இது 'A World Beyond' என்ற ஆங்கில நூலின் மொழிபெயர்ப்பாகும். இந்நூலை எழுதியவர் ரூத் மோன்கொமெரி (Ruth Montgomery) எனும் ஒரு பெண்மணியாகும். மனிதருக்குள் மேலுலக ஆத்மாக்கள் வந்து பேசுவதைப் போன்று மேற்குலகில் 'Automatic Writing' என ஒரு விடயமுள்ளது. அதாவது ஆத்மாக்கள் எங்கள் மூலமாக வந்து சில விடயங்களை எம்மைக் கொண்டு எழுதச் செய்வது என்பதாகும். இந்நூலானது அப்படியாகத்தான் எழுதப்பட்டது. 'ஆர்தர் ஃபோர்ட்' என்று இந்நூலாசிரியைக்குத் தந்தையைப் போலிருந்த ஒருவர் மேலுலகம் சென்ற பிற்பாடு அவர் மூலமாக எழுதப்பட்டது இந்நூலாகும்.

Friday, March 12, 2021

இரண்டாவது அத்தியாயம்: ஆர்தர் ஃபோர்டின் வாழ்க்கைச் சரிதம் (The Arthur Ford Saga)




ஆர்தர் ஃபோர்ட் அமெரிக்காவின் மிகப்பிரபலம் வாய்ந்த ஆவியூடகவியலாளராக (medium) இருக்கையில் அவருக்குக் கடுமையான இருதயநோய் வந்து இறந்தார். அவர் நன்கு படித்தவர். பல நூல் கற்றவர். பண்புள்ளவர். நகைச்சுவையாகப் பேசுபவர். அவரின் குறும்புத்தனமான, நையாண்டித்தனமான பேச்சுகளினால் அவரைச் சுற்றி இருப்பவர்கள் எப்போதுமே மகிழ்ச்சியாகக் காணப்படுவர். அவர் சுய நினைவுடன் இருக்கையிலும் அவருள் 'ஆத்மா' வந்து பேசுகையிலும் அனைவரையும் அவர் கவரக்கூடியவர். அவரது 50 ஆண்டு கால 'ஆவியூடகவியலில்' அவர் சக்தி வாய்ந்த வலிமையான ஆத்மாக்கள், சக்தி குறைந்த சாதாரண ஆத்மாக்கள் எல்லாவற்றுக்கும் ஒரேவிதமாக, வேறுபாடின்றி ஊடகமாகச் செயற்பட்டிருக்கிறார். அவர் இன வேறுபாடு பார்ப்பவரல்ல. கடுமையான இருதய நோயிலிருந்து அப்போது தான் அவர் மீண்டு கொண்டிருந்த போதும்  மார்டின் லூதர் கிங் வாஷிங்டனில் நடாத்திய முதலாவது நடைபவனியில் ஏனைய மதகுருமார்களுடன் தானும் சென்று பங்கு பற்றினார். ஏனெனில் அவருக்கு மனித உரிமைகளில் அவ்வளவு நம்பிக்கை இருந்தது. 
அவர் மிகுந்த ஞானதிருஷ்டி உள்ளவர். அத்துடன் ஒருவர் உபயோகித்த பொருட்களை வைத்து அவரைப் பற்றிய முழு விபரங்களையும் சொல்லக்கூடிய வல்லமையுள்ளவர். அவர் நேரடி ஆவியூடகமாகச் செயற்படவில்லை. ஆனால் முழு விழிப்பு நிலையிலேயே இறந்தவர்களிடம் இருந்து விபரங்களை அறியும் ஆற்றல் கொண்டிருந்தார். அவருள் ஃபிளெச்சர் (Fletcher) என்கிற ஆத்மாவே வந்து அவர் மூலம் இறந்த ஆத்மாக்களைத் தொடர்பு கொள்ளும். இறந்த ஆத்மாக்கள் நேரடியாகக் குழல் கருவி மூலம் (trumpet) பேசுவது போல் பேசுவதில்லை. எனவே அவர் முழு வெளிச்சத்திலும் ஒரு கறுப்புத் துணியைத் தன் கண்களைச் சுற்றிக் கட்டிவிட்டு அரைத் தூக்க நிலைக்குச் (trance sleep) சென்று குறி சொல்வார்.
நேரடி ஆவியூடகமாகத் தொழிற்படுபவர்கள் முழு இருட்டில் தான் இயங்க முடியுமென்பர். வெளிச்சத்தில் ஆவிகளின் குழல் கருவிகள் (trumpet) இயங்காது என்பர். அவர்கள் சொல்வது சரியாகவும் இருக்கலாம். ஆனாலும் அப்படிச் செய்வது துரதிஷ்டவசமாக நம்பகத்தன்மையைக் குறைத்துக் காட்டும். ஆனால் ஃபோர்ட் (Ford) ஊடகமாகத் தொழிற்படும் போது நாம் எப்போதும் குறிப்புகள் எடுக்கலாம். டேப்ரிகார்டரிலும் பதிவு செய்யலாம்.
ஃபோர்ட் அடக்கமானவர். அமரிக்கையானவர். மறு உலகுக்கும் இவ்வுலகுக்கும் இடையே ஊடகமாகத் தொழிற்படக்கூடிய அவருக்குக் கிடைத்த அந்த வரப்பிரசாதத்தையே பெரிய பாரமாகக் கருதுபவர். ஆனால் இப்பிறவியை எடுத்ததற்கான காரணமே இப்படி ஊடகமாகத் தொழிற்படுவதற்குத் தானென நம்புபவர். எனவே அவர் வருந்தி ஒரு போதும் நான் கண்டதில்லை.
அவரது சொந்த மாநிலமான ஃப்ளோரிடாவில் (Florida) இருக்கும் டைட்டஸ்வில் (Titusville) என்ற இடத்தில் அவர் சிறுவனாயிருந்த போது அவரது குடும்பத்தின் பொது உலகத்தொடர்புகள் அனைத்தும் கிறிஸ்தவக் கோயிலைச் சார்ந்தே இருந்தன. அவரது தாயாரின் பக்கம் பல தலைமுறைகளாக ஸதேர்ன் பப்டிஸ்ட் (Southern Baptist) என்ற கிறிஸ்தவ மதத்தின் ஒரு பிரிவினைச் சார்ந்தவர்களாகவே இருந்து வந்துள்ளனர். ஆர்தர் காலை மாலைப் பூசைகளுக்குத் தவறாமற் செல்வதாலும் அங்கேயிருந்த சிறுவர்களுக்கான சங்கத்தில் முழுமையாக ஈடுபட்டதாலும் அவர் ஒரு பாதிரியாராக வருவாரென அவரது அன்னை நம்பியிருந்தார். அன்னை பப்டிஸ்ட் மதத்திலேயே இறுதிவரைக்கும் இருந்தார். ஆனால் ஆர்தர் யூனிடேரியன் சர்ச் (Unitarian Church) என்னும் சபையினால் வெளியிடப்பட்ட நூல்களைப் படித்துப் புரட்சிகரமாகச் சிந்திக்கத் தொடங்கினார். சமயக் கொள்கைகளுக்கு மாறான கருத்துகளைக் கொண்டதனால் அவரது சர்ச்சிலிருந்து அவர் விலக்கப்பட்டார். ட்ரான்ஸ்லவேனியாப் பல்கலைக்கழகத்துக்கு (Transylvania University) அவருக்கு ஸ்கொலர்ஷிப் (scholarship) கிடைத்தது. முதலாம் உலகப்போர் முடிந்ததும் டிசைப்பில்ஸ் ஒவ் க்ரைஸ்ட் சர்ச் (Disciples of Christ Church) என்ற சபையில் பாதிரியாரானார். எப்போ அவர் தனக்கு மறு உலகத்துடன் தொடர்பு கொள்ள முடியுமென்பதைக் கண்டு கொண்டாரோ அன்றிலிருந்து அந்த வல்லமையை அவர் பொது நலனுக்காக உபயோகிக்கத் தொடங்கினார். அதன்பின் தனது வாழ்வின் பெரும் பகுதியை அவர் தன்னுடன் இருந்த பாதிரிமார்களின் அறியாமையைப் போக்குவதற்கே செலவழித்தார். அதாவது ஐம்புலன்களின் அறிவுக்கு அப்பால் தொடரும் வாழ்வின் நிலைகளைப் புரிய வைக்க முயன்றார்.
ஆர்தர் ஃபோர்ட் அமெரிக்காவின் கென்ரக்கி என்ற மாநிலத்திலுள்ள லெக்ஸிங்டன் நகரில் இருக்கும் ட்ரான்ஸ்லவேனியாப் பல்கலைக்கழகத்தில் பாதிரியார் ஆவதற்குப் பயின்று கொண்டிருக்கையில் முதலாம் உலகப் போர் ஆரம்பித்தது. 90 நாட்கள் பயிற்சி பெற்ற பின் அவர் இரண்டாம் லெப்டினன்டாக காம்ப் க்ராண்ட் (Camp Grant) எனும் இராணுவ முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் தன்னம்பிக்கை கொண்டதொரு இளம் ஆபீசராக வேலை செய்தார். அப்போ தான் அந்நிகழ்ச்சி நடந்தது. ஒரு நாள் அவருக்கு ஒரு விசித்திரமான கனவு வந்து பதறி எழுந்தார். இன்ஃப்ளுவன்ஸா (influenza) என்ற நோயால் அன்று இரவு இறந்தவர்களின் பட்டியலில் அந்தக் காம்பில் உள்ளவர்களின் பெயர்கள் இருக்கக் கண்டார். உண்மையான பட்டியலைப் பார்த்தால் மனதுக்குச் சற்று ஆறுதலாக இருக்குமென எண்ணிப் போய்ப் பட்டியலைப் பார்த்தார். அதில் அதே பெயர்கள் கனவில் வந்த அதே வரிசையில் இருக்கக் கண்டார். அடுத்து வந்த இரு நாட்களும் இதே விதமாகத் தொடர்ந்து நிகழ்ந்தது. சிலர் அவரைச் சந்தேகித்ததால் அவர் எழுந்த உடனேயே கனவைச் சொல்லி விடுவார். அதன் படியே நிகழ்ந்திருக்கும். அதன் பின்னர் கடல் கடந்து போரிட்டுக் கொண்டிருந்த ரெயின்போ (Rainbow) பிரிவில் இறந்தவர்களின் பெயர்களும் கனவில் வரத்தொடங்கின. அதேவிதமாகவே தினம் தினம் பத்திரிகைகளிலும் பெயர்கள் வந்து கொண்டிருந்தன.
உலகப்போர் முடிவடைந்ததும் அவர் ட்ரான்ஸ்லவேனியாவுக்குத் திரும்பினார். அவரைக் குழப்பிய கனவுகளும் அத்துடன் நின்று விட்டிருந்தன. அந்தக் கனவுகளால் அவர் தனக்குப்  பித்துப் பிடித்து விட்டதோ எனவும் பயந்திருந்தார். பேராசிரியரும் உளவியல் பயிற்சியாளருமான 'எல்மர் ஸ்நொடி' என்பவர் ஆர்தருக்குப் பொது அறிவுக்கப்பாற்பட்ட விடயங்களைப் பற்றிய புத்தகங்களை அறிமுகம் செய்து வைத்தார். அப்புத்தகங்களில் இருந்து தான் அவர் தனக்கு ஏற்பட்டதைப் போன்ற அனுபவங்கள் வேறு பலருக்கும் ஏற்பட்டுள்ளன என்பதனை அறிந்து கொண்டார். அவர்களுள் ஜோன் வெஸ்லி, மார்ட்டின் லூதர், இமானுவேல் ஸ்வீடன் போர்க், டுலைட் மோடி, பல கத்தோலிக்கத் துறவிகள் என்போரும் அடங்குவர். இச்செய்திகள் அவருக்குச் சற்றே ஆறுதலைத் தந்தன. அவர் சில பேராசிரியர்களுடனும் சில துறவிகளுடனும் சேர்ந்து இத்துறையில் (அமானுஷ்ய) சில ஆராய்ச்சிகளைச் செய்தார். இத்துறையில் அவர் மிகவும் ஆர்வமுடையவராக இருந்ததனால் நியூயோர்க்கில் இத்துறையிலான ஆராய்ச்சிகள் செய்யும் சங்கத்தைப் (American Society for Psychical Research) பற்றிய முழு விபரங்களையும் பார்வையிடச் சென்றார். அவர் கென்டக்கி, பார்போர்வில்லில் (Barbourville, Kentucky) இருக்கும் சர்ச்சில் பாதிரியாராக இருக்கையிலும் இத்துறையில் ஆய்வுகளை மேற்கொண்டார். இரண்டாமாண்டு பாதிரியார் சேவையின் போது ஸ்வாத்மொர் ஷாத்தகுவா (Swarthmore Chautauqua) சங்கத்தின் ஸ்தாபகரும் தலைவருமான டாக்டர் பால் பியர்சன் (Dr Paul Pearson) என்பவரைச் சந்தித்தார். அவர் ஆர்தர் ஃபோர்டைத் தனது சங்கத்தில் பொது அறிவுக்கு அப்பாற்பட்ட விஷயங்களைப் பேசும் பேச்சாளராகச் சேரத்தூண்டினார்.
அவர் இலையுதிர் காலத்தில் (autumn season) மீண்டும் பாதிரிச் சேவைக்குத் திரும்புவதாக இருந்தது. ஆனால் அது நடக்கவில்லை. அப்போது இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு வந்து பேருரைகள் நிகழ்த்திக் கொண்டிருந்த சுவாமி யோகானந்தா என்ற துறவியின் சிஷ்யனாகச் சிறிது நாட்கள் பயின்று கொண்டிருந்தார். அது சுவாமி யோகானந்தா தனது சித்திகளால் நியூயோர்க்கிலும் லண்டனிலும் பிரபலமாகிக் கொண்டிருந்த நேரம். 1924 ஆம் ஆண்டு ஃபிளெச்சர் (Fletcher) என்கிற ஆத்மா ஆர்தருக்குள் வந்து இறந்தவர்களுக்கும் இருப்பவர்களுக்குமிடையில் தொடர்புகளை ஏற்படுத்தியது. சேர் ஆர்தர் கோனான் டொயில் என்பவர் ஆர்தர் ஃபோர்டை இறந்தவர்களுக்கும் உயிரோடிருப்பவர்களுக்குமிடையில் ஊடகமாகத் தொழிற்படும்படி தூண்டினார். பாதிரிமார்களும் ஆவியுலக ஊடகர்களும் (mediums) இறைவனின் விருப்பத்தையே பூர்த்தி செய்வதாக அந்த 'ஷெர்லொக் ஹோம்ஸின்' ஆசிரியர் நம்பினார். மீடியமாகத் தொழிற்படுபவர்கள் மிகக்குறைவாகவே இருப்பதாலும் ஆர்தரை இத்தொழிலையே செய்யும்படி அவர் தூண்டினார்.
1928 ஆம் ஆண்டில் காலம் சென்ற ஹௌடினி (Houdini) எனும் பிரபலமிக்க மந்திரவாதியின் 'இரகசியச் சொல்லை' (code) ஆர்தர் கண்டு பிடித்தார். இறந்து போன அம்மந்திரவாதி ஆர்தருக்குள் வந்து தனது மனைவி பியட்ரிஸ் ஹௌடினிக்கு அச்சொல்லைச் சொல்லியது. ஆர்தர் பொய் சொல்வதாகப் பலரும் நம்பினர். ஆனால் (ஆர்தரால் உரைக்கப்பட்ட) அச்சொல்லானது தனக்கும் இறந்து போன தனது கணவருக்கும் மட்டுமே தெரியுமென அம்மந்திரவாதியின் மனைவி ஏற்றுக்கொண்டு அதனை எழுதிக் கொடுத்தார். ஆர்தரது ஆவியூடகச் செயற்பாட்டின் நம்பகத்தன்மையை அந்நாட்களில் பிரபலமாயிருந்த பலரும் மீண்டும் மீண்டும் பரிசோதித்து நிரூபித்திருந்தனர். அவர்களுள் பிரபல ஆங்கில வைத்தியர் சேர் ஒலிவர் லொட்ஜ், ஹார்வோட் பல்கலைக்கழகத்தின் உளவியல் துறைப் பேராசிரியர் வில்லியம் மக்டௌகால், நாவலாசிரியர்கள் உப்ரன் சென்க்ளையர் (Upton Sinclair), ஜாக் லண்டன், ஜெரால்ட் ஹெர்ட், ஹியூ வால்போல், அத்துடன் சேர் ஆர்தர் கோனான் டொயில், YMCA வின் உலகப் பொதுச்செயலாளர் டாக்டர் ஷேர்வூட் எடி (Sherwood Eddy), அத்துடன் பற்பல எழுத்தாளர்கள், கலைஞர்கள், செனட்டர்கள், காங்கிரஸ் உறுப்பினர்கள், வெள்ளை மாளிகையில் உள்ளவர்களும், அத்துடன் ஐரோப்பியாவின் அறிஞர்களும் அடங்குவர். மூன்று கண்டங்களில் அவரது விரிவுரைகள் நடந்து கொண்டிருந்தன. அவரது புகழ் உச்சக்கட்டத்தில் இருக்கும் போது தான் அவருக்கு அந்த விபத்து ஏற்பட்டது. சௌத் கரோலைனாவிலிருந்து நியூயோர்க்குக்கு காரில் வந்து கொண்டிருந்த போது நோர்த் கரோலைனா லைனுக்குக் கிட்டே அவரது கார் புகையிலை ஏற்றி வந்த ட்ரக் வண்டியுடன் மோதியதில் கூட இருந்த அவரது சகோதரியும் சிநேகிதனும் கொல்லப்பட்டார்கள். ஆர்தரும் மிகுந்த உட்காயங்களுடன் இறக்கும் தருவாயில் இருந்தார். காயங்களினால் ஏற்பட்ட நோவிலிருந்து விடுவிக்கும் முகமாக டாக்டர் அவருக்கு வல்லமை வாய்ந்த மயக்க மருந்துகளைத் தந்து அவரது இறுதி நாட்களை அமைதியாகக் கழிக்கும்படி செய்திருந்தார். துரதிஷ்டவசமாக அவருக்கு வைத்தியம் பார்த்த டாக்டருக்கு அவரது நலனிலும் பார்க்க அவரது அதீத சக்திகளில் கூடுதல் நாட்டமிருந்தது. அரை மயக்க நிலையிலிருந்த ஆர்தர் அந்தச் சிறிய வைத்தியசாலைக்கு வந்த நோயாளிகளின் நோய்களை இலகுவில் கண்டுபிடித்தார். இதனைக் கண்ட அந்த டாக்டர் ஆர்தருக்குத் தொடர்ந்து மயக்க மருந்துகளை (Morphine) கொடுத்து அவரை எந்த நேரமும் மயக்க நிலையிலேயே வைத்திருந்தார். அவரது காயங்களெல்லாம் ஆறியும் கூட இந்த நிலை தொடர்ந்தது.
ஆர்தருக்கு மயக்க மருந்துப் பழக்கம் தவிர்க்க இயலாததாக இருந்ததையும் (Drug addiction) அந்த டாக்டரின் செயலையும் அறிந்த வேறொரு டாக்டர் ஆர்தரை அந்த ஆஸ்பத்திரியிலிருந்து வெளியேற்றி நியூயோர்க்குக்கு அனுப்பி வைத்தார். இருப்பினும் ஆர்தரால் அந்த மருந்துப் பழக்கத்தை விட முடியாமலும் மருந்து எடுக்காவிடின் பைத்தியம் பிடிக்கும் போலவும் (withdrawal phase) சங்கடப்பட்டார். இதிலிருந்து விடுபட அவரது டாக்டர் நண்பர் ஒருவர் மதுவை நாடும்படி ஆலோசனை வழங்கினார். மதுவானது நாடி நரம்புகளை நேராக்கி நித்திரை வரச்செய்யும் என்பது அந்த டாக்டரின் எண்ணம். ஆர்தர் அதற்கு முன்பு ஒருநாளும் மது அருந்தியதில்லை. நண்பனின் ஆலோசனையின் படி இந்த மருந்துப் (drug) பழக்கத்தைப்  போக்குவதற்காக மது அருந்தத் தொடங்கினார். அதற்கு முன்னர் அவர் எப்போதுமே மது அருந்தாமலிருந்தும் கூடக் குடிக்கத் தொடங்கியதும் பழைய குடிகாரர்கள் போல எவ்வளவு குடித்தாலும் தாங்கும் வல்லமையிருந்தது. ஒரு போத்தலிலும் கூட ஸ்காச் (scotch) குடித்தால் தான் அவருக்கு அதன் விளைவு தெரியும். நித்திரையும் அதன் பின்னர் தான் வரும். அடுத்து வந்த இருபது வருடங்களுக்கு அவர் மதுப்பழக்கத்துடன் போராடினார். உலகெங்கிலும் பற்பல நாடுகளுக்குச் சென்று பற்பல மேடைகளில் பேருரைகள் நிகழ்த்திக் கொண்டிருந்த போதும் கூட அவர் இக் குடிப்பழக்கத்துடன் போராடிக் கொண்டேயிருந்தார். அவர் இப்போ மோர்ஃபின் (Morphine) என்ற மருந்துப் பழக்கத்திலிருந்து குடிப்பழக்கத்துக்கு மாறி விட்டார். அவர் இப்பழக்கத்திலிருந்து விடுபடுவதற்காகப் பற்பல வழிகளைக் கையாண்டார். ஆனால் அவரால் இப்பழக்கத்திலிருந்து விடுபட முடியவில்லை. விரக்தியடைந்த அவர் அல்கஹொலிக்ஸ் அனோனிமஸ் என்ற குடிப்பழக்கத்திலிருந்து விடுபட உதவும் சங்கத்தில் சேர்ந்து தன்னை ஒருவாறு இப்பழக்கத்திலிருந்து விடுவித்துக் கொண்டார். என்னதான் அவர் குடிபோதையில் இருந்தாலும் 'மறு உலகத்துடன் தொடர்பு கொள்ளும்' தன்மைகளும் அப்படியே தானிருந்தன. இங்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பலரைத் தனது சித்திகளால் ஆச்சரியத்திலாழ்த்தினார் அவர்.
