இது 'A World Beyond' என்ற ஆங்கில நூலின் மொழிபெயர்ப்பாகும். இந்நூலை எழுதியவர் ரூத் மோன்கொமெரி (Ruth Montgomery) எனும் ஒரு பெண்மணியாகும். மனிதருக்குள் மேலுலக ஆத்மாக்கள் வந்து பேசுவதைப் போன்று மேற்குலகில் 'Automatic Writing' என ஒரு விடயமுள்ளது. அதாவது ஆத்மாக்கள் எங்கள் மூலமாக வந்து சில விடயங்களை எம்மைக் கொண்டு எழுதச் செய்வது என்பதாகும். இந்நூலானது அப்படியாகத்தான் எழுதப்பட்டது. 'ஆர்தர் ஃபோர்ட்' என்று இந்நூலாசிரியைக்குத் தந்தையைப் போலிருந்த ஒருவர் மேலுலகம் சென்ற பிற்பாடு அவர் மூலமாக எழுதப்பட்டது இந்நூலாகும்.

Sunday, August 23, 2020

பதின்மூன்றாம் அத்தியாயம் - மறு பிறப்பிற்கான உதாரணங்கள் (Examples of Reincarnation)

                                    

பெரிய வெள்ளி அன்று (Good Friday) காலையில் ஆர்தர் ஃபோர்ட் பின்வருமாறு டைப்ரைட்டரில் எழுதினார்: "இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கிட்டத்தட்ட இதே நாளில் நாஸரேத்திலிருந்து வந்த யேசு எனும் பெயருடையவர் முடிவற்ற வாழ்வின் அடையாளமாகச் சிலுவையில் மரித்தார். அவர் மேலுமொரு அதிசயத்தை வெளிப்படுத்து முகமாகத் தான் அன்று சிலுவையில் இருந்து அகன்றார் எனச் சிலர் எண்ணுகின்றனர். ஆனால் அவருள் இருந்த கிறிஸ்துவே உண்மையில் அன்று மரணத்தை வென்று எழுந்தது. எழுந்து, மீண்டும் மீண்டும் சூக்கும வடிவில் தோன்றி உயிர் என்றும் நிரந்தரமானது என்பதையும் பூதவுடலுடன் இருக்கும் மனிதன் உண்மையான மனிதனல்ல ஆனால் என்றும் இருந்து கொண்டே இருக்கும் ஆத்மாவின் பௌதீக வடிவம் மட்டுமே என்பதையும் நிரூபித்தார். அவரது போதனைகளின் உண்மையையும் அதன் மூலம் அவர் நிரூபித்தார். அதன் காரணமாக அவர் பூவுலகில் என்றுமே நிலைத்து நிற்கும் யேசுவாகவும் காலகாலமாக இறை சக்தியிலிருந்து கொண்டிருக்கும் இறையுணர்வாகவும் (Christ consciousness) பரிணமித்துக் கொண்டிருக்கிறார்.
"டமஸ்கஸ் (Damascus) செல்லும் வழியில் கிறிஸ்து அவர் முன் தோன்றிக் காட்சி கொடுத்த புனித பவுலின் (Saint Paul) விடயத்தைக் கருத்திற் கொள்வோம். யேசு என்ற ஒரு மனிதரைப் பற்றி அவர் அறிந்திருக்கவில்லை. ஆனால் அந்த ஆத்மவுருவத் தோற்றத்தைக் கண்டதும் உடனடியாக உள்ளுணர்வில்  அவரே யேசு என்றொருவரின் உடலில் வசித்த கிறிஸ்து என அவர் அடையாளம் கண்டு கொண்டார். அவருக்கு உரைக்கப்பட்ட வாசகங்கள் உண்மையானவை. இந்தப் பிரபஞ்சம் தோன்றுகையில் உருவாக்கப்பட்டுப் பின்னர் காலத்துக்குக் காலம் மனிதவடிவில் பிறப்பெடுத்துக் கொண்டிருக்கும் ஒரு ஆத்மாவின் பூவுலக வாசங்களின் நீண்ட வரிசையில் யேசுவானவர் மிக மேலானவராகும். அவர் தான் புத்தராக வந்தவர். அவர் தான் தேவதூதன். அவர் தான் எல்லாமாகவும் வந்தவர். அத்துடன் எமது ஆத்மாக்கள் உள்ளுக்குள்ளே எப்போதும் எவருக்காக எண்ணி ஏங்குகின்றனவோ அவரே இவர் - எம்மை வழி நடத்துபவர். என்றும் எமக்கு உதவுபவர். அமைதி தருபவர். நல்லனவற்றின் மொத்த உருவம். நிச்சயமாக அவர் இறைமகன் தான். ஆனால் நாம் அனைவருமே இறைவனின் புத்திரர்களும் புத்திரிகளும் இல்லையா? ஒரேயொரு வித்தியாசம் என்னவென்றால் யேசுவானவர் மனிதகுலத்தை அதனது அடிப்படை உண்மைகளுக்கு இட்டுச் செல்வதற்கு இறைவனால் அதிகாரம் அளிக்கப்பட்டவர்: ஒவ்வொருவரிலும் அன்பாயிருங்கள்; உங்களுக்குத் தீங்கு செய்பவனுக்குக் கூட நீங்கள் நன்மை செய்யுங்கள்; உங்களைப் பற்றி மற்றவர்கள் தீங்காகக் கதைக்க நீங்கள் விரும்பாவிடின் மற்றவர்களைப் பற்றி நீங்கள் தீங்காகப் பேசாதீர்கள்; உங்களை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டுமென எண்ணுகிறீர்களோ அவ்வாறே நீங்கள் மற்றவர்களை நடத்துங்கள். கிறிஸ்துவின் ஆத்மாவானது நாசரேத்தைச் சேர்ந்த யேசுவின் உடலில் பல காலங்களுக்கு வாழ்ந்து முடித்தது. ஆனால் நாமெல்லோரும் ஒன்றை நினைவில் வைக்க வேண்டும். அதாவது எமது உடலினுள் வாழும் ஆத்மாவும் அது போலவே இறைவனின் ஒரு பகுதி என்பதை நினைவில் வைக்க வேண்டும். அத்துடன் அதுவும் கூடத் தீமையை எதிர்க்கும் ஆற்றல் கொண்டது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். எனவே நாம் அனைவரும் எது ஆரம்பத்திலேயே தூய்மையாகவும் மாசற்றதாகவும் உண்மையாகவும் இருந்ததோ அது போலவே மாறுவதற்கு சற்றுக் கடுமையாக முயற்சிப்போம். உன்னைப் போலவே உன் அயலானையும் நேசி." 
உயிர்த்தெழுந்த ஞாயிறன்று காலையில் ஆர்தர் உபதேசம் செய்கையிலும் இதைப் போன்றதொரு கருத்தையே முன்வைத்தார் பின்வருமாறு: "இன்று வாழ்வு என்றும் சாஸ்வதமானது என்பதை நிரூபிப்பதற்காக உடலிலிருந்து விடுதலை பெற்ற கிறிஸ்துவானவர் கல்லறையிலிருந்து எழுந்த அந்த அழகான காலையைக் குறிக்கும் நினைவு நாளாகும். உடலிலிருந்து விடுதலையாகிப் பாலஸ்தீனத்தின் பல பாகங்களில் தனது சீடர்களுக்குக் காட்சியளித்தார். சந்தேகமுற்ற தாமஸுக்குத் தனது காயங்களைக் கூடக் காட்டினார். ஆனால் இதுவல்ல முக்கிய செய்தி. முக்கியமான விஷயம் என்னவென்றால், நாமனைவருமே எமது தனித்தன்மைகளுடனும் ஞாபகங்களுடனும் இறப்பைத் தாண்டிப் பிழைக்கிறோம் என்பதேயாகும். இதனையே இயேசு சிலுவையிலே மரித்ததன் மூலம் உலகிற்கு உணர்த்தினார். என்றுமே சாஸ்வதமான அவரின் ஒரு பகுதியானது - அதாவது கிறிஸ்துவானவர் - என்றுமே இருந்து கொண்டிருக்கும் ஆத்மாவின் ஒரு பகுதியாக எங்கள் பூதவுடல் இல்லை என்பதை நிரூபிப்பதற்காக உயிர் வாழ்ந்தார். நாம் யேசுபிரான் என்ற பெயரில் எமது நினைவில் இருந்து கொண்டே இருக்கும் அந்தக் கிறிஸ்துவானவரின் பற்பல பிறவிகளைப் பற்றி இன்று பார்ப்போம். அந்த அவதாரமெடுப்பதற்கு முன் வேறுபட்ட பல மனிதர்களாக அவர் பிறந்திருக்கிறார். அவை அனைத்திலுமே அவர் மனிதனின் பூரணத்துவத்தையே நாடினார். அவர் தனது தந்தைக்கும் அனைவருக்கும் பூதவுடலுடன் இருக்கையிலேயே சபலத் தூண்டுதல்களை எதிர்த்து நின்று ஒரு பூரணமான வாழ்வு வாழ முடியுமெனக் காட்ட விரும்பினார். யேசுவும் எம்மைப் போல ஒரு மனிதர் தான் என்பதனைச் சில நேரங்களில் நாம் மறந்து விடுகிறோம். அவருள்ளே வாழ்ந்த கிறிஸ்துவே அவரை மேன்மையானவராக ஆக்கியது. பூவுலகில் வாழும் எந்தவொரு மனிதனுக்கும் இருக்கக் கூடிய உடல் சார்ந்த அதே சபலங்களும் மயக்கங்களும் யேசுவைத் தொந்தரவு செய்திருந்தாலும் அவற்றை எல்லாம் அவர் எதிர்த்து நின்றார். எனவே அவர் விரும்பியவாறே நேர்மையாக நாம் ஒவ்வொருவரும் வாழ முடியுமென்பதை ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டும். ஏனெனில் பூதவுடலோடு இருக்கும் மனிதனாலும் பூரணத்துவம் பெற முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது."
அவர் தொடர்கையில் பின்வருமாறு சொன்னார்: "இப்போ பூவுலகில் ஒரு பிறவியிலேயே பூரணத்துவம் பெற முயன்ற ஒரு மனிதரைப் பற்றிப் பார்ப்போம். அவர் கூடுதலான முன் கர்மவினைப் பயன்களைத் தீர்க்க வேண்டிய நிலையில் இருந்ததால் அது சாத்தியமில்லாதது போல் இருந்தது. 'அது சாத்தியமில்லையா?' என்று நீ கேட்கலாம். ஆம் என்றும் சொல்லலாம்; இல்லை என்றும் சொல்லலாம். பல கூடாத முன் ஜென்ம வினைகள் இருப்பின் அவர் நிச்சயம் தானே தனக்குப் பரிகாரம் செய்யவேண்டும். ஆனால் ஏனைய அனைவரையும் மன்னித்து விட்டுப் பின் தன்னையும் மன்னித்து விட்டால், அவர் கருணையின் விதிகளுக்குக் கீழே கொண்டு வரப்படுவார். கருணையின் விதி என்பது நாம் உண்மையிலேயே மனம் வருந்தினால் கடந்த காலப் பாவங்கள் அனைத்தையுமே துடைத்து அழித்து விடும். இதைத் தான் நாஸரேத்தின் யேசுவானவர் தன்னுள்ளே வந்திறங்கக் கூடிய பரிசுத்த ஆவி என்று உரைத்தார். இந்தக் கருணையினால் உருவான பரிசுத்த ஆவியினாற் பலன் பெறுங்கள். இந்தப் பரிசுத்த ஆவியுடன் தொடர்பு கொள்வதற்கு முக்கியமாக மற்றவர்களை மன்னித்தால் மட்டும் போதாது எம்மை நாமே மன்னிக்கவும் வேண்டும் என்பதை நினைவில் கொள். 'அன்பு' என்பது தான் முக்கியமான சொல். மற்றவர்களை உன்னைப் போல் நேசி. அத்துடன் உன்னையும் நேசிக்கப் பழகிக்கொள்."
எனது 'இங்கும் இதற்குப் பின்னரும்' (Here and Hereafter) என்னும் நூல் எழுதுவதற்கான முயற்சிகளில் நான் ஈடுபட்டுக் கொண்டு இருக்கையில் நான் இவ்வுலகில் பிறப்பதற்கு முந்தைய எனது வாழ்வை அறிவதற்காக, ஹிப்னாட்டிஸம் மூலம் எனது வாழ்க்கையில்  பின்னோக்கிச் செல்கையில் (prenatal hypnotic regression) எனது பல முந்தைய பிறவிகளை நான் மறுபடியும் வாழ்ந்து பார்த்தது போல் தோன்றியது. அவற்றுள் இரண்டை இங்கு விபரிப்பது பொருத்தமாக இருக்குமென எண்ணுகிறேன். ஏனெனில் அதன் பின்னர் நடந்த நிகழ்ச்சிகள், நான் ஹிப்னாட்டிஸத்தின் போது கண்டவற்றுக்கு நம்பகத்தன்மையைக் கொடுத்தன. அதில் ஒன்றில் நான் இமயமலைச் சாரலில் ஒரு ஆச்சிரமத்தில் பத்மாசனத்தில் அமர்ந்திருக்கக் கண்டேன் (sitting in the lotus position at an ashram in the lower Himalayas). எனது கைகள் சிறியதாகவும் சற்றுக் கறுப்பாகவும் இருந்தன. கேள்விகளுக்குப் பதிலளிக்கையில், ஆச்சிரமத்தில் எனது உணவை விபரித்தேன் - சிறு கனிகள் (berries), பழங்கள், கொட்டை வகைகள் (nuts) - அத்துடன் கீழேயுள்ள கிராமத்திலிருந்து வரும் சிறுவர்களுக்கு நான் ஒரு குருவாக இருப்பதாகவும் ஆனால் அதே நேரம் மலையில் மேலே வசிக்கும் ஒரு உயர்ந்த குருவின் கீழ் நான் பயின்று வருவதாகவும் சொன்னேன்.
என்னை ஹிப்னாட்டிஸம் செய்தவர் (hypnotist) - எனது 'ஹியர் அண்ட் ஹியர் ஆஃப்டர் என்ற புத்தகத்தில் ஜேன் வின்த்ரோப் (Jane Winthrop) என்று அழைக்கப்பட்ட பெண் விஞ்ஞானி - என்னை இருபத்தைந்து வருடங்கள் முன்னோக்கி அழைத்துச் சென்ற பின் நான் இன்னும் ஆச்சிரமத்திலே தான் இருக்கிறேனா எனக் கேட்டார். முதலில் நான் கலவரத்துடன் காணப்பட்டேன். பின்னர் தான் அதற்கான காரணம் புரிந்தது. எனக்கு மேலிருந்த குருவானவர் இறந்து விட்டதாகவும் நான் அவரது கடமைகளைப் பொறுப்பெடுத்துக் கொண்டதாகவும் நான் விளக்கமளித்தேன். ஜேன் எனக்கென்று ஒரு மந்திரம் (mantram) இருக்கிறதா எனக் கேட்டதற்கு நான் "நிச்சயமாக; ஒவ்வொருவருக்கும் ஒரு மந்திரம் உள்ளது" என உரத்த குரலில் சத்தமிட்டேன். எனது மந்திரத்தை உரைக்கும் படி சொன்னதற்கு நான் முன்னர் எப்போதுமே கேள்விப்பட்டிராத இரு சத்தங்கள் ஒன்றாகச் சேர்ந்த ஒரு உச்சாடனத்தைத் திரும்பத் திரும்ப உச்சரித்தேன். வெளிப்படையான காரணங்களுக்காக நான் ஒருவருக்குமே இந்த அனுபவத்தைப் பற்றிச் சொல்லவில்லை. இதனது நம்பகத்தன்மையைச் சோதித்து அறிவதென்பது மிகவும் கடினம். இரு மாதங்களின் பின்னர் எனக்கு முன்னர் அறிமுகமில்லாத ஒரு மனிதர் வேர்ஜீனியாக் கரையிலிருந்த (Virginia Beach) எனது வீட்டுக்கு வந்தார். அவர் இந்தியாவில் இருக்கும் உதய்பூர் நகரத்தைச் சேர்ந்த டாக்டர் ஐ. ஸி. ஷர்மா எனத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அவர் வேர்ஜீனியாவில் இருக்கும் சிறிய பல்கலைக்கழகத்தில் பரிமாற்றம் செய்யப்பட்ட (exchange) தத்துவவியல் பேராசிரியராக அப்போ இருந்தார். அவர் எனது மறைவியல் சம்பந்தமான (psychic) புத்தகங்களை வாசித்திருக்கிறார். அவர் அவற்றைப் பற்றி என்னுடன் கலந்துரையாட விரும்பினார். அவர் கிளம்புகையில் எனது மந்திரம் என்ன என நான் அறிய விரும்புவதாகச் சொன்னேன். ஏனென்றால் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் இறைவனுக்கும் இடையில் ஒவ்வொரு தனிப்பட்ட அலையதிர்வு இருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது. அதற்கு அவர் எனது மந்திரத்தை வேண்டித் தான் தியானம் செய்வதாகச் சொன்னார்.
இரு கிழமைகளின் பின்னர் தனது மனைவியை அழைத்துக் கொண்டு மீண்டுமொரு முறை அவர் வந்தார். அவர்கள் புறப்பட ஆயத்தமாகையில் நான் சற்று ஆவலுடன், "எனது மந்திரத்தை எண்ணித் தியானம் செய்வதற்கு உங்களுக்கு நேரம் கிடைக்கவில்லைப் போலும்" எனக் கேட்டேன். டாக்டர் ஷர்மா, "உண்மையில் கிடைத்து விட்டது. நான் அதனை உங்களுக்கு எழுதித் தருகிறேன்" என்று சொல்லி என்னிடம் ஒரு சிறிய காகிதத்தை நீட்டினார். அதில் இரு ஒலிகள் ஒன்று சேர்ந்து எழுதப்பட்டிருந்தன. அவை எனது வியப்புக்கேற்ப நான் ஹிப்னாட்டிஸம் செய்யப் பட்டிருக்கையில் மீண்டும் மீண்டும் உரைத்த அதே மந்திரமாக ஒரு வித்தியாசமும் இன்றியிருந்தது. அன்றிலிருந்து நான் நாளாந்தம் தியானம் செய்கையில் அந்த மந்திரத்தையே உபயோகித்துக் கொண்டு வருகிறேன் என்று சொல்ல வேண்டியதில்லை.
நான் இந்த விஷயத்தை மீண்டும் சொல்லியதற்குக் காரணம் மறுபிறப்பைப் பற்றிச் சொல்கையில் ஆர்தர் ஃபோர்ட்டின் ஆத்மாவானது, "நீ இந்தியாவின் இமயமலையில் முன்னொரு தரம் ஒரு குருவாக இருந்தாய். அந்தப் பிறவியில் நான் உன்னை அறிவேன். ஏனெனில் நான் உனது குருவாக இருந்தேன். நான் அவ்வுலகை விட்டு ஆத்ம உலகுக்குச் செல்லும் வரையும் என்னிடம் நீ கற்றறிந்தாய். பின்னர் நீ எனது பொறுப்புகளை ஏற்றுக்கொண்டாய். நீ ஒரு நல்ல தகுதியான மாணாக்கனாக இருந்தாய். நீ ஒரு இளைஞனாகவும் நானொரு வயதானவராகவும் நாமிருவரும் ஒருவரில் ஒருவர் மிக அன்பாகவும் இருந்தோம்" என்றது.
எனது இரண்டாவது 'மறுபிறப்பு' அனுபவத்தைப் பற்றி மீளவும் சொல்கையில் எனக்குச் சற்றே சங்கடமாக உள்ளது. ஆனால் சிலவேளை அது மற்றவர்கள் தங்களது ஆழ்மனத்தின் எண்ணங்களை ஆய்ந்தறிவதற்கு ஊக்குவிக்கக் கூடும். இந்த நினைவு கூரலானது ஐந்து வருடங்களுக்கு முன் நான் தியானத்தில் இருக்கும் போது தான் ஆரம்பித்தது. அதில் நான் ஒரு ஐந்து அல்லது ஆறு வயதுச் சிறுமியாக இருக்கக் கண்டேன். பெத்தலஹேமில் (Bethlehem) இருக்கும் எமது குடிலுக்குச் சற்றுத் தொலைவில் இருந்து சில விவேகமுள்ள மனிதர்கள் வருவதைக் கண்டேன். அருகில் ஒரு இடத்தில் ஒரு குழந்தை பிறந்துள்ளது எனக்குத் தெரிந்துள்ளது. சிறிது நேரத்தில் அந்தக் குழந்தைக்கு பெத்தலஹேமுக்கும் ஜெருஸலேமுக்கும் இடையில் இருக்கும் ஒரு குளத்தில் ஸ்நானம் செய்விப்பதைப் பார்ப்பதற்கு அந்த மனிதர்களைப் பின் தொடர்ந்து செல்வதற்கு என்னை அனுமதிக்குமாறு நான் எனது தந்தையைக் கெஞ்சிக் கேட்கிறேன். அவர் முதலில் என்னைத் தடுத்தார். ஆனால் நான் அவ்வளவு தீவிரமாக அவரைக் கெஞ்சிக் கேட்டதனால் கடைசியில் நாம் தெரு வழியே நடக்கத் தொடங்கினோம். அப்போது நான் எனது சிறு கரத்தை அவரது கரத்துள் செலுத்துகையில் அவர் தான் ஆர்தர் ஃபோர்டின் அதே ஆத்மா என்பது எனக்குத் தெரிய வந்தது.
