கிடைக்கும்' என்றார் செருப்புத்தைப்பவர். மேலும் அவர், 'பூவுலகில் எதற்கு நாம் எம்மைத் தயார் செய்தோமோ, அப்படியே அவை இங்கே எமக்குக் கிடைக்கும். நான் இப்போ உனக்கு ஒரு கதை சொல்கிறேன். எனது கடைசிப் பிறவியில் நான் ஒரு மத போதகராய் இருந்தேன். நான் சிறுவர்களுக்குக் கற்பித்தல், செபமாலை உருட்டுதல், பிரார்த்தனை செய்தல், பிரார்த்தனைக் கூட்டங்கள் வைத்தல் தவிர்ந்த ஏனைய நேரங்களில் சேரிகளில் உள்ள வறியவர்களுக்கு உதவிவந்தேன். நானும் எனது வாழ்க்கை ஒரு முழு நிறைவான, இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வென்று நினைத்தவன் தான். நான் ஒரு பெண்ணையும் தீண்டவில்லை. எனக்குச் சொந்தமில்லாத ஒரு சதநாணயத்தையும் நான் எடுத்ததில்லை. வெள்ளிக்கிழமைகளிலும் புனித நாட்களிலும் நான் மாமிசம் உண்டதில்லை. கடவுளின் எல்லாக் கட்டளைகளுக்கும் கீழ்ப்படிந்து நடந்தேன். கற்பனைகூடச் செய்யமுடியாத அளவுக்கு எனது வாழ்வு குற்றமற்றதாய் இருந்தது. பூதவுடலை நீத்து மேலுலகுக்கு நான் வரும் நேரம் வந்தபோது தீர்ப்பு வழங்கும் ஆசனத்தில் புனித மும்மூர்த்தியை (Holy Trinity) நான் நேருக்குநேரே காணப்போகிறேன் என்ற நினைப்பில் இறுமாப்படைந்தேன். உலகநேரப்படி நான் எழுபது வருடங்கள் காத்திருக்கிறேன். இன்னும் பற்பல பிறவிகளின் பின்தான் எனக்கு இறைவனைக் காணும் பாக்கியம் கிடைக்குமென விளங்கிக்கொண்டேன். 
"'ஆனால் ஏனப்படி?' புதியவர் அதிர்ச்சியாகக் குரல் கொடுத்தார். 'கடவுளின் ஆசிகளைப் பெறமுடியாதபடி அப்படியென்ன செய்துவிட்டோம்? நானும் எனது வருமானத்தில் பத்திலொரு பங்கைத் தேவாலயத்துக்கு அளித்தேன். நீங்களும், உங்களைப் போன்ற ஏனைய நல்லவர்களும் அப்படிச் செய்திருப்பீர்களென  எனக்கு நிச்சயமாகத் தெரியும். எனது சிந்தனை முழுவதும் எனது ஆத்மாவைப் புனிதமாக்குவதைப் பற்றித்தான் இருக்கும். நான் வெள்ளிக்கிழமைகளில் மாமிசம் அருந்தியது உண்மையேயெனினும் அது எமது சர்ச்சின் போதனைகளுக்கு எதிரானதல்ல. நாம் எங்கே பிழைத்தோம்?' என்றார் அவர். "
"அச்செருப்புத்தைக்கும் முதியவர் தனது கருவிகளைக் கீழே வைத்துவிட்டுப் புதியவரின் கைகளைத் தன் கைகளிலெடுத்துக் கொண்டார். 'மகனே உனக்கு இன்னும் விளங்கவில்லையா?' என ஆதரவாகக் கேட்டார். மேலும் அவர், 'நாம் எமது ஆத்மாவைப் பற்றிய சிந்தனையில் துரதிர்ஷ்டசாலிகளின் வேதனையைக் குறைப்பதைப் பற்றி சிந்திக்கவில்லை. நான் சிறுவர்களுக்குக் கிறிஸ்தவ வினா விடைகளைச் சொல்லிக்கொடுத்தேன். ஆனால் அவர்களின் தாய் தந்தையரின் கவலைகளைப் பங்குபோட்டுக் கொண்டேனா? அந்த முடக்கிலே பசியால் வாடிக்கொண்டிருந்த ஏழைக்கிழவனுக்காக எனது உணவைத் தியாகம் செய்தேனா? உனக்குக் கீழே வேலை பார்த்தவர்களின் சொந்தப் பிரச்சினைகளைக் காதுகொடுத்துக் கேட்டாயா? உனது மனைவியின் நிர்மலமான மனத்துக்கான தேடுதல் வேட்கையைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்? அவளின் கைகளை உனது கைகளிலே எடுத்துக் கொண்டு 'வா நாமிருவரும் சேர்ந்து தேடுவோம்' என்றிருக்கிறாயா? அல்லது உனது சொந்த விடயங்களைப் பற்றிய ஓயாத சிந்தனையில் அவளது கலங்கிய மனதைச் சாந்தப்படுத்தத் தோன்றவில்லையா? நீ உயிருடன் இருக்கையில் உன்னை ஒரு புனிதத்தொண்டராக மரியாதை கொடுத்து நடத்த வேண்டுமென நீ எதிர்பார்ப்பதாக அவள் எண்ணியதால் நீ உயிருடன் இருந்த போதிலும் பார்க்க அவள் இப்போ மகிழ்ச்சியாக இருக்கிறாள். உனது மனைவி என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்று ஒரு தரம் சென்று பார்' என்றார்.
"செருப்புத்தைப்பவர் அவர் பார்வையிலிருந்து மறைய இப்போ அவர் கலிஃபோர்ணியாவில் இருக்கும் தனது வீட்டின் உள்முற்றத்தில் தான் நிற்பதை உணர்ந்தார். இன்னொரு மனிதர் உள்முற்றத்திலிருக்கும் தனக்குச் சொந்தமான சாய்கதிரையில் (Sunning Chair) கால் நீட்டிப் படுத்திருக்க அவரது மனைவி ஒரு தட்டத்தில் கண்ணாடித் தம்ளர்களைக் கொண்டு வந்து கொண்டிருந்தாள். அவள் ஆசுவாசமாகவும் ஆரோக்கியமாகவும் காணப்பட்டாள். அந்த இன்னொரு மனிதர் எழுந்து அவளை முத்தமிட்டு விட்டு 'நாம் மகிழ்ச்சிகரமாக வாழப்போகிறோம்' எனத் தனது ஆண்மையின் பலத்தை வெளிப்படுத்திக் கொண்டு சொன்னான். அதற்கு அவரது மனைவி, 'ஆம், ஆனால் துக்கம் அனுஷ்டிக்கும் காலம் முடியட்டும்' என்றாள். அம்மனிதர், 'அவ்வளவு காலம் காத்திருக்க வேண்டுமா?' என அவசரப்பட்டார். அதற்கு அவரது விதவை மனையாள் பெருமூச்சுடன், 'அப்படித்தான் நினைக்கிறேன். நாம் உடனே திருமணம் புரிந்தால் ஆட்கள் கதைக்கக்கூடும். ஜான் இதைப்பற்றிக் கவலைப்படுவாரென நான் எண்ணவில்லை' என்றாள். மேலும் தொடர்ந்து, 'அவர் தனது ஆத்மாவைப் பாதுகாத்துக் கொள்வதில் தான் தனது முழுக் கவனத்தையும் செலுத்தினார். இங்கே கீழே என்ன நடக்கிறது என்பதைப் பற்றி அவர் கவலைப்படுவாரென நான் எண்ணவில்லை' என்றாள். 'அவர் இப்போ சொர்க்கத்தில் இருப்பாரென நீ நம்புகிறாயா?' என அம்மனிதர் கேட்டார். அவள் பெருமூச்சு விட்டுக் கொண்டு, "நிச்சயமாகச் சொல்வேன். ஆனால் அதே சமயத்தில் அவர் இவ்வளவும் கடவுளையே திருத்துவதற்குத் தொடங்கியிருப்பாரோ எனவும் எண்ணுகிறேன். ஒரு புனிதத் தொண்டருடன் அதுவும் குறிப்பாகத் தனக்குத் தானே சுயநியமனம் செய்து கொண்டவருடன் வசிப்பதென்பது மிகவும் கொடூரமானது" என்றாள்.