அவர் இவ்வளவு உலகப் புகழ் பெற்றிருந்தும் கூட 1956 ஆம் ஆண்டு வரை ஆர்தர் ஃபோர்டைப் பற்றி நான் அறிந்திருக்கவில்லை. இண்டர்நேஷனல் நியூஸ் சர்வீஸ் (International News Service) என்ற பத்திரிகையில் பொது அறிவுக்கப்பாற்பட்ட சித்திகளை (psychic phenomena) ஆராய்ந்து நான் ஒரு தொடர் எழுதவிருந்தேன். அதற்காக அங்கேயிருந்த நூலகத்துக்குச் சென்று ஆராய்ந்து கொண்டிருந்தேன். அங்கேயிருந்த நூல்கள் எல்லாமே ஆர்தர் ஃபோர்டையே மேற்கோள் காட்டியிருந்தன. நிரூபிக்கப்பட்ட அவரது ஆவியுலகத் தொடர்புகளைப் பற்றிப் பற்பல எழுத்தாளர்கள் தங்களது நேரடி அனுபவங்களை விபரித்திருந்தனர். அப்போது நான் ஆவியுலகத்துடன் தொடர்பு கொள்வது பற்றிய நம்பிக்கை இல்லாதவளாக இருந்தும் கூட எனக்கு அவை ஆவலைத் தூண்டின. சில வருடங்களின் பின் வாஷிங்டனிலிருக்கும் சுவீடன்போர்ஜியன் சர்ச்சுக்கு (Swedenborgian church) அவர் உரையாற்ற வருவதாக அறிந்து அங்கு சென்று அவரின் உரையைக் கேட்டேன். பின்னர் அவரை நேரே சந்தித்துப் பேட்டி கண்டேன். நான் அப்போது எழுதிக் கொண்டிருந்த தொடருக்கு அது மிகவும் தேவையாக இருந்தது.
எங்களது பேட்டியின் போது முக்கியமாகப் பேசப்பட்ட விஷயம் என்னவெனில் ஆர்தரும் வேறு சிலரும் சேர்ந்து புதிதாகத் தொடங்கிய ஒரு ஆத்மீக ஆராய்ச்சியாளர் சங்கத்தைப் (Spiritual Frontiers Fellowship) பற்றியதாகும். அதைத் தொடங்கியவர்களுள் சமயத் துறவிகள், காலேஜ் பேராசிரியர்கள், பெரிய பதவிகளில் இருப்பவர்களும் அடங்குவர். அச்சங்கமானது அங்கேயிருந்த சர்ச்சுகளின் ஆதரவுடன் எமது அறிவுக்கப்பாற்பட்ட விஷயங்களை (psychic phenomena) ஆராய்வதற்காக உண்டாக்கப்பட்ட சங்கம். மீடியம் என்று சொல்லப்படுகின்ற, 'ஆவிகளுக்கும் எங்களுக்கும் இடையில் ஊடகமாகச் செயற்படுபவர்களைப்' பற்றி நான் ஒரு பத்திரிகையில் தாக்கி எழுதியிருந்தேன். அதை அவர் வாஷிங்டனை விட்டுப் புறப்படுவதற்கு முன் ஏற்றுக்கொண்டேன். அவர் எனக்காக அங்கேயே மயக்கநிலைக்குச் சென்று (trance) ஆவிகளுடன் உரையாடச் சம்மதித்தார். அப்போது நடந்த ஆச்சரியப்படத்தக்க விஷயங்களை நான் எனது "உண்மையைத் தேடி" (A Search for the Truth) என்ற நூலில் எழுதியிருக்கிறேன்.
நான் ஆர்தரின் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் பற்றிப் பத்திரிகையில் எழுதியிருந்தேன். அதன் பின்னர் எப்பொழுது அவர் வாஷிங்டன் வந்தாலும் எங்களது வீட்டிற்கு வருவார். அந்த நேரங்களில் முன் பின் அறிமுகமில்லாத எவரையேனும் அழைத்து வந்தாலும் கூட அவர்களின் இறந்த உறவினர்களைத் தொடர்பு கொள்வதன் மூலம் அவர்களைப் பற்றிய உண்மைகளைக் கண்டறிவார். ஃபிளெச்சர் என்கிற ஆத்மாவின் உதவியுடனேயே இது நிகழும். இறந்த உறவினர்களின் பெயர்களை எல்லாம் சொல்வார். தொடர்ந்து வந்த ஆண்டுளில் ஆர்தர் எங்களது வாஷிங்டன் வீட்டிலும் வேர்ஜீனியா பீச் வீட்டிலும் அடிக்கடி வந்து தங்குவார். அடிக்கடி நகைச்சுவைபடக் கடிதங்கள் எழுதுவார். தொலைபேசியிலும் பல மணி நேரம் பேசிக்கொண்டிருப்போம். மேடைப் பேச்சுகளின் போதும் சந்தித்து இருக்கிறோம். தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு மேல் தொடர்பில்லாமல் ஒரு போதும் இருந்ததில்லை. ஆனால் அவர் மறு உலகை அடைந்த பின் தான் ஒழுங்காகத் தொடர்பு கொள்கிறோம். ஏனெனில் ஒவ்வொரு நாட்காலையிலும் ஒரே நேரத்துக்குச் சந்தித்து மகிழ்கிறோம். 

Tuesday, March 9, 2021

மூன்றாம் அத்தியாயம்: எண்ணங்கள் சடப்பொருட்களாகும் (Thoughts Are Things)

டைப்ரைட்டர் மூலம் ஆர்தர் என்னைத் தொடர்பு கொள்ளத் தொடங்கிச் சில நாட்களில் ஒரு நாள் அவர் பின்வருமாறு எழுதினார்: "என்னைப் போல உள்ள ஒருவன் இங்கு வருகையில் என்ன நிகழுமென்பதை இன்று பார்ப்போம். அதாவது, நோயுற்று நலிந்த உடலைவிட்டு மகிழ்வோடு வெளியேறி, தொடர்ந்தும் ஆன்மீக முன்னேற்றம் அடைவதற்கு விரும்புபவர்களின் வருகை எப்படியிருக்குமென்பதை இன்று பார்ப்போம். இங்கு என்ன எதிர்பார்க்கலாம் என்பது எனக்குத் தெரியுமென்பதை முதலிலேயே சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஏனெனில் என்னுள் ஆத்மா வந்து நான் ஆவியுலகுடன்  தொடர்பு கொள்ளும் போதெல்லாம்  இங்குள்ளவர்களைக் கவனித்திருக்கிறேன். அவர்களும் எனது பூவுலக நண்பர்கள் போல எமது பூவுலகிலேயே இருக்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும். அப்போதெல்லாம் நான் இங்குமங்கும் அலைந்து திரிந்ததைக் கண்டதால் அவர்கள் எனக்கு உதவி செய்ய ஆவலாயிருந்தார்கள். எனவே அவர்கள் என்னை மகிழ்வுடன் வரவேற்றார்கள். எனக்கு உதவி செய்ய முன் வந்தார்கள். நான் இங்கு வருவதற்கு அவசரப்படவில்லை என்பதை முதலில் விளங்கிக் கொள் ரூத். நான் பூவுலகில் இருந்து சேவை செய்யவே விரும்பினேன். ஆனால் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் நான் எனது உடலைக் கெடுத்துக் கொண்டேன். இது அங்குள்ளவர்களுக்கு ஒரு பாடமாக அமையட்டும். உங்களது உடல் ஒரு தேவாலயமாகும். அதனைப் பேணிப் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். நாம் எவ்வளவுக்கு எவ்வளவு அதனை மதித்து அதனை ஆத்மா வாழும் ஆலயமாக நடத்துகிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு அதுவும் எமது தேவைக்கேற்ப நடக்கும்.
இதற்கு முந்தைய பிறவிகளுக்கிடையில் இங்கு வந்ததைப் போல இம்முறையும் இங்கு வரும்படி நேர்ந்த போது என்னுள் எனது ஆத்மா திடீரென விழிப்படைந்ததை என்னால் உணர முடிந்தது. எனது மனமானது இறைவனில் ஒடுங்கியது. ஏற்படப்போகும் அந்த விடுதலைக்கேற்ப எனது உள்ளுணர்வைத் தயார் செய்ய முனைந்தேன். விடுதலையடைந்த ஆத்மாவின் உள்ளுணர்வானது மிக நன்றாக வேலை செய்யும். ஏனெனில் நாம் இறந்தபின் அந்த உள்ளுணர்வு தான் எம்முடன் இருக்கப் போவது. அது தான் ஆத்மாவின் மனம். இந்தக் காரணத்துக்காகவாவது திரையின் மறு பக்கத்தில் (பூவுலகில்) இருப்பவர்கள் உள்ளுணர்வையும் அறிவைப் போன்றே வளர்த்துக் கொள்ள வேண்டும். உள்ளுணர்வை விரிவடையச் செய்வதற்கு அதைச் சுதந்திரமாக விட வேண்டும். அதனுடைய அற்புத சக்திகளைச் செயற்பட விட வேண்டும். நாம் அதனை அடக்கி வைத்து விட்டு எமது வெளி மனதையே இதயத்தையும் மூளையையும் உபயோகிக்கப் பயன்படுத்துகிறோம்."
"இப்போ விடயத்துக்கு வருவோம். இறுதியில் அந்தக் கடைசி நெஞ்சு வலியின் பின்னர் எனக்கு நேரம் நெருங்கி விட்டதை வெகுவாக உணர்ந்தேன். இந்தக் கணத்தை ஆவலுடன் எதிர்பார்த்ததால் உடற் பந்தங்களில் இருந்தான விடுதலையை நான் வரவேற்றேன். எனது உயிரானது களைத்து விட்ட அந்த உடலிலிருந்து வெளியேறிய போது நான் எனது சூக்கும சரீரத்தில் இலகுவாக, முன்னரே நான் அதனை முழு உணர்வோடு அணிந்திருந்ததைப் போல நுழைந்து கொண்டேன். பாரமான உட ல் இல்லாது, பந்தங்களிலிருந்து விடுதலை அடைந்து காற்றில் மிதப்பதைப் போல உணர்ந்தேன். அந்த தேவலோக உணர்வானது விளக்க முடியாதது. என்ன ஒரு சுகம். ஒரு தடங்கல்களும் தடைகளும் வேதனைகளும் அற்று, ஆனால் முன்னர் இருந்ததைப் போலவே அதே இடத்தில் எப்போதும் போல இருப்பது எவ்வளவு ஆனந்தம். எந்த நேரத்திலும் எந்த ஒரு இடத்திற்கும் ஒரு பிரயாணச் சீட்டுக்கோ நடப்பதற்கோ அவசியமில்லாமற் போய் வரக்கூடிய அதிசய சுதந்திரம். மீண்டும் சுறுசுறுப்பான சிறுவனாக மாறுதிலும் பார்க்க இந்த நிலை நன்றாகவுள்ளது. ஏனெனில் எமது சுதந்திரத்தைப் பறிப்பதற்குத் தடைகளோ தடங்கல்களோ ஏதுமில்லை. நாம் எங்கே போக எண்ணுகிறோமோ அங்கே நாம் இருப்போம். சாதாரண ஆத்மாக்களாகிய நாம் இறைவன் போன்றே அனைத்து விஷயங்களிலும் இருப்போம்.
முதலில் நான் எனது நண்பர்களைக் கண்டு அளவளாவினேன். பின்னர் ஃபிளச்சரைத் தேடினேன். அவர் புன்னகையுடன் எனது வரவைப் பார்த்திருந்தார். அவரைச் சிறுவனாகப் பூவுலகில் சந்தித்ததற்கு இங்கே அவரில் எவ்வளவு மாற்றங்கள். அவர் ஒரு மேன்மையான ஆத்மாவாக இருந்தார். அவருடன் மகிழ்ச்சியாக அளவளாவினேன். உன்னை அவர் இன்னும் நினைவில் வைத்திருக்கிறார். அது மட்டுமல்ல தன்னுடையதும் என்னுடையதுமான சேவைகளுக்கு நீ ஏனையோரின் அபிப்பிராய பேதங்களையும் மீறி, எமது செய்தியை இவ்வுலகுக்குக் கொண்டு வருவதற்கு தைரியமாக உதவியதையும் நினைவு கூர்ந்தார். இனி அவர் சற்று ஓய்வெடுக்கட்டும். அவருடைய சேவையானது பூர்த்தியடைந்து விட்டது. இனி அவர் உயர்வான நிலைகளுக்குச் செல்லலாம் அல்லது மீண்டும் பூமியில் பிறக்கலாம். அது அவரது இஷ்டம். இன்னமும் அவர் முடிவு செய்யவில்லை. ஆனால் ஒரு விடயம் மட்டும் உறுதி; அவர் ஒருவருக்கூடாகவும் இனி வர மாட்டார். எனவே அவரின் ஆத்மா தங்களுக்குள் வந்திருப்பதாகச் சொல்பவர்கள் அனைவரும் போலி ஊடகங்களாகும். நான் மேலுலகுக்கு வந்ததும் தனது வேலை முடிந்து விடுமென ஃபிளெட்சர் எப்போதும் உறுதியாகச் சொல்பவர்.
தான் இப்பொழுது அனுபவித்துக் கொண்டிருக்கும் சுதந்திரத்தை விளக்குமுகமாக ஆர்தர் பின்வருமாறு ஒரு நாள் எழுதினார்: "எங்கள் வாழ்க்கைக்கும் உங்கள் வாழ்க்கைக்குமிடையில் பெரிதாக  ஒன்றும் வேறுபாடில்லை. நாம் வேறோர் உலகத்திலுமில்லை. இங்கே தான் இருக்கிறோம். வாஷிங்டனிலுள்ள உனது வரவேற்பறையில் நான் இருந்ததைப் போலவே இப்போதும் இக்கணத்திலும் இருக்கிறேன். ஒரேயொரு வேறுபாடு என்னவென்றால் இப்போ நாம் பலனளிக்கக் கூடிய விதத்தில் அடிக்கடி தொடர்பு கொள்கிறோம். நாம் இங்கே தானிருக்கிறோம். அதை முதலில் வலியுறுத்திச் சொல்ல வேண்டும். நீங்கள் எப்படி உலகின் ஒரு பகுதியாக இருக்கிறீர்களோ அப்படியே தான் நாமும் இருக்கிறோம். ஒரேயொரு வித்தியாசம் என்னவென்றால் உங்களின் இயக்கங்களைக் கட்டுப்படுத்தும் அடிப்படை விதிகள் நாம் பூதவுடலை நீக்கி விட்டதால் எம்மைக் கட்டுப்படுத்தா. நாம் ஆத்ம ரூபத்தில் இருப்பதால் சடப்பொருட்களின் ஊடாகவும் உயிருள்ள பொருட்களின் ஊடாகவும் செல்லமுடியும். அவையனைத்தும் எண்ண உருவங்களாகவே உள்ளன. நாம் அவற்றை வடிவங்களாகப் பார்க்காமல் எண்ண உருவங்களாகவே பார்ப்பதால் அவையொன்றும் எம்மைத் தடை செய்யா. நாம் எண்ண வடிவாலான இல்லங்களில் வசிக்க முடியும். அல்லது ஆற்றங்கரை போன்ற நீர்நிலைகளின் அருகே சூரிய வெளிச்சத்துடன் கூடிய மலைச்சரிவுகளில் வாழமுடியும். எங்கென்றாலும் நாம் இருக்க விரும்புமிடத்தில் இருக்கலாம். ஆனால் இவையெல்லாம் கட்டாயத் தேவைகளல்ல. ஏனெனில் எமக்கு வதிவிடம் அவசியமில்லை. நாம் காற்றைப் போல சுதந்திரமாக நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் இருப்போம். அதனால் நாம் அங்குமிங்குமாக அலைந்து திரிவதாக எண்ணக்கூடாது. நாம் இங்கு வந்தவுடன் ஏதாவதொரு குறிக்கோளை உருவாக்கிக் கொள்வோம். வளர்ச்சியென்பது பூவுலகில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதேயளவு இங்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. ஒரு குறிக்கோளுமின்றி அங்குமிங்குமாக அலைந்து திரிந்தால் நாம் வளர்ச்சியுற முடியாது." 
"அங்கு போலவே இங்கும் இறைவன் எவற்றையெல்லாம் நாம் செய்யவேண்டுமென விரும்புகிறானோ அவற்றை நிறைவேற்றுவதே எமது நோக்கமாகும். ஒருவர் போல மற்றொருவர் என்றுமே இருந்ததில்லை. எமது வாழ்க்கையின் நோக்கங்களும் அப்படியே. பிறவிகள் தோறும் நாம் அணிந்து கொள்ளும் உடலுக்கேற்ப மாறுபடும். இறைவனை இங்கு நாம் காண மாட்டோமெனினும் எமக்கு நன்மை பயப்பதான அவரது கருணா கடாட்சத்தை அபரிமிதமாக இங்கு நாம் உணர்கிறோம். எனவே இங்கு சிறிதளவு முன்னேற்றமே அடைந்தவர்களாயினும் சரி இறைவனின் நிலையான அருளை உணராமலிருக்க முடியாது. அவர் எமக்குரியவர். நாம் அவருக்கு உரியவர்கள். எமக்கிடையில் ஒரு பிரிவுமில்லை. ஏனெனில் எமது மூலாதாரம் அவரே. எப்படி எமது விரலொன்று மூளையின் கட்டுப்பாடின்றி இயங்க முடியுமென்று எம்மால் எண்ண முடியாதோ அதே போலத்தான் ஆத்மாவும் இறைவன் எனும் படைப்புச் சக்தியை விட்டு வேறுபட்டு இயங்க முடியாது. நாமனைவரும் ஒருவரே; நீ, நான், எமது அயலவர்கள், எமது எதிரிகள், எமது இறைவன் அனைவரும் ஒருவரே. இடையில் ஒரு பாகுபாடுமில்லை. ஒரு பிரிவுமில்லை. எமது விடுதலையைப் போன்றே எமது எதிரியின் விடுதலைக்கும் நாமே பொறுப்பேற்க வேண்டும். ஏனெனில் இறைவனின் இதயத்தில் நாமும் நம் எதிரியும் ஒருவரே. இறைவனுடன் இணைந்து நாம் உலகைப் படைத்துக் கொண்டிருக்கிறோம் எனும் போது எப்படி எமது கைவிரல்களும் கால்விரல்களும் எமது ஒரு பகுதியோ அப்படியே இறைவனும் எமது பகுதியே என்கிறோம்".
ஒரு வேளை முன்னே பாதிரியாராக இருந்த நினைவுகளிலிருந்து விடுபட முடியாமலிருக்கலாம், ஞாயிற்றுக் கிழமைகளில் தவறாமல் ஆர்தர் ஆன்மீக விடயங்களைக் கூடிய விளக்கங்களுடன் உரைப்பார். ஆர்தருடனான தன்னிச்சை எழுதுகை தொடங்கிய ஆரம்ப கால கட்டங்களில் இது வெளிப்படையாகத் தெரிந்தது. ஒவ்வொரு ஞாயிறும் லிலி ஆர்தரை, "இதோ ஆர்ட் தனது ஞாயிறுப் பிரசங்கத்துடன் (sermon)" என வெறுமே அறிமுகம் செய்து வைப்பார்.