மறுநாள் தியானம் செய்கையில் நான் என்னை ஒரு பெண் மணியாகக் கண்டேன். அக்குழந்தை இப்போ வளர்ந்து பெரியவனாகி சாக்கடலின் (Dead Sea) அருகே உபதேசம் செய்து கொண்டிருப்பதாக அப்போது தான் அறிந்திருக்கிறேன். நான் அவர் சொல்வதைக் கேட்பதற்கு மிகவும் ஆசைப்பட்டேன். ஆனால் எனது கணவர் நான் அங்கு செல்வதற்கு அனுமதி வழங்கவில்லை. எனவே நான் எனது கைக்குழந்தையையும் விட்டு விட்டுப் பாலைவனத்தினூடே ஓடுகிறேன். பின்னர் ஜேன் வின்ராப் என்னை ஹிப்னாடைஸ் செய்த பொழுது இவற்றுள் சிலவற்றை நான் மறுபடியும் வாழ்ந்து பார்த்திருக்கிறேன். நான் பாலைவனத்தில் யேசுவைச் சூழ்ந்திருந்த மக்கள் கூட்டத்தைக் கண்டு பிடித்து அவரைப் பின்பற்றும் பெரிய கூட்டத்தில் நானும் ஒருத்தியாகச் சேர்ந்து விட்டேன். பின்னர் பெத்தனி (Bethany) என்னும் இடத்திலுள்ள வீடொன்றில் அவருடன் இருக்கையில் நான் லாஸரசின் (Lazarus) ஒரு தங்கையாக இருப்பதை உணர்ந்தேன். ஆனால் எனக்கு நான் மேரியுமல்ல மார்த்தாவுமல்ல (Martha) என்று தெரிகிறது. ஏனெனில் அவர்கள் இருவருமே அங்கே இருந்தார்கள்.
இந்த விஷயமானது மேற்கொண்ட சிந்தனைக்கு இடமின்றி நகைப்பிற்கிடமாக இருந்ததால் நான் இதை எனக்குள்ளேயே வைத்திருந்தேன். ஆனால் எனது 'இங்கும் இதன் பின்பும்' (Here and Hereafter) என்ற புத்தகத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து ஆரம்பத்தில் வந்த விசிறிகளின் கடிதங்களில் ஒன்று எனக்குத் தெரியாத ஒருவரிடமிருந்து வந்திருந்தது. அக்கடிதத்தில்  நான் முன்னர் லாசரசின் ஒரு தங்கையாக இருந்திருக்கிறேன் என்று தனது உள்ளுணர்வு மூலம் (psychically received the impression) தெரிய வந்ததாக எழுதியிருந்தார். மேலும் சில வாரங்கள் கடந்த பின் ஒரு நாள் நான் அகத்தூண்டுதலால் உந்தப்பட்டு லீவை (Levi) என்பவர் எழுதிய யேசு கிறிஸ்துவின் 'அக்வாரியஸ் காலத்துக்கான நற்செய்தி' (The Aquarian Gospel of Jesus the Christ) என்ற புத்தகத்தின் பிரதியொன்றை வாங்கினேன். இப்புத்தகமானது நூற்றாண்டின் தொடக்கத்தில் அமானுஷ்யமான முறையில் (psychically) லீவை என்பவருக்குச் சொல்லப்பட்டது. அப்புத்தகமானது விவிலிய வேதத்தின் பாணியில் எழுதப்பட்டு இருந்ததனால் நான் மெதுவாகவே அதனை வாசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் எனது குழப்பத்தை அதிகரிக்கும் முகமாக அதில் ஒரு இடத்தில் லாஸரசையும் அவரது மூன்று சகோதரிகளையும் பற்றி - மார்த்தா, மேரி, ரூத் - சொல்லப்பட்டிருந்த பகுதியை நான் வாசிக்கையில் சொல்லொணா வியப்பில் ஆழ்ந்தேன். அப்புத்தகத்தில் அதன் பின்னர் பல இடங்களில் இந்த 'பைபிளில் உரைக்கப்படாத' மூன்றாவது சகோதரியைப் பற்றிச் சொல்கையில் லீவை என்பவர் அப்பெண் யேசுவைப் பின்பற்றுவதற்காகத் தனது கணவரையும் இரு பிள்ளைகளையும் கைவிட்டுச் சென்றதாகவும் ஏனெனில் அப்பெண்ணின் கணவருக்கு யேசுவின் இயக்கத்தில் எந்தவொரு அனுதாபமும் இருக்கவில்லை எனவும் எழுதியிருந்தார். ஆனால் இறுதியில் யேசு அவள் மனதை மாற்றிக் குடும்பத்துடன் சேர அனுப்பி வைத்ததாகவும் அவள் அப்படிச் செய்ததனால் அவளது கணவர் மனம் மாற்றமடைந்து பின்னர் இருவருமே அவரது சீடர்களில் தீவிரமானவர்களாகச் செயற்பட்டார்கள் எனவும் அப்புத்தகத்தில் எழுதியிருந்தார்.
1971 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஏழாம் திகதி ஆர்தர் ஃபோர்ட் எனது டைப்ரைட்டரில் பின்வருமாறு எழுதினார்: "நீ எனது முந்தைய பிறவிகளில் உன்னுடன் எனக்கு இருந்த சம்பந்தங்களைப் பற்றி அறிய ஆர்வமாக உள்ளாய். அவற்றுள் சிலவற்றை என்னால் ஞாபகப்படுத்த முடியும். அதாவது ஆர்தர் ஃபோர்டாக நான் வாழ்ந்த வாழ்வில் நேரடியாகத் தம் தாக்கங்களை ஏற்படுத்தியவற்றை மட்டுமாவது என்னால் நினைவு படுத்த முடியும். ஒன்றில் நான் தாய்லாந்தில் பௌத்த பிக்குவாக இருந்தேன். இன்னொரு பிறவியில் நான் ஃபிரான்ஸ் நாட்டில் எங்கோ ஒரு இடத்தில் டொமினிக்கன் துறவியாக இருந்தேன். இவை ஒரு சில பிறவிகளுக்கு முன்னர் தான் நடந்தவை. அத்துடன் நான் புண்ணிய பூமியில் (Holy Land) ரூத் என்னும் பெயர் கொண்ட ஒரு சிறுமியினதும் அத்துடன் மேரி, மார்த்தா, லாஸரஸ் என்பவர்களினதும் தந்தையாகவும் இருந்திருக்கிறேன். அது ஒரு கடினமான ஆனால் அதே நேரம் உயர்வான வாழ்க்கை (அப்போது என்னால் எனது முழு வல்லமையையும் - யேசுவின் பாதிரியார் ஆவதன் மூலம் - வெளிக்கொணர முடியாமற் போனாலும் கூட). ஆனால் நான் யேசுவிற் பார்க்கக் கணிசமாக வயதிற் பெரியவனாக இருந்தேன். அத்துடன் அவர் சிலுவையில் மரிக்கும் போது நான் உயிருடனில்லை. அவர் பிறக்கையில் நீ சிறுமியாக இருந்தாய். எனது ஏனைய பிள்ளைகளும் அதே போல சிறுவர்களாக இருந்தார்கள். சிலர் உன்னில் பார்க்க மூத்தவர்களாகவும் சிலர் இளையவர்களாகவும் இருந்தார்கள். நாம் பெத்தலஹேமிலிருந்து பெத்தனிக்கு இடம் (Bethany) பெயர்ந்தோம். ஆனால் அதன் பின் நீண்ட நாட்கள் நான் உயிர் வாழவில்லை. மகன் லாஸரஸ் குடும்பப் பொறுப்பை ஏற்கும் படி விட்டு விட்டு நான் இறந்து விட்டேன்.
லாஸரஸ் உயிருடன் புதைக்கப்படவில்லை. நையாண்டி செய்பவர்கள் என்ன தான் நையாண்டி செய்தாலும் அவர் உண்மையிலேயே இறந்து பின் உயிர்ப்பிக்கப்பட்டார். நான் இந்தப் பக்கத்தில் அவருடன் இருந்தேன். பின்னர் அவர் மீண்டும் பூதவுடலுக்குத் திரும்புவதைப் பார்த்தேன். இறைவனின் சங்கற்பம் இருப்பின் இதுவும் சாத்தியம் என்பதை நிரூபிக்கும் முகமாகத்தான் அவர் திரும்பினார். ஒருவரும் என்னை இம்முறை அங்கு மீண்டும் அழைக்காததில் எனக்கு மிக மகிழ்ச்சியே. ஏனென்றால் நான் பூதவுடலினுள் இருப்பதிலும் பார்க்க ஆத்ம உலகில் மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்தக் கடைசித் தரத்தில் இருந்தப் பூதவுடலைப் பொறுத்தவரையிலாவது அப்படித் தான் சொல்லவேண்டும். நீ மார்த்தா போலவோ அல்லது மேரி போலவோ கூடக் கீழ்ப்படிவான பெண்ணாக இருக்கவில்லை. உன் கணவன் யேசுவைப் பின்பற்றுவதற்காக அனைத்தையும் விட்டு விட்டு வர மறுத்ததால் நீ உனது கணவரை விட்டு விட்டு ஓடி விட்டாய். இப்போ இருப்பது போலவே அப்போதும் எதுவும் உனது விருப்பப்படியே நடக்க வேண்டுமென நினைப்பாய். உனது இந்தக் கட்டுக்கடங்காத தன்மையைத் தள்ளி வைத்து விட்டுக் குடும்பத்தை முன் வைக்கும் படி யேசுவே உனக்குப் புத்தி சொல்லி உனது மனதை மாற்றிய பின்னர் தான் நீ உனது குடும்பத்துடன் சென்று மீண்டும் சேர்ந்து கொண்டாய். இந்தப் படிப்பினையானது இன்னமும் உனக்குக் கற்பதற்குக் கஷ்டமாக உள்ளது, ஏனெனில் நீ 'நாம்' 'நீங்கள்' என்பவற்றில் பார்க்க 'நான்' என்பதற்கே எப்போதும் முதலிடம் கொடுப்பதாகத் தெரிகிறது. இந்தப் போக்கை மாற்றுவது நல்லது. அல்லது நீ உயர்ந்த தீர்மானங்களை எடுத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டு அதே தவறுகளை என்றும் இழைத்துக் கொண்டிருப்பாய்."
பின்னர் ஆர்தர் 'நான்' என்பதற்கு முன்னால் 'நாம்' அல்லது 'நீங்கள்' என்பவற்றை வைப்பதைப் பற்றிச் சற்றுக் கடுமையாக எடுத்துரைத்தார் பின்வருமாறு: "சிறிது காலத்துக்கு பாப் (Bob) இடம் கடிவாளங்களைக் கொடுத்து விட்டு ஒரு ஜப்பான் மனைவியைப் போல இருந்து பார். சிறிது காலத்துக்கு அவரை நடத்த விட்டு விட்டு நீ அவரைப் பின்பற்று. இதன் மூலம் நீ பணிவைப் பயிலலாம். அத்துடன் அது கருணைக்கான சோதனையாகும்." அவர் எனது முகத்தை வெட்கத்தில் எரியும் படி செய்தார். ஏனெனில் எனக்குத் தெரியும் அவர் எனது மிகவும் மோசமான குறைகளைச் சுட்டிக் காட்டுவது. எனக்குத் தலைமை தாங்குவதென்றால் மிக மிக விருப்பம்.
ஏப்ரல் மாதத்தில் எமது டைப்ரைட்டர் அமர்வுகளில் ஒரு நாள் எமது பாலஸ்தீன வாழ்க்கையைப் பற்றி வேறு ஏதாவது இருந்தால் சொல்ல முடியுமா என நான் ஆர்தரைக் கேட்டேன். அதற்கு அவர், "உனக்கு முதலிலேயே தெரிந்தது போலவே தான் - நீ லாஸரசின் சகோதரி. நான் அந்தச் சிறார்களுக்குத் தந்தையாக இருந்தேன். நாம் லாஸரஸ் மாதிரியோ மேரி மாதிரியோ அல்லது மார்த்தா மாதிரியோ அவ்வளவு உயர் சிந்தனை உள்ளவர்களாக இருக்கவில்லை. அதனால் தான் பைபிளில் நாம் குறிப்பிடப்படவில்லை. அது எப்போதும் ஒரு குறைதான். ஏனெனில் ஏனையவர்களைப் போலவே எமக்கும் அதே மாதிரியான வாய்ப்புகளிருந்தும் நாம் அவற்றைச் சரியாகப் பயன்படுத்தத் தவறிவிட்டோம். யேசுவின் போதனைகள் நான் இறந்ததன் பின்னரே ஆரம்பித்ததனால் நான் அவரின் சீடர்களில் ஒருவனாக இருக்கவில்லை. ஆனால் சேவை செய்யும் சந்தர்ப்பங்கள் பல இருந்தும் நான் அவற்றைச் சரியாகப் பயன்படுத்தவில்லை என நினைக்கிறேன். சரியான வழிகளை விடப் பாரம்பரிய முறைகளைப் பின்பற்றும் ஒரு கடுமையான கட்டுக்கோப்பான யூதனாக நான் இருந்ததும் அதற்கு ஒரு காரணமாகும்.
நீ ஒரு குதூகலமான பெண்ணாக இருந்தாய். அத்துடன் எனது மற்றப் பிள்ளைகளில் பார்க்க எனக்கு உன்னைத் தான் நிரம்பப் பிடிக்கும். ஆனால் நீ உனது கணவரையும் குழந்தைகளையும் விட உனக்கே முதலிடம் கொடுத்ததனால் அளப்பரிய சேவைகளுக்கான சந்தர்ப்பங்களை இழந்து விட்டாய். கிறிஸ்துவாகிய யேசு என்னும் மனிதருடைய சிஷ்யையாக வருவதற்கு நீ மிகவும் விரும்பியது உண்மையே. ஆனால் அவரைப் பின் தொடர்ந்து அவரின் விவேகம் நிறைந்த உரைகளைச் செவி மடுத்து மகிழ்ந்ததற்குப் பதிலாக நீ உனது குழந்தைகளின் நலனைக் கருத்திற் கொண்டிருந்தால் நீ நன்றாக இருந்திருப்பாய். யேசுவுக்கு நிச்சயமாக இது தெரிந்ததனால் தான் கடைசியில் உன்னை உனது வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அங்கு உனது திறமையினால் நீ கொஞ்சம் கொஞ்சமாக உனது கணவனின் மனத்தை அவரது போதனைகளின் பக்கம் திருப்பினாய். பின் யேசுவின் இறுதி வாழ்நாட்களில் நீங்களிருவரும் உங்கள் சிறு குழந்தைகளுடன் அவரின் சீடர்களாகி விட்டீர்கள்" என்று பதில் அளித்தார். ஆர்தர் உண்மையில் எனது ஏனைய பல பிறவிகளைப் பற்றியும் அவரது பிறவிகளைப் பற்றியும் அத்துடன் இப்போ வாழ்ந்து கொண்டிருக்கும் சில உறவினர்கள், நண்பர்களுடனான முன்னைய தொடர்புகள் பற்றியும் எழுதியிருந்தார். ஆனால் இப்புத்தகமானது பொதுவானதாக எழுத இருப்பதால் அவற்றை இங்கு நான் சேர்க்கவில்லை. 
நாம் பிறவி எடுக்கையில் நாம் பிறக்கப் போகும் இனத்தையும் பூகோள வரை படத்தில் பிறக்கப் போகும் நாட்டையும் எப்படித் தீர்மானிக்கிறோம் என்று ஒரு நாள் நான் கேட்டேன். அதற்கு அவர் "உண்மையில் இது மிக உணர்வு பூர்வமான பிரச்சனைகளில் ஒன்றுக்கு வழி வகுக்கும். ஏனெனில் எமது பழைய கர்ம வினைகளைக் களையக் கூடிய விதமாகவும் அத்துடன் உயர் குணங்களை அபிவிருத்தி செய்யக் கூடிய விதமாகவும் என்று எல்லாவற்றையும் அடக்கக் கூடிய ஒரு சூழ்நிலையாக அது அமைய வேண்டும். சிறுபான்மை இனங்களான கறுப்பு இனமக்கள் அல்லது யூத இன மக்கள் சம்பந்தமாக நாம் சகிப்புத்தன்மை இழந்து இனத் துவேஷத்துடன் நடந்திருந்தால் அந்த இனத்திலேயே அடுத்த முறை பிறந்தால் எமக்கு நல்லதா? பெரும்பாலும் இது தான் நிலைமை. சிவிலுரிமைப் போராட்டங்களில் முன்னணியிலே நின்ற சில நீக்ரோக்கள் முற்பிறவியில் அடிமைகளுக்குச் சொந்தக்காரர்களாக இருந்த வெள்ளையர்கள் ஆகும். அவர்கள் தங்கள் அடிமைகளினதும் தங்களுக்குக் கீழே இருந்த மக்களினதும் மனித உரிமைகளை மறுத்தவர்களாகும். எனவே அவர்கள் வெளியே இருந்து மேம்படுத்துவதிலும் பார்க்க உள்ளே இருந்து உதவுவதற்காக இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தித் தாங்களே கறுப்பர்களாக வந்துள்ளார்கள். ஹிட்லர் ஆட்சியில் இறந்த சில யூதர்கள் முன்னர் விட்ச் ஹண்ட் (witch hunts) எனப்படும் படுகொலைகளின் போது யூதர்களைக் கொடுமைப் படுத்தியவர்கள். தங்களது தவறுகளைத் திருத்தத் தாமாகவே அவர்கள் முன் வந்து யூதர்களாகப் பிறந்து இருக்கிறார்கள். அவர்கள் தங்களது உயிர்களை இழந்ததன் மூலம் மிகக் கடுமையான தண்டனையை அனுபவித்து இருக்கிறார்கள். ஆனால் அதன் மூலம் மனித குலத்தின் மனச்சான்றைத்  தூண்டி விட்டிருக்கிறார்கள். அத்துடன் அதன் மூலம் பல மைல் கற்கள் ஆத்மீகத்தில் முன்னேறி விட்டனர். இது ஒரு இனத்துக்கான கர்ம வினையுமாகும் (race karma). ஏனெனில் பழைய ஏற்பாடே (Old Testament) சில இடங்களில் பழைய யூதர்களை யுத்தகுணம் கொண்டவர்களாகச் சித்தரிக்கிறது. அதாவது தங்கள் மதத்தின் பெயரால் மற்றவர்களை அடக்கியதாகச் சித்தரிக்கிறது. எனவே இனத்துக்கான கர்ம வினையும் தனிப்பட்ட கர்மவினைகளும் ஒரே நேரத்தில் அங்கே நிறைவேற்றப்பட்டு இருப்பதை நாம் காணலாம். ஆனால் அதற்காக ஹிட்லரதும் அவரது லெப்டினென்ட்களினதும் செய்கைகள் சிறிதளவும் மன்னிக்கக் கூடியனவல்ல. அவர்கள் தாமிழைத்த பாவங்களுக்கான விலையைத் (தீர்ப்பானது எங்களால் வழங்கப்படுவதல்ல என்பதன் காரணமாகப்) பல நூறு அல்லது சிலவேளை ஆயிரம் வருடங்களுக்கு அடைய வேண்டிவரும்" என்று பதிலிறுத்தார்.
