இது 'A World Beyond' என்ற ஆங்கில நூலின் மொழிபெயர்ப்பாகும். இந்நூலை எழுதியவர் ரூத் மோன்கொமெரி (Ruth Montgomery) எனும் ஒரு பெண்மணியாகும். மனிதருக்குள் மேலுலக ஆத்மாக்கள் வந்து பேசுவதைப் போன்று மேற்குலகில் 'Automatic Writing' என ஒரு விடயமுள்ளது. அதாவது ஆத்மாக்கள் எங்கள் மூலமாக வந்து சில விடயங்களை எம்மைக் கொண்டு எழுதச் செய்வது என்பதாகும். இந்நூலானது அப்படியாகத்தான் எழுதப்பட்டது. 'ஆர்தர் ஃபோர்ட்' என்று இந்நூலாசிரியைக்குத் தந்தையைப் போலிருந்த ஒருவர் மேலுலகம் சென்ற பிற்பாடு அவர் மூலமாக எழுதப்பட்டது இந்நூலாகும்.

Thursday, January 7, 2021

எட்டாம் அத்தியாயம்: கதைசொல்வதில் வல்லுநர் (Storyteller Extraordinary)

தான் புனிதத்தொண்டர் (sainthood) அந்தஸ்துக்குப் பொருத்தமானவர் எனத் தன்னைப் பற்றி எண்ணிய ஒருவரைப் பற்றி மார்ச் முப்பதாம் திகதி எழுதுகையில் ஆர்தர் ஃபோர்ட் தனது கதை சொல்லும் திறமையை நிரூபித்துக்காட்டினார். இரண்டு நாட்கள் நடந்த அந்த உரையாடல் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. இறப்பைக் கடந்து அம்மனிதர் அங்கே சென்றதும் தன்னை இறைவனின் சிம்மாசனத்துக்குப் புனித கேப்ரியல் (Saint Gabriel) அழைத்துச் செல்வாரென எதிர்பார்த்தார். பின்வருமாறு அமைந்தது அக்கதை:
"அம்மனிதர் தான் ஒரு தவறும் இழைக்கவில்லையென அனைவருக்கும் எடுத்துச் சொன்னார். களவெடுத்தல், கொள்ளையடித்தல், அடுத்தவரை ஏமாற்றுதல் அல்லது கற்பழித்தல் போன்ற ஒரு பாவங்களையும் அவர் இழைத்ததில்லை. ஆதலால் தான் ஒரு தவறும் செய்யவில்லையெனத் திடமாக நம்பினார். அவர் சர்ச் ஒன்றிலும் சில தொண்டு நிறுவனங்களிலும் வேலை செய்தவர். அத்துடன் சொர்க்கத்தில் இறைவனை அடைவதற்கு அந்தப் பிறவி தான் ஒரேயொரு பிறவியென நம்பியவர். கடைசியில் குணப்படுத்த முடியாத, ஆனால் குறுகிய ஒரு நோய் வந்ததால் தனது உறவுகளுக்கு நிறைவேற்ற வேண்டிய கடமைகளைச் சரிவர ஒழுங்காக நிறைவேற்றக் கூடியதாக இருந்தது. அவர் தன்னுடைய சொத்தில் மனைவி, பிள்ளைகளுக்குச் சேரவேண்டிய பங்குகளைச் சரியாகப் பகிர்ந்து விட்டுப் பின்பு சில தொண்டு நிறுவனங்களுக்கும் பண உதவிகள் செய்திருந்தார். அவர் இறப்பை அமைதியான இதயத்துடன் தழுவிக்கொண்டார். இறந்த பின் சிலருக்கு ஆத்ம உலகில் திடீரென விழிக்கையில் ஏற்படும் மிக நீண்ட அதிர்ச்சிக் காலமொன்றும் இவருக்கு இருக்கவில்லை. இறந்தவுடனேயே இங்கே கண்விழித்துவிட்டார். ஏனென்றால் அவர் இறப்புக்காகத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்தார். இங்கே விழித்ததும் அவர் ஒரு அழகான இயற்கை வனப்பு நிறைந்த பூமியைக் கண்டார். சற்றே தொலைவில் சில ஒளிரும் உருவங்கள் அலை அலையான வெள்ளையாடையில் நிற்பதைக் கண்டார். அவர்களெல்லாம் தன்னைத் தீர்ப்பு வழங்கும் ஆசனத்துக்கு அழைத்துச் செல்ல வந்திருக்கிறார்களென அளப்பரிய ஆவலுடன் எதிர்பார்த்தார். அந்தத் தீர்ப்பு வழங்கும் ஆசனத்தைப் பற்றித் தான் எதுவும் பயப்படுவதற்கில்லை என நினைத்தார். அந்த உருவங்கள் அவரை அணுகின. ஆனால் அவர்களோ அவரை வரவேற்பதற்குப் பதில் அவரைக்கடந்து நீரோடையொன்றின் மறுபக்கத்துக்குச் சென்று விட்டார்கள். அப்போதுதான் அவர் அந்த நீரோடையைக் கவனித்தார். அவர்கள் தன்னைக் காணவில்லையென நினைத்த அவர் அவர்களை அழைக்கக் குரல் கொடுக்க முயன்றார். அவருக்குக் குரல் வரவில்லை. அவர் தனது கைகளை ஆட்டினார். ஆனால் அவர்கள் இப்பக்கம் பார்க்கவில்லை. பின்னர் அவர்களும் பார்வையிலிருந்து மறைந்து விட்டனர்.
"சற்று நேரத்தில் சில சிறுவர்கள் கண்ணில் பட்டனர். ஏன் அவர்கள் தன்னைக் கவனிக்கவில்லையென வியந்தார். எவ்வளவுக்கெவ்வளவு நிச்சயமாக அவர்களைத் தான் பார்க்கக் கூடியதாக உள்ளதோ அவ்வளவுக்கவ்வளவு நிச்சயமாக அவர்களும் தன்னைப் பார்க்கக் கூடியதாக இருந்தது. மீண்டும் அவர் குரல் கொடுத்தார். ஆனால் தனது எண்ணங்களை அவர்களின் மனதில் பதிய வைப்பது ஒன்றுதான் தான் செய்யவேண்டியது என அவர் உணரும்வரை அவர்கள் அவரைக் கவனிக்கவில்லை. இப்போ அவர்கள் அவரைச் சூழ்ந்து அவரை வரவேற்பது போல் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். அவர் அவர்களிடம் புனித கேப்ரியல் எங்கே எனக் கேட்டார். அதற்கு அவர்கள் தாங்கள் ஒரு தேவதைகளையும் இன்னும் சந்திக்கவில்லை என்றனர். அவர்கள் எவ்வளவு காலம் இங்கே இருக்கிறார்களெனக் கேட்டதற்குச் சரியான பதிலைச் சொல்ல ஒருவராலும் இயலவில்லைப் போல இருந்தது. ஒரு சிறுமி அவரை நீரோடைக்கு அழைத்துச் செல்கிறேன் என்று கையை நீட்டினாள். அங்கே மீனினங்கள் நீரோடையில் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தன. அவர் தனக்கு மீன் பிடிப்பதற்கு இப்போ நேரமில்லையென்றார். அவர்கள் அவருக்கு ஒரு புதுவிதமான விளையாட்டைச் சொல்லித் தருவதாக அழைத்தார்கள். தனது பொன்னான நேரத்தைச் சிறு பிள்ளைத்தனமான விளையாட்டுகளில் செலவழிக்க இயலாதென்றார். அவர் அவ்விடத்தை விட்டுச் செல்வதற்கு அவசரப்பட்டார். அவர் ஒரு தெருவைக் கடந்து எங்காவது ஏதாவது உறைவிடம் தெரிகின்றனவா என ஆவலுடன் தேடினார். கடைசியில் ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாழியின் குடிலைக் கண்டார். அங்கே ஒரு வயதானவர் நீண்ட தாடி வைத்துக் கொண்டு மும்முரமாகச் செருப்புகள் தைத்துக் கொண்டு இருந்தார். இந்தச் சந்தர்ப்பத்துக்காகவே அவர் இளவயதிலும் பார்க்க முதிய பருவத்தைப் பிரத்தியேகமாகத் தேர்ந்தெடுத்திருந்தார்.
"ஆத்ம உலகில் உடலுக்குத் தேவையான உடைகளை உடல் தானே வழங்கிக் கொள்ளும். புதிதாக வந்தவர் அச் செருப்புத் தைப்பவரைப் பார்த்து அக்காலணிகளை அவர் எங்கே விற்பதற்கு உதேசித்திருக்கிறார் எனக்கேட்டார். அதற்கு அவ்வயதானவர் எதையும் விற்பதில் அர்த்தமில்லை என்றும் தான் சிறுவர்களுக்கு உறுதியான திடமான காலணிகளை அவை தேய்ந்து பழுதாகாமல் இருக்க என்ன செய்யவேண்டும் என்பதை ஆராய்ந்து, அதனைப் பூரணமாக்க முயற்சித்துக் கொண்டிருப்பதாகக் கூறினார். புதிதாக வந்தவர் புனித பீட்டர் அல்லது புனித கேப்ரியாலிடம் போவதற்குரிய வழி எப்படி எனக் கேட்டார். அதற்கு அந்த வயதானவர் வழி உள்ளே இருக்கிறது என்றார். நிலக்கீழ் வழித்தடத்தைத் தான் அவர் கருதுகிறாரென இவர் முதலில் எண்ணினார். ஆனால் அவர் அதற்குப் போகும் வழியைத் தேடுவதற்கு முன் அவ்வயதானவர், 'சற்றே பொறுங்கள். அச்சிறுவர்கள் உங்களுக்குப் பணிவைப் பற்றிச் சொல்லித் தரட்டும்' என்றார். புதிதாக வந்தவர் சுற்றும் முற்றும் பார்த்தார். ஆனால் அங்கே அந்த வயதானவரைத் தவிர வேறு ஒருவரும் கண்ணில் படவில்லை. சிறுவர்கள் போய் விட்டிருந்தனர்.
அவர் வயதானவரை விழித்து "வயதானவரே, கடவுளிடம் போவதற்குரிய வழியை எனக்குச் சொல்வதற்கு ஏன் ஒருவரும் இங்கே இல்லை?" என்றார். செருப்புத் தைப்பவர் தனது வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார். அவர் பதில் சொல்ல நீண்ட நேரமெடுத்ததால் புதியவர் பொறுமையிழந்து, "எனக்கு சொர்க்கத்தில் தந்தையுடன் அவசரமான அலுவல் இருக்கிறது. அவரை நான் எங்கே காணலாம்?" என்றார்.
அந்தச் செருப்புத்தைப்பவர் ஒரேயொரு கணம் இவரை நிமிர்ந்து பார்த்துவிட்டு, "உள்ளே பார்" என்றார். அவர் செருப்புத் தைப்பவரின் குடிலைச் சுற்றிப் பார்த்தார். தம்மிருவரைத் தவிர வேறொரு ஆத்மாவையும் அவர் காணவில்லை. "என்ன பகிடி விடுகிறாயா? நான் தீர்ப்பு வழங்கும் ஆசனத்தைத் தேடுகிறேன்" என்று கடுப்பாகச் சொன்னார். 
"எனக்குத் தெரியும். அதனால் தான் உங்களை உள்ளே பார்க்கச் சொன்னேன். நாம் ஒவ்வொருவரும் எம்மைப் படைத்தவனுடன் இணைவதற்கு முன் எம்மை நாமே பரிசீலிக்க வேண்டும்" என்று அந்த வயதானவர் பதிலிறுத்தார். புதியவர் ஆச்சரியமாகப் பார்த்தார். ஆனால் பிடிவாதமாக, "நானொரு பிழையும் செய்யவில்லையே? எனது வாழ்வு ஒரு மாசு மறுவற்ற வாழ்வு. இப்போ நான் எனது இறைவனைச் சந்திக்க ஆயத்தமாக உள்ளேன்." என்றார். அச்செருப்புத்தைப்பவர் பதில் சொல்லு முன் சிலகணங்கள் மௌனமாக இருந்துவிட்டுப் பின், "நண்பனே, உனது கர்வத்தைப் பற்றி என்ன சொல்கிறாய்? நீ ஒரு பாவமும் செய்யவில்லையென்று திடமாக நம்புவதைப் பற்றி என்ன சொல்கிறாய்?" என்றார். புதியவர் குழம்பினார். "ஆனால் நிச்சயமாக நான் குற்றமற்ற வாழ்வு வாழ்ந்தேனென்பதை ஒத்துக்கொள்வதில் ஒரு பிழையும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. நான் குற்றமற்ற வாழ்வு வாழ மிகக்கடினமாக உழைத்தேன். எனவே இப்போ சொர்க்கத்தில் அதற்குரிய வெகுமதியை எதிர்பார்க்கிறேன்" என்றார்.
"இங்கே உங்களுக்கு அவை கிடைக்கும்" என்றார் செருப்புத்தைப்பவர். மேலும் அவர், "பூவுலகில் எதற்கு நாம் எம்மைத் தயார் செய்தோமோ, அப்படியே அவை இங்கே எமக்குக் கிடைக்கும். நான் இப்போ உனக்கு ஒரு கதை சொல்கிறேன். எனது கடைசிப் பிறவியில் நான் ஒரு மத போதகராய் இருந்தேன். நான் சிறுவர்களுக்குக் கற்பித்தல், செபமாலை உருட்டுதல், பிரார்த்தனை செய்தல், பிரார்த்தனைக் கூட்டங்கள் வைத்தல் தவிர்ந்த ஏனைய நேரங்களில் சேரிகளில் உள்ள வறியவர்களுக்கு உதவி வந்தேன். நானும் எனது வாழ்க்கை ஒரு முழு நிறைவான, இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வென்று நினைத்தவன் தான். நான் ஒரு பெண்ணையும் தீண்டவில்லை. எனக்குச் சொந்தமில்லாத ஒரு சதநாணயத்தையும் நான் எடுத்ததில்லை. வெள்ளிக்கிழமைகளிலும் புனித நாட்களிலும் நான் மாமிசம் உண்டதில்லை. கடவுளின் எல்லாக் கட்டளைகளுக்கும் கீழ்ப்படிந்து நடந்தேன். கற்பனை கூடச் செய்யமுடியாத அளவுக்கு எனது வாழ்வு குற்றமற்றதாய் இருந்தது. பூதவுடலை நீத்து மேலுலகுக்கு நான் வரும் நேரம் வந்த போது தீர்ப்பு வழங்கும் ஆசனத்தில் புனித மும்மூர்த்தியை (Holy Trinity) நான் நேருக்கு நேரே காணப்போகிறேன் என்ற நினைப்பில் இறுமாப்படைந்தேன். உலக நேரப்படி நான் எழுபது வருடங்கள் காத்திருக்கிறேன். இன்னும் பற்பல பிறவிகளின் பின் தான் எனக்கு இறைவனைக் காணும் பாக்கியம் கிடைக்குமென விளங்கிக்கொண்டேன். 
"'ஆனால் ஏனப்படி?' புதியவர் அதிர்ச்சியாகக் குரல் கொடுத்தார். 'கடவுளின் ஆசிகளைப் பெறமுடியாதபடி அப்படியென்ன செய்துவிட்டோம்? நானும் எனது வருமானத்தில் பத்திலொரு பங்கைத் தேவாலயத்துக்கு அளித்தேன். நீங்களும், உங்களைப் போன்ற ஏனைய நல்லவர்களும் அப்படிச் செய்திருப்பீர்களென  எனக்கு நிச்சயமாகத் தெரியும். எனது சிந்தனை முழுவதும் எனது ஆத்மாவைப் புனிதமாக்குவதைப் பற்றித்தான் இருந்தது. நான் வெள்ளிக்கிழமைகளில் மாமிசம் அருந்தியது உண்மையேயெனினும் அது எமது சர்ச்சின் போதனைகளுக்கு எதிரானதல்ல. நாம் எங்கே பிழை விட்டோம்?" என்றார் அவர். 
அச்செருப்புத்தைக்கும் முதியவர் தனது கருவிகளைக் கீழே வைத்துவிட்டுப் புதியவரின் கைகளைத் தன் கைகளிலெடுத்துக் கொண்டார். "மகனே உனக்கு இன்னும் விளங்கவில்லையா?" என ஆதரவாகக் கேட்டார். மேலும் அவர், "நாம் எமது ஆத்மாவைப் பற்றிய சிந்தனையில் துரதிர்ஷ்டசாலிகளின் வேதனையைக் குறைப்பதைப் பற்றிச் சிந்திக்கவில்லை. நான் சிறுவர்களுக்குக் கிறிஸ்தவ வினா விடைகளைச் சொல்லிக் கொடுத்தேன். ஆனால் அவர்களின் தாய் தந்தையரின் கவலைகளைப் பங்கு போட்டுக் கொண்டேனா? அந்த முடக்கிலே பசியால் வாடிக்கொண்டிருந்த ஏழைக் கிழவனுக்காக எனது உணவைத் தியாகம் செய்தேனா? உனக்குக் கீழே வேலை பார்த்தவர்களின் சொந்தப் பிரச்சினைகளைக் காது கொடுத்துக் கேட்டாயா? உனது மனைவியின் நிர்மலமான மனத்துக்கான தேடுதல் வேட்கையைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்? அவளின் கைகளை உனது கைகளிலே எடுத்துக் கொண்டு "வா நாமிருவரும் சேர்ந்து தேடுவோம்" என்றிருக்கிறாயா? அல்லது உனது சொந்த விடயங்களைப் பற்றிய ஓயாத சிந்தனையில் அவளது கலங்கிய மனதைச் சாந்தப்படுத்தத் தோன்றவில்லையா? நீ உயிருடன் இருக்கையில் உன்னை ஒரு புனிதத்தொண்டராக மரியாதை கொடுத்து நடத்த வேண்டுமென நீ எதிர்பார்ப்பதாக அவள் எண்ணியதால் நீ உயிருடன் இருந்த போதிலும் பார்க்க அவள் இப்போ மகிழ்ச்சியாக இருக்கிறாள். உனது மனைவி என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்று ஒரு தரம் சென்று பார்" என்றார்.
செருப்புத்தைப்பவர் அவர் பார்வையிலிருந்து மறைய இப்போ அவர் கலிஃபோர்னியாவில் இருக்கும் தனது வீட்டின் உள்முற்றத்தில் தான் நிற்பதை உணர்ந்தார். இன்னொரு மனிதர் உள்முற்றத்திலிருக்கும் தனக்குச் சொந்தமான சாய்கதிரையில் (Sunning Chair) கால் நீட்டிப் படுத்திருக்க அவரது மனைவி ஒரு தட்டத்தில் கண்ணாடித் தம்ளர்களைக் கொண்டு வந்து கொண்டிருந்தாள். அவள் ஆசுவாசமாகவும் ஆரோக்கியமாகவும் காணப்பட்டாள். அந்த இன்னொரு மனிதர் எழுந்து அவளை முத்தமிட்டு விட்டு "நாம் மகிழ்ச்சிகரமாக வாழப்போகிறோம்" எனத் தனது ஆண்மையின் பலத்தை வெளிப்படுத்திக் கொண்டு சொன்னான். அதற்கு அவரது மனைவி, "ஆம். ஆனால் துக்கம் அனுஷ்டிக்கும் காலம் முடியட்டும்" என்றாள். அம்மனிதர், "அவ்வளவு காலம் காத்திருக்க வேண்டுமா?" என அவசரப்பட்டார். அதற்கு அவரது விதவை மனையாள் பெருமூச்சுடன், "அப்படித்தான் நினைக்கிறேன். நாம் உடனே திருமணம் புரிந்தால் ஆட்கள் கதைக்கக்கூடும். ஜான் இதைப்பற்றிக் கவலைப்படுவாரென நான் எண்ணவில்லை" என்றாள். மேலும் தொடர்ந்து, "அவர் தனது ஆத்மாவைப் பாதுகாத்துக் கொள்வதில் தான் தனது முழுக் கவனத்தையும் செலுத்தினார். இங்கே கீழே என்ன நடக்கிறது என்பதைப் பற்றி அவர் கவலைப்படுவாரென நான் எண்ணவில்லை" என்றாள். "அவர் இப்போ சொர்க்கத்தில் இருப்பாரென நீ நம்புகிறாயா?" என அம்மனிதர் கேட்டார். அவள் பெருமூச்சு விட்டுக் கொண்டு, "நிச்சயமாகச் சொல்வேன். ஆனால் அதே சமயத்தில் அவர் இவ்வளவும் கடவுளையே திருத்துவதற்குத் தொடங்கியிருப்பாரோ எனவும் எண்ணுகிறேன். ஒரு புனிதத் தொண்டருடன் அதுவும் குறிப்பாகத் தனக்குத் தானே சுயநியமனம் செய்து கொண்டவருடன் வசிப்பதென்பது மிகவும் கொடூரமானது" என்றாள்.
அத்துடன் அது முடிவடைந்ததனால் தானும் புனிதத்தொண்டர் வரிசையில் வரலாமென எதிர்பார்த்த அந்தத் தூரதிர்ஷ்டசாலியைப் பற்றி அவ்வளவு தான் நாம் அறியமுடியுமென நான் நினைத்திருந்தேன். ஆனால் உண்மையில் கதைசொல்லும் ஆர்ட்டை (Art) நான் குறைத்து எடை போட்டு விட்டேன். மறுநாட்காலை லிலி "இப்போ ஆர்ட் தனது கதையைத் தொடர்வார்" என எழுதினார். உடனே ஃபோர்ட் (Ford) தொடங்கினார். "காலை வந்தனம் ரூத். தான் கண்ணைப் போல பாதுகாத்து வந்த தனது மனையாள் ஏன் தன்னைப் பற்றி இவ்வாறு பேசுகிறாளென ஆரம்பத்தில் அம்மனிதருக்கு விளங்கவில்லை. தானே அதனைக் கண்டு உணரட்டுமென அச்செருப்புத் தைக்கும் முதியவர் இவரிடமே விட்டு விட்டார். தன்னைப் பரிபூரணமானவனென நினைக்கும் ஒரு மனிதனுடன் கூடி வாழ்வதென்பது நமது சிந்தனையை உருக்குலைக்கும் ஒன்று என அவரது மனைவி கூறிக் கொண்டிருக்கையில் தான் தனக்குச் சரியென்று பட்டவைகளை மற்றவர்களிடம் வலிந்து திணித்ததனை அவர் உணர்ந்து கொண்டார். அவர்கள் தாங்களாகவே புரிந்து கொள்வதற்கு உரிமையுள்ள தனிப்பட்ட ஆத்மாக்களாகும் என உணர்ந்தார். தனது மனைவியின் வாழ்வைத் தன்னலமற்ற அன்பினால் நிரப்புவதை விட்டுவிட்டுத் தன்னைப் போன்ற ஒரு எடுத்துக்காட்டாக அவளும் வரவேண்டுமெனத் தான் முயற்சித்ததையும் உணர்ந்தார். சமூகத்தில் நல்ல பெயர் வரவேண்டும் என்பதற்காகவும் சர்ச் வாடிக்கையாளர்களிடம் தனது பெயரை நிலை நாட்டவும் பிறரைக் கவரக்கூடியதான நல்ல காரியங்களைச் செய்யும்படி அவளைத் தான் வற்புறுத்தியதனையும் உணர்ந்தார்.
இப்போ அவர் தனது ஆத்மாவைப் பரிசீலனை செய்து தான் கடவுளுக்கும் ஏனையோருக்கும் சேவை செய்ததிலும் பார்க்கக் கூடிய அளவு தன்னை ஒரு புண்ணிய ஆத்மாவாகக் காட்ட வேண்டும் என்பதிலேயே கூடிய கவனம் செலுத்தியதையும் உணர்ந்தார். அத்துடன் பூவுலகிலே தனது நல்ல செய்கைகளுக்கு மக்களிடையே பேரும் புகழும் பெற்று அவற்றுக்குரிய பலனை அனுபவித்ததனால் ஆத்மவுலகுக்கு ஒரு பலனையும் கொண்டு வரவில்லை என்பதனையும் மிக வேதனையுடன் உணர்ந்தார். பிறருக்குக் கொடுப்பதும் உதவிகள் செய்வதும் மற்றவருக்குத் தெரியாமல் செய்வது தான் சொர்க்கமென மனிதனால் அழைக்கப்படும் இடத்தின் ஆசிகளைப் பெறுவதற்குரிய வழியென அவர் உணரத் தொடங்கினார். திருத்தொண்டர் போலத் தான் நடத்திய வாழ்க்கையானது பூவுல வாழ்வை வளப்படுத்தியதைப் போல் ஒன்றும் தனது ஆத்மாவுக்கு நன்மை பயக்கவில்லை என்பதை உணர்ந்த போது அவரது ஆத்மா மிகுந்த வேதனையால் பாதிக்கப்பட்டது. கொடுப்பவரின் சுயநலமில்லாத அன்பின்றி அவர் விளம்பரப்படுத்திச் செய்த சமூகப் பணிகளானவை வெறுமே நேரத்தைச் செலவழிக்கச் செய்த செய்கைகளாயின.
"அச்செருப்புத்தைக்கும் முதியவருக்குப் புதியவரின் மனநிலையைப் புரிந்துகொள்ள இயலுமாக இருந்தது. அவர் தான் மதகுருவாக இருக்கையில் நாளாந்தம் தான் தொடர்பு கொள்பவர்களுக்குச் சுயநலமின்றிச்  சேவை செய்வதிலும் பார்க்கத் தனது ஆத்ம முன்னேற்றத்திலேயே அதிக அக்கறை காட்டியதாகச் சொன்னது சரியே. இப்போ அவ்விரு மனிதர்களும் ஒன்றாகப் பிரார்த்தனை செய்தனர். அத்துடன் பூவுலகில் இருப்பவர்கள் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்த போது மிக மகிழ்ந்தனர். ஏனெனில் தாம் எலும்பும் சதையுமாக இருந்த போதிலும் பார்க்க இப்போ தான் அப்படிப்பட்ட பிரார்த்தனைகள் அதிகம் தேவைப்படுகின்றன என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டனர். வெவ்வேறு விதமான வாழ்க்கை வாழ்ந்த இருவரும் இப்போ மிக நெருக்கமாக உணர்ந்தனர். இருவரும் ஒன்றாகச் சேர்ந்து உண்மையை முழுமையாகப் புரிந்து கொள்ள முயற்சி செய்வதென முடிவெடுத்தனர். அம்மதபோதகர் தனது முந்தைய வாழ்க்கையின் தவறுகளைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்த அந்தச் செருப்புத் தைக்கும் குடிலை விட்டு விட்டு அவ்விருவரும் ஞானாலயத்துக்குச் செல்லும் ஒரு குழுவுடன் தங்களையும் இணைத்துக் கொண்டனர். அவ்விருவரும் இப்போ இங்கே கற்கின்றனர். எமது ரட்சிப்பின் ரகசியமானது வெள்ளிடைமலை போல மிகவும் வெளிப்படையானது என இப்போ புரிந்து கொண்டனர். அவையாவன: சுயநலமின்றிய ஈகை, ஏனையோரின் நலன்களுக்கு முன்னுரிமை அளித்தல், ஒருவருக்கொருவர் அன்புடன் உதவுதல் என்பனவாகும்.