ஆர்தர் ஃபோர்ட் இறந்து மூன்று கிழமைகள் ஆவதற்குள் ஒருநாள் (ஜனவரி 24/1971), அவர் பின்வருமாறு எழுதினார்: "ஹாய் ரூத், இனிய ஞாயிறு உதயமாகட்டும்! இன்று நாம் பூவுலகில் இருப்பவர்களுக்குத் தேவையான மேலதிக ஆன்மீக விடயங்களை ஆராய்வோம். நானும் அதிலொரு பகுதியாக இனிமேல் இருக்கப் போவதில்லை என்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது என்பதைச் சொல்லியாக வேண்டும். நாம் முதலில் இறைத்தன்மையைப் பற்றி ஆராய்வோம். இறைத்தன்மை என்பது எல்லாவற்றையும் ஒன்றாகப் பிணைத்து வைத்திருக்கும் ஒரு அழிவற்ற சக்தியாகும். இந்த சக்தி மிக வலிமை வாய்ந்தது. கண் இமைக்கும் தருணத்துக்கு என்றாலும் இது நிற்குமேயானால் ஒன்றுமே பிழைத்திருக்க மாட்டா. இதுவே அண்டசராசரங்களையும் ஒன்றிணைக்கும் சக்தியாகும். ஒரு முழுமையான அணு. சிலர் சொல்வது போல அது ஒரு ஆத்மா அல்ல. அது ஒரு சக்தியாகும். நன்மையைத் தவிர வேறொன்றும் அறியாத மிகப்பெரிய விசையாகும். அது ஒரு கெட்ட சக்தி என்றால் எவ்வாறு அது எல்லாவற்றையும் இணைக்கும்? இந்த விசை அல்லது கடவுள் தன்மை என்பது முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டதொரு உண்மை. உலகளாவிய நன்மை. எல்லாம் அடங்கிய ஒன்று. ஆனால் இந்த மையவிலக்கு விசையின் எல்லைக்குள்ளும் விரோதம், பேராசை, தீவினை போன்ற கெட்ட தன்மைகளுக்கும் இடம் உள்ளது. இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு உயிரினத்துக்குள்ளும் கொஞ்சம் கெட்ட தன்மையும் இருக்கும். அது இறைத்தன்மையை எதிர்க்கும். இதிலிருந்து மீள நாம் மீண்டும் பூரணமான நல்லிணக்கத்தோடு ஒன்றுபட வேண்டும். அப்படிச் செய்தால் ஒரு கெடுதலுமில்லை; ஒரு பேராசையுமில்லை; ஒரு வருத்தமுமில்லை; ஒரு பிரிவினையுமில்லை. மீண்டும் மீண்டும் பூவுலகில் பிறந்து நாம் இந்த உண்மையைக் கற்றுக் கொள்வோம். எங்களது எல்லாக் கெடுதலுக்கும் காரணம் பிரிவினை தான்.
ஒரு ரோஜாப் பூவைப் பார். அதனுடைய இலைகள், தண்டு, இதழ்கள் என்று எல்லாவற்றிலும் பூரணத்தன்மை இருப்பதாக நீ சொல்லலாம். ஆனால் பொறு. அதிலொன்று குறையவில்லையா? ஒரு இலை குறையலாம் அல்லது ஒரு இதழ் சற்று அதிகம் சுருண்டிருக்கலாம். அதற்கு அப்பூவையா குற்றம் சொல்வது? அல்லது வண்டையா? அல்லது காற்றையா அல்லது ஏதோ ஒரு வெளிக்காரணி அதன் பூரணத்துவத்தைக் குறைத்து விட்டதா? ஏதோவொன்று நடந்திருக்கிறது. ஆனால் அது என்ன? இறைவன் எல்லா மலர்களுக்கும் ஒரே விதமான வடிவமைப்பையே ஒழுங்கமைத்திருப்பான். எனவே அதற்கு மாறாக அதிலொரு குறையென்றால் அவனைக் குற்றம் சொல்ல இயலாது. எனவே மனிதனில் தான் எதுவும் தங்கியுள்ளது. இறைவன் அல்லது (நீங்கள் விரும்பின்) அந்த மிகப்பெரிய சக்தி மனித குலத்துக்கென ஒரு வடிவமைப்பைக் கொடுத்திருக்கிறான். ஒவ்வொரு பகுதியும் மற்றையதுடன் முறையாகப் பொருந்தி ஒரு பூரணவடிவத்தினை உருவாக்கும். உலகில் பிறந்த முதலாவது மனிதன் ஒரு குறைபாடுகளுமின்றிப் பூரணமாயிருந்தான். நீங்கள் அவனை 'ஆதாம்' என்றும் அழைக்கலாம் அல்லது வேறு எப்படியென்றாலும் அழைக்கலாம். இறைவனெனும் அந்த மிகப்பெரிய சக்தியின் படைப்பு அவன். இம்மனிதன் அந்த மையவிசையினால் அனுப்பப்பட்ட எண்ணத்தின் உருவம். அதன் பின் ஏனைய மனிதர்கள் (ஆண்களும், பெண்களும்) உருவாகப் பிரச்சினைகள் தலை தூக்கின. உடல்களில் வதிய முன்னர் ஒற்றுமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்த ஆத்மாக்கள் பின்னர், எந்த நிலமானது அனைவரது உபயோகத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் என எல்லாவற்றிலும் தன்னிறைவு பெற்று, ஆசீர்வதிக்கப்பட்டதோ அந்த நிலத்தில் தம் பங்குக்காகச் சண்டையிட்டன.
இச் சண்டையானது அவலட்சணமான நினைவு வடிவங்களை (thought patterns) உருவாக்கியது. எண்ணங்களே உருவெடுக்கின்றன ஆதலினால் இவை அடிப்படையான மனித குலத்தின் கட்டமைப்பில் சிறிய, பெரிய குறைபாடுகளை உருவாக்கின. அதாவது கால் விரலொன்றில்லாமை, குறைபாடுடன் கூடிய தலை, கறைபட்ட மனங்கள். இப்படியாக இந்த ஆத்மாக்கள் தொடர்ந்து பிறவிகளெடுத்துக் கொண்டிருக்கையில் இறைவன் மீண்டும் ஒரு பூரண உதாரண புருஷனாக நசரேயனாகிய இயேசுவை அனுப்பி வைத்தார். மீண்டும் ஒரு பூரணத்துவமான பிறவி; குற்றங்குறைகளற்ற வடிவம். விவேகமுள்ள அனைவரும் அவரைப் பின் தொடர்ந்து அப்பூரண வடிவான இறைபுத்திரனை வணங்கினர். ஏனையோர் எள்ளி நகையாடி இப்பூரண வடிவைத் தமக்கே உரிய காமக்குரோத வழிகளில் எவ்வாறெல்லாம் மறைக்க இயலுமோ அவ்வாறெல்லாம் மறைக்க முயன்றனர் என்பதெல்லாம் அறிந்ததே. ஆனால் எமது ஆத்மாக்கள் இறைவனின் அன்பைத் தேடிகொண்டிருக்கும் வரையிலும் நாம் பூரணத்வத்தைத் தேடிக்கொண்டேயிருப்போம். இது தான் மைய விசையுடன் அனைத்தையும் இணைக்கும் சக்தியாகும். அதுவே அன்பின் சக்தி. எனவே ஒருவரையொருவர் நேசியுங்கள்; இறைவனை நேசியுங்கள்; உங்களையும் நேசியுங்கள். இந்தச் சர்வ வல்லமை பொருந்திய சக்தியுடன் ஒன்று சேர்வதற்கு உங்களைத் தகுந்தவராக்குங்கள்."
இந்நூலுக்கான முயற்சி நடக்கையில் இறைவனைப் பற்றி ஆர்தர் உரைக்கையில் எப்போதும் அது ஒரு விசை என்பதாகவே சொல்லிக் கொண்டிருந்ததால் ஒரு நாள் நான், "இறைவன் என்பவர் யார் அல்லது என்ன? பூவுலகில் நீங்கள் இருந்த சமயத்திலும் பார்க்க இப்போ இறைவனை நீங்கள் கூடுதலாக அறிவீர்களா?" எனக் கேட்டேன். அதற்கு அவர், "உண்மையில் மிக அதிகமாக என்று சொல்லலாம்" என்றார். அத்துடன் "இறைவன் தான் இந்த அண்ட சராசரங்களின் மையம். அதிலிருந்து தான் அனைத்தும் உருவாகிக் கொண்டு இருக்கின்றன. அவனே உண்மையும் சக்தியுமாவான். அவனே சடப்பொருளும் ஆத்மாவுமாகும். அத்துடன் பூவுலகிலும் மேலுலகிலும் உள்ள அனைத்துப் பொருட்களும் அவனேயாவான். அவன் அழிவில்லாதவன். அவனறியாததொன்றில்லை. எல்லாமறிந்தவன் அவன். அத்துடன் எமக்குத் தெரிகிறதோ இல்லையோ எங்களது மூலப்பொருள் அவனேயாவான். அவனில்லாமல் ஒன்றுமேயில்லை. அவருடைய முழுமையான ஏக சக்தியே இந்த அண்ட சராசரங்களையும் அதிலிருப்பவை அனைத்தையும் ஒருங்கே இணைக்கிறது. அந்தத் தூயவனில்லையேல் ஒன்றுமில்லை. இறைவன் இருக்கிறான். முடிவில்லாத பரமாத்மா அவன். அவனுடைய மகிமை அளவிடற்கரியது. எனவே எம்மால் அவனை முழுமையாக விளங்கிக் கொள்ள இயலாது. இறைவனின்றி எதுவுமில்லை. எதுவுமேயில்லை. அவனால் தான் உலகில் சத்தியம், ஒளி, பிரகாசம், அமைதி எல்லாம் உள்ளன. அவனே வாழ்வாவான். இது தான் நிஜம். எனவே அவனில்லையெனில்  வாழ்வில்லை; உயிர்களில்லை. நாம் அவனில் ஒரு பகுதி. அதே போல அவன் எங்களில் ஒரு பகுதி. எமது செய்கைகளிலும் குணநலன்களிலும் குறைபாடுகளிருப்பதால் பூரணத்துவத்தை அடைய நாம் மீண்டும் மீண்டும் பிறந்து முயற்சித்துக் கொண்டேயிருக்க வேண்டும். அந்தப் பூரணத்துவத்தை அடைந்தால் நாமும் இறைவனுடன் இரண்டறக் கலக்கலாம். குறைபாடுகளுள்ள ஒன்று ஒரு நாளும் இறைவனின் ஒரு பகுதியாக மாற இயலாது என்பது நியதி. ஏனெனில் குறைகளுள்ளவர் முறையாக இயங்க இயலாது. அந்த நியதி என்றும் மாறாது. அதனால் தான் நாம் சளைக்காமல் மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து, எமது குறைபாடுகளை நிவர்த்தி செய்து பூரணத்துவத்தை அடைந்து, இறைவனின் குறைவற்ற நிறைவான ஒரு பகுதியாக அவனுடன் இரண்டறக் கலக்க முயற்சிக்கிறோம்" என்றார்.
மீண்டும் புரியாமல், "நீங்கள் இப்படியுரைக்கும் போது அது இறைவனை குணநலன்கள் ஏதுமற்ற ஒரு விசை போன்றே எண்ணத் தூண்டுகிறது. அப்படியெனில் அவர் எமது தனிப்பட்ட வழிபாடுகளைச் செவி மடுக்க மாட்டாரா?" எனக் கேட்டேன்.
அதற்கு ஆர்தரின் பதில் "இறைவனானவன் அனைத்தையும் அறிந்தவனாவான். அவன் எமது வேண்டுதல்களையும் வழிபாடுகளையும் செவிமடுக்கிறான் என்பது மட்டுமல்ல நாம் வேண்டுவதற்கு முன்னமே என்ன எங்களது வேண்டுகோள் என்பதனையும் அறிவானவன். சத்திய ரூபமவன். எல்லாமறிந்தவன். அவனில்லையேல் எல்லாமே இருள் மயமாகி விடும். உண்மையும் ஒளியும் அன்புமானவன் அவன். அவன் எம்மைப் படைத்தவனுக்கும் மேலானவன். எமது தந்தைக்கும் மேலானவன். அவன் எங்கள் ஒவ்வொருவரிலும் தனித்தனியே அன்பு செலுத்துகிறான் என்பது தான் உண்மை. அத்துடன் அவனை உண்மையுடனும் அன்புடனும் அணுகினால் அறிவுள்ள பெற்றோரைப் போல எமக்குத் தேவையானவற்றை (அது வேறெவரையும் பாதிக்காது எனில்) தருவான். எல்லா வேண்டுதல்களும் நிறைவேறுமென்று இல்லை. உண்மையான அன்பான இதயத்திலிருந்து உதயமாகும் வேண்டுதல்கள் நிறைவேற்றப்படும். அவன் ஆறுதல் அளிப்பான், அன்பளிப்பான், சுகமளிப்பான். அவன் எம்மை இரவும் பகலும் வருடத்தின் எல்லாப் பருவங்களிலும் கவனித்துக் கொண்டே இருக்கிறான். இறைவனே அனைத்தும் ரூத்!"
மறு நாள் காலை ஆர்தர், "இன்று உறங்குவது போல இறப்பவர்களின் நிலை மாற்றங்களைப் பார்ப்போம்" எனக் கூறினார். "திடீர் மரணங்களையோ அல்லது எதிர்பாராத மரணங்களையோ பற்றி இப்போ நாம் உரையாடப் போவதில்லை. அவற்றைப் பற்றிப் பின்னர் பார்ப்போம். நோயுற்று நலிந்த அல்லது களைத்துப் போன ஒரு உடலை விட்டு ஆத்மா வெளியேறும் இயற்கையான மாறுதலைப் பற்றிப் பார்ப்போம். ஆத்மா தனது உறையிலிருந்து ஒரு வேதனையோ அல்லது புலப்படும் படியான உணர்வோ இன்றி இலகுவாக வெளியேறும். ஒரு கணத்துள் மிகுந்த வேதனையளித்த உடலை அணிந்திருந்தவர் மறு கணத்தில் சொர்க்க லோக உடையணிந்து சொர்க்கபுரியில் இருப்பார். ஆனால் இது சொல்வதைப் போல அவ்வளவு எளிதானதல்ல. இந்த நிலைக்கு நாம் பக்குவப்பட்டிருந்தால் மட்டுமே அது எளிதாக முடியும். நாங்கள் மிகுந்த அழகான, இன்னிசை நிறைந்த உலகிலேயே கண்விழிப்போம். இங்கிருக்கும் மரங்களெல்லாம் உண்மையானவையே. அங்கிருப்பவைகளைப் போல பிரதி பிம்பங்களல்ல. மலர்களெல்லாம் தூய்மையான எண்ண வடிவங்கள். ஆதலினால் அவை பூவுலகில் இருப்பவற்றிலும் பார்க்க மிக மிக அற்புதமாக உள்ளன. இங்கேயிருப்பன அனைத்தும் எண்ணத்தின் வடிவங்களாக இருப்பதால் பறவைகள், மிருகங்கள், ஆத்மாக்கள், மாடமாளிகைகள் உட்பட எல்லாமே பூரண வடிவில் உள்ளன.
"இங்கே கண் விழிக்கும் பொழுது இந்தக் கண்ணைப் பறிக்கும் அழகுகளைக் கனவில் காண்பது போலக் காண்கிறோம். இது உண்மையா? ஏற்றுக் கொள்ளக் கூடியதா? உண்மையாக மனிதனால் இவற்றை ஏற்றுக் கொள்ள முடியாது தான். ஆனால் அன்பு எனும் சக்தியால் முடியும். இந்த நிலையில் என்ன வேண்டுமென்றாலும் அது கிடைக்கும் இன்னொரு உடலைத் தவிர. இன்னொரு உடலை எடுப்பதென்பது எந்நிலையிலும் எமது கட்டுப்பாட்டுள் இல்லை. அது நீண்ட காலம் நாம் பக்குவமடைந்திருந்தால் அத்துடன் ஆன்மீக முன்னேற்றமும் எமக்கு இருக்குமென்றால் எமக்கு அளிக்கப்படும் முன்னுரிமையாகும். அல்லது அகால மரணத்தால் (விபத்துப் போன்ற) இறந்திருந்தால் உடனே நாம் விரும்பினால் பூவுலகுக்குத் திரும்பலாம். இதைப் பற்றிப் பின்னர் நாம் விரிவாகப் பார்ப்போம்.
எமது உடல் வயதாகிக் களைத்து விட்டதால் நாம் சிறப்புகள் நிறைந்த இந்த மேலுலகில் வாழ்வைத் தொடர்வதற்கு ஆவலாக இருப்பதாக எண்ணிக் கொள்வோம். சிறிது நாட்களுக்கு நாம் எமது பழைய நண்பர்களைக் கண்டு அளவளாவி ஆறுதலடைவோம். பூவுலகில் போலவே எமது குண நலன்களின் தன்மையைப் பொறுத்து நாம் மகிழ்ச்சியாகவோ அல்லது குழப்பமாகவோ இருப்போம்.
சிறிது சிறிதாக நாம் ஆத்மாவின் புதிய நிலைக்குத் தயாராகிக் கொண்டு வருகையில் நேரம் விரைந்து செல்வதை உணரத் தொடங்குவோம். நாம் விரும்பின் இறைவனின் திட்டத்திற்கிசைய நடக்கத் தொடங்கியிருக்கலாம் என்பதையும் நாம் உணரத் தொடங்குவோம். இப்போது தான் எமது உண்மையான தன்மை வெளிப்படத் தொடங்கும். நாம் கொண்டாட்டக் களியாட்டங்களில் ஈடுபட்டு இன்பத்தை அனுபவிக்கப் போகிறோமா அல்லது ஆன்மீக முன்னேற்றத்தில் ஈடுபடப் போகிறோமா? நாம் ஆன்மீக முன்னேற்றத்தைத் தெரிவு செய்வோமாயின் எமது சுய முன்னேற்றத்துக்கும் உயர்ச்சிக்குமாகவா அல்லது நாம் சேர்ந்த குழுவினது முன்னேற்றத்துக்கும் உயர்ச்சிக்குமாகவா? இன்னொரு வகையில் சொல்ல வேண்டுமாயின் எங்களுக்கு வரும் முன்னேற்றம் போல் ஏனையவர்களுக்கும் வரவேண்டுமென விரும்புகிறோமா? நான் முதலில் சொன்னதை நினைவு படுத்திக் கொள். ஒரு 
இனத்தின் வளர்ச்சியென்பது அனைவரும் சேர்ந்து ஆன்மீக முன்னேற்றத்துக்காகவும் நிறைவுக்காகவும் ஒரு முகமாக முன்னோக்கி உழைப்பதில் தான் உள்ளது. எனவே நாம் விரைவாக முன்னேற விரும்பினால் எமக்கொத்த கருத்துடையவர்கள் முன்னேறுவதற்கு வழிகள் உள்ளனவா என்பதையும் கவனிக்க வேண்டும்".  
மறு நாள் விட்ட இடத்திலிருந்து ஆர்தர் பின்வருமாறு தொடர்ந்தார், "அந்த ஆத்மாவானது மற்றையவர்களுக்கு எதிராகப் பயங்கரமான பாவங்களை இழைத்ததால் கறைபட்டிருந்தால் (அவையே உண்மையான பாவங்கள்) மிக நீண்ட, ஆழமான தூக்கத்தில் ஆழும்; அல்லது அந்த ஆத்மாவானது மிக அதிகமான பாவங்களால் சூழப்பட்டிருந்தால் தான் விட்டுவிட்டு வந்தவர்களைத் தொந்தரவு செய்யும். நாம் இங்கு அதனைப் 'பேய் பிடித்தல்' என்று சொல்வதில்லை. தொந்தரவு செய்வது என்போம். சில வேளைகளில் அந்த ஆத்மா ஆவியுலகுக்குத் தான் வந்துவிட்டதை உணர்வதில்லை. அப்படியான நேரத்தில் அந்த ஆத்மா அந்தரத்தில் அலைந்து கொண்டு, "ஏன் இங்கு ஒருவரும் என்னைக் கவனிக்கவில்லை" என யோசித்துக் கொண்டு திரியும். சில வேளைகளில் பூவுலகப் பொருட்களிலும் உடமைகளிலுமுள்ள ஆசைகளை விட முடியாமல் பிடிவாதமாக மீள உலகுக்கு வரும். இவ்வாறு குழப்பமடைந்த ஆத்மாக்களுக்கு எம்மால் அவ்வளவாக உதவ முடியாது. ஆனால் உங்களைப் போல இன்னமும் பூவுலகிலிருப்பவர்களின் வழிபாடுகளின் மூலம் அவர்களுக்கு உதவமுடியும். அவர்களுக்காக வணங்குங்கள்.
திடீரென விபத்துக்களிலும் சண்டைகளிலும் இறந்தவர்கள், ஆவியுலகில் தாம் இருப்பதையறிந்து அதிர்ச்சியடைவார்கள். தம்மால் இனிமேல் பணம் சம்பாதிப்பது, பந்து விளையாடுவது போன்ற வழமையான பழகிய விஷயங்களைச் செய்ய இயலாது என்ற விஷயம் அதிர்ச்சியாகவிருக்கும். அப்படிப்பட்டவர்களைச் சமாளிப்பது சற்று சிரமமாகவிருக்கும். ஏனெனில் அவர்கள் சிறிய வயதில் கேள்விப்பட்ட சொர்க்க பூமி இது தானென அவர்களை நம்ப வைப்பது ரொம்பக் கஷ்டம். அவர்களுக்கு சிறிது சிறிதாக எடுத்துச் சொல்ல முயற்சிப்போம். எல்லா விடயங்களும் பூவுலகில் இருப்பதைப் போலவே இருப்பதாக உணர்வார்கள். ஆனால் ஒரேயொரு வித்தியாசம் இருக்கும். எல்லா எண்ண வடிவங்களும் உயிர்ப்புடனுள்ளதால் அவை பூவுலகில் உள்ளவற்றிலும் பார்க்கப் பிரகாசமாகப், பளபளப்பாக ஒளிர்ந்து கொண்டிருக்கும். 