அத்துடன் அது முடிவடைந்ததனால் தானும் புனிதத்தொண்டர் வரிசையில் வரலாமென எதிர்பார்த்த அந்தத் தூரதிர்ஷ்டசாலியைப் பற்றி அவ்வளவு தான் நாம் அறியமுடியுமென நான் நினைத்திருந்தேன். ஆனால் உண்மையில் கதைசொல்லும் ஆர்ட்டை (Art) நான் குறைத்து எடை போட்டு விட்டேன். மறுநாட்காலை லிலி "இப்போ ஆர்ட் தனது கதையைத் தொடர்வார்" என எழுதினார். உடனே ஃபோர்ட் (Ford) தொடங்கினார். "காலை வந்தனம் ரூத். தான் கண்ணைப் போல பாதுகாத்து வந்த தனது மனையாள் ஏன் தன்னைப் பற்றி இவ்வாறு பேசுகிறாளென ஆரம்பத்தில் அம்மனிதருக்கு விளங்கவில்லை. தானே அதனைக் கண்டு உணரட்டுமென அச்செருப்புத் தைக்கும் முதியவர் இவரிடமே விட்டு விட்டார். தன்னைப் பரிபூரணமானவனென நினைக்கும் ஒரு மனிதனுடன் கூடி வாழ்வதென்பது நமது சிந்தனையை உருக்குலைக்கும் ஒன்று என அவரது மனைவி கூறிக் கொண்டிருக்கையில் தான் தனக்குச் சரியென்று பட்டவைகளை மற்றவர்களிடம் வலிந்து திணித்ததனை அவர் உணர்ந்து கொண்டார். அவர்கள் தாங்களாகவே புரிந்து கொள்வதற்கு உரிமையுள்ள தனிப்பட்ட ஆத்மாக்களாகும் என உணர்ந்தார். தனது மனைவியின் வாழ்வைத் தன்னலமற்ற அன்பினால் நிரப்புவதை விட்டுவிட்டுத் தன்னைப் போன்ற ஒரு எடுத்துக்காட்டாக அவளும் வரவேண்டுமெனத் தான் முயற்சித்ததையும் உணர்ந்தார். சமூகத்தில் நல்ல பெயர் வரவேண்டும் என்பதற்காகவும் சர்ச் வாடிக்கையாளர்களிடம் தனது பெயரை நிலை நாட்டவும் பிறரைக் கவரக்கூடியதான நல்ல காரியங்களைச் செய்யும்படி அவளைத் தான் வற்புறுத்தியதனையும் உணர்ந்தார்.
"இப்போ அவர் தனது ஆத்மாவைப் பரிசீலனை செய்து தான் கடவுளுக்கும் ஏனையோருக்கும் சேவை செய்ததிலும் பார்க்கக் கூடிய அளவு தன்னை ஒரு புண்ணிய ஆத்மாவாகக் காட்ட வேண்டும் என்பதிலேயே கூடிய கவனம் செலுத்தியதையும் உணர்ந்தார். அத்துடன் பூவுலகிலே தனது நல்ல செய்கைகளுக்கு மக்களிடையே பேரும் புகழும் பெற்று அவற்றுக்குரிய பலனை அனுபவித்ததனால் ஆத்மவுலகுக்கு ஒரு பலனையும் கொண்டு வரவில்லை என்பதனையும் மிக வேதனையுடன் உணர்ந்தார். பிறருக்குக் கொடுப்பதும் உதவிகள் செய்வதும் மற்றவருக்குத் தெரியாமல் செய்வதுதான் சொர்க்கமென மனிதனால் அழைக்கப்படும் இடத்தின் ஆசிகளைப் பெறுவதற்குரிய வழியென அவர் உணரத் தொடங்கினார். திருத்தொண்டர்போலத் தான் நடத்திய வாழ்க்கையானது பூவுல வாழ்வை வளப்படுத்தியதைப் போல் ஒன்றும் தனது ஆத்மாவுக்கு நன்மை பயக்கவில்லை என்பதை உணர்ந்தபோது அவரது ஆத்மா மிகுந்த வேதனையால் பாதிக்கப்பட்டது. கொடுப்பவரின் சுயநலமில்லாத அன்பின்றி அவர் விளம்பரப்படுத்திச் செய்த சமூகப்பணிகளானவை வெறுமனே நேரத்தைச் செலவழிக்கச் செய்த செய்கைகளாயின.
"அச்செருப்புத்தைக்கும் முதியவருக்குப் புதியவரின் மனநிலையைப் புரிந்துகொள்ள இயலுமாக இருந்தது. அவர் தான் மதகுருவாக இருக்கையில் நாளாந்தம் தான் தொடர்பு கொள்பவர்களுக்குச் சுயநலமின்றிச்  சேவை செய்வதிலும் பார்க்கத் தனது ஆத்மமுன்னேற்றத்திலேயே அதிக அக்கறை காட்டியதாகச் சொன்னது சரியே. இப்போ அவ்விரு மனிதர்களும் ஒன்றாகப் பிரார்த்தனை செய்தனர். அத்துடன் பூவுலகில் இருப்பவர்கள் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்தபோது மிகமகிழ்ந்தனர். ஏனெனில் தாம் எலும்பும் சதையுமாக இருந்த போதிலும் பார்க்க இப்போ தான் அப்படிப்பட்ட பிரார்த்தனைகள் அதிகம் தேவைப்படுகின்றன என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டனர். வெவ்வேறு விதமான வாழ்க்கை வாழ்ந்த இருவரும் இப்போ மிக நெருக்கமாக உணர்ந்தனர். இருவரும் ஒன்றாகச் சேர்ந்து உண்மையை முழுமையாகப் புரிந்து கொள்ள முயற்சி செய்வதென முடிவெடுத்தனர். அம்மதபோதகர் தனது முந்தைய வாழ்க்கையின் தவறுகளைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்த அந்தச் செருப்புத் தைக்கும் குடிலை விட்டு விட்டு அவ்விருவரும் ஞானாலயத்துக்குச் செல்லும் ஒரு குழுவுடன் தங்களையும் இணைத்துக்கொண்டனர். அவ்விருவரும் இப்போ இங்கே கற்கின்றனர். எமது ரட்சிப்பின் ரகசியமானது வெள்ளிடைமலை போல மிகவும் வெளிப்படையானது என இப்போ புரிந்து கொண்டனர். அவையாவன: சுயநலமின்றிய ஈகை, ஏனையோரின் நலன்களுக்கு முன்னுரிமை அளித்தல், ஒருவருக்கொருவர் அன்புடன் உதவுதல் என்பனவாகும்.