ஆத்ம உலகில் நாம் இருக்கையில் கற்றறிந்த பிரபஞ்சத்தின் பிரதான விதியைப் பூவுலகில் நாம் செயற்படுத்துகிறோமா என்பதனைக் கண்டறிவதற்காகவே முக்கியமாக நாம் மீண்டும் மீண்டும் பிறவியெடுக்கின்றோம். ஆத்மவுலகில் அது மிகவும் இலகுவாகவும் எளிதாகவுமுள்ளது. இங்கே எம்மைப் போலவே இயல்புகள், எண்ணவலைகள் கொண்டவர்களுடன் நாம் இணக்கமாகக் கலந்திருப்போம். ஆனால் நாம் மீளவும் எலும்பும் தசையுமாக வருகையில் எம்முடன் நல்லிணக்கம் இல்லாதவர்களுக்கு இடையிலும் நாம் அவர்களுடன் நல்லிணக்கம் இல்லாத நிலையிலும் விடப்படுகிறோம். அது தான் உண்மையான சோதனைக்களம். அதுதான் எங்களது விருப்பங்களுக்கு மாறுபட்ட விருப்பங்களைக் கொண்ட குடும்பத்தில் சிலநேரங்களில் நாம் வேண்டுமென்றே வந்து பிறக்கின்றோம். அவர்களை அனுசரித்துக் கொண்டோ அல்லது மற்றையோரைப் பாதிக்காத வகையிலும் எரிச்சலூட்டாத வகையிலும் அவர்களுக்கும் எமக்கும் ஒத்து வரக்கூடியதான ஒரு வாழ்க்கை முறையைக் கைக்கொண்டோ வாழப் பழகவேண்டும். எமது சிருஷ்டி கர்த்தாவின் அரசாங்கத்தில் அப்படித்தான் நாம் ஆத்மீக முன்னேற்றம் அடைகிறோம். 
"நாம் மேற்சொன்ன அந்த மனிதர் கடைசியில் அப்பாடத்தைக் கற்ற பிற்பாடு தனது மனைவி பூவுலகில் தனது எஞ்சிய வாழ்நாளைக் கழிப்பதற்கு மனதுக்கு உகந்த ஒரு ஆத்மாவைக் கண்டு பிடித்ததை எண்ணி மகிழ்ந்தார். அவர் உண்மையாகவே தன் குடும்பத்தில் அன்பு செலுத்தியதனால் (தன் சொந்த வழியில்) அவர் அவர்களுக்கு இசைவான எண்ணவலைகளையும் அன்பையும் அனுப்பி அவர்களின் பாதையை சுமூகமாக்கினார். இப்போ அவர் துரிதமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார். சாஸ்வதமான வாழ்வை நோக்கிய எமது பாதையின் ஒரு படியைத் தாண்டி இங்கே வருகையில் தேவதைகள் புடைசூழ பொன்னாலான மண்டபத்தில் இறைவனைக் காணலாமென அவரைப் போலவே எதிர்பார்த்து வந்த ஆத்மாக்கள் ஆத்மீக முன்னேற்றத்துக்கு ஆர்வத்துடன் உழைக்கிறார்கள். இவர் அவர்களில் மிக முக்கியமானவராகும்"
ஒரு சில நாட்களின் பின் ஃபோர்ட் பின்வருமாறு அறிவித்தார்: "இன்று தனக்கு அருட்தொண்டர் தன்மைகளிருப்பதாக நம்பிய ஒரு பெண்ணின் இதயத்தையும் மனதையும் பற்றி ஆராய்வோம். அவர் தான் இறைவனின் கரங்களுக்கே நேரடியாகக் கொண்டு செல்லப்படுவாரென எதிர்பார்த்தார். அதிகாரம் கொண்டவர்களுக்கு அவர் மதிப்பளித்தது போல வேறெவர்க்கும் அவர் மதிப்பளிக்கவில்லை. தீர்ப்பு வழங்கும் ஆசனத்தில் தான் அமர்கையில் ஒரு தவறும் ஏற்படாமலிருக்க அவர் தனது நற்செய்கைகளின் மூலம் செயின்ட் பீட்டரைக் கவர நினைத்தார். அவர் இந்தப் பக்கத்திலே கண்விழிக்கையில் செயின்ட் பீட்டரால் அனுமதிக்கப்பட்ட பின் தான் நுழையப்போகும் முத்துக்களாலான வாயிற் கதவைத் தேடித் தன்னைச் சுற்றிலும் பார்வையிட்டார். அவர் கண்டது ஒரு மேடையில் கால் நீட்டிப் படுத்துக் கிடந்த ஒரு பழைய ஆத்மாவையே. அவர் இங்கே பல்லாண்டுகளாக இருக்கிறார். அவரை செயின்ட் பீட்டரென எண்ணிக் கொண்டு அப்பெண்மணி அவரை அணுகி, "சேர், இங்கே பாருங்கள். நான் மேரி ப்ளங் (Mary Blunk). என்னை இறைவனிடம் அழைத்துச் செல்லும் படி கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.
"அந்தப் பழைய ஆத்மா அவரை அனுதாபத்துடன் பார்த்தார். அவர் அப்பெண்மணியைச் சற்று நேரத்துக்கு ஓய்வெடுக்கும் படி பரிந்துரைத்தார். ஆனால் அது அப்பெண்மணியின் காதில் விழவில்லை. அவரது பௌதீகவுடல் நோயுற்றிருந்தது. இப்போ அவ்வுடலை நீத்ததால் தந்தைக்கருகில் தனக்குரிய இடத்தைப் பற்றிப் பல எதிர்பார்ப்புகளுடன் இருந்தார். அவர் மேலும் தாமதிக்க விரும்பாததால் அந்தப் பழைய ஆத்மா அவரை முன்னோக்கி நகரச் சொல்லிச் சைகை செய்தார். சீக்கிரத்தில் அப்பெண்மணி ஒரு வாயிற் கதவருகில் வந்தார். ஆனால் அந்த வாயிற்கதவு அவர் எதிர்பார்த்தது போல் ஒன்றும் மேன்மை வாய்ந்ததாக இருக்கவில்லை. அக்கதவுக்குப் பூட்டோ அல்லது வாயிற் காவலனோ ஒருவரும் இருக்கவில்லை. எனவே அவர் கதவிற்குள்ளால் நுழைந்து பூந்தோட்டத்தால் சூழ்ந்திருந்த வழியொன்றில் ஏறிச்சென்றார். வழியில் கொள்ளை கொள்ளையாக மலர்கள் மலர்ந்திருந்தன. அவர் இறைவனின் இருப்பிடத்தை எவ்வளவு விரைவில் அடைய முடியுமோ அவ்வளவு விரைவில் அடைய விரும்பியதனால் அவற்றில் கவனம் செலுத்தவில்லை. போகும் வழியில் அவர் பலரைச் சந்தித்தார். அவர்கள் அப்பாதையில் ஒன்றில் ஏறிக்கொண்டோ அல்லது இறங்கிக் கொண்டோ இருந்தனர். எங்கள் கதாநாயகி அவர்களைப் பார்த்துத் தலையை அசைத்துக் கொண்டே விரைந்து சென்று கொண்டிருந்தார். அவருக்கு முன்னே கஷ்டப்பட்டு முன்னேறிக் கொண்டிருந்த சிலரைத் தாண்டிச் செல்லும் நோக்குடன் அவர் விரைந்தார். இறங்கிக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் நிராகரிக்கப்பட்டவர்கள் எனவும் அவர்கள் நரகத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள் எனவும் அவர் அனுமானித்துக்கொண்டார்.
"அவருக்கு முன்னே சென்று கொண்டிருந்தவர்களை விலக்கிக் கொண்டு கடைசியில் அவர் ஒரு உயரமான மேடையை அடைந்தார். அதன் உச்சியில் தன்னை வரவேற்கும் கரங்களுடன் தனக்காகக் காத்திருக்கும் இறைவனைக் காணப்போவதாக எண்ணினாள். இப்போ அவள் தனது உடைகளையும், தலையையும் சரி செய்து கொண்டார். தனது உடைகளைத் தொட்டு உணர்ந்து மீளவும் உறுதி செய்துகொண்டார். ஏனெனில் இங்கேயிருக்கின்ற அவ்வுடைகளும் அவரது வீட்டில் திங்கட்கிழமைகளில் அவர் தோய்த்துக் கொண்டிருந்த அவரது உடைகளைப் போலவே அவருக்கு உண்மையாகவே தென்பட்டன. அங்கேயொரு அழகிய வாலிபன் நிற்கக்கண்டார்.  அவர் அவ்வாலிபனை ஒரு தேவதூதனென எண்ணிக் கொண்டு அவனிடம் இனிமையாகத், "தயை கூர்ந்து எனது வரவை நீ அறிவிப்பாயா? ஏனெனில் நான் அவசரமாக இறைவனின் முழந்தாழ்களில் எனது சிரசைத் தாழ்த்தி வணங்க வேண்டும்" என்றார். அவ்வாலிபன் மெதுவாகச் சூழ்நிலையை அளந்தான். கடைசியில் அவன் பின்வருமாறு பதிலளித்தான்: "ஆனால் அம்மணி நீங்கள் ஏறிவந்த மலைப்பாதையில் புதிதாக வந்த சில ஆத்மாக்கள் இன்னமும் கஷ்டப்பட்டு ஏறிக் கொண்டிருக்கிறார்கள்" என்றான். அப்பெண்மணி பொறுமையின்றி நெருங்கிக் கொண்டிருக்கும் நீண்ட வரிசையில் தன்னைக் காக்க வைக்காமல் தன்னைப் பற்றி இறைவனின் கவனத்துக்குக் கொண்டு வரும்படி வேண்டினாள். அவ்வாலிபன் புன்னகைத்துக் கொண்டு அவளுக்குப் பின்வருமாறு பதிலளித்தான்: "ஆனால் அம்மணி, கீழே அந்தப் பாதாளத்திலிருந்து மேலே வரத்துடிக்கும் அந்த ஏனையோரைக் காப்பாற்றாமல் நீங்கள் எப்படிக் காப்பாற்றப்படுவீர்கள்?" என்றான். அதற்கு அப்பெண்மணி அந்நியர்களாகிய அவர்களுக்கும் தனக்கும் ஒரு சம்பந்தமுமில்லை என்றாள்.
இறுதியாக இன்னொரு மனிதன் அவளை அணுகினார். அம்மனிதனின் முகம் அப்பெண்மணிக்குச் சற்றே பரிச்சயமாக இருந்தது. தெருவோரத்தில் எந்நேரமும் ஒரு தகரக் கோப்பையை ஏந்திக்கொண்டு நின்றுகொண்டிருக்கும் பிச்சைக்காரன் என அவனை அடையாளம் கண்டு கொண்டாள். "நீ இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்?" என அதிகாரத் தொனியில் அவனை அவள்  கேட்டாள். அதற்கு அவன் தான் தனது அடிபட்டு நொந்த உடலை அண்மையில் தான் நீத்ததாகவும் தான் இப்போ தனது அடுத்த கட்ட முன்னேற்றத்தில் இருப்பதாகவும் பதிலளித்தான். அப்பெண் அப்பிச்சைக்காரன் இருப்பதற்குரிய இடமாக இது படவில்லையெனச் சீற்றத்துடன் சொன்னாள். அப்போ அங்கே வேறு படிகள் இருப்பதைக் கண்டு அவள் அப்படிகளில் ஏறத்தொடங்கினாள். அது ஒரு மண்டபத்தின் நுழைவாயிலில் முடிவடைந்தது. அங்கே இறைவன் தனக்காகக் காத்துக் கொண்டிருப்பதாக எண்ணினாள். ஆத்மீக முன்னேற்றமடைந்தவரைப் போலத் தென்பட்ட ஒரு மனிதரைக் கடைசியில் அவள் அங்கே கண்டாள். அவரின் முன் பெண்கள் வணங்கும் முறைப்படி முழங்கால்களை மடித்து உடலைத் தாழ்த்தி வணங்கிக் கொண்டு தன்னை நேரடியாக இறைவனின் பால் இட்டுச் செல்லுமாறு அவள் கேட்டுக் கொண்டாள். அதற்கு அம்மனிதர், "அம்மணி! நாமெல்லோரும் கடவுளே" எனப் பதிலளித்தார். அவள் சுற்றிலும் கோபமாகப் பார்த்தாள். அம்மனிதர் கைகளால் எல்லோரும் என்று சேர்த்துக் காட்டுகையில் அப்பிச்சைக்காரக் கிழவனையும் சேர்த்துத் தான் காட்டுகிறார் என்பதைக் கவனித்தாள். அது அவளுக்கு வெறுப்பேற்றியது. அப்பிச்சைக்காரன் என்றும் குளித்த மாதிரித் தெரியவில்லை அவளுக்கு. அவனது தலைமுடியும் எப்பொழுதும் சடையாகக் காணப்படும். ஆனால் இப்பொழுது அவனைப் பார்க்கையில் சற்றுத் தூய்மையாகக் காணப்பட்டது போலிருந்தது அவளுக்கு. "கேலி செய்வதை நிறுத்தி விட்டு என்னைப் படைத்தவனிடம் என்னை அழைத்துச் செல்லுங்கள்" என்றாள் அவள்.
அவ்வழகிய வாலிபன், "ஆனால் அம்மணி அவர் உங்களை மட்டுமல்ல எம் எல்லோரையுமே அவர் தான் படைத்தவர். முன்னேற்றப் பாதையின் இத்தற்காலிக நிலையில் மீண்டும் உங்கள் ஒவ்வொருவரையும் நேரில் நின்று வரவேற்பதற்கு அவருக்கு நேரமில்லை. நீங்களும் மற்றவர்களும் உயரிய நிலையை அடைவதற்கு உங்களுக்கு உதவுவதற்கேற்ற நிலை வரும் வரை இடைப்பட்ட இக்காலகட்டத்தில் அங்கே நின்று கொண்டிருக்கும் நீங்கள் பிச்சைக்காரனென்று நினைக்கும் நபர் உங்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருப்பார்" எனப் பதிலளித்தான். அப்பரிதாபத்துக்குரிய பெண்ணோ அவருடன் அப்படி வாதிட்டாள். அப்பிச்சைக்காரனை எவ்விதத்திலும் தான் வழிகாட்டியாக ஏற்க முடியாதென்றும் வேறெவரையும்கூட அவ்விதத்தில் ஏற்கவியலாதென்றும் தனக்கு இறைவனுடன் மட்டும் தான் அலுவலென்றும் எங்கே அவரைக் காணலாமென அதிகாரம் தொனிக்கக் கேட்டாள். ஏனையவர்களும் இப்பொழுது வந்து சேர்ந்ததில் கூட்டம் சூழ்ந்து விட்டிருந்தது. வந்தவர்களிலும் சிலர் இறைவனெங்கே எனக் கேட்டனர். அவர்களெல்லோரும் இறைவன் எங்கே இருக்கிறானென அறிய விரும்பினர். வேறு பலரும் மேலே வந்து சேர்ந்து விட்டிருந்ததனால் இப்போ அப்பெண் முதலாவது ஆளாக நிற்கமுடியாமல் போய்விட்டது. அதுவும் அவளுக்குக் கோபம் விளைவித்தது.
கடைசியில் அவ்விளைஞன் புதிதாக வந்துள்ள அவ்வாத்மாக்களின் கூட்டத்தினரை அணுகி மிக இனிமையான குரலில், "கவனியுங்கள், இறைவன் எங்குமிருக்கிறான். அவன் அன்பு வடிவானவன். நிச்சயமாக நீங்கள் ஒவ்வொருவரும் மற்றைய ஒவ்வொருவரிலும் அன்பு செலுத்தவும், ஒவ்வொருவருக்கும் உதவிகள் செய்யவும்  கற்று உணர்வீர்களாதலால் இறைவன் நிச்சயமாக உங்களிடையே வேலை செய்வான். நீங்கள் உங்களைச் சூழவுள்ளவர்களிலும் பார்க்க ஆத்மீக முன்னேற்றம் அடைந்துள்ளீர்களா என்பதைக் கவனித்துப் பாருங்கள்' என்றான். ஆனால் அப்பெண்ணோ பொறுமையிழந்து, "எங்கே தீர்ப்பு வழங்கும் ஆசனம்?" என வற்புறுத்தினாள். "நீங்கள் அதில் இருந்து கொண்டிருக்கிறீர்கள் அம்மணி" என அவ்விளைஞன் பதிலளித்தான். அவள் சுற்றிலும் கோபமாகப் பார்த்து அங்கே எந்த விதமான ஆசனமும் இல்லை என்பதைக் கண்டு கொண்டாள். இறுதியாக அவன் என்ன சொல்ல வருகிறானென அவளுக்குச் சற்றே பிடிபட்டது. அவள் மட்டுமே அவளது நீதிபதி. அவள் குற்றமற்ற, தூய்மையான வாழ்வு வாழ்ந்தவளா இல்லையா என்பதை வேறெவரும் சொல்ல மாட்டார்கள். அவளே அதனைக் கண்டறிய வேண்டும். அவள் தனது இதயத்தை ஆராய்ந்து பார்க்கையில் இந்தப் பயங்கரமான உண்மையைக் கண்டுபிடித்தாள்: குற்றமற்ற வாழ்வு வாழ்வதற்கான தனது முயற்சியில் அவள் தன்னைப் பற்றியும் தனது ஆத்மீக முன்னேற்றத்தைப் பற்றியும் மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்திருக்கிறாள். அவள் தனது நல்லியல்புகளைப் பற்றி அதிக அக்கறை கொண்டதில் தனது தகுதிக்குக் கீழ்ப்பட்டவர்களுடன் ஒரு ஆறுதல் வார்த்தையைப் பகிர்ந்து கொள்ள மறந்து விட்டாள். தான் ஆத்மீகக் காரணங்களுக்காக அணியும் வெள்ளை ஆடையில் கறை படிந்துவிடும் என்பதற்காகத் தனக்குக் கீழே இருந்தவர்களினால் அவ்வாடைகள் அழுக்காவதைத் தவிர்த்தாள். பின்பு பிறரில் எப்படி அவள் அன்பு காட்டியிருக்கமுடியும்? விடைகள் அவளுக்கு உள்ளேயே இருந்தன. இறைவனால் கூடத் தீர்ப்பு வழங்குகையில் இப்படி நேரே நின்று பார்த்தது போல அவள் தன்னைத் தானே அலசி ஆராய்ந்தவாறு  ஆராய்ந்திருக்க முடியாது. தனது இதயத்தை நன்றாக அறிந்த அவள் தனது குறைபாடுகளை மதிப்பிட்டாள். வேறெவரும் அவளை மதிப்பிட இயலாது, ஏனெனில் தானே தனது ஒரேயொரு நீதிபதியாகும். அவள் தனதருகில் நின்ற பிச்சைக்காரனின் தன்மைகளை அலசி ஆராய முற்படுகையில் பத்தாயிரம் ஆண்டுகளானாலும் அவனது இதயத்தை ஆராய்ந்து அவன் செய்த செய்யாத தவறுகளைக் கண்டு பிடிக்கத் தன்னால் இயலாது என உணர்ந்தாள். ஏனெனில் அவன் மட்டும் தான் அவனுக்குரிய ஒரேயொரு நீதிபதியாகும்.
மறுநாட்காலை, ஃபோர்ட் புதிதாக வருகை தந்திருந்த பூவுலகிலிருக்கும் தனது குடும்பத்தினரை எண்ணி வருந்திக் கொண்டிருந்த ஒரு பெண்ணின் கதையைச் சொன்னார். அப்பெண் இறுதியில் வந்த வியாதியின் போது தன்னால் இனி உயிர்வாழ இயலாதென நினைத்திருந்தாள். ஆனால் இப்போ தனது கணவரையும் குழந்தைகளையும் பிரிந்து வந்ததை எண்ணி மனங்கலங்குவதால் ஆத்மநிலையில் தொடரும் வாழ்வுக்குத் தன்னைத் தயார் செய்ய மறுக்கின்றாள். அவரே சொல்லட்டும்:
"அவள் தனது கணவரையும் பிள்ளைகளையும் விடாமல் தொடர்ந்து கொண்டு அவர்களின் ஒவ்வொரு அசைவிலும் தனது தாக்கத்தை உண்டாக்க முயல்கிறாள். அத்துடன் தனது இருக்கையை அவர்களுக்கு உணர்த்தத் தீவிரமாக முயல்கிறாள். இங்கே ஆத்மவுலகில் அவளது ஆத்மீக வளர்ச்சியைத் தொடரும் வண்ணம் நாம் உரைக்கும் சொல்லொன்றும் அவளைக் கவரவில்லை. பூவுலகில் தனது உறவினர்களுடன் தனது வாழ்க்கையைத் தொடர்வதற்கு மட்டுமே அவள் விரும்பினாள். அவர்களுக்குத் தனது வழிகாட்டல் நிச்சயமாகத் தேவையென அவள் எண்ணுகிறாள். அவர்களின் மகிழ்ச்சிகளினூடாக அவள் வாழ்ந்தாள். ஆனால் பிள்ளைகளின் ஒவ்வொரு விதமான சிறிய ஆசைகளின் தூண்டுதல்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்க விரும்பினாள். அவளின் எச்சரிக்கைகள் அவர்களுக்கு விளங்கவில்லைப் போலத் தோன்றினாலும் கூட 'தாய் எல்லாம் அறிவாள்' என்பதே அவளின் வேத வாக்காக இருந்தது. இங்கே இருக்கும் இப்படிப்பட்டவர்களுடன் பணி புரிந்து பழக்கப்பட்டவர்கள் அதற்குரிய வழிகளில் அவளது பயங்களைப் போக்கி அவளை சாந்தப்படுத்தத் தம்மாலான முயற்சிகளைச் செய்கிறார்கள். அவர்கள் அவளுக்கு பூமியில் உயிர் வாழும் ஒவ்வொரு உயிரும் தங்களது சொந்த உளநிலைமை, ஆற்றல்களுக்கு ஏற்பத்தான் வாழவேண்டுமென்றும் இத்தளத்திலிருந்தோ அன்றிப் பௌதீகத் தளத்திலிருந்தோ எந்தவிதமான ஆதிக்கமும் இருக்கலாகாது என்றும் கற்பித்தனர். அவளது முன்னேற்றமானது கொஞ்சம் கொஞ்சமாகத் தடைப்பட்டது. வளர்ச்சியடையாத எதுவும் வீணாகப் போய்விடும். அவளது ஆத்மாவானது சுருங்கி அவள் நம்பிக்கையும் பொலிவும் இழந்து, பரிதாபத்துக்குரியவள் ஆனாள். பூவுலகில் இருப்பவர்களிடம் தனது ஆசையைத் திணிப்பதற்கு முயற்சிக்கும் அதே நேரத்தில் இங்கேயுள்ள ஆத்மாக்களின் விவேகம் நிறைந்த வார்த்தைகளைச் செவிமடுக்க மறுத்து உணர்ச்சியற்ற ஜடமானாள்.
கடைசியில் அவள் மனக்கலக்கத்துடன் ஆழ்ந்த உறக்கத்தில் படிப்படியாக வீழ்ந்தாள். இந்த உணர்ச்சியற்ற நிலையானது கிழமைக் கணக்கிலோ மாதக் கணக்கிலோ அன்றி வருடக் கணக்கிலோ தொடரலாம். கடைசியாக அவள் விழிக்கையில் தனது பூவுலகிலிருக்கும் குடும்பத்தினர் தானின்றியே செழித்தோங்கியதை அறியத்தலைப்பட்டாள். அவர்கள் தானின்றியே வாழப் பழகிக்கொண்டார்கள். தான் நினைத்தது போல தான் ஒன்றும் அவர்களுக்கு அத்தியாவசியமாக இல்லையென்பதையும் கண்டு கொண்டாள். இப்போ இங்கேயுள்ள ஆத்மாக்களின் சொற்களுக்குச் செவிமடுக்கக்கூடியதாக உள்ளாள். அவ்வாத்மாக்களும் சில ஆண்டுகளுக்கு முன்னரோ அல்லது பல்லாயிரமாண்டுகட்கு முன்போ இதே போன்ற அதிர்ச்சிகரமான அனுபவங்களினூடாக மீண்டு வந்தவர்களே. எனவே அவர்கள் அவளது உணர்ச்சியற்ற தன்மையிலிருந்து அவள் வெளியில் வர வழிகாட்டக் கூடியவர்கள். நல்ல அறிவுரைகளால் அவர்கள் அவளைத் தனது சொந்த ஆத்மீக விழிப்புணர்வுக்குத் தூண்டுவார்கள். தான் பூவுலகிலிருக்கையில் ஆக்க பூர்வமாய் இருந்ததிலும் பார்க்கக் கூடுதலாக அழிவு பூர்வமாகவே வேலை செய்திருப்பதை இப்போ உணர்ந்து கொண்டாள். தனது பிள்ளைகளைத் தனது அதிகாரத்தால் ஆண்டாள். தனது தாயன்பால் அவர்களை அடக்கியாண்டாள். அவள் தனது பிழைகளை ஆய்வு செய்த பின் அவற்றுக்கு ஈடு செய்ய விரும்பினாள். மீண்டுமொரு முறை பூவுலகில் பிறக்கும் சந்தர்ப்பம் தனக்களிக்கப்பட்டால் தான் 'தாயன்பு' என்ற பெயரில் பிள்ளைகளில், அவர்கள் தாங்கமுடியாத சுமைகளையேற்றி அவர்களை முழுக்க முழுக்கத் தன் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்காமல் அவர்கள் சுதந்திரமாக இயங்கக்கூடிய முறையில் அவர்களில் மென்மையான அன்பைச் செலுத்துவேனென உறுதிமொழி பூண்டாள். சுயநலத்துடன் கூடிய அன்புக்கும் சுயநலமற்ற அன்புக்குமுள்ள வித்தியாசத்தை எமக்குக் கற்றுத்தரும் கல்விக்கூடங்களில் அவள் சேர்ந்து பயில்கிறாள்.