புதிதாக வருபவர்களை நாம் அன்புடன் வரவேற்போம். தியான முறைகளின் மூலமோ அல்லது மேலுலகங்களைப் பற்றிய ஆராய்ச்சிகளின் மூலமோ இப்படிப்பட்ட ஒரு மாறுதலுக்குத் தன்னைத் தயார்ப்படுத்தியிருந்தால் தவிர ஏனையவருக்கு வந்ததும் ஆச்சரியமாயிருக்கும். அவருக்குப் பசித்தால் நாம் உணவை உண்டாக்கிக் கொடுப்போம். அது எண்ண வடிவாலானதாய் இருந்தாலும் அவருக்குப் பூவுலகில் தான் உயிர் வாழ்வதற்கு உதவிய உண்மையான உணவாகவிருக்கும். அவருக்குத் தாகமாயிருந்தால் பருகுவதற்கு ஏதேனும் பானம் கொடுப்போம். அவர் சிறிது சிறிதாக மாறுதலுக்குப் பழகிக் கொண்டு வந்தாலும் இன்னும் தனக்கு உணவும் குடிநீரும் தேவையில்லை என்பதை உணரவில்லை. அவரின் உறவினர்களைக் காணாமல் தேடுவார். சில உறவினர்கள் இன்னும் பூவுலகில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். சிலர் இங்கிருப்பார்கள். சிலர் மேலும் உயர்ந்த நிலைகளுக்குப் போயிருப்பார்கள். சிலர் மறுபிறவி எடுத்திருப்பார்கள். நாம் அவர்களைச் சிறிது நேரம் பொறுத்திருக்கச் சொல்லுவோம். சிறிது நேரத்துள் அவருக்கு மேலும் பல விஷயங்கள் புரிபடத்தொடங்கும். இதற்கிடையில் அவரின் கற்பனை வளத்துக்குத் தகுந்த மாதிரி அவர் நடக்கத் தொடங்குவார். இயற்கையெழில் நிறைந்த கிராமிய வளங்களைச் சிலர் ஆராய்வார்கள். கண்ணைப் பறிக்கும் வண்ணங்களிலும் இனிமை தரும் பசுமையிலும் வியப்புறுவார்கள். சிலர் பெரிய நகரங்களிலிருக்க விரும்பின் உடனடியாக அங்கேயிருப்பார்கள். நகரங்களின் வாகன இரைச்சலிலும் நெரிசலிலும், பரபரப்பாக, அப்படித்தான் இருக்க வேண்டும் என்பது போல இருப்பார்கள். சிறிது காலத்துக்கு அவர்கள் எண்ணப்படியே விட்டுவிடுவோம். எதுவென்றாலும் அவர்கள் எண்ணப்படி செய்யும் படி விட்டுவிடுவோம். ஆனால் எந்நேரமும் உதவக்கூடிய நிலையில் தான் இருப்போம். ஒருவாறு இந்த வாழ்க்கையில் சலிப்புற்றுத் தமது இன்றைய நிலையைப் பற்றி ஆராயத் தொடங்குவார்கள். படிக்கக் கூடிய மனநிலையி ல் இருப்பவர்கள் வகுப்புகளுக்குச் செல்ல விரும்புவார்கள். அவர்களுக்கு வகுப்புகள் உண்டு. சிலர் பூவுலகத் தொடர்புகள் மூலம் ஆராய்ச்சிகள் செய்யும் அமைப்புகளுடன் சேர்ந்து கொள்வார்கள்.
"ஆனால் தனிப்பட்ட ஒருவரின் நிலையை இப்போது ஆராய்வோம். ஒருவர் திடீரெனக் கடுமையான சுகவீனமுற்று இங்கே வருகிறார். அவருடைய சூக்கும சரீரத்தின் கண்களைத் திறக்கிறார். அவர் தன் முன்னே பசிய புற்றரையையும் பச்சைப்பசேலென்ற மரங்களையும் சிறிய நீரோடையுடன் கூடிய வனத்தையும் காண்கிறார். அது மிக ரம்யமாக இருந்தாலும் இது கனவோ என எண்ணுகிறார். ஏனெனில் தான் சுகயீனமாக இருந்தது அவருக்குத் தெரியும். ஒரு சில அடிகள் அந்த நீரோடையை நோக்கி எடுத்து வைத்துப் பார்க்கிறார். ஒருவித சங்கடமும் இன்றித் தன்னால் இலகுவாக நடக்கக் கூடியதாக இருப்பதை உணர்கிறார். அநேகமாக அந்த ஓடையில் அதிகம் மீன்கள் பிடிபடலாம். அந்தப் புல்மேட்டின் மீது அவர் நடந்து திரிகையில் ஒருவரும் கண்ணில் படவில்லை. அந்த நீரோடை எவ்வாறு இவ்வளவு தூய்மையாகவும் பளிங்கு போலும் உள்ளது என வியக்கிறார். பளிங்கு போல ஓடிய ஓடையில் மீன்கள் அங்குமிங்கும் துள்ளிக் குதித்தன. மீன்களைப் பார்த்ததும் அவருக்கு மீன்பிடிக்கும் எண்ணம் மீண்டும் வரத் தூண்டில் ஒன்று கொண்டு வந்திருக்கலாம் என எண்ண உடனே அவர் கையில் ஒரு தூண்டில் வருகிறது. அவர் மீன் பிடிக்கத் தொடங்குகிறார். அவர் தூண்டிலைப் போட்டவுடன் ஒரு பெரிய மீன் பிடிபடுகிறது. அவருக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. வீட்டுக்குச் சென்றதும் உடனே அவற்றைத் தன் மகன்களுக்குக் காட்ட வேண்டும் என எண்ணுகிறார். தொடர்ந்து பல மீன்களைப் பிடிக்கிறார். மீன் பிடிப்பதில் உள்ள தனது ஆசை குறையும் வரை அவர் விடாமல் தொடர்ந்து மீன் பிடித்துக் கொண்டேயிருக்கிறார். இப்போ தனக்கும் தனது நண்பர்களுக்கும் தேவையான மீன்களிலும் பார்க்கக் கூடுதலாகப் பிடித்து விட்டதை உணர்கிறார். எங்கே காரை விட்டுவிட்டு வந்ததென வியக்கிறார். அப்பொழுது தான் முன்பின் தெரியாத ஒரு பிரதேசத்தில் தான் நிற்பதை உணர்கிறார். இங்கு எப்படி வந்தார்? எப்பொழுது வந்தார்? ஒருவேளை இது கனவென்றால் புதிதாகப் பிடிக்கப்பட்ட மீன்களைத் தொட்டுப் பார்க்க முடிகிறது. மணமும் வருகிறது. தூல சரீரத்தின் புலன்களைப் போலவே சூக்கும சரீரத்தின் புலன்களும் வேலை செய்யும். உண்மையில் அவை கூடுதலாக வேலை செய்யும்."
என்ன விசித்திரம்! காரை ஒரு இடமும் காணவில்லை! அத்துடன் மனிதர்கள் இருப்பதற்கான அறிகுறி ஒன்றுமே அங்கு காணப்படவில்லை. அடுத்ததாக என்ன செய்வதென யோசிக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக இருள் சூழத் தொடங்குகிறது. அல்லது அப்படி அவர் எண்ணுகிறார். வீட்டில் தன்னைக் காணாமல் தேடுவார்களே எனத் தீவிரமாக யோசிக்கிறார். அவருக்குத் திடீரென வீட்டுக்குச் செல்ல வேண்டும் போல் தீவிர எண்ணம் வருகிறது. அப்பொழுதே அவர் தனது சொந்த ஊரில் நிற்கிறார். அவரது உடலுக்கு மேல் முன்பின் தெரியாதவர்கள் குனிந்து நின்று கொண்டிருக்கிறார்கள். என்ன செய்கிறார்கள் அவர்கள்? ஒருவேளை மருந்து தருகிறார்களோ? இல்லையில்லை. இது நோயாளியின் கட்டிலல்ல. ஆனால் பிரேதச் சாலை போலுள்ளது. எங்கோ பெரிய தவறு நேர்ந்திருக்கிறது. அவசரமாக வீட்டுக்குச் செல்கிறார். அங்கே அவரது மனைவி கறுப்பு ஆடையுடன் இருக்கிறாள். அமைதியாக ஆட்கள் வந்து சென்று கொண்டிருக்கின்றனர். எங்கோ பெரிய தவறொன்று நேர்ந்திருக்க வேண்டும். இல்லையெனில் தான் ஒரு நாளுமில்லாத விதமாகப் பிடிபட்ட மீனை அவர்களுக்குக் காட்டுவதற்கு முன்னால் நின்று கொண்டிருக்கும் போது இவர்கள் ஏன் தனக்காக அழுகிறார்கள்? அவர் கதவருகில் நிற்பதை அவரது மனைவி பார்க்கிறாள். ஆனால் அவருடன் பேசுவதற்குப் பதிலாக அழத் தொடங்கி விடுகிறாள். "என்ன பிரச்சனை ஹணி" எனக் கேட்கிறார். ஆனால் அவர் பேசுவதை ஒருவரும் கவனித்ததாகத் தெரியவில்லை. "என்ன நடந்தது?" எனக் குரலை உயர்த்திக் கேட்டதற்கும் மௌனமே பதிலாகக் கிடைத்தது. 
அவர் மனைவியிடம் சென்று அவளின் தலையைத் திருப்பி அவளிடம் கேட்கிறார், "ஏன் அழுகிறாய்? நான் இதற்கு முன்னே இவ்வளவு நன்றாக இருந்ததேயில்லை. எனவே கண்களைத் துடை. இரவுச் சாப்பாட்டுக்கு மீனைத் தயார் செய்யலாம்" என்றார். மனைவி அதற்குப் பதிலேதும் கூறவில்லை. அவர் குழம்பினார். ஏன் அனைவரது நடவடிக்கைகளும் விசித்திரமாகவுள்ளன? அத்துடன் ஏன் அனைவரும் அவருடன் பேச மறுக்கின்றனர்? உறவினர்களும் நண்பர்களும் அவரை வெறுக்கும்படி அவர் என்ன செய்தார்? மீனை வைத்து விட்டுச் சமையலறை மேசையருகில் மனச்சோர்வுடன் சென்று அமர்கிறார் அவர். எப்போ இந்த ஆட்களெல்லாரும் செல்வார்கள்? தனது மனைவி வந்து தனக்கு இரவுச் சமையலுக்கு உதவி செய்வாள்? தான் பிடித்த மீனெல்லாம் செதில் நீக்கப்பட்டுக் கழுவப்பட்டிருந்தால் நன்றாயிருக்குமென எண்ணிக் கொண்டே மீனைப் பார்க்கிறார். அவையெல்லாம் வெட்டிக் கழுவப்பட்டு சமையலுக்குத் தயார் நிலையிலிருப்பதைக் கண்டு வியக்கிறார். அவர் சற்றே கண்ணயர்ந்த வேளையில் அவர் மனைவி ஏனையவர்களிடமிருந்து மெதுவாக நழுவி வந்து மீனைக் கழுவி வைத்து விட்டுச் சென்றிருக்க வேண்டும். ஆனால் கண்ணயர்ந்ததாக அவருக்கு நினைவில்லை . அவர் மனைவி அதன் பின்னர் அங்கு வரவுமில்லை. கதவைத் திறந்து மனைவியை அவர் அழைத்த போதும் அவள் வரவில்லை. அவர் தனிமையாய் உணர்ந்தார். வீடு நிறைய ஆட்கள். அப்படியிருந்தும் ஒருவரும் அவரையோ அவர் கொணர்ந்த மீனையோ சற்றும் கவனிக்கவில்லை. அந்த நேரத்தில் தான் அவர், "நான் இறந்து தான் இருக்க வேண்டும் போல" என உரக்கச் சொல்லிக் கொண்டார். அவர் அந்த வார்த்தைகளை உதிர்த்த மறுகணம் மீண்டும் அந்த ஓடையருகிலுள்ள புற்றரையில் நிற்கிறார். ஆனால் இம்முறை அங்கு வேறு சிலரும் இயற்கையழகை ரசித்துக் கொண்டு நிற்கின்றனர். தனது குடும்பத்தினரால் அலட்சியப் படுத்தப்பட்டதால் சிறிது தயக்கத்துடனே அவர் மெல்லிதாக ஒரு 'ஹலோ' சொல்கிறார். உடனே அவர்களைவரும் அவரை நட்புடன் சூழ்ந்து கொள்கின்றனர். அவர்கள் அவரிடம் அவர் பிடித்த மீன்களைப் பற்றிக் கேட்கின்றனர். அந்த இயற்கையழகு அவருக்குப் பிடித்திருக்கின்றதா எனக் கேட்கின்றனர். அவர் எங்கிருந்து வந்தாரெனக் கேட்கின்றனர். தனது காரை எங்கேயோ மாறி விட்டுவிட்டதாக அவர் உரைக்கிறார். அதற்கு அவர்களில் ஒருவர் இனி அவருக்குக் காரின் தேவை இருக்காது எனவும் எங்கு போக வேண்டுமென அவர் விரும்புகிறாரோ அங்கே நினைத்த மாத்திரத்தில் அவர் இருப்பார் எனவும் உரைக்கின்றார். இதைக் கேட்டதும் அவர் தடுமாற்றமடைந்து அப்படியே மயக்கமாகிறார். ஒருவாறு அவர் மயக்கம் தெளிந்து எழுந்த போது ஒருவரைத் தவிர ஏனைய அனைவரும் போய் விட்டிருக்கின்றனர். நீண்ட வெண்மையான தாடியுடனிருந்த அவர், "மகனே நாம் பாடசாலையில் சேர்வதற்கான நேரம் வந்துவிட்டது" என்கிறார். "பாடசாலை" என இவர் வியக்கிறார். "வயதானவரே, நான் என்றோ படித்து முடித்து விட்டேன். அதைப் போல நீங்களும் தான் முடித்திருக்க வேண்டும்" என்கிறார். "நண்பனே, இது வித்தியாசமான பாடசாலை" என்கிறார் அந்த  வயதானவர். மீண்டும் அவர் "இது தான் உண்மையான பாடசாலை. இங்கே எங்களுக்கு எப்படி ஞாபகப்படுத்துதல், எப்படி மறத்தல், படிக்காமலே எவற்றையெல்லாம் அறியலாம் என்றெல்லாம் கற்றுத்தரப்படும்." என்கிறார். அந்த மனிதர் பெரிய குழப்பத்துக்குள்ளாகிறார். இருந்தும் அந்த வயதானவரைப் பின் தொடர்ந்து ஒரு பாடசாலைக் கட்டடத்துக்குச் செல்கிறார். அங்கே அவருக்கு அறிமுகமில்லாத பலர் வகுப்பறை போல தென்பட்ட ஒரு அறையில் இருக்கின்றனர். அவர்களில் ஒருவரைப் பார்த்தால் லயன்ஸ் கிளப்பில் சந்திக்கும் ஒரு சட்டத்தரணியைப் போலிருக்கிறார். ஆனால் அவர் இரண்டொரு கிழமைக்கு முன் இறந்து விட்டதால் அது வேறு யாரோவென நினைக்கிறார். வகுப்பு ஆரம்பிக்கப்படுகிறது. அந்த வயதானவர், "நீங்கள் எல்லோரும் ஏன் இங்கே வந்துள்ளீர்களென உங்களுக்குத் தெரியுமென நினைக்கிறேன்" என எல்லோரையும் பார்த்துக் கேட்கிறார். எல்லோரும் மௌனமாக இருக்கையில் புதிதாக வந்த இவர் மட்டும் தனது கையை உயர்த்தி உரத்த குரலில், "எனக்கு நான் இங்கே ஏன் வந்தேனெனத் தெரியவில்லை சேர்" என்கிறார். ஏனையவர்கள் இவரைத் திரும்பிப் பார்க்கின்றனர். அனைவரின் பார்வையிலும் ஒரு புரிதல் தெரிகிறது. அவர்களுக்கும் முதலில் ஒன்றும் புரியாமலிருந்து பின்னர் புரிந்து கொண்டிருக்கலாம். அந்த வயதானவர் மெதுவாகச் சொன்னார், "கவனமாகக் கேள் மகனே, ஏனெனில் இது மிக முக்கியமாகத் தெரியவேண்டிய விஷயங்களில் ஒன்று. இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் நான் ஒரு விஷயம் சொல்லப் போகிறேன். எமது மேலுலகத்துக்குப் புதிதாக வந்துள்ள ஜேம்ஸை நாம் வரவேற்போம். அவர் இந்த மாற்றத்துக்கு இன்னும் பழக்கப்படவில்லை. ஆனால் இதே குழப்ப நிலையில் தான் இங்கிருக்கும் பலர் சமீபகாலம் வரையில் இருந்ததனால் நாமனைவரும் சேர்ந்து அவரின் மனக்காயங்களை ஆற்றுவோம். ஜேம்ஸ், நாங்கள் கைகள், கால்களிலும் பார்க்க உங்களுக்கு மிக அண்மையிலுள்ளோம். எனவே நீங்கள் தனியே நின்று குழம்பத் தேவையில்லை. தற்போதைக்கு உங்கள் உற்றார் உறவினர்களை நீங்கள் பார்க்கவும் அவர்களுடன் பேசவும் இயலுமாக உள்ள போதும், அவர்களால் உங்களைப் பார்க்கவோ பேசவோ இயலாதென்பதை மட்டும் ஏற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் அவர்களிலும் பார்க்க உயிரோட்டமாக உள்ளதை இது நிரூபிக்கின்றது. உங்களது அறிவுத்திறன், உணர்வுகள், புலன்கள் உட்பட அனைத்தும் முன்பிலும் பார்க்க மிகக் கூர்மையானதால் நீங்கள் பூதவுடலை விட்டு வெளியேறிவிட்டீர்கள். ஆனால் அவர்களைப் பொறுத்தவரை இப்போதைக்கு அவர்கள் உங்களை வெறும் காற்றாகவே பார்ப்பார்கள். மண்ணுக்கடியில் புதைந்திருப்பதாகவே எண்ணுவார்கள். இது ஒரு பரிதாபத்துக்குரிய நிலை தான்... ஆனால் இதிலிருந்தே நாளை நாம் பாடத்தை ஆரம்பிப்போம்."
ஆர்தர் ஃபோர்டும் இதில் நிறுத்தினார். மறுநாள் பிரதான விஷயத்திலிருந்து சற்றே விலகி, "இப்புத்தகம் பூவுலகிலிருந்து மேலுலகுக்குச் செல்லும் வெவ்வேறு வகையான ஆத்மாக்களின் உண்மை நிலைப்பாட்டைப் பற்றியதாகும்" என்றார். தொடர்ந்து அவர், "மாடமாளிகைகளுக்கு ஆசைப்படுபவர்களுக்கு அவை உடனே கிடைக்கும். ஆனால் ஆன்மீகப் பசி உள்ளவர்களுக்கு அவர்கள் வேண்டியது தாராளமாகக் கிடைக்கும். அது தான் உண்மையான நோக்கம். அதாவது பொருளாசைக்கும் ஆன்மீகத்துக்கும் இடையிலான மோதல். ஒவ்வொரு ஆத்மாவும் தனக்குரிய வழியைத் தானே தான் தெரிவு செய்ய வேண்டும்" என்றார்.
"நேற்றுச் சொன்ன மனிதனின் கதைக்கு வருவோம். மீன் பிடித்தல் மட்டுமே பூவுலகில் அவரது பொழுது போக்காக இருந்தது. அவர் இங்கே வருமுன் தான் ஒரு அழகான ஏரியில் நிறைய மீன்கள் பிடிப்பதாகக் கற்பனை செய்திருந்தார். ஆனால் தான் பிடித்து வந்த மீனைப் பற்றிப் பேசுவதற்கோ அன்றி அதைச் சமைப்பதற்கோ ஒருவரும் இல்லாததைக் கண்டு அவர் ஏமாற்றமுற்றார். பூவுலகிலிருப்பவர்கள் ஒருவருக்கும் அவர் அங்கேயிருப்பது தெரியாதாகையால் அவரது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. சிறிது காலத்தில் அவர்களால் தன்னைப் பார்க்க இயலாதென்பதை அவர் புரிந்து கொண்டார். அத்துடன் புதிய வாழ்க்கைக்கு முன்னரிலும் பார்க்கக் கூடிய கவனம் தேவைப்படுகிறது என்பதையும் புரிந்து கொண்டார். அத்துடன் அவர்களைக் கேள்வி கேட்பதற்கோ பலவந்தப்படுத்துவதற்கோ அவசியம் இல்லாதவாறு விதிகள் ஸ்திரமாக இருப்பதையும் புரிந்து கொண்டார். இப்போ அவர் தன்னைச் சூழ்நிலைகளுக்கேற்ப மாற்றிக் கொண்டார். தனது பழைய வீட்டில் சுற்றிக் கொண்டிருப்பதையும் விட்டு விட்டார். நாம் ஒவ்வொருவரும் இப்படியான கட்டங்களைக் கடக்க வேண்டுமெனப் புரிந்து கொண்டார். எவ்வளவு விரைவில் நாம் விடயங்களைப் புரிந்து, புதிய வழிகளை அறிந்து கொள்கிறோமோ அவ்வளவுக்கு நாம் மகிழ்ச்சியடைவோம் எனவும் புரிந்து கொண்டார். நான் முன்பே கூறியது போல இது ஒரு உழைக்கும் உலகம். சோம்பேறிகள் அப்படியே இருந்து தங்களது விதியை தாங்களே தீர்மானிப்பார்கள். ஒருவரும் அவர்களை உழைப்பதற்குக் கட்டாயப்படுத்த மாட்டார்கள். அவர்களின் அந்தராத்மா அவர்களில் தான் அனைத்தும் தங்கியுள்ளதென்று சொல்லும் வரை அவர்கள் வளர்ச்சியுற மாட்டார்கள்.