ஆத்ம உலகில் நாம் இருக்கையில் கற்றறிந்த பிரபஞ்சத்தின் பிரதான விதியைப் பூவுலகில் நாம் செயற்படுத்துகிறோமா என்பதனைக் கண்டறிவதற்காகவே முக்கியமாக நாம் மீண்டும் மீண்டும் பிறவியெடுக்கின்றோம். ஆத்மவுலகில் அது மிகவும் இலகுவாகவும் எளிதாகவுமுள்ளது. இங்கே எம்மைப்போலவே இயல்புகள், எண்ணவலைகள் கொண்டவர்களுடன் நாம் இணக்கமாகக் கலந்திருப்போம். ஆனால் நாம் மீளவும் எலும்பும் தசையுமாக வருகையில் எம்முடன் நல்லிணக்கம் இல்லாதவர்களுக்கு இடையிலும் நாம் அவர்களுடன் நல்லிணக்கம் இல்லாத நிலையிலும் விடப்படுகிறோம். அது தான் உண்மையான சோதனைக்களம். அதுதான் எங்களது விருப்பங்களுக்கு மாறுபட்ட விருப்பங்களைக் கொண்ட குடும்பத்தில் சிலநேரங்களில் நாம் வேண்டுமென்றே வந்து பிறக்கின்றோம். அவர்களை அனுசரித்துக் கொண்டோ அல்லது மற்றையோரைப் பாதிக்காத வகையிலும் எரிச்சலூட்டாத வகையிலும் அவர்களுக்கும் எமக்கும் ஒத்து வரக்கூடியதான ஒரு வாழ்க்கை முறையைக் கைக்கொண்டோ வாழப் பழகவேண்டும். எமது சிருஷ்டிகர்த்தாவின் ராச்சியத்தில் அப்படித்தான் நாம் ஆத்மீகமுன்னேற்றம் அடைகிறோம்.
"நாம் மேற்சொன்ன அந்த மனிதர் கடைசியில் அப்பாடத்தைக் கற்றபிற்பாடு தனது மனைவி பூவுலகில் தனது எஞ்சிய வாழ்நாளைக் கழிப்பதற்கு மனதுக்கு உகந்த ஒரு ஆத்மாவைக் கண்டு பிடித்ததை எண்ணி மகிழ்ந்தார். அவர் உண்மையாகவே தன் குடும்பத்தில் அன்பு செலுத்தியதனால் (தன் சொந்த வழியில்) அவர் அவர்களுக்கு இசைவான எண்ணவலைகளையும் அன்பையும் அனுப்பி அவர்களின் பாதையை சுமூகமாக்கினார். இப்போ அவர் துரிதமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார். சாஸ்வதமான வாழ்வை நோக்கிய எமது பாதையின் ஒரு படியைத் தாண்டி இங்கே வருகையில் தேவதைகள் புடைசூழ பொன்னாலான மண்டபத்தில் இறைவனைக் காணலாமென அவரைப் போலவே எதிர்பார்த்து வந்த ஆத்மாக்கள் ஆத்மீக முன்னேற்றத்துக்கு ஆர்வத்துடன் உழைக்கிறார்கள். இவர் அவர்களில் மிக முக்கியமானவராகும்"
ஒரு சில நாட்களின் பின் ஃபோர்ட் பின்வருமாறு அறிவித்தார்: "இன்று தனக்கு அருட்தொண்டர் தன்மைகளிருப்பதாக நம்பிய ஒரு பெண்ணின் இதயத்தையும் மனதையும் பற்றி ஆராய்வோம். அவர் தான் இறைவனின் கரங்களுக்கே நேரடியாகக் கொண்டு செல்லப்படுவாரென எதிர்பார்த்தார். அதிகாரம் கொண்டவர்களுக்கு அவர் மதிப்பளித்தது போல வேறெவர்க்கும் அவர் மதிப்பளிக்கவில்லை. தீர்ப்புவழங்கும் ஆசனத்தில் தான் அமர்கையில் ஒரு தவறும் ஏற்படாமலிருக்க அவர் தனது நற்செய்கைகளின் மூலம் செயின்ட் பீட்டரைக் கவரநினைத்தார். அவர் இந்தப்பக்கத்திலே கண்விழிக்கையில் செயின்ட் பீட்டரால் அனுமதிக்கப்பட்ட பின் தான் நுழையப்போகும் முத்துக்களாலான வாயிற்கதவைத் தேடித் தன்னைச்சுற்றிலும் பார்வையிட்டார். அவர் கண்டது ஒரு மேடையில் கால்நீட்டிப் படுத்துக்கிடந்த ஒரு பழைய ஆத்மாவையே. அவர் இங்கே பல்லாண்டுகளாக இருக்கிறார். அவரை செயின்ட் பீட்டரென எண்ணிக் கொண்டு அப்பெண்மணி அவரை அணுகி, 'சேர், இங்கே பாருங்கள் நான் மேரி ப்ளங் (Mary Blunk). என்னை இறைவனிடம் அழைத்துச் செல்லும்படி கேட்டுக்கொள்கிறேன்' என்றார்.
"அந்தப் பழைய ஆத்மா அவரை அனுதாபத்துடன் பார்த்தார். அவர் அப்பெண்மணியைச் சற்றுநேரத்துக்கு ஓய்வெடுக்கும்படி பரிந்துரைத்தார். ஆனால் அது அப்பெண்மணியின் காதில் விழவில்லை. அவரது பௌதீகவுடல் நோயுற்றிருந்தது. இப்போ அவ்வுடலை நீத்ததால் தந்தைக்கருகில் தனக்குரிய இடத்தைப் பற்றிப் பல எதிர்பார்ப்புகளுடன் இருந்தார். அவர் மேலும் தாமதிக்க விரும்பாததால் அந்தப் பழைய ஆத்மா அவரை முன்னோக்கி நகரச்சொல்லிச் சைகை செய்தார். சீக்கிரத்தில் அப்பெண்மணி ஒரு வாயிற்கதவருகில் வந்தார். ஆனால் அந்த வாயிற்கதவு அவர் எதிர்பார்த்தது போல் ஒன்றும் மேன்மை வாய்ந்ததாக இருக்கவில்லை. அக்கதவுக்குப் பூட்டோ அல்லது வாயிற் காவலனோ ஒன்றும் இருக்கவில்லை. எனவே அவர் கதவிற்குள்ளால் நுழைந்து பூந்தோட்டத்தால் சூழ்ந்திருந்த வழியொன்றில் ஏறிச்சென்றார். வழியில் கொள்ளை கொள்ளையாக மலர்கள் மலர்ந்திருந்தன. அவர் இறைவனின் இருப்பிடத்தை எவ்வளவு விரைவில் அடையமுடியுமோ அவ்வளவு விரைவில் அடைய விரும்பியதனால் அவற்றில் கவனம் செலுத்தவில்லை. போகும் வழியில் அவர் பலரைச் சந்தித்தார். அவர்கள் அப்பாதையில் ஒன்றில் ஏறிக்கொண்டோ அல்லது இறங்கிக்கொண்டோ இருந்தனர். எங்கள் கதாநாயகி அவர்களைப் பார்த்துத் தலையை அசைத்துக் கொண்டே விரைந்து சென்று கொண்டிருந்தார். அவருக்கு முன்னே கஷ்டப்பட்டு முன்னேறிக் கொண்டிருந்த சிலரைத் தாண்டிச் செல்லும் நோக்குடன் அவர் விரைந்தார். இறங்கிக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் நிராகரிக்கப்பட்டவர்கள் எனவும் அவர்கள் நரகத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள் எனவும் அவர் அனுமானித்துக்கொண்டார்.