"இப்போ அவள் தனது பிள்ளைகளைப் பூவுலகில் காண்கையில் அவர்களில் ஆதிக்கம் செலுத்த முயலாமல் தன் அன்பையும் அன்னையின் ஆசிகளையும் அவர்களுக்கு அனுப்புகிறாள். அந்தப் பிள்ளைகளில் நாம் இப்பக்கத்திலிருந்து மாற்றங்களைக் காணக்கூடியதாக உள்ளது. இதற்கு முன்பெல்லாம் அவர்கள் கைகளைக் கட்டிவிட்டதைப் போல உணர்ச்சி வயமாகத் தாயை அதிருப்தியூட்ட  வேண்டி வருமோ என்ற பயத்தில் எந்த ஒரு விஷயத்தையும் செய்யத் தயங்குவார்கள். இப்போ அவர்களால் தாயின் பிரகாசிக்கும் அன்பை உள்ளூர உணரமுடிகிறது. தாய் விடுதலையடைந்து மகிழ்ச்சியாக இருக்கிறாளென்று அவர்களால் உணரமுடிவதால் (அவர்கள் இதைப்பற்றி எண்ணுவதை வேண்டுமென்றே நிறுத்திவிட்டார்களோ இல்லையோ) அவர்களால் இலகுவாகத் தீர்மானங்கள் எடுக்கக் கூடியதாகவுள்ளது. அவர்களது முன்னேற்றங்களைப் பார்த்து அவர்களின் வளர்ச்சியால் ஆத்மவுலகிலிருக்கும் தாயார் மகிழ்வுறுகிறாள். அதேநேரம் தான் அவர்களில் ஆதிக்கம் செலுத்தியதை எண்ணி வருந்துகிறாள். அவள் படிப்படியாக முன்னேறி ஒரு விவேகமுள்ள, சுயநலமற்ற பிறவியாக மீண்டுமொரு நாள் பூவுலகிற் பிறப்பாள்.
ஆர்தர் ஃபோர்ட் ஒரு நியமிக்கப்பட்ட சமயக்குருவாக இருந்ததாலோ என்னவோ அவர் மதபோதகர்களைப் பற்றிக் கூறுகையில் கூடுதலாக அனுபவித்துக் கூறுவதைப் போன்றிருக்கும். எல்ஸி செக்ரைஸ்ட் (Elsie Sechrist) அவரிடம் குறிப்பிட்ட நபர்களைப் பற்றிக் கேட்டுப் பார்க்கச் சொல்லிச் சில நாட்களின் பின் அவர் ஒரு கிறிஸ்தவ மார்க்க போதகரைப் பற்றிச் சொன்னார். அவர் பலரை நல்ல கிறிஸ்தவனாக மாற்றியவர். அவர் தனது போதனைகளின் போது உயிர்த்தெழுந்த பாலகனைப் பற்றியும் இறப்பின் பின் உள்ள வாழ்வைப் பற்றியும் உபதேசித்திருக்கிறார்.
"அப்போதகருக்குச் சிலநேரங்களில் பைபிளில் விபரிக்கப்பட்ட தீர்ப்புகள் வழங்கும் நாள் (Judgement Day) மற்றும் இறந்தவர்கள் எல்லாம் கல்லறைகளிலிருந்து மீண்டும் உயிர்பெற்று எழுவார்கள் என்பவை போன்றன உண்மையிலேயே சரியான முறையில் அர்த்தம் கற்பிக்கப் பட்டிருக்கின்றனவா என்று சந்தேகங்கள் வரப்பார்க்கும். ஆனால் அவர் அவற்றை எதிர்க்காமல் ஏற்றுக் கொண்டிருந்தார். ஏனெனில் அவர் உண்மையிலேயே தேடுதல் உள்ள ஒருவராகும். தந்தையை அடையும் வழியை அறிவதற்கு சர்ச் ஒன்று தான் சிறப்பான வழியென்று நம்புபவர். தனது திருச்சபையில் நோயாளிகட்குத் தாராளமாக உதவிகள் செய்தார். அத்துடன் மக்களை நல்வாழ்வு வாழ்வதற்குத் தூண்டினார். அவர் தனது எதிர்காலத்தைப் பற்றி அவ்வளவாகக் கவலைப்படுவது கிடையாது. ஏனெனில் சரியான முறையில் வாழ்ந்தால் இறைவனின் அரியாசனத்துக்கு அருகில் இருப்பதற்குத் தானும் தேர்ந்தெடுக்கப் படுவேனென எண்ணினார்.
"தனது நம்பிக்கையில் உறுதியாக வாழ்ந்து அவர் இறுதியில் பூவுடலை நீத்த பின் மேலுலகில் லேசான ஒரு தூக்கம் கொண்ட பின் ஒரு கோபுரமும் அதனருகில் கல்லறைகளுடன் கூடிய இடுகாடும் கொண்ட அழகிய ஒரு இடத்தின் முன் கண்விழித்தார். அவர் தனது வீட்டிலிருப்பது போல உணர்ந்தார். ஏனெனில் அவர் போதனை செய்த இடமும் இதைப் போன்றதே (அதாவது சர்ச்சும் அதற்கருகே இடுகாடும்). அவர் அந்தக் கட்டடத்தை நோக்கி நடக்கத் தொடங்கினார். அதனுள்ளே நன்றாக உடைகள் உடுத்திய பலர் ஆராதனைக் கூட்டத்துக்கு ஆயத்தமாக நிறைந்திருக்கக் கண்டார். ஆர்கனின் இசை கேட்டது. அவர் நடைபாதையால் சென்று பிரசங்க மேடையை அடைந்தார். தன் தலையைத் தாழ்த்தி வணங்கிய பின் பிரார்த்தனையைத் தொடங்கினார். மீண்டும் இசையொலி கேட்டது. சபையிலே நிறைந்திருந்தவர்களை உற்றுக் கவனிக்கையில் சில முகங்களே பரிச்சயமாகத் தெரிந்தன. அதாவது வேறொரு வட்டாரப் பகுதியின் திருச்சபைக்குத் தான் அழைக்கப்பட்ட போதகரைப் போல இருந்தது. ஆனால் அவர் பின்னர் தனது போதனையை வழங்குகையில் "நீங்களனைவரும் பாவிகளே என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்" என்று ஆரம்பித்தார். தான் எதற்காக அந்தக் குறிப்பிட்ட விஷயத்தை இன்று தேர்ந்தெடுத்தேன் எனவும் அது இந்த முன்பின் தெரியாதவர்களைப் பற்றித் தான் மதிப்பீடு செய்வது போலுள்ளது எனவும் ஆச்சரியப்பட்டார். அவர் சங்கடப்பட்டார். ஆனால் வேறெவருக்கும் அது ஆச்சரியத்தைத் தரவில்லைப் போலிருந்தது. கடைசியாக அவர் அவர்களுக்குத், "தீர்ப்பு வழங்கும் நாளன்று எம்மெல்லோர்க்குமே தீர்ப்புகள் வழங்கப்பட்டுப் பின்னர் சொர்க்கத்துக்கோ, நரகத்துக்கோ அனுப்பப்படுவோம்" என்றார்.
சபையோர்கள் அனைவரும் கனிவாகப் புன்னகை புரிந்தனர். இப்படிப்பட்ட விசித்திரமான எதிர் விளைவு அவரை ஆச்சரியப்பட வைத்தது. அவர் நரகத்தினுடைய எரிக்கும் சித்திரவதையைப் பற்றி நினைப்பூட்டி அவர்களை எச்சரித்தார். அதற்கு அவர்கள் இரக்கத்துடன் கூடிய புரிந்துணர்வுடன் புன்னகை புரிந்தனர். அவர் மேலும் குழப்பமுற்றார். பின்னர் சபையிலிருந்த ஆத்மாக்கள் அனைவரும் ஒரு சேர எழுந்து அவரை வரவேற்றனர். அத்துடன் அவர்கள் அவரது உபதேசத்தைக் கண்டு களித்ததாகவும் அவரின் நிலையைச் சரி செய்யத் தாம் இப்போ தயார் என்றும் உரைத்தனர். போதகர் அதிர்ச்சியால் வாயடைத்து நின்றார். ஒருநாளும் சபையோரிடமிருந்து இப்படிப்பட்ட எதிர் விளைவை அவர் சந்தித்ததில்லை. அவர் தான் கனவு கண்டு கொண்டிருப்பதாகவும் கனவிலிருந்து விழித்து விடுவேனெனவும் நினைக்கத் தலைப்பட்டார். ஆனால் அப்படி நடக்கவில்லை. இப்போ அவர்கள் அவரை சர்ச்சுக்கு வெளியே அழைத்துச் சென்று சுடலையை அடைந்தார்கள். அங்கே அவரது கல்லறையை அவருக்குக் காட்டினார்கள். அக்கல்லறையில் அவரது பெயரும் பிறந்த திகதியும் இறந்த திகதியும் செதுக்கப்பட்டிருந்தன. "இப்போ நீங்களும் எங்களில் ஒருவரே. இங்கே எம்மைத் தவிர வேறு எவரும் எம்மை மதிப்பீடு செய்யமாட்டார்கள். எம்மாலான உதவிகளை உங்களுக்குச் செய்யவும் உங்களுக்குப் போதனை செய்ய வேண்டும் போலிருந்தால் அதனைச் செவிமடுக்கவுமே நாம் இங்கேயுள்ளோம். அதே நேரத்தில் நீங்கள் உங்களின் மதிப்பாய்வுகளைத் தொடங்குங்கள். அமைதியாக ஓய்வெடுங்கள்" என்றனர் அவர்கள்.
ஆர்தர் ஃபோர்ட்டிடம் எல்ஸி செக்ரைஸ்ட்டின் மற்றுமொரு கோரிக்கை என்னவென்றால் திருமணம் புரிய இயலாத இரு காதலர்களைப் பற்றியதாகும். அதற்கு அவர், "ஒரு மனநோயாளியான மனைவியுடன் திருமணபந்தத்திலே சிக்குண்ட ஒரு மனிதனைக் காதலித்த ஒரு பெண்ணைப் பற்றிப் பார்ப்போம். அப்பெண்ணுக்கு அவனைத் திருமணம் செய்வதே எந்த ஒரு விஷயத்திலும் பார்க்க முக்கியமாகப் பட்டது. இருவரும் ஒருவரையொருவர் மனதாரக் காதலித்தனர். அம்மனிதனின் மனைவி மனநோயால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் இருப்பதனால் அவளை விவாகரத்துச் செய்து விட்டுத் தனது இதயம் கவர்ந்த உண்மையான நண்பியைத் திருமணம் செய்ய மனிதன் வகுத்த சட்டங்கள் இடம் கொடுக்கவில்லை. அவ்விருவரும் ஒருவரையொருவர் மனதார விரும்பினாலும் இணையமுடியாமல் தம் வாழ்நாளைக் கழித்தனர். அந்த மூளை பாதிப்படைந்த பெண் அவர்களிருவரிலும் பார்க்கக் கூடிய காலம் வாழ்ந்தாள். அக்காதலர்களிருவரும் சிலமாத  இடைவெளியில்  உடலை நீக்கி இங்கே வந்த போது உடனேயே மெய்மறந்த இன்பத்தில் இருவரும் இணைந்து கொண்டனர். பலகாலமாக ஒருவர் மற்றவரின் அண்மை தரக்கூடிய மகிழ்ச்சிக்காகவும் ஆறுதலுக்காகவும் ஏங்கியிருந்தவர்கள் ஆதலினால் அவர்களிருவரும் ஒரே ஆத்மாவைப் போலானார்கள். பூவுலகில் நன்னெறி சார்ந்து வாழ்ந்த இவ்விருவரும் இங்கே எம்மாற் கற்பனையில் கூடக் கருதவியலாத அளவு மிகச் சிறப்பான முறைகளில் ஒரு முறையில் ஐக்கியமாவார்கள். இங்கே திருமணமென்னும் அமைப்பு முறை இல்லாவிடினும் ஆத்மாக்கள் ஒன்றுடனொன்று கலந்து ஒன்றுபடுவதென்பது எல்லையற்றதோர் உன்னத நிலையாகும். அவ்விரு ஆத்மாக்களும் சிலவேளைகளில் முற்பிறவிகளில் இரட்டை ஆத்மாக்களாக (twin souls) இருந்திருக்கலாம். அதனால் மிகச் சமீபத்தைய பிறவியிலும் ஒருவரையொருவர் சந்திக்கவென இருந்திருக்கலாம். ஆனால் ஏதோவொரு தவறு நேர்ந்து விட்டது. அந்த ஆணானவன் தான் விரும்பிய பெண்ணைப் பற்றிய உள்ளுணர்வைத் தொலைத்து விட்டதனால் வேறொரு பெண்ணைச் சந்தித்துத் திருமணமும் புரிந்த பின் தான் தனது மனதுக்குரியவளைக் கடந்த பிறவியில் சந்தித்தான். அதனால் தான் பௌதீக உலகில் அவர்கள் வாழ்க்கை முழுவதும் பிரிந்திருக்க வேண்டிய சோகநிலை ஏற்பட்டது. ஆனால் அது பிழை என்பதல்ல. அவர்கள் இருவருமே அந்தத் தியாக அனுபவத்தின் மூலமாக வளர்ச்சி அடைந்துள்ளனர். அத்துடன் இப்பிரிவானது உத்தேசிக்கப்படவில்லை என்றாலும் அம்மனிதன் மிக இளமையில் திருமணம் புரிந்த காரணத்தினால் இப்படியானது.
"அவர்களிருவரும் இப்போ ஒன்றாக இருக்கிறார்கள். அவர்களாக விரும்பினாலே அன்றி எந்தவொரு சக்தியாலும் அவர்களைப் பிரிக்கமுடியாது. அவர்கள் பிரிய விரும்புவதற்கும் சாத்தியங்கள் மிகமிகக் குறைவென்றே சொல்லலாம். ஏனெனில் கிட்டத்தட்ட ஆதியிலிருந்தே அவர்கள் ஒன்றாக இருந்திருக்கிறார்கள். இரட்டையாத்மாக்கள் (twin souls) என்றால் என்ன? அது இரு ஆத்மாக்கள் மிகவும் நாட்டம் கொண்டு கலந்து ஒன்றாவதேயன்றி வேறல்ல. அங்கே ஒவ்வொரு ஆத்மாவும் மற்றைய ஆத்மாவின் அண்மையினால் பலமாக உணரும். சில ஆத்மாக்கள் மற்றையவற்றிலும் பார்க்கச் சுதந்திரமானவை. அதாவது எமது இதயமானது தனியே செயல்படும்.  ஆனால் அதே நேரத்தில் கை விரல்களோ கால் விரல்களோ மற்றவற்றினால் உறுதிப்பட்டோ சமநிலைப்பட்டோ இருக்கும். ஆத்மாக்களிலும் அப்படியே. சில ஆத்மாக்கள் சுதந்திரமானவை. சில மற்றவற்றைச் சார்ந்திருக்கும். இவற்றுள் எந்தவகை சிறந்ததென்று நாம் எப்படித் தீர்மானிக்க முடியும்? எம் உடல்களெல்லாம் எம்மைப் படைத்தவனின் எண்ணங்களின் வெளிப்பாடுகளே. அவன் சில பாகங்களைச் சுதந்திரமாகவும் சிலவற்றைச் சார்ந்திருக்கும் வண்ணமும் படைத்துள்ளான். ஆனால் முழுமையாகப் பார்க்கும் போது அந்த முழுமையின் பூரணத்துவத்துக்கு இன்றியமையாத வகையில் ஒவ்வொன்றும் ஒன்றுடனொன்று பின்னிப் பிணைந்திருக்கின்றன".
ஆத்மாக்களுக்கு ஆண் பெண்ணென்ற பாகுபாடு உள்ளதாவென நான் கேட்டேன். அதற்கு ஆர்தர், "இல்லை. ஆனால் இருபாலும் சேர்ந்தவர்கள் நாம். மேலும் விளக்கமாகச் சொன்னால் நாம் இரண்டுமல்ல. ஒரு தனித்துவமான ஆணவமாகும் (ego). ஒவ்வொன்றும் மற்ற ஆத்மாவை விட வேறுபட்டதாகும். ஆனால் வகுக்கப்பட்ட பாலியலிலும் பார்க்க முழுமைத் தன்மையின் பூரணத்துவத்தைக் கொண்டுள்ளவையாகும். இங்கு நாம் சொன்னது போல பால் பாகுபாடில்லாத காரணத்தால் பாலுறவுகளில்லை. ஆனால் நாம் விரும்புபவர்களுடன் மிக உயர்வான முறையில் எம்மால் இணைய முடியும். அந்த இணைவானது பௌதீக நிலையிலிருக்கும் இணைவிலும் பார்க்க மிகவும் பரிபூரணமாக இருக்கும்" என்றார்.
நான் ஓரினச்சேர்க்கை (homosexuality) எதனாலேற்பட்டதென அறிய விரும்பினேன். அதற்கு அவர், "இங்கே தான் ஆணாகப் பிறப்பதா பெண்ணாகப் பிறப்பதாவென ஒரு முடிவுக்கு வரமுடியாமல் இருப்பவர்கள் தான் பாலியல் குழப்பங்களுடன் பௌதீக உடலுக்குத் திரும்புபவர்களாகும். அதனால் இந்த விதமாகவோ அந்த விதமாகவோ என்று ஏதும் முழுமையாக வரையறுக்கப்படாத உந்துகைகளுடன் பிறப்பதால் அவர்களுக்கு இப்படிப்பட்ட குழப்பங்களிருக்கும். இருபாலுறுப்புகளுடன் கூடிய உடலானது குழப்பமான எண்ண வடிவங்களாகும். ஏறக்குறைய விசித்திரமான சூழ்நிலைகளில் தாங்கள் எந்தப் பாலினத்தைத் தேர்வு செய்வதென்று முடிவெடுக்க முடியாமலிருக்கும் ஆத்மாக்கள் இவ்வாறு பிறக்கின்றன" என்றார்.
        

Thursday, December 31, 2020

ஒன்பதாம் அத்தியாயம்: பிரபலமானவர்களைப் பற்றிய அறிக்கைகள்

பெரும்பாலும் பத்திரிக்கை நிருபராக வேலை பார்த்த காரணத்தாலோ என்னவோ எனக்கு மனிதர்களைப் பற்றி அறியும் ஆர்வம் சற்றுக் கூடுதலாகவே இருந்தது. என்னுடன் தொடர்பில் இருந்த நண்பர்களில் ஆர்தர் ஃபோர்டைப் போல் வேறு எவரும் எனது கேள்விகளுக்குரிய பதில்களைக் கண்டறிந்து சொல்லவில்லை. அதாவது பிரபலமானவர்கள், பழைய நண்பர்கள், மற்றும் ஆவியாராய்ச்சித் துறையில் ஈடுபட்டவர்கள் போன்றோரைப் பற்றிய எனது கேள்விகளுக்குரிய பதில்களை வேறு எவரும் அவரைப் போலக் கடமையுணர்ச்சியுடன் கண்டறிந்து சொல்லவில்லை. அவர் எனது தந்தையாரதும் எனது ஏனைய உறவினர்களதும் செயற்பாடுகளைப் பற்றி எனக்கு எடுத்துரைத்தார். ஆனால் அதே நேரத்தில் அரசியல், திரையரங்கு, ஆவியாராய்ச்சி போன்ற பொதுவான துறைகளில் பிரபலமானவர்களைப் பற்றியும் அவர் பல விபரங்களைத் தந்தார். இவற்றுள் பெரும்பாலானவை இப்புத்தகத்துக்காக நான் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களேயன்றி அவர் தன்னைப் பிரபலங்களைப் பற்றிய செய்திகள் சேகரிக்கும் பத்திரிகையாளராக எண்ணியதாலல்ல என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நான் எப்போதாவது பிரமுகர்களின் பட்டியலைத் தட்டச்சு இயந்திரத்தில் டைப் செய்கையில் அதற்கு, "நாம் தகவல்களைத் தேடிச் சேகரித்த பின் உனக்கு அறியத்தருவோம்" என்பதே அவரது பதிலாக இருக்குமாகையால் இப்பெயர்களெல்லாம் பெரும்பாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தான் வெளிவந்தன. நான் தான் அவற்றை வகைப்படுத்தி ஒழுங்கமைத்தேன்.
மே மாதத்தின் தொடக்கத்தில் அவர், "மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் (Martin Luther King, Jr) இப்போ இங்கே இல்லை. சிறிது காலத்துக்கு அவர் இங்கே வரமாட்டார். ஏனெனில் யுத்தத்திலே இறப்பைத் தழுவி இங்கே புதிதாக வந்துள்ள ஆத்மாக்களுக்கு அவர் உதவி செய்கிறார். ஆனால் சிற்சில சமயங்களில் அவரைப் பார்க்க இயலுமாகவுள்ளது. அவர் வியட்நாம் போன்ற இடங்களிலேயுள்ள போர் முனைகளிலேயே கூடுதல் காலத்தைக் கழிக்கிறார். அவருக்குப் பழியுணர்ச்சி ஒன்றும் கிடையாது. தன்னுடைய பூவுலக வாழ்வின் சுடரை அணைத்த மனிதனைப் பற்றிக் கவலைப்பட நேரமில்லாமல் அவர் தனது மக்களின் நலன்களைப் பற்றியும் யுத்தத்தில் அவர்களின் உரிமைகளைப் பற்றியும் கவனிப்பதில் மும்முரமாக இருக்கிறார்.
"வின்ஸ்டன் சர்ச்சில் (Winston Churchill) பெரும்பாலான சமயங்களில் பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் (Franklin Roosevelt) உடன் சம்பாஷணைகளில் ஈடுபடுகிறார். இந்தப் பக்கத்திலே அவர்களிடையே கூடுதல் நெருக்கம் காணப்படுகிறது. உண்மையிலேயே பல விஷயங்களில் இருவருக்கும் தத்தம் நாட்டைச் சேர்ந்தவர்களிலும் பார்க்கக் கூடுதல் ஒற்றுமை காணப்படுகிறது. ரூஸ்வெல்ட் பிரித்தானிய அரசியல் நிலைமைகளால் கூடுதலாகக் கவரப்படுகிறார். அமெரிக்காவின் கலவரங்களில் வினி (Winnie) அக்கறை காட்டுகிறார். இருவருமே சமூகசேவைகளில் சுறுசுறுப்பான ஆர்வம் காட்டுகின்றனர். அத்துடன் வளர்ப்புப் பிராணிகள் சம்பந்தமாகத் தாங்கள் தீட்டிய திட்டங்களுக்கு நிதியுதவிகள் செய்யும்படி அறப்பணிகள் செய்பவர்களையும் நிறுவனங்களையும் தூண்டுகிறார்கள். யாருடைய திட்டத்துக்குக் கூடுதல் நிதியுதவி கிடைக்கிறது என்பதில் கிட்டத்தட்ட இருவருக்கும் ஒரு சிறு போட்டியே காணப்படுகிறது. திருமதி ரூஸ்வெல்ட்டை அதிகம் இங்கே காணக்கிடைப்பதில்லை. அவர் தென் ஆப்பிரிக்காவிலும் வேறு இடங்களிலும் ஏற்பட்டிருக்கும் நிலைமைகளில் தீவிரமாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். அங்கேயுள்ள கறுப்பு இனமக்களின் நோக்கங்களுக்கு ஆதரவாக அவர்களுக்கு சர்வதேச அரங்கில் நீதி கிடைக்கச் செய்ய முயற்சிக்கிறார். அவரது விருப்பங்களெல்லாம் பரந்து விரிந்து இருப்பதால் சில சமயங்களிலேயே இங்கே காணப்படுகிறார். ப்ராங்ளினையோ வேறு உறவினரையோ நண்பரையோ பார்வையிட்டு விட்டு உடனே சென்று விடுவார். எல்லா இடத்திற்கும் சுற்றிச் சென்று உலகில் ஒழுங்கு முறையை நிலைநாட்டி, ஒடுக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்காகப் போராடுகிறார். அவர் ஒரு உன்னதமான ஆத்மா. ஆனால் சில சமயங்களில் சக்தியை விரயமாக்குகிறார் என்றே தோன்றுகிறது. ஏனெனில் சில பிரச்சினைகளை மனிதரிலும் பார்க்க இறைவனிடம் விடுபவர்களிடம் இருக்கும் சாந்தமும் அமைதியும் இவரிடம் சற்றுக் குறைந்தே காணப்படுகிறது.
மிக அண்மையில் வந்தவரான விட்னி யங் (Whitney Young) ஐப்பற்றி என்ன சொல்கிறாரென்று பார்ப்போம். "அவர் இப்போதே பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்கிறார். இறப்புக்கும் விழிப்புக்குமிடையே ஒரு கணமேனும் விரயம் செய்யவில்லை. அவர் ஒரு மிகச்சிறந்த ஆத்மா. அவர் நீதியும் நேர்மையும் வெற்றி பெறவேண்டும் என்று மனப்பூர்வமாக விரும்பினார். இங்கு வந்ததன் பிற்பாடு எந்த ஒரு பிரச்சனைக்கும் இரு பக்கங்கள் மட்டுமல்ல வேறு பக்கங்களும் உள்ளன என்பதை அவர் உணர்ந்து கொண்டார். அவர்  இடையில் நின்று மத்தியஸ்தம் செய்பவர்களுக்கும் மற்றும் பேரம் பேசுபவர்களுக்கும் இவற்றை உணர்த்தி அவர்களின் கண்களைத் திறந்து வைக்க நினைக்கிறார். அதாவது ஆம், இல்லை அல்லது அநேகமாக என்று மட்டுமில்லாமல் எல்லோரும் ஒற்றுமையாக எப்படி ஒரு விஷயத்தைச் செய்து முடிப்பது என்று ஆராயவேண்டும்".