Tuesday, February 16, 2021

நான்காவது அத்தியாயம்: மேலுலகக் கணனிகள் (Heavenly Computers)

மீன்பிடிக்கும் அந்த மனிதரையும் அவரது செய்கையை ஒருவரும் பாராட்டாமல் போனதையும் நினைக்கப் பரிதாபமாக இருந்தது. ஆனால் ஆர்தர் ஃபோர்ட் இவரிலும் பார்க்க அதிகப் பிரச்சினை உள்ளவர்களும் மேலுலகில் உள்ளனர் என்றார். இங்குள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்ப தங்களை மாற்றுவதற்குச் சிரமப்படுபவர்கள் மறு உலகவாழ்வு ஒன்று இருப்பதை நம்ப மறுத்தவர்களாகவோ அல்லது இதற்குக் கொஞ்சம் கூடத் தங்களைத் தயார் செய்யாதவர்களாகவோ இருக்க வேண்டும். எனவே எதிர்பாராத இந்தச் சூழ்நிலைக்கு ஏற்பத் தங்களை மாற்ற முயலாதிருப்பர். உதாரணமாக இறை நம்பிக்கையற்ற நாத்திகவாதி ஒருவர் தனது வாழ்வு முழுவதும் மறு உலகமொன்று இல்லையென வாதிட்டார். தன் இறப்பின் பின் அவர் மறு உலகில் கண்விழித்தார். ஆரம்பத்தில் அவருக்கு வியப்பாக இருந்தது. பின்னர் கோபமுற்றார். ஏனெனில் இது தனது மனப்பிரமை அல்லது கற்பனை என எண்ணினார். அவருக்கு உதவுவதற்கு வந்தவர்களையும் தனது விபரீதக் கற்பனையின் விளைவுகளென எண்ணினார். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாகத் தயங்கித் தயங்கித் தனது பிழையை ஏற்றுக் கொண்டார். கொஞ்சம் கொஞ்சமாக அவருக்கு எல்லாமே புரிபடத் தொடங்க இம் மேலுலகினைப் பற்றிய அனைத்து விடயங்களையும் அறிவதற்கு வெகு ஆவலானார். அவரைப் பொறுத்தவரையில் முன்னர் இப்படியான ஒன்றே இல்லையென்று இருந்தவர்.
இன்னொரு உதாரணத்தை எடுப்போம். இம்மனிதர் கடவுள் இல்லையென்றே மனதில் திடமாக நம்பியவர். இறப்புக்குப் பின் வாழ்வு இல்லையென்றே இருந்தவர். அவர் பூவுலகில் ஏனையவர்களுக்கெல்லாம் கொடுமை இழைத்தார். ஏனையவர்களுக்கு உதவும் மனப்பான்மையே அவரிடமில்லை. மொத்தத்தில் அவர் ஒரு நல்ல பிரஜையாக இருக்கவில்லை. அவர் மேலுலகுக்கு வந்த போது கடுங்கோபமுற்றார். ஏனெனில் அவர் தானே உருவாக்கிய ஒரு உலகில் இருந்தார். அவரைச் சூழ்ந்து பேராசை கொண்ட ஆத்மாக்களிருந்தன. அவைகளும் அதே சூழ்நிலையில் தான் அங்கு வந்திருந்தன. ஒத்த கருத்துள்ளவர்கள் ஒன்று சேர்வார்கள் என்பதற்கிணங்க அவர் அவைகளின் நடுவேயிருந்தார். அந்த ஆத்மாக்கள் தாங்களே உருவாக்கிய நரகத்துக்கு இவரை வரவேற்றனர். அவர் அதிர்ச்சியுற்றார். அவர் இப்படிப்பட்ட மனிதர்களிடையே இருக்க விரும்பவில்லை. அவர்கள் குரூரம் நிறைந்தவர்களாகக் காட்டுமிராண்டித் தனமான பழக்க வழக்கங்களுடன் காணப்பட்டனர். அவர் யாருக்காகவும் விட்டுக்கொடாதவர், படித்தவர், உடை நுனியில் கூட அழுக்குப் படாத மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர். தன்னைத் தவிர வேறு எவரைப் பற்றியுமே கவலைப்படாதவர். அந்தத் துஷ்டர்கள் கூட்டத்திலிருந்து விலகுவதற்கு முயன்றார். ஆனால் அவர்கள் இவரைச் சூழ்ந்து கொண்டனர். அவர் உதவிக்கு யாரையாவது அழைத்தார். நல்ல குணமுடைய ஒருவராலும் அந்தத் தீயவர்கள் வட்டத்துள் புக முடியாததனால் அவரைக் காப்பாற்ற ஒருவராலும் முடியவில்லை. சுருக்கமாகச் சொன்னால் அவருடைய சவக்குழியை அவரே தோண்டிக் கொண்டார். அதற்குள் அவர் சிறிது நாட்கள் இருக்க விடப்பட்டுள்ளார். 
இப்போ அவருக்குத் தான் புரிந்த முட்டாள் தனமான காரியங்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிபடத் தொடங்கின. இதிலிருந்து எப்படி விடுபடுவதென்று தெரியாமல் மனம் கலங்கினார். அவர் தனது தவறை உணர்ந்து உள்ளூர மனம் வருந்தி, அரிதாகக் கிடைத்த இந்த மானுடப் பிறவியைத் தன்னைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்ததால் வீணாக்கி விட்டதாக உணர்ந்து கொள்ளும் வரை அங்கேயே விடப்படுவார். அவர் முழுவதுமாகப் பச்சாதாபப்பட்டு உணர்ந்து திருந்தியதன் பின் திருந்தாத ஆத்மாக்களின் பிடியிலிருந்து தானே தன்னை விடுவித்துக் கொள்ளலாம். அதன் பின்னர் அவர் தனது முந்தைய தவறுகளை மறுபரிசீலனை செய்யும் முகமாக நீண்ட காலத்துக்கு ஆத்மீகத் தேடலில் ஈடுபடுவார். அது சில சமயங்களில் மிக மிக நீண்ட பணியாக அமைவதுண்டு. ஏனெனில் அவர் அந்தப் பாதையில் தனியே செல்ல வேண்டும். அவர் மட்டுமே தனது குற்றங்களைச் சரியாகக் கணிப்பிடவும் அதற்கு மன்னிப்புக் கேட்கவும் இயலும். அதே நேரம் அவர் நாடும் பட்சத்தில் அவருக்கு உதவுவதற்கு இங்கே பல கரங்கள் காத்திருக்கின்றன.
ஃபோர்ட் அடுத்ததாகத் தனது கவனத்தை அகால மரணங்களில் செலுத்தினார். "இன்று நாம் விபத்து, கொலை, போர் போன்றவற்றினால் எந்தவிதமான ஆயத்தமுமில்லாமல், அவர்கள் தரப்பில் ஏதும் பிழையுமில்லாமல் திடுமென மேலுலகில் நிற்பவர்களைப் பற்றிப் பார்ப்போம். முதலில் தாம் மேலுலகில் இருப்பதையும் பூவுலகில் இருப்பவர்களால் தங்களை அடையாளம் காண முடியாமல் இருப்பதையும் அறிந்து அதிர்ச்சியுறுவார்கள். ஆனால் அவர்கள் பூவுலகில் இருக்கும் போது மறுவுலக வாழ்வை மறுப்பவராயில்லாமல் இருந்தால், ஓரளவு விரைவாக இச் சூழ்நிலைக்குத் தங்களைப் பழக்கப்படுத்திக் கொள்வார்கள். நீண்ட நாட்களுக்குச் சுகயீனமுற்று இறப்பை எதிர்பார்த்துக் கொண்டு இருந்தவர்களிலும் பார்க்க இவர்கள் சில நேரங்களில் நீண்ட காலத்துக்குத் தூக்கம் கொள்வார்கள். ஆனால் அவர்கள் பெரும் பிழையேதும் புரியவில்லையென்றால் இங்குள்ள சூழ்நிலைக்கு அவர்களைப் பழக்கப்படுத்திக் கொள்வதற்கு இங்கு பல உதவும் கரங்கள் காத்திருக்கின்றன. அதனால் அவர்கள் விரைவில் புரிந்து கொள்ளத் தொடங்குவார்கள். சில சமயங்களில் இவர்கள் ஏனையோரிலும் பார்க்க மிக ஆர்வமாக இங்குள்ள பணிகளைச் செய்வதற்கு சித்தமாவார்கள்."
"மனதில் கசப்பான உணர்வுகளை அதிகம் கொண்டவர்கள் இச்சூழலுக்குத் தங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ள மிகவும் கஷ்டப்படுவார்கள். போருக்குத் தாங்கள் அனுப்பப்படுவதை வெறுக்கும் படைவீரர்களும் இதிலே அடங்குவர். தாங்கள் அனுபவித்துக் கொண்டிருந்த இளமையான பலம் நிறைந்த உடலை இழந்து விட்டதையறிந்து ஆத்திரமடைவர். இது எல்லாப் படை வீரர்களுக்கும் சேவை செய்பவர்களுக்கும் பொருந்தாது என்பதைத் தெளிவு படுத்திக்கொள்ள விரும்புகிறேன். நான் இப்போ சொல்வது மனித குலத்தின் விடுதலைக்காகத் தங்களது உயிரைக் கொடுக்க விரும்பாத, போர்களை வெறுப்பவர்களைப் பற்றியே சொல்கிறேன். அவர்களைப் பொறுத்தவரை போரென்பது அவசியமற்றது. அவர்கள் பூவுலகிலிருக்கும் போதும் மேலிடத்தில் எடுக்கப்படும் முடிவுகளை எதிர்த்தார்கள். இங்கு வந்ததன் பிற்பாடும் அதே மனநிலையிலேயே இருப்பார்கள். அதாவது இங்கிருக்கும் அன்பான ஆத்மாக்கள், அவர்கள் தங்களது ஆத்ம முன்னேற்றத்தைத் தாங்களே தடுத்துக் கொண்டிருப்பதை அவர்களுக்கு உணர்த்தும் வரை அவர்கள் அப்படியே இருப்பார்கள். எங்களால் மாற்ற முடியாத விஷயங்களுக்காக வீணாக மனவுளைச்சல் பட்டுக் கொண்டு வாழ்க்கையை வீணடிப்பதில் அர்த்தமேயில்லை."
"நாம் இப்போ வாழ்க்கையை வெறுத்துத் தற்கொலை செய்து கொண்டவர்களைப் பற்றிப் பார்ப்போம். இங்கு வருகையில் அவர்கள் மனப்போராட்டதுடன் இருப்பார்கள். ஏனைய உயிர்களைக் கொல்வது போல் தன்னுயிரைத் தான் எடுப்பதற்கும் ஒருவருக்கும் உரிமையில்லை. ஏனெனில் அனைவரும் இறைவனின் ஒரு பகுதியே. தற்காலிக மூளை மாறாட்டத்தில் தற்கொலை செய்தவர்கள் வெகு விரைவில் தங்களைத் தற்கொலைக்குத் தூண்டிய போலியான காரணிகளை உணர்ந்து அவற்றிலிருந்து விடுபடுவார்கள். அவர்களது உணரும் திறன்மூலம் பிரச்சனைகளைப் புரிந்து கொண்டு இப்படி நடந்ததற்கான காரணிகளை விளங்கிக் கொள்ளும் போது விபத்தினால் இங்கு வந்தவர்களைப் போலவே இவர்களும் மிக விரைவில் புதிய சூழலுக்குத் தங்களைத் தயார் செய்து கொள்வார்கள்.
ஆனால் எல்லோரும் அப்படி அதிர்ஷ்டம் செய்தவர்களல்ல. ஏனெனில் சிலர் தாமே சிந்தித்துத் தம் பிரச்சனையிலிருந்து தப்புவதற்குத் தங்கள் உடலை அழித்தால் ஆத்மாவும் அழியும் என எண்ணித் தங்கள் உடலைத் தாங்களே மாய்த்துக் கொள்கிறார்கள். ஆனால் அவர்களின் ஆத்மாவை அவர்களால் அழிக்க முடியாதாகையால் அவர்களின் பிரச்சனை முன்னிலும் பார்க்க இப்போ மிகக் கூடுதலாக இருக்கும். ஏனெனில் எந்தப் பிரச்சனையும் தற்கொலை செய்வதால் தீராது. ஆனால் அடுத்த பிறவி வரும் வரை தள்ளிப் போடப்படும். இங்கே அவர்களை மிகத்துன்பப்படும் ஆத்மாக்களென அழைப்போம். அவர்கள் தம்மைத் தாமே அழித்துக் கொண்டதை எண்ணி ஒவ்வொரு கணமும் வெட்கப்பட்டுக் கொண்டும் உடலுடன் இருக்கும் போதே பிரச்சனையைத் தீர்க்காததை எண்ணித் தங்களிலேயே கோபப்பட்டுக் கொண்டும் இருப்பார்கள். இங்கிருப்பதிலும் பார்க்க அங்கிருக்கையில் பிரச்சனையைத் தீர்ப்பது எளிது. பூவுலகின் பிரச்சனைத் தீர்ப்பதற்கு இங்கே வழிகள் ஏதுமில்லை என்பது தெரியும் தானே. அதனால் மறுபிறவி எடுக்கும் போது கூடுதலாக என்னென்ன பொறுப்புகளைச் சுமக்க வேண்டி வருமென அறிவதற்காகத் தனது தவறுகளை மீண்டும் மீண்டும் மறுபரிசீலனை செய்து கொண்டிருக்கும் மிக நீண்ட மனவாதையான காலங்களைக் கடக்க வேண்டியிருக்கும்."
"கொலையாளிகளுக்கும் இதே போன்ற மனவாதைகள் தான் இருக்கும். தன்னால் கொலையுண்டவரும் அதேயிடத்தில் இருப்பார் ஆதலால் அவருடைய வாழ்க்கையை அவருக்குத் திருப்பிக் கொடுக்க இயலாத பயங்கர நிலையில் அவர் இருப்பார். கொலையுண்டவரின் பூவுலக வாழ்க்கையில் அவரது சொந்தக் கர்மாவை உரிய காலத்தில் முடிப்பதற்குரிய சந்தர்ப்பத்தைக் களவாடிய குற்ற உணர்வினால் மனவாதைகளுக்கு உள்ளாவார். இறைவனது படைப்புகளுக்கு எதிரான இப்படிப்பட்ட பாவச்செயல்களுக்கு அவ்வளவு எளிதாகப் பரிகாரம் செய்ய இயலாது. எனவே இன்னொரு பிறவி எடுப்பதற்கான மனத்திடம் வரும் வரையில் அவர் மனவாதைகளினால் துன்புறுவார். இறுதியில் அவர் அடுத்த பிறவியில் தனது கர்மவினைகளைத் தீர்ப்பதாக மனத்திடம் கொள்வார்."
"இப்போ நாம் நோயுற்று, நலிந்து, அனுபவித்த வேதனைகளிலிருந்து விடுபடுவதற்காகச் சாவை ஆவலுடன் எதிர்நோக்குபவர்களைப் பற்றிப் பார்ப்போம். இவர்கள் இங்குள்ள நிலைமையை மிக இலகுவாக ஏற்றுக் கொள்ளக் கூடியவர்கள். அவர்கள் இங்கே மிக மகிழ்ச்சியாக உள்ளனர். மிக நிச்சயமாக நானும் அவர்களில் ஒருவனே. அங்கே இருக்கையில் இறப்பின் பின்னரான எமது வாழ்க்கையை நிரூபிப்பதற்கு நான் ஆவலாயிருந்தாலும் நோய்வாய்ப்பட்ட எனது உடலின் வேதனை என்னை இறப்பை ஆவலுடன் எதிர்பார்க்க வைத்தது. இங்கு வந்ததன் பின் ஒவ்வொரு கணத்தையும் மிக மகிழ்ச்சியாக அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். இப்படி இயல்பாக இங்கு வருபவர்களைப் பார்க்கையில் களிப்பாக இருக்கும். ஏனெனில் அவர்களின் இதயம் ஏனையோரில் உள்ள அன்பால் நிறைந்திருக்கும். எவர்க்கும் எந்த நேரமும் உதவிடத் தயாராக இருப்பார்கள். சிலர் புதிதாக வந்திருக்கும் குழந்தைகளை (அவர்களின் அன்னையர் இங்கு இல்லாததால்) கவனித்துக் கொள்வார்கள். மேலும் சிலர் இங்கு புதிதாக வருபவர்கள் இப்புதிய சூழ்நிலைக்கு மனதளவிலும் ஆத்ம அளவிலும் இணைந்து போவதற்கு உதவுவார்கள். அதே நேரத்தில் மேலும் சிலர் பூவுலகில் உற்றவர்களை இழந்து வருந்துபவர்களுக்கு அன்பான எண்ணங்களை அனுப்பி ஆறுதற்படுத்துவார்கள்.
அடுத்ததாக, தான் வேறொரு இடத்தில், வேறொரு சமயத்தில் இருப்பதை உணர்ந்தாலும், எங்கே, எப்போ என்பது புரியாமல் இருப்பவர்களைப் பற்றிப் பார்ப்போம். அவர் மறு உலக வாழ்வைப் பற்றி எந்த ஒரு விதமான எண்ணமுமின்றி, அவ்வாழ்க்கைக்கு எவ்விதமாகவும் தயாரில்லாமல் இருந்திருக்கிறார். இங்கு வந்தவுடன் முதலில் திகைப்பில் ஆழ்வார். ஆனால் பின்னர் ஆவல் மிகுந்த வியப்புடன் காணும் அனைவரிடமும் கேள்விக்கணைகள் தொடுப்பார்: 'எங்கே இருக்கிறோம்?', 'ஏன் நான் பேசினாலும் சிலர் என்னிடம் பேசுகிறார்களில்லை', 'ஏன் எனது மனைவி நான் சொல்வதைக் கவனிக்காமல் தன் பாட்டில் தனது வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறாள்?'. இறப்புக்குப் பிறகான மறுவாழ்வைப் பற்றிய உண்மைகள் இங்கே எப்போதுமே இருந்திருந்தாலும் அவர் உடலுடன் இருக்கையிலேயே வெகு இலகுவாக அறியக்கூடியதாக இருந்த அவ்வுண்மைகள் அவரை வியப்பிலாழ்த்த அவர் இப்போது தான் விடைகளைத் தேடி அங்குமிங்கும் அலைந்து திரிவார். 
அவர் வேறொரு முன்னேற்றமான வாழ்க்கை முறைக்குத் தன்னைத் தயார் செய்யவில்லை என்றால் படிப்படியாக நம்பிக்கை இழந்தவராக ஆகிவிடுவார். அவர் தனது பழைய வாழ்க்கை முறையான வெற்றியைக் குறிவைத்தல், பணம் சேர்த்தல் என்பனவற்றில் ஈடுபட விரும்புவார். சில காலத்தின் பின்னர் இங்கிருக்கும் சில பழைய ஆத்மாக்கள் அவரை வழி நடத்தத் தொடங்குவார்கள். அவர்கள் அவருக்குப் பல விஷயங்களைப் புரியவைப்பார்கள். இன்னமும் இப்பூவுலகில் அலைந்து திரியவைக்கும் அவரது ஆணவத்தை விட்டொழித்து, சமாதானமானார் என்றால் அதன் மூலம் அவருக்குக் கிடைக்க இருக்கும் ஆச்சரியமளிக்கக் கூடிய அனுபவங்களைப் பற்றிச் சொல்வார்கள். சிலவேளைகளில் அவருக்குப் புரியவைப்பதற்குக் கூடுதல் காலம் தேவைப்படலாம். அதாவது பூவுலகில் நேரத்தை வீணடிப்பதிலும் பார்க்க மேற்சொன்ன வழிகளைக் கையாள்வதில் முன்னேறுவதற்குக் கூடிய சந்தர்ப்பம் இருப்பதை அவருக்குப் புரியவைக்கக் கூடுதல் காலம் தேவைப்படலாம். அவர் படிப்படியாகப் பூவுலகத் தளைகளில் இருந்து விடுவிக்கப்படுவார்.
"அதன் பின் அவர் தன் நிலையை உணர்ந்து இங்கேயுள்ள வழிமுறைகளைக் கையாள்வார். அவையாவன: தனிமையில் தன்னைத்தானே உணர்தல், ஏனையோருக்கு உதவுதல், தியானம், இப்போ கடைசியாகக் கடந்து வந்த வாழ்க்கையைப் பற்றிய ஆழ்ந்த மறுபரிசீலனை என்பவை போன்றன. இந்த நிலையானது அவர் தனது கடந்த காலத் தவறுகளை ஆராய்ந்தறிந்து அடுத்து வரும் பிறவியில் சிறப்பாகச் செய்வதற்கு உறுதியான தீர்மானம் எடுக்கும் வரையிலும் தொடரும். இதன் பின்பும் அவர் நிம்மதியின்றித் தான் தனது தவறுகளை உணர்ந்து விட்டதை நிரூபிக்க விரும்பின் முதலாவதாக வரக்கூடிய சந்தர்ப்பத்தில் மீண்டும் பிறவியெடுக்க விரும்பலாம். அப்படிப்பட்ட பட்சத்தில் அவர் சந்தர்ப்பம் வரும் போது அவரது குறைகளைக் களையக்கூடிய சந்தர்ப்ப சூழ்நிலைகளை உருவாக்கக்கூடியதான பல தாய்மார்களில் ஒரு தாயை அவர் தேர்வு செய்யக்கூடியதாக இருக்கும்."