"அவருக்கு முன்னே சென்று கொண்டிருந்தவர்களை விலக்கிக் கொண்டு கடைசியில் அவர் ஒரு உயரமான மேடையை அடைந்தார். அதன் உச்சியில் தன்னை வரவேற்கும் கரங்களுடன் தனக்காகக் காத்திருக்கும் இறைவனைக் காணப்போவதாக எண்ணினாள். இப்போ அவள் தனது உடைகளையும், தலையையும் சரிசெய்து கொண்டார். தனது உடைகளைத் தொட்டு உணர்ந்து மீளவும் உறுதி செய்துகொண்டார். ஏனெனில் இங்கேயிருக்கின்ற அவ்வுடைகளும் அவரது வீட்டில் திங்கட்கிழமைகளில் அவர் தோய்த்துக் கொண்டிருந்த அவரது உடைகளைப் போலவே அவருக்கு உண்மையாகவே தென்பட்டன. அங்கேயொரு அழகிய வாலிபன் நிற்கக்கண்டார்.  அவர் அவ்வாலிபனை ஒரு தேவதூதனென எண்ணிக்கொண்டு அவனிடம் இனிமையாகத், "தயை கூர்ந்து எனது வரவை நீ அறிவிப்பாயா? ஏனெனில் நான் அவசரமாக இறைவனின் முழந்தாழ்களில் எனது சிரசைத் தாழ்த்தி வணங்கல் வேண்டும்" என்றார். அவ்வாலிபன் மெதுவாகச் சூழ்நிலையை அளந்தான். கடைசியில் அவன் பின்வருமாறு பதிலளித்தான்: "ஆனால் அம்மணி நீங்கள் ஏறிவந்த மலைப்பாதையில் புதிதாக வந்த சில ஆத்மாக்கள் இன்னமும் கஷ்டப்பட்டு ஏறிக் கொண்டிருக்கிறார்கள்' என்றான். அப்பெண்மணி பொறுமையின்றி நெருங்கிக் கொண்டிருக்கும் நீண்ட வரிசையில் தன்னைக் காக்க வைக்காமல் தன்னைப் பற்றி இறைவனின் கவனத்துக்குக் கொண்டு வரும்படி வேண்டினாள். அவ்வாலிபன் புன்னகைத்துக் கொண்டு அவளுக்குப் பின்வருமாறு பதிலளித்தான்: 'ஆனால் அம்மணி, கீழே அந்தப் பாதாளத்திலிருந்து மேலே வரத்துடிக்கும் அந்த ஏனையோரைக் காப்பாற்றாமல் நீங்கள் எப்படிக் காப்பாற்றப்படுவீர்கள்?' என்றான். அதற்கு அப்பெண்மணி அந்நியர்களாகிய அவர்களுக்கும் தனக்கும் ஒரு சம்பந்தமுமில்லை என்றாள்.
இறுதியாக இன்னொரு மனிதன் அவளை அணுகினார். அம்மனிதனின் முகம் அப்பெண்மணிக்குச் சற்றே பரிச்சயமாக இருந்தது. தெருவோரத்தில் எந்நேரமும் ஒரு தகரக் கோப்பையை ஏந்திக்கொண்டு நின்றுகொண்டிருக்கும் பிச்சைக்காரன் என அவனை அடையாளம் கண்டு கொண்டாள். 'நீ இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்?' என அதிகாரத் தொனியில் அவனை அவள்  கேட்டாள். அதற்கு அவன் தான் தனது அடிபட்டு நொந்த உடலை அண்மையில் தான் நீத்ததாகவும் தான் இப்போ தனது அடுத்தகட்ட முன்னேற்றத்தில் இருப்பதாகவும் பதிலளித்தான். அப்பெண் அப்பிச்சைக்காரன் இருப்பதற்குரிய இடமாக இது படவில்லையெனச் சீற்றத்துடன் சொன்னாள். அப்போ அங்கே வேறு படிகள் இருப்பதைக் கண்டு அவள் அப்படிகளில் ஏறத்தொடங்கினாள். அது ஒரு மண்டபத்தின் நுழைவாயிலில் முடிவடைந்தது. அங்கே இறைவன் தனக்காகக் காத்துக் கொண்டிருப்பதாக எண்ணினாள். ஆத்மீக முன்னேற்றமடைந்தவரைப் போலத் தென்பட்ட ஒரு மனிதரைக் கடைசியில் அவள் அங்கே கண்டாள். அவரின் முன் பெண்கள் வணங்கும் முறைப்படி முழங்கால்களை மடித்து உடலைத் தாழ்த்தி வணங்கிக் கொண்டு தன்னை நேரடியாக இறைவனின் பால் இட்டுச் செல்லுமாறு அவள் கேட்டுக் கொண்டாள். அதற்கு அம்மனிதர், 'அம்மணி! நாமெல்லோரும் கடவுளே' எனப் பதிலளித்தார். அவள் சுற்றிலும் கோபமாகப் பார்த்தாள். அம்மனிதர் கைகளால் எல்லோரும் என்று சேர்த்துக் காட்டுகையில் அப்பிச்சைக்காரக் கிழவனையும் சேர்த்துத் தான் காட்டுகிறான் என்பதைக் கவனித்தாள். அது அவளுக்கு வெறுப்பேற்றியது. அப்பிச்சைக்காரன் என்றும் குளித்த மாதிரித் தெரியவில்லை அவளுக்கு. அவனது தலைமுடியும் எப்பொழுதும் சடையாகக் காணப்படும். ஆனால் இப்பொழுது அவனைப் பார்க்கையில் சற்றுத் தூய்மையாகக் காணப்பட்டது போலிருந்தது அவளுக்கு. 'கேலி செய்வதை நிறுத்தி விட்டு என்னைப் படைத்தவனிடம் என்னை அழைத்துச் செல்லுங்கள்' என்றாள் அவள்.
அவ்வழகிய வாலிபன், 'ஆனால் அம்மணி அவர் உங்களை மட்டுமல்ல எம் எல்லோரையுமே அவர் தான் படைத்தவர். முன்னேற்றப் பாதையின் இத்தற்காலிக நிலையில் மீண்டும் உங்கள் ஒவ்வொருவரையும் நேரில் நின்று வரவேற்பதற்கு அவருக்கு நேரமில்லை. நீங்களும் மற்றவர்களும் உயரிய நிலையை அடைவதற்கு உங்களுக்கு உதவுவதற்கேற்ற நிலை வரும் வரை இடைப்பட்ட இக்காலகட்டத்தில் அங்கே நின்று கொண்டிருக்கும் நீங்கள் பிச்சைக்காரனென்று நினைக்கும் நபர் உங்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருப்பார்' என்று பதிலளித்தான். அப்பரிதாபத்துக்குரிய பெண்ணோ அவருடன் அப்படி வாதிட்டாள்! அப்பிச்சைக்காரனை எவ்விதத்திலும் தான் வழிகாட்டியாக ஏற்க இயலாதென்றும் வேறெவரையும்கூட அந்த விதத்தில் ஏற்கவியலாதென்றும் தனக்கு இறைவனுடன் மட்டும் தான் அலுவலென்றும் எங்கே அவரைக் காணலாமென அதிகாரம் தொனிக்கக் கேட்டாள். ஏனையவர்களும் இப்பொழுது வந்து சேர்ந்ததில் கூட்டம் சூழ்ந்து விட்டிருந்தது. வந்தவர்களிலும் சிலர் இறைவனெங்கே எனக் கேட்டனர். அவர்களெல்லோரும் இறைவன் எங்கே இருக்கிறானென அறிய விரும்பினர். வேறு பலரும் மேலே வந்து சேர்ந்து விட்டிருந்ததனால் இப்போ அப்பெண் முதலாவது ஆளாக நிற்கமுடியாமல் போய்விட்டது. அதுவும் அவளுக்குக் கோபம் விளைவித்தது.