"நாம் ஒவ்வொருவரும் எம்மைப் பூவுலகிலும் அதே போல இந்த மிக இயல்பான ஆத்ம தளத்திலும் சந்திக்க வேண்டிவரும். அப்போது நாமே எமது மிக மிகக் கடுமையான நீதிபதியுமாகும். பூவுலகில் இருக்கையில் அபாயகரமான பாவங்களென நாம் நினைப்பவை இங்கு வந்த பின் மிக அபூர்வமாகத் தான் உண்மையான பாவங்களாக இருக்கும். எமது செய்கைகளால் யாருக்குத் தீங்கு விளைவித்தோம் என எம்மை நாமே கேட்டுக் கொள்வோம். அந்தச் செய்கைகள் எமது தன்னலத் தேவைகளுக்காகச் செய்யப்பட்டனவா அன்றிப் புலன் இன்பங்களுக்காகச் செய்யப்பட்டனவா அல்லது வேறு ஒருவருக்காகச் செய்யப்பட்டனவா? உண்மையில் அவருக்குத் தீங்கு விளைவிக்கும் நோக்கில் செய்யப்படவில்லையா? தன்னல மறுப்பானது இங்குள்ள பல சிறந்த நற்பண்புகளில் ஒன்றாகும். ஏனெனில் அது எம்மிலுள்ள அன்பிற் பார்க்க மற்றவர்களின் மேலுள்ள அன்பை முன்னே வைக்க எமக்குக் கற்றுத் தருகிறது. நல்லொழுக்கமானது என்றும் ஆத்மாவுக்கு நன்மை பயக்கும். அது எமக்கு எப்போதும் அவசியமாகும். ஆனால் இங்கே அதனைப் பயில்வதற்கான சந்தர்ப்பங்கள் மிக மிகக் குறைவாதலினால் எமது சுயதேவைகளைப் பூர்த்தி செய்யும் பழக்கங்களை அடியோடு துடைத்தெறிந்து தன்னலம் இன்மையைப் பயில்வதற்காக நாம் மீண்டும் மீண்டும் பூவுலகுக்குத் திரும்புகின்றோம்.
எமது முந்தைய பிறவிகளைப் பற்றிய நினைவுகள் எமக்கு இருப்பதில்லை என்பதைப் பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில் ஃபோர்ட் பின்வருமாறு எழுதினார்: "எமது பூதவுடலின் நினைவுகளுக்குக் கூடுதலாக நாம் கொண்டு வருபவையாவன இந்த ஆத்ம உலகின் சில நினைவுகளும் சிலவேளைகளில் முந்தைய பிறவிகளின் திடீர் நினைவுக் கீற்றுகள் - கூடுதலாக நாம் அப்படி நடக்க வேண்டுமென்று எண்ணியிருந்தாலும் அத்துடன் முந்தைய பிறவியிலே தொடர்ந்த அதே பாதையிலே இப்பிறவியிலும் தொடர வேண்டுமென்று முடிவு செய்திருந்தாலும் தான். இந்த நினைவுகள் எமது செய்கைகளையும் எண்ணங்களையும் நாம் அங்கிருக்கையில் பாதிக்கும். இந்தப் பின்னோக்கிய நினைவுகளானவை (ப்ளாஷ் பேக்) பெரும்பாலும் கனவுகளின் போது - அதாவது எமது உடல் இயக்கங்கள் நிறுத்தப்பட்டிருக்கும் போது வரும். இந்தக் கனவுகள் பெரும்பாலும் கடந்த காலத்துடன் தொடர்புள்ளவையாக இருக்கும். நாம் அவற்றில் கவனம் செலுத்தும் போது எமது முன்னேற்றங்கள் மேலும் இலகுவாக்கப் படலாம். அவை ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத மாயத் தோற்றங்களல்ல. ஆனால் உணர்வு நிலையின் அல்லது எண்ண அலைகளின் ஒரு சீரான பிரவாகமாகும். இந்த எண்ண அலைகளானவை ஒன்றில் எம்முடன் இருந்து கொண்டே இருப்பவைகளாகவோ அல்லது பழைய தவறுகளுக்கு நாம் சரியான பரிகாரங்களைக் காலப்போக்கிற் செய்திருந்தால் எமது நினைவிலிருந்து அழிக்கப்பட்டவையாகவோ கூட இருக்கலாம். உங்களைப் போலவே நாமும் எமது ஆத்மாவைப் பூரணமானதாக்க முயன்று கொண்டே இருக்கிறோம். பல ஆத்மாக்கள் நற்பண்புகளின் காரணமாக வெளித் தோற்றங்களில் அப்படி ஒரு மாறுதலடைந்ததை நாம் கண்ணுற்றதன் காரணத்தால் நாமும் அவர்களைப் போல மாறுவதற்கு மிகவும் விரும்புகிறோம். ஆனால் இன்னொருவரைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதென்பது முன்னேற்றத்துக்கு உகந்த வழியல்ல. ஒவ்வொரு ஆத்மாக்குள்ளும் நல்லது, தீயது என்பவை பற்றிய அறிவுகள் இருக்கின்றன. அத்துடன் நாம் ஒவ்வொருவரும் சபலத் தூண்டுதல்களாலும் நற்கருணைகளாலும் வெவ்வேறு விதமாகவே பாதிப்படைகின்றோம். அதனால் நாமனைவரும் அந்த முழுமுதலின் ஒரு பகுதியாக இருந்தாலும் கைரேகை அடையாளங்கள் எப்படி ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றனவோ அவ்வாறே நாமும் ஒவ்வொருவரில் இருந்து மற்றவர் வேறுபடுகின்றோம். கால்விரலின் செயற்பாடானது கைவிரலின் செயற்பாட்டை விட வேறுபடுவது போல எம் ஒவ்வொருவருக்கும் எமக்குரிய பங்குகள் இருக்கும். அத்துடன் நாம் பூரணத்துவம் அடைவதற்குரிய எமது சொந்தப் பாதையைத் தேடிக் கண்டு பிடிக்க வேண்டும். விரற் கணுவானது மூக்கினது வேலையைச் செய்ய முயலக்கூடாது. எனவே எதுவும் எமது கையிலே தானுள்ளது. எமக்கு எது சரி எது பிழையென நன்றாகத் தெரியும். எனவே ஏன் நாம் அதற்கேற்ற படி நடக்கக் கூடாது?"
பூவுலகில் மீண்டும் பிறப்பெடுப்பதைத் தெரிவு செய்யும் 'மேலுலகக் கணனி'களைப் பற்றிய ஆர்தரின் முந்தைய கலந்துரையாடலைப் பற்றி இன்னும் வியப்புக் குறையாத நான் அவரை அதனைப் பற்றி மேலும் விபரிக்கக் கேட்டேன். அதற்கு அவர் பின்வருமாறு எழுதினார்: "அதைப் பற்றி ஆரம்பத்தில் இருந்து சொல்வதானால் பூவுலகப் பிறவிகளுக்கு இடைப்பட்ட காலமானது உலகநேரப்படி ஆயிரம் அல்லது நூறு வருடங்களாக இருக்கலாம். அல்லது சில மணித்தியாலங்களாகவோ நாட்களாகவோ வாரங்களாகவோ வருடங்களாகவோ இருக்கலாம். சிலருக்கு அவசரமாகப் பரிகாரம் தேட வேண்டியிருக்கும். உலகவாழ்க்கையின் இன்னல்களில் களைத்துப்போன வேறு சிலரோ நீண்ட நாட்களுக்கு ஓய்வெடுக்க விரும்புவார்கள். எப்படியென்றாலும் ஒருவருக்குத் தான் எப்போ பூவுலகுக்குத் திரும்புவதென்று தானே தனியே முடிவெடுக்க இயலாமல் இருப்பார். ஏனெனில் வேறு சில விஷயங்களையும் கருத்திற் கொள்ள வேண்டும். உதாரணமாகத் தாயாவதற்குத் தயாராகும் ஒரு பெண்ணிடம் திரும்புவதற்கு ஒரு சில வாய்ப்புகளே இருக்கும். ஏனையவர்கள் தங்கள் சந்தர்ப்பத்துக்காகக் காத்திருப்பதால் சொல்லப் போனால் மீண்டும் பிறப்பதற்கு விரும்பும் ஆத்மாக்களிடையே தாய்மார்களைப் பங்கீடு செய்வதற்கு ஒரு ஒழுங்கு முறை (சிஸ்டம்) உள்ளது. ஒரு பெண் கருத்தரிக்கும் ஒவ்வொரு தடவையும் அந்த சிஸ்டமானது தொழிற்படத் தொடங்கும்.
"அப்பெண்ணானவள் ஒரு உயர்ந்த ஆத்மாவாக இருக்கும் பட்சத்தில் ஒரு உயர்ந்த ஆத்மாவைப் பூவுலகப் பிள்ளையாக வளர்க்கும் உரிமையும் தகுதியும் அவளுக்கே உள்ளது. வெறும் உடலின்பத்தைப் பற்றி மட்டும் நினைப்பவளிலும் பார்க்க இப்பெண்ணுக்கே முன்னுரிமை வழங்கப்படும். இந்த உயர்வான ஆத்மாக்களுக்காக இங்கே ஓரு விதமான வகைப்படுத்தும் முறைமை (சிஸ்டம்) அமைக்கப்படும். அந்த சிஸ்டமானது தகுதியுடையவர்களில் யார் அந்தப் பூவுலகப் பெற்றோரின் தேவைக்கேற்ற வகையிலும் அதே நேரம் தனது குறிக்கோள்களை நிறைவேற்றும் வகையிலும் இருக்கிறார் என்பதைத் தீர்மானிப்பதற்காகச் சில வேளைகளில் ஒரு பரிசோதனைக் காலம் நடாத்தக் கூடும். இவையெல்லாம் உங்களால் கொம்பியூட்டர் முறைத் தொழிற்பாடுகள் என்று உங்கள் உலகில் அழைக்கப்படக் கூடிய ஒரு முறையிற் தான் செயல் படுத்தப்படுகின்றன. ஆனால் இங்கே அது தானாகவே நடைபெறும் ஒரு தொழிற்பாடாகும். அதாவது பெற்றோரும் பிறப்பெடுக்கப் போகும் ஆத்மாவும் சம்பந்தமான எல்லாவிதமான தகவல்களையும் ஒரு சேரப் பொருத்தும் ஒரு முறையாகும். எந்த இரு ஆத்மாவும் ஒரே மாதிரி இருப்பதில்லை ஆதலினால் அந்தக் குறிப்பிட்ட பூவுலகப் பிறவியில் யார் பூரணமான பலனை அடைவார்கள் என்பதில் அரிதாகவே சந்தேகம் எழும். பெற்றோராக வரப்போகும் அந்த இரு ஆத்மாக்களையும் ஏற்கனவே தெரிந்திருந்தால் அல்லது அன்புக்குரியவர்களாக இருந்தால் அத்துடன் குறிப்பிட்ட அந்தத் தம்பதிகளுடன் தீர்ப்பதற்கு ஏதாவது பூர்வ ஜென்ம கர்ம வினைகள் இருந்தால் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
"பிறக்கும் உரிமையைப் பெற்ற அதிர்ஷ்டசாலியான அந்த ஆத்மா அந்தக் கருவுள், பிறக்கும் தருணத்திலோ அல்லது அதற்குச் சற்று முன்னரோ புகும். அதே நேரத்தில் ஏனையவர்கள் ஏனைய சந்தர்ப்பங்களைத் தேடுவார்கள். தங்களது குறிக்கோள்களுக்குப் பொருத்தமான சந்தர்ப்பம் வரும் வரையும் அவர்களின் தேடல் இருக்கும். அதற்கான சாத்தியக்கூறு இப்போ அதிகரித்திருக்கும். ஆத்மீக வளர்ச்சி அதிகம் அடையாதவர்களோ அன்றிக் கூடுதலான கர்மவினைகள் ஈடு செய்யவேண்டி இருப்பவர்களோ வனப்புக் குறைவான சூழ்நிலைகளில் பிறப்பார்கள். சிலபேர் பணிவுடைமையைப் பயிலவோ அன்றித் துன்பத்தை அறியவோ சேரிப் பகுதிகளிலோ அல்லது பின் தங்கிய நாடுகளிலோ தாமே விரும்பிப் பிறப்பார்கள். அவர்கள் இந்தத் தடைகளை வென்று மென்மேலும் ஆத்மீக முன்னேற்றமடைந்து உயரிய நிலையை அடையும் உறுதியான தீர்மானத்துடன் அப்படியான இடங்களில் பிறப்பார்கள். பூவுலகுக்குத் திரும்பும் படி ஒருவரையும் கட்டாயப்படுத்துவது இல்லை என்பதை அழுத்தமாகச் சொல்கிறேன். இங்கே முன்னேறுதல் கடினம் என்றாலும் கூட நாம் விரும்பினால் காலகாலமாக இங்கேயே வேண்டுமென்றாலும் இருக்க முடியும். ஆனால் அதி சீக்கிரத்தில் மீண்டும் பூதவுடலை எடுப்பவர்கள் அதாவது கிடைக்கக் கூடிய எந்தச் சந்தர்ப்பத்தில் என்றாலும் பிறப்பவர்கள் பூவுலகில் அதிகமாகக் கஷ்டப்படுவார்கள். ஏனெனில் அவர்கள் இங்கே பெரிதாக ஒன்றுமே கற்காததுடன் இன்னொரு பூவுலகப் பிறவிக்கான காரணங்களை அவர்கள் சீர்தூக்கி ஆராயவில்லை. இதன் காரணமாகத் தான் பல ஊனமுற்ற, முடமாகிய பிச்சைக்காரர்களும் திருடர்கள், கொள்ளைக்காரர்களும் கூடக் காணப்படுகிறார்கள். அவர்கள் பொருத்தமான பௌதீக உடல் கிடைக்கும் வரையில் காத்திருக்க முடியாமல் கண்ணில் படும் ஏதாவதொரு கருவியைப் பற்றிக் கொள்கிறார்கள்".
ஆர்தர் ஒரு நாள் ஒரு தாய் தன் இளம் வயதில் தன் குழந்தைகளை எல்லாம் விட்டு விட்டு இறந்து போன விடயத்தைப் பற்றி விபரிக்கையில் இவ்விஷயத்தில் கர்மா எப்படிச் சம்பந்தப்படுகிறது என்று நான் கேட்டேன். அதற்கு அவர் பின்வருமாறு பதிலளித்தார்: "இதனை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். அப்பெண்ணானவள் முதலொரு பிறவியில் தனது பிள்ளைகளை விட்டு விட்டு இன்னொரு ஆணுடன் ஒடியிருந்திருப்பாள். இந்தக் கடைசிப் பிறவியில் அதற்குரிய தண்டனையாகத் தன் குழந்தைகளுடன் இருப்பதற்கு மிகவும் ஆசைப்படுகையில் அவர்களை விட்டு விட்டு நீங்கவேண்டி வந்து விட்டதெனலாம். இது தான் தன் பேரேட்டைச் சரி செய்வதற்குரிய அவளின், அவளின் ஆத்மாவின் வழியாகும். ஆனால் அப்பிள்ளைகள் என்ன செய்தவர்கள்? அவர்களும் முன்னொரு பிறவியில் தம்மைக் கண்காணிப்பவர்களை இகழ்ந்திருக்கலாம். அன்பான பெற்றோரின் கட்டுப்பாடுகளுக்குக் கட்டுப்படாமல் அவர்களை எதிர்த்திருக்கலாம். இந்தக் கடைசிப் பிறவியில் அவர்கள் தம் தாயை அன்புடன் நேசித்தாலும் தாய் இப்பக்கத்துக்கு வருகையில் அவர்கள் தாயில்லாமல் தனித்தியங்கும் படி கட்டாயப்படுத்தப் படுகிறார்கள். கர்மாவின் விதிகள் மாற்ற முடியாதவை. நாம் உண்மையிலேயே மனம் வருந்தினால் இறைவனின் கருணையால் அதனது பிடியிலிருந்து சற்றே விடுபடலாமே தவிர முற்றாகத் தவிர்க்க இயலாதவை.
"இந்த உதாரணமானது நிச்சயமாக இதே போன்ற எல்லாச் சந்தர்ப்பங்களுக்கும் சரி என்பதல்ல. சில வேளைகளில் ஒரு தாயானவள் மேலதிகமான கர்ப்பங்களாலும் அதீதமான பாசத்தாலும் அதிகமான சுமைகளை ஏற்றியிருக்கலாம். அதனால் அவளது உடலெனும் கோவிலானது அழுத்தங்களைத் தாங்கக் கூடிய வல்லமையை இழந்திருக்கலாம். சில சமயம் ஒரு விபத்து அவளின் இறப்பிற்குக் காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் இப்படியான சந்தர்ப்பங்களில் பெரும்பாலும் கர்மவினைகள் தான் அதற்கான காரணிகளாக இருப்பதுண்டு. ஏதாவது முற்பிறவி ஒன்றில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த ஒரு இளம் தாயில் இவர் பரிவு காட்டாது இருந்திருக்கலாம். அல்லது அப்பிறவியில் அவர் தனது உடலை அவ்வளவு தூரத்துக்கு உதாசீனப்படுத்தி இருப்பதால் இப்பிறவியின் அழுத்தங்களைத் தாங்கக் கூடிய வல்லமை அவளுடலுக்கு இல்லாமல் இருந்திருக்கலாம். இந்தத் தாய் முற்பிறவியில் ஒருவரின் உயிரைத் தெரிந்தே கொன்றிருந்தால் இப்பிறவியில் தன்னுயிரைத் தியாகம் செய்ய வேண்டி வந்திருக்கலாம். இது ஆராய்வதற்கு சற்று மனச்சோர்வான விஷயம் தான். ஆனாலும் மிக அவசியமாகக் கற்க வேண்டிய பாடம் இது.
இன்னொரு நாள் அவர் பின்வருமாறு எழுதினார்: "தாய் பிள்ளைகளின் உறவுகளின் நோக்கங்கள் என்னவென்று சொல்ல முடியுமா? சில தாய்மார்களுக்குத் தங்களின் சில பிள்ளைகளுடன் அவர்களாற் போற்றப்படும் அளவுக்குக் கூடுதல் நெருக்கமும் பிணைப்பும் இருந்து கொண்டிருக்கும் அதே வேளையில் மற்றப் பிள்ளைகளுடன் தொடர்ச்சியான முரண்பாடுகள் காணப்படுகின்றன. அதன் காரணம் என்ன? ஒருவர் பலமான அன்புப் பிணைப்புகளின் காரணங்களால் அந்தப் பெண்ணின் வயிற்றில் பிறப்பதற்குத் தீர்மானித்திருக்கலாம். அதே நேரம் வேறொருவர் தனது பழைய எதிராளியிடமோ எதிரியிடமோ வந்து பிறப்பதன் மூலம் பழைய கர்மவினைகளைத் தீர்ப்பதற்கு உடன்பட்டிருக்கலாம். அல்லது இருவருக்குமிடையில் முன்பின் தொடர்பொன்றும் இல்லாமலும் அத்துடன் இருவருக்கும் பொதுவான விஷயமொன்றும் இல்லாமலும் இருக்கலாம்.
"சரி இந்த வகையான அறிவானது வயோதிப வயதில் உங்களை இங்கு வருவதற்கு எப்படித் தயார் செய்கிறது? 'வீட்டை அடைதல்' எனத் துதிப்பாடல்கள் உரைக்கின்றன. உண்மை தான். இங்கே நாம் வீட்டை அடைந்துள்ளோம். அங்கே நாம் சாகசங்கள் புரியும் அதே நேரத்தில் எமக்கு அந்நியமான வழி முறைகளைக் கைக்கொள்வோம். ஆத்மீக முன்னேற்றம் அடைவதற்காக இப்படியாக நாம் எல்லாவற்றையுமே பணயம் வைக்கிறோம். இங்கே எடுக்கப்பட்ட உயரிய உறுதி மொழிகளும் மற்றும் விரைவாக முன்னேறுவதாகவும் அதே நேரம் பூமியின் இழு விசைகளாலும் சலனங்களாலும் பாதிப்புறுவதில்லை என எடுக்கப்பட்ட தீர்மானங்களும் கேட்பதற்கு இனிமையாகத் தான் இருக்கும். அந்தோ பரிதாபம்; ஆத்மாக்கள் கூடுதலாகத் தாம் தோற்கடிக்கப் பட்டு விட்டதாக வேதனைப் பட்டுக் கொண்டே தான் இங்கே வந்து சேர்கிறார்கள். தாம் நிறைவேற்றுவதாக உறுதி எடுத்துக் கொண்டு வந்தவற்றை நிறைவேற்ற முடியாமற் போனதை இட்டு மிகவும் மன வேதனை உறுவார்கள். தமது முன்னேற்றத்தில் தடங்கல் ஏற்பட்டதற்கு அவர்கள் சூழ்நிலைகளையோ அல்லது ஏனையவர்களையோ தான் ஆரம்பத்தில் குற்றம் சாட்டுவார்கள். ஆனால் காலப்போக்கில் இங்கே அந்த ஆத்மாவானது உள்ளார்ந்த அக்கறையுடன் தியானத்தில் தன்னை ஈடுபடுத்த ஈடுபடுத்தத் தானே தான் சிக்கலை ஏற்படுத்தியதென உணரத் தலைப்படுவார்கள். 