இன்னொருநாள் அவர் ஆகாயப் பதிவேடுகளைப் (akashic records) பார்த்திருக்கக் கூடும். பின்வருமாறு எழுதினார்: இப்போ நாம் ஜோர்ஜ் வாஷிங்டன் கார்வரைப் (George Washington Carver) பற்றிப் பார்ப்போம். ஒரு கறுப்பின மனிதர். நிலக்கடலையால் பலவிதமான அனுகூலங்களைக் காட்டினார். அவர் நீண்ட காலம் இங்கே (நாமிருக்கும் இடத்தில்) இருந்தார். திரையின் இரு புறங்களிலும் உள்ள விஞ்ஞானிகளுடன் சேர்ந்து, தெற்கத்திய பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக ஏனைய உற்பத்திப் பொருட்களாகிய ரேயான், டாக்ரோன், ஜவுளிகள் போன்றவற்றின் தரங்களை உயர்த்த வேலை செய்தார். ஆனால் மிகச்சமீபத்தில் மீண்டும் அமெரிக்காவில் ஹார்லெம் (Harlem) என்ற இடத்தில் ஒரு கறுப்பினச் சிறுவனாகப் பிறந்திருக்கிறார். அவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பாதுகாக்குமுகமாக இப்போ அவர் யாரென்று நாம் சொல்லமாட்டோம். அவர் ஒரு சுவாரஸ்யமான பேர்வழியாக இருப்பார். அவர் கார்வராக (Carver) வருவதற்கு முன் ஒரு வெள்ளையின மனிதராகப் பிறந்திருந்தார். அப்பொழுது அவர் அடிமைகளைக் கொடுமைப்படுத்திய காரணங்களால் தனது கரங்களினால் பாதிப்படைந்த இனத்துக்குப் பரிகாரம் செய்யுமுகமாகத் தானாகவே முன் வந்து கார்வராக வந்திருந்தார். வெள்ளையின மனிதனாக ஏற்கனவே மிகவும் முன்னேறியிருந்ததனால் அந்த ஆளுமையையும், விஞ்ஞான அறிவையும் அவர் கார்வராக வருகையில் தன்னுடன் கூடக் கொண்டு வந்து கறுப்பின மக்களுக்கு உதவினார்.
"இம்முறை கார்வராக வந்து நிறைய விடயங்களைச் சாதித்ததால், அவர் ஏறக்குறைய எந்த இனத்திலும், எவ்வகை உடலையும் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பெறுகிறார். அப்படியிருக்க அவர் ஹார்லம் (Harlem) எனும் இடத்தைச் சேர்ந்த கறுப்பினத்தை தானாகவே தேர்ந்தெடுத்தார். ஏனெனில் அங்கிருந்து தான் கடைசியில் கறுப்பு இனத்துக்கு விமோசனம் வரவேண்டுமென எதிர்பார்க்கிறார். உலகநேரப்படி அவருக்கு இப்போ கிட்டத்தட்டப் பதின்மூன்று வயதிருக்கும். இப்பவே அவர் பெரிய பெரிய சாதனைகள் சாதிப்பதற்குரிய அறிகுறிகள் தென்படுகின்றன. அவரது குடும்பம் அமெரிக்க அரசியலில் மும்முரமாக ஈடுபடுகிறார்கள். இவ்வளவு தான் இப்போ என்னால் சொல்லமுடியும்.
கடந்த காலத்திலிருந்த பிரபலமான அரசியல் தலைவர்களைப் பற்றி நான் கேட்டேன். அதற்கு அவர் பின்வருமாறு எழுதினார்: இப்போ ஆபிரகாம் லிங்கனைப் பற்றிப் பார்ப்போம். அவர் ஒரு பிரகாசமான ஆத்மா. எல்லா உயிர்களிடத்தும் கருணை காட்டும் மென்மையான ஆத்மா. இங்கே நீண்ட காலம் தங்கியிருந்த பின் அவர் மீண்டும் உடலெடுத்துள்ளார். இப்போ நியூ ஓர்லீன்ஸ் (New Orleans) இல் வாழ்கிறார். அங்கே அவர் தெற்கத்திய இனப்பிரச்சனையின் எல்லா விதமான முகங்களையும் எல்லா விதமான வெளிப்பாடுகளுடனும் ஆராய்ந்து கொண்டிருக்கிறார். அவர் இப்போ வளர்ந்து விட்டார். அவர் இதற்குச் சரியான தீர்வு கிடைக்கப் பல்கலைக்கழகங்களுடனும் அறக்கட்டளை நிறுவனங்களுடனும் சேர்ந்து பணியாற்றுகிறார்.
ஜார்ஜ் வாஷிங்டன்? அவர் சிறிதுகாலம் கண்ணில் தென்பட மாட்டார். ஏனெனில் சமீபத்தில் வியட்நாமில் ஒரு போராளியாக வாழ்ந்து முடித்த பின் இப்போ ஓய்வெடுக்கிறார். அவரது இறப்பானது அவ்வளவு அதிர்ச்சி நிறைந்ததாகையால், சிறிது காலத்துக்கு அவர் உறக்கம் கொள்வார். ஒரேயொரு விஷயத்தைத் தவிர அவரது கடைசிப் பிறப்பின் விபரங்களை நாம் இதற்கு மேல் சொல்வதற்கு விரும்பவில்லை. அதாவது அவர் ஒரு படைப்பிரிவைத் தைரியத்துடன், எதிரிகளின் படைவரிசைகளின் பின்னே வழிநடத்திச் சென்றபோது கைப்பற்றப்பட்டு விட்டார்.
"சார்லஸ் த கால் (Charles de Gaulle) ஐரோப்பாவினதும் மத்தியகிழக்கு நாடுகளினதும் வளர்ச்சிகளை ஆவலுடன் கவனிக்கிறார். அங்கே பழக்கப்பட்டது போல இங்கே வந்ததும் வராததுமாக அவர் தனது கட்டுப்பாட்டைப் பெற்றுக்கொண்டார். அழகிய பிரான்ஸ் (La Belle France) என அவர் அழைக்கும் பிரான்ஸ் நாட்டுக்கு ஏதாவது துயர் வருமெனில் எப்பொழுதும் தீக்குதிரை போல நிற்பார். அவர் போர்த்தந்திரங்களிலும் பார்க்க சமாதான முறைகளைப் பற்றியே அதிகம் சிந்திக்கிறார். மத்தியகிழக்கின் நுணுக்கமான நிலைமைகளுக்கு ஒரு தீர்வைக்காணும் அதிகாரமுள்ள எந்தவொரு சமாதானத் தூதுக்குழுவுடனும் வேலை செய்ய ஆவலாயிருக்கிறார்".
இயல்பாகவே எனது சிந்தனைகள் சோவியத்யூனியனை நோக்கிப் போயின. அதற்கு ஆர்தர் பின்வருமாறு எழுதினார்: "ஸ்டாலின் மீண்டும் உடலெடுத்து விட்டார். ஆனால் அவர் ரஷ்யாவில் பிறக்கவில்லை. வேறொரு பிரச்சனையுள்ள இடத்துக்குப் போயிருக்கிறார். அங்கே அவர் ஒரு சர்வவல்லமை பொருந்திய அரசாங்கத்தை நிறுவ நினைக்கிறார். ஏனெனில் இந்தப் பக்கத்தில் அவர் பெரிதாக ஒன்றும் கற்கவில்லை. உறவுகளையோ தொடர்புகளையோ தனக்கு அனுகூலமாக மாற்றி அதனால் நன்மையடையும் தந்திரத்தைப் பரப்ப இன்னும் எண்ணுகிறார். உண்மையில் அவர் திரும்ப வருவதற்குத் தயார் நிலையில் இருக்கவில்லை. கடைசி நிமிடத்தில் இன்னொரு ஆத்மா விலகியதால் அவர் வரவேண்டியதாகி விட்டது. அதன் காரணமாக ஸ்டாலின் ரொடீஷியாவில் (Rhodesia) புதிதாகப் பிறந்த குழந்தையின் உடலை எடுத்துள்ளார். நீ அறிய விரும்பியதால் இதனைச் சொல்கிறேன். மன்னித்துவிடு.
கார்ல் மாக்ஸ் (Karl Marx) இன்னும் இங்கே தான் இருக்கிறார். ஸ்டாலினுக்கு அவரால் எந்தவிதமான பலனுமில்லை. இருவருமே ஒரே விதமாக ஒருவரையொருவர் தவிர்த்துக் கொண்டனர். நானறிந்தவரையில் இங்கே இருவரும் ஒருவிதமான கருத்துப் பரிமாற்றமும் செய்து கொள்ளவில்லை. தனது உன்னதமான கனவாகிய மனிதசமுதாயத்தின் சமத்துவக் கொள்கையை ஸ்டாலின் தலைகீழாகக் கவிழ்த்து விட்டாரென மாக்ஸ் எண்ணுகிறார். இப்போ அவர் முற்றுமுழுதான மாக்ஸிச இயக்கத்தைச் சரியாக விளங்கிக் கொள்வதற்கு அறிவாளிகளுக்கு உதவமுனைகிறார். மனித மனங்களிலே முன்னேற்றமான பாதிப்புகளை ஏற்படுத்தியவர் என்று தான் தன்னை அனைவரும் நினைவு கொள்ள வேண்டுமென விரும்புகிறார். ஆனால் அது தவறான எண்ணமாகும். பூவுலகில் எமக்குக் கிடைக்கும் மதிப்பெண்களைப் பற்றிக் கவலைப்படக் கூடாது. மக்களுக்கு என்ன செய்தோமென்பதே கருத்தில் கொள்ளப்படும். மனித இனத்தின் முன்னேற்றப்பாதைக்கு மாக்ஸ் உண்மையில் உதவினாரா இல்லையா என்பதை நான் சொல்லவியலாது".
தாமஸ் ஜெஃபர்சன் (Thomas Jefferson)? "ஆம் அவர் வேர்ஜீனியாவில் (Virginia) வசிக்கிறார். இன்னும் இளம் பருவத்திலேயே இருக்கிறார். அவர் பெரிதாக ஒன்றும் சாதிக்கவில்லை. ஜெஃபர்சனைப் போல இப்படி வளர்ச்சியின் உச்சக்கட்டத்தை அடைந்த ஆத்மாக்களுக்கு நேர்வதைப் போல அவருக்கும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது".
"நீ கேட்ட இரு ராணிகளும் (queens) நீண்ட காலமாக இங்கே இல்லை. ஆனால் சந்தேகமின்றி இங்கிலாந்திலும், ஸ்காட்லாந்திலும் (Scotland) அவர்களின் ஆட்சிக் காலங்களின் பின்னர் பல தடவைகள் பிறப்பெடுத்து விட்டனர்". நான் எலிசபெத்தையும் (1 ), ஸ்காட்லாந்தின் அரசியாகிய மேரியைப் பற்றியும் கேட்ட கேள்விகளுக்கே மேலுள்ளவாறு பதிலுறுத்தார். அவர் ஆகாயப் பதிவேடுகளில் (akashic records) இவர்களின் கோப்புகளைப் பார்ப்பது அப்படியொன்றும் முக்கியமானதாக நினைக்கவில்லைப் போலத் தெரிந்தது.
அண்மையில் இறப்பென்னும் திரையைக் கடந்த தாமஸ் ஈ டூவி (Thomas E. Dewey) ஐப் பற்றி நான் கேட்டேன். அதற்கு ஃபோர்ட் பின்வருமாறு பதிலிறுத்தார்: அவர் ஒரு மிகச்சிறந்த மனிதர். அவர் இங்கு வந்ததும் விழித்துக் கொண்டார். வந்ததும் வராததுமாக அவர் தனது ஆராய்ச்சியைத் தொடர ஆயத்தமாகி விட்டார். அவர் செயல்திறன் மிக்கவர். பழகுவதற்கு சந்தோஷமான மனிதர். டூவி (Dewey) ஐப் போன்ற மனிதர்களைப் பற்றி ஐயப்பாடுகள் தேவையில்லை. உண்மையில் எதையும் முயன்று பார்க்கக் கூடியவர். அவர் கற்று முன்னேறுவதில் ஆர்வமாக உள்ளார். பாப் ராஃப்ட் (Bob Taft), அதாவது செனட்டர் ராபர்ட் ஏ. (Senator Robert A.) இன்னும் இங்கே தான் இருக்கிறார். அண்மைக் காலங்களில் இவரும் டூவியும் (Dewey) பலமுறை எண்ணப் பரிமாற்றங்கள் செய்வதைக் கண்டிருக்கிறேன். இந்தக் காலகட்டத்தில் தங்களது நாட்டில் நடக்கும் நடப்புகள் இருவருக்கும் மகிழ்ச்சியாக இல்லை. ஆனால், பூவுலகிலிருக்கும் சில கோபதாபிகளின் நெஞ்சங்களில் தொலைநோக்குச் சிந்தனைகளை ஊடுருவச் செய்வதைத் தவிர அவ்விஷயத்தில் ஆத்மரூபத்தில் இருக்கும் எம்மால் செய்யக்கூடியது பெரிதாக ஒன்றுமில்லை. ராஃப்ட் (Taft) இங்கே கற்பிக்கிறார். டூவி (Dewey) நிதி சம்பந்தமான கருத்தரங்கொன்றில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் (stock market investors) செல்வாக்கை உண்டாக்குவதன் மூலம் பொருளாதாரத்தைக் கூடிய விரைவில் மறுபடியும் சீர்திருத்த முயல்கிறார். அங்கே அவரது வேலை முடிந்ததும் வேறு என்ன செய்வதென முடிவு செய்வார்".
திரையுலக நட்சத்திரங்களின் முன்னேற்றங்களைப் பற்றி நான் முன்பு ஒருதரம் வேண்டுகோள் விடுத்திருந்தேன். அதற்கு ஆர்தர் இப்பொழுது பின்வருமாறு எழுதினார்: "ஆம் மர்லின் மன்றோ (Marilyn Monroe) சிறிது சிறிதாகத் தனது இழந்த வலிமையைப் பெற்றுக் கொண்டிருக்கிறார். மருந்துகளாலும், தற்கொலையாலும் ஏற்பட்ட செயலிழந்த நிலைமை சிறிது காலம் நீடித்திருந்தது. அவர் எப்படியும் கடைசியில் தேறி விடுவார். இப்பக்கத்தில் அவருக்கு நண்பர்களும் ரசிகர்களும் உதவுவதற்கு இருக்கிறார்கள். இவ்வளவு நேர்த்தியான அபூர்வமான அழகுடைய உடலுள் இருந்த உயிரைத் தான் போக்கியதை எண்ணிப் பச்சாதாபப் படுகிறார். இதற்கு முந்தைய ஒரு பிறவியில் அவர் ஒரு உயர்ந்த பெண்மணியாக இருந்திருக்கிறார். அதனால் தான் இப்பிறவியில் இப்படியொரு சாக்கடை வாழ்வை வாழ்வது (என்ன தான் தானே தேர்ந்தெடுத்ததாய் இருந்தாலும்) அவருக்கு இரட்டிப்புக் கஷ்டமாக இருந்தது. அவர் அடக்கம், கருணை இரண்டையும் கற்பதற்காகத் தான் இப்பிறவியில் இப்படி வந்திருந்தார். அவர் அதை ஓரளவு நிறைவேற்றி விட்டார். அடுத்த முறை அவர் ஆசாபாசங்களுக்கு இடம் கொடுக்கா விட்டால், தனது இலக்காகிய முழுமையான புனிதத் தன்மையை அடையக்கூடும்.
க்ளாக் கேபில் (Clark Gable) அங்கிருக்கையில் பாராட்டப்பட்டது போலவே இங்கும் பாராட்டப்படுகிறார். அவர் மிகவும் நல்ல காரியங்கள் செய்யக்கூடிய ஆற்றல் வாய்ந்த, ஆண்மை நிறைந்த ஆத்மா. அவரின் உதவிக்கரம் எங்கும் நீளும். எனவே அவரது முன்னேற்றத்தைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. அவர் மீண்டும் சினிமாத் தொழில் வளம் பெறும் வரை வேலையின்றி இருக்கும் நடிகர்களுக்கு உழைப்பதற்கு வழிகள் தேட உதவுகிறார். கூடிய விரைவில் அந்தத் தொழில் துறை வளம் பெறும். ஒழுக்கநெறிகளை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வருவது ஒன்று தான் செய்யக்கூடியது. அப்படிச் செய்தால் மீண்டும் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும்.
"ரூடோல்ஃப் வலண்டினோ (Rudolph Valentino) மீண்டும் உடலெடுத்துப் பல வருடங்களாகி விட்டன. அவர் திருமணம் செய்து கொண்டு பாரீஸ் நகரில் மகிழ்ச்சியாக வசிக்கிறார்".
திடீரென எனது பழைய நண்பன் அல்பன் W. பார்க்லியை (Alben W. Barkley) நான் மறந்து விட்டது நினைவுக்கு வந்தது. எமதன்புக்குரிய 'வீப்' (Veep). அவரது பெயரை நான் குறிப்பிட்டதும் ஃபோர்ட் ஒரு கணமும் தாமதியாமல் அவரைப் பற்றித் தெரிவித்தார் பின்வருமாறு: "அவர் வண்ண இறக்கைகளுடைய ஜேப்பறவை போல (Jaybird) மகிழ்ச்சியாக உள்ளார். இளமையாகக் களிப்பாக, அங்கே இருந்ததைப் போலவே மதிப்புடன் இங்கும் காணப்படுகிறார். ஜேனும் (Jane Hadley Barkley) அவரது முதல் மனைவியும் சிறந்த நண்பர்கள். அனைவரும் ஒன்றாக மகிழ்ச்சியாகக் கல்வி கற்கிறார்கள். அல்பன் ஜேனைச் சந்தித்தமை முதல் மனைவிக்கு நல்ல சந்தோஷம். அவர்கள் சந்தோஷமான மூவராகும். வீப் (Veep) சில வேளைகளில் செனட் சபையில் அதிகாரம் செலுத்துகிறார். ஜனாதிபதித் தேர்தலில் தான் நின்றிருக்கலாமென இன்னும் எண்ணுகிறார். 'எப்போதுமே எனக்கு வயதாவதில்லை' என நமுட்டுச் சிரிப்புடன் சொல்கிறார். அது எப்படிப்பட்டதொரு நினைவலைகளை உண்டாக்குகிறது: சிக்காகோ நகரில் 1952 இல் நடந்த வேட்பாளரை நியமிக்கும் மாநாட்டில் அவர் உண்மையாக ஆதரவளித்த தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் (labor leaders) அவருக்கு வயதாகி விட்டதெனச் சொல்லி அவர் ஜனாதிபதித் தேர்தலில் நிற்பதை நிராகரித்து விட்டதனால் ஏமாற்றமடைந்த 'வீப்'!
அமானுஷ்யமான விடயங்களில் எனக்கிருந்த ஆர்வத்தினால் ஆரம்ப காலங்களில் மக்களின் ஏளனத்தைப் பொருட்படுத்தாமல் தங்களின் மதிப்பையும் மரியாதையையும் பணயம் வைத்து மறுபிறவி மற்றும் இறந்தவர்களுக்கும் உயிர் வாழ்பவர்களுக்கும் இடையேயான தொடர்பு போன்றவற்றில் தாங்கள் கொண்ட நம்பிக்கைகளை வலியுறுத்திய தைரியசாலிகளான ஆத்மாக்களின் வளர்ச்சிகளைப் பற்றி அறிவதில் ஆர்வமாக இருந்தேன். ஏப்ரல் மாதத்தொடக்கத்தில் ஃபோர்ட் பின்வருமாறு எழுதினார்: "இன்று நீ கேட்டபடி எட்கர் கேசியைப் (Edgar Cayce) பற்றிப் பார்ப்போம். அவர் இங்கே வேறொரு தளத்தில் இருக்கிறார். மனிதனுள் இருக்கும் உள்ளுணர்வு எனும் புரிதலை எப்படி உபயோகிப்பதென ஏனையோருக்கு வழிகாட்டுவதில் அவர் முழுமூச்சாக ஈடுபடுகிறார். அமானுஷ்யத் துறைகளைப் பற்றிய நம்பகமற்ற தன்மையைப் போக்குவதில் அவர் ஓரளவு வெற்றி கண்டிருக்கிறார். அவருடன் யாரும் இப்போ நேரடியாகத் தொடர்பு கொள்ள இயலாது. இன்னும் சில நாட்களில் அவர் மீண்டும் பூவுலகுக்குத் திரும்புவார். அப்போது அவர் விரும்பியவாறு பிறப்பிறப்புச் சுழற்சியை நிறைவு செய்து கொள்ளலாம். அதாவது பூவுலகின் இன்னல்களை எதிர்கொள்ள வேண்டிய தேவை இல்லாத அளவு அவர் பூரண நிலையை அடையலாம். அவர் இங்கு வருகையில் மிகவும் களைப்படைந்து காணப்பட்டார். எனவே சற்று இளைப்பாறினார். ஆனால் இப்போது ஏ. ஆர். ஈ. எனப்படும் அறிவொளி ஆய்வுமைய (A.R.E Movement - Association for Research and Enlightenment) இயக்கத்தில் தீவிரமாகச் செயற்பாட்டிலுள்ளார். தங்கள் உணர்வுத் தளங்களில் அவரை அனுமதிக்க இயலுமாக உள்ளவர்களுடன் சேர்ந்து அவர் பணியாற்றுகிறார். அவர் ஒரு சிறந்த மனிதர். அத்துடன் மிக உயர்ந்த ஆத்மா. பூவுலகிலும் இங்கும் மிகவும் மதிக்கப்படுபவர். பூவுலகில் அவரது மனைவியாக இருந்த கெட்ரூட்டும் (Gertrude) அவருடன் சேர்ந்து பணி புரிகிறார். அவர்களிருவரும் ஒற்றுமையாக இருவரும் ஒருவர் போலவே வேலை செய்கிறார்கள். நான் அவரைச் சந்திக்கவில்லை. ஆனால் அவரது கம்பீரத்தை நேரே அனுபவித்தவர்கள் மூலம் கிடைத்த தகவல்கள் இவை. கேசி அவர்கள் ஆவியூடகங்களின் மூலம் (mediums) பேசமாட்டாரென அவரது மூத்த புதல்வன் ஹ்யூ லின் (Hugh Lynn) எண்ணியது சரியே. ஆனால் ஆத்மீக விழிப்புணர்வு வேண்டுமென எவரேனும் விரும்பினால் அவர்களுக்கு உதவக் காத்திருக்கிறார்".
ஃபோர்ட் அவர்கள் தனது அமானுஷ்யத் திறமைகளை (psychic powers) மேலும் மெருகூட்டுவதற்குப் பிரபல யோகியான பரமஹம்ச யோகானந்தாவிடம் சிறிது நாட்கள் பயின்றிருந்தார். ஃபோர்ட் மேலுலகில் அவரைச் சந்தித்தாரா என நான் கேட்டதற்கு அவர் பின்வருமாறு பதிலளித்தார்: "இல்லை. ஏனெனில் அந்த அற்புத மஹா குரு ஒரு நுண்ணிய பரிமாணத்தில் உள்ளார். அவர் மிகத் தூய்மையானதொரு சூழ்நிலையில் மிகவும் உயர்ந்ததொரு பணியை மேற்கொள்வதாகச் சொல்லப்படுகிறது. அவர் நற்குணங்களின் வடிவமாகும். அதேயளவு உயர்வான நிலையையடைந்த ஏனையவர்களிலும் பார்க்க இவரால் பெரிய பணிகளைத் தொடர்ந்து நடத்த இயலும். அதற்குக் காரணம் அமானுஷ்ய விடயங்களில் அவருக்கு இருக்கும் அதிக பரீட்சயமும் கடந்த பிறவியை எடுப்பதற்கு முன் அத்துறையில் அவர் புரிந்த அளப்பரிய பணியுமாகும். குரு என்ற சொல்லின் முழுமையான அர்த்தத்துக்கு அவர் எடுத்துக் காட்டாவார்." 
முதன் முதலில் அமானுஷ்ய விஷயங்களுக்கு நான் அறிமுகமானது ஸ்டுவேர்ட் எட்வேர்ட் வைட் (Stewart Edward White) எழுதிய 'தடைகளற்ற பிரபஞ்சம்' (The Unobstructed Universe) எனும் நூலின் மூலமேயாகும். அப்புத்தகத்தில் அவர் சமீபத்தில் இறந்த தனது மனைவி பெற்றிக்கும் (Betty) ஜோன் (Joan) எனும் ஒரு பெண்ணுக்கும் இடையே நடந்த அற்புதமான மேலுலகத் தொடர்புகளைப் பற்றி விபரித்திருந்தார். ஜோன் அண்ட் டாபி (Joan and Darby) என்ற சொற்றொடர் மூலம் புகழ் பெற்ற ஜோன் என்ற பெண் 1920 ஆம் ஆண்டில் 'எமது கண்ணுக்குத் தெரியாத விருந்தினர்' (Our Unseen Guest) என்ற புத்தகத்துக்கு இணை ஆசிரியராகப் பணியாற்றியிருந்தார். அப்போ அவர் தான் யாரென்ற உண்மையை வெளி விடவில்லை. ஜோன் யாரென்ற உண்மையைச் சில வருடங்களுக்கு முன் அரைமயக்க நிலையிலிருந்த ஃபோர்டின் மூலம் பேசிய ஃப்ளெச்சர் (Fletcher) தெரிவித்திருந்தார். ஜோனை ருத் ஃபின்லி (Ruth Finley) என ஃப்ளெச்சர் அடையாளம் காட்டும் வரை அது ரகசியமாகவே இருந்தது. பெப்ரவரி மாதத்தின் நடுப்பகுதியில் ஃபோர்ட் எனது டைப்ரைட்டரில் பின்வருமாறு எழுதினார்: "நான் இப்பொழுது இருக்கும் தளத்தில் பெற்றி வைட் (Betty White) சிறிது காலமே இருக்க வேண்டியிருந்தது. அவர் விரைவாக மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது தளமென்று மேல் நோக்கிச் சென்று விட்டார். அவர் பூவுலகில் தனக்குரிய பணிகளை நன்றாக நிறைவேற்றி விட்டார். சித்தாந்த அறிவுகளில் அவருக்கிருந்த மிகுந்த ஆர்வத்தினால் இந்தப் பக்கத்தில் அவரால் துரிதமாக முன்னேற முடிந்தது. ருத் ஃபின்லியும் இந்த நிலையில் பார்க்க மிகவும் முன்னேற்றம் அடைந்துள்ளார். அதே போல அவர்களின் கணவன்மார்களும் முன்னேறியுள்ளனர். அவர்களும் இவர்களின் பூவுலகப் பணிகளுக்கு நல்ல ஒத்துழைப்பு வழங்கியதனால் முன்னேற இயலுமாக உள்ளனர்".