"கடைசியில் அவ்விளைஞன் புதிதாக வந்துள்ள அவ்வாத்மாக்களின் கூட்டத்தினரை அணுகி மிக இனிமையான குரலில், 'கவனியுங்கள், இறைவன் எங்குமிருக்கிறான். அவன் அன்பு வடிவானவன். நிச்சயமாக நீங்கள் ஒவ்வொருவரும் மற்றைய ஒவ்வொருவரிலும் அன்புசெலுத்தவும், ஒவ்வொருவருக்கும் உதவிகள் செய்யவும்  கற்று உணர்வீர்களாதலால் இறைவன் நிச்சயமாக உங்களிடையே வேலை செய்வான். நீங்கள் உங்களைச் சூழவுள்ளவர்களிலும் பார்க்க ஆத்மீக முன்னேற்றம் அடைந்துள்ளீர்களா என்பதைக் கவனித்துப் பாருங்கள்' என்றான். ஆனால் அப்பெண்ணோ பொறுமையிழந்து, 'எங்கே தீர்ப்பு வழங்கும் ஆசனம்?' என வற்புறுத்தினாள். 'நீங்கள் அதில் இருந்து கொண்டிருக்கிறீர்கள் அம்மணி' என அவ்விளைஞன் பதிலளித்தான். அவள் சுற்றிலும் கோபமாகப் பார்த்து அங்கே எந்த விதமான ஆசனமும் இல்லை என்பதைக் கண்டு கொண்டாள். இறுதியாக அவன் என்ன சொல்ல வருகிறானென அவளுக்குச் சற்றே பிடிபட்டது. அவள் மட்டுமே அவளது நீதிபதி. அவள் குற்றமற்ற, தூய்மையான வாழ்வு வாழ்ந்தவளா இல்லையா என்பதை வேறெவரும் சொல்லமாட்டார்கள். அவளே அதனைக் கண்டறிய வேண்டும். அவள் தனது இதயத்தை ஆராய்ந்து பார்க்கையில் இந்தப் பயங்கரமான உண்மையைக் கண்டுபிடித்தாள்: குற்றமற்ற வாழ்வு வாழ்வதற்கான தனது முயற்சியில் அவள் தன்னைப் பற்றியும் தனது ஆத்மீக முன்னேற்றத்தைப் பற்றியும் மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்திருக்கிறாள். அவள் தனது நல்லியல்புகளைப் பற்றி அதிக அக்கறை கொண்டதில் தனது தகுதிக்குக் கீழ்ப்பட்டவர்களுடன் ஒரு ஆறுதல் வார்த்தையைப் பகிர்ந்து கொள்ள மறந்து விட்டாள். தான் ஆத்மீகக் காரணங்களுக்காக அணியும் வெள்ளை ஆடையில் கறை படிந்துவிடும் என்பதற்காகத் தனக்குக் கீழே இருந்தவர்களினால் அவ்வாடைகள் அழுக்காவதைத் தவிர்த்தாள். பின்பு பிறரில் எப்படி அவள் அன்பு காட்டியிருக்கமுடியும்? விடைகள் அவளுக்கு உள்ளேயே இருந்தன. இறைவனால் கூடத் தீர்ப்பு வழங்குகையில் இப்படி நேரே நின்று பார்த்தது போல அவள் தன்னைத் தானே அலசி ஆராய்ந்தவாறு  ஆராய்ந்திருக்க முடியாது. தனது இதயத்தை நன்றாக அறிந்த அவள் தனது குறைபாடுகளை மதிப்பிட்டாள். வேறெவரும் அவளை மதிப்பிட இயலாது, ஏனெனில் தானே தனது ஒரேயொரு நீதிபதியாகும். அவள் தனதருகில் நின்ற பிச்சைக்காரனின் தன்மைகளை அலசி ஆராய முற்படுகையில் பத்தாயிரம் ஆண்டுகளானாலும் அவனது இதயத்தை ஆராய்ந்து அவன் செய்த செய்யாத தவறுகளைக் கண்டு பிடிக்கத் தன்னால் இயலாது என உணர்ந்தாள். ஏனெனில் அவன் மட்டும் தான் அவனுக்குரிய ஒரேயொரு நீதிபதியாகும்.
மறுநாட்காலை, ஃபோர்ட் புதிதாக வருகை தந்திருந்த பூவுலகிலிருக்கும் தனது குடும்பத்தினரை எண்ணி வருந்திக் கொண்டிருந்த ஒரு பெண்ணின் கதையைச் சொன்னார். அப்பெண் இறுதியில் வந்த வியாதியின் போது தன்னால் இனி உயிர்வாழ இயலாதென நினைத்திருந்தாள். ஆனால் இப்போ தனது கணவரையும் குழந்தைகளையும் பிரிந்து வந்ததை எண்ணி மனங்கலங்குவதால் ஆத்மநிலையில் தொடரும் வாழ்வுக்குத் தன்னைத் தயார் செய்ய மறுக்கின்றாள். அவரே சொல்லட்டும்:
"அவள் தனது கணவரையும் பிள்ளைகளையும் விடாமல் தொடர்ந்து கொண்டு அவர்களின் ஒவ்வொரு அசைவிலும் தனது தாக்கத்தை உண்டாக்க முயல்கிறாள். அத்துடன் தனது இருக்கையை அவர்களுக்கு உணர்த்தத் தீவிரமாக முயல்கிறாள். இங்கே ஆத்மவுலகில் அவளது ஆத்மீக வளர்ச்சியைத் தொடரும் வண்ணம் நாம் உரைக்கும் சொல்லொன்றும் அவளைக் கவரவில்லை. பூவுலகில் தனது உறவினர்களுடன் தனது வாழ்க்கையைத் தொடர்வதற்கு மட்டுமே அவள் விரும்பினாள். அவர்களுக்குத் தனது வழிகாட்டல் நிச்சயமாகத் தேவையென அவள் எண்ணுகிறாள். அவர்களின் மகிழ்ச்சிகளினூடாக அவள் வாழ்ந்தாள். ஆனால் பிள்ளைகளின் ஒவ்வொரு விதமான சிறிய ஆசைகளின் தூண்டுதல்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்க விரும்பினாள். அவளின் எச்சரிக்கைகள் அவர்களுக்கு விளங்கவில்லைப் போலத் தோன்றினாலும் கூட 'தாய் எல்லாம் அறிவாள்' என்பதே அவளின் வேத வாக்காக இருந்தது. இங்கே இருக்கும் இப்படிப்பட்டவர்களுடன் பணி புரிந்து பழக்கப்பட்டவர்கள் அதற்குரிய வழிகளில் அவளது பயங்களைப் போக்கி அவளை சாந்தப்படுத்தத் தம்மாலான முயற்சிகளைச் செய்கிறார்கள். அவர்கள் அவளுக்கு பூமியில் உயிர் வாழும் ஒவ்வொரு உயிரும் தங்களது சொந்த உளநிலைமை ஆற்றல்களுக்கு ஏற்பத்தான் வாழவேண்டுமென்றும் இத்தளத்திலிருந்தோ அன்றிப் பௌதீகத் தளத்திலிருந்தோ எந்தவிதமான ஆதிக்கமும் இருக்கலாகாது என்றும் கற்பித்தனர். அவளது முன்னேற்றமானது கொஞ்சம் கொஞ்சமாகத் தடைப்பட்டது. வளர்ச்சியடையாத எதுவும் வீணாகப் போய்விடும். அவளது ஆத்மாவானது சுருங்கி அவள் நம்பிக்கையும் பொலிவும் இழந்து, பரிதாபத்துக்குரியவள் ஆனாள். பூவுலகில் இருப்பவர்களிடம் தனது ஆசையைத் திணிப்பதற்கு முயற்சிக்கும் அதே நேரத்தில் இங்கேயுள்ள ஆத்மாக்களின் விவேகம் நிறைந்த வார்த்தைகளைச் செவிமடுக்க மறுத்து உணர்ச்சியற்ற ஜடமானாள்.