"அப்போ என்ன செய்யலாம்? பூதவுடலுடன் நீங்கள் இருக்கையிலேயே உங்களால் இழைக்கப்பட்ட ஒவ்வொரு தவறுகளையும் நேர்மையான முறையில் மறுபரிசீலனை செய்ய உறுதி எடுங்கள். இந்தப் புறத்தில் உறுதியாக நீங்கள் செய்ய இருப்பது போல் அங்கே இருக்கையிலேயே உள்ளார்ந்த அக்கறையுடன் மறுபரிசீலனை செய்யுங்கள். இங்கு வந்ததன் பின் மறுபரிசீலனை செய்வதாய் இருந்தாலும் கூட அங்கிருக்கையில் மறுபரிசீலனை செய்வதன் மூலம் நீங்கள் சென்று கொண்டிருக்கும் பாதையில் மாற்றத்தை ஏற்படுத்தி அதன் மூலம் மேன்மையான உயரங்களுக்குச் செல்லக் கூடிய வாய்ப்புக்களை நீங்கள் ஏற்படுத்தலாம். இந்தப் புறத்தில் ஒரு ஆத்மாவால் மிஞ்சி மிஞ்சிச் செய்யக்கூடியது என்னவென்றால் மறுபரிசீலனை செய்தல், மதிப்பீடு செய்தல், கற்று அறிதல், தீர்மானங்களை எடுத்தல், பின்னர் பூவுலகில் அடுத்த சுற்று வருவதற்காகத் தன்னைத் தயார் செய்தல் அவ்வளவுதான். அங்கே என்றால் எந்த விஷயத்தை மேற்கொள்ள என்று ஆரம்பத்தில் நீங்கள் திட்டமிட்டீர்களோ அப்பணியை நிறைவேற்றுவதற்குப் போதுமான நிறைய வாய்ப்புகள் இருக்கும். அல்லது இன்னொருவரின் வாழ்க்கைப் பாதையில் ஒளியை உண்டாக்கவாவது இயலும். அப்படிச் செய்யும் போது நிச்சயமாக உங்களுக்கு முன்னேற்றமேற்படும்"
அப்போது லிலி இடையிற் புகுந்து பின்வருமாறு சொன்னார்: "மனிதவுடலின் சபலங்களையெல்லாம் வென்று எப்படி நாம் வளர்ச்சியுறலாம்? உங்களுக்குள்ளிருக்கும் சிறு குரலைச் செவிமடுப்பதன் மூலமே."

Monday, August 10, 2020

பதினான்காம் அத்தியாயம் - உயர்ந்த தளங்களும், ஏனைய கிரகங்களும் (Higher Planes and Other Planets)

                          
ஆர்தர் எப்போதும் எட்கர் கேஸி (Edgar Cayce), யோகானந்தா, பெற்றி வைற் போன்ற மிகவும் முன்னேறிய ஆத்மாக்களைப் பற்றிச் சொல்கையில் எமது ஆவலைத் தூண்டும் விதமாக 'உயரிய தளங்கள்' 'ஏனைய கிரகங்கள்' போன்ற பதங்களைக் கையாள்வார். அப்பதங்களை விளக்குமாறு நான் கேட்டதற்கு ஆர்தர் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி பின்வருமாறு எழுதினார்: "நீ கேட்கும் அந்த உயரிய தளங்கள் உண்மையில் உயர்வான உணர்வு நிலைகள் தான். அதாவது இடம் ஒரே மாதிரியானது தான். ஆனால் அவர்களின் உணர்வு நிலைகள் மிகமிகத் துல்லியமானவை. எனவே எமது நிலையில் உள்ளவர்கள் போதுமான தயாரிப்பின்றி அவர்களின் நிலைக்கு முன்னேற முடியாது. ஆனால் அதே நேரத்தில் சில உயரிய தளத்தில் இருப்பவர்கள் எவ்விதக் கஷ்டமுமின்றி எமது தளத்திலும் அவர்கள் தளத்திலும் ஒரே நேரத்தில் வசிக்கக் கூடியதாக இருப்பார்கள். இது எப்படியென்றால் கிட்டத்தட்ட எங்களது நிலைக்கும் உங்களது நிலைக்கும் இடையேயுள்ள வித்தியாசம் தான். எமக்கு நேர் மேலுள்ள தளத்தில் இருப்பவர்களின் இருப்பை நாம் உணர்வதிலும் பார்க்கக் கூடுதலாக அவர்கள் எமது இருப்பை உணர்வார்கள். அந்த நிலைக்கு முன்னேறுவதற்கு முன் சிற்சில வழிகளில் அவர்கள் தங்களைத் தயார் செய்ய வேண்டும். முதலாவது உலகியல் சம்பந்தமான எதிர்மறை எண்ணங்கள் ஏதாவது இருப்பின் அவற்றைச் சீர்செய்ய வேண்டும். அதன்பின் படிப்படியாக அவர்கள் மனநிலை வளர்ச்சியும் ஆத்மீக வளர்ச்சியும் அடைவார்கள். பின்னர் மறைபொருளை உணரக்கூடிய உயர்ந்த அறிவைக் கற்பதற்கு அவர்கள் தயாரென்றால் அந்த நிலைக்கு முன்னேறுவார்கள். பூவுலகில் மீண்டும் பிறப்பெடுப்பதன் மூலம் தங்களது முன்னேற்றமானது விரைவாக்கப்படக் கூடுமென எண்ணுபவர்கள் மிக அபூர்வமாகவே அடுத்த உயர் நிலைக்கு முன்னேறிச் செல்வார்கள். ஏனெனில் அப்போது பூவுலகில் மீண்டும் பிறப்பதற்கான நேரடியான வழி முறைகளிலிருந்து விலகி விடுவார்கள்.
தான் பூவுலகுக்கு ஆர்தர் ஃபோர்டாகப் பிறப்பெடுப்பதற்கு முன்னர் உயரிய தளத்தில் சில காலங்களைக் கழித்ததாக முன்பு ஒரு தரம் ஆர்தர் ஃபோர்ட் குறிப்பிட்டிருந்ததை நினைவு படுத்திய நான் அவருக்கும் லிலிக்கும் அந்தத் தளம் நன்கு பரிச்சயமா எனக் கேட்டேன். 'ஆம்' என்ற அவர் மேலும் தொடர்ந்து பின்வருமாறு சொன்னார்: "லிலி கூடுதலான நேரத்தை அந்த உயர் அலை வரிசையில் உள்ள தளத்திலேயே கழிக்கிறார். அதைப் பற்றி உங்களுக்கு அதிகம் சொல்ல அவரால் இயலாது. ஏனெனில் உங்களின் வரையறுக்கப்பட்ட அறிவால் அவர் சொல்வதை அதிகம் புரிந்து கொள்ள இயலாது. முதலிலேயே சொன்னது போல் அது வேறு ஒரு தளம் என்பதிலும் பார்க்க உயரிய உணர்வு நிலை என்பதே சாலப்பொருந்தும். ஏனெனில் பிரபஞ்சம் ஒன்றே தான். அவர் அநேகமாக பூவுலகில் மீண்டும் பிறவியெடுக்க மாட்டார். ஆனால் அவர் விரும்பின் மீண்டும் பிறவி எடுக்கக் கூடிய தகுதி அவருக்கு உள்ளது.
"அவரது கடைசிப் பிறவியில் அவர் ஒரு எழுத்தாளராக இருந்தார். இப்போது பல எழுத்தாளர்கள் அங்குள்ளதால் இங்கு வேறு பலரால் ஆற்ற முடியாத சில விஷயங்களை அவர் முயல்கிறார். அதாவது இங்கு வந்துள்ள அப்படியான எழுத்தாளர்களின் முன்னேற்றத்துக்கு ஆலோசனைகள் வழங்குதல், பூவுலகில் உயர்வான ஆத்மீக ஆய்வுக் கட்டுரைகள் எழுதுபவர்களுடன் நேரடியாக வேலை செய்வது போன்ற வேலைகளில் அவர் ஈடுபடுகிறார். உணர்வு நிலைகளின் (consciousness) வேறுபாடுகளைச் சொற்களிலே விபரிப்பதென்பது மிக மிகக்கடினம். ஹீலியம் என்னும் வாயுவினால் நிரப்பப்பட்ட ஒரு பலூனை ஒரு கணம் எண்ணிப் பார்ப்போம். பூமியிலிருக்கும் போது அதனை அனைவரும் பார்த்துத் தொட்டு உணரக்கூடிய விதமான ஒரு சிறந்த பௌதீக உருவமாக அது இருக்கும். ஆனால் அதனைப் பிணைத்திருக்கும் கயிறு அறுக்கப்பட்டவுடன் அது பூமியின் பிணைப்புகளிலிருந்து விடுபட்டு உயரே செல்கிறது. இதனை இறப்பின் போது ஆத்மாவைப் பூதவுடலிலிருந்து விடுவிக்கும் அந்த வெள்ளி இழையுடன் ஒப்பிடலாம். அந்த பலூனானது வளிமண்டலத்துக்கு மேலுள்ள மெல்லிதான அடுக்கு வளி மண்டலத்தை அடையும் வரை உயரே உயரே போனாலும் இன்னும் அது பூமியில் இருக்கும் போது இருந்தது போலவே தெளிவானதாகவும் தொட்டு உணரக்கூடியதாகவும் தான் இருக்கும். இருந்தாலும் இனிமேல் மனிதர்களால் பூமியிலிருந்து அதனைப் பார்க்கவோ உணரவோ முடியாது. அது மானிடரின் பார்வையில் இருந்து மறைந்து வானில் உயர உயரப் பறந்து மனிதரின் உடனடிப் புலனுணர்வுக்கு எட்டாததாகப் போய் விடினும் இன்னமும் அது உயிர்ப்புள்ளதாகத் தான் இருக்கும். சிறிது காலம் சென்றபின் அது பூமியுடனான அனைத்துத் தொடர்புகளையும் இழக்கிறது. அந்த பலூனுக்கு அதனது ஞாபகத் திறனாலும் அறிவாற்றலாலும் கீழே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது நன்றாகத் தெரியும். எனினும் பூமியில் இருப்பவர்களுக்கு அதனுடன் எந்த விதமானதொரு தொடர்பும் இருக்காது. நான் இப்போ கூறிய இந்த உதாரணமானது ஒரு முழுமையான உதாரணமில்லைத் தான். ஆனால் வரையறைக்கு உட்பட்ட அறிவால் விளங்கிக் கொள்ளக் கூடியவாறு புரிய வைப்பது மிகவும் கடினம்.
"இந்த உயர்வான உணர்வு நிலையில் உள்ள மனித ஆத்மாவானது எப்படிப் பூதவுடலுடன் இருக்கையில் உயிர்ப்புள்ளதாகவும் விழிப்புள்ளதாகவும் இருந்ததோ அவ்வாறே இப்போதும் இருக்கும். ஆனால் பூதவுடலுக்குரிய பந்தங்களில் இருந்து முழுமையாக விடுபட்டிருக்கும். நாம் இப்போ இருக்கும் இடைப்பட்ட நிலையில் எமக்குப் பூவுலக பந்தங்களும் மன அழுத்தங்களும் உள்ளன. ஆனால் லிலி அந்த உயர்வான உணர்வு நிலைக்குப் போகையில் பூவுடல் சம்பந்தப்பட்ட அனைத்து வகையான சலனங்களையும் விட்டு விடுவார்."
பூவுலக வாழ்க்கைக்கு இடைப்பட்ட காலத்தில் யுரேனஸ் கிரகத்துக்கோ அல்லது வேறு கிரகங்களுக்கோ உணர்வு நிலையில் ஒரு ஆத்மாவானது செல்லலாம் என எட்கர் கேஸி கூறியதன் அர்த்தமென்ன என நான் கேட்டேன். அதற்கு அவர் பின்வருமாறு பதிலளித்தார்: "பல கிரகங்கள் பல்வேறு உணர்வு நிலைகளில் உள்ள ஆத்மாக்களினால் இடம் பிடிக்கப் பட்டுள்ளன. அவற்றுள் சில பூமியில் வசிப்பவர்களிலும் பார்க்க உயர்வான உணர்வு நிலைகளாயும் சில தாழ்வான உணர்வு நிலைகளாயும் இருக்கும். ஆனால் முன்னேறும் நிலைகளுக்கு இடையேயுள்ள வேறுபாடுகளினால் சில அதிர்வு நிலைகளில் உள்ளவர்கள் மற்றவர்களிலும் பார்க்கக் கூடிய விரைவில் வளர்ச்சியுறுவார்கள். எனவே சிலர் சிறிது காலத்துக்கு வீனஸ் கிரகத்திலோ யுரேனஸ் கிரகத்திலோ செவ்வாய்க் கிரகத்திலோ அல்லது வேறு கிரகங்களிலோ சென்று இருக்கலாம். எப்போதாவது உங்களால் கிரகிக்கப்படும் வேறு கிரகங்களுக்கு இடையேயுள்ள தகவல் பரிமாற்றங்கள் உண்மையில் அதிர்வு நிலைகளில் அவர்களால் விண்வெளியில் அனுப்பப்படக் கூடிய எண்ண வடிவங்களே ஆகும். சாதாரணமாக அவை உங்கள் கருவிகளில் பதிவு செய்ய முடியாத அளவுக்கு உயர் அதிர்வெண்களைக் கொண்டவையாகும். ஆனால் சில சமயங்களில் சில வளிமண்டல நிலைகளால் அவற்றின் வலிமை போதிய அளவு குறைக்கப்படும் பட்சத்தில் உங்களது மிக நுணுக்கமான கருவிகள் அவற்றாற் பாதிக்கப்படுவது உண்டு." 
இன்னொரு நாள் ஃபோர்ட் உயர் நிலைகளைப் பற்றி இவ்வாறு சொன்னார்: "எனது நினைவுக்கு எட்டிய வரையில் அங்கேயிருக்கும் வேலைகள் சற்றே வேறுபட்டவை. அதாவது புதிய ஆத்மாக்கள் வருகையில் அவர்களுக்கு உதவுவது மற்றும் தத்துவசாஸ்திரம் கற்பது என்பவற்றுக்குப் பதிலாக அந்த முன்னேற்றமடைந்த ஆத்மாவானது இந்தக் கோட்பாடுகளைப் பரிசீலித்து அவற்றை உண்மையென நிரூபிக்கும் அதே நேரம் உயிர் வாழ்க்கை உள்ள ஏனைய கிரகங்களுக்குச் சென்று அவர்களுக்கு எமது வாழ்க்கை முறைகளைச் சொல்வது போன்ற சுவாரஸ்யமான பணிகளைச் செய்யலாம். ஆரம்பத்தில் இங்கே அனைவருமே ஒன்றாகத் தான் இருந்தோம்.
அட்லாண்டிஸ் என்ற அழிந்து போன கண்டத்தில் வாழ்ந்தவர்களான அட்லாந்தியர்களில் (those from the lost continent of Atlantis) பலர் மிக முன்னேற்றம் அடைந்தவர்கள் என்பதால் வேறு தளங்களிலும் கிரகங்களிலும் வாழ்ந்தாலும் இவ்வுலகில் நடப்பவற்றைக் கூர்ந்து கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஏனெனில் அட்லான்டிஸின் ஒரு பகுதியானது இன்னும் பத்து வருடங்களில் மேலே வருகையில் கண்களுக்குப் புலப்படும். இந்த அட்லாந்தியர்கள் தாம் எல்லாரிலும் பார்க்கச் சிறந்த வர்க்கமாக இருந்திருக்கிறார்கள் என்பதை நிரூபிப்பதில் மிகவும் ஆர்வமாக உள்ளனர். இப்போ நடைபெறும் காலமான கும்பராசிக்குரிய காலத்தில் (Aquarian Age) மனித இனமானது அந்த எளிதில் புரியமுடியாத அறிவை மீண்டும் சிறிது பெறமுடியும். இந்த அட்லாந்தியர்களில் பலர் மீண்டும் மீண்டும் பூவுலகில் பிறந்திருக்கிறார்கள் என்பதைச் சொல்ல வேண்டிய தேவையில்லை. மிக மிக உயர்வான அலை அதிர்வுகளைக் கொண்ட சில அட்லாந்தியர்கள் மீண்டும் பூவுலகுக்குத் திரும்பவில்லை என்றாலும் நீயும் நானுமே முன்னர் ஒரு காலத்தில் அட்லாந்தியர்களாக இருந்திருக்கிறோம். அந்த உயர்வான அலை அதிர்வுள்ளவர்களை மனிதர்களில் ராஜகுமார்கள் என நாம் உரைக்கலாம். அவர்கள் உயர்ந்த ஆத்மாக்களின் வரிசையிலேயே மிக உயர்வான இடத்தில் உள்ளவர்கள். அவர்கள் இனிமேல் பூவுலகுக்கு வரத்தேவையில்லை. ஆனால் அட்லாண்டிஸ் மேலே வருகையில் சிலர் மீண்டும் வர ஆர்வமாக உள்ளனர். ஏனெனில் மிக மிக உன்னத மதிப்புகள் கொண்ட பொருட்கள் சிதைவுறாமல் பாதுகாப்பாக மறைத்து வைக்கப்பட்டுள்ள இடங்களுக்குப் பூவுலக மக்களை இட்டுச் சென்று வழி காட்டுவதில் பலர் ஆர்வமாக உள்ளனர். அதே வேளையில் அவர்கள் நான் இப்போ இருக்கும் நிலையில் பார்க்க மேல் நிலைக்கு முன்னேறிய ஆத்மாக்களுக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதாவது பிரபஞ்சத்தின் ரகசியங்களை அவர்கள் புரிந்து கொள்ள அவர்களுக்கு உதவி புரிகிறார்கள். பூவுகில் வாழும் ஆத்மாக்களுக்கு முன்னர் தானாகவே தெரிந்த ரகசியங்களே அவை"  
ஒரு வாரத்தின் பின் உயர்வான உணர்வு நிலைகளைப் பற்றி லிலி நேரடியாகச் சொல்வாரென ஃபோர்ட் அறிவித்த பின் லிலி பின்வருமாறு எழுதினார்: "இந்த இடைப்பட்ட நிலையில் நாம்  கற்கையில் எமது அடுத்த கட்டத்தைத் தீர்மானிக்கும், அதாவது மீண்டும் பிறப்பெடுப்பதா அல்லது மேல் உணர்வு நிலைகளுக்குச் செல்வதா எனத் தீர்மானிக்கும் தகுதி தரப்படுகிறது. நான் செய்தது போல் சிலர் அடுத்த கட்டத்தைத் தெரிவு செய்திருக்கிறோம். எமது தத்துவரீதியான கருத்துப் பரிமாற்றங்களை முடித்து, அத்துடன் பூவுலகிலிழைத்த தவறுகளை மீண்டும் பரிசீலித்து முடிய நாம் தயாரானதும் நமது ஆத்மாவில் நாம் ஒரு இலகுத் தன்மையை உணர்வோம். அப்போது எமது எண்ணத்தின் மிகச் சிறிய முயற்சியாலேயே நாம் எம்மைப் புதியதொரு உணர்வு நிலைக்கு உயர்த்த இயலுமாக இருக்கும். அப்புதிய உணர்வு நிலையில் இங்கு இருப்பவர்களுடனும் பூவுலகில் இருப்பவர்களுடனும் சிறிது காலத்துக்குத் தொடர்புகளேதும் இன்றி இருப்போம்.
"நாம் பின்னர் மிக மிகத் தூய்மையான நுட்பம் வாய்ந்த நிலைக்குச் செல்வோம். அப்போது ஏனைய ஆத்மாக்களுடன் சில காலத்துக்கு எந்த விதமான தொடர்பும் அற்றிருப்போம். இந்த நிலையானது ஓரளவிற்குத் தனிமை வாய்ந்த அனுபவமாகும். ஏனெனில் இங்கேயும் பூவுலகிலும் கூடுதலாக எண்ணங்களையும் சிந்தனைகளையும் நாம் பகிர்ந்து கொண்டே இருக்கிறோம். அதன் பின் சில காலத்துக்கு விண்வெளி என்று சொல்லக்கூடிய இடத்தில் நாம் மிதக்கலாம். ஆனால் அது அவ்வளவு உயர்ந்த அலை அதிர்விலுள்ளது. எனவே பூவுலக மனிதனுக்குப் புரியும் படி எந்த வழியிலும் சொல்ல இயலாது. நாம் யுரேனஸ் கிரகத்தின் ஆதிக்கத்தின் கீழே இருக்கிறோமெனில் அங்கேயுள்ள மிகப் பயங்கரமான அதிர்வுகளின் காரணமாக ஆரம்பத்தில் எமது அடிப்படையே அதிரும். அது மிகவும் உக்கிரமான வளிமண்டலமாகும். அல்லது அங்கே வளிமண்டலம் இல்லை எனலாம். அதாவது கதிர்கள், கதிர்வீச்சுகள் மற்றும் அதிர்வுகளில் இருந்தும் எந்த விதமான பாதுகாப்புக்களும் இல்லை. எம்மால் அந்தச் சூழ்நிலையைத் தாங்க இயலுமென்றால் அங்கே நாம் சிறிது காலத்துக்குத் தங்கியிருப்போம். அந்த வேளையில் எமது முன்னேற்றப் பாதையின் அடுத்த கட்டத்துக்கு எம்மைத் தயார்ப்படுத்திக் கொண்டும் இருப்போம்.