இரு மாதங்களின் பின், பூவுலகில் வசிக்கையில் ஆத்மீக விஷயங்களில் மனதைச் செலுத்துபவர்கள் மேலுலகில் விரைவாக முன்னேற முடியும் என்பதை விளக்குகையில், திடீரென, "பெற்றி வைற் அப்படிப்பட்டதொரு ஆத்மா. அவர் பூவுலகில் வசிக்கையிலேயே இவ்வுலகுக்குப் பலமுறை வருகை தந்துள்ளார். எனவே இங்கே எப்படி இருக்குமென அவருக்கு முதலிலேயே தெரியும். அவரது கணவர் இங்கே வந்ததும் இருவருமாகச் சேர்ந்து உயர்வான தளமொன்றுக்கு முன்னேறிச் சென்றிருப்பதால் இனி அவர் ஆவியுலகத் தொடர்பு கொள்பவர்களுடன் (mediums) பேசமாட்டார். உள்ளும் வெளியும் உள்ள அண்டவெளிகளைப் பற்றிய ஆராய்ச்சியில் (exploration of inner and outer space) ஈடுபடும் விஞ்ஞானிகளுக்கு உதவுவதற்கு சிறந்த நிபுணத்துவம் வாய்ந்த அறிவாளிகள் தேவைப்படுவதால் அவர்களிருவரும் அங்கே சென்றிருக்கிறார்கள். உயர்வான விஷயங்களில் நிபுணத்துவம் பெற்றிருப்பதால் இன்னும் அவர்கள் பூரணத்துவம் அடையாவிட்டாலும் கூட அவர்களைச் சுற்றி ஒரு பிரகாசமான ஒளிவீச்சுக் காணப்படுகிறது. அவர்கள் வெவ்வேறு தளங்களில் தங்கள் பணிகளை நிறைவேற்றச் செல்கையில் நான் அவர்களைக்  கண்டிருக்கிறேன்" என உரைத்தார்.
ஃபோர்ட் பெற்றி மற்றும் ஸ்டூவர்ட் எட்வேட் வைற்றை இப்போ காண்பதால் அவரும் விரைவாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறார் என்பது தெளிவு. ஃபோர்டைப் பற்றி லிலி (Lily) சொன்ன தகவல்படி "அவர் தனது கடந்த பிறவி முழுதும் இப்பக்கத்துக்கு வருபவர்களுக்குச் செய்த உதவியின் பலனாகப் புதிதாக இங்கு வருபவர்களுக்கு ஆரம்பக்கட்டங்களில் அவர் உதவக்கூடியதாக உள்ளார். அத்துடன் அடுத்த கட்டத்துக்குச் செல்ல ஆயத்தமாகவும் ஆவலாகவும் கூட உள்ளார்." 
ஆர்தர் ஜோனைப் (Joan) பற்றி (அதாவது ருத் ஃபின்லியைப் பற்றி) மீண்டும் குறிப்பிட்டார். அதாவது, "அலைநீளங்களிலும் அதிர்வுகளிலுமுள்ள வேற்றுமைகளால் அவர் இப்போ உங்களுடன் தொடர்பு கொள்ள இயலவில்லை. ஆனால் இப்புத்தகத்திற்காகப் பிரத்தியேகமாக உனக்குச் சில தகவல்களைத் தெரிவிப்பதற்காக அவரை அணுகிய போது அவர் எனக்கு மிகவும் உதவினார். அவர் இந்த நிலையிலேயே கூடுதலாக இருக்கிறார். அதுவும் அவரின் விருப்பத்தின் பேரிலேயே ஏனெனில் அவர் செய்யும் பணிகளுக்கு அவர் இன்னும் பூவுலகில் வசித்துக் கொண்டிருப்பவர்கள் பலருடன் தொடர்பு கொள்ள வேண்டியுள்ளது. அமானுஷ்ய விஷயங்களைப் பற்றிய உண்மைகளை நீ புத்தகங்களின் மூலம் வெளிக்கொணர எடுக்கும் முயற்சிகளை அவர் பாராட்டுகிறார். பூவுலகில் இருக்கையில் தான் யாரென்ற உண்மையைத் தைரியமாக உலகுக்குச் சொல்லாததை எண்ணி வருந்துவதாகவும் சொல்கிறார். இறைவன் இருக்கிறான்; மற்றும் நாம் என்றுமே அழிவதில்லை போன்ற உண்மைகளை நம்பிக்கைகள் ஏதும் அற்றவர்களுக்குச் சொல்லாததை எண்ணியும் வருந்துகிறார்.
ஆர்தர் கோனான் டாயில் (Arthur Conan Doyle) மற்றும் ஆலிவர் லாட்ஜ் (Oliver Lodge) ஆகியோரை மேலுலகில் ஃபோர்ட் சந்தித்தாரா என நான் கேட்டதற்குப் பின்வருமாறு அவர் பதிலளித்தார்: "அவர்கள் இங்கே தான் இன்னமும் உள்ளார்கள். உங்கள் பாஷையில் சொல்வதானால் 'நாம் பயனுள்ள பல விஷயங்களைப் பற்றி சம்பாஷிப்போம்'. அவர்கள் மிகவும் வளர்ச்சி அடைந்துள்ளனர். தாங்கள் பிறக்கும் சூழ்நிலைகளைத் தாங்களே தெரிவு செய்து கொண்டு பூவுலகில் மீண்டும் பிறக்க அவர்களால் முடியும். ஆனால் அங்கே இப்போ நடைபெற்றுக் கொண்டிருக்கும் வன்முறைகள் அவர்களைத் தடுக்கின்றன. அதனால் தங்கள் பணிகளை இங்கேயே  செய்ய எண்ணுகிறார்கள். நிச்சயம் ஒரு நாள் அங்கே வருவார்கள். ஆனால் சிந்தனையற்ற இளைஞர்கள் கல்லூரி வளாகங்களுள் உள்ள நூலகங்களையும் விஞ்ஞானக் கட்டடங்களையும் எரிப்பது போன்ற வன்முறைகளால் கொந்தளித்துக் கொண்டிருக்கும் உலகுக்கு அவர்கள் வரமாட்டார்கள். 'அவ்விளைஞர்கள்' எம்மைப் போலவே இங்கே நீண்ட காலம் தங்கியிருந்த பின்னரும் கூட அங்கே வந்து இப்படிக் காட்டுமிராண்டித் தனமாக நடப்பது ஒரு துயரமான செயலாகும். எந்த உலகும் பூரணமானதல்ல என்பது உண்மை தான். ஆனால் அவர்கள் கல்வியாலும் அறிவாலும் மிகவும் வளர்ந்துள்ள இடத்தில் பிறந்துள்ளனர். அவர்கள் அவ்விடத்துக்குச் சற்றும் பொருத்தமில்லாதவர்கள். யோக்கியதையற்றவர்கள். போக்கிரிகள். இங்கிருக்கையிலும் அவர்கள் மாறவில்லை. போரினால் தாங்கள் தங்களது இளவயதிலேயே இறக்கவேண்டி வந்து விட்டதென அவர்கள் எண்ணினார்கள். ஒற்றுமையாக முயன்றால் அனைவரும் கல்வியிலும் அறிவிலும் முன்னேறி சந்தோஷமாக வாழலாம். ஆனால் அவர்களோ அனைத்தையும் அழிப்பதில் முழுமூச்சாக உள்ளனர்."
ஆன்மீகத் துறையில் நான் அறியக்கூடிய பெருமைக்குரியவர்கள் வேறு எவரேனும் உள்ளனரா என நான் கேட்டதற்கு அவர், "இமானுவல் ஸ்வீடன்போர்க்கை (Emanuel Swedenborg) மறந்துவிட்டாயா?" எனக் கேட்டார். மேலும் அவர், " அவ்விடத்தில் ஒரு உன்னத ஒளியாக, ஆத்மீக முன்னேற்றத்துக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்காக அவர் இருந்தார். அந்த ஆத்மா மீண்டும் மண்ணுலகில் பிறப்பெடுக்காது. எமது ஆத்மீகப் பணிகளுக்கு அவரால் ஏற்பட்ட அளப்பரிய வளர்ச்சியை என்ன சொல்ல? மனிதர்கள் காதுகளை மூடி, வாயைத் திறந்ததற்குப் பதிலாக வாயை மூடிக் காதுகளைத் திறந்திருந்தால், எண்ணத்திலும் வளர்ச்சியிலும் மனிதகுலத்தைப் பல நூறாண்டுகளுக்கு முன்னே கொண்டு சென்றிருப்பார் அவர். தன்னைப் பைத்தியக்காரனென்றோ முட்டாளென்றோ எவர் என்ன சொன்னாலும் அதைப் பொருட்படுத்தாமல் தங்களை முழுமையாக உலகுக்கீந்த பெரியவர்கள் மிகமிக அபூர்வம்." என்று முடித்தார்.
இன்னொருநாள் ஆர்தரிடம் அவர் ஹௌடினியைப் (Houdini) பார்த்தாரா என நான் கேட்டேன். ஹௌடினி ஒரு பிரபலம் பெற்ற மாஜிக்நிபுணர். அவர் ஃபோர்ட் உயிருடனிருக்கையில் அவர் மூலமாகத் தனது மனைவிக்கு ஒரு குறியீட்டாலான செய்தியைத் (coded message) தெரிவித்திருந்தார். எனது கேள்விக்கு (ஹௌடினியை அங்கே சந்தித்தாரா என்ற) அவர் பின்வரும் சுவாரஸ்யமான பதிலை அளித்தார்: "அவர் இப்போ ஆத்மநிலையில் இல்லை. பூவுடல் எடுத்துவிட்டார். அவரது மனைவியும் தான். இருவரும் இப்போ சிறியவர்களாகையால் அவர்களிருவரும் இம்முறை வாழ்வில் என்ன செய்யப் போகின்றார்களென்று சொல்லவியலாது."
பின்பு போன தலைமுறையைச் சேர்ந்த அமெலியா எயார்ஹார்ட் (Amelia Earhart) எனும் புகழ்பெற்ற பெண்விமானியின் மர்மமான மறைவைப் பற்றிய கேள்விகளுக்கு ஃபோர்ட் பின்வருமாறு பதிலளித்தார்: "அவருடைய விமானத்தில் எரிபொருள் தீர்ந்ததனால் பசிபிக் சமுத்திரத்தில் விழுந்து மூழ்கினார். அது தான் அவர் விஷயத்தில் நடந்தது. அவரும் அவரது இணைவிமானியும் இங்கே தான் இருக்கிறார்கள். அவர்களிருவரும் தங்களது மறைவு உண்டாக்கிய அமளியையறிந்து புன்னகை பூத்தனர். அவர்கள் சிறிது காலத்துக்கு விமானத்தில் மீண்டும் பறக்கமாட்டார்கள். அவர்கள் அதனை விரும்பவில்லை. எரிபொருள் இயந்திரங்களிலும் ராடாரின் கூரிய உணர்வுத் திறன்களிலும் உள்ள இயக்கங்களைப் பற்றி அவர்களிருவரும் பிரமிக்கத்தக்க ஆராய்ச்சிகள் செய்கிறார்கள்."
விமானங்களைப் பற்றிய இக்கூற்றுக்கள் கஸ் (Gus) என்று அழைக்கப்படும் வேர்ஜில் க்றிஸமைப் (Virgil Grissom) பற்றி அறியத்தூண்டியது. அவரும் அவருடன் வேறு இரண்டு விண்வெளி வீரர்களும் துக்ககரமாக, மாதிரி விண்வெளிக் கப்பலில் ஏற்பட்ட ஒரு வெடிப்பினால் இறந்து போயினர். எனது கேள்விக்கு மறுநாள் ஆர்தர் பின்வருமாறு பதிலளித்தார்: "இப்போ விண்வெளி வீரர் வேர்ஜில் க்றிஸமைப் பார்ப்போம். அவர் ஒரு உயர்வான மனிதர். ஒரு இலட்சியத்துக்காகத் தனது வாழ்வைக் கொடுத்தவர். மனோபலம் மிக்கவர். சாதனைக்காகத் தன் உயிரையே கொடுத்தவர். அவர் பக்கத்தில் ஒரு பிழையும் இல்லாமலே, இளவயதில், புகழின் உச்சியிலிருக்கையில் இறந்ததனால், சரியான சந்தர்ப்பமும், பொருத்தமான உடலும் அமைந்தால், மீண்டும் பிறக்கமுடியும். ஆனால் அவர் அப்படிப் பிறப்பாரா என்பது கேள்விக்குறியே. இப்பொழுது அவர் மும்முரமாகப் புகையற்ற, செயல்திறன்மிக்க உந்துகருவி ஒன்றில் வேலை செய்கிறார். அது வான்வெளிப் பயணங்களில் ஒரு புரட்சியை உண்டாக்கும். அவர் விண்வெளிப் பயணங்களைப் பற்றிக் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார். ஆனால் அவரது முக்கியமான கவனம் முழுவதும் தனது குடும்பத்தினரை அன்புடன் கவனிப்பதோடு இந்த உந்துவிசையால் விமானத்தையோ விண்வெளிக்கப்பலையோ கார்பன் அல்லது எரிபொருள் சம்பந்தப்படாமல் செலுத்துவதைப் பற்றியே உள்ளது. அது வளிமண்டலத்தில் ஏற்படும் காற்றோட்ட இயக்கங்களினால் உந்துகை விசையின் மூலம்  அதிவிரைவான வேகத்தில் விமானங்களை இயக்கும் ஒரு முறையாகும். இப்படியான புதிய கண்டுபிடிப்புகளின் அறிவைப் பூவுலகிலிருக்கும் மனிதனுக்குத் தெரிவிக்கும் முறையானது அம்மனிதனின் ஆழ்மனத்தில் அந்த எண்ணங்களைப் பதிய வைப்பதன் மூலம் என ஃபோர்ட் முன்னரே எனக்கு விளக்கி விட்டார். ஆழ்மனதில் பதியவைக்கும் செய்கையைக் கூடுதலாக அம்மனிதர் உறங்குகையிலோ அல்லது தியானம் செய்கையிலோ செய்யலாம்.
எனது பதிப்பாசிரியர் எலிஸ் அம்பேர்ன் (Ellis Amburn) பின்வரும் பிரபலமானவர்களைப் பற்றிக் கேட்கும் படி சொன்னார்: பெய்த்தோவன் (Beethoven), ஏணெஸ்ட் ஹெமிங்வே (Ernest Hemingway), நெப்போலியன், பிஷப் ஜேம்ஸ் ஏ. பைக் (Bishop James A. Pike) அத்துடன் 'பைக்'கின் தற்கொலை செய்து கொண்ட மகன். நான் அதனை ஆர்தர் ஃபோர்டுக்குத் தெரிவித்தேன். அவர் பின்வருமாறு அறிவித்தார்: "முதலாவதாக பெய்த்தோவன் மேல் மண்டலங்களுக்குச் சென்று விட்டார். அவர் நான்காவது நிலையில் நீண்ட காலமிருக்கிறார். அங்கே சந்தேகமின்றி அவர் இசையை உருவாக்கமுடியும். அதாவது சுழன்று கொண்டிருக்கும் பிரபஞ்சத்தின் அதிர்வுகளையும் அற்புதமான முறையிலுண்டாகும் கிரகங்களின் ஒலிகளையும் ஒன்று திரட்டி இனிமை வாய்ந்த இசையினை உருவாக்க முடியும். அவர் லட்விக் வான் பெய்த்தோவனாக (Ludwig Van Beethoven) வருவதற்கு முன் பல பிறவிகளில் இசைவல்லுனராக இருந்திருக்கிறார். இக்கடைசிப் பிறவியின் இடையில் அவருக்குக் காது கேட்காமல் போனதன் மூலம் அவர் தனது பூர்வ கர்ம வினைப் பயன்களை அனுபவித்து முடித்திருக்கிறார். அதனால் அவர் இனிப் பிறவியெடுக்க வேண்டிய தேவையில்லை. மீண்டும் பிறவியெடுப்பதும் எடுக்காததும் அவரது விருப்பம். ஆனால் இப்போது அவர் உயர்வான தளத்தில் இருக்கிறார்."
"ஹெமிங்வே மனிதனாக இருக்கையில் முரட்டுத் தனமாக இருந்தார். அவர் தனது முந்தைய பிறவிகள் சிலவற்றில் பெர்பெர் (Berber) என்று சொல்லப்படும் வடக்கு ஆப்பிரிக்காவின் பழங்குக்குடி இனத்தைச் சேர்ந்தவராகவும் இன்னும் சிலவற்றில் ஹன் (Hun) என்று சொல்லப்படும் கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாக் கண்டங்களில் நான்காம், ஐந்தாம், ஆறாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஒரு நாடோடி இனத்தைச் சேர்ந்தவராகவும் இருக்கும் போது சண்டை பிடிக்க வேண்டும் என்பதற்காகவே சண்டை பிடித்துக் கொடுமைப் படுத்துவதில் மகிழ்ச்சியுற்றார். அவர் கூர்மையான புத்தியுடையவராயினும் அவருக்கு வன்முறையில் விருப்பமிருந்தது. ஆனால் எழுத்தாளர் ஏர்னெஸ்ட் ஹெமிங்வேயாக வந்த பொழுது அவருள் இன்னும் கொஞ்சம் பழைய வன்முறை நாட்டங்கள், விருப்பங்கள் இருந்தாலும் நல்ல முறையில் முன்னேற்றம் கண்டார். ஆனால் அவரது வாழ்வை முடித்த விதம் அவரது முன்னேற்றத்தைப் பின்னடையச் செய்துவிட்டது. அவர் இன்னும் அவ்விடயத்தைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறார். அவரிடம் எல்லாம் இருந்தது: புகழ், நண்பர்கள், செல்வம், திறமை. இருந்தும் அவர் தன் வாழ்வைத் தானே முடித்துக் கொண்டார். அப்படி ஒரு நாளும் செய்யக்கூடாது! இவ்விடயத்தைப் பற்றி அதிகம் பேச விருப்பமில்லை. அது ஒரு சோக வரலாறு."
சிறிது இடைவேளைக்குப் பின் ஃபோர்ட் மீண்டும் பின்வருமாறு ஆரம்பித்தார்: "ரூத், ஆத்மீகவியலின் ஆரம்பத்திலிருந்தே எந்தப் போலியான ஆவியூடகங்களும் பரிதாபத்துக்குரிய அந்த நெப்போலியனின் ஆவி தங்களுக்குள் வந்துள்ளதாக அடிக்கடி சொல்வார்கள். இதை முதலில் தெளிவுபடுத்துவோம். அவர் உடனடியாகவே இன்னொரு பிறவி எடுத்து விட்டார். ஏனெனில் அவர் இன்னொரு வெற்றிகரமான போரை விரும்பினார். அவர் அதைத் தனது அடுத்த பிறவியில் அடைந்தார். ஆனால் ஒரு களைப்புற்ற காலாட் படை வீரனாக. அதன் பிறகு மேலுமிரண்டு பிறவிகள், போர்த்துக்கல்லிலும், பிரேஸில் நாட்டிலும். அவையும் கூடக் குறுகிய காலத்துக்கே. அவன் எதையும் செய்வதில் நாட்டம் கொண்ட செயல் வீரன். இங்கே நீண்ட காலங்களுக்கு ஆழ்ந்து சிந்தித்தல், சீர்தூக்கிப் பார்த்தல் போன்றவற்றில் நேரம் கழிக்க அவனுக்கு விருப்பமில்லை. அதனால் அவனது பிறவிகளுக்குரிய பெற்றாரைத் தெரிவு செய்ய அவனால் இயலாது. பிறவிகளுக்கு இடையே அந்த உடன்படிக்கைக்கு வரக்கூடிய உரிமையைப் பெறும் நிலையை அவர் அடையத் தவறுகிறார். ஆனால் அவர் தீயவரில்லை.
கிறிஸ்தவ ஆயர் (பிஷப்) பைக்கினதும் (Pike) அவரது மகன் ஜேம்ஸ் ஏ. பைக்கினதும் (ஜூனியர்) மரணத்துக்குப் பின்னான வாழ்வைப் பற்றிய கேள்விகளுக்கு ஃபோர்டின் பதில்களை விபரிக்கு முன்பாக சர்ச்சைக்குரிய பிஷப்பும் ஆர்தரும் பூவுலகில் வசிக்கையில் அவர்கள் இருவருக்கும் இடையே உண்டான தொடர்புகளைப் பற்றி ஒரு தரம் பார்ப்பது நல்லதென எண்ணுகிறேன். சுருக்கமாகச் சொல்வதாயின் பைக்கின் இருபத்திரண்டு வயது மகன் நியூயோர்க்கிலுள்ள ஹோட்டல் அறையொன்றில் பெப்பிரவரி மாதம் 1966 ஆம் ஆண்டு தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்து போனார். சுமார் இரண்டு கிழமைகளுக்குப் பிறகு பிஷப் பைக் அப்போது கற்றுக் கொண்டிருந்த இங்கிலாந்திலுள்ள கேம்ப்ரிஜ் பல்கலைக்கழகத்தின் அபார்ட்மெண்டில் அமானுஷ்யமான சில நிகழ்வுகள் நிகழ்வதைக் கண்டார். ஒருநாள் காலை அபார்ட்மெண்டில் இருந்த எல்லா மணிக்கூடுகளும் 8:19 மணிக்கு நின்று விட்டன. கேம்ப்ரிட்ஜின் அந்த நேரத்தில் தான் மகன் பைக் தனது உயிரை எடுத்தது. பின்னர் பூட்டூசிகள் (safety pins) அபார்ட்மெண்டில் தென்படத் தொடங்கின. அவையும் மணிக்கூட்டின் அதே நேரத்தைக் காட்டும் விதமாகத் திறந்திருந்தன. பைக்குடன் வேறு இருவர் அவரது அபார்ட்மெண்டில் வேலை செய்து கொண்டிருந்த போது அங்கே சுவரோடு இருந்த ஒரு அலுமாரிக்குள் இருந்து அவர்களுக்கு விசித்திரமான சத்தங்கள் கேட்டு அதனைத் திறந்து பார்த்த பொழுது உடைகள் தாறுமாறாகக் குழம்பிக் கிடந்ததைக் கண்டனர். அவர்கள் திகைத்துப் போய் நிற்கையில் பைக்கின் இறந்து போன மகனின் சவரம் செய்யும் கண்ணாடியானது பீரோவின் மேலிருந்து மெதுவாக மிதந்து நிலத்துக்கு வந்தது.
இவை போன்ற விசித்திரமான நிகழ்வுகளைக் கேள்வியுற்ற சௌத்வாக்கின்  (Southwark) பிஷப்பும் அமானுஷ்ய அறிவியலைக் கற்றவருமான மேர்வின் ஸ்ரொக்வூட் (Mervyn Stockvood) என்பவர் திருமதி எட்னா ட்விக் (Edna Twigg) என்ற ஒரு பிரபல ஆவியூடகவியலாளருடன் பைக்கைத் தொடர்பு கொள்ளும் படி செய்தார். அந்தப் பெண்மணி பிஷப்பிற்கு மேலுலகச் செய்திகள் சிலவற்றைச் சொன்னார். அச்செய்திகள் தனது மகனிடமிருந்து தான் வந்ததென பிஷப் நம்பினார். பின்னர் ஒரு வருடம் கடந்த பின் 1967 செப்டெம்பரில், 'ரொரண்டோ ஸ்டார்' என்னும் பத்திரிகையின் சமய சம்பந்தமான எடிட்டர் அலன் ஸ்ப்ராகெட்டினால் (Allen Spraggett) தலைமை தாங்கி நடாத்தப்பட்ட தொலைக்காட்சிக் கலந்துரையாடல் ஒன்றில் பிஷப் பைக்கும் ஆர்தர் ஃபோர்டும் ஒன்றாகச் சந்தித்துக் கொண்டனர்.
கனேடியன் ஒளிபரப்பு நிறுவனத்தின் டொரோண்டோ ஸ்டுடியோவில் ஆர்தர் ஃபோர்ட் மயக்க நிலைக்குப் போக டெலிவிஷன் கமராக்கள் நாடு தழுவிய அளவில் பார்வையாளர்களுக்கு ஒரு விசித்திரமான காட்சியைப் பதிவு செய்து கொண்டன. ஃபோர்டின் குரலை உபயோகித்து ப்ளெச்சர் (Fletcher) ஜூனியர் பைக்கை பேசும் படி செய்தார். அவர் தான் எல் எஸ் டியாக (LSD) உபயோகித்த போதைப் பொருள் என்னவென்று அடையாளம் காட்டினார். அத்துடன் அந்தத் 'தவறான பழக்கமானது' தனதுயிரை மாய்க்கப் பண்ணி விட்டது எனவும் உண்மையில் தனது உயிரைத் தக்க வைக்க மிகவும் விரும்பினார் எனவும் சொன்னார். மிகப்பெரிய அளவில் சான்று பகரக்கூடியதான பல விஷயங்கள் ஆயர் பைக்குக்கும் ஆர்தர் ஃபோர்டுக்கும் தெரியாத பல விடயங்களும் வெளி வந்தன. இந்நிகழ்வைப் பற்றிய விபரங்களை ஆர்தர் ஃபோர்டின் Unknown but Known (தெரியாதது ஆனால் தெரிந்தது) என்ற புத்தகத்திலும் பைக்கின் சொந்த அனுபவத்தின் சான்றுகளை The Other Side (மறுபக்கம்) என்ற புத்தகத்திலும் வாசித்தறியலாம். பிஷப் (ஆயர்) பைக் பின்னர் புனித பூமிக்குச் சுற்றுப் பயணம் செல்கையில் இறந்து விட்டார். அங்கே பாலைவனத்தில் டெட் ஸீ (Dead Sea) எனும் கடற்கரைக்கருகில் காணாமல் போய்விட்டதாகத் தெரிகிறது. பின்னர் பல நாட்கள் சென்ற பின் இறந்து கிடக்கக் கண்டு பிடிக்கப்பட்டார்.