ஒரு ஆத்மா பிறவி எடுப்பதற்குரிய வழிமுறைகளைப் பற்றி மேலும் விபரிக்குமாறு நான் அவரைக் கேட்டேன். அதற்கு அவர், "ஒரு ஆத்மாவுக்கு மிகவும் அவசியமாக விட்டொழிக்க வேண்டிய கர்மாக்களைப் பற்றி ஆழ்ந்து ஆராய்ந்து அறிவதற்கும் மேலும் முன்னேறுவதற்கு என்னென்ன குணாதிசயங்கள் அதிகமாகத் தேவைப்படுமோ என்பதைத் தீர்மானிப்பதற்கும் போதுமான அளவு கால அவகாசம் தேவை. அதன் பின்னரே அவ்வாத்மா பிறவி எடுப்பதற்குரிய சந்தர்ப்பம் வருவதுண்டு" என்றார்.
அவர் தொடர்ந்து, "இவற்றைத் தீர்மானித்ததன் பின் முற்பிறவிப் பாவங்களைத் தீர்த்து முன்னேறுவதற்கு ஏற்ற வகையிலான குணாதிசயங்களைப் பெறக்கூடிய அனுபவங்கள் வரக்கூடியதான சந்தர்ப்பங்களையும் சூழ்நிலைகளையும் கண்டுபிடிக்க வேண்டும். பொறுமை என்னும் குணாதிசயம் தேவைப்படின் அவரது பொறுமையின்மையைச் சோதிப்பதற்கு ஏற்ற சூழ்நிலைகளைத் தேடிப்பிடிப்பார். அன்பு செலுத்துவதைப் பற்றி அறியவேண்டுமெனில் அன்பு குறைவான ஒரு சூழ்நிலையைத் தெரிவு செய்ய வேண்டும். அப்படியென்றால் தான் அன்பு செலுத்தாதவர்களிடையே தனது அன்பு செலுத்துவதற்கான பரீட்சையைச் செய்து பார்க்கலாம். இவ்வாறே வேறு குணாதிசயங்களுக்கும் ஏற்ற சூழ்நிலைகள் தெரிவு செய்யப்படும். அவர் தனது பெற்றோரைத் தெரிவு செய்யும் தகைமையைப் பெற்றிருந்தால் முந்தைய பிறவிகளில் தன்னோடு தொடர்புள்ளவர்கள், தளைகள் உள்ளவர்களிடையே பொருத்தமானவர்ளைத் தேடிப்பார்ப்பார். அத்தளைகள் நல்லவிதமாகவும் இருக்கலாம் அல்லாததாகவும் இருக்கலாம்.
"பிள்ளைகளைக் கருத்தரித்திருக்கும் தாய்மார்களிடையே ஆண்பிள்ளை, பெண்பிள்ளைகளைக் கருத்திற் கொண்டு தான் எடுக்கப் போகும் பிறவியில் ஆணாகவோ, பெண்ணாகவோ பிறப்பதென்பதைப் பொறுத்து எந்தத் தாயைத் தெரிவு செய்ய இயலுமோ அதற்கேற்ப தெரிவு செய்வார். உயர்தரமான எண்ண ஓட்டங்கள் இருந்தால் கல்வி கற்பதற்குரிய சந்தர்ப்ப சூழ்நிலைகளையும் பார்ப்பார். ஆத்மாவானது பிறவியெடுக்க எத்தனிக்கையில் தான் பிறக்கப் போகும் சூழ்நிலைகள் சம்பந்தமான விடயங்களை இங்கேயுள்ள, நாம் நகைச்சுவையாக 'மேலுலகக் கணனி' (heavenly computer) என அழைக்கும் ஒருவித கொம்பியூட்டர் அமைப்பு முறையுடன் தொடர்பு கொண்டு தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும். அது மனித மூளைக்குக் கொஞ்சமும் எட்டாத மிக மிகச் சிக்கலான ஒரு பதிவு முறையாகும். ஆனால் இங்கு இது மிகச் சரியான முறையாகும். ஒரே நேரத்தில் பல ஆத்மாக்கள் பிறவி எடுக்க விரும்புவதால் இப்பதிவு முறை ஏற்புடையதாகும். ஒரு குறிப்பிட்ட தாய்க்குப் பலர் போட்டியிட்டால் இங்கே பதியப்பட்டிருக்கும் அவர்களின் தகைமைகளின் அடிப்படையில் அந்தத் தாய்க்குப் பொருத்தமானவர் தீர்மானிக்கப்படுவார்.
பூவுலகிலிருக்கும் கொம்பியூட்டர் முறையானது இங்கிருக்கும் கொம்பியூட்டரின் பகுதிகளில் வேலை செய்தவர்களின் மனங்களின் மூலம் அங்கு கொண்டு வரப்பட்டு உருவானதே. இங்கேயுள்ள எல்லையில்லாத அறிவுப்புலனின் ஒரு பகுதியைப் பெற்றே உருவானதாகும். அதே போலவே எடிசன் போன்ற ஏனைய விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளும். நினைவு படுத்திப்பார், "இந்த இடம் ஒளிரட்டும்" என்றவுடன் ஒளிவரவில்லையா? இங்கேயிருக்கும் அதே வடிவத்தையே மனித இனத்தின் பாவனைக்காக என்றே இருக்கும் இயற்கை மூலதனங்களைக் கொண்டு எடிசன் பெளதீகமாக உருவாக்கினார்.
"பிறவி எடுக்கப் போகும் ஆத்மாவானது தனது விருப்பத்தை மேலும் உறுதி செய்து கொள்ளத் தனது வருங்காலப் பெற்றோருக்கு அண்மையில் சிறிது காலம் சார்ந்திருக்கும். பின்னர் நேரகாலம் கூடி வரும் போது குழந்தை பிறக்கும் தருணத்தில் ஆத்மாவானது உடலுள் புகும். சாதாரணமாகப் பிறக்கும் சமயத்தில் தான் இது நிகழும். சில தருணங்களில் பிறப்பதற்குச் சற்று முன்னரோ அல்லது சற்றுப் பின்னரோ புகலாம். ஆத்மா கூடுதல் நேரத்திற்குத் தயங்கினால் அக்குழந்தை உயிர்வாழாது".
இறந்தே பிறக்கும் குழந்தைகளின் விஷயத்தில் என்ன நடக்கிறதென்பதைக் கேட்டேன். அதற்கு அவர், "குழந்தையின் உடல் வளர்ச்சி முற்றுப் பெற்றிருக்காது. அதனால் ஆத்மா அவ்வுடலினுள் புகாது. அப்படியான சந்தர்ப்பத்தில் அந்த ஆத்மா மீண்டும் ஒரு ஊடகத்தைத் தேட வேண்டும். அந்தக் குறிப்பிட்ட பெற்றோருடனேயே வாழ விரும்பின் சரியான தருணத்துக்குக் காத்திருக்க வேண்டும். குழந்தை கென்னடியின் விஷயத்தில் அதுவே நிகழ்ந்தது. அவர் தன்னுடைய பழைய உறவினர்களுடன் மறுபடியும் சேர்வதற்கு முயன்ற வேளையில் அக்குறிப்பிட்ட உடல் முற்றாக வளர்ச்சியுறாத காரணத்தால் உயிர் வாழ இயலாமல் போனதால் மீண்டும் ஒரு சந்தர்ப்பத்துக்காகக் காத்திருக்க முடிவு செய்தார். ஆனால் அச்சந்தர்ப்பம் வரவேயில்லை. எனவே அவர் இன்னும் இங்கேயே இருக்கிறார். இப்போதெல்லாம் அவர் தனது தந்தையாருடனும் சிறிய தந்தையாருடனும் அதிகம் காணப்படுகிறார்.
அன்று முழுவதும் பெற்றோரைத் தெரிவு செய்யும் இந்த முறையினை எண்ணியெண்ணி நான் வியந்து கொண்டிருந்தேன். மறுநாட் காலை ஆர்தர் தனது பேருரையைப் பின்வருமாறு தொடங்கினார்: "இன்று, உன்னை வெகுவாகக் கவர்ந்த மேலுலகக் கம்பியூட்டரைப் பற்றிப் பார்ப்போம். ஒரு ஆத்மாவானது மறுபிறவி எடுக்க விழைகையில் அவ்வாத்மா தனது தகைமைகளையும் (அவர் விளங்கிக் கொண்ட மாதிரி) அதே நேரத்தில் அந்தக் குறிப்பிட்ட ஊடகத்தினைத் தனது பூவுலகப் பிரவேசத்துக்குத் தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தையும் எண்ண அலைகளாகப் பதிவார். அதைப் போலவே ஏனையவர்களும் தங்களது தேர்வுகளை விண்ணப்பித்திருக்கும் பொதுவான எண்ண வடிவத்துள் இவரது எண்ண அலையும் வந்து சேரும். பின்னர் அந்தக் குறிப்பிட்ட சூழ்நிலையில் தன்னைத் தக்க வைக்க மிகவும் பொருத்தமானவர் தேர்ந்தெடுக்கப்படுவார். தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் அவருக்கு அது தானாகவே தெரியவரும். ஏனையோருக்கும் தங்களது கர்மவினைகளுக்கு ஏற்ற விதமாக வேறு சாத்தியக் கூறுகளைத் தேட வேண்டும் என்பதும் தெரியவரும்.
"பூவுலகில் இருப்பவர்களுக்கு நான் சொல்வதைப் புரிந்து கொள்வதும் ஏற்றுக் கொள்வதும் கடினம் என எனக்குத் தெரியும். ஆனால் இங்கே இருப்பவர்களுக்கு இது மிகவும் யதார்த்தமான வழியே. இங்கேயிருப்பவர்கள் இயங்கும் விதமானது உங்களது வழக்கப்படி பார்த்தால் கிட்டத்தட்ட எண்ணங்கள் மூலமாகவோ அல்லது அதீத புலனுணர்வுகள் மூலமாகவோ தான் என்பதை மறந்துவிடாதே. நாங்கள் ஒலிகள் மூலமாகவோ அல்லது கருவிகள் மூலமாகவோ தொடர்பு கொள்ள வேண்டிய தேவையில்லாததால் இயல்பாகவே எண்ண வடிவங்கள் மூலமாகத் தொடர்பு கொள்ள வேண்டுமென்பது வெளிப்படை."
நான் அவரை இடை மறித்து ஊனமுற்ற உடலுடன் பிறப்பவர்களைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர், "ஆச்சரியப்படும் விதமாக சாதாரண ஆரோக்கியமான உடலுடன் பிறக்கும் குழந்தைகளைப் போலவே உடல் ஊனமுற்ற குழந்தைகளுக்கும் ஏறத்தாழ ஒரேயளவு ஆத்மாக்களே இங்குள்ளன. இது இங்கே அறியப்படும் ஒரு முக்கியமான பாடமாகும். பௌதீக உடலில் எவ்வளவு குறைகள் இருக்கின்றனவோ அவ்வளவு விரைவில் அந்த ஆத்மா தனது கர்மவினைகளைப் போக்கி ஆத்மீக முன்னேற்றம் அடைய முடியும். 'இடையூறுகள்' எல்லாம் 'வெற்றிகரமாகக் கையாளப்படின்' அவை உயர்வுக்கான படிகளே. ஊனமுற்ற உடலை மகிழ்வுடன் ஏற்று வாழ்வை வெற்றிகரமாக வாழ்பவர் எல்லா வளங்களுடனும் வாழ்பவரிலும் பார்க்க விரைவாக முன்னேற்றமடைந்து விடுவார். வெகுமதியானது சடப்பொருள் வடிவிலில்லை ஆனால் ஆத்மீக ரீதியில் தான் உள்ளது. ஒரு வாழ்க்கைக் காலத்தில் எவ்வளவுக்கெவ்வளவு இடையூறுகளை ஒரு ஆத்மா தாண்டிச் செல்கின்றதோ அவ்வளவுக்கவ்வளவு அந்த ஆத்மா அதன் பின் (தனது கர்மவினைகளைக் கழிப்பதற்குப்) பிறவியெடுக்க வேண்டிய தருணங்கள் குறைவு."
அடுத்ததாக நான், பிறக்கும் போதோ அல்லது சிறு வயதிலேயோ மனநிலை பாதிக்கப்பட்டவர்களைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர் பின்வருமாறு பதிலளித்தார்: "இந்த நிலைமையானது மிகவும் கவலைக்குரிய நிலைமையாகும். நாம் அவர்களைப் பற்றி நினைப்பதைக் கூட விரும்புவதில்லை. இவையெல்லாம் தங்களை முன்னேற விடாமல் தடுக்கும் முன்செய்த வினைகளைப் போக்குதற்கு மிகவும் போராடும் ஆத்மாக்கள் தாம் ஆன்மீகத்தில் முன்னேறுவதற்காக இப்படியான சித்திரவதைகளையும் ஏற்பதற்கு விரும்புவார்கள். சிலசமயங்களில் முற்பிறவிகளில் செய்த கர்மவினைகளைக் கழிப்பதற்கான காரணத்துடன் இம்மாதிரியான பாதிக்கப்பட்ட உடல்களுடன் பிறப்பார்கள். மேலும் சில சமயங்களில் முற்பிறவிகளில் தங்களால் இழைக்கப்பட்ட கர்மவினைகளுக்காக உண்மையிலேயே கழிவிரக்கப்பட்டுத் தாங்களாகவே இப்படிப்பட்ட உடல்களை எடுப்பார்கள். ஆனால் மிகக்கூடுதலான சந்தர்ப்பங்களில் முந்தைய பிறவிகளில் இழைக்கப்பட்ட மிகப்பெரிய பாவங்களால் மனவாதைக்கு உட்பட்டுத் தங்களுக்குரிய முடிவுகளைத் தாங்களே எடுக்க இயலாமலிருக்கும் ஆத்மாக்களில் கருணை கூர்ந்து உயர்ந்த சக்திகள் அவர்களுக்காக அப்படிப்பட்ட உடலைத் தீர்மானிப்பார்கள். மருத்துவமானது இப்படிப்பட்ட மூளைப் பாதிப்பானது கரு உருவாகையில் ஏற்படும் குறைபாடு என்றோ அல்லது குழந்தை பிறக்கையில் நிகழ்ந்த பாதிப்பென்றோ சொல்லலாம். அதுவே உண்மையுமாகும். ஆனால் அந்த உடலில், பிறக்கும் தருணத்திலோ முன்பின்னோ நுழையும் ஆத்மாவானது இந்தப் பாதிப்பை உணர்ந்தே இருக்கும். அதனால் அது தனது முன்செய்த வினைகளுக்குரிய தண்டனையைத் தானே அனுபவிக்கிறது.
பருவவயதில் அல்லது பருவமுதிர்ச்சி அடைந்த பின்னர் உடலில் ஏற்படும் மிகப் பெரிய காயங்களைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர், "சில வேளைகளில் அப்படிப்பட்ட விபத்துகள் எந்தவிதமான முன் எச்சரிக்கயுமின்றி அந்த ஆத்மாவின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சூழ்நிலையில் நடப்பதால் தவிர்க்க முடியாமலிருக்கும். ஆனால், கூடுதலாக அந்த உடலில் வதியும் ஆத்மா தன்னையறியாமலே தனது கர்மவினைகளைத் தீர்க்குமுகமாக அப்படிப்பட்ட விபத்துகளை வலியவே வர அனுமதிக்கிறது.
பூவுலகிற்கு வரும் ஆத்மா எப்படி ஆண், பெண் பாலைத் தீர்மானிக்கிறதென கேட்டதற்கு அவர், "கூடுதலாக ஆத்மா முந்தைய பிறவிகளில் தான் தீர்மானித்த அதே பாலையே எடுப்பதற்கு விழையும். ஆனால் சில சமயங்களில் சில குணாதிசயங்களை அறிவதற்காக அது மற்றைய பாலுக்கு மாறலாம். ஏனெனில் சில குணாதிசயங்கள் ஒருவகைப் பாலிலும் பார்க்க மற்றையதில் உணர இலகுவாக இருக்கும். மென்மைத் தன்மை. முந்தைய பிறவிகளில் முரடாக இருந்த ஒரு ஆண் சில சமயங்களில் வரும் பிறவியில் மென்மையான குணங்களைப் பெறுவதற்காக மென்மைத் தன்மை தேவைப்படும் சந்தர்ப்ப சூழ்நிலைக்காகப் பெண்ணாகப் பிறக்கலாம். தைரியம். முந்தைய பல பிறவிகளில் கோழையாக இருந்த ஒரு பெண் தனது பூவுலகப் பயங்களைப் போக்குவதற்காக ஒரு ஆண் குழந்தையாகப் பிறக்கலாம்.
இப்போ, 'பால்ஸி' எனப்படும் கைகால் நடுக்கமுள்ள ஒரு பெண்ணைப் பற்றிப் பார்ப்போம். தன்னுடைய இவ்வுலக வாழ்க்கையில் தான் ஒரு குற்றமுமே இழைக்காத போது ஏன் தனக்கு இப்படியொரு கஷ்டம் வந்ததென அவர் எண்ணினார். 'ஆகாஷிக் ரெக்கார்ட்ஸ்' எனப்படும் வான் படிமங்களை நாம் பார்வையிட்ட போது அவர் முந்தைய பிறவியொன்றில் பழைய ரோமாபுரியில் ஒரு கொடிய போர்வீரனாக இருக்கையில் மற்றையவர்களைப் பயத்தால் நடுங்க வைத்து அதில் இன்பம் கண்டிருக்கிறார். காட்டு விலங்குகளைச் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட கிறிஸ்தவர்களின் முன் ஏவிவிட்டு அவர்கள் நடுங்குவதைப் பார்ப்பார். கடைசியில் இப்பிறவியில் பலவீனமான நடுக்கமுள்ள ஒரு பெண்ணாகப் பிறந்து அக்குறையுடனும் நல்லதொரு வாழ்க்கையை வாழ்வதன் மூலம் ஆத்மீகத்தில் பெரிய முன்னேற்றமடைவார்."
"எல்லோரும் தன் மீது அன்பு பாராட்ட வேண்டுமென எண்ணும் ஒரு மனிதனைப் பார்ப்போம். அவர் அனைவரது அன்பைப் பெறுவதற்காகவும் பலருக்குப் பல உதவிகள் புரிவார். அவருக்கு முகத்திலும் கழுத்திலும் பெரிய தழும்புகள் இருப்பதால் ஏனையோர் அவரைப் பார்த்து ஒதுங்கினாலும் அவருடைய உபசரிப்பினால் அவரைச் சகித்துக் கொள்வார்கள். இவ்வளவு அன்பான மனிதன் இவ்வளவு பாரமான சிலுவையைச் சுமக்க வேண்டி இருக்கிறதே என எல்லோரும் அவர் மீது இரக்கப்படுவார்கள். அவர்கள் சொல்வது சரிதான். ஆனால் அவர் அப்படிப்பட்ட குறைபாடுள்ள உடலைத் துணிவாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார். ஏனெனில் முந்தைய பிறவியொன்றில் ஒரு சிறு பிள்ளையை அதன் முகத்திலும் கழுத்திலும் கடுமையாகத் தாக்கியதில் அக்குழந்தையின் எலும்புகள் நொறுங்கி அது இறந்து விட்டது. கண்ணுக்குக் கண்ணென்று உயர்ந்த நூல் சொல்கிறது. அதைத்தான் நாமுணர்ந்து நமது பாவங்களைக் கழித்து இறைவனை அடைவோமாக."

Sunday, February 7, 2021

ஐந்தாவது அத்தியாயம்: ஞானாலயம் (Temple of Wisdom)


ஆர்தர் ஃபோர்டின் இறுதிச் சடங்குகள் நிறைவு பெற்றன. அவரது இறுதி ஆசையாக அவரது சாம்பல் மையாமிக்கு அருகே அத்திலாந்திக் சமுத்திரத்தினுள் தூவப்பட்டது. ஒரு மாதம் முடிவடைவதற்குள் அவர் தன்னுடைய தொடரும் வாழ்க்கையின் இன்னொரு புதிய அம்சத்தைப் பற்றிப் பின்வருமாறு விளக்கத் தொடங்கினார்: "எனது பழைய நண்பர்களைச் சந்தித்து உரையாடி, ஃப்ளெட்சருடனும் பல நாட்கள் உரையாடி மகிழ்ந்த பின் நான் ஒரு முக்கியமான இடத்தைத் தேடத் தொடங்கினேன். எனது முந்தைய பிறவிகளின் இடையே இங்கு வசிக்கையில் சற்றே நினைவில் உள்ளதும், எனக்குள் ஃப்ளெட்சரின் ஆத்மா வந்த போது நான் சற்றே உணர்ந்ததுமான அந்த ஞானாலயத்தைத் தான் தேடத்தொடங்கினேன் ."