"அதன் பின்னர் நாம் வெள்ளிக் கிரகத்துக்கோ செவ்வாய்க் கிரகத்துக்கோ அல்லது எமது சூரிய குடும்பத்தின் ஏதாவது ஒரு கிரகத்தின் உணர்வு ஆளுமைகளுக்கோ செல்வோம். நாம் அந்தக் கிரகங்களின் அதிர்வலைகளின் ஆதிக்கத்தின் கீழே தான் இருப்போம். அந்தக் கிரகத்தின் ஒரு பகுதியாக இருக்க மாட்டோம். நீங்கள் பூமியில் எவ்வாறு நடமாடித் திரிவீர்களோ அவ்வாறே நாமும் இக்கிரகங்களின் மேற்தளங்களில் நடமாடித் திரிவோம். ஆனால் எமது சூட்சும சரீரத்துக்கு எடை கிடையாது. அத்துடன் தூல வடிவமும் இல்லை. நாம் கூடுதலாக எண்ண வடிவங்களே. எங்களைப் போன்ற ஏனைய ஆத்மாக்களும் அங்கு வருவதால் நாம் அவர்களுடன் ஒன்று கலப்பதாகச் சொல்ல முடியும். ஆனால் எல்லாம் எண்ண வடிவங்களிலேயே. சில கிரகங்களின் அலை அதிர்வுகள் அமைதியாகவும் சாந்தமாகவும் இருக்கும். மற்றும் சில கனல் பறக்கும் எதிர் மறையான தள்ளுகை, இழுவைகளுடன் இருக்கும். அனைத்து உயிர்களும் ஒன்று என்ற உண்மையைப் புரிந்து கொள்ளும் பொருட்டும் அதே நேரம் எம்மை ஆளும் விதிகளைப் புரிந்து கொள்ளும் பொருட்டும் நாம் இவற்றையெல்லாம் அனுபவிக்க வேண்டும்.
மறுநாட் காலை லிலி பின்வருமாறு தொடர்ந்தார்: "ரூத், இங்கே லிலியும் குழுவினரும் உள்ளோம். ஆர்தரும் பங்கேற்கிறார். எந்த இடைப்பட்ட நிலையிலிருந்து நாம் உங்களுடன் தொடர்பு கொள்கிறோமோ அந்த இடைப்பட்ட நிலையிலிருந்து ஆத்மாக்கள் முன்னேறுகையில் என்ன நடக்கிறதென்பதை இன்னும் கூடுதல் விளக்கமாகச் சொல்வதற்கு மிகவும் ஆவலாக உள்ளோம். இந்த உயரிய நிலையில் இப்படியான இருவழித் தகவல் பரிமாற்றமானது சாத்தியமற்றது. எட்கர் கேஸி போன்ற சில ஆத்மாக்கள் இதற்கு விதிவிலக்காகும். அவர் பூமியிலிருக்கையில் அவரும் தனது அலையதிர்வுகளை அதிகரிக்க நாமும் எமது அலையதிர்வுகளை அதற்கேற்றவாறு குறைத்து அவரை நாம்  இடைவழியில் சந்தித்ததாகச் சொல்லலாம். எங்களுடன் உரையாடக் கூடிய விதமாக ஒருவரைத் தயார் செய்வதற்கு நான் உயர் நிலையிலிருந்து இந்த இடை நிலைக்கு இறங்கி வரவேண்டும். ஆனாலும் அதற்காகத் தாங்கள் மனமிரங்கி ஆசனத்திலமர்ந்து எனது செய்தியை ஏற்கத் தயாராகும் வரை உனக்குப் பின்னால் சுற்றிக் கொண்டு திரிய இயலாது. நான் உன்னைக் குத்திக் காட்டுவதாக எண்ணாதே (அட கடவுளே! என நான் என்னுள் எண்ணிக் கொண்டேன்). ஆனால் நீ நேரத்துக்கு எழுந்து இந்தக் காலை அமர்வுகளுக்குத் தயாராகிறாயா என்று காத்துக் கொண்டு இருப்பதிற் பார்க்கக் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்த பல விஷயங்கள் உள்ளன என்பதை உனக்கு உணர்த்த விரும்புகிறேன்.
"நான் எனது வாழ்நாளைக் கூடுதலாகச் செலவழிக்கும் இந்த அடுத்த நிலையில் நான் உருமாற்றம் அடைந்திருப்பேன் எனச்சொல்லலாம். நிழலுருவை எடுப்பதற்குப் பதிலாக நான் ஒளி வடிவை எடுத்திருப்பேன். எம்மைப் படைத்தவனின் அற்புதங்களில் நாம் கொள்ளும் பக்தியின் தீவிரமே இதற்குக் காரணமாகும். நாம் ஒரு கிரகத்தின் அதிர்வலைகளிலிருந்து வேறொரு கிரகத்தின் அதிர்வலைக்கு வெகு இலகுவில் நழுவிச் செல்வதால் நாம் ஒளிக்கற்றையாக இருப்பதே பொருத்தமாகும். நாம் எந்த வடிவை எடுத்தாலும் நாம் இல்லாமற் போக மாட்டோம். ஏனெனில் நாம் ஒரு போதும் எம்மிலிருந்து விலகிச் செல்ல மாட்டோம். மிகவும் பரிமாண வளர்ச்சி அடைந்த ஆத்மாக்கள் பூவுலகில் என்றும் அன்புடனும் பரிவுடனும் எப்போதும் உதவிக்கரம் நீட்டக் கூடியவர்களாகவும் நுண்ணறிவு மிக்கவர்களாகவும் அழகானவர்களாகவும் மனிதருள் மாணிக்கங்களாகவும் இருக்கும் அதே நேரம் ஏன் வேறு சில ஆத்மாக்கள் தங்கள் பேராசையாலும் காட்டுமிராண்டித் தனங்களாலும் சுயநலப் போக்காலும் கிட்டத்தட்ட விலங்குகளைப் போலவே நடந்து கொள்கிறார்கள் எனச் சிலர் வியக்கலாம். ஒருவர் எப்போதுமே தனக்குரிய தனித்தன்மை மாறாமல் இருப்பாரா என நீ கேட்கலாம். ஆம் என்பதே அதற்குரிய பதிலாகும். அது முறையற்றது என நீ நினைப்பதற்கு முன் மேலுமொன்று சொல்ல விரும்புகிறேன். அதாவது ஆரம்பத்தில் அவர்களும் இறைவனின் சுடர்ப் பொறிகளாகவே தான் ஆரம்பித்தனர். ஆனால் பூவுலகிலும் இங்கேயுமாக மாறி மாறி வாழ்க்கை தொடர்கையில் குறிக்கப்பட்ட சூழ்நிலைகளில் ஒவ்வொருவரும் நடந்து கொள்ளும் விதங்களிலிருந்து ஒவ்வொருவருமே தமக்குத் தமக்கென ஒரு தனித்தன்மையை வளர்த்துக் கொள்கிறார்கள். அத்துடன் எப்படிப்பட்ட சூழ்நிலைகளில் பூவுலகில் நாம் பிறப்பதென்பதை நாமே தீர்மானிப்பதால் பூவுலகின் ஒரு பிறவியிலிருந்து இன்னொரு பிறவிக்குப் போகையில் அந்தச் சூழ்நிலைகளில் ஏற்படும் மாற்றங்களினாலும் தாக்கங்கள் ஏற்படும். சுவாரஸ்யமாக இருக்கிறதல்லவா? ஆரம்பத்தில் இறை அன்பின் பூரணக் கதிர்வீச்சுகளாக ஒவ்வொருவரும் ஏனையோரின் நகல்களாக இருந்தவர்கள் பூவுலக வாசனைகளினால் எப்படி மாறி இருக்கின்றனர் பார்! இது உலக ஆசைத் தூண்டுதல்களை எப்படி நாம் எதிர்கொள்கிறோம் என்பதையும் குறிப்பதாகும். எனவே ஒருவர் மூடனாக இல்லாமல் திறமை வாய்ந்தவராக இருந்தால் அவரே தன்னைப் பற்றியும் தான் ஆசைகளின் தூண்டுதல்களுக்கு எப்படிப் பதிலளிக்கிறார் என்பதைப் பற்றியும் ஆராய்ந்தறிய வேண்டும். மாற்றுவதற்குக் கடினமாக இருக்கக் கூடிய பழக்கங்களைப் பழகாமலிருங்கள். பிறர் உதவியென்று கேட்டால் அவர்களுக்கு உதவுங்கள். அத்துடன் என்றும் இறையுணர்வுடன் செயற்படுங்கள்."
மே தினத்தன்று மிக முன்னேறிய நிலைகளைப் பற்றி அவர்கள் மிக விபரமாகப் பின்வருமாறு கூறினார்கள்: "இங்கு நாம் மீண்டும் பூவுலகுக்குச் செல்வதா அல்லது நீங்கள் சொல்வது போல் மூன்றாம், நான்காம் நிலைகளுக்குச் செல்வதா எனத் தெரிவு செய்ய முடியும் என நான் முதலிலேயே உனக்குச் சொல்லியிருக்கிறேன். இந்த நிலைகளானது ஒன்றிலிருந்து ஒன்று அதிகம் வேறுபட்டவையல்ல. ஒரேயொரு வித்தியாசம் என்னவென்றால், மூன்றாவது நிலையில் நாம் உயர் அதிர்வலைகளில் நன்கு தேர்ச்சியடைகிறோம். அத்துடன் உங்களால் ஒலி, ஒளி என்று அழைக்கப்படும் இன்னும் கூடுதலான அதிர்வலைகளுக்கு உயர்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். ஒலிவாங்கியை (ஆன்டெனா) ஒலியதிர்வுக்குத் தகுந்தவாறு பூவுலகில் நாம் மாற்றியமைப்பது போல் இங்கே ஒலி, ஒளி ஆகியவற்றின் அலைகளுக்கேற்ப எம்மை ஒத்திசைக்கச் செய்ய இயலும். அந்த அலைகளானவை பூவுலகில் வாழும் மனிதனுக்கு மின்னதிர்ச்சி அளிக்கக் கூடிய அல்லது அவனது காதுகளை நிரந்தரச் செவிடாக்கக் கூடிய மிகச் சக்தி வாய்ந்த கதிர் வீச்சுகளாகும். நாம் மிக மெல்லியதொரு கதிர்வீச்சின் மூலமாகத்தான் இவ்வாறான உயர்ந்த சக்திகளுக்கு இசைவாக்கமடைகிறோம். சூட்சும சரீரத்துடனிருக்கையில் கதிர் வீச்சுகளிலிருந்து எம்மை நாம் பாதுகாக்கத் தேவையில்லை. இப்படிப்பட்ட உயர்வான அதிர்வலைகளுக்கு இசைவாக்கமடையும் போது நாம் கிட்டத்தட்டத் திரவம் எனச் சொல்லப்படக் கூடிய மாதிரியான ஒரு நிலைக்கு மாற்றமடைகிறோம். உண்மையில் திரவமாக இல்லாவிடினும் பிரபஞ்சத்தின் வடிவங்களுள் நாம் ஊற்றப் படுகின்றோம் எனச்சொல்லலாம். நாம் பிரபஞ்சத்துடன் ஏறக்குறைய இரண்டறக் கலப்பதால் நாம் எமது தனித்தன்மையை அல்லது 'நான்' எனும் அகந்தையைச் சிறிது காலத்துக்கு இழக்கிறோம். நாம் பிரபஞ்சமெனும் மகா சமுத்திரத்தின் ஒரு பகுதியாக இருக்கிறோம். அது நான் உனக்கு முதலில் உரைத்த விடயமான நாம் முழுமையான பரிபூரணத்தின் ஒரு பகுதியாக உள்ளோம் என்ற உண்மையை இங்கு நாம் உணர்வதற்கு எமக்கு உதவுகிறது.
"மூன்றாவது நிலையைப் பற்றிச் சொன்னேன். நான்காவது நிலையைப் பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்: செவ்வாய்க் கிரகம், ஜுப்பிட்டர் கிரகம், யுரேனஸ் கிரகம், வீனஸ் கிரகம் (வெள்ளி) மேலும் இவை போன்ற வேற்றுக் கிரகங்களில் சூட்சும வடிவில் உயர்வான உணர்வு நிலையில் வசிப்பது; இக்கிரகங்கள் உயிரினங்களைக் கொண்டிருப்பினும் அவை பூவுலகில் வாழும் பௌதீக மனிதனின் அறிவுக்கெட்டிய முறைகளால் முற்றிலுமாக அடையாளம் காணப்பட முடியாதவாறே உள்ளன. இக்கிரகங்கள் எல்லாம் ஒன்றிலிருந்து ஒன்று முற்றிலுமாக மாறுபட்டது. ஒவ்வொன்றும் உயிர் வளர்ச்சியின் ஒவ்வொரு நிலைகளைக் கொண்டுள்ளன. அதாவது மிகத்தாழ்ந்த நிலைகளாகிய உயிரணுக்களிலிருந்து (protoplasm) மிகவும் உயர்ந்த நிலைகளாகிய எண்ண வடிவங்கள் வரை மாறுபடுகின்றன. யுரேனஸ் கிரகமானது தீவினையிலிருந்து நல்வினைக்குச் செல்பவர்களுக்குக் குறிப்பாக மிகவும் தீங்கு விளைவிக்கக் கூடிய கிரகமாகும். ஆனாற் சனிக்கிரகமானது மிக மிக முன்னேற்றமடைந்த கிரகமாகும். மிகவும் கீழான உணர்வு நிலைகளினால் உண்டாகும் குழப்பங்கள் ஏதுமின்றி அங்கு தூய எண்ண அலைகளே நிரம்பியிருக்கும். இந்தக் கிரகங்களில் எண்ண வடிவில் சிறிது காலத்துக்கு வசிப்பவர்கள் சில நேரங்களில் பூமியில் வசிப்பவர்களின் மனநிலைக்கு சற்றே மாறுபட்ட மனநிலையில் இருப்பார்கள். அதாவது நல்ல, நியாயமாகச் சிந்திக்கக் கூடிய மனநிலை எனப் பூமியிலிருப்பவர்கள் நினைக்கக் கூடியதான மனநிலைக்கு முற்றிலும் மாறுபட்ட மனநிலையில் உள்ளதால் அவர்கள் அதன் பின் எப்போதாவது பூவுடலுடன் பிறப்பதற்குத் தீர்மானித்தால் அவர்கள் அந்த நேரத்தில் கூடப் பிறக்கும் சக மனிதர்களுடன் சற்றே இணக்கம் குறைவாகக் காணப்படுவார்கள். சில நேரங்களில் அவர்கள் தங்கள் வாழ்வில் அவ்வளவு தூரத்துக்கு ஒன்றி விட்டதனால் அங்குள்ள ஏனைய ஆத்மாக்களுடன் ஒத்துப் போக இயலாமலிருக்கலாம்; அல்லது செவ்வாய்க் கிரகத்திலோ அன்றி வேறெதிலுமோ உள்ள பகைமை உணர்வுகள், போர்க்குணங்கள் போன்றவற்றின் தாக்கங்களினாற் பூவுலகின் சௌகரியமான வாழ்க்கையை ஏற்க இயலாத விதமாக ஒரு விரோத மனப்பான்மையைக் கொண்டிருக்கலாம்".
இந்தக் கட்டத்தில் ஆர்தர் இடைமறித்துப் பின்வருமாறு உரைத்தார்: "தற்போது நான் இருக்கும் இந்த நிலையில் நான் இன்னும் மற்றைய கிரகங்களுக்குச் செல்லவில்லை. ஆனால் ஏனைய பிறவிகளுக்கு இடையில் மூன்று கிரகங்களில் நான் வசித்தது எனக்கு நினைவில் உள்ளது. நான் மீண்டும் அங்கு செல்வேனா இல்லையா என்பதோ அல்லது எனது பிறப்பிறப்புச் சுழற்சியை நிறைவு செய்வதற்காக மீண்டும் பூவுலகிற் பிறப்பேனா இல்லையா என்பதோ எனக்கு இன்னும் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் தெரியும். அதாவது யுரேனஸ் கிரகத்துக்கு மீண்டும் செல்வதற்கு எனக்கு விருப்பமில்லை."
மற்றைய கிரகங்களிலே எதிலாவது பூவுலகில் வசிப்பவர்களின் உடலமைப்புக்கு நிகரான உடலமைப்பைக் கொண்டவர்கள் இருக்கிறார்களா என்று நான் லிலி, ஆர்தர், குழுவினரைக் கேட்டேன். அதற்குரிய பதில்: இல்லை. பூமியில் இருப்பவர்கள் போல் இரத்தமும் தசையும் கொண்டவர்கள் அவ்விடங்களில் இல்லை. அந்தக் கிரகங்கள் சுவாராஸ்யமான உருவங்களுடனான எண்ண வடிவங்களைக் கொண்டிருக்கின்றன. அதாவது இறகுகளைக் கொண்ட முள்ளங்கிக் கிழங்குகள் (radishes with wings), வால்களுடனான கோசுக்கிழங்குகள் (turnips with tails), சிரிக்கும் இலைக்கோசு (lettuce that laughs) என்பவற்றுடன் காற்றிலும் நீரிலும் கூட நடக்கக் கூடியவிதமான விலங்கு வடிவங்களும் உள்ளன. அத்துடன் பூவுலகவாசிகளை அதி பயங்கரமாகத் திகிலூட்டக் கூடிய விதத்தில் ஆனால் அதே நேரத்தில் அங்குள்ளவர்களுக்குச் சாதாரணக் கடற்கரைக் கற்கள் போல இருக்கக் கூடிய விதமான பல விகாரமான உருவங்களைக் கொண்ட கனிம வடிவங்களும் உள்ளன. அவர்கள் பல்வேறு விதங்களில் ஒருவருடன் மற்றவர் தொடர்பு கொள்ள இயலும். அத்தொடர்பு முறைகள் பூவுலக வாசிகளை விட உயர்ந்த அல்லது தாழ்ந்த அதிர்வெண்களில் இருக்கக்கூடும். நாம் எவ்வாறு பூவுலகில் மறுபிறவிகள் எடுக்கிறோமோ அவ்வாறே அவர்களுக்கும் தங்களது கிரகங்களுக்குத் திரும்பும் சுழற்சிகள் உள்ளன. சில நேரங்களில் கூடுதல் தைரியசாலிகளிற் சிலர் பூவுலக வாழ்வை முயற்சி செய்ய நினைக்கலாம். ஆனால் அது அநேகமாகத் துயர் நிறைந்த முடிவாகத்தான் இருக்கும். உதாரணமாக ஆப்பிரிக்காவிலோ அல்லது வேறு இடத்திலோ ஒரு ஒதுக்குப் புறமான பகுதியில் ஒரு ஆதிவாசி காணப்பட்டால் அது அநேகமாக இப்படியான ஒரு வேற்றுக்கிரகவாசி பூவுலகில் உடலெடுத்து வசிப்பதற்குச் செய்த முயற்சியாகத்தான் இருக்கும். சில நேரங்களில் மனிதர்களைப் போற் பேசவியலாத சிறு குழந்தைகள் விலங்குகளுடன் வசிக்கையிற் கண்டு பிடிக்கப் படுவதும் இவ்வாறே இருக்கும். அவர்கள் வேற்றுக் கிரகத்தில் இருப்பவர்கள் ஆர்வத்தால் உந்தப்பட்டுப் புதுவகை உடலை முயன்று பார்க்கிறார்கள். ஒரு ஓநாய் செம்மறியாட்டின் உடையை அணிவது எப்படிப் பொருந்தாதோ அவ்வாறே அவர்களுக்கும் இது பொருந்தாது. பூவுலகவாசிகளும் சனிக்கிரகவாசிகள் போலவோ வேறு கிரகவாசிகள் போலவோ முயன்று பார்த்திருக்கிறார்கள். ஆனால் விளைவுகள் சாதகமாக அமையவில்லை. அதாவது இது வெவ்வேறு இரு விலங்குகளை இணைத்து இனப்பெருக்கம் செய்வதைப் போன்ற மடமைத் தனமாகும். நாம் மற்றைய கிரகங்களுக்குச் சென்று சிறிது நாட்கள் வசிப்போமென்று நான் சொல்வது நாம் அங்கு உயிர் வாழும் உயிரினங்கள் போல அங்கு உடலெடுத்து வசிப்பதையல்ல. நாம் அங்கு எண்ணக்கரு (thought forms) வடிவங்களாகவே செல்வோம். நாம் எண்ண வடிவில் அங்கு செல்வது பிரபஞ்ச விதிகளை அறியவும் அத்துடன் 'நாமனைவரும் ஒன்றே' என்ற என்றுமே மாறாத விதியை விளங்கிக் கொள்ளவும் தான்.