"கடைசியில் அவள் மனக்கலக்கத்துடன் ஆழ்ந்த உறக்கத்தில் படிப்படியாக வீழ்ந்தாள். இந்த உணர்ச்சியற்ற நிலையானது கிழமைக் கணக்கிலோ மாதக் கணக்கிலோ அன்றி வருடக் கணக்கிலோ தொடரலாம். கடைசியாக அவள் விழிக்கையில் தனது பூவுலகிலிருக்கும் குடும்பத்தினர் தானின்றியே செழித்தோங்கியதை அறியத்தலைப்பட்டாள். அவர்கள் தானின்றியே வாழப்பழகிக்கொண்டார்கள். தான் நினைத்தது போல தான் ஒன்றும் அவர்களுக்கு அத்தியாவசியமாக இல்லையென்பதையும் கண்டு கொண்டாள். இப்போ இங்கேயுள்ள ஆத்மாக்களின் சொற்களுக்குச் செவிமடுக்கக்கூடியதாக உள்ளாள். அவ்வாத்மாக்களும் சில ஆண்டுகளுக்கு முன்னரோ அல்லது பல்லாயிரமாண்டுகட்கு முன்போ இதே போன்ற அதிர்ச்சிகரமான அனுபவங்களினூடாக மீண்டு வந்தவர்களே. எனவே அவர்கள் அவளது உணர்ச்சியற்ற தன்மையிலிருந்து அவள் வெளியில்வர வழிகாட்டக் கூடியவர்கள். நல்ல அறிவுரைகளால் அவர்கள் அவளைத் தனது சொந்த ஆத்மீக விழிப்புணர்வுக்குத் தூண்டுவார்கள். தான் பூவுலகிலிருக்கையில் ஆக்க பூர்வமாய் இருந்ததிலும் பார்க்கக் கூடுதலாக அழிவு பூர்வமாகவே வேலை செய்திருப்பதை இப்போ உணர்ந்து கொண்டாள். தனது பிள்ளைகளைத் தனது அதிகாரத்தால் ஆண்டாள். தனது தாயன்பால் அவர்களை அடக்கியாண்டாள். அவள் தனது பிழைகளை ஆய்வு செய்தபின் அவற்றுக்கு ஈடு செய்ய விரும்பினாள். மீண்டுமொரு முறை பூவுலகில் பிறக்கும் சந்தர்ப்பம் தனக்களிக்கப்பட்டால் தான் தாயன்பு என்ற பெயரில் பிள்ளைகளில் அவர்கள் தாங்கமுடியாத சுமைகளையேற்றி அவர்களை முழுக்கமுழுக்கத் தன் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்காமல் அவர்கள் சுதந்திரமாக இயங்கக்கூடிய முறையில் அவர்களில் மென்மையான அன்பைச் செலுத்துவேனென அவள் உறுதிமொழி பூண்டாள். சுயநலத்துடன் கூடிய அன்புக்கும் சுயநலமற்ற அன்புக்குமுள்ள வித்தியாசத்தை எமக்குக் கற்றுத்தரும் கல்விக்கூடங்களில் அவள் சேர்ந்து பயில்கிறாள்.
"இப்போ அவள் தனது பிள்ளைகளைப் பூவுலகில் காண்கையில் அவர்களில் ஆதிக்கம் செலுத்த முயலாமல் தன் அன்பையும் அன்னையின் ஆசிகளையும் அவர்களுக்கு அனுப்புகிறாள். அந்தப் பிள்ளைகளில் நாம் இப்பக்கத்திலிருந்து மாற்றங்களைக் காணக்கூடியதாக உள்ளது. இதற்கு முன்பெல்லாம் அவர்கள் கைகளைக் கட்டிவிட்டதைப் போல உணர்ச்சி வயமாகத் தாயை அதிருப்தியூட்ட வேண்டி வருமோ என்ற பயத்தில் எந்த ஒரு விஷயத்தையும் செய்யத் தயங்குவார்கள். இப்போ அவர்களால் தாயின் பிரகாசிக்கும் அன்பை உள்ளூர உணரமுடிகிறது. தாய் விடுதலையடைந்து மகிழ்ச்சியாக இருக்கிறாளென்று அவர்களால் உணரமுடிவதால் (அவர்கள் இதைப்பற்றி எண்ணுவதை வேண்டுமென்றே நிறுத்திவிட்டார்களோ இல்லையோ) அவர்களால் இலகுவாகத் தீர்மானங்கள் எடுக்கக் கூடியதாகவுள்ளது. அவர்களது முன்னேற்றங்களைப் பார்த்து அவர்களின் வளர்ச்சியால் ஆத்மவுலகிலிருக்கும் தாயார் மகிழ்வுறுகிறாள். அதேநேரம் தான் அவர்களில் ஆதிக்கம் செலுத்தியதை எண்ணி வருந்துகிறாள். அவள் படிப்படியாக முன்னேறி ஒரு விவேகமுள்ள, சுயநலமற்ற பிறவியாக மீண்டுமொரு நாள் பூவுலகிற் பிறப்பாள்.
ஆர்தர் ஃபோர்ட் ஒரு நியமிக்கப்பட்ட சமயக்குருவாக இருந்ததாலோ என்னவோ அவர் மதபோதகர்களைப் பற்றிக் கூறுகையில் கூடுதலாக அனுபவித்துக் கூறுவதைப் போன்றிருக்கும். எல்ஸி செக்ரைஸ்ட் (Elsie Sechrist) அவரிடம் குறிப்பிட்ட நபர்களைப் பற்றிக் கேட்டுப்பார்க்கச் சொல்லிச் சில நாட்களின் பின் அவர் ஒரு கிறிஸ்தவ மார்க்க போதகரைப் பற்றிச் சொன்னார். அவர் பலரை நல்ல கிறிஸ்தவனாக மாற்றியவர். அவர் தனது போதனைகளின் போது உயிர்த்தெழுந்த பாலகனைப் பற்றியும் இறப்பின் பின் உள்ள வாழ்வைப் பற்றியும் உபதேசித்திருக்கிறார்.