"நான் அதிக நேரம் தேடவேண்டிய தேவையிருக்கவில்லை. யாரிடமேனும் அதற்கு வழியறிய வேண்டிய தேவையின்றி நானே அங்கு நின்றேன். எனது நினைவில் இருந்ததைப் போலவே அது ஒரு மலைச்சரிவுக்கு அப்பால் மறைவாயிருந்த குன்றிலிருந்து வரும் அருவிக்கருகில் இருந்தது. அது பழமை வாய்ந்ததாக இருந்தாலும் அந்த இயற்கை அழகுடன் மிக அழகாகப் பொருந்தியிருந்தது. அது நமது வாழ்க்கைப் பாதையின் ஒரு பகுதி போல இருந்தது. அங்கு ஆசிரியர்கள் எனக்காகக் காத்திருந்தனர். என்னைக் கண்டதும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். அதனுடைய அற்புதங்களையும் எண்ணங்களின் அழகையும் நான் மறக்கவில்லை என்பதையறிந்து மிகவும் மகிழ்வுற்றனர். வட்டமாக நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. நான் எனக்குப் பரிச்சயமான இடத்தில் அமர்ந்ததும் அவர்களில் வயதில் மூத்தவர் என்னைப்பார்த்து, 'ஆர்தர் நீங்கள் மிகக்குறுகிய காலமே இங்கிருந்து சென்றிருக்கிறீர்கள்' என்றார். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. கிட்டத்தட்ட எழுபது வருடங்கள் பூவுலக வாழ்க்கையை வாழ்ந்தது எனக்கு மிக நீண்ட பயணமாகவிருந்தது. ஆனால் இங்கே அது கண்மூடித் திறப்பதற்குள் முடிந்து விட்டது போலுள்ளது. முக்கால்வாசி நூற்றாண்டுக்கு முன் விட்ட இடத்திலிருந்து பாடத்தைத் தொடர்ந்தோம். காலம் மாறாமல் அப்படியே நின்றது போலிருந்தது."
"தியானத்தைப் பற்றிய உரையாடலுடன் ஆசிரியர் பாடத்தைத் தொடங்கினார். தியானம் பூவுலகிலும் இங்கும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை எனக்கு நினைவுபடுத்தினார். தியானம் என்பது இறைவனின் இதயத்துடன் எம்மைத் தொடர்புபடுத்தும் ஒரு வசீகரமான பாதையாகும். அதனால் தான் பூவுலகிலிருக்கும் போதே தியானம் செய்வது மிக மிக அவசியமானதாகும். ஏனெனில் பூவுலகில் அறிவது இங்கிருக்கும் சாராம்சத்தைத்தான். தியானம் செய்து கொண்டிருந்தால் தான் ஒரு தொடர்ச்சியிருக்கும். அத்தொடர்ச்சி உடைந்து விடக்கூடாது. பிறந்த குழந்தையே அங்கு தொடர்ந்து தியானம் செய்து படைத்தவனுடனான ஒருமையை உணர்ந்து கொண்டிருக்கும்."
"ஞானாலயத்தில் எமது கலந்துரையாடலை முன்னின்று நடத்தும் பழைய ஆத்மாக்கள் உன்னுடன் காலைவேளைகளில் நான் நடத்தும் உரையாடலுக்கு ஒரு கணமேனும் யோசிக்காமல் அனுமதி தந்துவிட்டனர் ரூத். இச்செய்தியானது பரப்பப்பட்டு அதனால் அனைவரும் பயன் பெறவேண்டுமென அவர்களும் என்னைப் போலவே ஆர்வத்தோடுள்ளனர். இப்புத்தக வேலை முடியும் வரை இந்தக் காலை வேளைகளில் நடைபெறும் உரையாடலைத் தொடரும்படி என்னிடம் சொன்னார்கள். இது ஒரு தற்காலிகமான ஏற்பாடு தான். இவ்வேலை முடிந்ததும் நான் வேறு வேலைகளுக்குச் சென்று விடுவேன். இங்கிருக்கும் உயரிய ஆசிரியர்களுடன் சேர்ந்து இங்கு வரும் ஒத்த மனநிலையில் உள்ள மாணவர்களுக்கு நான் பயிற்சியாளராக வரக்கூடிய விதமாக என்னைத் தயார் செய்யக் கூடிய வேறு கடமைகளுக்கு நான் செல்வேன். நான் பூவுலகில் இருக்கையில் நம்பிக்கைக்கு உண்மையுள்ளவனாக இருந்ததற்கும் தினமும் தவறாமல் தியானம் செய்ததுடன் எனது பேருரைகள், கலந்துரையாடல்கள் மூலம் தியானத்தின் மகிமையை உலகெங்கும் பரப்பியதற்குமான வெகுமதியின் ஒரு பகுதியே இது. இல்லையெனில் நான் மீண்டும் கீழ்மட்டத்தில் இருந்து மாணவனாகத் தொடங்கியிருக்க வேண்டும். அது எவ்வளவு காலமோ தெரியாது. இங்கு நேரத்தை அறியும் வழிமுறைகள் இல்லாததால் எவ்வளவு காலம் பிடிக்குமென்று யாரால் சொல்லமுடியும்?" 
"இந்த ஞானாலயத்தைப் பற்றி உனக்கு மேலும் சொல்ல விரும்புகிறேன். காலங்காலமாக இந்த ஞானாலயமானது இப்படியே இருந்து வருகிறது. தீப்ஸ் என்ற பழங்கால ராஜ்யத்திலும் அதே போலப் பழங்காலக் கிரேக்க ராஜ்யமான ஏதென்சு நகரிலும் கிட்டத்தட்ட இதே போன்ற சபைகள் ஸ்தாபிக்கப்பட்டன. இங்கேயிருக்கும் புனிதமான எண்ணவடிவிலான ஞானாலயத்தைப் போலவே பூவுலகில் உருவாக்க வேண்டுமென்று சில பழைய ஆத்மாக்கள் விரும்பி ஞானாலயத்தைப் பற்றிய போதிய அளவு நினைவினைக் கொண்டு பூவுலகில் பிறந்ததனால் உருவாக்கப்பட்டவையே அவை. இங்கு வழங்கப்படும் அறிவுரைகள் மனத்தாலேயே வழங்கப்படும். ஆனால் தெய்வீகமானது இங்கு வழங்கப்படும் கல்வியின் ஒவ்வொரு அணுத்துகளிலும் ஊடுருவியிருப்பதால் ஒவ்வொரு நாளும் ஒருவரது வாழ்க்கைச் சரிதத்தைப் பற்றிய மிகவும் இனிமையான சமயச் சொற்பொழிவைக் கேட்பது போலிருக்கும். எம்மை இறைவனின் மகிமைகளாலும் அண்டசராசரங்களின் வியப்புகளாலும் நிறைப்பதால் எமக்கேற்படும் ஆத்ம எழுச்சியானது சொல்லிலடங்கா."
"மரங்கள் அடர்ந்த சோலையுள்ள சாய்வான ஒரு மலைத்தொடரைக் கற்பனை செய்து கொள். மரங்களின் இலைகளினிடையே சூரியக்கதிர்கள் புகுந்து வந்து விழ மரங்களின் இலைகள் ஒன்றோடொன்று சேர்ந்து அழகான சித்திர வேலைப்பாடாய்த் தெரியும் அந்த வனத்திலுள்ள சிறிய ஒரு வெளியில் தான் எமது ஞானலயமுள்ளது. ஒதுக்குப்புறமாக, அமைதியாக இறைவனின் ஆடைகளான வெயிலாலும் நிழல்களாலும் சூழப்பட்டுள்ளது. நாம் எமது தூய எண்ணங்கள் மூலம் எமது கல்வியைத் தொடங்குகையில் பறவைகளின் இன்னிசை நிற்பாட்டப்பட்டிருக்கும். ஆனால் தியானம் செய்கையில் அவைகள் சொர்க்கலோக கீதங்களைத் தங்களது கூக்குரல்களால் எழுப்பும். அது இந்த அகிலமெல்லாம் நிலவும் அமைதியையும் ஒருமைப்பாட்டையும் சூழ்ந்து நிற்பதைப் போன்றிருக்கும். ரூத், அந்த ஒலியானது உள்ளக் கிளர்ச்சியைத் தூண்டி எனது ஆத்மாவின் அடி ஆழம் வரை ரீங்கரிக்கச் செய்கிறது. அத்துடன் அது ஒவ்வொரு உயிரினத்துடனும் என்னை இணைப்பதைப் போன்றிருக்கிறது. இந்த அதிசயங்களை எல்லாம் புரியவைப்பது கஷ்டம். ஆனால் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் பூவுலகில் இருக்கையிலே தெரிந்தவற்றுக்கும் இவற்றுக்கும் பெரிதாக ஒன்றும் வேறுபாடில்லை. இங்கிருக்கும் ஒளியானது தூய்மையானது மட்டுமல்ல தொடர்ச்சியானதும் கூட. ஏனெனில் இந்த ஒளியானது சூரியனிலிருந்து வருவதல்ல. மலைகள் சாஸ்வதமாகத் தாங்களே ஒளி வட்டங்களால் சூழப்பட்டிருக்கின்றன. மரங்களும் வியத்தகு விதத்தில் இந்தச் சூழ்நிலைக்கேற்ப தங்களை மாற்றிக் கொண்டன போலும். அவை தங்கள் பாஷையில் கருத்துப் பரிமாற்றம் செய்வதைப் போலுள்ளன. ஊர்வனவற்றின் மற்றும் பறப்பனவற்றின் பாடல்கள் இனிமையானவை. இப்பிரபஞ்சத்தின் வேகத்தினால் உருவாகும் அதிர்வலைகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருப்பதை பூவுலகிலிருக்கும் ஒருவரால் புரிந்து கொள்ள இயலாது."
"ஞானாலயத்தின் இன்னொரு வடிவை இப்போ பார்ப்போம். இங்கே ஒவ்வொருவரும் தத்தமது தேவைகளுக்கு ஏற்றவாறு தங்களுக்குப் பொருத்தமான நிலையில் ஆத்மீக முன்னேற்றம் அடைந்தவர்களுடன் சேர்ந்து கொள்வார்கள். அங்கே பூவுலகில் ஞாயிற்றுக் கிழமைகளில் நாம் ஒன்று கூடி ஓரிரு மணித்தியாலங்கள் இறைவனின் புகழைப் பாடிய பின் பணத்தட்டை அனுப்புவதைப் போல அல்ல இங்கே. இங்கே அங்கு நடைபெறுவது போல தனியே ஒரேயொரு பூசையல்ல. இங்கே ஒவ்வொருவரும் தனது தேவைகளுக்கு ஏற்ற விதத்தில் எடுத்துக் கொள்வார்கள். கிண்ணத்தைத் திருப்பி நிரப்ப வேண்டிய தேவையில்லை. ஏனெனில் அது அந்தந்த நேரங்களில் ஆத்மாக்களின் தாகங்களுக்கேற்ப ஊற்றெடுத்துக் கொண்டே இருக்கும். நாம் எமது ஆன்மீகத் தேவைகளைச் சரியாகக் கண்டு கொண்டோமெனில் ஞானக் கிண்ணத்திலிருந்து விரைவாக ஞானத்தை அருந்தலாம். அவரவரின் தேவைக்கு அதிகமாக ஒருவராலும் அதை அருந்த இயலாது. சிறிது சிறிதாக எமது ஆன்மீகத் தகைமைகளுக்கேற்ப நாம் எமது முன்னேற்றத்தைத் திட்டமிட இந்த ஞானப்பங்களிப்பில் நாம் பங்கெடுத்து அதனாலேயே எமது ஆத்மாவைச் சுத்திகரிப்போம். ஏனென்றால் இந்த ஞானாலயத்துக்கு வெகு அருகிலிருக்கும் இறைவன் எம் ஒவ்வொருவருக்கும் பேரானந்தப் பேரலையாக இருக்கிறான்."
பத்து வருடங்களுக்கு முன் 'லிலி' என் மூலமாக எழுதுகையில் நடந்தது போலவே ஆர்தர் என் மூலமாக எழுதுவதையும் என்னால் பல நாட்களின் பின் எல்லாவற்றையும் சேர்த்து ஒன்றாக மீளப் பார்க்கும் வரை நினைவுக்குக் கொண்டு வர இயலாதிருந்தது. ஆனால் ஆர்தரின் நினைவுச்சக்தி கூர்மையாக இருந்தது. மறுநாட்காலை அவர் பின்வருமாறு தொடங்கினார். "ரூத் நான் நேற்று உனக்குச் சொன்ன ஞானாலயமானது எல்லோருக்கும் உரியதல்ல. பூவுலகிலிருக்கையில் ஆத்மீக முன்னேற்றத்தில் நீண்ட அனுபவம் பெற்றுத் தியானமிருந்து உலகை இயக்கும் மஹாசக்தியுடன் தொடர்பு கொள்ளக் கூடியவர்களுக்கு மட்டும் தான். இங்கு வரக்கூடிய தகைமையைப் பெற்ற நாமெல்லோரும் உண்மையிலேயே பாக்கியசாலிகள். ஏனெனில் உலக பந்தங்களில் ஈடுபட்டு நேரத்தை வீணாக்குவதைத் தவிர்ப்பதன் மூலம் இங்கே வெகு விரைவாக முன்னேற முடியும். இதனை என்றாவது ஒருநாள் வாசிப்பவர்கள் இதனது முக்கியத்துவத்தை உணர்வார்களென நான் நம்புகிறேன். பூவுலகில் மனிதனின் ஆத்மாவைப் பற்றிய அறிவை அடைந்தவர்கள் இங்கே அடையப்பெறும் ஆனந்தமும் திருப்தியும் எண்ணிலடங்கா. இங்கே முன்னேறுவதற்கு அவர்களுக்கு மிகக்குறைவான பிறவிகளே போதுமானது. 
பூவுலகில், இறந்தவர்களின் ஆத்மாக்களுடன் தொடர்பு கொள்வதன் மூலம் ஆத்மா நிரந்தரமானது, அழிவில்லாதது என்பதை நிரூபிப்பதற்காக நாம் எடுத்த முயற்சிகள் அனைத்தையும் தமக்கு எல்லாம் தெரியும் என்பவர்கள் சிலர் நம்பாமல் கேலி செய்து சிரித்தார்கள். நாம் அதனையெல்லாம் பொறுத்துக் கொண்டு எமது நம்பிக்கைக்கு உண்மையாயிருந்தோம். ஏனெனில் இப்படி நம்பாமல் இருக்கும் நிலையும் எமது மிக நீண்ட முன்னேற்றப் பாதையின் ஒரு படிக்கல்லே என்பதனை நாம் அறிவோம். அப்படிக் கேலி செய்பவர்கள் மீது இரக்கம் காட்டவேண்டும். ஏனெனில் ஆத்மா நிரந்தரமானது, என்றும் இருந்து கொண்டேயிருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ளக் கூடிய அளவு தங்கள் மனதை விரிய விடாமல் வைத்திருக்கிறார்கள்."
ஒருநாட்காலை எனக்கு ஜலதோஷம், தொண்டை நோ இருந்ததால் நான் வழமையான நேரத்துக்கு டைப்ரைட்டருக்கு முன் சென்று அமரவில்லை. இரு மணித்தியாலங்களின் பின் தான் ஓரளவு உடல் நிலை சரியான பின் சென்று அமர்ந்தேன். வழமையாக 'லிலி' தான் டைப்ரைட்டரில் உரையாடலைத் தொடங்குபவர். அன்று ஆர்தர் தான் தொடங்கினார். "ரூத், நான் ஆர்ட். மற்றையவர்கள் சென்று விட்டார்கள். ஆனால் உனக்கு உடல் நிலை சரியில்லாததால் குறிப்பிட்ட நேரத்துக்கு உன்னால் வர முடியவில்லை என்பதை நான் உணர்ந்தேன். எனக்கும் அங்கிருக்கையில் அப்படி நேர்ந்திருக்கிறது. உடல்நிலை சரியில்லை என்றால் முக்கியமான விடயங்களை நான் மறந்து விடுவேன். லிலி இங்கே நீண்ட காலமிருப்பதால் உடலின் தன்மைகளை அவர் மறந்துவிட்டார். ஆனால் நான் நீ ரெடியாகும் வரை காத்திருந்தேன்.
"இன்று நானுனக்கு இவ்வளவு காலமும் தெரியாத ஒரு விஷயத்தைச் சொல்லப் போகிறேன். இங்குள்ளவர்கள் ஒருவரையொருவர் பற்பல பிறவிகளில் சந்தித்திருப்பார்கள். உலகின் உயிரினங்களின் பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களில் சிலர் ஒன்றாக இருந்திருப்பார்கள். ஏதோ ஒரு கட்டத்தில் பூவுலகிலோ அல்லது மேலுலகிலோ எந்த இருவரின் பாதைகளும் நிச்சயம் சந்தித்திருக்கும். அதன் காரணமாக எந்த ஒருவரும் மற்றையவருக்குப் புதியவரல்ல. நாமெல்லோரும் ஒருவரின் பகுதியே மற்றையவர் என்பதையும் நாமெல்லோரும் இறைவனின் ஒரு பகுதியே என்பதையும் இதனால் இலகுவில் புரிந்து கொள்ளலாம். எல்லா ஆத்மாக்களும் இறைவனின் உருவாக்கங்களே. அது போலவே மரங்களும் பூக்களும் அருவிகளுமாகும். ஆனால் அவர் எம்முள் தனது ஆத்மாவை சுவாசித்ததால், அவர் தனது வடிவில் எம்மை உருவாக்கியதால் நாம் சிந்திக்கக் கூடிய வல்லமையையும் அதனால் சரி, பிழைகளை அறியக் கூடிய வல்லமையையும் பெற்றுள்ளோம்.
"சரி, பிழை என்பது வெவ்வேறு இன மக்களுக்கு வெவ்வேறு விதமாக இருக்கும். ஆனால் இன்னொரு உயிரை வருத்துவதென்பது தன்னையும் இறைவனையும் வருத்துவதற்குச் சமமாகுமென்பது வெளிப்படை. அது பிரதான குற்றமாகும். மற்றையவர்களுக்கு உதவினோமெனில் அது பிழையான வழிகளில் என்றாலும் நம் பொதுவான இலட்சியமான இறைவனுக்கு உதவுவது என்ற வழியை நோக்கிச் செல்கிறோம். அந்தப் பிழையான வழிகள் சில சமயங்களில் சட்டத்துக்கு முரண்படலாம். உதாரணமாக அமெரிக்காவில் சில சமயம் நாம் சட்டத்தை மீறிச் செயற்பட்டாலும் இறைவனின் வழிகளுக்கு அது எதிராக இருக்க வேண்டிய அவசியமில்லை. சட்டங்களெல்லாம் பொதுவாகப் பெரிய அளவிலான மக்கள் தொகை ஒன்றாக, நிம்மதியாக வாழ்வதற்காக ஏற்படுத்தப்பட்டவையே. அடிப்படைப் பாவமானது இன்னொருவரை உடல் ரீதியாகவோ மனரீதியாகவோ வேண்டுமென்றே வருத்துவதாகும். நல்லதோ கெட்டதோ எமது எண்ணங்களெல்லாம் செயல்களே. மற்றையவருக்கு எதிராக நாம் எதையாவது எண்ணினோமெனில் அது அவர்களின் தட்டிலிருந்து உணவையெடுத்து உண்பதைப் போல பாவமானதே.
மறுநாட்காலை லிலியின் அறிமுகத்துடன் ஆர்தர் தொடர்ந்தார். "ஹாய் ரூத், நீ சுகமானதையிட்டு மகிழ்ச்சி. இன்றைய பேச்சுக்கு வருவோம். நான் மறு உலகைப் பற்றி நிரம்பவே வாசித்து அறிந்திருந்ததாலும் எனக்குள் ஆத்மா வந்த நேரங்களில் மறு உலக அனுபவங்கள் இடையிடையில் வந்ததாலும் முன்பே சொல்லியது போல் நான் இங்கு வரும் போது இங்கு எப்படியிருக்குமென்று எனக்குத் தெரியுமென்று நான் நினைத்தேன். ஆனால் எனக்கும் இங்கே சில ஆச்சரியங்கள் காத்திருந்தன. உதாரணமாக நாம் முயற்சி எடுத்தால் தான் எவரது அறிவுரையையும் கேட்க முடியும். நாம் எண்ணுவதன் மூலமே எந்த இடத்துக்கும் சென்று எவரையும் பார்க்க முடியுமென்பது உண்மை. ஆனால் அதிலும் சில விதிவிலக்குகள் உள்ளன: ஒருவர் உங்களைப் பார்க்க விரும்பவில்லையென்றால் நீங்கள் அவரை அணுகவோ அவரது நடவடிக்கைகளைப் பார்க்கவோ முடியாது. அது இருவழிப் பாதையாக இருக்க வேண்டும். நான் ஃப்ளச்சருடன் பல மணி நேரங்களுக்கு உரையாட விரும்பலாம். ஆனால் நான் பூவுலகிலிருந்த போது அவர் என் மூலமாக நடத்திக் கொண்டிருந்த பணியை விடவும் அவருக்கு வேறும் பல பணிகளுள்ளன. எனவே எனது விருப்பங்களை அவரில் திணிக்க இயலாது. அவரும் என்னுடன் தத்துவ விஷயங்களைப் பற்றி சம்பாஷிக்க விரும்ப வேண்டும் அல்லது எனக்கு இடங்களைச் சுற்றிக் காட்ட விரும்ப வேண்டும். உண்மையில் இங்கும் பார்ப்பதற்கு இடங்களுள்ளன.
"நான் ஒருவருக்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஏதாவது சொல்ல விரும்பினால், சில சமயங்களில் அவருக்கு அப்போ நேரமில்லாமல் போகலாம். இங்கே எந்த நேரத்திலும் பல்வேறு வகையான செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இன்னொரு ஆத்மா எம்மைச் சந்திக்க விரும்பின் நாமும் சில வேளைகளில் அவருக்கு உதவமுடியாமற் போகலாம். நான் சொல்வது உனக்குப் புரியுமென நினைக்கிறேன். இதனால் எங்களது தனியுரிமை பாதுகாக்கப்படுகிறது. அங்கேயும் கூட நீங்கள் ஒருவருடன் பேசவிரும்பாவிடின் தொலைபேசியைத் தவிர்ப்பதைப் போன்றதே இதுவும்."