எனவே நான் 'பைக்' குடும்பத்தைப் பற்றி ஆத்ம ரூபத்திலிருந்த ஃபோர்டிடம் கேட்ட பொழுது அவர் பின்வருமாறு பதிலளித்தார்: "ஆயர் பைக்கும் அவரது மகனுமா? ஆம் நான் இருவரையும் சந்தித்துள்ளேன். பைக் இங்கே வருவதற்குத் தயாராக இருக்கவில்லை. அவர் நிறைய வேலைகளைச் செய்து முடிக்க வேண்டுமென்று எண்ணியிருந்தார். ஆனால் அந்த விடயத்தில் அவரின் விருப்பத்துக்கு இடமில்லாமல் போய்விட்டது. அந்த வறண்ட பாலைவனத்தின் வெப்பத்தில் குடிநீரில்லாததால் அவரால் உயிர் பிழைக்க முடியாமல் போய்விட்டது. இங்கே வந்த புதிதில் உடனே உலக வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டுமென்று விரும்பினார். இப்போ அப்படியில்லை. அவர் மகனுடன் மறுபடி இணைந்து கொண்டார். தந்தை இங்கு இருப்பதால் மகனில் எவ்வளவோ முன்னேற்றம் காணப்படுகிறது. இப்போ வெகுவிரைவாக அவர் இந்தச் சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றுகிறார். அவர்கள் இதற்கு முந்தைய ஒரு பிறவியிலே நினைத்ததிலும் பார்க்க மிக நெருக்கமாக இருந்திருக்கிறார்கள். இப்போ அவர்கள் தத்துவவியலுடன் பிரபஞ்ச அறிவு உட்பட வேறு பாடங்களும் கற்கிறார்கள். ஏனெனில் சந்தர்ப்பம் வரும் போது மீண்டும் பூவுலகில் பிறப்பதற்குத் தங்களைத் தயார் செய்வதற்காக. நிச்சயமாக அவர்கள் தங்களின் கடந்த பிறவிகளைப் பற்றி மறுபரிசீலனை செய்த பின்பே பிறப்பெடுப்பதற்குரிய சூழ்நிலை, பெற்றார் ஆகியவற்றைத் தெரிவு செய்யக் கூடிய தகுதியைப் பெறுவர். பெரும்பாலும் தந்தைக்கு முன் மகன் பிறப்பெடுக்கலாம். மகன் தானே தனதுயிரை மாய்த்திருந்தாலும் அவர் போதையிலிருந்ததால் அவர் அதை வேண்டுமென்றே செய்யவில்லை. எனவே அது ஓரு விபத்தாகத்தான் கருதப்படுகிறதேயன்றி கடும் பிராயச்சித்தம் செய்வதற்குரிய செயலாகக் கருதப்படவில்லை. புலனுணர்வுகள் விரிவடைந்து விட்டது போன்ற பிரமையை உண்டாக்கித் துயரம் தரக்கூடிய செயல்களைத் தூண்டும் போதைப் பொருட்களைத் துறக்கும் படி அவர்கள் ஏனையோரை ஊக்குவிக்கிறார்கள்".
ஜெல்டா, எஃப். ஸ்கொட் பிட்ஸ்ஜெரால்ட் (Zelda, F. Scott Fitzgerald) என்பவர்களைப் பற்றிய புத்தகங்களை நான் வாசித்து அவர்களின் வாழ்வில் நிகழ்ந்த சோகச் சம்பவங்களை அறிந்து வருந்தியதால் ஆர்தர் ஃபோர்டிடம் அவர்களின் வளர்ச்சியைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவரது பதில், "அவர்கள் இருவருமே இங்கே இருக்கிறார்கள். இருவரும் கிட்டத்தட்ட ஒரே நிலையிலேயே இருக்கிறார்கள். சிறிது சண்டை சச்சரவுகளிருக்கும். ஆனால் அவர்கள் இருவரும் மிக நெருக்கமாக ஒன்றிணைக்கப் பட்டு உள்ளதால் எந்தவொரு சண்டையும் அவர்களை நீண்ட நேரம் பிரித்து வைக்க முடியாது. சொல்லப் போனால் அவர்களிருவரும் ஒரு குடத்தில் இரு பட்டாணிகள் போல (two peas in a pod - அதாவது அவர்களிருவரும் ஒரே மாதிரியானவர்கள்). அந்த இருவரிலும் அப்பெண் புத்திசாலி. ஆனால் ஆணோ அற்புதமான நேர்த்தியவாதியாகும். அவர்கள் இங்கே பல காலம் இருந்ததனால் அவர்களுக்கிடையே இருந்த முரண்பாடுகள் சரி செய்யப்பட்டு வருகின்றன. அவர்களிருவரும் அவர்களைப் போலவே குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு இங்கே வருகையில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளுக்கு உதவுகிறார்கள். தற்சமயம் அங்கேயுள்ள எந்த ஒரு எழுத்தாளரின் ஊடாகவும் அவர்கள் வேலை செய்யவில்லை. அவர்கள் தங்களைப் போலவே நிறையத் திறமைகளிருந்தும் ஒழுங்கான பழக்கவழக்கங்கள் இல்லாதவர்களுக்குப் பூவுலகை விட்டு இங்கு வரும் போது அவ்வருகையை எளிதாக்குவதில் தீவிரமாகச் செயல்படுகிறார்கள். தங்களுக்கு எல்லாம் தெரியுமென நினைக்கும் இளம் புத்திசாலிகளுக்கு அது அவசியத் தேவையாகும். கட்டுப்பாடென்பது இருவருக்குமே எள்ளளவும் இருக்கவில்லை. சுயகட்டுப்பாடு என்பது எவ்வளவு அவசியமானது என்று அவர்களிருவரும் இங்கே மீண்டும் மீண்டும் பயின்று கொண்டிருக்கிறார்கள்.
"முந்தைய பிறவிகளில் அவர்கள் பிரஞ்சுப் பிரஜைகளாகவும் அத்துடன் ஓவியக்கலையில் ஆர்வமுள்ளவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். எழுத்தில் காட்டிய தைரியத்தையே அப்போதும் காட்டினார்கள். அதாவது பல நிறங்களைக் கொண்ட குமிழ்களைக் கொண்டதான ஓவியங்களைத் துணிவுடன் வரைந்தார்கள். ஆனால் சுயகட்டுப்பாடானது சிறிதளவே காணப்பட்டது. அதனால் அவர்களின் அழியாப்புகழ் நிலைத்திருக்கவில்லை. இப்போ நாம் வேறு கண்ணோட்டத்தில் பார்க்க முயற்சிப்போம். அவர் முதிர்ச்சியில்லாதவர். தன் மனத்திலெழும் எண்ணக்கருவில் தேவையான நேரத்துக்குக் கவனத்தைச் செலுத்தி அதனை முழுமையாக நிறைவேற்றும் திறனற்றவர். அப்பெண்ணின் எண்ணங்களோ மிகப் பெரியவை. ஆனால் அவள் கல்வியறிவும் ஒழுக்கமும் குறைந்தவள். அதனால் நினைப்பதற்கு ஒழுங்கான சொல் வடிவம் கொடுக்கும் திறனற்றவள். அவளின் படைப்புகள் அசலானவை. ஆனால் சொல் வடிவமைப்பதற்குப் பக்க பலமாக சரியான கண்ணோட்டமும் தத்துவ ஞானமும் இருக்கவில்லை. அவனுக்கோ நல்ல செயல் திறன் இருந்தாலும் சிறு பிள்ளைத்தனமான கோபங்களும் வர்ணஜாலம் மிக்க அவளின் சொல் திறமையில் பொறாமையும் கொண்டவர். அவர் அவளில்லாமலும் வாழ முடியாதவர். அதே நேரம் அவளுடன் சேர்ந்தும் வாழ இயலாதவர். இப்போ அவர்கள், பொறுமை, சகிப்புத்தன்மை, இரக்கம், புரிந்துணர்வு என்பனவற்றைக் கற்கிறார்கள். அதன் பின்பே அவர்கள் தாங்களே தங்களின் பெற்றாரைத் தெரிவு செய்து பிறக்க அனுமதிக்கப் படுவார்கள்.
தனது உற்சாகமூட்டும் நகைச்சுவை அகடவிகடங்களால் அல்கொங்குயின் வட்டமேசையைக் (Algonquin Round Table) கலக்கிக் கொண்டும் நாட்டு மக்களைச் சிரிக்க வைத்துக் கொண்டும், அதே நேரத்தில் தனிமையில் தற்கொலைகளுக்கு இரகசியமாக முயன்று கொண்டுமிருந்த டொறொத்தி பாக்கரைப் (Dorothy Parker) பற்றி ஆர்தர்: "சோகமான பெண்ணாத்மா. அவள் தனது உடலையும் திறமைகளையும் சீரழித்துக் கொண்டாள். அவளது உள்ளுணர்வின் உந்துகைக்கு அவள் உண்மையாக இருக்கவில்லை. இக்கடைசிப் பிறவியில் அவ்வுணர்வானது தன்னிலும் பார்க்கப் பெரிய ஒரு விஷயத்தை உணர முற்பட்டது. இதற்கு முந்தைய பிறவியிலே அவள் யூகோஸ்லாவியாவில் ஒரு கன்னியாஸ்திரியாக இருந்தாள். அப்பொழுது மிகக் கவனமான, எச்சரிக்கையான வாழ்க்கை வாழ்ந்ததனால், இப்பிறவியிலே எதையும் எதிர்க்கும் குணம் கொண்டிருந்தாள். அந்தக் கடுமையான துறவு வாழ்வில் சமய உணர்வு அளவுக்கதிகமாகத் திணிக்கப்பட்டதனால் இப்பிறவியில் சமயத்துக்கு ஒரு பங்களிப்பையும் அவள் செய்யவில்லை. அவள் போலித்தனங்களிலிருந்தும் அவையின் பிணைப்புகளிலிருந்தும் சுதந்திரமாக இருக்க விரும்பினாள். ஆனால் அவள் மறுபக்கத்தின் அந்த எல்லைக்குச் சென்றுவிட்டாள். அவள் புத்திசாலியென்பதால் அடுத்த பிறவியில் அநேகமாக ஒரு சமநிலைக்கு வருவாள். அவள் காற்றையே கட்டிப் போட நினைத்தாள். அதனால் நாமனைவரும் இறைவனின் ஒரு பகுதியே என்பதனை மறக்குமளவுக்குப் பின்னடைவு அடைந்திருக்கிறாள். உண்மையிலேயே துக்ககரமான சமாச்சாரம் தான். இப்போ ஓய்வெடுத்து வருகிறாள். குழப்பத்திலிருக்கிறாள். தனது பிழைகள் தன்னை எவ்வளவு தூரம் தவறான பாதையில் இட்டுச் சென்றன என்பதை உணர்ந்து விழித்தெழுந்தால் குழப்பத்திலிருந்து விடுபடுவாள்.
"அவளது தந்தை அவளுக்கு ஒரு தடைக்கல்லாக இருந்தார். ஆனால் அவள் வேண்டுமென்றே யூதப்பெற்றாரைத் தேர்வு செய்திருந்தாள். ஏனெனில் அதற்கு முன் கத்தோலிக்கக் கன்னியாஸ்திரி மடத்தில் இருந்ததனால் ஓரளவு சுதந்திரமான சமயக் கோட்பாடுகளுடைய விதமாகத் தெரிவு செய்திருந்தாள். அவளது தாய் ஒரு நல்ல பெண்மணி. ஆனால் அச்சிறுகுழந்தைக்கு உதவக்கூடிய காலம் வரையும் தனது உயிரைத் தக்கவைக்க அவளால் முடியவில்லை. உண்மையில் அக்குழந்தையும் அவளும் முந்தைய பிறவியில் மிக நெருங்கிய நண்பர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனால் அவள் தனது அந்தக் கடந்த பிறவிகளை மறுபரிசீலனை செய்து, அவற்றை அருகருகே வைத்து எங்கே பிழை ஏற்பட்டது என்பதைக் கண்டறிந்து தெளிவான ஆத்மாவுடன் பிழைத்தெழுவாள். சமயநம்பிக்கை அற்ற வாழ்வென்பது டொறொத்தி பார்கரைப் பொறுத்தவரையில் சாத்தியமற்றது. ஏனெனில் முந்தைய பிறவியிலும் அதற்கு முந்தைய பிறவிகளிலும் அது அவளில் மிக ஆழமாக ஊட்டப்பட்டுள்ளது.

Wednesday, November 25, 2020

பத்தாம் அத்தியாயம்: சரியான முன்னேற்பாடு (Proper Preparation)


இறந்தவர்கள் விண்வெளியில் மிதப்பதில்லை என்னும் எண்ணத்தை வலியுறுத்துவதற்கு ஆர்தர் தீர்மானித்தார். அவர்களும் நாம் இருப்பதைப் போல இங்கே தான், ஆனால் வேறொரு பரிமாணத்தில் இருக்கிறார்கள். ஒருநாள் அவர் பின்வருமாறு எழுதினார்: "எல்லாம் ஒரே பிரபஞ்சமே. நாம் வேறெங்குமில்லை. நீங்களிருக்கும் அதே இடத்தில் தான் நாமும் இருக்கிறோம். ஒரேயொரு வித்தியாசம். நாம் வாழும் முறை வேறு. நாம் உங்கள் படுக்கைகளில் படுக்க மாட்டோம். உங்கள் நாற்காலிகளில் அமர மாட்டோம். ஆனால் ரத்தமும் தசையுமாக உலவும் மக்களிடையே தான் நாமும் எமது நாளாந்தப் பணிகளை ஆற்றுவோம். நாம் உங்களுடன் கலந்து இருக்கிறோம். சில சமயங்களில் உரையாடுவோம். ஆனால் தேவையின்றித் தலையிட மாட்டோம். யாருடைய உயிரையேனும் காப்பாற்ற வேண்டி வந்தாலோ அல்லது தொலைந்து போய் விட்ட மனிதனை அல்லது தனது சூழ்நிலைகளை உணராத மனிதனை வழி நடத்துவதற்கோ இல்லாமல் தேவையற்ற தலையீட்டைத் தவிர்ப்போம். நாமும் அதே பாதைகளில் தான் கூடுதலாகப் பயணிப்போம். ஆனால் பௌதீகத் தடைகளில்லாததால் நாம் மூலைகளில் திரும்புவதைப் பற்றியோ அல்லது குன்றுகளையும் கட்டிடங்களையும் சுற்றி வருவதைப் பற்றியோ கவலைப்படத் தேவையில்லை. எங்களைப் பொறுத்தவரை அவை அங்கேயில்லை. ஏனென்றால் நாம் ஒளியும் சக்தியும் சேர்ந்த வடிவம். அவையும் அதைப் போலவே. எனவே ஒன்று மற்றையதன் சுதந்திரமான போக்கைத் தடை செய்யா. நாமும் பௌதீக உயிரினங்களும் ஒன்றாகவே உயிர் வாழ்கிறோம். ஆனால் முக்கியமான வித்தியாசம் என்னவென்றால், அவர்களுக்கு நாமும் அவர்களுடன் இருப்பது தெரியாது. எமக்கு அவர்கள் எங்களுடன் இருப்பது தெரியும். நாம் தொடுதல், மணத்தல், கேட்டல் ஆகிய செய்கைகளைச் செய்யாவிடினும், பௌதீக உயிரினங்களின் எண்ணங்களை நாம் பலமாக உணர்வோம். ஏனெனில் எண்ணங்கள் செய்கைகளாகவே கருதப்படுகின்றன."  
மேலும் ஃபோர்ட், பூவுலகில் இருக்கையிலே மேலுலக வாழ்வைப் பற்றிய எண்ணங்களை எண்ணும் விதமாகத் தங்களைத் தயார் செய்பவர்கள் இலகுவாக மேலுலகத் தொடர்புகளைக் கிரகித்துக் கொள்ள இயலும் என்றார். அவர் மேலும் எழுதுகையில், "உதாரணமாக, உங்கள் பக்கத்திலிருக்கும் ஐன்ஸ்டைன், ஒபன்ஹைமர் (Oppenheimer) அல்லது வேறொரு சிறந்த பௌதீகவியலாளர் (physicist) போல ஒரு அறிவாளி பிரபஞ்ச விதிகளை உணர்ந்து அவற்றை உபயோகிக்கிறார். அவர்களால் குறைந்த பட்சம் ஆழ்மனத்திலாவது பிரபஞ்ச விதிகளை நினைவு கூர இயலுமாக உள்ளதால் அவர்கள் அங்கே அறிவாளிகளாகக் கருதப்படுகிறார்கள். உண்மை என்னவென்றால், இங்கே அவர்கள் மிகவும் முன்னேறிய ஆத்மாக்களாகவும் அதே நேரம் பெளதீகவியலில் (physics) நாட்டமுள்ளவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். எனவே அவர்கள் பூமியில் பிறக்கையில் இங்கேயிருக்கும் மற்றவர்களின் உதவியுடன் அவர்களால் 'அதிசயங்கள்' என்று சொல்லப்படும் செயல்களைச் செய்ய இயலுமாகவுள்ளது. அதே போலத்தான் எழுத்தாளர்களும். அதாவது சராசரியான எழுத்தாளர்களை விட உயர்வானவர்கள் - ஒரு ஷேக்ஸ்பியர், ஒரு பேக்கன் (Bacon), ஒரு ப்ரௌனிங் (Browning), ஒரு விக்டர் ஹ்யூகோ (Victor Hugo), அல்லது அது போன்ற வேறு சிறந்தவர்கள் எவரேனும். அவர்கள் இங்கே தாம் அறிந்த விதிகளைப் பூமியில் பிறந்த பிறகும் நினைவுபடுத்தக் கூடிய விதமாக எடுத்துச் சென்றிருக்கிறார்கள். அத்துடன் நல்லிணக்கமானது தானே ஒரு மாறாத விதியென்பதால் அவர்களால் இனிய இசைகளை உருவாக்கவோ அல்லது எழுத்தில் காட்டவோ முடிந்தது. அவர்களால் பௌதீக உலகின் இலக்கியங்களை, கலைகளை, இசைகளைப் பிரபஞ்ச விதிகளின் சந்தத்துக்கும் இசைவுக்கும் ஏற்ற முறையில் மேம்படுத்த முடிந்தது. ஈரேழு வரிப் பாடல்கள் (sonnets), பிரபஞ்ச சந்தமானது பதினான்கு வரிகளைக் கொண்ட தாளத்திற்குள் சிறைப் பிடிக்கப்பட்டிருப்பதற்கு ஒரு நல்ல உதாரணமாகும். ஒருவரின் ஒலி வரம்புக்கு அப்பால் அவரை அழைத்துச் செல்லும் இசையோ அல்லது பூவுலகில் பணத்துக்காக என்று இல்லாமல் அதற்கு அப்பால் எம்மை இட்டுச் செல்லும் இசையோ முன்னேற்றமடைந்த ஆத்மாக்கள் மீண்டும் பிறவியெடுக்கையில் தங்களுடன் இந்த நினைவுகளைக் கொண்டு வந்து மீண்டும் நினைவு படுத்துவதால் உண்டாகும் இசைகளாகும். ஒலிகளில் மெல்லிய ஏற்றத்தாழ்வுடன் கூடிய இசைகள் (cadence), சந்தங்கள், ஒருங்கிணைந்த இசைவான ஒலிகளாலான சிம்ஃபனி (symphony) போன்றன இந்தப் பக்கத்தில் இருக்கும் ஒலிகளின் எதிரொலிகளாகும். கேட்டவை இனிமையான இசைகள். ஆனால் கேட்காதவை இன்னும் இனியவை. எவ்வாறு ஸ்வரங்களும் தாளங்களும் ஒருங்கிணைந்து இனிமையான இசையை உருவாக்குகின்றன என்பதனை நாமறிவோம். எனவே நீங்கள் கேட்கும் உயர்தரமான இசையெல்லாம் இங்கிருந்து வருபவையே. 
"என்றுமே நிரந்தரமாக இருந்து கொண்டிருக்கும் உண்மையான வாழ்வுக்குத் தங்களைத் தியானத்தின் மூலமோ அல்லது கனவுகளின் மூலமோ தயார் செய்பவர்கள் தான் பூவுலகில் அறிவாளிகளாகக் கருதப்படுபவர்கள். அவர்களால் பிரபஞ்ச அறிவை ஊடுருவிப் பார்த்து பூவுலகில் இன்னமும் கண்டு பிடிக்கப்படாமல் இருக்கும் விதிகளைப் பிரயோகிக்க முடிகிறது. அப்படியென்றால் பூவுலகில் இருக்கும் அனைவரும் ஏன் தங்களது நேரங்களைத் தியானம் செய்வதிலும் கனவுகளைப் பற்றிய ஆராய்ச்சியிலும் செலவழிப்பதில்லை? ஏனெனில் எல்லையற்ற விவேகம், அறிவு ஆகியவற்றைக் கொண்ட இப்படிப்பட்டதொரு பிரம்மாண்டமான மூலதனத்தைப் பற்றிய அறிவு அவர்களுக்கு இல்லை. ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குத் தங்கள் மனதை அமைதிப்படுத்தித் தங்களின் உள்ளே உள்ள சக்திகளைக் கவனித்தால், ஒரு நொடியில் அந்த மூலதனத்தை அடையலாம். அதன் மூலம் ஆத்மாவின் ஜன்னலானது திறக்கப்பட்டுத் திரையின் மறு பக்கத்துடன் தொடர்புகள் உருவாக்கப்படும்."
கடந்த பதினோரு வருடங்களாக நான் தியானத்தைப் பற்றி எழுதி, சொற் பொழிவாற்றி வருவதுடன் யாருடனாவது ஆத்மீக விடயங்கள் பற்றிப் பேச நேர்ந்தால் அவர்களைத் தியானம் செய்வதற்குத் தூண்டிக் கொண்டும் இருக்கிறேன். நானும் தியானம் செய்திருக்கிறேன். ஆனால் மற்றவர்களுக்குச் சொல்வதைப் போல நான் சிரத்தையெடுத்துச் செய்வதில்லை. ஆர்தர் ஃபோர்ட் சொல்லும் ஒழுங்கு முறை கட்டுப்பாடுகள் என்னிடம் குறைவாகவே காணப்படுகின்றன. எனக்குத் தியானம் பற்றிய 'விபரங்கள்' தெரிந்த அளவு தியானம் தெரியவில்லை. 'உண்மையைத் தேடி' (A Search for the Truth) என்ற எனது நூலில், 'பிரார்த்தனையும் தியானமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். ஏனெனில் பிரார்த்தனையின் போது நாம் கடவுளிடம் பேசுகிறோம். அதே சமயம்  தியானத்தின் போது நாம் அவன் சொல்வதைக் கேட்கிறோம்' என எழுதியிருக்கிறேன். இவ்விஷயத்தில் எனக்கு இன்னும் சற்று அதிகமான அறிவு வேண்டுமென ஆர்தர் ஃபோர்ட்  உணர்ந்தது ஒரு நாள் நான் கேட்காமலேயே அவர் அதைப் பற்றி எழுதியதில் இருந்து தெரிந்தது; பின்வருமாறு:-
"வாழ்வின் அடுத்த கட்டமாகிய மேலுலக வாழ்வுக்குத் தயார் செய்வதற்கு, இப்போ நாம் தியானத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பார்ப்போம். அப்படித் தயார் செய்வது முக்கியமாகும். ஏனெனில் தியானமானது அடுத்த கட்ட வாழ்வைப் புரிந்து கொள்ள உதவும். தியானம் செய்கையில் நாம் இறைவனின் அருகிலிருக்கிறோம். ஆத்மாக்களாகிய நாம் இறைவனின் அண்மையை உணர்ந்து நீண்ட நாட்களாகி விட்டிருக்கிறது. இங்கே தான் நாம் இறைவனைச் சந்திக்கிறோம். எம்முள்ளே. இறைவனை எம்முள்ளே காண்பதன் மூலம் நாம் எமது கடந்த காலத் தவறுகளை மதிப்பீடு செய்வதும் பின்னர் மேல் நிலைகளுக்குச் செல்வதற்கான தயாரிப்பில் ஈடுபடுவதா அல்லது மறுபடியும் பூவுடலெடுத்து உலகவலம் வருவதா என்பதைத் தீர்மானிப்பதும் இலகுவாகும் என்பதை அறிந்து கொண்டோம். எனவே அங்கிருக்கையில் எவ்வளவுக்கெவ்வளவு தியானத்தைப் பற்றி அறிகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு வேகமாக இங்கே முன்னேறலாம். தியானமிருக்கையில் முதலில் ஆழமாக மூச்சை உள்ளிழுத்து வெளியில் விட மறக்கவேண்டாம். அதன் மூலம் பொதுவாக எமது உடலிலுள்ள தீங்கிழைக்ககூடிய, விஷம் வாய்ந்த வாயுக்களை வெளியேற்றக் கூடியதாகவிருக்கும். அதன் பின்னர் கொடுக்கப்பட்ட மந்திரத்தையோ அல்லது 'ஓம்' (aum) என்ற ஒலியையோ எண்ணுவதன் மூலம் இம்முழுப் பிரபஞ்சத்துடன் நீங்கள் ஒன்று கலப்பதை உணரமுடியும். உங்களைச் சூழ்ந்துள்ள இயற்கையினதோ அல்லது இறையுணர்வினதோ ஒரு அங்கமாக மாறுங்கள். படைப்பின் ஒரு பகுதியாகுங்கள். பிரபஞ்சத்தின் நாடித்துடிப்புடன் நீங்கள் ஒன்றிணையும் போது உங்கள் தனிப்பட்ட அகங்காரங்கள் அனைத்தையும் மறந்து விடுங்கள். இப்பிரபஞ்சத்தின் ஒரு பகுதியாக இணைந்திருப்பதை மட்டும் உணருங்கள். சற்று நேரத்தில் நீங்கள் கனமில்லாமலும் நுட்பமாகவும் உணரக்கூடும். சில வேளைகளில் சில கட்டங்களில் ஆத்மாவைப் போல் சுதந்திரமாக முன்பின் தெரியாத ஒரு உலகில் உலவித்திரிவதைப் போல் நீங்கள் உணரக்கூடும். தொடர்ந்து முயலுங்கள். இரண்டறக் கலந்த அந்த உணர்வைத் தக்கவைத்துக் கொள்ளுங்கள். விரைவில் நீங்கள் படைப்புகள் அனைத்தினதும் ஒரு பகுதியாக உணர்வீர்கள். இன்னும் ஆழமாகச் செல்லுங்கள். அவ்வப்போது இறையவனின் ஆத்மா உங்களது அடிப்படைத் தளத்தினூடாகப் பாய்வதற்கு அனுமதியுங்கள். ஒவ்வொரு நாளும் பதினைந்து அல்லது இருபது நிமிடங்கள் இந்த விதம் அமைதியாக இருங்கள். இவ்வாறு இறைவனை அவன் விரும்பியவாறு உங்களுடன் உரையாட அனுமதியுங்கள்.