இன்னொரு நாள் பின்வருமாறு அவர்கள் எழுதினார்கள்: "மற்றைய நட்சத்திரங்கள் பூமியென்ற கிரகத்தை விட முழுக்க முழுக்க வித்தியாசமான விதங்களில் வளர்ச்சிக்கு உதவுகின்றன. இந்த இடைப்பட்ட நிலையில் இருப்பவர்களில் அதிகம் பேருக்குப் பரிச்சயமான ஒரேயொரு கிரகம் பூமியாகும். நாமனைவரும் பூமிக்குப் பயிற்றுவிக்கப்பட்ட ஆத்மாக்களாகும் (earth-trained souls). பூமியில் பௌதீக நிலையிலிருந்து சமீபத்தில் நாம் வந்த அதே நேரத்தில் வானமண்டலம் பூராவிலுமுள்ள வேறு கிரகங்களிலிருந்து எண்ணிலடங்காத வேறு பல ஆத்மாக்கள் முன்னேற்றம் அடைந்திருக்கும். சில கிரகங்கள், அங்குள்ள ஆத்மாக்கள் பௌதீக உடலை அணியாமல் எண்ணங்களால் ஆன உடலை அணியும் தூய்மையான ஆத்மீக வாசஸ்தலமான கிரகங்களாக இருக்கும். சில நட்சத்திரங்கள் பௌதீக உடலுடன் வசிக்கக் கூடியதாக இருக்கும். ஆனாற் பூமி எனும் கிரகத்தில் இருப்பதைப் போன்ற பௌதீக உடலுடன் தான் அங்குள்ள ஆத்மாக்கள் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஒரு ஆத்மா எடுக்கும் பௌதீக உடலானது அது இங்கு என்றாலும் பூமியில் என்றாலும் அல்லது வேறு கிரகங்களில் என்றாலும் அது சூழலுக்கு ஏற்புடையதாகவே அமையும். எனவே ஒரு நட்சத்திரத்துக்குப் பொருந்தக் கூடியது பெரும்பாலும் இன்னொன்றில் உள்ள முன்னேற்றங்களுக்குப் பொருந்தாது.
"நாம் மனிதனை இரு கண்கள், இரு காதுகள், ஒரு மூக்கு, ஒரு கழுத்து, கால்கள், கைகள், உடல் என்பவற்றுடன் தான் கற்பனை செய்வோம். ஆனால் ஒரு ஆத்மா தனது ஆத்மீக வளர்ச்சியை நிறைவு செய்வதற்காக மீண்டும் வெவ்வேறு வடிவங்களில் தன்னை வெளிக்கொணர்வதற்கு இது தான் ஒரேயொரு வழியென்பதல்ல. ஆம் இது பூமிக்குரிய வடிவம். அது உண்மை தான். ஆனால் அது செவ்வாய்க் கிரகத்துக்கோ, சனிக்கிரகத்துக்கோ அல்லது வான் வெளியின் எண்ணிலடங்கா நட்சத்திரங்களில் எதற்கோ பொருந்த வேண்டுமென்று அவசியமில்லை. நாம் உடலுடனிருக்கையில் எமக்கு சுவாசிப்பதற்கு நுரையீரல்களும் தொடர்ந்து இயங்குவதற்கு ஒரு இருதயமும் இருந்தன. ஆனாற் சில கிரகங்களுக்கு அப்படிப்பட்ட ஒரு இருதயமோ அன்றி நுரையீரல்களோ அவசியமில்லை. சில கிரகங்களில் அன்றாடச் செயற்பாடுகளைக் கொண்டு செலுத்தவும் சிந்திப்பதற்கும் உயிர் வாழ்வதற்கும் ஒன்றில் மிக எளிமையான அல்லது மிகச் சிக்கலான ஒரு தொழில் நுட்பம் தேவையாயிருக்கிறது.
"மற்றைய கிரகங்களிலும் நட்சத்திரங்களிலும் உள்ள ஆத்மாக்கள் முன்னேற்றங்களின் வெவ்வேறு கட்டங்களில் உள்ளார்கள். சில மிகத் தொடக்க நிலைகளிலும் இன்னும் சில மிகவும் முன்னேறிய நிலைகளிலும் உள்ளன. ஆயினும் அவையனைத்தும் இறைவனின் துடிப்பையும் அவனது அன்பு ஒளியையும் தம்மகத்தே கொண்டுள்ளன. ஒவ்வொன்றும் தனது வளர்ச்சிக்குத் தானே பொறுப்பாளிகளாகவும் சிருஷ்டி கர்த்தாவுடன் மீளவும் இணைவதற்கான பயணத்தை மீளவும் தொடர்வதற்குள் தமது பிழைகளைத் திருத்தி சீர்செய்யும் பொறுப்புகளுடனும் உள்ளன.
"ஒரு ஆத்மா பூவுலகில் மிகக் கொடூரமான அளவுக்கு வழி தவறியதனால் இன்னொரு ஆத்மாவுக்கு இழைத்த அந்தக் கொடுமையைச் சீர்செய்வதற்கு அது ஓரு நூறு கோடிப் பிறவிகள் எடுக்க வேண்டியிருந்தால் என்ன செய்வது? சில சமயம் தண்டனையைத் துரிதப்படுத்தும் முகமாகக் கடுமை வாய்ந்த ஒரு கிரகத்திலோ அல்லது நட்சத்திரத்திலோ முற்றிலும் வித்தியாசமான ஒரு உயிர்வாழ் வடிவத்தை எடுக்கக் கூடிய சந்தர்ப்பம் அவருக்கு வழங்கப்படலாம். அங்கு உள்ள சூழ்நிலைகளின் படி பாவமேதும் புரியாத புதிதாக உருவாக்கப்பட்ட ஆத்மா போல அவர் அந்தக் கடினமான சூழ்நிலைகளுக்கு ஈடுகொடுத்து நிற்பாரேயானால் பூமியென்று சொல்லப்படும் குறைந்த அளவிலான கஷ்டங்கள் நிரம்பிய கிரகத்தின் பற்பல பிறவிகளின் பாவங்களைப் போக்கக் கூடிய அளவில் அவற்றுக்குப் பரிகாரங்கள் தேட முடியும். நான் என்ன சொல்கிறேன் என்று உனக்குப் புரிந்ததா? அதாவது எல்லை மீறிப் போய் விட்ட பாவங்களுக்கான பரிகாரங்களைப் பூவுலகிற் தேடுவதில் முற்றிலுமாக நம்பிக்கையை இழந்து விட்ட அந்த ஆத்மாவானது தானே விரும்பிக் கடினமான சூழ்நிலைகள் நிறைந்த ஒரு கிரகத்தின் குடியாளராகப் பிறவி எடுப்பார். அப்போது அதன் வடிவமானது பூவுலகில் இருக்கும் உங்களைப் போன்றவர்களால் மனிதனென்று சொல்ல இயலாதவாறு இருக்கும்.
"சில ஆத்மாக்கள் மனித உருவில் இப்படியொரு வகை உயிரினங்கள் இருக்கின்றன என்பது தெரிய வர ஒரு காரணமும் இல்லாமலே வெவ்வேறு நட்சத்திரங்களிலும் கிரகங்களிலும் உயிர் வாழ்ந்து மடிந்து போகின்றன. மீண்டும் சில கிரகங்களில் பௌதீக உடலெடுக்காமல் தனி ஆத்ம உடலெடுத்துத் தூய எண்ணத் தளங்களில் (thought planes) ஆத்மாக்கள் உயிர் வாழும் என்பதையும் தெரிந்து கொள். பூவுலகில் நாம் காணும் உடலுடன் கூடிய ஆத்மாக்களைக் காட்டிலும் இவை சில சமயம் முன்னேற்றத்தின் மிக மிக உயர்ந்த தளத்தில் இருக்கும்.
"உயர் நிலைகளுக்குச் செல்வதற்காகத் தெரிவு செய்யப்பட்ட முன்னைய பூவுலகவாசிகள் பூவுலகில் துறவிகளின் மடத்துக்குச் செல்லு முன் எவ்வாறு பயிற்றுவிக்கப் படுவார்களோ அவ்வாறே மிகக் கவனமாகப் பயிற்றுவிக்கப் படுவார்கள். அவர்கள் தங்களை அதிர்வலைகளின் ஊடாகச் சில மண்டலங்களில் முன் நிறுத்துவதற்குப் பயில்வார்கள். அப்பிரதேசங்கள் சில நேரங்களில் அவர்களால் முன்னே ஆராயப் படாதவைகளாக இருக்கும். அதாவது இந்த நேரத்தில் அவர்கள் சூக்கும சரீரத்தில் பிரயாணம் செய்வது மட்டுமன்றி (பூவுலகிலிருக்கும் உணர்திறன் கூடியவர்களின் பார்வைக்குச் சில சமயம் தெரியலாம்) நாம் முதலிலேயே உரைத்தது போல் ஏனைய கிரகங்களுக்கும் பிரயாணம் செய்வார்கள். இவ்வகைப் பிரயாணமானது பிரபஞ்ச விதிகளை அவர்கள் அறிவதற்கு மிகவும் உதவுகின்றது. அத்துடன் அவர்கள் நான்காவது அல்லது ஐந்தாவது நிலைகளில் இருக்கும் போது ஒரே நேரத்திற் பல கிரகங்களிற் காணப்படுவது சகஜம். ஏனெனில் உயர் உணர்வு நிலையிலுள்ள ஆத்மாவுக்குத் தன்னை ஒரே சமயத்திற் பல இடங்களில் முன்னிறுத்த இயலும்.
"இப்போ நாம் திரையின் இப்பக்கத்தின் இறுதி நிலை அதாவது மிக மிக உயர்வான பரிபூரண நிலையைப் பற்றிப் பார்ப்போம். அதாவது இறுதியாக ஆத்மாக்கள் இறைவனுடன் இரண்டறக் கலக்கும் நிலை. அந்தப் பேரின்ப நிலையை நாம் இன்னும் அடையவில்லை என்பது தெரிந்ததே. ஆனால் இங்கே நாம் கற்றதன் படி அந்தக் கடைசிப் பூர்ணத்துவ நிலையை ஆத்மாக்கள் அணுகும் போது அவர்கள் மீண்டுமொரு முறை தமது கடந்த பிறவிகளை மறுபரிசீலனை செய்வது மட்டுமன்றி ஆதியிலிருந்து தம்மைத் தொட்ட அல்லது தாம் தொட்ட ஒவ்வொரு எண்ணங்கள், கருத்துகள், யோசனைகளையும் மறுபரிசீலனை செய்வார்கள். இது ஆறாவது நிலையின் போது நடப்பதாகும். கடைசியில் அவர்கள் தாம் புரிந்த ஒவ்வொரு தவறுக்கும் ஏதோ ஒரு விதத்திலோ எண்ணத்தாலோ அன்றி ஏதோ ஒரு வழியிலோ ஈடு செய்து எல்லா வகையான தவறுகளுக்கும் பிராயச்சித்தம் செய்து விட்டோம், எந்த விதமான ஒரு குறையும் விட்டு வைக்கவில்லை என முடிவு செய்தால் அவர்கள் இறைவனுடன் இணைவதற்குத் தயாராவார்கள். இம்முடிவில் எந்த விதமான கர்வமுமில்லை. ஆனால் ஆதியிலிருந்து வாழ்ந்த வாழ்வைப் பற்றிய மிக நுட்பமான மதிப்பீடாகும். அதன் பின் அவர்கள் நிர்மலமாக இறைவனுடன் இரண்டறக் கலப்பதற்கு ஈர்க்கப்படுவார்கள். அந்தப் பூரண நிலையை அடைந்ததன் பிற்பாடு அவ்வாத்மாக்கள் பிறப்பிறப்புச் சுழற்சிக்கு மீண்டும் திரும்பவோ தொடரவோ மாட்டார்களென்று கேள்விப்பட்டுள்ளோம் என்று தான் சொல்ல வேண்டும்."
இறைவனுடன் ஒன்றுபடுவதைப் பற்றிய இப்படிப்பட்டதொரு உன்னதமான கலந்துரையாடலுக்குப் பின் பறக்கும் தட்டுகளைப் (flying saucers) பற்றிக் கேட்பது அபத்தமாகப் பட்டாலும் எனது வாசகர்கள் கேட்பார்களே என்பதாற் கேட்டேன். எதற்கும் உடன்படும் ஃபோர்ட் இதற்குப் பின்வருமாறு பதிலளித்தார்: "ஆம் பறக்கும் தட்டுகள் உள்ளன. அவை வேற்றுக் கிரகவாசிகளின் எண்ணங்களிலே தான் தோற்றுவிக்கப்பட்டன. ஆனால் தாம் அதனைத் தொட்டதாகவோ அதற்குள் சென்றதாகவோ பூவுலகவாசிகள் எண்ணும் அப்படியான ஒரு பௌதீக உரு வெளித்தோற்றங்கள் உண்மையாக இல்லை. அவை பூமியில் நாம் உணரும் திண்மப் பொருட்களைப் போலல்ல. ஆனால் ஒளி, ஒலி ஆகிய சக்திகளின் பரிமாற்றங்களினால் உருக்கிரும்பால் (ஸ்டீல்) உருவாக்கப்பட்டவை போன்ற உண்மைத் தோற்றத்தை எமது பார்வைகளுக்குத் தருகின்றன. சிற்சில சூழ்நிலைகளின் போது அவை பார்வைக்குப் புலப்படலாம். அத்துடன் மிக அண்மையாக வரும் போது புவியின் வளிமண்டலத்தினூடாக விரையலாம். ஆனாற் பூவுலக மனிதர்கள் அவற்றுட் செல்ல இயலாது. அவ்வளவு தான்!

Wednesday, August 14, 2019

பதினைந்தாம் அத்தியாயம் - தீர்க்கதரிசனம் (Prophecy)


மார்ச் மாதத்தின் ஆரம்பத்தில் ஒரு நாள் நேரத்தைப் பற்றிய மிக நீண்டதொரு உரையாடலின் போது ஆர்தர், "நாம் எப்போதும் இருந்து கொண்டே இருப்போம் என்பதை இங்கு வந்ததும் நாம் அறிந்து கொள்வதனால் இங்கே நேரம் என்பதற்கு ஒரு அர்த்தமும் இல்லை" என எழுதினார். தொடர்ந்து அவர், "எமக்கு ஆரம்பமும் இல்லை; முடிவும் இல்லை. எனவே இங்கே நேரமென்ற ஒன்று இல்லை. ஆனால் பூவுலகில் தூக்கம், விழிப்பு அத்துடன் பிறப்பு, இறப்புப் போன்ற நிலைகளை ஒழுங்கு படுத்துவதற்கும் மற்றும் ஒருவரது நாளாந்தக் கடமைகளைச் சீராகச் செய்வதற்கும் நேரமானது இன்றியமையாதது என்பது வெளிப்படை" எனவும் எழுதினார். பின்னர் ஆவலைத் தூண்டும் விதமாகப் பின்வருமாறு எழுதினார், "திரையின் இப்பக்கத்திலிருக்கும் நாம் திரையின் அப்பக்கத்திலிருக்கும் உங்களிலும் பார்க்கச் சற்றே நீண்ட கால வரையறையைக்  காண்கிறோம். ஆனால் எக்காரணம் கொண்டும் வாழ்வின் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை காணமாட்டோம். உங்களிற் பார்க்க நாம் ஒன்றும் பெரிதாகத் தவறு இழைக்காதவர்கள் அல்ல. உங்களுக்கும் எமக்கும் உள்ள வித்தியாசம் நாங்கள் இறைதிட்டத்தின் நோக்கங்களைப் பற்றிய பரந்த அளவிலான பார்வையும் ஆழமான விழிப்புணர்வும் கொண்டுள்ளோம்.
"பூவுலகிற் பிறக்கையில் நாம் 'நேரம்' என்று அழைக்கப்படும் குறுகிய வட்டத்துள் ஒடுக்கப்படுகிறோம். அவ்வேளையில் பால் ஊட்டப்படுதலையோ அல்லது உணவு ஊட்டப் படுதலையோ கடந்து வேறொன்றையும் அறியோம். கைக்குழந்தையாய் இருக்கையில் இவைகளைப் பற்றித் தெரிந்திருந்தால் மட்டுமே போதுமானது. பின்னர் குழந்தைப் பருவத்திலிருந்து வளர்ந்து சிறுவர்கள் ஆகையில் இந்த வட்டமானது கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாகும். மேலும் அது வாழ்வின் ஒவ்வொரு கட்டமாகப் பெரிதாகிக் கொண்டே வரும். ஒரு சிறு குழந்தை இந்த விரிந்து பரந்த காலத்தைப் பார்க்கையில் முதலில் அதற்கு நேரமானது இழுபடுவதைப் போலத் தெரியும். அதாவது ஒரு பார்ட்டி அல்லது பாடசாலையின் திறப்புப் போன்ற ஒரு மகிழ்ச்சியான அல்லது  ஒரு பயங்கரமான சம்பவம் நடைபெறும் வரை நேரமானது ஒரு சிறு குழந்தைக்கு இழுபடுவதைப் போன்று இருக்கும். அந்தக் கணம் வரையும் அவன் பூவுலகில் வாழ்ந்த காலத்துடன் ஒப்பிடுகையில் அவனுக்கு அது நீண்ட நேரமாகத் தெரியும். ஆனால் நாம் முதுமையை நெருங்குகையில் நேரமானது விரைவாக ஓடி மறையும். ஒரு வருடமானது சிறு குழந்தைக்கான ஒரு நாளைப் போன்று தோற்றமளிக்கும். இது பூதவுடலில் இருக்கையில் நாம் கழித்த காலத்துக்குச் எதிர்ச்சம விகிதத்தில் (inversely proportional) இருக்கும்".
ஆர்தர் அவர் இருக்கும் தளத்தில் சற்று நீளமான கால வரையறையைக் காண்பதாகக் கூறியமை எனக்கு அதைப் பற்றி மேலும் அறியும் ஆவலைத் தூண்டியதன் காரணமாக நான் அவரிடம், "வரும் காலத்தில் நடக்கக் கூடிய விஷயங்களைப் பற்றிக் கூற இயலுமா" எனக் கேட்டேன். அதற்கு அவர், "அட்லாண்டிஸ் என்ற தொலைந்த கண்டமானது (The lost continent of Atlantis) அடுத்த பத்து ஆண்டுகளில் வெளிப்படுமென்றும் மற்றும் வியட்நாமில் எமது தீவிரப் பங்களிப்பானது விரைவில் ஒரு முடிவுக்கு வரும்" என்றும் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார். ஆனால் நான் வேறு பல விஷயங்களைப் பற்றி அறிய விரும்பினேன். அத்துடன் ஆர்தர் பூவுலகில் இருக்கையில் அவர் மூலமாக ஃபிளெச்சர் (Fletcher) பேசுகையில் தான் ஒரு மிகச் சிறந்த நிமித்திகன் என்பதை நிரூபித்திருந்தமை எனக்குத் தெரியும். ஜனாதிபதி கென்னடியின் படுகொலைக்கு ஒரு வருடத்தின் முன்பே ஒரு அமர்வின் போது ஃப்ளெச்சர் 'ஜனாதிபதி அவர்கள் வெள்ளை மாளிகையிலிருந்து தொலை தூரத்தில் ஒரு ஊர்வலத்தில் வைத்துக் கொல்லப்படுவார்' என்பதை எனக்குச் சொல்லியிருந்தார். 1964 ஆம் ஆண்டுத் தேர்தலுக்கு ஒரு கிழமைக்கு முன் ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி ஃபிலதெல்பியாவில் நடைபெற்ற ஒரு அமர்வின் போது ஃப்ளெச்சர் காலஞ் சென்ற ஹரோல்ட் இக்கீஸ் (Harold ickes) ஐ அறிமுகம் செய்து வைத்தார். அவர் FDR (பிராங்க்ளின் டெலானோ ரூஸ்வெல்ட்) இன் உட்துறைச் செயலாளராக இருந்தவர். அப்போது அவர், "கோல்ட்வோட்டர் (Goldwater) இன் வாக்காளர் வாக்குகள் குறைந்த பட்சம் நாற்பத்திமூன்றும் அதிகபட்சம் ஐம்பத்தியிரண்டும் என்று இக்கீஸ் சொல்கிறார்" என்பதாகச் சொன்னார். கோல்ட்வாட்டரின் வாக்காளர் வாக்குகள் ஐம்பத்தியிரண்டாக வந்தன. எனது சகோதரி மாக்ரெட்டைப் பற்றியும் ஃப்ளெச்சர் மிகத் துல்லியமாகக் கணித்துச் சொன்னார். எனவே அம்முற்றிலும் எதிர்பாராத நிகழ்ச்சி சில நாட்களில் நடந்தேறுகையில் அது என்னைச் சில்லிட வைத்தது.
எனவே அவை உபயோகமாக உள்ளனவோ  இல்லையோ ஆர்தர் ஃபோர்ட் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குச் சென்றதிலிருந்து அவரால் எனக்கு உரைக்கப்பட்ட முன் கணிப்புகளை எல்லாம் நான் இப்போ வெளியிடப் போகிறேன். அவையெல்லாம் நேரடி வாசகங்களாக இருப்பதனால் நான் அவற்றின் மேற்கோள் குறியீடுகளை நீக்கிவிட்டு எழுதுகிறேன்:
அடுத்த தேர்தலில் குடியரசுக்கட்சி (Republicans) ஆட்சிக்கு வரும். அதற்கான தகுதி அவர்களுக்கு உண்டு. ஜனநாயகக் கட்சி (Democrats) தங்களுக்குள் ஒரு டஜன் பிளவுகளை ஏற்படுத்திக் கொண்டு சண்டை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நிக்ஸன் செய்ய முயற்சிக்கும் எந்த விஷயத்துக்கும் எதிர்ப்புத் தெரிவிப்பதில் மட்டுமே ஒற்றுமையைக் காட்டுகிறார்கள். (இது நிச்சயமானது தானா அல்லது 1972 தேர்தலுக்கிடையில் நிலைமைகள் மாறலாமா என நான் கேட்டேன்) நிக்ஸன் நிச்சயம் வெல்வார். வெற்றி நிச்சயம். அக்னியூ (Agnew) வும் தேர்தலிற் போட்டியிடுவார்.
ஹென்றி "ஸ்கூப்" ஜாக்ஸன் (Henry "Scoop" Jackson) ஒரு நல்ல ஜனநாயகக் கட்சி வேட்பாளராக இருப்பார். ஆனால் அவர் நியமனம் பெற மாட்டார்.
ரெட் கென்னெடியை (Ted Kennedy) ஓர் செயற்திறன் மிக்க ஜனாதிபதி வேட்பாளராக நாம் காண்கிறோம். ஆனால் எதிர்வரும் ஐந்து வருடங்கள் வரையிலாவது அவரால் வெற்றிகரமாக வர இயலாது இருக்கும். அதன் பின்னர் நடப்பவைகள் இதற்கும் பிற்பாடும் நடக்கும் விடயங்களிற் தங்கியுள்ளன.
ஏத்தெல் கென்னடி (Ethel Kennedy) சிறிது காலத்துக்கு மறுமணம் புரியமாட்டார். எப்படிப்பட்ட ஒரு நல்ல தாய் அவர்! தனது குழந்தைகளின் அக்கறைகளில் மிகவும் ஆர்வமாக இருக்கிறார். அதனாற் தனக்குப் பிடித்த புதுமை விரும்பியான மனிதனால் தனது குழந்தைகளின் சந்தோஷம் பாதிப்படையாமல் இருப்பதற்காக அப்படிப்பட்ட ஒரு உறவை அவர் தவிர்த்தார்.
ஜாக்கி (Jackie) யினதும் அரிஸ்டாட்டில் ஒனாசிஸ் (Aristotle Onassis) இனதும் திருமணம்? அவ்வளவு பிழையென்றில்லை. ஜாக் (Jack) கென்னடியதும் அவரது சகோதர, சகோதரிகளிலும் பார்க்க அவர்களிருவருக்கும் இடையே பல்வேறு விஷயங்களில் நிறைய ஒற்றுமைகள் காணப்படுகின்றன. இருவருமே பணத்தையும் பதவியதிகாரத்தையும் விரும்புகிறவர்கள். அவர்களின் உறவிற் குழப்பங்கள் வருவதற்கான அறிகுறிகள் இதுவரையிற் காணப்படவில்லை. ஒரு வேளை இது நிலையான உறவாகவும் அமையலாம்.
ஜோர்டான் நீண்ட நாட்களுக்கு ஒரு தனி நாடாக இருக்காது. இஸ்ரேலாலும் சிரியாவாலும் விழுங்கப்பட்டு விடும். வருத்தப்பட வேண்டிய விடயம். ஹுஸைன் (Hussein) உண்மையில் ஒரு நல்ல மன்னர்.
அடுத்த பத்து வருடங்களுக்குள் எகிப்தில் வேறுபட்ட ஒரு அரசாங்கம் உருவாகும். இப்படிப்பட்ட திடமான ஆனால் சுதந்திரமான அரசியல் நிலை மாற்றத்தால் நாடு மிகவும் பயனடையும். நல்ல இருதயமும் மூளையுமுள்ள பலம் வாய்ந்த ஒரு மனிதன் முன் வந்து அதிகாரத்தைக் கையிலெடுக்கையில் இவையாவும் நடைபெறும்.
துருக்கி பலமான நாடாகத் தொடர்ந்து இருக்கும். அது கம்யூனிசத்தை நோக்கிச் செல்லாது. கிரேக்க நாடும் அப்படித்தான்.
ஃபிரான்ஸ் - ஏற்ற, இறக்கங்கள், அதற்கே உரித்தான பிரச்சனைகளுடனும் அப்படியே இருக்கும்.
இங்கிலாந்து பலம் வாய்ந்த நாடாகத் தொடர்ந்து இருந்தாலும் அது தனது மேலாதிக்கத்தை மீளப் பெறாது.
வியட்நாம்? அமெரிக்கா கொஞ்சம் கொஞ்சமாகப் போர் முகப்பிலிருந்து பின்வாங்கும். ஆனாலும் சமாதானமென்பது உடனே ஏற்படவியலாதவாறு தேவையற்ற படுகொலைகள் இன்னும் நீண்ட காலத்துக்குத் தொடரும். கடைசியாகத் தென்கிழக்காசியாவில் சமாதானம் ஏற்படுகையில் அங்கே எம் சார்பிற் போர் புரிந்தவர்கள் நாடு திரும்புகையிற் கடும் வேலையில்லாத் திண்டாட்டத்தைச் சந்திக்க நேரும். எமது வேலை வாய்ப்புத் துறைகளின் வழிமுறைகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் அவர்கள் கஷ்டப்படுவார்கள். அவர்களின் சொந்தப் பிரச்சனைகளில் அவர்களுக்கு வழி காட்டுதல்கள் தேவைப்படலாம். உளவியல் ரீதியில் அவர்களைச் சீர் செய்யக்கூடிய கல்விக் கூடங்களின் மூலமே இதைச் செய்யமுடியும். அமெரிக்கா இப்பொழுதே போர் வீரர்களுக்கான வேலைத் திட்டங்களைத் தொடங்க வேண்டும். இல்லாவிடின் அமைதியின்மையை எதிர்கொள்ள நேரும். இரண்டாம் உலகமகா யுத்த வீரர்கள் போலவோ அன்றிக் கொரியன் போர் வீரர்கள் போலவோ இவர்கள் கற்பதில் அதிக ஆர்வம் காட்ட மாட்டார்கள். இவர்கள் செயல் வீரர்களாதலினால் நேரடியாகப் பணிகளிலோ வேலைகளிலோ இறங்கவே விரும்புவர்.
ஐரோப்பா கம்யூனிசத்தை நாடாது. அத்துடன் 'சுதந்திரமானவை' என்றழைக்கப்படும் நாடுகளுடன் கம்யூனிச உலகமும் நீண்ட காலங்களுக்கு அருகருகே இருந்து கொண்டே இருக்கும். உலகியல் நாட்டம் கொண்ட கொம்யூனிஸ்ட் உலகமானது கடவுளின் பக்கம் கொஞ்சம் கொஞ்சமாகத் திரும்பத் தொடங்கும். காரணம் இந்த அமானுஷ்ய விஷயங்களைப் பற்றிய விஞ்ஞானப் புதிர்கள் தான். இவை சோவியத்தின் பௌதீக வல்லுனர்களையும் இயற்கை விஞ்ஞானிகளையும் மிகவும் கவர்கின்றன. அவர்கள் கடவுளை நோக்கித் திரும்புகையில் அவர்களது உள்ளமும் இதயமும் விரிவடையும். அப்போது முன்னேற்றமானது மிக விரைவாக இருக்கும். ரஷ்யாவானது சுதந்திரக் காற்றைக் கொஞ்சம் கொஞ்சமாக சுவாசிக்கத் தொடங்கும். சீனாவுக்கு ஐக்கியநாடுகள் சபையின் அங்கீகாரம் கிடைத்த பின் அது தன்னை மாற்றிக் கொள்ளும்.
ரஷ்யாவுக்கும் சீனாவுக்குமிடையில்? அவர்களுக்கிடையில் வரப்போகும் பதினைந்து வருடங்களுக்காவது பெரிதாக ஒரு பிரச்சனையும் வரக்கூடிய வாய்ப்புகளில்லை. போர் நடப்பதற்கான சாத்தியக்கூறுகளேதும் காணப்படவில்லை. சிற்சில மோதல்களும் உரசல்களுமே இருக்கும். ஆனால் மஞ்சள் இனமும் வெள்ளையினமும் சிறிது காலங்களுக்கு அதாவது இனி வரும் பத்து வருடங்களுக்கு ஒன்றுடனொன்று முரண்பட்டுக் கொண்டே இருக்கப் போகின்றன. இது உண்மையில் பரிதாபத்துக்குரிய விஷயமாகும். ஏனெனில் நாமனைவரும் பல்வேறு பூவுடல்களை எடுக்கையில் இவ்விரு இனங்களிலும் மட்டுமல்லாது வேறு இனங்களிலும் கூடப் பிறந்துள்ளோம். உண்மையில் வெவ்வேறு இனங்கள், வெவ்வேறு நிற மனிதர்கள் என்று ஒன்றுமே இல்லை. நாமனைவருமே இறைவனென்று அழைக்கப்படுகின்ற அந்த ஒரேயொரு மூலாதாரத்தினின்றும் உற்பத்தியாகிக் கொண்டிருக்கின்ற வெவ்வேறு ஆத்மாக்கள் தான். அப்புறம் இனங்கள், மதங்களுக்கிடையே ஏன் இவ்வளவு கசப்புணர்வுகள்? இந்த நூற்றாண்டின் பின்னர் விருப்பங்கள், பகைகள் போன்றவற்றை எல்லாம் ஒரு பக்கமாக வைத்து விட்டு நீண்ட நெடும் அமைதியால் இவ்வுலகம் ஆளப்படக்கூடிய மாதிரியான காலமொன்று வரும். ஆனால் அப்படி நடக்கையில் அதைக் காண்பதற்கு நீ பூவுலகில் இருக்க மாட்டாய்.
ஜப்பான் வணிகத்துறையில் மேலாதிக்கத்தை அடையும். சாதுரியமான முறைகளில் வடிவமைக்கப்பட்ட தனது உற்பத்திகளால் அது சந்தைப்படுத்தும் தளங்களில் மிக விரைவில் முன்னேறும். ஆனால் எம்மாற் காணக்கூடிய வகையில் இந்நூற்றாண்டில் மீண்டும் போர் தொடர்பான பிரச்சனைகளேதும் வராது.
ஜேர்மனியின் நிதி நிலைமை இன்னும் சில ஆண்டுகளில் சற்றே தளர்ச்சி அடைந்தாலும் வலிமை மிக்க நாடுகளுள் ஒன்றாகத் தொடர்ந்து இருக்கும். இரு பகுதியும் ஓரளவு நெருக்கமாக வந்தாலும் முற்று முழுதாக இரு பகுதியும் இணைய மாட்டா.
மெக்சிக்கோவின் பொருளாதாரமானது நல்லதொரு தலைமையின் கீழ் ஸ்திரமாகும். அங்கே முதலீடு செய்வதன் மூலம் எதிர்கால முன்னேற்றத்துக்கு வழி வகுக்கலாம்.
அராபிய - இஸ்ரேலியப் பிரச்சனையானது சிக்கல்கள் நிறைந்த பிரச்சனையாகும். அது கைமீறிப் போவதற்குள் தீர்வொன்றை மாநாட்டின் மூலம் காணல் வேண்டும். இல்லாவிடின் அது இந்த நாகரீக உலகைப் பல்லாயிரம் ஆண்டுகட்குப் பின் தள்ளும். இந்த சகோதரப் படுகொலைகளானது எம்மை கெயின் மற்றும் ஆபேலின் காலத்துக்கு (Cain and Abel) இட்டுச் செல்லும். மத்திய கிழக்கில் நீண்ட நாட்களுக்கு அமைதியின்மை நிலவும். இஸ்ரேல், தான் எப்போதும் சரி ஏனையோர் எப்போதும் பிழையென்ற எண்ணம் எவ்வளவு தவறானது என்ற பயங்கர உண்மையைச் சந்திக்கும் வரை இது தொடரும். அவர்கள் கடவுளாற் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் (chosen people) என்ற சொற்றொடரால் அழைக்கப் படுகிறார்கள். ஆனால் அவர்கள் கடவுளைத் தாங்களே தேர்ந்தெடுத்த மக்களிற் பார்க்க எந்த விதத்தில் உயர்ந்தவர்கள்? இஸ்ரேலானது இப்போது பல விடயங்களில் இறைபக்தியுள்ள நாடாகவில்லை. வெளியில் அவர்கள் கடவுளைத் தேடுவது போற் தெரிந்தாலும் அவர்களின் தலைவர்களிற் சிலர் கடவுளை விட்டுத் தூரத்தே செல்கிறார்கள். வெற்றி எப்போதும் அவர்கள் பக்கம் தான் என்றில்லை. மனிதர்களின் மனங்களில் மாற்றமேற்படும் போது தான் மத்திய கிழக்கின் பிரச்சனைகள் சுமூகமாகத் தீர்த்து வைக்கப்படும் என்று கூறுவது அபத்தமாகப் படலாம். மானுடர்கள் தங்கள் உணர்வு நிலைகளில் மாற்றலை உண்டாக்கி வெறுப்பு, பேராசை என்பனவற்றைப் போக்கும் வரையும் அந்த நெருப்புக் கனன்று கொண்டே இருக்கும். என்றாலும் இது முழு உலகின் மோதல்கட்கு வழி வகுக்க மாட்டா. உலகமகா யுத்தம் வராது. ஆனால் தொடர்ந்து இது ஒரு முள்ளாக நெருடிக் கொண்டேயிருக்கும்.
கியூபாவானது காஸ்ட்ரோவின் தலைமையில் படிப்படியாகக் கீழ் நோக்கிப் போய்க் கொண்டிருக்கும். அதன் பின்னர் வரக்கூடிய ஆட்சியொன்று அமெரிக்காவுடன் ஒர் உடன்பாட்டுக்கு வந்து உலகநாடுகளின் குடும்பத்திற் கியூபா தானும் ஒரு அங்கத்தினராகவும் அதே நேரம் அமெரிக்க மாநிலங்களின் அமைப்பிற் சேரக்கூடியதாகவும் அமையும். அடுத்த நான்கு, ஐந்து ஆண்டுகளில் இது நடைபெறுவதைக் காணலாம்.
சிலி (Chile)? வெகு விரைவில் அங்கே அரசாங்கம் கவிழ்க்கப்படும். கம்யூனிஸ்டுகளின் அதிகாரம் போய்விடும்.
மத்திய மற்றும் தென்னமெரிக்க நாடுகள்? கம்யூனிசத்தின் அதிகாரமானது சிற்சில இடங்களில் அதிகரித்து வருவது தெரிந்ததே. ஆர்ஜெண்டீனாவுக்கும் சிலிக்கும் உறுதியான ஒரு நல்ல மனிதன் தலைமைப் பொறுப்பையெடுக்கும் வரையும்  இப்படியான கலவரங்கள் பெருகிக் கொண்டே இருக்கும். இன்னும் ஏழு வருடங்களில் ஒரே விதமான கருத்துகளுடைய இரு மனிதர்கள் இந்த இரு நாடுகளையும் பொறுப்பெடுப்பார்கள்.
புற்றுநோய்க்குரிய தீர்வு? கடந்த வருடத்தில் அது ஆரம்பமாகி விட்டது. இன்னும் ஏழு வருடங்களில் வைரஸ் தான் அதைத் தூண்டுவதாயினும் மனிதனின் மனப்பான்மைகளும் உணர்வுகளும் கான்ஸர் கட்டிகள் உருவாக்குவதிற் பெரும் பங்கு வகிக்கின்றன என்ற உண்மையானது உலகிற்குத் தெரியவரும். ஜேர்மனியில் இருந்து கூடிய விரைவில் இது சம்பந்தமான செய்தியை எதிர்பார்க்கலாம்.
பருவநிலைமாற்றங்கள்? தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கும் புகைமண்டலங்களும் மாசுக்களும் சூரியசந்திரர்களுக்கும் பூமிக்குமிடையில் ஒரு புகைத்திரையைத் தோற்றுவிப்பதன் மூலம் காலநிலை மாற்றங்கள் வரக்கூடும். இந்நூற்றாண்டின் இறுதித் தசாப்தம் வரையில் உஷ்ணப்பிரதேசங்கள் உஷ்ணமாகவும் குளிர்ப்பிரதேசங்கள் குளிராகவுமிருக்கும். சுழற்சியச்சின் ஒரு பாரிய பெயர்ச்சியானது காலநிலையிற் பெரியதொரு மாற்றத்தைக் கொண்டு வரும். அப்போது பூமியின் பசுமையான இடங்களை அடையாளம் காண்பது மிகக் கடினமாக இருக்கும். இந்த இடப்பெயர்ச்சியிலிருந்து பலர் பிழைக்க மாட்டார்கள். சிலர் தான் தப்பிப் பிழைப்பார்கள். கடற் கொந்தளிப்புகளும் பயங்கரமான காற்றழுத்தங்களும் சிறிது காலத்துக்கு இடம் பெற்றுப் பின் அனைத்தும் அடங்கி அமைதி பெறும். அப்போது வடக்கிலிருப்பவர்கள் வெப்பவலையத்திலும் மற்றவர்கள் நேர்மாறாகவும் வசிப்பார்கள். 2000 ஆண்டுக்கு முன் இது நடைபெறும்.
இந்த இடப்பெயர்ச்சியானது பூவுலகிற்கும் அதில் உயிர் வாழ்பவர்களுக்கும் நன்மை பயக்குமா அல்லது தீமையானதா? இரு விதமாகவும் சொல்லலாம். ஆரம்பத்திலேற்படும் திகிலூட்டக்கூடிய நிகழ்ச்சிகளுக்குப் பின்னர் சிலர் தங்களது பழைய முயற்சிகளான பேரழிவுகளிற்  தாங்கள் லாபம் பெறுவதற்குரிய வழிகளைக் கண்டறியும் முயற்சிகளில் ஈடுபடுவார்கள். அதே நேரத்தில் சிலர் பேரழிவுகளினாற் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி அவர்களது துன்பங்களைக் குறைக்க முயல்வார்கள். உதவும் கரங்களுமுண்டு. அதே நேரத்திற் திருடும் கரங்களுமுண்டு.
இவையெல்லாம் நடக்கப் போவது உறுதியெனில் ஏன் நாம் சுற்றுச் சூழற் பாதுகாப்பையும் எமது வாழ்வியல்களையும் பற்றி யோசிக்க வேண்டும்? எதிர்காலத்துக்கு உதவக்கூடிய விடயங்களை நாம் அறிந்து கொள்ளலாமே? மீண்டும் மீண்டும் அந்தத் தவறுகளைச் செய்யாமல் அதே வேளையில் பல லட்சக்கணக்கான மக்கள் அசுத்தக் காற்றையும் படு மோசமான புகைகளையுமே சுவாசிக்கிறார்கள். சிறு குழந்தைகள் பிறக்கையிலேயே என்ன பாவம் செய்தன? மீண்டும் பிறக்கும் அந்த ஆத்மாக்கள் ஒரு தவறும் செய்யாமலேயே சுவாசிக்கும் காற்று உயிர் வாழ்வதற்கு இயலாதவாறு அசுத்தமாகிப் போவதற்கு என்ன பாவம் செய்தன?
கலிஃபோர்னியாவும் மான்ஹட்டனும் (Manhattan) இந்த நூற்றாண்டு முடிவதற்குள் கடலுள் அமிழ்ந்து விடுமா? இந்த எரிமலை வெடிப்பானது தள்ளிப்போயுள்ளது. கூடிய சீக்கிரத்தில் அது எட்கர் கேஸி (Edgar Cayce) கூறியவாறு நடைபெறவுள்ளது. கடற்கரைப் பகுதிகளைத் தவிர மெக்ஸிகோ அதிக பாதிப்புக்குள்ளாகாது. ஆபத்தில் முதலிடத்தில் நிற்பது கலிஃபோர்னியாவிலுள்ள ஸான் அண்ட்ரியாஸ் ஃபோல்ட் (San Andreas Fault) தான். அது பிளவுற்றுக் கடலினுள் அமிழும். மான்ஹட்டன் சற்றுப் பின்னரே இதனது எதிர் விளைவாக நடைபெறும்.
மனிதன் எந்த அமைதிக்கும் சமாதானத்துக்குமாகப் பாடுபடுகின்றானோ அந்த சமாதானமானது இந்த நூற்றாண்டு கடந்தும் சிறிது காலம் வரையும் அவன் கைகளுக்குள் பிடிபடாமல் நழுவிக் கொண்டேயிருக்கும். பின்னர் சடுதியாகத் துப்பாக்கிப் போர்கள் நிறுத்தப்பட்டுச் சமாதானமானது உருவாகும். இச் சமாதானமானது ஒரு தனி மனிதனால் உருவாக்கப்பட மாட்டாது. சமாதான விரும்பிகள் ஒரு இனமாகப் பெருமளவிற் பிறப்பெடுத்து உலக அரசாங்கங்களைக் கட்டுப்படுத்தக் கூடிய அளவு வல்லமை பெறுவதன் மூலமே இக்கொலைகள் சடுதியாக நிறுத்தப்பட்டு சமாதானமானது உருவாக்கப்படும். பல நூறாண்டுகளாக நடைபெறும் இப்போர்களினால் அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்கள் தான் இப்படிப் பிறப்பெடுப்பவர்களாகும். முன்னர் அவர்கள் தாங்கள் பாதிப்படைந்ததன் காரணத்தினால் மென்மேலும் உயிர்த்தியாகங்களைச் செய்து கொண்டிருக்க விரும்பியிருந்தார்கள். ஆனால் அதன் காரணத்தினால் இப்புவி முழுவதுமே தொடர்ச்சியான கொலைகளில் அமிழ்ந்து போயிருப்பதை இந்நூற்றாண்டில் கண்கூடாகக் கண்டதன் காரணத்தினால் அவர்கள் சமாதானத்தை நிலை நாட்டுவதற்காகப் புவியிற் பிறப்பதாக முடிவெடுத்துள்ளார்கள்.
இந்த மகிழ்ச்சியான செய்தியுடன் ஆர்தர் ஃபோர்ட் தனது எதிர்வு கூறலை நிறைவு செய்து கொண்டார்.

Tuesday, February 24, 2015

முடிவுரை (Epilogue)

இப்புத்தகத்துக்கான விடயங்கள் அனைத்தும் 1971 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4 ஆம் திகதியிலிருந்து மே மாதம் 7 ஆம் திகதிக்கு இடைப்பட்ட நான்கு மாத காலத்திலேயே பெறப்பட்டது. இறுதிக் கட்ட அமர்வுகளின் போது ஒரு நாள் நான் ஆர்தர் ஃபோர்டை, "இப்புத்தகமானது வெளியிடப்படும் வரையிலாவது, நான் வாசகர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்காக அவருடனான தொடர்பை நான் தொடரலாமா" எனக் கேட்டேன். அதற்கு அவர், "நான் வெகு தொலைவிலில்லை. அத்துடன் 'லிலி' மூலமாக நீ என்னை எப்போதும் அணுகவியலும். கவலைப்படாதே. நான் நீ கூப்பிடும் தொலைவிலேயே உள்ளேன். அத்துடன் நான் உன்னை விட்டு வேறொரு இடத்துக்கும் சென்று விடவில்லை. வேறொரு தளத்தினில் நான் வேலை செய்து கொண்டிருக்கிறேன். அவ்வளவு தான்" என்றார்.
மே மாதத்தில் எமது கடைசி அமர்வின் போது ஆர்தர், "எமது வேலையானது முடிவடையும் தறுவாயில் உள்ளது. இது எமக்கு மகிழ்ச்சியாக உள்ளது. எம்மில் நீ வைத்த நம்பிக்கையும் மகிழ்ச்சியைத் தருகின்றது. நான் இனி எனது அடுத்த கடமைகளுக்குச் செல்லலாம். லிலியின் சேவையும் இனி அவசியமில்லை. ஆனால் இந்த நேரத்தில் (அதாவது காலை 8:30 மணிக்கு) உனக்கு எம்மிடமிருந்து செய்தியேதும் தேவைப்படின் எமது குழுவைச் சேர்ந்தவர்களின் பாதுகாப்பானது தவறாமற் கிடைக்கும். மிக அவசியமேற்படின் லிலியும் உதவிக்கு வருவார். தன்னிச்சையான எழுத்தை நீ ஆரம்பிப்பதற்கு முன் உன்னைத் தியானம் செய்யும் படியும் அத்துடன் எப்போதும் போல பாதுகாப்புக்கான கவசத்தை வேண்டும் படியும் நாம் உன்னைப் பணித்திருந்தோம். இனி நீ அப்படிச் செய்யத் தேவையில்லை. இப்பொழுது உனக்குச் சற்று ஓய்வு தேவை. நல்லவளாக இரு ரூத். அத்துடன் இப்புத்தகத்தில் உரைத்தவாறு நடந்து கொள். எமது எல்லோரது அன்பும் உன்னுடன் தான் - ஆர்ட், லிலி, மற்றும் குழுவினர். இறைவனுடன் செல். ஆமென்."
இன்னொரு பிரிவின் துயர். ஆனால் அவரின் மரணச் செய்தியை அறிந்த போதில் இருந்த தனிமையுணர்வில்லை. ஏனெனில் அவர் உயர் உணர்வு நிலைகளில் மிகவும் மகிழ்வாகத் தன்னை வேலைகளில் ஈடுபடுத்திக் கொண்டுள்ளார் என்பது எனக்கு இப்போ நன்கு தெரியும். நாம் மீண்டும் சந்திப்போம். அதே சமயத்தில் எனக்கும் இங்கே வேலைகள் உள்ளன. நான் இப்போ முடிக்கப் போகும் பணியானது உண்மையிலேயே மனதுக்கு மிகவும் இதமானதாக இருப்பதை மறுக்க முடியாது. எனது கையெழுத்துப் பிரதியை நான் வழமை போல ஆரம்பித்தேன். அதாவது அத்தியாயங்களை ஓரளவு சுமாராக எழுதிப் பின்னர் இறுதி வடிவம் பெறுவதற்கு முன் அவற்றைச் சீர் செய்வது. ஆனால் ஆர்தர் ஃபோர்ட்டின் வசனங்களுக்கு அதிகம் திருத்தம் தேவையில்லை என்பதை நான் வெகு விரைவிற் புரிந்து கொண்டேன். எனவே புத்தகத்தின் மிகுதியை நான் நடுவிற் கார்பன் பேப்பர்களை வைத்துத் தரமான காகிதத்திலேயே எழுதி முடித்தேன்.
லிலி உண்மையைத் தேடி.......(A Search for the Truth) என்ற புத்தகத்துக்குரிய செய்திகளைத் தருகையில் செய்தது போலவே ஆர்தரும் ஒற்றை இடைவெளி விட்டு மஞ்சள் காகிதத்தில் நிறுத்தற் குறிகளோ முதலாக்கங்களோ (capitalization) இன்றி டைப் செய்திருந்தார். ஆனால் எல்லா வாக்கியங்களுமே பூரணமானவையாக இருந்தன. நான் அப்பிரதியில் நீக்கியவை எல்லாம் மீண்டும் மீண்டும் உரைக்கப்பட்ட எண்ணங்களும் அத்துடன் என்னையும் எனது குடும்பத்தாரையும் பற்றிய தனிப்பட்ட தகவல்களும் மட்டும் தான். ஸ்பெல்லிங் (எழுத்துக் கூட்டல்) ஆனது எப்போதும் எனக்கு ஒரு பிரச்சனையான விஷயமானதால் சந்தேகத்துக்கிடமான சொற்களின் ஸ்பெல்லிங்குகளை வெப்ஸ்ரேஸ் டிக்ஷனரியில் (Webster's Dictionary) சரி பார்ப்பதால் கணிசமான நேரத்தை நான் வீணடித்தேன். வழமை போலவே எப்போதும் அவர் சரியாகவும் நான் தவறாகவும் தானிருந்தோம். அவரின் வார்த்தைப் பிரயோகங்களும் என்னை அடிக்கடி டிக்ஷனரிக்கு (அகராதிக்குத்) தள்ளின. அவர் சிலசமயம் "torpor" (மந்தமான) என்ற சொல்லை உபயோகித்த போது நான் அதனை "stupor" (மயக்க நிலை) என்ற சொல்லைத் தான் அவர் கருதுகிறார் என நினைத்துப் பின் ஆராய்ந்த பிற்பாடு இல்லையில்லை அவர் தான் சொல்ல நினைத்ததைச் சொல்ல மிகச் சரியான வார்த்தையைத் தான் தெரிவு செய்திருக்கிறார் என்று கண்டு கொண்டிருக்கிறேன். அவர் "wont to do" என்ற சொற்றொடரை உபயோகித்திருந்தார். வெப்ஸ்டரில் (Webster) 'wont' என்பதன் அர்த்தம் accustomed (பழக்கமாகி விட்டது) என்று இருந்தது. அவரது "centrifugal" எனும் சொல் என்னைக் குழப்பி விட்டது. ஆனால் அகராதியில் அதனது அர்த்தம் "மையப்புள்ளியை விட்டு விலகிச் செல்லுதல்; வெளிநோக்கி முன்னேறல்" என்று இருந்தது. அவரது எழுத்துக்களில் அவரது ஆளுமையானது மிளிர்ந்தது. அத்துடன் அவரது நகைச்சுவைக்கும் குறைவில்லை.
அமானுஷ்யமான விடயங்களைப் பற்றிய எனது முந்தைய புத்தகங்களை வாசித்து அவற்றைப் பற்றி எனக்கு எழுதிய எனது ஆயிரம் ஆயிரமான வாசகர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னிடம் மிக அதிகமாகக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எஞ்சியுள்ள இடத்தில் எனது விடைகளை எழுதுவதன் மூலம் பலரை எனக்குக் கடிதம் எழுதும் வேலையிலிருந்து விடுவிக்கலாம் என நான் எண்ணுகிறேன். 
"தன்னிச்சையான எழுதுகை (automatic writing) ஆபத்தானதா?" அதற்கு ஆம் என்பதே பதில். அதாவது ஒருவர் மனத்தளவிலும் உடலளவிலும் சமநிலையில் இருந்தாலேயன்றி ஒரு தீய ஆவியோ அன்றி விஷமம் நிறைந்த ஆத்மாவோ தொடர்பு கொள்ளக் கூடிய வழிகளை உருவாக்காமலிருப்பது நல்லது. ஏப்ரல் மாதத்தொடக்கத்தில் நடந்த ஒரு அமர்வின் போது ஆர்தர் ஃபோர்ட் ஒரு பெண்ணைப் பற்றி, "அவள் இறையுணர்வு (Christ-centered) கொண்டவளாகவும் அதே நேரத்தில் அவளது உள்ளுணர்வானது ரட்சகனுடைய ஆணைகளுக்கு அல்லது அவளது வெளியுணர்வுகளுக்குக் கீழ்ப்படிவதாகவும் இருக்கும் வரை அவளுக்கு ஆபத்து ஒன்றுமில்லை; பூவுலகிலுள்ள ஒருவரின் செயல்களைக் கட்டுப்படுத்தும் சாதாரண மனத்தின் ஆணைகளை அவள் பின்பற்றும் வரை அவளுக்கு ஒரு ஆபத்துமில்லை. ஆனால் எப்போ அவள் தனது ஆழ்மனத்தின் வசம் எண்ணங்களின் கடிவாளங்களைக் கொடுக்கிறாளோ அக்கணத்தில் அவளுக்குக் கஷ்டகாலம் ஆரம்பமாகும். ஏனெனில் ஆழ்மனத்தில் தான் எமது நினைவுகளெல்லாம் சேமிக்கப்பட்டுள்ளன. அதனால் அந்த மனத்தை ஆட்சி செலுத்த விட்டால் அந்த ஆத்மாவின் மறக்கடிக்கப்பட்ட, மனத்தின் இருண்ட குகைகளில் சேமிக்கப்பட்ட நினைவுகளெல்லாம் வெளியில் வந்து ஒரு குழப்பநிலை உருவாகும். இந்நினைவுகள் எல்லாவற்றையும் ஒரே நேரத்திற் கட்டவிழ்த்து விடக்கூடாது. இப்படிப்பட்ட நிலையில் (அதாவது ஆழ்மனம் இவ்வாறு ஆட்சி செய்யும் நிலையில்) அந்தப் பெண் இங்கு வரும் போது இந்தச் சூழலுக்கேற்ப தன்னை மாற்றுவதற்கு நிச்சயம் கஷ்டப்படுவாள். அதாவது போதிய வழிகாட்டலோ அன்றி நியாயத் தீர்ப்போ இன்றி ஆழ்மனதிலிருக்கும் நினைவுகள் கட்டவிழ்த்து விடப்படும் போது அப்பெண் பேய் பிடித்தது போல் காணப்படுவாள்; கலிலியாவின் கடற்கரையில் யேசு கிறிஸ்து பைத்தியக்காரரைப் பேயோட்டியது உண்மையில் ஆழ்மனத்தின் கட்டுப்பாட்டை நிறுத்தி வெளி மனத்தின் கட்டுப்பாட்டை மீண்டும் கொண்டு வந்தது ஆகும். உண்மையில் ஆழ்மனதுக்கும் வெளி மனதுக்குமிடையில் ஒரு சமநிலையை உருவாக்குவதற்கு உலகில் பற்பல வருடங்களெடுக்கும். பாதுகாப்பு வலையம், நேரக்கட்டுப்பாடு, மற்றும் இடைவெளிகள் போன்ற எச்சரிக்கைகளைக் கவனிக்காமல் ஆழ்மனதுக்கு முழுச்சுதந்திரம் வழங்கும் பூமியிலிருப்பவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டும். அவர்கள் ஆழ்மனதுக்கு முழு அதிகாரமளித்தால் அது கிணறு வெட்டப் பூதம் புறப்பட்ட கதையாக முடியலாம்."
Automatic writing அதாவது 'தன்னியல்பாக எழுதும் முயற்சியில் நீ தீவிரமாக நாட்டம் கொண்டால் நான் எனது 'உண்மையைத் தேடி' என்ற நூலில் உரைத்த பாதுகாப்புக்கான வழிமுறைகளை நீ கவனமாகக்  கைக்கொள்ள வேண்டுமென்பதை நான் வலியுறுத்துகிறேன். அவற்றை மீண்டும் நான் எழுதுகிறேன்: உனது நோக்கமானது ஆத்மீக முன்னேற்றத்துக்காகத் தானேயன்றி சிறுபிள்ளைத் தனமான வேடிக்கைக்காகவல்ல என்பதை உறுதிப்படுத்திக் கொள். நீ ஆத்மீகத் தேடலுக்காக ஒவ்வொரு நாளும் முறைப்படி தியானம் செய்பவராக இருந்தாலேயன்றி இதற்கு முயற்சிக்காதே. தன்னியல்பான எழுத்து ஆரம்பிப்பதற்கு முன் எப்போதும் பாதுகாப்புக்காகப் பிரார்த்தனை செய்து கொள். அத்துடன் பதினைந்து நிமிடங்களுக்குக் கூடுதலாக ஒரு நாளும் எழுதாதே. ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்திலேயே அதாவது உன்னுடைய வழிகாட்டிகள் (guides) உனக்கு உதவக்கூடிய நேரத்திலேயே எழுதுவாயாக. எப்போதாவது தீய ஆத்மாக்கள் வருகை தந்தாலோ அன்றித் தகாத வார்த்தைகள் பிரயோகிக்கப்பட்டாலோ உடனே எழுதுவதை நிறுத்திவிடு. அதன் அர்த்தமானது நீ ஆத்ம உலகத்தொடர்புக்குத் தயாரில்லை என்பதாகும்.
"நம்பிக்கைக்குரிய ஒரு ஆவியூடகவியலாளரையோ ஒரு ஜோசியரையோ அல்லது கேஸியைப் போன்று எமது முற்பிறவிகளை உரைக்கக் கூடிய ஒருவரையோ (Cayce-type reading) தாங்கள் பரிந்துரை (recommend) செய்ய முடியமா?" மறைபொருளியல் சம்பந்தமான தொழில் செய்பவர்கள் எனக்கு வெகுவாகப் பரிச்சயமில்லாத காரணத்தால் என்னால் ஒருவரையும் பரிந்துரை செய்ய இயலவில்லை.
"'உண்மையைத்தேடி' (A Search for the Truth) என்ற நூலில் தாங்கள் எழுதியிருந்த திருவாளர் 'A' அவர்கள் (Mr. A) எனது நோயைக் குணப்படுத்த முன் வருவார்களா?" துரதிஷ்ட வசமாகத் திருவாளர் 'A' அவர்கள் அனாமதேயத்தையே (அவர் பெயரைப் பகிரங்கப்படுத்தாமல் இருப்பது) வலியுறுத்துகிறார். அதற்குக் காரணமுள்ளது. பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் என்னிடம் அவரது உதவியை நாடி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். அத்துடன் அவரது சொந்தத் தொழிலான காந்த சிகிச்சை (magnetic healing) முறையைச் சமாளிப்பதற்கே அவர் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார். எனவே அவர் யாரென்பதை என்னால் வெளிப்படுத்த வியலாது.
"நான் எவ்வாறு பாதுகாப்பாக எனது அமானுஷ்யத் திறமைகளை வளர்த்துக் கொள்ள இயலும்? அத்துடன் எனது முற்பிறவிகளைப் பற்றிய உண்மைகளையும் எவ்வாறு அறியமுடியும்?" லாபநோக்கமற்று அமெரிக்காவிலும் கனடாவிலும் இயங்கும் இரு சங்கங்களைப் பற்றி நான் அறிவேன். அவை இரு நாடுகளிலுமுள்ள பல்வேறு நகரங்களிற் சத்சங்கங்கள் (study groups) நடத்தி வருகின்றன. இவற்றில் சேர்வதற்கு அநேகமாகக் கட்டணமேதுமில்லை. 800, Custer Avenue, Evanston, Illinois 60202 என்கின்ற விலாசத்துக்கோ அல்லது Association for Research and Enlightenment, P.O. Box 595, Virginia Beach, Virginia 23451 எனும் விலாசத்துக்கோ தொடர்பு கொள்ளவும். அவர்களிடம் நீங்கள் அங்கத்தினராவதைப் பற்றியோ அல்லது உங்கள் நகரத்திற் கிளைகள் திறப்பதைப் பற்றியோ அறிந்து கொள்ளலாம். இதில் முதலாவதாக எழுதிய சங்கத்தைத் திறப்பதற்கு ஆர்தர் ஃபோர்டே உதவிகள் செய்திருக்கிறார். எப்போதும் ஒற்றுமையே பாதுகாப்பு என்பதால் யாராவது இருவரோ அல்லது மூவரோ சேர்ந்து தியானம் செய்தாலே போதுமானது. இவ்விரு சங்கங்களிலுமே அமானுஷ்ய விடயங்களடங்கிய நூல்களைக் கொண்ட நூலகங்களுள்ளன. அங்கத்தினர் அஞ்சல் மூலம் நூல்களைப் பெறலாம். 
"தங்கள் வழிகாட்டிகளிடம் தாங்கள் எனக்காக ஒரு கேள்வி கேட்க இயலுமா?" இல்லை ஏனெனில் தங்களுக்குரிய பணி இதுவல்ல என லிலி உறுதியாகச் சொல்லிவிட்டார், அத்துடன் ஆர்தர் ஃபோர்ட்டும் இப்போது வேறு பணிகளுக்கு மாறி விட்டிருக்கிறார். 
எமது ஆத்மீகத் தகைமைகளைத் தியானம், பிரார்த்தனை மற்றும் பிறர்க்கு உதவுதல் போன்ற செய்கைகளின் மூலம் நாமே தான் வளர்த்துக் கொள்ள வேண்டும். வேறொருவர் எமது பாதையைச் செப்பனிட இயலாது. எமக்குரிய வழியை நாமே தான் கண்டறிய வேண்டும். அத்துடன் வாழ்வில் எமக்கேற்படும் இன்னல்களும் துயரங்களும் எம்மை இன்னும் திடசாலிகளாக்கவே வருகின்றன என்பதை நினைவிற் கொள்ள வேண்டும். எப்போதும் எம்மை யாராவது முன்னோக்கி உந்தித் தள்ளிக் கொண்டே இருப்பார்களென எதிர்பார்க்க இயலாது.