"சிலர் இங்கு புதிதாக வரும் ஆத்மாக்களுக்குக் கற்றுத் தருகிறார்கள். சிலர் பூவுலகிலிருக்கும் போது நன்றாகக் கற்று உணராமல் விட்ட தத்துவவியல் மற்றும் வேறு முன்னேற்றம் தரக்கூடிய பாடங்களைக் கற்க முயல்கிறார்கள். சிலர் கோட்பாடுகளை ஆராய்வதில் முழுமூச்சாக ஈடுபடுகிறார்கள்; அல்லது முற்பிறவிகளில் நிறைவேற்ற முடியாமல் போனவைகளைச் சரி செய்யும் முகமாக ஆழ்ந்த தியானத்தில் அல்லது வழிபாடுகளில் ஈடுபடுகிறார்கள். சொர்க்கத்துக்கு உங்களைப் போலவே நாமும் தூரத்திலேயே உள்ளோம். நாம் தூல சரீரத்தை விடுத்து சூக்கும சரீரத்தை எடுத்துள்ளதால் நாம் இறைவனுடன் இரண்டறக் கலந்து விட்டோமென நினைப்பது தவறு. இறைவனுடன் இரண்டறக் கலப்பதானது, பல காலத்திற்கு இறைவனின் வழிமுறைகளுக்கு ஏற்ப நடப்பதற்கான முயற்சிகளுடன் ஏனையவர்களின் முன்னேற்றத்துக்கு உதவுவதனாலும் அடையப்படும். ஏனையோருக்கு நன்றியை எதிர்பாராமல் செய்யும் நற்காரியங்களால் இறைவனை அடையும் பாதையானது  இலகுவாகவும் எளிதாகவும் மாற்றப்படும். எந்தவிதமான நன்றிக்கடனையோ வெகுமதியையோ எதிர்பாராமல் செய்யப்படும் எந்தவொரு காரியமும் ஆன்மீக முன்னேற்றத்தின் ஏணிப்படிகளே. வலதுகை கொடுப்பதை இடதுகை அறியாதிருப்பது நன்றென்பது நினவிலுள்ளதா? எனவே உலகில் வெகுமதிகளையோ நன்றிக்கடன்களையோ எதிர்பாராமல் கொடுப்பனவற்றைப் பிறர் அறியாமற் கொடு. கொடுப்பதிலேயே மகிழ்ச்சியுள்ளது. அதனை ஏனையவர்களுக்குச் சொல்வதிலே அல்ல. மனிதர்களிடமிருந்து வெகுமதி கிடைத்த பின் எப்படி நீ இறைவனிடமிருந்து வெகுமதி எதிர்பார்க்கலாம்? பூவுலகில் ஏனையோர்க்கு உதவுவதால் கிடைக்கும் புகழ்ச்சியும் பெருமையும் வெகுமதிகளே. எமக்கு நாம் உதவுவதற்கு நாம் புகழ்ச்சியை எதிர்பார்க்கிறோமா? இல்லையே. அப்படியாயின் ஏன் எம்மிலும் இறைவனிலும் ஒரு பகுதியாயிருக்கும் ஏனையோருக்கு உதவும் போது மட்டும் புகழ்ச்சியை எதிர்பார்க்கிறோம்?
"ஞானாலயமானது ஒரு இடமல்ல. அது ஒரு மனநிலையே. நிறைவான இனிமையான எண்ணங்களினாலும் உள்ளுணர்வுகளினாலும் ஆன ஒரு உயர்ந்த மனநிலையே. ஒவ்வொருவரும் அதனை எங்களது கண்ணோட்டத்திலேயே பார்ப்போம். எனக்கு அது அழகு நிறைந்த சத்தியங்களால் சூழப்பட்டிருக்கும் ஒரு ஸ்தலமாகும். நம் ஒவ்வொருவருக்கும் சத்தியத்தை உணரும் தன்மை உள்ளது. ஞானாலயமானது அந்தப் பேருண்மையின் ஓர் உயர்ந்த வடிவமே. ஆத்மாவைப் புரிந்து கொள்ளவும் ஆன்மீக முன்னேற்றத்தை அடையவும் விரும்புபவர்கள் இங்கு கற்பதற்கான சந்தர்ப்பத்தை விரும்புவார்கள். உள்ளூர நாம் முயலாவிடின் நாம் நிரந்தரமான எதையும் சாதிக்க முடியாது.
நாம் சிறந்த மனிதகுலமாகப் பண்பட்ட மனிதராக வரவேண்டுமெனில் (இந்த) வளர்ச்சிக்கான முயற்சியானது ஒவ்வொரு கட்டத்திலும் தொடரப்பட வேண்டும். தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம். மிக மேன்மையான இனமாக மனித இனம் வருவதற்கான சக்தியும் வலுவும் எமக்கு உள்ளது. அதற்கு என்ன செய்ய வேண்டுமென்றால்: ஒரு தனிமனிதனோ அன்றி ஒரு குறிப்பிட்ட இனமோ சக்தி வாய்ந்ததாக வர இயலாது. முழு மனித இனத்தின் முயற்சியாலேயே இது முடியும். அதனாற் தான் ரூத், ஏனையோர் கஷ்டப்படும் போது உதவிக்கரங்களை நீட்டுவது அவசியமாகிறது. இது ஒரு அதீதமான கற்பனையாளனின் கற்பனையில் எழுந்த (எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் என்ற) கனவுலகமல்ல. ஆனால் மனித சமுதாயத்தின் மறுமலர்ச்சி ஆகும். முன்னொரு காலத்தில் நாம் உயர்ந்த இனத்தின் ஒரு பகுதியாக இருந்தோம். நான் இப்போ உனக்குச் சொல்லிக் கொண்டிருக்கும் இந்த உண்மைகளை அறியும் தறுவாயில் இருந்தோம். அந்த அறிவை வைத்து என்ன செய்வதென்றும் அறிந்திருந்தோம். ஆனால் பேராசை, அவா, வெறுப்பு இவை போன்ற வேறும் பல கீழான உணர்ச்சிகள் மனித குலத்தைப் பௌதீக உலகில் ஆட்கொள்ளத் தொடங்கிவிட்டன"
மறுநாட்காலை சற்றுப் பிந்தி எழுந்தேன். அவசர அவசரமாக டைப்ரைட்டருக்குச் செல்ல ஆர்தர் "ரூத், இது ஆட்ர், மற்றவர்கள் சென்றுவிட்டனர். ஆனால் நீ எப்படியும் வருவாய் என்ற நம்பிக்கையில் நான் காத்திருந்தேன்." என்றார். பின்னர் சற்றே வேடிக்கையாகப் பேசிய பின் பின்வருமாறு எழுதினார்: "ஞானாலயத்தைப் பற்றி மேலும் சில விஷயங்கள் சொல்கிறேன். இங்கு நாம் தத்துவம் சார்ந்த துறையில் உயர்வானவர்களைப் பற்றி அறியக்கூடியதாக உள்ளது. இங்கே இருப்பவர்கள் மற்றும் மீண்டும் பூவுலகில் பிறந்து விட்டவர்களைப் பற்றியும் கூட அறிய இயலும். அவர்கள் சென்று விட்டாலும் அவர்களின் பதிவுகள் இங்கே இருக்கும் (உனது முந்தைய பிறவிகளின் பதிவுகளிருப்பதைப் போல). பிரபஞ்சங்களின் இரகசியங்களிலிருந்து எமக்குத் தேவையான வழிகாட்டுதல்களைப் பெற நாம் ஞானாலயத்துக்குச் செல்வோம். எப்படிச் சரியான முறையில் எண்ணுவது எனவும் எப்படித் தியானம் செய்வது எனவும் கற்போம். எமது எண்ணும் கருவியானது எமது ஆத்மாவின் ஒரு பகுதியாகும். அதனால் தான் பூவுலகில் அதனை ஆழ்மனம் என அழைக்கிறார்கள். அது எப்போதும் எம்முடனேயே இருக்கும். ஆனால் எமது வெளி மனமானது எமது பௌதீக உடலினால் மட்டுமே இயக்கப்படுகிறது.
"உலகம் உருவாக்கப்பட்டதில் இருந்து நாம் கிரகிக்கும் எல்லா விடயங்களும் எமது ஆழ்மனதில் பதிந்திருக்கும். எமது ஆழ்மனதை படிவங்கள் நிறைந்த கோப்புகளைச் சேகரித்து வைக்கும் ஒரு மிகப்பெரிய அலுமாரிக்கு ஒப்பிடலாம். எமக்குத் தெரிந்த எல்லா அலுமாரிகளிலும் பார்க்க மிகப்பெரிய அலுமாரி இதுவாகும். ஆனால் நாம் பௌதீக உடலுடன் இருக்கையில் சாதாரண வழிகளில் எமது ஆழ்மனதை உணர்வது கஷ்டமாகும். ஏனெனில் ஆழ்மனதின் அந்த அறிவுக் களஞ்சியத்தில் இருப்பவை நினைத்தவுடன் வெளியே கொணரமுடியாத உயர்ந்த விஷங்களாகும். கனவுகள் மூலமாகவும் தியானத்தின் மூலமாகவும் அந்த அறிவுடன் அவ்வப்போது தொடர்பு கொள்கிறோம். அதனுடன் ஹிப்னாட்டிசம் எனப்படும் ஆழ்மன அகழ்வின் போதும் அந்த விடயங்கள் சிலவற்றை மேலே கொண்டு வரப்பார்க்கலாம். எந்த வழிகளிலும் எல்லா விடயங்களையும் வெளிக்கொணர முடியாது. ஆனால் இங்கே ஞானாலயத்தில் எந்த நேரத்திலும் அவற்றை அறிய இயலுமாக உள்ளது. அத்துடன் ஆத்மாவின் சில சிறப்பு அம்சங்களை நாம் விருத்தி செய்து கொள்வோமாயின் எம் கடந்த பிறவி, அதற்கு முந்தைய பிறவிகளை மட்டுமல்ல யுகம் யுகமாக நாம் எடுத்திருக்கும் எல்லாப் பிறவிகளையும் நினைவுபடுத்த இயலுமாக இருக்கும்.
"இங்கே ஞானாலயத்தில் சோக்கிரட்டீஸ் இருந்திருக்கிறார். 'கான்ட்' (Kant) இருந்திருக்கிறார். 'ஜங்' (Jung) இருந்திருக்கிறார். மேலும் பூவுலகில் மதிப்பளிக்கும் பலர் இங்கே இருந்திருக்கிறார்கள். இங்கே அவர்கள் வெவ்வேறு தரங்களில் மரியாதைக்கு உரியவர்களாய் இருக்கிறார்கள். இங்கே இருக்கும் சில உயர்வான உள்ளங்கள் பூவுலகிலிருக்கும் போது கவனிக்கப்படவில்லை. ஆனால் அவர்கள் தங்கள் எளிமையான நம்பிக்கைகளிலிருந்து வளர்ச்சியடைந்து மிகப்பெரிய அறிஞர்களாக, குருவாக மாறி இங்கே ஞானாலயத்திற்குச் சேவை செய்கிறார்கள். பலருக்கு மறுமுறை பிறக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் அவர்கள் தங்கள் பிறவியின் பலனை நிறைவேற்றி விட்டார்களென்பது மட்டுமல்ல இங்கே மேலுலகில் அவர்களின் பங்களிப்பு கணிசமான அளவு உள்ளதால் அவர்களின் பணி பூரணமாக்கப்பட்டு விட்டது. அவர்கள் இங்கே சுதந்திரமாக முன்னேற்றத்தின் பல்வேறு நிலைகளினூடாக மிக உயர்ந்த நிலை வரைக்கும் பிரயாணம் செய்யலாம். இருந்தும் அவர்கள் சேவை செய்வதில் மிக ஆர்வமாக உள்ளதால் இங்கே 'நாள்' என்று அழைப்பதன் சில பகுதியை ஞானாலயத்தில் இருக்கும் எம்மைப் போன்றவர்களின் முன்னேற்றத்துக்கு உதவுவதற்காகப் பயன்படுத்துகிறார்கள்.
"இங்கு வந்ததன் பிற்பாடு பல ஆத்மாக்கள் கற்க ஆசைப்பட்டு அதற்கான முயற்சியும் எடுப்பார்கள். ஆனால் அவர்களெல்லாம் ஞானாலயத்தில் சேர்வதற்கு இன்னும் சிறிது காலம் செல்லவேண்டும். ஏனெனில் ஞானாயத்தின் மறைபொருளான கல்வியை அவர்கள் விளங்கிக் கொள்வது கடினம். அது ஆன்மீகத்தில் குறிப்பிட்ட அளவு முன்னேற்றம் அடைந்தவர்களுக்குத் தான் புரியும். முந்தைய பிறவிகளில் ஆன்மீக முன்னேற்றம் அடையாதவர்களுக்கு இக்கல்வியை விளங்கிக் கொள்வது கொஞ்சம் கடினமாகும். அப்படிப்பட்டவர்களுக்கு இங்கே பல முன்னேற்றத்துக்குரிய பாடசாலைகள் உள்ளன. அவர்கள் அங்கு தத்துவவியலின் அடிப்படை உண்மைகளை மட்டுமல்லாது எமது வாழ்வின் நோக்கங்களையும் அறியமுடியும். நாம் இறைவனின் வடிவத்தை மட்டுமல்ல அவரின் தன்மைகளையும் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறோம். எனவே எமது யாத்திரையை நிறைவு செய்து கொண்டு இறைவனை அடைவதற்கு நாம் இப்பிரபஞ்சத்தின் தத்துவத்தையும் அதனது நியதிகளையும் புரிந்து கொள்ள வேண்டும். அப்படியென்றால் தான் நாம் இறைவனால் உருவாக்கப்பட்ட இவ்வுலகிலிருந்து முரண்பட்டு நிற்க மாட்டோம்.
"தொடக்கநிலைப் பாடசாலைகளில், ஆத்மாக்களுக்கு நேரத்தை எவ்வாறு உள்வாங்கிக் கொள்வது என்று கற்பிக்கப்படும். நாமே காலமாக மாறுவோம். அப்போ எந்த ஒரு விஷயமும் எமது ஒத்துழைப்பில்லாமல் நடைபெறாது. எம்மைப் பொறுத்தவரையில் என்றாலும் அப்படியாக இருக்கும். எனவே முயற்சி எடுக்காமல் சோம்பேறிகளாக இருந்தால் நாம் காலம் ஸ்தம்பித்து நிற்பவர்களாக இருந்து விடுவோம். ஆனால் நாம் முன்னேறி வளர்ச்சியடைய எண்ணினால் எமக்குள் உள்ள காலமானது சீரான வேகமொன்றில் நாம் கற்க வேண்டிய பாடம் முடிவடைந்து அடுத்தது தொடங்கும் வரை முன்னேறும். நேரமானது வேறுபடும் தன்மையுடையது. அது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். ஏனெனில் எந்த இரு ஆத்மாவும் ஒரு போதும் ஒரே விதமான ஆத்மீக முன்னேற்ற நிலையில் இருக்கமாட்டார்கள். அறிவறிந்த பழம் பெரும் ஆத்மாக்கள் எங்களின் அறிவுச்சாரங்களைத் திறந்து எம்மைப் புதிய பாதைகளின் மூலம் செல்ல வைப்பதன் மூலம் எமக்குள் இருக்கும் காலத்தை முன்னே செல்ல வைக்க உதவுகிறார்கள். இம்மேலுலகானது வளர்வதற்கும் முன்னேறுவதற்குமுரிய ஆவலைத் தூண்டக்கூடிய உலகாகும். பல தளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் அறிவு நிறைந்த ஞானவான்கள் இறைவனின் அருளால் எமது நன்மை கருதி நான் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தத் தளத்துக்கு ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு எமக்கு உதவுவதற்காக வருகை தருவது ஒரு அரிய சந்தர்ப்பமாகும். சில ஆத்மாக்கள் அநியாயமாக இதனை வீணடிப்பது அறியாமையாகும்.
இப்பிரபஞ்சத்துடன் ஒன்றிய நிலையிலிருந்து நாம் முரண்பட்டு நிற்பதை இறப்பு எனும் வாயிலினூடாக மறுஉலகில் அடியெடுத்து வைக்கையில் அனைவரும் உணர்வோம் என்பதை ஃபோர்ட் வலியுறுத்தினார். "முதலில் இதனை உணர்பவர்கள் அதிகம் ஒன்றியிருப்பவர்களாகும். ஏனெனில் அவர்கள் அதிகமாக இணைந்திருப்பதால் சற்றே வேறுபாடு இருந்தாலும் அது வெளிப்படையாகத் தெரியும். பூவுலகிலிருக்கையில் சற்றுக் கூடுதலாக முரண்பட்டு இருப்பவர்களுக்குத் தாம் அப்படியிருப்பது தெரிவதற்குச் சற்றே அதிகநேரம் எடுக்கும். ஏனெனில் அவர்கள் அந்நிலைக்குப் பழகியிருப்பார்கள். ஆனால் எப்படியும் அதனை உணர்வார்கள். அதன்பின் அவர்கள் தமது இணைப்பை அதிகரித்துக் கொள்வார்கள். இவ்வாத்மாக்கள் தம்மைத் தாமே தயார் செய்து கொண்டபின் தங்களை வழிநடத்த ஒரு குருவைத் தேடுவார்கள். தேடுதல் தொடங்கிய அக்கணத்திலேயே குருவானவர் தோன்றுவதற்குத் தயாராவார். குருவானவர் அழைப்புக்காகவே காத்துக் கொண்டிருந்தவர். விருப்பமானது எண்ணத்தின் தந்தையாதலால் எண்ணம் உருவெடுத்த மறுகணமே தோன்றுவார்.
"குருவானவர் ஆர்வமுள்ள மாணவனை அதே போன்ற ஒத்த நிலையிலுள்ள ஏனைய மாணவர்கள் கல்வி கற்பதற்கு ஒன்று கூடியிருக்கும் ஒரு இல்லத்துக்கு அழைத்துச் செல்வார். ஒரு தோழமையான சூழ்நிலையில் அவர்கள் தங்கள் கல்வியைக் கற்பார்கள். இங்கும் சில பின்னடைவுகள் இருக்கலாம்.  இங்கேயுள்ள சில ஒழுங்கு முறைகளை ஏற்றுக் கொள்ளாவிட்டாலோ அல்லது ஆத்மீக முன்னேற்றத்துக்குத் தேவையான சில பயிற்சிகளைத் தொடரா விட்டாலோ சில பின்னடைவுகள் ஏற்படுவதுண்டு. இருந்தும் அவர்கள் அந்தக் கடினமான மேல் நோக்கிய பாதையில் உற்சாகத்துடன் தொடர்வார்கள். அங்கு இறைவனின் மாபெரும் திட்டத்தின் அடிப்படை உண்மைகள் விளக்கமாக அறிவிக்கப்பட்டிருக்கும். தெய்வீக உள்ளுணர்வில் மாறாத நம்பிக்கை கொண்டு நாம் செயற்படுவதில் உள்ள நன்மைகளும் இறைவன் வகுத்த நியதிகளை நம்பிக்கையுடன் பின்பற்றுவதன் முக்கியத்துவமும் அறிவிக்கப்பட்டிருக்கும். இங்கே முன்னேற்றமடைந்துள்ள ஆத்மாக்கள் எதைப்பற்றியும் கேள்வி கேட்கமாட்டார்கள். ஏனெனில் இயற்கையின் விதிகளை மீறுவதால் நாம் மீண்டும் கீழ்நிலைக்குச் செல்வோம் என்பது தெரிந்ததே.
நியதிகள் உள்ளதே எமக்குப் போதுமானது. பூவுலகில் எதையும் தங்கள் எண்ணப்படியே நடாத்தியவர்கள் (உண்மையில் அது அவர்கள் கற்பனையே) ஆரம்பத்தில் இங்குள்ள நியதிகளை எதிர்க்க முற்படுவார்கள். ஆனால் அது அவர்களின் ஆத்மீக முன்னேற்றத்துக்குத் தான் தடையாக அமையும். பூவுலகிலிருக்கும் போதே ஆன்மீக நூல்களை வாசிப்பதன் மூலம் இறைவனின் வழிகளை அறிய முயன்றிருந்தால் அவர்களுக்கு இங்கு வந்ததன் மேல் சீரான முன்னேற்றம் இருக்கும். ஒழுக்கம், பணிவு போன்ற நற்பழக்கவழக்கங்கள் ஆன்மீக முன்னேற்றத்துக்கு நிச்சயமாக உதவும். இறைவனின் விருப்பப்படி நடப்பது மற்றும் உலக நியதிகளுக்கு இணங்க நடப்பது என்பன போன்றனவும் தான். உலக நியதிகள் எல்லோரும் நிம்மதியாக சந்தோஷமாக உயிர் வாழ்வதற்கே உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆன்மீக ஒழுக்கமானது ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் பிறக்கும் போதே புகுத்தப்பட்டுத் தொடர்ந்து அதனது வாழ்நாள் பூராவும் கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஒன்று. ஏனெனில் ஆன்மீக ஒழுக்கமானது மேலுலகில் மிகமிக முக்கியமான ஒன்று. பூவுலகிலும் பார்க்க இங்கே அதற்குப் பெரிய முக்கியத்துவம் உள்ளது.