"இப்பப் பிரார்த்தனையைப் பற்றிப் பார்ப்போம். இது தியானத்துக்கு முற்றிலும் மாறுபட்டதாகும். பிரார்த்தனையானது இறைவனின் இருதயத்தைத் தொடுவதற்குரிய ஒரு முனைப்புள்ள செய்கையாகும். உங்களின் எண்ணங்களின் அடிப்படையையும் நோக்கங்களின் அடிப்படையையும் கண்டுபிடித்து இந்த வகை முயற்சிக்கு உங்களைத் தயார்படுத்துங்கள். அப்பொழுது தான் நாம் தூய கரங்களுடன் இறைவனை அணுகலாம். நல்லதையே நினையுங்கள். நீங்கள் யாருக்காகக் கடவுளின் ஆசி வேண்டிப் பிரார்த்திக்கிறீர்களோ கடவுள் நிச்சயமாக அங்கே நிற்பார். இறைவனின் எல்லையற்ற முழுமையின் ஒரு பாகமாவதற்கு முயலுங்கள். எவ்வாறு இறைவனின் ஆசியானது உங்களுக்கு அனாயாசமாக வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறதோ அவ்வாறே வழங்கும் படி அவனை வேண்டுங்கள். அது தான் நம்பிக்கை. உங்களை அவன் படைத்ததன் நோக்கத்தை அறிய முயலுங்கள். அவனது முன்னிலையை உணருங்கள். பின்னர் நீங்கள் எதனை இறைவனிடம் யாசிக்கிறீர்களோ அது சுயநலமற்ற நல்ல நோக்கத்துக்காக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். மற்றவருக்குத் துன்பத்தைக் கொடுக்கக் கூடிய விதமாகவோ அல்லது உங்கள் போட்டியாளர்கள், நண்பர்களிலும் பார்க்க மேலே வரவேண்டுமென்றோ செய்யப்படும் பிரார்த்தனைகளால் எதுவித பயனுமில்லை என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். உங்களது விருப்பங்களிலும் பார்க்க இறைவனின் விருப்பப்படி நடக்க வேண்டுமென்று வேண்டுங்கள். உங்களது பிரார்த்தனை உடனே பயனைளிக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பது போலப் பிரார்த்தியுங்கள். இவ் வழிமுறைகளை நீங்கள் கைக் கொள்வீர்களேயானால் எந்தப் பிரச்சினையையும் நீங்கள் எதிர்கொள்ளலாம். இங்கே நாம் இறைவனின் அன்பை எவ்வளவு சக்தியுடன் உணர்கிறோமோ அதே அளவு சக்தியுடன் அவனின் முன்னிலையையும்  உணர்கிறோம். எனவே இறைவனை வணங்கவோ பிரார்த்திக்கவோ மறுப்பவர்களை விட ஏனைய அனைவருமே முன்னேறிக் கொண்டிருக்கும் எங்கள் உணர்வுகளின் மூலம் இறைவனுடன் பல தடவைகள் ஒன்றாக இருந்திருக்கிறோம். சிலர் உயரிய உணர்வு நிலைகளுக்குச் செல்வார்கள். அவர்கள் மீண்டும் பிறப்பெடுக்க மாட்டார்கள். லிலி (Lily) அதனைப் பற்றிச் சொல்ல வருகிறார்." 
அதன் பின்னர் லிலி ரைப்றைட்டரை ஆட்கொண்டார். அவர் பின்வருமாறு எழுதினார்:- "ஆத்மாவானது இறைவனின் இதயத்தை அடைய முயற்சிக்கையில் அந்த ஆத்மாவானது உள்ளத்தால் முழுமையாகச் சரணடைந்து விடுவதால் அவர் எண்ண முன்பே தான் உயர்த்தப்படுவதாக அவர் உணர்வார். பேரானந்தப் பெரு வெள்ளத்தில் திளைத்துத் தளைகள் ஏதுமற்று உயரப்பறப்பதாக உணர்வார். அந்தக் கிளர்ச்சியானது அவ்வளவு பிரமாண்டமாக இருப்பதால் அந்த ஆத்மாவானது தன்னைத் தூய ஆத்மநிலைக்குப் பறி கொடுப்பதால் பூவுலக இன்பங்களொன்றும் அவரை வசீகரிக்காது. அதனால் அவ்வாத்மா பூவுலகுக்குத் திரும்புவதிலும் பார்க்க இங்கே முன்னேறவே விரும்பும். அதற்குப் பிரார்த்தனையும் தியானமும் வழி வகுக்கும். நான் அந்த வகை அத்வைதக் கிளர்ச்சியை அனுபவித்ததால் பௌதீக உடலெடுக்க மாட்டேன். ஏனெனில் உடலெடுப்பதன் மூலம் அந்த மெய்மறந்த இன்பத்தை இழக்க நான் விரும்பவில்லை. உயர்வான உணர்வு நிலைகளில் நாம் எம்மை மறந்த தூய ஆத்மாவாகும். அந்த நிலையில் இறையுணர்வை நாம் வணங்குகிறோம். நாம் இறைவனைப் பார்க்கா விட்டாலும் சில நேரங்களில் அவனது ஒளிக்கு ஏற்ப இசைவாக்கமடைகிறோம்.
"நான் இப்போ சொல்லும் நிலை தான் முடிவான நிலையென்றில்லை. இது ஆத்மீகப்பாதையின் ஒரு படிக்கல்லாகும். நாம் அந்த ஒளியின் முன்னிலையில் நடக்கையில் பிரபஞ்ச ரகசியத்தின் தூய்மையான பிரகாசத்தைச் சிறிது காலத்துக்கு அனுபவிக்கிறோம். நாம் நிரந்தரமாக அந்தப் பிரகாசத்திலேயே தங்கி விடமாட்டோம். ஏனெனில் நாம் அவ்வளவு பூரணத்துவம் பெறவில்லை. எனவே நாம் பிறப்பெடுப்பதிலும் பார்க்க ஆத்மீக முன்னேற்றத்துக்காகச் செய்வதற்கு ஏற்றுக் கொண்ட கடமைகளுக்குத் திரும்புவோம். அதனால் தான் நீண்ட நாட்கள் மௌனத்துக்குப் பிறகும் ஃபோர்ட் இங்கே வந்த பிற்பாடு, நீ உனது கரங்களைத் தட்டச்சுப்பொறியில் வைக்கையில் நான் இங்கிருந்தேன். இது நான் விரும்பி ஏற்றுக் கொண்ட பணி என்பதாலேயே நான் இங்கே இன்னமும் இருக்கிறேன். எனவே நீ அடிக்கடி செய்வது போல் இப்பணியில் விருப்பம் குறைந்து நிற்பாட்டும் போது நான் வேறு பணிகளுக்குச் சென்று விடுவேன். ஆனால் தேவையேற்படின் நான் இங்கிருப்பேன். 
எனது பொறுப்பில்லாத் தனத்தைச் சுட்டிக்காட்டி எனை வெட்கப்படும் படி செய்வது லிலியின் வழக்கமாகும். இதுவுமும் அதற்கு விதி விலக்கல்ல.
பூவுலகிலிருக்கையிலேயே மேலுலகில் தொடரப்போகும் வாழ்வுக்குத் தங்களைத் தயார் செய்பவர்களைப் பற்றிப் புகழ்ந்து பேசுவதற்கு ஒருநாளும் ஃபோர்ட் பின் தங்கியதில்லை. ஒருநாள் அவர் பின்வருமாறு எழுதினார்: "இன்று காலை சமீபத்தில் பூவுலகில் இறந்த ஒருவரைப் பற்றிப் பாப்போம். அவர் திடீரென்று தான் மேலுலகில் நிற்பதை முழுமையான விழிப்புணர்வுடன் கண்டு கொண்டார். அவர் சிந்தனை நிறைந்த புத்தகங்களை வாசித்ததன் மூலமும் சத்சங்கங்கள் மூலமும் தியானமிருப்பதன் மூலமும் இறைவனின் எண்ணத்தைப் பூர்த்தி செய்வதற்கும் ஏனையோருக்கு வழிகாட்டவும் பழகியிருந்தார். அதனால் அவர் இங்கே தனது சூட்சும சரீரத்தில் கால் வைக்கையில் ஒரு கணமேனும் தவறவில்லை. அங்கிருக்கையில் இருந்தது போலவே இங்கேயும் நம்பிக்கை அளிக்கப்பட்டார். ஏனெனில் அவருக்கு நம்பிக்கையும் புரிந்துணர்வும் ஏனையோரில் சகிப்புத்தன்மையும் இருந்தது. அவர் தனது நண்பர்கள், உறவினர்களுக்கு வணக்கத்தைத் தெரிவித்த பின், இப்பிரபஞ்சத்தின் பேரலைகள் அவரை மெய்மறந்த இன்பத்திலாழ்த்த அவர் அமைதியாகத் தியானத்தில் ஆழ்ந்தார். உடனேயே அவர் யார் யாருக்கெல்லாம் உதவிகள் வேண்டுமோ அவர்களையெல்லாம் தேடிச் சென்றார். அதாவது புதிதாக இறப்பெனும் மாயத் திரையைக் கடந்து வந்த, ஆனால் குழப்பத்திலுள்ள ஆத்மாக்களையும் துயில்கின்ற ஆத்மாக்களையும் தேடிச்சென்றார். அம்மனிதர் ஒரு கணமேனும் தான் நீத்த உடலைப் பற்றி வருந்தவில்லை. ஏனெனில் தனது அன்புக்குப் பாத்திரமானவர்களை அவர்கள் இங்கே வருகையில் தான் மீண்டும் பார்க்க இயலுமென்பது அவருக்குத் தெரியும். அத்துடன் அவரால் இயன்றவரையும் தனது விவகாரங்களைத் தான் முடித்து விட்டு வந்ததும் அவருக்குத் தெரியும். வேறு விதமாகக் கூறினால், 'அவர் கதவைத் தாண்டி வெளியில் செல்ல முன்னமே அவரது புத்தகங்கள் வரிசைப் படுத்தப்பட்டு விட்டன' எனலாம். எனவே அவரது முன்னேற்றமானது தொடர்ந்து மேல் நோக்கியே இருக்கும். வியக்கத்தக்க விதத்தில் இங்கே இப்படிப் பலருள்ளனர். எல்லோருக்கும் இங்கே எப்படியிருக்குமென்று துல்லியமாகத் தெரியாவிடினும், அவர்கள் கடவுள் 'இங்கே' எதையெதையெல்லாம் வழங்குகிறாரோ அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ளத் தயாராக வருகிறார்கள். அத்துடன் குறிப்பாக இங்கே ஏராளமான வேலைகள் செய்யக் கூடிய விதமாக இருப்பதை அறியும் போது அவர்கள் மிகவும் மகிழ்கிறார்கள். யார் தான் தங்களது வாழ்நாள் முழுவதையும் யாழை மீட்டிக் கொண்டும் முகிலின் மேல் சவாரி செய்து கொண்டும் இருக்க விரும்புவார்கள்? இங்கே எவருமே செவிடர்கள் கிடையாது. அத்துடன் பிரபஞ்சத்துடன் இணைந்து போனால் எவரும் மனதுக்கிசைவான இசையை உருவாக்கலாம்.
"நான் சொல்லும் இக்குறிப்பிட்ட மனிதர் வேகமாக முன்னேறுவதால் கூடிய விரைவில் அவருக்கு மீண்டுமொரு பிறவி எடுக்கவோ அல்லது உயர்வான நிலைகளுக்கு முன்னேறுவதற்கோ சந்தர்ப்பம் அளிக்கப்படும். அவர் உடனடியாகப் பிறவியெடுப்பது அவ்வளவு சாத்தியமில்லை. ஏனெனில் அவர் குறிப்பிடத்தக்க விதத்தில் எந்த ஒரு விஷயத்தையும் அரைகுறையாக விட்டுவிட்டு வரவில்லை. அத்துடன் அவர் ஒரு ஒழுக்கமான, தயையுள்ள, ஒருவருக்கும் வேண்டுமென்றே தீங்கிழைக்காத ஒருவராக இருந்திருக்கிறார். எனவே அவர் அடுத்தகட்ட நிலைக்கு முன்னேற்றமடைவதற்கு உதவுக்கூடிய ஆசிரியர்களுடன் சேர்ந்து பிரத்தியேகமான வேலைகள் செய்வார். பூவுலக பந்தங்களிலிருந்து ஒருவர் விடுபட்டு அடுத்த கட்டத்துக்கான உயர்வான படிகளுக்குத் தயாராவதற்காக அவர்களின் அலையதிர்வு மாற்றத்தின் ஆரம்ப கட்டங்களின் போது அவர்கள் வழி காட்டுவார்கள். ஒருவர் இப்படிச் செய்வதற்கான உரிமையை ஈட்டிய பிற்பாடே அவர் தனது அதிர்வுத் தளத்தைப் போதுமான அளவுக்கு, அதாவது அடுக்கு மண்டலத்துக்கு (stratosphere) ஏற்ற அளவுக்கு உயர்த்தலாம். எம்மால் அவர்களைச் சில சமயங்களில் பார்க்க முடிவதை விட அவர்களால் எங்களைத் தெளிவாகப் பார்க்க முடியும். என்றாலும் அவர்களும் இங்கே தான் இருக்கிறார்கள் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். அவர்களின் அதிர்வுகள் (vibrations) அவர்களை எங்களின் பார்வை மண்டலத்திலிருந்தும் கேள்வி மண்டலத்திலிருந்தும் அதிகமாக விலக்கி வைத்திருக்கும் (உங்களின் பார்வை, கேள்வி மண்டலங்களில் இருந்து எம்மை எமது அதிர்வுகள் விலக்கி வைத்திருப்பதைப் போல). அவர்களில் கூடுதலாக முன்னேற்றம் அடைந்தவர்கள் பிரத்தியேகக் காரணங்களுக்காகத் தேவையேற்படின் அவர்களை எங்களுக்குத் தெரியுமாறு செய்ய இயலும். உதாரணமாக லிலி வடிவமும் வஸ்துவும் கொண்ட சூக்கும சரீரத்திலும் பார்க்கக் கூடுதலாகப் பிரகாசமுள்ள ஒரு வெண்ணொளியாகத் தான் என் முன் தோன்றுவார். ஆனால் அவரது ஆளுமையானது அவர் பௌதீக உடலுடனிருக்கையில் இருந்ததைப் போலவே கதிர் வீசும். நான் முன்னர் பல தடவைகள் இந்த அடுத்த கட்டத்துக்குப் போய் அங்கே எவையெல்லாம் இன்றியமையாதென நான் உணர்ந்தேனோ அவற்றையெல்லாம் அங்கே கற்றறிந்த பிற்பாடு நான் கற்றவற்றை எல்லாம் செயல்படுத்திப் பார்க்கும் பொருட்டு நானாகவே விரும்பிப் பௌதீக உலகில் பிறந்தேன் என்பதை லிலி எனக்குச் சொல்லியிருக்கிறார். நானும் இந்த விதமாகத்தான் ஆர்தர் ஃபோர்டாக இந்தக் கடைசித் தடவை போய் வந்தது. முகாமில் பெயர்ப் பட்டியல்களை நித்திரையில் பார்த்து ஏன் திடுக்குற்று விழித்தேனென்று இப்பொழுது தெரிகிறது. ஏனென்றால் நான் இங்கே உயர்நிலையில் இருக்கையில் பிரபஞ்சத்தில் எங்கே என்ன நடந்தாலும் எனக்குத் தெரியவருமாறு ஒரு தகவல்களைப் பெறும் ஸ்தானத்தைப் போல என்னைப் பயிற்சிப் படுத்திக் கொண்டிருந்தேன். அந்த அடுத்த நிலையானது எனக்குத் தெளிவற்ற முறையில் நினைவிலுள்ளது. இந்த எங்களது திட்டமானது நிறைவேற்றப்பட்ட பின் மீண்டும் அந்த நிலைக்குச் சென்று வர ஆர்வமாகவுள்ளேன்.
அடுத்ததாக எதிர்மறையாக சமய நம்பிக்கைகள் ஏதுமற்ற ஒருவரைப் பற்றி ஆர்தர் சொன்னார்: "அவர் இறக்கையில் அது தான் அனைத்து விடயங்களினதும் இறுதி முடிவாக இருக்குமென எதிர்பார்த்தார். ஆனால் அதற்குப் பதிலாகச் சில நாட்களின் பின் இப்பக்கத்தில்  அசையத் தொடங்கி உயிர் வாழ்க்கையின் அறிகுறிகளைக் காட்டத் தொடங்கினார். அவர் படிப்படியாகக் கண்களைத் திறந்து செயற்பாடுகளைக் கவனிக்கத் தொடங்கினார். அவரால் ஒன்றையும் நம்பமுடியவில்லை. ஏனென்றால் தான் இறந்தது அவருக்கு நன்றாகத் தெரியும். கழுத்துத் திருகப்பட்ட கோழியின் கடைசி நேரப் படபடப்புப் போல இது ஒரு கெட்ட கனவாக இருக்குமென நினைத்தார். இந்த மாயத் தோற்றத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அவர் போராடினார். ஆனால் அதற்குப் பதிலாக அவரது பெயரைச் சொல்லி அழைத்த சிலரை அவர் கண்டார். அவர்களோ அவர் முதலில் பூதவுடலுடன் இருக்கையில் அவருக்குப் பரீட்சயமானவர்கள் என்பதையும் கவனித்தார். அவர் சங்கடப்பட்டு நெளிந்தார்; ஆட்சேபித்தார்; இறுதியில் அதற்கு விளக்கம் கோரினார். அதற்கு அவரது பழைய சிநேகிதர்கள் புன்னகை புரிந்து கொண்டு, "சார்லி, முதலிலேயே உனக்கு நாங்கள் இறப்பின் பின்னும் தொடர்ந்து இருந்து கொண்டே இருப்போமெனச் சொல்வதற்கு முயற்சித்தோம். ஆனால் அதை நீ கவனிக்கவில்லை" என்றனர். அவர் மீண்டும் சங்கடப்பட்டு நெளிந்தார். அடித்துக் கொண்டார். இந்தப் புதிய பிரக்ஞை நிலையிலும் அவர் தான் தவறாக எண்ணி விட்டதாக நிரூபணம் ஆவதை விரும்பவில்லை. பூவுலகிலிருக்கையில் அவர் மனதைப் பூட்டியே வைத்திருந்தார். எப்பொழுதும் அவர் சொல்வது சரியாகவே இருக்கும். இறப்பின் பின் வாழ்வு தொடரும் என்று நம்புபவர்கள் எவராகவிருந்தாலும் அவர்களுக்குப் பித்துப் பிடித்து விட்டதென்று நிராகரித்து விடுவார். அவர் அந்தக் காட்சிகளையும் ஒலிகளையும் தன் பார்வையிலிருந்தும் செவிப்புலனிலிருந்தும் மூடி விட முனைந்தார். ஆனால் சற்று நேரத்தில் பார்த்த போது அந்தக் காட்சி மாறிக் காணப்பட்டது. அழகான மரங்கள், மலர்கள், அன்பான மனிதர்களுக்குப் பதிலாக அவர் ஒரு ஆழமான, இருண்ட, முடிவற்ற, பயங்கரப் பிளவைக் கண்டார். அவர் பயந்து பின்வாங்கினார்.
"அந்தப் பிளவு அகன்றது. தான் அதற்குள் கீழே கீழே விழுந்து கொண்டு போவதைப் போல உணர்ந்தார். உதவி கேட்டுக் கூச்சலிட்டார். ஆனால் ஒரு நண்பர்களும் அவரது பயத்தினைப் போக்குவதற்கு அருகிலில்லை. அவர் விழுந்து கொண்டேயிருந்தார். அல்லது அவர் அப்படி உணர்ந்தார். பழைய காலத்துப் போதகர்கள் எச்சரித்ததைப் போல இது தான் நரகத்துக்குப் போகும் வழியா? அவர் சட சடவென்று விழுந்து கொண்டே போனார். அவர் மன வேதனையுற்றார். உடலுடன் இருக்கையில் தான் நம்பிக்கை அற்றவராக இருந்ததை மென்மையாகச் சுட்டிக் காட்டிய நட்பான மனிதர்களெல்லாம் எங்கே? ஏன் அவர்கள் இப்போ உதவுகிறார்கள் இல்லை. ஆனால் பூதவுடலுடனிருக்கையில் நம்பிக்கை உள்ளவர்களை விலக்கி வைத்ததைப் போல அவர் தனது நம்பிக்கை இன்மையால் அவர்களை எல்லாம் துரத்தி விட்டார். கடைசியில் மீண்டும் அந்த ஆதரவான நண்பர்கள் தன்னருகில் இருந்தால் நல்லதென எண்ணினார். அவர்கள் கூறிய அந்த அனைத்து ஆத்மாக்களுக்காகவும் காத்திருக்கும் நித்திய நிலையினைப் பற்றி அறிய விரும்பினார். அந்தப் படுகுழியில் விழுந்து கொண்டே இருக்கையில் அவர் அவர்களுக்காக ஏங்கினார். அவரது விருப்பமானது எவ்வளவு சீக்கிரத்தில் வெளிப்படுத்தப்பட்டதோ அவ்வளவு சீக்கிரத்தில் அவர்கள் மீண்டும் அவருடன் புல்வெளியில் நின்றனர். அவர் தானாகவே இறைவனுக்கு நன்றி செலுத்தினார். அந்தப் படுகுழி மறைந்து விட்டிருந்தது. அத்துடன் அவரும் இப்போ தனியே விடப்படவில்லை. விருப்பமானது செய்கையைப் போல திண்ணமானதென்று நண்பர்கள் உத்தரவாதம் அளித்தனர். எண்ணமானது செய்கைக்குச் சமமானதாகும். ஆறுதல் தரும் நண்பர்களுக்காக ஆசைப்பட்டதுடன் முடிவற்ற வாழ்வைப் பற்றி மேலுமறிய ஆசைப்பட்டதனால் அவர் அவர்களது முன்னிலையை எண்ண வடிவினூடாக உருவாக்கி இருக்கிறார். அவர் அவர்களது வழிமுறைகளை ஆவலுடன் கேட்டுக் கொண்டார். அடிப்படையில் அவர் நல்ல எண்ணங்கள் கொண்ட ஒரு நல்ல மனிதரென்பதால் அவர் மனதைப் பூட்டி வைத்திருந்தாலும் கூட இங்கு ஞானத்தைப் போதிக்கும் பாடசாலைகளில் சேர்த்துக் கொள்ளப்படுவார். கூடிய விரைவில் ஏனைய நம்பிக்கையற்றவர்கள் ஆத்ம உலகில் விழிப்படைகையில் அவர்களுக்கு உதவுவதற்குத் தானே முன்வருவார்".
மற்றுமொரு முறை ஃபோர்ட் எந்த நம்பிக்கையும் அற்றவர்களைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்கையில் பின்வருமாறு சொன்னார்: "வாசலின் இந்தப் பக்கத்திலே தாங்கள் இருப்பதைக் கண்ணுறும் அப்படிப்பட்ட ஆத்மாக்கள் இப்படியோர் இடமேயில்லை என எண்ணுவதால் அதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். மற்றவர்கள் அந்த மந்த நிலையிலிருந்து அவரை எழுப்ப முயன்றால் அவர் அவர்களைத் தங்களின் சொந்தக் கற்பனை என எண்ணி விரோதத்துடன் பார்ப்பார்கள். சொர்க்கமோ நரகமோ என்று ஒன்றும் இல்லாததால் உடல் இறந்த பின்னர் தண்டனைகளோ வெகுமதிகளோ ஒன்றுமில்லை என எண்ணியதால் தனது ஆத்மாவும் உடலுடன் அழிந்து விடுமென நினைப்பார்கள். இந்த 'மாயத்தோற்றங்கள்' என நினைப்பவை விலகிச் செல்லும் வரை பல காலத்துக்கு இப்படிப்பட்ட ஆத்மா மயக்க நிலையில் இருக்கக் கூடும். சாடைமாடையாகத் தன்னைச் சுற்றிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தொழிற் பாடுகளை அவர் உணரக்கூடுமெனினும், அவரைப் பொறுத்தவரை அவை உண்மையாக நடைபெறவில்லை. சில வேளைகளில் தான் உயிருடன் இருப்பதை ஆத்ம மனம் ஏற்றுக்கொள்ள இயலாத ஒரே காரணத்தினால் அப்படிப்பட்ட ஆத்மா பலப்பல ஆண்டுகளை இப்படி வீணாக்கக்கூடும். ஆனால் பெரும்பாலும் ஆத்மாவானது பூதவுடலின் அந்த அடம் பிடிக்கும் மனதின் பிடியைக் களைந்தெறிந்து விட்டு இதுதான் உண்மை நிலையெனப் புரிந்து கொண்டு விழித்தெழும். மாயையான அந்தப் பௌதீக நிலையிலிருந்து தான் இப்போ விடுபட்டு வந்து விட்டதாக உணரும். அந்த மாய உலகமானது, உண்மையான செழிப்பு நிறைந்த இந்த ஆத்ம உலகின் ஒரு நிழல் வடிவமே என உணரும். சில நேரங்களில் இந்த விதமாக நேர்மையான ஐயப்பாடுடையவர்கள், நல்லவர்கள் ஆனால் பிடிவாதத்துடன் வாழ்வின் ஆத்மீக அம்சத்தைப் பொறுத்த வரையில் மனதை மூடி வைத்திருப்பவர்கள், இங்கே வந்து தங்களது கண்களை மறைக்கும் மாயத்திரை விலகிய பின் வெகு விரைவாகக் கற்றறிவார்கள். அவர்கள் தாங்கள் இழந்த நேரத்தை ஈடு செய்வதற்காக மிக ஆவலுடன் கல்வி கற்கும் பாடசாலைகளில் முழு மனதாக மூழ்கிப் போவார்கள். அத்துடன் என்றும் அழியாத வாழ்வைப் பற்றி ஆவலுடன் ஆசிரியர்களைக் கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருப்பார்கள். ஆனால் ஆணவம் சூழ்ந்துள்ளவர்களின் மனங்கள் உருக்கிரும்பால் ஆன பொறி போன்றன. அவர்கள் விரைவில் குணமடைய மாட்டார்கள். அவர்கள் அரைத்தூக்க நிலையில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளைக் கழிப்பார்கள். இங்கே பலர் அப்படியுள்ளனர். அவர்கள் மிகவும் பரிதாபத்துக்கு உரியவர்களாகும்".