"அப்போதகருக்குச் சிலநேரங்களில் பைபிளில் விபரிக்கப்பட்ட தீர்ப்புகள் வழங்கும் நாள் (Judgement Day) மற்றும் இறந்தவர்கள் எல்லாம் கல்லறைகளிலிருந்து மீண்டும் உயிர்பெற்று எழுவார்கள் என்பவை போன்றன உண்மையிலேயே சரியான முறையில் அர்த்தம் கற்பிக்கப் பட்டிருக்கின்றனவா என்று சந்தேகங்கள் வரப்பார்க்கும். ஆனால் அவர் அவற்றை எதிர்க்காமல் ஏற்றுக் கொண்டிருந்தார். ஏனெனில் அவர் உண்மையிலேயே தேடுதல் உள்ள ஒருவராகும். தந்தையை அடையும் வழியை அறிவதற்கு சர்ச் ஒன்று தான் சிறப்பான வழியென்று நம்புபவர். தனது திருச்சபையில் நோயாளிகட்குத் தாராளமாக உதவிகள் செய்தார். அத்துடன் மக்களை நல்வாழ்வு வாழ்வதற்குத் தூண்டினார். அவர் தனது எதிர்காலத்தைப் பற்றி அவ்வளவாகக் கவலைப்படுவது கிடையாது. ஏனெனில் சரியான முறையில் வாழ்ந்தால் இறைவனின் அரியாசனத்துக்கு அருகில் இருப்பதற்குத் தானும் தேர்ந்தெடுக்கப் படுவேனென எண்ணினார்.
"தனது நம்பிக்கையில் உறுதியாக வாழ்ந்து அவர் இறுதியில் பூவுடலை நீத்தபின் மேலுலகில் லேசான ஒரு தூக்கம் கொண்ட பின் ஒரு கோபுரமும் அதனருகில் கல்லறைகளுடன் கூடிய இடுகாடும் கொண்ட  அழகிய ஒரு இடத்தின் முன் கண்விழித்தார். அவர் தனது வீட்டிலிருப்பது போல உணர்ந்தார். ஏனெனில் அவர் போதனை செய்த இடமும் இதைப் போன்றதே (அதாவது சர்ச்சும் அதற்கருகே இடுகாடும்). அவர் அந்தக் கட்டடத்தை நோக்கி நடக்கத் தொடங்கினார். அதனுள்ளே நன்றாக உடைகள் உடுத்திய பலர் ஆராதனைக் கூட்டத்துக்கு ஆயத்தமாக நிறைந்திருக்கக் கண்டார். ஆர்கனின் இசை கேட்டது. அவர் நடைபாதையால் சென்று பிரசங்க மேடையை அடைந்தார். தன் தலையைத் தாழ்த்தி வணங்கியபின் பிரார்த்தனையைத் தொடங்கினார். மீண்டும் இசையொலி கேட்டது. சபையிலே நிறைந்திருந்தவர்களை உற்றுக் கவனிக்கையில் சிலமுகங்களே பரிச்சயமாகத் தெரிந்தன. அதாவது வேறொரு வட்டாரப் பகுதியின் திருச்சபைக்குத் தான் அழைக்கப்பட்ட போதகரைப் போல இருந்தது. ஆனால் அவர் பின்னர் தனது போதனையை வழங்குகையில் 'நீங்களனைவரும் பாவிகளே என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்' என்று ஆரம்பித்தார். தான் எதற்காக அந்தக் குறிப்பிட்ட விஷயத்தை இன்று தேர்ந்தெடுத்தேன் எனவும் அது இந்த முன்பின் தெரியாதவர்களைப் பற்றித் தான் மதிப்பீடு செய்வது போலுள்ளது எனவும் ஆச்சரியப்பட்டார். அவர் சங்கடப்பட்டார். ஆனால் வேறெவருக்கும் அது ஆச்சரியத்தைத் தரவில்லைப் போலிருந்தது. கடைசியாக அவர் அவர்களுக்குத், 'தீர்ப்பு வழங்கும் நாளன்று எம்மெல்லோர்க்குமே தீர்ப்புகள் வழங்கப்பட்டுப் பின்னர் சொர்க்கத்துக்கோ, நரகத்துக்கோ அனுப்பப்படுவோம்' என்றார்.
"சபையோர்கள் அனைவரும் கனிவாகப் புன்னகை புரிந்தனர். இப்படிப்பட்ட விசித்திரமான எதிர்விளைவு அவரை ஆச்சரியப்படவைத்தது. அவர் நரகத்தினுடைய எரிக்கும் சித்திரவதையைப் பற்றி நினைப்பூட்டி அவர்களை எச்சரித்தார். அதற்கு அவர்கள் இரக்கத்துடன் கூடிய புரிந்துணர்வுடன் புன்னகை புரிந்தனர். அவர் மேலும் குழப்பமுற்றார். பின்னர் சபையிலிருந்த ஆத்மாக்கள் அனைவரும் ஒரு சேர எழுந்து அவரை வரவேற்றனர். அத்துடன் அவர்கள் அவரது உபதேசத்தைக் கண்டு களித்ததாகவும் அவரின் நிலையைச் சரிசெய்யத் தாம் இப்போ தயார் என்றும் உரைத்தனர். போதகர் அதிர்ச்சியால் வாயடைத்து நின்றார். ஒருநாளும் சபையோரிடமிருந்து இப்படிப்பட்ட எதிர்விளைவை அவர் சந்தித்ததில்லை. அவர் தான் கனவு கண்டு கொண்டிருப்பதாகவும் கனவிலிருந்து விழித்து விடுவேனெனவும் நினைக்கத் தலைப்பட்டார். ஆனால் அப்படி நடக்கவில்லை. இப்போ அவர்கள் அவரை சர்ச்சுக்கு வெளியே அழைத்துச் சென்று சுடலையை அடைந்தார்கள். அங்கே அவரது கல்லறையை அவருக்குக் காட்டினார்கள். அக்கல்லறையில் அவரது பெயரும் பிறந்த திகதியும் இறந்த திகதியும் செதுக்கப்பட்டிருந்தன. 'இப்போ நீங்களும் எங்களில் ஒருவரே. இங்கே எம்மைத் தவிர வேறு எவரும் எம்மை மதிப்பீடு செய்யமாட்டார்கள். எம்மாலான உதவிகளை உங்களுக்குச் செய்யவும் உங்களுக்குப் போதனை செய்யவேண்டும் போலிருந்தால் அதனைச் செவிமடுக்கவுமே நாம் இங்கேயுள்ளோம். அதேநேரத்தில் நீங்கள் உங்களின் மதிப்பாய்வுகளைத் தொடங்குங்கள். அமைதியாக ஓய்வெடுங்கள்' என்றனர் அவர்கள்.