பூதவுடலுடன் இருக்கையில் என்றும் நிலையான வாழ்வைப் பற்றி  ஒரு அக்கறையுமில்லாத ஏனையவர்கள் பலரைப் பற்றி ஆர்தர் சொன்னார். அவர்கள் ஆத்ம உலகில் பாடசாலைகள் உள்ளன என்ற எண்ணத்தையே மறுப்பவர்களாகும். அதனால் உலகின் பல பாகங்களுக்கும் அலைந்து திரிந்து மற்றையவர்களை வெற்று சம்பாஷணைகளில் ஈடுபட வைப்பார்கள். அப்படிப்பட்ட நபர் அல்லது ஆத்மாவானது இலட்சியம் ஏதுமற்றது. மந்த கதியில் உள்ளது. முன்னேற்றத்துக்கு எந்த விதமான முயற்சியும் எடுக்காதது. அத்துடன் ஃபோர்ட் பின்வருமாறு எழுதினார்: "அவர் ஆத்மீக முன்னேற்றத்துக்கு முயற்சிக்கும் நோக்கத்துடனோ அன்றியோ மீண்டும் பிறப்பெடுக்கலாம். ஆனால் அவர் ஆத்மீக முன்னேற்றத்துக்கு முயலாவிடின் ஓடு பொறியில் (treadmill) மாட்டிக் கொண்டதைப் போல மீண்டும் மீண்டும் மீண்டும் ஒரு நோக்கமும் இல்லாமல் பிறப்பெடுத்துக் கொண்டேயிருப்பார். ஏனெனில் அவர் தனது இதயத்தையும் மனதையும் ஆத்மாவையும் ஆத்ம உலகின் இயல்புகளுக்கும் என்றும் சாஸ்வதமான வாழ்வின் நிஜங்களுக்கும் தயாராகத் திறப்பதற்கு எந்த விதமான விருப்பத்தையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை".
இறப்பின் பின்பும் சுறுசுறுப்பான, வேலை செய்யக் கூடிய உலகம் உள்ளது என்ற எண்ணத்தை  விரும்பாதவர்களுக்கு ஃபோர்ட் ஒரு மாற்று வழியைச் சொன்னார். நாம் விரும்பின் சும்மா வீண் பொழுதும் போக்கலாம் - அழிவுப் பாதையை நோக்கி. கொலையாளிகள், தற்கொலை செய்தவர்கள், சித்ரவதை செய்தவர்கள், திருடர்கள் போன்றோரின் நிலை என்னவென்று ஆர்தரை நான் கேட்டேன். அதற்கு அவர் தொடர்ந்து வந்த சில நாட்கள் பின்வருமாறு எழுதினார்:
"இன்னொரு உயிரைத் தன் சொந்த லாபத்துக்காகவோ, திருப்திக்காகவோ வேண்டுமென்றே கொலை செய்யும் கொலைகாரனைப் பற்றிப் பார்ப்போம். இது அருவருக்கத்தக்க விஷயமாகும். இவர்கள் பெரு வெறுப்புகளும் பழிவாங்கும் உணர்வுகளும் கொண்டுள்ளவர்கள். அப்படிப்பட்ட ஒருவர் இறப்பெனும் திரையைத் தாண்டி இங்கு வரும் போது ஒன்றையுமே எதிர்பார்க்க மாட்டார். எனவே பொதுவாக நீண்ட நாட்களுக்கு அவருக்கு அதுவே, அதாவது ஒன்றுமேயில்லாத நிலையே தெரியும். ஏதாவது ஒரு விடயம் அவரை எழுப்பும் வரை அவர் இறக்கையில் இருந்த மன நிலையிலேயே சிறிது காலத்துக்கு இருப்பார். அவர் விழிக்கையில் தான் எதிர்பார்த்த நரகமானது அவருக்காகக் காத்திருப்பதை உணர்வார். பேய், பிசாசுகள், பூதங்களைப் பார்க்க மாட்டார். ஆனால் வெறுப்புகளாலும் பேராசை, குரோதம் போன்ற இன்ன பல அழிவுக்கு வழி கோலும் உணர்வுகளாலும் சிதைந்து போன அவரது சொந்த முகத்தைப் போன்ற உருவத் தோற்றங்களையே காண்பார். அவர் அந்தக் காட்சிகளைப் பார்த்துப் பயந்து ஒடுங்கிப் போனார். அவர் தன்னைத் தானே பார்த்ததைப் போல உணர்ந்தார். அவர் தன்னைப் பேய் பிடித்திருப்பதைப் போல உணர்ந்தார். அவரது அடிப்படையான இயல்பைத் தவிர, வேறொருவரின் உதவி இல்லாமலே தன்னைத் தானே அழித்துக் கொண்டிருக்கிறார். அவர் தான் ஒரு முழு வாழ்வுக்கான சந்தர்ப்பத்தை வீணடித்தது மட்டுமன்றி இனி வரும் பிறவிகளின் முன்னோக்கிய வளர்ச்சிகளுக்கும் தான் முட்டுக்கட்டை போட்டிருப்பதை உணர்ந்து திகைத்தார். இந்தக் கடைசிப் பிறவி எடுப்பதற்கு முன் அந்தப் பிறவியில் என்ன செய்வதற்குத் தான் தீர்மானித்திருந்தார் என்பது இப்போ அவருக்கு நினைவுக்கு வரத்தொடங்கியது. அவர் பேராசை, பெரு வெறுப்பு, சலனங்கள் போன்றவற்றை வெல்வதாக உறுதி எடுத்திருந்தார். ஆனால் அதற்குப் பதிலாக அவர் தான் தெரிவு செய்திருந்த சந்தர்ப்பங்களாலேயே தன்னைத் தானே நேருக்கு நேர் சந்தித்திருந்தார். ஞானாலயத்திலோ அன்றி உயர்தரமான கல்வி கற்கும் பாடசாலையிலோ அவர் சேரமாட்டார்.
"இந்த ஆத்மாவானது தான் முற்றிலுமாகத் தொலைந்து விட்டதை உணரும் வரை நீண்ட நெடுநாட்களுக்குக் கடும் வாதையிலிருக்கும். அவர் முழுக்க நம்பிக்கை இழந்து கடைசியில் தன்னைக் காப்பாற்றும் படி ஆண்டவனை நோக்கி அழுவார். அந்த ஓலமானது இறைவனுக்குக் கேட்கும். அவரது வேதனையைத் தணிக்க ஏனைய ஆத்மாக்கள் அனுப்பி வைக்கப்படும். உண்மையிலேயே அவர் ஆத்மீக முன்னேற்றத்துக்கு ஆசைப்படுவாராக இருந்தால் அவர் மிக மிக மிக மெதுவாக முன்னேறத் தொடங்குவார். அதாவது கடவுளால் கொடுக்கப்பட்ட ஒரு உயிரைப் பறித்ததற்குரிய அபராதங்களைப் பற்றி உணரக்கூடிய வரையில் முன்னேறுவார். அவர் போதுமான அளவு திடமாக வந்த பின் யாருடைய உயிரைப் பறித்தாரோ அவரைச் சந்திப்பார். அந்தச் சந்திப்பின் பக்க விளைவானது சொர்க்கத்தில் மணிகளை ஒலிக்கப் போதுமானதாக இருக்கும். அநேகமாக அந்த மற்ற ஆத்மாவானது தனது பூவுலக வாழ்க்கைக் காலத்தை  இடையிலேயே வெட்டி விட்ட, அந்த அழுந்திக் கொண்டிருக்கும் ஆத்மாவை மன்னிக்கக் கூடிய அளவுக்குத் தன்னைத் தானே வெற்றி கொண்டிருக்கும். அந்த மன்னிப்பானது அந்தக் கொலையாளியைப் படிப்படியாக மற்றைய ஆத்மாக்களின் சமூகத்தில் தனது இடத்தை எடுக்கச் செய்யக் கூடிய அளவுக்கு உயர்த்துவதுடன் இறுதியாகப் பாவ விமோசனத்தைப் பற்றிய அறிவைப் பெறவும் உதவும். உங்கள் உலகில் இருப்பதைப் போலவே இங்கும் எந்த ஒரு ஆத்மாவுக்கும் இறையவனுடையதோ அல்லது அவனைப் போலவே இருக்கும் நல்ல ஆத்மாக்களினதோ உதவியேதும்  இல்லாமல் போகாது என்பதை நினைவில் கொள். 'கேளுங்கள் தரப்படும், தேடுங்கள் கிடைக்கும், தட்டுங்கள் உங்களுக்காகத் திறக்கப்படும்.' அது தான் பிரபஞ்ச விதி. கேளுங்கள்; பெறுங்கள்; தட்டுங்கள்; உங்கள் உள்ளக் கதவுகளைத் திறந்து, இப்பிரபஞ்சம் முழுக்க நிரம்பிய அன்பின் கதிர் வீச்சுகளை உங்களினூடாகப் பாய விடுங்கள்."
ஜாக் கென்னடி தனது கொலையாளியாகிய லீ ஹாவே ஒஸ்வோல்டை மேலுலகில் சந்தித்தித்தவரா எனக் கேட்டேன். அதற்கு ஃபோர்ட் பின்வருமாறு எழுதினார்: "ஒஸ்வோல்ட் பற்பல நூற்றாண்டுகளுக்குத் துயிலிலிருந்து விழித்தெழ மாட்டார். கடைசியாக அவர் விழிக்கையில் அவருடைய கடினமான இருதயத்தை இளக வைக்கும் வகையில் அவர் பெரிய குற்ற உணர்ச்சியால் வருந்துவார். ஏனெனில் அவரது குற்றமானது ஒரு காரணமுமற்ற, ஒரு வகை விளக்கமும் கொடுக்க முடியாத மிருகத்தனமான குற்றமாகும். அந்தக் குற்றத்தின் அதிர்ச்சியானது இனி வரும் பல காலங்களுக்குத் தாக்குப் பிடிக்க முடியாத அளவு மிகப் பெரியதாகும். ஜாக் தான் மிகப் பிரமாதமாகத் தொடங்கிய வேலையை முடிக்க முடியாமற் போனதையிட்டு தான் தோற்று விட்டதாக உணர்ந்தாலும், அவருக்குக் காழ்ப்புணர்ச்சி ஒன்றும் இல்லை. பொபி கென்னடி ஸேர்ஹான் ஸேர்ஹான் (Sirhan Sirhan) ஐப் பற்றி என்ன நினைக்கிறார் என்பதையும் கேட்டேன். அதற்குரிய பதிலானது, "ஸேர்ஹான் ஒஸ்வோல்டிலும் பார்க்க மோசமான நிலையிலிருப்பதாக அவர் உணர்கிறார். ஒஸ்வோல்ட் அதிர்ச்சியால் உண்டாகிய துயிலில் சுய உணர்வின்றி இருக்கிறார். ஆனால் ஸேர்ஹானோ அந்த இரத்தக்கறை படிந்த கரங்களுடன் இன்னமும் உயிர் வாழ்கிறார்" என்பதாகும்.
தற்கொலையைப் பற்றிச் சொல்கையில் பூதவுடலுடன் இருக்கையிலேயே பிரச்சனைக்கான காரணத்தைச் சரி செய்வது இறப்பின் மறு பக்கத்தில் சரி செய்வதிலும் பார்க்க மிக மிக இலகுவானதென ஃபோர்ட் வலியுறுத்தினார். அவர் மேலும், "ஒருவர் மனத்தளர்ச்சியின் காரணமாகவோ அன்றி விரக்தியின் காரணமாகவோ தனது உயிரைத் தானே எடுத்திருந்தால் இங்கே அதற்குரிய தீர்வை இலகுவில் கண்டு பிடிக்க முடியாது. ஏனெனில் இறைவனால் ஏற்றி வைக்கப்பட்டதை அணைப்பதற்கு எமக்கு ஒரு உரிமையும் கிடையாது. எமது கர்ம வினைகளைக் கழிப்பதற்கென்று பூதவுடல் எடுக்க எமக்குத் தரப்பட்ட சலுகையை அவ்வளவு எளிதாகத் தள்ளுபடி செய்யவியலாது. ஏனையோர் ஆத்மீக முன்னேற்றத்துக்குத் தங்களது முறைக்காகக் காத்திருக்கிறார்கள். எனவே எம்மைப் படைத்தவனால் எமக்கு வழங்கப்பட்ட உயிரை ஆத்திரத்தில் எடுத்தால் இங்கே அதற்குப் பதில் சொல்லியாக வேண்டும். அத்துடன் முன்னிலும் பார்க்கப் பத்து மடங்கு அதிகரித்திருக்கும் கர்ம வினையைப் போக்குவதற்காகப் பிறவியெடுக்க வேண்டுமெனினும் இப்போ பிறவியெடுக்கும் சந்தர்ப்பம் மேலும் தாமதப்படும்."
பூவுலகில் குழந்தையாய் இருக்கையில் தனது பெற்றோரால் கைவிடப்பட்ட ஒருவர் கடைசியாக அவர்களை ஆத்ம உலகில் முதன் முறையாகச் சந்தித்த விஷயத்தைப் பற்றி ஃபோர்ட் தானாகவே சொல்லத் தொடங்கினார். "என்ன நடந்திருக்கும்?" எனப் பீடிகை போட்டார். தொடர்ந்து, "நன்றாக எண்ணிப் பார்த்தால் உனக்குப் புரியும். ஒன்று கூடலே! ஆத்மீக ரீதியில் சிரிப்பும் கண்ணீரும் தான். ஏன்? ஏனெனில் இந்தப் பக்கத்தில் நாம் இன்னொருவருக்கு எதிராகக் காழ்ப்பு உணர்ச்சிகளைக் கொண்டிருக்க விரும்ப மாட்டோம். அதாவது நாம் ஆத்மீக வழியில் முன்னேறிக் கொண்டிருக்கையில் அதற்குரிய விதிமுறைகளின் படி அது சாத்தியமற்றது. பச்சாதாபம்? சுயநிந்தனை? தவிர்ப்பது நல்லது. ஆத்மீக முன்னேற்றத்துக்கு இவையெல்லாம் தடைக்கற்களே. நாம் பூவுலகில் விட்ட தவறுகளைத் திருத்துவதற்காக எம்மை நாமே பூவுலகில் சந்திக்கப் போகும் அந்தத் தருணத்துக்காக (அடுத்த பிறவிக்காக) அவற்றை ஒதுக்கி வையுங்கள். ஆனால் ஆத்மீகத் தளத்தில் இப்படிப்பட்ட உணர்வுகளை ஆத்மீக முன்னேற்றத்தை நலிவுற வைக்காமல் வளர்க்க இயலாது.
"நாம் வேறொரு கோணத்தில் பார்ப்போம். சிறை முகாமிலோ அல்லது போர்க் களத்திலோ ஒரு மனிதன் இன்னொரு மனிதனால் சித்திரவதை செய்யப்பட்டான் என்று வைத்துக் கொள்வோம். இறுதியாக இந்தப் பக்கத்தில் இருவரும் ஒருவரையொருவர் சந்திக்கிறார்களெனின் என்ன நடக்கும்? உதாரணத்துக்கு, அவர்களுக்கிடையில் இருவரையும் ஒருவரையொருவர் நெருங்க வைக்கக் கூடிய விதத்தில் ஏதாவது பொதுவான எண்ண அலைகள் இல்லையெனில், அதாவது இருவரும் வெவ்வெறு அலை நீளங்களில் இருந்தால் அவர்கள் இங்கே சந்திப்பதற்கான சாத்தியம் மிக மிகக் குறைவே. ஆனால் ஒருவேளை இருவரும் ஒரே இயல்புடைய தளத்திற்கு ஈர்க்கப்படக் கூடிய விதத்தில் போதுமான அளவு ஒரே விருப்பங்கள், ஆர்வங்களிருந்து இருவரும் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள் என்று வைத்துக்கொள். ஒருவர் மற்றவரை மன்னிப்பாரா? அல்லது மற்றவர் தன்னைத் தானே கடிந்து கொண்டு மன்னிப்பு வேண்டுவாரா? ஒரு நாளுமில்லை. அது பூவுலகத் தளத்தின் செயற்பாடாகும். ஆனால் இங்கே அவர்களிருவரும், யார் சித்திரவதையைச் செய்தாரோ அவர் பூவுலகில் தானே அந்தச் சித்திரவதையை அனுபவிப்பதன் மூலம் அதை ஒரு கட்டத்தில் ஈடு செய்வாரென்பதை எளிதாக ஏற்றுக் கொள்வார்கள். மற்றவர், அதாவது சித்திரவதையை அனுபவித்தவர் தனது கடந்த காலச் செய்கை ஒன்றுக்கு உரிய கடனை இப்படிப் பட்ட சித்திரவதையை அனுபவித்ததன் மூலம் ஒரு வழியில் அடைத்து விட்டதாகவும், அந்தக் குற்றம் எழுதப்பட்ட எழுது பலகையானது இப்போ சுத்தம் செய்யப்பட்டு விட்டதென (slate is clean) உணர்வார். இங்கே ஆத்ம உலகில் சுயநிந்தையிலும், மற்றைய ஆத்மாக்களைப் பழிவாங்கும் எண்ணங்களிலும் நாம் நேரத்தை வீணடிக்க மாட்டோம். உண்மை, சில இன்னும் உலகியல் வாழ்வில் முழுவதுமாகச் சிக்குண்டு, பூவுலகிலிருக்கும் தனது எதிரியென்று சொல்லப்படுபவரின் மேல் பழி வாங்கும் ஆத்மாக்களும் உள்ளன. அத்துடன் ஒரு வேளை அவர் பூதவுடலுடன் இருக்கையில் பழி வாங்குவதாகச் சபதம் எடுத்திருந்தால், அவர் அந்த மனிதனுடனேயே திரிந்து, பழி வாங்குவதாகச் சூளுரைத்து, அந்த மனிதனுக்கு எதிராகத் தனது ஆசையைப் பூர்த்தி செய்வதற்கான சந்தர்ப்பங்களைத் தேடிக் கொண்டிருப்பார். சிலர் இதனைப் பேய் பிடித்திருக்கிறது என்பர். அப்படிச் செய்வது சிறு பிள்ளைத்தனமானது, முதிர்ச்சியற்றது, முற்றிலும் பிழையானது. ஏனென்றால் இங்கே எமக்கு மேன்மையான அறிவைப் பெறக்கூடியதாக உள்ளது. அப்படியிருக்கப் பழி வாங்கும் ஆத்மாவானது பூவுலகிலிருக்கும் பாவப்பட்ட சாத்தனுடைய கணக்கைத் தீர்க்குமுகமாக இங்கிருக்கக் கூடியதான அறிவு விருந்தை அலட்சியம் செய்கிறது. அது கேலிக்கிடமானது. அப்படிப்பட்ட ஆத்மாவானது தனது ஆத்மீக வளர்ச்சியை பல்லாயிரக்கணக்கான நாட்களோ அன்றி வருடங்களோ தாமதம் செய்கிறது. அதாவது இங்கே எது சரி எது பிழையென மிகத் தெளிவாக அறிய இயலுமாக இருப்பதால் பூவுலகில் செய்யப்படும் கொலையிலும் பார்க்க மேலுலகில் தொடரும் பழிக்குப் பழி முயற்சியானது மிக மோசமானது என்பதை அவர் உணரும் வரை அது தாமதப்படும்".
சேரிப்பகுதி ஒன்றில் வசித்த ஒருவரைப் பற்றிய ஃபோர்டின் உரையாடல் எனக்குக் குறிப்பாகப் பிடித்திருந்தது. அவர் பின்வருமாறு எழுதினார்: "ஒரு பூரணமான வாழ்க்கை வாழ விரும்பி அப்படியே முடிவு செய்த ஒரு ஆத்மாவைப் பற்றி இப்பொழுது நாம் பார்ப்போம். ஆனால் சேரிச் சூழலில் பல விதமான தூண்டுதல்களால் உந்தப்பட்டு அவர் தவறிழைத்தார். வறுமை, பசி, குளிர், அத்துடன் அன்பு செலுத்த ஒருவருமே இல்லாத நிலையில் அவர் பசியைப் போக்கவும் குளிரைப் போக்கவும் திருடினார். அவர் இறக்கும் தறுவாயில் தனது பாவங்களுக்காகப் பச்சாதாபப் பட்டார். மற்றவர்களுக்கு இழைத்த நஷ்டங்களுக்கு ஈடு செய்ய அவரால் முடியவில்லை. எனவே அவர் இந்தப் பக்கத்துக்கு வருகையில் வீணாகிப் போய் விட்டதாக நினைத்த அந்த வாழ்வுக்காக முழுக்க முழுக்கப் பச்சாதாபப்பட்டுக் கொண்டு வந்தார். ஆனால் உண்மையிலேயே அது வீணாகிப் போன வாழ்வா? அவர் தனது உடலைப் பாதுகாப்பதற்காகத் திருடும் போதும் கூட மற்றவர்களைப் பற்றியே எப்பொழுதும் நினைத்திருந்தார். அவர் கெட்டவரல்ல. உணவுத் தேவை, குளிருக்கு ஏற்ற வெது வெதுப்புத் தேவையெனும் போது தடுமாற்றங்களை அவரால் தடுக்க முடியவில்லை. இங்கே முதலில் அவர் தன்னைத் தானே மன்னிப்பதற்குக் கற்றுக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் இன்னும் பூவுலகில் தேவைகளுடன் இருப்பவர்களுக்கு எந்த வகையில் உதவ இயலுமென்று பார்த்து அதனை அவர் செய்வார். அவர்கள் திருடாமல் உணவையும் குளிரைப் போக்கும் உடைகளையும் அடைவதற்கு ஏற்ற வகையில் மற்றவர்களின் இதயங்களில் ஏனையோருக்கு உதவும் ஆசையை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களுக்கு உதவுவார். ஏனைய வறியவர்களுக்கும் அவர்கள் தூண்டுதல்களுக்கு இலக்காகாமல் இருக்க மிக ஆவலுடன் அவர் உதவுவார். இப்படியாக அவர் மற்றவர்களுக்கு உதவுவதற்காக நீண்ட நாட்கள் கடுமையாக உழைப்பதன் மூலம் தனது ஆத்மாவை மிக உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்வார். அதனால் பெரும்பாலும் அவர் மீண்டும் பூதவுடலெடுத்துத் தன்னைப் பூரணப்படுத்த வேண்டிய தேவை ஏற்படாது. எனவே பச்சாதாபப்படுகின்ற ஒரு பாவியானவன் நேர்மையான ஒரு மத வைராக்கியிலும் பார்க்கக் கூடுதலாக இங்கே வரவேற்கப் படுகின்றான்."
வாழ்வின் அடுத்த கட்டத்தில் எங்களது சொந்த மனச்சாட்சியைத் தவிர வேறு நியாயத் தீர்ப்புகள் இல்லையென்று ஆர்தர் வலியுறுத்தினார். அவர் தொடர்ந்து சொல்கையில், "மனச்சாட்சியின் குரலானது இறைவனின் ஒரு பகுதியாகும். ஏனெனில் நாமே எம்மைப் படைத்தவனின் ஒரு பகுதி தானே. ஆனால் நியாயத் தீர்ப்பானது எமது பௌதீக விழிகளிலிருந்து கட்டுகள் விலகிய பின் எங்களிலிருந்தே பகுதி பகுதியாக வரும். திரை விலகியவுடன் நாம் எங்கே தவறிழைத்தோம், எங்கே சரியாக நடந்து கொண்டோமென எம்மால் தெளிவாகப் பார்க்க முடியுமாகையால் நாம் உணர்வு பூர்வமாக முன்னேறியிருப்போம். சில முக்கியமற்ற, எங்களது நினைவிலிருந்து மறைந்து போன செய்கைகள் அந்த முன்னேறிய நிலையில் மிகப் பெரியதாகத் தெரிவது மகிழ்ச்சியாக இருக்கும். நீட்டப்பட்ட உதவிக்கரம், லாப நோக்கின்றிச் செய்யப்பட்ட ஒரு நற்செய்கை, பாதிக்கப்பட்ட ஒருவரின் மனஉளைச்சலைப் போக்கிய ஒரு கடிதம், முன்பின் தெரியாத, மனச்சோர்வுடன் உள்ள ஒருவரைப் பார்த்துச் சிந்திய புன்னகை. இப்படியான மிகச் சிறிய, மறக்கப்பட்ட செயல்களெல்லாம் சொர்க்கத்தில் வரவு வைக்கப்படும். நினைக்க வைக்கும் ஆர்ப்பாட்டமான, பகட்டான பண உதவியிலும் பார்க்கக் கூடுதலாக எம்மை முன்னேறச் செய்யும். அதே போல மேலுலகில் முன்னேற்றத்துக்கு உதவுமென நினைத்த சில விஷயங்கள் உண்மையிலேயே எமது முன்னேற்றத்தைத் தடுத்திருந்தன என அறிந்து ஏமாற்றமடைவோம். மற்றவர்களுக்கு உதவுவதாக எண்ணி இலவசமாகப் புத்திமதிகளை வழங்கியிருப்போம்; யாரையேனும் மேலதிகமாகப் புகழ்ந்து பேசி அல்லது முகஸ்துதிகள் செய்திருப்போம்; யாருக்கேனும் செய்த உதவிகளைப் பெருமையுடன் வெளியில் சொல்லித் திரிந்திருப்போம். நாம் செய்த நல்ல காரியங்களைப் பற்றி அங்கே அதிகம் சொல்லித் திரிந்தால் பூவுலகில் எமக்குப் போதுமான வெகுமதி கிடைக்கும். அதனால் இங்கே ஒன்றும் கணக்கில் வைபடமாட்டாது. வலது கை கொடுப்பதை இடது கை அறியாமலிருத்தல் நல்லது. மறந்து விடுங்கள். பூவுலகில் வெகுமதி கிடைக்கப் பெற்ற நல்ல விஷயங்கள் ஒன்றையும் நாம் ஆத்ம உலகுக்கு எடுத்துச் செல்லமாட்டோம். இன்னொருவருக்குத் தேவையேற்பட்ட ஒரேயொரு காரணத்துக்காக நாம் நன்றியோ கைமாறோ எதையும் எதிர்பார்க்காமல் செய்த உதவிக்காக இங்கே முழுமையான வெகுமதியை அடைகிறோம். எனவே அங்கே உங்களைப் பாராட்டாதவர்களுக்கு எதிராக எந்த விதமான கோபத்தையும் மனதில் கொள்ள வேண்டாம். உங்களுக்கு இயலுமான வேளையில் உதவியைச் செய்து விட்டு அதனைப் பின் மறந்து விடுங்கள். எம்மைப் படைத்தவனின் கருவி போன்று உங்கள் வாழ்வை வாழுங்கள். திருப்திகரமான வாழ்க்கை வாழ்வதற்கேற்ப நீங்கள் உழைக்க வேண்டும் என்பதைத் தவிர வேறொன்றையும் உங்களுக்காகக் கேட்காதீர்கள். தர்மம் செய்வதை விளம்பரப் படுத்தாதீர்கள். வற்றாத கேணி ஒன்றை உங்களுக்காக உருவாக்குங்கள். அந்தக் கேணியிலிருந்து அன்புக் குமிழிகள் உருவாகிக் கொண்டே இருக்கட்டும். அந்த அன்பைத் தடையின்றி வழங்கினால் நிறைந்து வழிய வழிய அன்பு தொடர்ந்து பெருகிக் கொண்டே இருக்கும்.