ஆர்தர் ஃபோர்ட்டிடம் எல்ஸி செக்ரைஸ்ட்டின் மற்றுமொரு கோரிக்கை என்னவென்றால் திருமணம் புரிய இயலாத இரு காதலர்களைப் பற்றியதாகும். அதற்கு அவர், 'ஒரு மனநோயாளியான மனைவியுடன் திருமணபந்தத்திலே சிக்குண்ட ஒரு மனிதனைக் காதலித்த ஒரு பெண்ணைப் பற்றிப் பார்ப்போம். அப்பெண்ணுக்கு அவனைத் திருமணம் செய்வதே எந்த ஒரு விஷயத்திலும் பார்க்க முக்கியமாகப் பட்டது. இருவரும் ஒருவரையொருவர் மனதாரக் காதலித்தனர். அம்மனிதனின் மனைவி மனநோயால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் இருப்பதனால் அவளை விவாகரத்துச் செய்து விட்டுத் தனது இதயம் கவர்ந்த உண்மையான நண்பியைத் திருமணம் செய்ய மனிதன் வகுத்த சட்டங்கள் இடம் கொடுக்கவில்லை. அவ்விருவரும் ஒருவரையொருவர் மனதார விரும்பினாலும் இணையமுடியாமல் தம் வாழ்நாளைக் கழித்தனர். அந்த மூளை பாதிப்படைந்த பெண் அவர்களிருவரிலும் பார்க்கக் கூடியகாலம் வாழ்ந்தாள். அக்காதலர்களிருவரும் சிலமாத  இடைவெளியில்  உடலை நீக்கி இங்கே வந்த போது உடனேயே மெய்மறந்த இன்பத்தில் இருவரும் இணைந்து கொண்டனர். பலகாலமாக ஒருவர் மற்றவரின் அண்மை தரக்கூடிய மகிழ்ச்சிக்காகவும் ஆறுதலுக்காகவும் ஏங்கியிருந்தவர்கள் ஆதலினால் அவர்களிருவரும் ஒரே ஆத்மாவைப் போலானார்கள். பூவுலகில் நன்னெறி சார்ந்து வாழ்ந்த இவ்விருவரும் இங்கே எம்மாற் கற்பனையில் கூடக் கருதவியலாத அளவு மிகச் சிறப்பான முறைகளில் ஒரு முறையில் ஐக்கியமாவார்கள். இங்கே திருமணமென்னும் அமைப்பு முறை இல்லாவிடினும் ஆத்மாக்கள் ஒன்றுடனொன்று கலந்து ஒன்றுபடுவதென்பது எல்லையற்றதோர் உன்னத நிலையாகும். அவ்விரு ஆத்மாக்களும் சிலவேளைகளில் முற்பிறவிகளில் இரட்டை ஆத்மாக்களாக (twin souls) இருந்திருக்கலாம். அதனால் மிகச் சமீபத்தைய பிறவியிலும் ஒருவரையொருவர் சந்திக்கவென இருந்திருக்கலாம். ஆனால் ஏதோவொரு தவறு நேர்ந்து விட்டது. அந்த ஆணானவன் தான் விரும்பிய பெண்ணைப் பற்றிய உள்ளுணர்வைத் தொலைத்து விட்டதனால் வேறொரு பெண்ணைச் சந்தித்துத் திருமணமும் புரிந்த பின் தான் தனது மனதுக்குரியவளைக் கடந்த பிறவியில் சந்தித்தான். அதனால் தான் பௌதீக உலகில் அவர்கள் வாழ்க்கை முழுவதும் பிரிந்திருக்க வேண்டிய சோகநிலை ஏற்பட்டது. ஆனால் அது பிழை என்பதல்ல. அவர்கள் இருவருமே அந்தத் தியாக அனுபவத்தின் மூலமாக வளர்ச்சி அடைந்துள்ளனர். அத்துடன் இப்பிரிவானது உத்தேசிக்கப்படவில்லை என்றாலும் அம்மனிதன் மிக இளமையில் திருமணம் புரிந்த காரணத்தினால் இப்படியானது.
"அவர்களிருவரும் இப்போ ஒன்றாக இருக்கிறார்கள். அவர்களாக விரும்பினாலே அன்றி எந்தவொரு சக்தியாலும் அவர்களைப் பிரிக்கமுடியாது. அவர்கள் பிரிய விரும்புவதற்கும் சாத்தியங்கள் மிகமிகக் குறைவென்றே சொல்லலாம். ஏனெனில் கிட்டத்தட்ட ஆதியிலிருந்தே அவர்கள் ஒன்றாக இருந்திருக்கிறார்கள். இரட்டையாத்மாக்கள் (twin souls) என்றால் என்ன? அது இரு ஆத்மாக்கள் மிகவும் நாட்டம் கொண்டு கலந்து ஒன்றாவதேயன்றி வேறல்ல. அங்கே ஒவ்வொரு ஆத்மாவும் மற்றைய ஆத்மாவின் அண்மையினால் பலமாக உணரும். சில ஆத்மாக்கள் மற்றையவற்றிலும் பார்க்கச் சுதந்திரமானவை. அதாவது எமது இதயமானது தனியே செயல்படும்.  ஆனால் அதே நேரத்தில் கைவிரல்களோ கால்விரல்களோ மற்றவற்றினால் உறுதிப்பட்டோ சமநிலைப்பட்டோ இருக்கும். ஆத்மாக்களிலும் அப்படியே. சில ஆத்மாக்கள் சுதந்திரமானவை. சில மற்றவற்றைச் சார்ந்திருக்கும். இவற்றுள் எந்தவகை சிறந்ததென்று நாம் எப்படித் தீர்மானிக்க முடியும்? எம் உடல்களெல்லாம் எம்மைப் படைத்தவனின் எண்ணங்களின் வெளிப்பாடுகளே. அவன் சில பாகங்களைச் சுதந்திரமாகவும் சிலவற்றைச் சார்ந்திருக்கும் வண்ணமும் படைத்துள்ளான். ஆனால் முழுமையாகப் பார்க்கும் போது அந்த முழுமையின் பூரணத்துவத்துக்கு இன்றியமையாத வகையில் ஒவ்வொன்றும் ஒன்றுடனொன்று பின்னிப் பிணைந்திருக்கின்றன".
ஆவி நிலையிலுள்ள ஆத்மாக்களுக்கு ஆண் பெண்ணென்ற பாகுபாடு உள்ளதாவென நான் கேட்டேன். அதற்கு ஆர்தர், "இல்லை, ஆனால் இருபாலும் சேர்ந்தவர்கள் நாம் - மேலும் விளக்கமாகச் சொன்னால் நாம் இரண்டுமல்ல. ஒரு தனித்துவமான ஆணவமாகும் (ego). ஒவ்வொன்றும் மற்ற ஆத்மாவை விட வேறுபட்டதாகும். ஆனால் வகுக்கப்பட்ட பாலியலிலும் பார்க்க முழுமைத் தன்மையின் பூரணத்துவத்தைக் கொண்டுள்ளவையாகும். இங்கு நாம் சொன்னது போல பால் பாகுபாடில்லாத காரணத்தால் பாலுறவுகளில்லை. ஆனால் நாம் விரும்புபவர்களுடன் மிக உயர்வான முறையில் எம்மால் இணைய முடியும். அந்த இணைவானது பௌதீக நிலையிலிருக்கும் இணைவிலும் பார்க்க மிகவும் பரிபூரணமாக இருக்கும்" என்றார்.
நான் ஓரினச்சேர்க்கை (homosexuality) எதனாலேற்பட்டதென அறிய விரும்பினேன். அதற்கு அவர், "இங்கே தான் ஆணாகப் பிறப்பதா பெண்ணாகப் பிறப்பதாவென ஒரு முடிவுக்கு வரமுடியாமல் இருப்பவர்கள் தான் பாலியல் குழப்பங்களுடன் பௌதீக உடலுக்குத் திரும்புபவர்களாகும். அதனால் இந்த விதமாகவோ அந்த விதமாகவோ என்று ஏதும் முழுமையாக வரையறுக்கப்படாத உந்துகைகளுடன் பிறப்பதால் அவர்களுக்கு இப்படிப்பட்ட குழப்பங்களிருக்கும். இருபாலுறுப்புகளுடன் கூடிய உடலானது குழப்பமான எண்ண வடிவங்களாகும். ஏறக்குறைய விசித்திரமான சூழ்நிலைகளில் தாங்கள் எந்தப் பாலினத்தைத் தேர்வு செய்வதென்று முடிவெடுக்க முடியாமலிருக்கும் ஆத்மாக்கள் இவ்வாறு பிறக்கின்றன" என்றார்.
        

No comments: