இது 'A World Beyond' என்ற ஆங்கில நூலின் மொழிபெயர்ப்பாகும். இந்நூலை எழுதியவர் ரூத் மோன்கொமெரி (Ruth Montgomery) எனும் ஒரு பெண்மணியாகும். மனிதருக்குள் மேலுலக ஆத்மாக்கள் வந்து பேசுவதைப் போன்று மேற்குலகில் 'Automatic Writing' என ஒரு விடயமுள்ளது. அதாவது ஆத்மாக்கள் எங்கள் மூலமாக வந்து சில விடயங்களை எம்மைக் கொண்டு எழுதச் செய்வது என்பதாகும். இந்நூலானது அப்படியாகத்தான் எழுதப்பட்டது. 'ஆர்தர் ஃபோர்ட்' என்று இந்நூலாசிரியைக்குத் தந்தையைப் போலிருந்த ஒருவர் மேலுலகம் சென்ற பிற்பாடு அவர் மூலமாக எழுதப்பட்டது இந்நூலாகும்.

Sunday, October 18, 2020

பதினோராம் அத்தியாயம்: அந்தக் கெட்ட பழக்கங்களை வெல்லுங்கள் (Conquer those Bad Habits)


எனக்கு நினைப்பதற்கே பிடிக்காத விஷயமொன்று உள்ளதென்றால் அது கெட்ட பழக்க வழக்கங்களைப் பற்றியதாகும். ஏனென்றால் எனக்கு அவை நிறையவே உள்ளன. எனது 'உண்மையை தேடி' என்ற நூலின் (A Search for the Truth) வாசகர்கள் எனது புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தச் சொல்லி லிலி என்னை வற்புறுத்தி அதில் வெற்றியும் கண்டதை நினைவுகூரக் கூடும். ஆனால் இரு வருடங்களின் பின்னர், அதனால் உருவான தேவையற்ற பத்து இறாத்தல் எடையைக் குறைக்க இயலாத காரணத்தால் மீண்டும் அந்தக் கெட்ட பழக்கத்துக்குத் திரும்பினேன். இரவுணவிற்கு முன் இன்னமும் ஒன்று அல்லது இரண்டு காக்டெயில் பானம் அருந்துவதும் வழக்கம். எனது வாயில் அடிக்கடி கடுமையான சொற்கள் வருவது எனக்குத் தெரியும். அதனைச் சில சமயங்களில் கட்டுப்படுத்தத் தவறி விடுவேன்.
எனது நீண்ட நாள் நண்பர் ஆர்தர் ஃபோர்ட் ஒரு சிறந்த மனிதர். ஆனால் தனது பங்குக்கு அவரும் சில கெட்ட பழக்கங்களைச் சேகரித்திருந்தார். அவரது தரப்பில் எந்தத் தவறுமில்லாமலேயே அவர் சில காலம் போதைப் பொருளுக்கு அடிமையாகி இருந்தார். அதிலிருந்து மீள்வதற்காக அவர் மதுவுக்கு அடிமையானார். அவர் மதுவுக்கு அவ்வளவு தூரம் அடிமையானதால் இறுதிக் காலத்திலும் கூடச் சில நேரங்களில் வண்டியிலிருந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் விழுந்திருக்கிறார். அவர் அவ்வப்போது சிகரெட் பிடித்திருக்கிறார். ஆனால் அதற்கு அடிமையாகவில்லை. அதனால் எனது கண்டிப்பான 'வழிகாட்டியான' லிலியை விட ஆத்ம வடிவிலிருக்கும் ஃபோர்டிடம் கூடுதல் புரிந்துணர்வை எதிர்பார்த்தேன். ஆனால் ஆர்தர் இந்த உடலின் பலவீனங்களுக்கு முழு மறுப்புத் தெரிவித்தார்.
மார்ச் மாதம் முதலாம் திகதி தான் சிகரெட்டைப் பற்றி முதன் முதலில் குறிப்பிடப்பட்டது. அதாவது லிலி பின்வருமாறு எழுதினார்: "ருத், நீ புகையால் நிரப்பப்படாமல் இருந்தால் நாம் உன்னுடன் தொடர்பு கொள்வதும் நீ அதனைக் கிரகிப்பதும் மிக இலகுவாக இருக்கும். அது முன்னேற்றத்தைத் தடுக்கிறது. புகையாலான திரை போட்ட உலகத்தில் நீ இருப்பதைப் போலுள்ளது. அந்த மூட்டத்தைத் துளைப்பது எமக்குக் கடினமாக உள்ளது. அதனால் ஏன் இப்பொழுதே நீ புகைபிடித்தலை நிறுத்தி விட்டு இந்நூலை எழுதும் வேலையில் ஈடுபடக்கூடாது?" மேலும் இது போன்ற சில குறிப்புகளின் பின் அவர், "சரி, இதோ ஆர்ட். உன்னைக் கண்டிப்பது தானாக இருக்கக் கூடாது என அவர் நினைக்கிறார்" என எழுதினார்.
பத்து நாட்களின் பின் சில பிரபஞ்ச விதிகளைப் பற்றி ஆராய்ந்த பின் ஃபோர்ட் பின்வருமாறு எழுதினார்: "முந்திய சுற்றில் இழைத்த தவறுகளைப் போதுமான அளவு நேரம் சீர்தூக்கிப் பார்த்துப், பின் எதிர்காலத்தில் உருவாகும் சலனங்களைச் சரியாக எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்பதைத் தீர்மானிக்காமல் ஏன் மீண்டும் மீண்டும் பிறக்க விரும்புகிறோம் என்பது இப்போ விளங்குகின்றது. தான் தயாராக முன் ஏன் ஒரு ஆத்மா பூவுடலெடுக்க அவசரப்படுகிறது? 'மனித இயல்பின்' தவறுகளுக்கு இங்கே நாம் முகம் கொடுக்கிறோம்: உடல் சம்பந்தமான இன்பங்களில் இருக்கும் பேரார்வம், மது பானத்தில் இருக்கும் அதிக நாட்டம், பாலுறவு, உடற் கட்டமைப்பில் ஆர்வம் (body-building) போன்ற மனித இயல்பின் பலவீனங்கள். சிலர் தாம் விட்டு விட்டு வந்த உடலில் அளவுக்கதிகமாகப் பிரியம் வைப்பதனால் இன்னொரு உடலை உருவாக்கி அதனில் பிரியம் வைத்து வேலை செய்யும் சந்தர்ப்பத்துக்கு அவர்களால் காத்துக் கொண்டிருக்க முடியாது. இந்த ஆத்மாக்கள் உண்மையிலேயே உலகியல் வாழ்வில் சிக்குண்ட ஆத்மாக்களாகும். உடலின் தாகங்களைப் பொருட்படுத்தாமல் இருக்கப் பழகும் வரை அவர்களால் ஆத்மீக முன்னேற்றம் அடைய முடியாது. பழக்கமாக மாறக்கூடிய எந்த வகையான சந்தோஷங்களும் (அவை எல்லையற்றன) பூதவுடலுடன் இருக்கையிலேயே அவற்றிலுள்ள தாகங்களை ஒதுக்கித் தள்ளி வைக்கும் வரை ஒருவரை மீண்டும் மீண்டும் பிறப்பு இறப்புச் சுழற்சியில் விழவைக்கும் - பணத்தின் மேலுள்ள ஆசை, அதிகாரத்தின் மேலுள்ள ஆசை, சிற்றின்ப ஆசை, அத்துடன் மது, போதைப் பொருட்கள், புகையிலை போன்றவற்றின் மேலுள்ள இயற்கைக்கு மீறிய நாட்டம், அத்துடன் விடுபட முடியாமலிருக்கும் எந்த வகைப் பழக்க வழக்கங்களும். பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட விரும்பும் எந்தவொரு ஆத்மாவுக்கும் இது ஒரு சரியான அறிவுறுத்தலாகும். நான் சொல்வது புரிகிறதா?"
"இந்தப் பக்கத்திற்கு வரும் குடிகாரர்கள் பூவுலகிலிருக்கும் அதிகமாகக் குடிக்கும் ஆத்மாக்களிடையே அலைந்து திரிந்து குடி மயக்கத்தினால் உண்டாகும் இன்பத்தை நுகர்ந்து அனுபவிப்பார்கள். இன்னும் பூதவுடலுடன் பிணைக்க வைக்கும் அந்தப் பழக்கத்தின் பிணைப்பை அவர்களால் விட முடியாமல் இருக்கும். அடிக்கடி புகை பிடிப்பவர்கள், போதைப் பொருள் உபயோகிப்பவர்கள் அல்லது தனது உடலுறவு ஆசையைத் தீர்த்துக் கொள்வதற்காக மற்றவர்களை வருத்தும் பாலியல் வெறி பிடித்தவர் போன்றோருக்கும் இது பொருந்தும். இந்தப் பக்கத்தில் நாம் கற்கும் மிக முக்கியமான ஒரு பாடம் இதுவாகும். பூவுலகில் இருக்கையிலேயே முடிவில்லாத இந்தப் பிறப்பு இறப்புச் சுழற்சியில் இருந்து விடுபட எம்மைப் பூதவுடலுடன் திருப்தியுறச் செய்து பிணைக்கும் கட்டுக்கள், தளைகளில் இருந்து நாம் விடுபட வேண்டும். எனவே அங்கு இருக்கையிலேயே கெட்ட பழக்கங்களை வெல்லுங்கள். அந்தத் தளைகளிலிருந்து விடுபடாமல் இங்கு வருவதிலும் பார்க்க அது இலகுவாகும். மதுவருந்துதல், புகை பிடித்தல், போதை மருந்துப் பழக்கங்கள் இல்லாதவர்களும் காம இச்சைகள் அற்றவர்களும் அப்படிப்பட்ட தளைகள் ஏதுமின்றி இந்தப் பக்கத்திலே சுதந்திரமாக இருப்பார்கள்.
"பணத்தைச் சேர்த்து வைத்துக் கொண்டு அதனை ஒருவருக்கும் ஈயாத கருமிகளுக்கும் இங்கே அதே மாதிரிப் பிரச்சனை தானுள்ளது என்பதையும் மறக்கக் கூடாது. எந்த ஒரு விஷயத்திலும் கூடுதல் நாட்டம் கொள்பவர்கள் அது அரசியலாக இருக்கலாம், சமயமாக இருக்கலாம் அல்லது வேறு எதுவாக என்றாலும் இருக்கலாம். அத்துடன் மற்றவர்களின் சமய நம்பிக்கைகளைத் தாங்கும் மனப்பக்குவம் இல்லாதவர்கள் தங்களது மனோபாவத்தின் குறைபாடுகளை  உடலுடன் இருக்கையிலேயே களைந்தாலன்றி இந்தப் பக்கத்திலும் மற்றவர்களுக்கு அவர்கள் என்ன விதமாக நினைக்க வேண்டும், எப்படி நடக்க வேண்டுமென்று அறிவுரை வழங்குவது போன்ற தங்களது எல்லாவிதமான செயற்பாடுகளையும் செய்ய முயற்சிப்பார்கள். இன்னொரு விதமாகச் சொல்வதானால் இன்னமும் பூதவுடலில் வசித்துக் கொண்டு இருப்பவர்களிலும் பார்க்க நாம் எந்த மேல் நிலையிலும் இல்லை; கீழ் நிலையிலும் இல்லை. நாம் எம்முடன் எமது குண நலன்களிலுள்ள குறை பாடுகளையும் சேர்த்தே கொண்டு செல்கிறோம். அதாவது நீங்கள் இப்போ உள்ள நிலையில் இருக்கும் அதே தீவிர நாட்டங்கள், தளைகள் அனைத்தையும் கொண்டு வருகிறீர்கள். அந்தக் குறைபாடுகள் எல்லாம் சரி செய்யப்படும் வரை நாம் எந்தவொரு குறிப்பிட்ட நிலைக்கும் ஆத்மீகத்தில் முன்னேற மாட்டோம். அதனால் தான் அக் குறைபாடுகளைக் களைந்து எம்மை முன்னேறவிடாமல் தடுக்கும் தளைகளைத் தாண்டும் நம்பிக்கையுடன் நாம் மீண்டும் மீண்டும் பிறக்கிறோம்.
சபலத்தூண்டுதல்கள் (temptations) ஏதுமில்லாத இப்பக்கத்தில் அந்தத் தளைகளைக் களைவதிலும் பார்க்கப் பூவுடலுடன் இருக்கையில் களைவது இலகுவானதாகும். எங்களை வேறு விதங்களில் தூண்டிவிடக் கூடியவை ஒன்றும் ஆத்ம உலகாகிய இங்கே இல்லை ஆதலால் சரியான முறையில் நடப்பதற்கு இங்கே ஒரு வெகுமதியும் கிடையாது. பூவுலகிலேயே கடினமான பள்ளிக்கூடமிருக்கிறது. அங்கே தான் நாம் சபலத்தூண்டுதல்களைச் சந்தித்து வெற்றி கொள்ள வேண்டும்."
ஓரிரு வாரங்களின் பின் ஆர்தர் பின்வருமாறு எழுதினார்: "இன்று, வாழ்வதற்கு எல்லாம் இருந்தும் போதை மருந்து எடுக்கத் தொடங்கி அதன் காரணத்தினால் தன்னைச் சுற்றி இருப்பவர்களில் அக்கறையை இழந்து இறுதியாகத் தன்னைத்தானே மாய்த்துக் கொண்ட ஒருவரைப் பற்றிப் பார்ப்போம். இறைவனால் அவருக்கு அளிக்கப்பட்ட இந்த உயிரை எடுக்கும் உரிமை கண்டிப்பாக அவருக்கு இல்லை. ஆனால் அவரது மனமானது நிறைந்த குழப்பத்தில் இருந்ததால் தான் உயிர்ச்சுடரை அணைப்பதை அவர் முழுவதும் உணர்ந்தாரில்லை. இன்னும் தெளியாத போதை மயக்கத்தில் இங்கே அவர் கண் விழிக்கையில் அடுத்த மோர்ஃபின் (morphine) போதை ஊசியையோ  அல்லது அவருக்குப் பிடித்த போதை மருந்தை வாங்குவதற்குப் போதை மருந்து விற்பனை செய்பவரையோ தேடத் தொடங்கினார். பல ஆத்மாக்கள் அவரருகில் உலவித் திரிந்ததைக் கண்டார். ஆனால் ஒருவருக்கும் அவர் எங்கே போதை மருந்து வாங்கலாமென்று தெரியவில்லை. சிலர் அவரைப் பரிதாபமாகப் பார்த்தார்கள். ஆனால் ஏனையவர்கள் பூவுலகிலிருக்கும் பலரைப் போல அவரது தேவைகளை அலட்சியப்படுத்தினர். ஏனென்றால் அது ஒரு கீழான நிலையிலுள்ள - பூவுலகப் பிணைப்புகளில் இருந்து விடுபடாத ஆத்மாக்கள் அடுத்த பிறவியெடுக்கும் வரையில் தங்கியிருக்கும் - இடமாகும். அவரது தேவையானது அவரைப் பதற்றத்துடன் அங்குமிங்குமாக அலைய வைத்தது. அவரது மனம் மிகப் போதையில் இருந்ததால் தான் பூதவுடலுடன் இல்லை என்பதைக் கூட அவர் கவனிக்கவில்லை. அவர் பூதவுடலுடன் இருக்கையில் எப்படிப் போதைப் பொருளுக்காகத் திணறி ஏங்கினாரோ அதே போல அவரது ஆத்ம உடலும் ஏங்கியது. அவர் நிலத்தில் தானே விழுந்தார். பின் தரையைத் தனது கை நகங்களால் கீறினார். பூவுடல்களைப் போலவே இந்த எண்ண வடிவங்களெல்லாம் அவருக்கு உண்மையாகவே பட்டன. அவர் சிணுங்கினார்; கெஞ்சினார்; அழுதார். தனக்குப் போதை மருந்து வேண்டும் இல்லையெனில் தனக்குப் பைத்தியம் பிடித்து விடுமெனத் திடமாக நம்பினார். பின்னர் தன்னில் இரக்கம் காட்டாததற்குக் கடவுளைக் கூக்குரலிட்டுத் திட்டத் தொடங்கினார். பூதவுடலுடன் இருக்கையில் எப்படி முழுப்போதையில் இருந்தாரோ அதே போலவே ஆத்ம நிலையிலும் இருந்தார். அதாவது தன்னைப் பற்றியோ ஏனையோரைப் பற்றியோ கிஞ்சித்தும் கவலைப்படாத முழுப் போதைப் பொருளடிமை. போதைப் பொருளின் மூலமே தனது உடல் உபாதைகளைப் போக்கிக் கொண்டிருந்தார். 
"கடைசியாக அவர் உணர்வற்ற நித்திரையில் விழுந்தார். இந்நிலை மாதங்களுக்கும் நீடிக்கலாம் அல்லது கால காலத்துக்கும் நீடிக்கலாம். ஏனெனில் மனத்தை நாசம் செய்ததும் பூவுலகில் பௌதீக சக்திகளைப் பலவீனப் படுத்தியதும் சேர்ந்து அவரது ஆத்மாவின் மனதை வருத்தமுறச் செய்துவிட்டன. எனவே பல காலத்துக்கு அவர் ஆத்மீக வளர்ச்சி அடைவதற்கு இயலாதவராய் இருப்பார். சில சந்தர்ப்பங்களில் தன்னைச் சுற்றியுள்ள சூழ்நிலையைப் பற்றி ஒன்றும் அறியாமல் அவர் பல நூறு வருடங்களுக்குத் தூக்கம் கொள்ளலாம். இறுதியாக அவர் விழித்தெழுகையில் பூவுலகில் அவருக்குத் தெரிந்தவர்கள் ஒருவரும் இருக்க மாட்டார்கள். அவரைச் சுற்றியுள்ள புதிதாக வந்த ஆத்மாக்கள் அவரையோ அல்லது அவரைப் பற்றியோ ஒன்றும் அறியமாட்டார்கள். அவர் உண்மையாகவே ஒரு தொலைந்து விட்ட ஆத்மா. ஏனெனில் அவருக்கு ஒருவரையும் தெரியாது. அவரது நிலையைப் பற்றியும் ஒரு அறிகுறியும் இல்லை. முன்னர் அவரின் அன்புக்குப் பாத்திரமாய் இருந்தவர்களோ அல்லது அவருக்குத் தெரிந்தவர்களோ நீண்ட காலங்களுக்கு முதலே உயரிய நிலைகளுக்கு முன்னேறியோ அல்லது புதிய பெயர்களுடனும் புதிய அடையாளங்களுடனும் மீண்டும் பூவுலகில் பிறந்தோ இருப்பார்கள். அவர் எல்லா விதமான உதவிகளையும் இழந்து நிற்பார். போதை நித்திரையில் இருந்து விழித்தெழுந்து பல காலமான பின்னரும் அவரது தூக்க மயக்கம் தொடரும். ஏனெனில் அவருக்குள் ஆர்வத் தீப்பொறியை உண்டாக்கக் கூடிய விதமாக ஒருவருமில்லை. அவரது உணர்ச்சியற்ற தன்மையானது அவருக்கு உதவ என்று முன்னே வருபவர்களையும் தடுக்கும். அவரிடமிருந்து ஏதாவது ஒளியோ சுடரோ ஒன்றுமே வெளிப்படாது. அவர் தனக்குள்ளேயே ஒடுங்கிப் போயிருப்பார்.
"இந்நிலையானது மீளவும் சில டஜனிலிருந்து பல நூறு வருடங்கள் வரையிலும் நீடிக்கலாம். அதாவது அவர் கடைசியில் இறைவனை நோக்கித் தன்னைக் காப்பாற்றுமாறு அழும் வரையும் நீடிக்கும். இவர் பல நூறு வருடங்களுக்கு முன்னரே தனது துன்பங்களை முடிவுக்குக் கொண்டு வர இறைவனை நோக்கி மிக மெதுவாகவேனும் முனகியிருந்தால் கூட அந்த ஆண்டவனுக்கு இவரது அழுகை கேட்டிருக்கும். நாமாகத்தான் முயற்சியைத் தொடங்க வேண்டும். எமது சொந்தத் தேவைகள் எம்மை இறைவனின் காலடிக்குக் கொண்டு வரும் வரை இறைவன் காத்திருப்பான். உடனடியாகப் பழைய ஆத்மாக்கள் அவரைச் சூழ்ந்து கொள்வார்கள். அவர்கள் அவரை உயர்த்தி அவரைப் போன்ற நிலையில் இருப்பவர்களைச் சுகப்படுத்தும் மறுவாழ்வு இல்லத்துக்குக் கொண்டு செல்வர். அங்கே சிலர் போதைப் பொருளில் இருந்து விடுபடுகையில் ஏற்படும் உபாதைகளில் இருந்து தணிக்கப் பட்டிருப்பார்கள். ஏனெனில் உடனடியாக இறைவனை வழி நடத்தக் கோரியிருப்பார்கள். சிலர் இவரைப் போலவே பல காலங்களுக்கும் தூக்கத்திலிருந்து இப்போ போதைப் பொருளின் பிடியிலிருந்து விடுபடும் வேதனைகள் நீங்கப் பெற்றிருப்பார்கள். ஆனால் தம் வாழ்வை மீண்டும் வாழ்வதற்கு உதவி தேவையாக இருக்கும். அவர்களின் உள்ளே உள்ள ஆத்மீகப் பொறியை மீண்டும் தூண்டுதல் செய்து மீண்டும் ஒருமுறை நாமனைவரும் கடவுளே என்று அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். கடைசியாக அந்த மனிதர் சிகிச்சைக்குப் பிரதி பலன் தரத் தொடங்கி மீண்டும் கருணையும் வலிமையையும் வரப் பெற்று தான் மிக மிகப் போதையில் இருந்த காரணத்தால் தனது ஆத்மா துயில் கொண்டிருந்தது எனவும் அதனால் தான் கடவுளைத் தன்னால் நாட முடியவில்லை எனவும் விளங்கிக் கொண்டார். அவர் தனது மனநிலை வரம்புகளைப் பாதிப்புறச் செய்யக் கூடிய எந்தவொரு விஷயத்திலும் ஆசை வைப்பதில்லை என உறுதிமொழி எடுத்தார். அத்துடன் பிறப்பெடுக்க முன் உள்ளத்தாலும் உயிராலும் தன்னிலையிழந்து நோயுற்றவர்களுக்கு உதவுவதன் மூலம் தனது உறுதிமொழியை வலிமையாக்கிக் கொள்வார்."
 ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி நான் ஃபோர்டிடம் அவரது மோட்டார் விபத்துக்கும் அதன் காரணமான மோர்ஃபின் போதைப் பொருள் பழக்கத்துக்கும் பின்னர் குடிப்பழக்கத்துக்கும் எந்தக் கர்மவினைப் பயன் இட்டுச் சென்றதென அறிந்து கொண்டாரா எனக் கேட்டேன். அவர் நேரடியாகவே பின்வருமாறு பதிலளித்தார்: "மிக நன்றாகவே அறிந்துள்ளேன். முன்னைய ஒரு பதிவின்படி நான் ஒரு குடிகாரனாக இருந்திருக்கிறேன். அப்போது என்னையும் எனது பாட்டிலையும் விட வேறொருவரைப் பற்றியும் நான் நினைத்ததில்லை. அந்தப் பிறவியில் காலனித்துவ ஆட்சியின் போது பென்ஸிலவேனியா நகரத்தில் கிட்டத்தட்ட நான் ஒரு சாக்கடையில் தான் இறந்தேன். நான் நல்ல இருதயமுள்ளவனாக இருந்தாலும் எனது வீழ்ச்சிக்கு மதுபானமே காரணமாக இருந்தது. ஏனெனில் எனக்குக் குடும்பத்தில் இருந்த பிடிப்பிலும் பார்க்க மதுவில் இருந்த பிடிப்பு அதிகமாக இருந்ததால் நான் மதுவுக்கு அடிமையாகிக் குடும்பத்தையே தியாகம் செய்தேன். ஆர்தர் ஃபோர்டாக மீண்டும் இவ்வுலகுக்கு வந்த போது பிராயச்சித்தம் செய்து ஒரு ஆத்மீக வாழ்வு வாழ்வதென்ற உறுதியான தீர்மானத்துடன் தான் வந்தேன். எனது 'நத்திங் ஸோ ஸ்ரேன்ஜ்' (மிக விசித்திரமொன்றுமில்லை) என்ற புத்தகத்திலிருந்தும் எமது சம்பாஷணைகளில் இருந்தும் நீ அறிந்து கொண்டது போல அது தான் இளமையில் எனது வாழ்க்கை முறையாக இருந்தது. எனவே மேற்கு வேர்ஜீனியாவின் மலைப் பிரதேசத்திலோ அல்லது கென்ரக்கியிலோ ஒரு சலிக்க வைக்கும் போதகராக எனது வாழ்க்கையை வாழ்ந்து முடித்திருப்பேன். ஆனால் கனவுகளின் மூலம் முந்தைய பிறவி ஒன்றிலே பண்டைய எகிப்து தேசத்திலே நான் ஒரு தீர்க்கதரிசியாக இருந்ததனை உணரவைத்ததன் மூலம் எனது கண்கள் திறக்கும் படி செய்யப்பட்டது. சிறிது காலத்துக்கு இந்த இரு தீர்மானங்களுடனும் சந்தோஷமாக வாழ முடிந்தது. அதாவது உடல், மனச் சோர்வுகளால் எனது இன்னொரு வாழ்க்கையான ஊதாரித்தனமான குடிகாரனாக வாழ்ந்த வாழ்க்கைக்கான யன்னலை நான் திறக்கும் வரை அப்படி இருக்க முடிந்தது. அந்த விபத்தால் எனது அந்தக் கர்மவினைகளைக் கடப்பதற்கான சந்தர்ப்பம் எனக்கு அளிக்கப்பட்டது. எனக்குத் தெரிந்தவரை அந்த விபத்தானது முன்கூட்டியே தீர்மானிக்கப் படவில்லை. ஆனால் யார் கண்டது? ஏனெனில் அவ்விபத்தில் இரு பெண்கள் உயிரை இழந்திருக்கிறார்கள்.
எது எப்படி இருந்தாலும் எனக்கு சபலத்தைத் தூண்டும் சந்தர்ப்பம் ஒன்று வழங்கப்பட்டது. எனவே முந்திய பிறவியில் நான் ஒரு ஊதாரியாக இருந்ததனால் எனது ஆத்மா உள்ளூர எனது பழைய நண்பனாகிய மது பானத்தைத் தழுவிக் கொண்டது. நான் சொல்வதை நம்பு அது நண்பனே இல்லை. பென்சில்வேனியாவில் கழிந்த அந்த வீணாகிப் போன வாழ்க்கையால் கடந்த பிறவியில் மது பானத்தைப் பொறுத்தவரை மிகப் பெரிய தாங்கும் திறனும் கொள்ளக் கூடிய திறனும் என்னால் உருவாக்கப் பட்டிருந்ததால் அளவுக்கு மீறி அருந்தினால் தான் எனக்குப் போதை ஏறும். அப்படி இல்லாமல் இருந்திருந்தால் அவ்வப்போது சில சமயங்களில் மது அருந்துவது என்னைப் பெரிதும் பாதித்திருக்காது. ஆனால் பென்சில்வேனியாவின் வாழ்க்கையின் கர்மவினையானது எனது உயரிய தீர்மானத்தையும் மிஞ்சி விட்டது. அது எனது கடந்த வாழ்க்கையையும் முழுவதுமாகப் பாதிக்காதது அதிசயமே. என்னைப் புரிந்து கொண்ட நண்பர்களுக்காகக் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும். அவர்கள் எனது நலனில் அக்கறை காட்டினார்கள். நான் பாதை தவறும் போதெல்லாம் என்னைச் சரியான பாதையில் வழி நடத்துவார்கள். இப்போ அந்தப் பழைய அரக்கனுடன் தொடர்ந்து நடத்திய உறுதியான போராட்டத்தால் எனது பிரச்சனை தோற்கடிக்கப்பட்டு விட்டதென நான் நினைக்கிறேன். நான் வேண்டுமென்றே மது பானத்தைத் தேடவில்லை. அந்த முட்டாள் டாக்டர் இல்லை என்றால் ஆர்தர் ஃபோர்டாக வந்த எனது வாழ்வில் நான் அதனைச் சுவைத்திருந்திருக்க மாட்டேன்." 
அந்தத் துக்ககரமான ஒப்புதல் வாக்குமூலத்தின் பின் சில நாட்களில் ஆர்தர் பின்வருமாறு எழுதினார்: "உண்மையைத் தேடி (A Search for the Truth) என்ற புத்தகமானது தேடலுள்ளவர்கள், கவலையில் உள்ளவர்கள் போன்ற பலருக்கும் மிகப் பெறுமதி வாய்ந்ததாக இருந்தவாறு ஊக்கம் தரக்கூடிய விஷயங்களையும் உனது புத்தகத்தில் சேர்க்க வேண்டுமென நாம் விரும்புகிறோம். எனவே இன்று லிலிக்கு மிகத் திறமையாக இருக்கும் அந்த உயரிய சிந்தனை வாய்ந்த விஷயங்களைப் பற்றிச் சற்றே பேசுவோமாக. இதோ லிலி."
பின் லிலி பின்வரும் செய்தியுடன் டைப்ரைட்டரைப் பொறுப்பேற்றார்: "ரூத், பூதவுடலுடன் இருக்கையிலேயே ஒரு ஆத்மாவானது பூரணத்துவம் அடைவதற்குப் போதியளவு முயற்சிக்கவில்லை என்றால் உண்மையிலேயே அவர் பின்னடைவு அடைகிறார் என்று பொருள். ஏனெனில் இந்தப் பக்கத்திலே உள்ள விதிகளின் படி இங்கே பின்னடைவது என்பது சாத்தியமில்லை. ஒன்றில் முன்னேறுவது அல்லது முன்னேற்றம் ஏதுமின்றி அப்படியே நிற்பது மட்டுமே சாத்தியம். எனவே உடலுடன் இருக்கும் நிலை தான் எமது சலனங்களை வெல்வதன் மூலமும் மற்றவர்களின் முன்னேற்றத்துக்கு உதவுவதன் மூலமும் ஆத்மீக முன்னேற்றம் அடைவதற்கு என  உருவாக்கப்பட்ட நிலையாகும். இவ்விஷயம் நன்றாக விளங்கிக் கொள்ளப்பட்டால் கெட்ட பழக்கங்களை வெல்வது, கூரிய நாக்கைக் கட்டுப்படுத்துவது, கோபத்தையும் சிறுமைத் தனத்தையும் அடக்குவது, எமது நலனுக்குச் சமமாகவாவது மற்றவர்களின் நலனையும் பேணுவது என்பவை மூலம் ஒரு அன்பற்ற செயலும் சொல்லும் ஒரு ஆத்மாவுக் கெதிராக மற்ற ஆத்மா புரியாமல் இருப்பதன் முக்கியத்துவத்தை உணர முடியும். ஆத்ம நிலையில் நாம் தாமாகவே மற்றையவர்களின் தேவைக்கேற்ப உதவுவோம். ஏனெனில் நாம் இறைவனின் விதிகளின் கீழே நேரடியாக உள்ளோம். அத்துடன் நீங்கள் குறுகிய கால இடைவெளிக்குள் அனுபவிப்பது போன்ற தனிப்பட்ட விருப்பங்கள் ஒன்றும் எமக்கு இங்கே பெரிதாக இருக்காது. அது தான் உங்களது மிக முக்கியமான பரீட்சையாகும். அதிலிருந்து எவ்வளவு தூரம் பலனடைகிறீர்கள்? உங்களது முன்னேற்றத்தைப் பாதிப்பவையும் அத்துடன் ஆத்மநிலைக்குப் போன பின்னரும் கூடப் பூவுலக ஆசைகளினால் ஆவியாகச் சுற்றும் நிலைக்குத் தள்ளக் கூடியவையுமான பழக்க வழக்கங்களைக் களைகிறீர்களா? மதுவருந்துதல், போதைப் பொருட்கள், சிகரெட் நஞ்சு (எந்த வடிவத்திலென்றாலும்) போன்றவையெல்லாம் அங்கு இருக்கையிலேயே களைந்தெறியப்பட வேண்டும். ஏனெனில் அடுத்த கட்டத்தில் உங்கள் முன்னேற்றத்தைத் தடுக்காமல் இருப்பதற்காக. மற்றவர்களின் நலனில் தானாகவே அக்கறைப் படுவதற்குப் பழகுதல்; கோபக் கொந்தளிப்பை அன்பால் இடம் மாற்றுதல்; ஒருவரின் கடும் கோபத்துக்கு நாம் ஆளாவதை எவ்வளவு தூரம் நாம் விரும்பவில்லை என்பதைக் கண்டு கொண்டு, அதன் மூலம் இன்னொருவரை இனி எப்பொழுதுமே எமது கடும் கோபத்துக்கு ஆளாக்குவதில்லை என்பதைத் தீர்மானிப்பது; எம்மிலும் பார்க்கக் கணவனின் அல்லது மனைவியின் தேவைகளை முன் வைப்பது; எங்களில் பார்க்க ஒருவர் வித்தியாசமான அதிர்வுத் தளத்தில் இருப்பதால் அவரில் அன்பு செலுத்துவது கடினமாக இருந்தாலும் அவர்களின் மேல் அன்பு செலுத்துவது - இவையெல்லாம் பூவுலகில் மிக மிக மிக முக்கியமானவை ஆகும். ஏனெனில் இந்தப் பக்கத்தில் வேறு அலை வரிசையிலோ அதிர்வுத் தளத்திலோ இருப்பவர்கள் தாமாகவே விலகிக் கொள்வார்கள். ஏனென்றால் ஒரே விதமான ஈர்ப்புகள் உள்ளவர்கள் தான் ஒன்று சேர்க்கப் படுவோம்: எனவே சவால்கள் நிறைந்த அந்தப் பக்கத்திலே தான் முக்கியமான வளர்ச்சி உள்ளது."
ஃபோர்ட் இந்த விஷயத்தைப் பொறுத்த வரையில் எந்த வகையிலும் களைத்து விடவில்லை. நான் இண்டியானாபோலிஸுக்கு (Indianapolis) எனது குடும்பத்தைப் பார்க்கப் போயிருந்தேன். நான் டைப்ரைட்டருக்குத் திரும்பிய முதல் நாள் ஆர்தர் பின்வருமாறு எழுதினார்: "உனது பிரயாணம் மகிழ்ச்சிகரமாக இருந்ததை அறிந்து சந்தோசம். இறப்பிற்கு அப்பால் வரும் இப்படிப்பட்ட நிலையை அடைந்த பின்னரும் கூடத் தாம் மனிதராக, மனிதவுடல் சம்பந்தப்பட்ட ஆசைகளுடன் இருந்ததை மறக்க மாட்டாமல், கடந்து சென்ற பூவுலக வாழ்க்கையில் ஏற்பட்ட பழக்க வழக்கங்களைக் கைவிட முடியாத காரணத்தால் இந்தச் சூழ்நிலைக் கேற்ப மாற முடியாமல் இருப்பவர்களைப் பற்றி மீண்டும் பார்ப்போம். அவர்கள் புகை பிடிப்பவர்களையோ மது அருந்துபவர்களையோ அல்லது போதைப் பொருள் உபயோகிப்பவர்களையோ சுற்றித் திரிந்து அவர்களின் கிளர்ச்சிகளையோ உணர்ச்சிகளையோ முதலில் அனுபவித்தது போல அனுபவிப்பார்கள். அத்துடன் மது, போதைப் பொருள், புகைத்தல் மற்றும் மரிஜுவானா போன்ற போதைப் பொருட்களை உபயோகித்து இன்பம் அனுபவிப்பவர்களின் ஒரு பகுதியாகத் தாமும் இருக்க ஆவல் படுவார்கள். அவர்கள் இங்கிருப்பவர்களில் மிகவும் பரிதாபத்துக்கு உரியவர்களாகும். ஏனெனில் அவர்கள் அந்தப் பழக்கங்களுடன் கூடுதலாக ஒன்றி விடுவதால் அவற்றைக் கைவிடாமல் எதற்கு ஆசைப்படுகிறார்களோ அவற்றைத் தகாத வழிகளில் அனுபவித்து மகிழ்வார்கள். அந்த சந்தோஷங்களைத் தீவிரமாக விரும்புவதால் ஆத்மீக வழிகளில் முன்னேறுவதற்கு விரைவில் முன் வரமாட்டார்கள். அது அவர்களின் ஆத்மாவின் முன்னேற்றத்துக்கு மோசமான பின்னடைவாகும்.
"வேறு ஒரு காரணத்துக்காக இல்லாவிடினும் இந்த ஒரு காரணத்துக்காகப் புகை பிடித்தல், மதுவருந்துதல், போதைப்பொருள் போன்ற பழக்கங்களைப் பூவுலகில் இருக்கையிலேயே கைவிடுவது நல்லது. ஆத்ம உலகுக்கு வரும் வரை காத்திருப்பதிலும் பார்க்க அங்கே அது மிக இலகுவாக இருக்கும். ஆத்ம உலகில் பழக்கங்களை உடைப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. எனவே வழக்கமாக அவை அடுத்த பிறவிக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. அப்போது அவை வேறு வடிவமெடுக்கலாம். அத்துடன் சிலசமயம் அபாயகரமான போதைப் பழக்கமாக மாறலாம்."   
அவரது போதைப் பழக்கத்தைப் பற்றி நேரடியாக மீண்டும் ஒரு முறை கேட்கும் துணிவு எனக்கு வரவில்லை. ஆனால் ஒரு நாள் ஃபோர்ட் திடீரெனப் பின்வருமாறு தொடங்கினார்: "உன்னை ஒரே தொந்தரவு செய்து கொண்டிருக்கும் அந்தக் கேள்வியைப் பற்றிப் பார்ப்போம் - அதாவது நான் இங்கும் தொடர்ந்து மது போதைக்கோ சிகரெட், போதைப் பொருள் போன்ற விஷயங்களுக்கோ ஏங்குகிறேனா என்பது தானே? அதற்கான பதில் என்ன என்றால், தற்போது முடிந்து போன எனது பூவுலக வாழ்க்கையில் நான் அவற்றைத் தொடாமல் இருந்திருந்தால் இங்கே எனது நிலை மேலும் சிறப்பாக இருந்திருக்கும். கூடுதலான புரிந்துணர்வுடன் இருந்திருப்பேன். அத்துடன் விரைவாக ஆத்மீக முன்னேற்றம் அடைந்திருப்பேன். ஆம் நான் சில வேளைகளில் குடி போதையில் இருக்கும் யாராவது ஒருவரைச் சுற்றித் திரிகிறேன். இது ஒரு வெட்கப்படத் தக்க மோசமான செயலாகும். ஆனால் இது ஏனையோருக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டும். அதாவது அவர்களுக்கு அங்கு இருக்கையிலேயே அந்தக் கெட்ட பழக்கங்களை ஒழிக்கும் படி சொல்லும் ஒரு எச்சரிக்கை ஆகும்.
"ரூத், உனது கனமான புகை பிடிக்கும் பழக்கத்தை அங்கேயே முதலில் நிறுத்தா விட்டால் இங்கு வந்த பின் களைய முடியாது. மதுப் பழக்கத்தை முற்றாக நான் விடவில்லை என்பது உனக்குத் தெரியும். நான் குடி போதையில் அடிக்கடி வாகனத்தில் இருந்து விழுந்து கொண்டிருந்தேன். மதுப் பழக்கத்தை முற்று முழுதாக அங்கேயே விட்டு விட்டு வேறு விஷயங்களில் நான் எனது கவனத்தைத் திருப்பி இருந்தால் பிழையான பூவுலகத் தளையில் நான்  கட்டுண்ணாமல் இங்கேயுள்ள முன்னேற்றத்துக்குச் சரியான முறையில் ஈடுகொடுக்க இயலுமாக இருந்திருக்கும். எனவே நான் சொல்வதைக் கவனி. நான் தேவையின்றி அறிவுரைகள் வழங்க மாட்டேன் என உனக்குத் தெரியும். நீ தான் கேட்டாய். இது தான் எனது பதில். தொல்லை தரக்கூடிய கெட்ட பழக்கங்களை இயலுமாக இருக்கையிலேயே கைவிடுங்கள்.

Saturday, October 10, 2020

பன்னிரெண்டாம் அத்தியாயம்: பூவுலக வாழ்க்கைகளுக்கிடையே (Between Earth Lives)

                            

ஆர்தர் ஃபோர்ட் இப்புத்தகத்துக்கான தனது எழுத்தைக் குறிப்பிட்ட ஒழுங்கில் பின்பற்றவில்லை. சில காலைகள் மறு பிறப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களுக்காகவும் சில உயரிய வாழ்வு நிலைகளுக்காகவும் மற்றும் சில அவர் இப்போ இருக்கும் நிலையில் உள்ள பாடசாலைகள் மற்றும் நடக்கும் முறைகளுக்காகவும் அர்ப்பணிக்கப் பட்டிருந்தன. பூதவுடலுடன் இருக்கும் நாம் கூடுதல் ஒழுங்கு முறையான செயல் திட்டங்களுக்கு எம்மைப் பழக்கப்படுத்தி இருப்பதால் அந்தத் தகவல்கள் சில சமயம் ஒன்றுக்குள் ஒன்று கலந்திருந்ததால் வகை வகையாகப் பிரிக்க வேண்டியது அவசியமாகிறது.
மிக முக்கியமான விடயங்களை ஆராய்ந்து கொண்டிருக்கையில் அவ்வப்போது திடுமென அவரது குறும்புத் தனமான நகைச் சுவைப் பகிடிகள் வரும். எனக்கு ஏறக்குறைய அவரது பரிச்சயமான சிரிப்புச் சத்தம் கேட்பது போலிருக்கும். கடந்த சகாப்தங்களில் இருந்த பிரபலமான மனிதர்களைப் பற்றி ஒரு தரம் அவரைக் கேள்விக் கணைகளால் துளைத்தெடுக்கையில் நான், "-------- இப்போ என்ன செய்கிறார்?" எனக் கேட்டேன். அவரை நான் தந்திரமாக ஏமாற்றப் பார்த்தேன். ஏனெனில் எனது முந்தைய பிறவி ஒன்றில் நான் அந்த ஆளாக இருந்தேன் என முன்னம் ஒரு தரம் அவர் என்னிடம் சொல்லி இருக்கிறார். ஆனால் அவர் தயங்காமல், "உனக்குத் தெரியும் தானே. டைப்ரைட்டரில் இருந்து கொண்டு என்னிடம் கேள்விகள் கேட்கிறார்" என்று பதிலளித்தார். இன்னொரு நாள் எப்படி நான் சிகரெட் பழக்கத்தை விடலாமெனக் கேட்டதற்கு அவர் பவ்வியமாக, "புகை பிடிக்காமல் இருப்பதன் மூலம்" எனப் பதிலளித்தார்.
சில சமயங்களில் இறந்து போய் விட்டதாக நாம் சாதாரணமாகக்  கருதும் ஆத்மாக்களைப் பற்றி அற்புதமாகச் சித்தரிப்பார். மார்ச் மாதம் 3 ஆம் திகதி அவர் பின்வருமாறு எழுதினார்: முடிவற்ற இந்தச் சுழற்சியில் நாம் மீண்டும் மீண்டும் இணைந்து இடையில் எம்முடன் சேர்த்துக் கொண்ட குறைபாடுகளைக் களைந்து இறுதியில் இறைவனில் ஒரு பகுதியாவதற்கு நாம் பொருத்தமாகும் வரை நாம் வளர்கிறோம். உயிர் வாழ்கிறோம்; அன்பு செலுத்துகிறோம். ஏன் பாவிகள் அதிகமாகக் காணப்படுகிறார்கள்? ஏனெனில் பலர் சேவையில் பார்க்க எமது சந்தோஷங்களுக்கே முதலிடம் கொடுக்கிறோம். அதை இலகுவாக விளங்கிக் கொள்ளலாம். மற்றவர்களுக்கு உதவுவதில் மகிழ்ச்சியை உணர்ந்தால் நாம் இன்னும் விரைவாக முன்னேறுவோம். ஏனெனில் அப்போது வேலையும் மகிழ்ச்சியும் இணைகிறது. ஆனால் சோம்பேறித் தனமான வழிகள் தான் கூடுதலாகக் கடைப்பிடிக்கப் படுகின்றன: வெற்றுப் பொழுது போக்குகளும் அத்துடன் ஏனையோருக்கோ எமக்கோ கூட உபயோகப்படாத முயற்சிகள். அதைத் தான் மனித இயல்பென்று அழைக்கிறோம். அதாவது பூதவுடலை எடுக்கையில் ஆத்மாவின் இயல்பு என்பது. காம இச்சைகள், இலக்கு ஏதுமின்றி நேரத்தை வீணடித்தல், தற்பெருமையைத் திருப்தி செய்யக் கூடிய வழிகள், எமது ஆசைகளைத் திருப்திப் படுத்தும் வழிகள் போன்ற இவை எல்லாமே மனித இயல்பென நாம் எண்ணிக் கொண்டு இருப்பவற்றை உருவாக்குகின்றன. சில இங்கும், ஆத்மவடிவில் வந்த பின்னரும் தொடர்கின்றன. சிலர் தங்கள் எண்ணங்களால் உருவாக்கப்பட்ட கண்ணாடிகளுக்கு முன் நின்று அழகு பார்ப்பார்கள். அவர்களின் விருப்பங்களின் படி அவர்களுக்கு உண்மை போலத் தோன்றுகின்ற ஆடம்பரமான ஆடைகளை அணிந்து அழகு பார்ப்பார்கள். சிலர் தம் எண்ணங்களில் மட்டுமே இருக்கும் தலை முடியை அரக்கு போன்ற சாயங்களால் அழகு பார்ப்பார்கள். தங்களது முக்கியத்துவத்துக்கு முன்னுரிமை அளிப்பவர்கள் அழகான வீடுகளில் வசிப்பார்கள். அத்துடன் மிகப் பெரிய வாகனங்களை ஓட்டுவார்கள். அவ் வாகனங்கள் அவ்வளவு பெரியவை ஆதலால், நாம் திண்மப் பொருட்களுக்கு வழிவிட்டு விலக வேண்டுமெனில் நாள் முழுக்க டிராஃபிக் போக்கு வரத்தைத் தவிர்த்துக் கொண்டே இருக்க வேண்டி வரும். ஆனால் அவை எண்ண வடிவங்கள் மட்டுமே. எனவே அவற்றை நிஜமென நம்புபவர்களுக்கு மட்டுமே அவை நிஜமாகும். இங்கு வந்த பின்னரும் கூடத் தொடர்கின்ற பொருட்களின் மேலுள்ள இந்த மோகத்தைக் கண்டு எம்மால் நகைக்கக் கூட முடியாதது வேடிக்கை தான். ஏனெனில் பின் தங்கும் ஆத்மாவானது மனித ஆத்மாக்களாகிய முழு மனித குலத்தையுமே கீழே இழுக்கும். நினைவில் வைத்துக் கொள் ரூத். நாம் செய்யும் பிழையான விஷயங்கள் ஒவ்வொன்றும் எல்லோரையும் எதிர் மறையான முறையில் பாதிக்கின்றன. முழு மனித குலத்தின் முன்னேற்றம் தான் பிரதானமானது என்பதை நினைவில் வைத்திருப்பது அவசியம். அதனால் தான் கிறிஸ்து, 'பிறரில் அன்பு செலுத்து' என்றும் 'உன்னைப் போலவே அயலானையும் நேசி' என்றும் சொல்லி இருக்கிறார். எனவே ஒவ்வொருவருக்கும் உதவுவதன் மூலம் நாம் எல்லோரையும் முன் நோக்கியும் மேல் நோக்கியும் செலுத்துவோம்."
சரியாக ஒரு வாரம் கழிந்த பின்னர் பின் வரும் செய்தி வந்தது: "பல்வேறு வகையான முன்னேற்றப் படிகளுக்கு எம்மைத் தயார் செய்யும் வழிகளைப் பற்றிப் பார்ப்போம். நாம் முதலிலேயே சொன்னது போல மற்றவர்களையும் மேலே செலுத்துவது அவசியமாகிறது. ஏனெனில் பாதை ஆழமானது. உதாரணமாக தனியே முன் செல்ல முயன்றாலோ அன்றி மற்றவர்களுடன் போட்டியிட்டுக் கொண்டு மேலே செல்ல முயன்றாலோ நீங்கள் உச்சியை அடைய மாட்டீர்கள். ஏனெனில் கீழே விடப்பட்டவர்கள் நீங்கள் முன்னேறும் வேகத்திலும் கூடுதல் வேகத்தில் உங்களைப் பின்னால் இழுப்பார்கள். அவர்களுக்கு உதவி தேவை. வழியில் ஒவ்வொரு நிறுத்தத்திலும் இன்னோருவரைக் கை பிடித்து உதவுகையில் நீங்கள் பின் தங்கமாட்டீர்கள். இன்னும் முன்னேறுவீர்கள். காலம் என்பதற்குப் பூவுலகில் நியமனங்களை (appointments) வகுப்பதைத் தவிர வேறு அர்த்தம் ஒன்றும் இல்லை என்பதற்கு இது ஒர் உதாரணமாகும். காலமானது ஒப்பிடக் கூடியது (relative). அத்துடன் இங்கே அதற்கு அர்த்தம் ஏதுமில்லை. நீங்களிருக்கும் இடத்திலும் கூட நீங்கள் நேரம் மெதுவாகப் போக வேண்டுமென ஆசைப்படுகையில் அது விரைவாகப் போய் விடும். விரைவில் போக வேண்டுமென நினைக்கையில் அது ஊர்ந்து செல்லும். மற்றவர்களுக்கு உதவுவதற்கு எப்போதும் நேரம் இருக்கும். இங்கே யாருக்கேனும் உதவி வேண்டுமெனில் நாம் தாமாகவே உதவுவோம். தான் மட்டும் முன்னேறுவது என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை. பதிலாக நாம் பிரபஞ்சத்தின் விதிகளையே கைக்கொண்டு ஒழுகுவோம். இங்கே அவை வெளிப்படையாகவே உள்ளன. மற்றவர்களை ஊதாசீனப் படுத்துதல் தான் பின்னடைவுக்கு முக்கிய காரணமாகும் எனவும் அப்படிச் செய்தால் நாம் திரும்பவும் முதலிலிருந்து ஆரம்பிக்க வேண்டி வருமெனவும் உணர்கிறோம்.
இந்தப் புதிய, ஆனால் பழமை வாய்ந்த தத்துவத்துக்கு ஏற்ப நம்மை மாற்றிக் கொண்டால் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்கலாம் என்பதைக் கண்டு கொண்டோம். இங்கே பொறாமைகள் இல்லை; பதவிக்கான போட்டியில்லை; அசூசைகளோ குரோதமோ இல்லை. நாமனைவரும் ஒருவரே எனும் போது எப்படி அது சாத்தியமாகும்? கை விரலையோ அன்றிக் கால் விரலையோ பார்த்துப் பொறாமைப்பட முடியுமா? எமது தலை முடிகள் ஒன்றிலொன்று பொறாமையோ அசூசையோ படமுடியுமா? அவை எல்லாம் ஒரு முழுமையின் பகுதிகளே அன்றி வேறில்லை. உங்கள் இரு கண்களைப் போல; உங்கள் மூக்கும் காதுகளும் போல. உங்கள் உடலின் பகுதிகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வேலை. அதில் ஏதாவதொன்று மற்றையதை விட மேன்மை போலக் காட்டவோ செய்யவோ முயற்சி செய்யவில்லை. இங்கு நாம் இறைவனின் மாபெரும் திட்டத்தை உணர்ந்ததனால் நாமும் அவ்வாறே இருக்கிறோம். நாம் அனைவரும் ஒருவரே. சிலரின் கடமைகள் மற்றவர்களில் பார்க்க வித்தியாசமாக இருக்கும். ஆனால் ஒன்றுபட்ட பூரணத்துவத்தை உருவாக்க அனைவரும் இணைந்து செயற்படுவோம். எனவே பூவுலகில் இருக்கையிலேயே ஏன் நீங்கள் இப்படிப்பட்ட விடயங்களைக் கருத்திற் கொள்ளக்கூடாது? கூட்டிற்குள் பதுங்காமல் உங்களைச் சுற்றி நல்லிணக்கத்தைப் படரவிடுவதன் மூலம் இசைவான எண்ணங்கள் உங்களைச் சூழ்வதற்கு அனுமதியுங்கள். நீங்கள் அன்பையும் பரிவையும் அள்ளித் தெளித்தால் உங்களைச் சூழ்ந்துள்ள ஆத்மாக்கள் அந்த நல் இணக்கத்தை உணர்வார்கள். உள்ளுணர்வால் அவர்கள் உங்களருகில் ஈர்க்கப்படுவார்கள். பின் வாங்காதீர்கள். உதவி கேட்பவர்களுக்குத் தாராள மனப்பான்மையோடு உதவுங்கள்."
ஆத்மீக முன்னேற்றம் அடைவதற்கு இது தான் ஒரே வழி என்பதை அழுத்தமாகச் சொன்ன ஃபோர்ட் பின்வருமாறு தொடர்ந்தார்: "நாம் ஏங்கித் தவிக்கும் முன்னேற்றமானது வழியில் நாம் எவ்வளவு தூரத்துக்கு மற்றவருக்கு உதவுகிறோம் என்பதை வைத்தே அளவிடப்படுகையில் ஏன் தெய்வீகப் பாடல்களைக் கஷ்டப்பட்டுக் கற்கவேண்டும்? ஏன் கலைத் துறையிலோ, விஞ்ஞானத் துறையிலோ ஒருவர் பிரபலமாக வேண்டும்? பிரபலமான ஒருவர் கதவைத் தாண்டி எங்கள் பக்கத்துக்கு வருகையில் ஒரு வித்தியாசமுமே இருப்பதில்லை. ஏன் அவர் பிரபலமானார்? அவர் விஞ்ஞானக் கண்டு பிடிப்பு ஒன்றைச் செய்தார். எப்படி என்றால் அதற்குரிய எண்ணக் கரு எமது பக்கத்தில் இருந்தே அவருக்குப் சென்றிருக்கும். அவர் சரியான தொனியிலும் அலை வரிசையிலும் பாடியதனால் தான் அவர் பிரபலமானாரா? அந்தத் திறமையானது எமது சிருஷ்டி கர்த்தாவால் அவருக்கு அருளப்பட்டதாகும். இப்படிப்பட்ட கொடைகள் மற்றவர்களின் பாதைகளை வெளிச்சமாக்க உதவியனவா என்பதே இங்கு கவனிக்கப்படும். இங்கு முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், மற்றவர்கள் கஷ்டப்படுகையில் நின்று உதவுகிறோமா அல்லது எங்களது திறமையைப் பற்றி மட்டுமே எண்ணுகிறோமா? ஆமையும் முயலும் கதை தெரியுமல்லவா? ஆமையானது தனது முதுகில் கனமான சுமையைத் தாங்கிக் கொண்டு கஷ்டப்பட்டு நடக்கையில் முயலானது மற்றவர்களுக்கு உதவ மறந்து துள்ளியோடுவதும் நிற்பதுமாகத் தனது திறமையைப் பற்றி மட்டுமே எண்ணிச் செயற்பட்டது."
ஆர்தர் அவர் இருக்கும் இறப்பின் மறு பக்கம் இருக்கக் கூடிய பாடசாலைகளைப் பற்றிச் சொல்வதற்கு ஒரு நாளும் சலித்ததில்லை. ஒரு முறை அவர் பின்வருமாறு எழுதினார்: "ஆத்மீக முன்னேற்றம் அடைவதில் ஆவலாக உள்ளவர்கள் கடந்த பூவுலக வாழ்க்கையைப் பற்றிய மதிப்பீடு முடிந்தவுடனேயே ஒரு குருவிடம் மேலதிக வழிகாட்டல்களைப் பெறுவதற்குப் பதிவு செய்யப்படுவார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரத்தியேகக் குரு இருப்பார். அவர்கள் தாமாகவே இங்கு ஆத்மாக்களின் முன்னேற்றத்துக்கும் வளர்ச்சிக்குமாக உதவுபவர்கள். சொல்லப்போனால் அவர்கள் புதிதாக வந்தவர்களைத் தங்கள் சிறகுகளுள் அணைப்பதைப் போல அணைத்துக் கொள்வார்கள். நாம் தவறாமல் சந்தித்துக் கற்றுக் கொள்வோம். ஏனென்றால் இங்கு நாம் முறையான உயர்வுக்கான பிரபஞ்ச விதிகளை நாமாகவே பின் பற்றுவோம். இல்லையெனில் குழப்பங்கள் நேரிடலாம். ஏனெனில் பூவுலகில் இப்போ இருப்பவர்களிலும் பார்க்க மிக அதிகமான ஆத்மாக்கள் இங்கே உள்ளனர். சிலர் உயர்ந்த நிலைகளுக்குச் செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுகையில் சிலர் மீண்டும் பௌதீக வடிவினில் மூழ்குவதற்கான தங்களது முறைக்காகக் காத்திருக்கிறார்கள். நீயும் நானும் இப்போ செய்து கொண்டிருக்கும் பணியானது முடியும் வரை எனது அடுத்த கட்டத்தைப் பற்றி முடிவு ஒன்றும் எடுக்க வேண்டிய தேவையில்லை.
"இப்போ நாம் இங்கே என்னென்ன கற்கலாம் என்பதைப் பற்றிப் பார்ப்போம். கணக்கோ கேத்திர கணிதமோ இங்கு தேவையில்லை. ஏனென்றால் அவைகளின் தேவை பௌதீகத் தளத்திலேயே உள்ளன. எழுத்துக் கூட்டல் (spelling) காலம் கடந்த விஷயம். நாம் பிரபஞ்சக் குறியீடுகளிலேயே எண்ணுவோம். எந்தவொரு பாஷைக்குரிய சொற்களும் தேவையில்லை. ஆகாயத்தின் பதிவுகளைப் (akashic records) பார்வையிட விரும்புபவர்களுக்கு மட்டுமே வாசித்தல் (reading) ஒதுக்கப்பட்டுள்ளது. எழுதுவதும் (writing) அப்படியே. 'ஆகாயப் பதிவுகள்' என்று சொல்லப்படுபவை பேனா, மைக்குப் பதிலாக ஒரு ஆத்மாவின் செயல்களின் மூலமும் எண்ணங்களின் மூலமும் அழிக்க முடியாதபடி பதிப்பிக்கப் பட்டுள்ளதால் இங்கே நாம் எழுதுவதற்கு ஒன்றுமில்லை. அப்படியெனில் இங்கே நாம் என்னதான் கற்பது? சிலருக்குக், குறிப்பாகப் பூவுலகிலிருக்கும் விஞ்ஞானிகளின் மனங்களிலே தங்கள் எண்ணங்களைப் புகுத்த விரும்புபவர்களுக்கு விஞ்ஞானத்தின் அடிப்படை விதிகள்; பிரபஞ்ச விதிகளை முழுவதுமாக விளங்கிக் கொள்ள விரும்புபவர்களுக்குத் தத்துவவியல்; நல்லியல்பு, அது ஒரு உயிர் இன்னொரு உயிருடன் சேர்ந்திருப்பதற்கான தத்துவமாகும். சூழலியல் (ecology), எதிர்காலத்தில் பிறக்கப் போகும் உயிர்களுக்குப் பூமியில் எஞ்சியிருக்கக் கூடிய சுகாதாரச் சூழலிலிருந்து மீட்டெடுப்பதற்கு உதவுவதற்கு அது மிக மிக அவசியமாகும். அன்பு - ஆம் அதுவும் கூடக் கற்க வேண்டியதாய் இருக்கும். ஏனெனில் எம்மில் பலர் பல காலத்துக்கு முன்பே முந்திய பிறவிகளின் போது அதை நினைவிலிருந்து அகற்றி விட்டோம். ஏன் நாம் அன்பைக் கற்க வேண்டும்? ஏனெனில் அன்பில்லை என்றால் இணக்கமிருக்காது. இணக்கமில்லையினில் இம்முழுப் பிரபஞ்சத்தின் செயல் திட்டங்கள் அனைத்தும் தவிடு பொடியாகி விடும். எனவே கற்பதற்கும் அதைப் பற்றி ஆராயவும் அன்பு மிக மிக முக்கியமான விஷயமாகக் கருதப்படுகிறது.
"வெளி உடற்கவர்ச்சிக்கும் அன்புக்கும் ஒரு சம்பந்தமுமில்லை என்பதனைக் கற்போம். அது பூமியில் பூவுடலை அணிகையில் உருவாகும் விலங்கியல்பாகும். ஆத்மாவுக்கும் ஆத்மாவுக்கும் இடையேயான கவர்ச்சியே அன்பாகும். எமது அன்பின் வரம்புகளை விரிவடையச் செய்வதற்கு நாம் எமது குணநலன்களில் உள்ள குறைபாடுகளைச் சீர் செய்யவேண்டும். அப்படிச் செய்வதன் மூலம் இன்னும் பெரிய, எப்போதுமே விரிவடைந்து கொண்டியிருக்கும் ஆத்மாக்களின் அன்புக்குரியவர்களாக அவர்களின் வட்டத்திற் சேரலாம். இது நிச்சயமாகச் சாத்தியமானது தான். பூமியில் இருக்கையில் விஷத்தைப் போல ஒருவரையொருவர் வெறுத்து ஒதுக்கியவர்கள் இங்கு வந்து ஒவ்வொருவரும் இந்தத் தூய்மைப் படுத்தும் அனுபவமாகிய அவர்களின் நடைமுறைகளில், பழக்க வழக்கங்களில், நடக்கும் பண்புகளில் இருக்கும் கரடுமுரடான பகுதிகளைச் சீர் செய்தபின் உற்ற துணைவர்களாக மாறுகின்றனர். கூடுதலான ஆத்மாக்கள் இணக்கமாக வர வர விரிவடைந்து கொண்டே செல்லும் அந்த ஆத்மாக்களின் வட்டமானது நீயும் நாமனைவரும் வாழும் உலகில் தனது முத்திரையைப் பதிய வைக்கும்: மக்களிடையேயும் நாடுகளிடையேயும் குறைவான யுத்தங்களும் கூடுதல் பரிமாற்றங்களும் பகிர்ந்தளித்தலும் நடைபெறும். இங்கே அது பிரதிபலிக்கிறது. எங்கும் குழப்பமிருக்கையில் அது திரையின் இரு பக்கங்களிலும் பிரதிபலிக்கும் என்பது நிச்சயம். ஒருவரையொருவர் தவிர்க்கும், புறக்கணிக்கும் அதிருப்தியுள்ள ஆத்மாக்கள் திரையின் இரு பக்கமும் தாக்கங்களை உண்டாக்குகின்றனர்.
ஃபோர்ட் மேலும் சொல்கையில், "ஆகாயப் பதிவுகள் (akashic records) என்பவை எமது செய்கைகளால், எண்ணங்களால், நடைமுறைகளால் நாம் உருவாக்குபவையாகும். அதிலுள்ள குறைபாடுகளை அழிக்கும் ஒரே வழி உதவி தேவைப்படும் ஒருவருக்கு நாம் செய்யும் அன்பான உதவியாகும். மேலும் அவர், "எம்மால் செய்யப்படும் ஒவ்வொரு நல்ல செய்கைக்கும் எமக்கு ஒவ்வொரு மதிப்பெண் விழுந்து கொண்டிருக்கும். அவை யாரோ ஒரு ஸ்கோர் கீப்பரால் குறிக்கப்பட மாட்டா. ஆனால் தானாகவே ஒவ்வொரு ஆத்மாவினாலும் அழுத்தமாகப் பதியப்படும். நாமே எமது பதிவுகளைக் கண்காணித்துக் கொள்வோம். நாமே எமக்குரிய ஜூரியும் நீதிபதியுமாகும். ஏனெனில் வெண்தாடி வைத்துக் கொண்டுள்ள ஒருவர் தரும் கடுமையான இறுதித் தீர்ப்பென்று நாம் நினைப்பது உண்மையில் எமது மனச்சாட்சியே ஆகும். ஆனால் அதிலிருந்து நாம் தப்ப இயலாது. அது முன்பு எம்முடன் இருந்தது போலவே இப்பொழுதும் எம்முடனேயே இருக்கும். அத்துடன் தொன்று தொட்டு எமது அந்தச் சுவடியில் நாம் முத்திரை பதித்துக் கொண்டே தான் வருகிறோம். இது முக்கியமான விஷயம். ஆசிரியரையோ ஸ்கோர் கீப்பரையோ ஏமாற்றுவது போல் இங்கு ஏமாற்ற முடியாது. ஏமாற்றுதல் பலனளிக்காது. நாமே எமது புள்ளிகளைப் போட்டுக் கொள்வதால் எம்மை நாமே ஏமாற்ற இயலாது."
ஆத்ம உலகிலுள்ள பாடசாலைகளில் கற்கும் கல்வியானது ஒரு வகை ஊடுகையின் (osmosis) மூலம் உட்கிரகிக்கப் படுகின்றது என்பதை ஆர்தர் வலியுறுத்தினார். "பௌதீக உலகில் எப்படி விதிகள் வெளிப்படுத்தப் படுகின்றன என்பதை ஆழமாக அறிய விரும்புபவர்களுக்காகவே இங்கே ஆசிரியப் பெருந்தகைகள் உள்ளனர். அங்கிருப்பவர்களில் யார் யாரெல்லாம் பிரபஞ்சம் சம்பந்தப்பட்ட உண்மைகளைப் பற்றி மென்மேலும் அறிய ஆவலாயிருக்கிறீர்களோ அவர்களின் மனங்களில் எமது எண்ணங்களைப் புகுத்துவதற்கு நாம் இங்கு அவற்றை உபயோகப் படுத்துகிறோம். இப்படியான புரிந்து கொள்ள முடியாத அறிவிலுள்ள நாட்டங்கள் ஆபத்தானவை என்று எச்சரிப்பவர்கள் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். சிலர் இப்படிப்பட்ட, அதாவது முடிவற்ற வாழ்வின் மறு பக்கத்தில் இருப்பவர்களுடன் இடையே இருக்கும் மெல்லிய திரையைத் தாண்டித் தொடர்பு கொள்ளக் கூடிய ஆற்றலைக் காலகாலமாக அபிவிருத்தி செய்துள்ளனர். சமநிலை பேணப்படுமிடத்தில் ஒரு ஆபத்துமில்லை. சமநிலையானது பேணப்படாதவிடத்து இப்படிப்பட்ட தொடர்புகள் மேற் கொள்வதாயினும் அல்லது தேவதைகள் யாழ் மீட்டிக் கொண்டு ஆகாயத்தில் மிதந்து திரியும் பொய்யான மேலுலகில் நம்பிக்கை வைத்திருந்தாலும் பிரச்சனைகள் உருவாகும். சமநிலை பேணப்படாத தன்மையானது மறைந்திருக்கும் ஆபத்தாகும். எப்படி தேவதைகளின் பெயரில் தியானம் செய்வது, பூவுலகைக் கடந்து ஆத்ம உலகுக்குச் சென்றவர்களின் மேல் தியானம் செய்வதை விட ஆபத்துக் குறைவென்று சொல்லலாம்? உனது தந்தை முன்னர் ஒரு தரம் உனக்குக் கூறியது போல் இந்தத் துறையில் ஆராய்ந்ததால் மூளை பாதிப்படைந்ததென்று சொல்லப்படுபவர்கள் உண்மையில் வேறு ஏதோ சில முயற்சிகளால் தான் மூளை பாதிக்கப்பட்டிருக்க வேண்டும். சமநிலை பாதிப்படைந்த பலர் அங்கேயுள்ளனர். அவர்களின் மனநிலை கட்டுக்கோப்பாக இல்லை. எனவே இந்த அமானுஷ்ய துறையில் ஏதும் பிழைகளில்லாமலே அவர்களின் ஆளுமைகள் சில சமயம் பிளவுபட்டுக் காணப்படுகின்றன."
ஆத்ம உலகின் பாடசாலைகள் பற்றி மீண்டும் சொல்கையில் அவர் பின்வருமாறு சொன்னார்: "இங்கேயிருக்கும் ஆத்மாக்களில் பூவுலகில் ஒரு முழுமையான வாழ்வை வாழ்ந்து முடித்த ஆத்மாக்கள் அவசரமாகத் திரும்ப விரும்புவதில்லை. அவர்கள் இங்கிருக்கும் மற்றைய ஆத்மாக்களுக்கும் பூதவுடலுடன் இருப்பவர்களுக்கும் உபயோகப் படக்கூடியதான விஷயங்களை எடுத்து ஆராய்கிறார்கள். பூவுலகில் இருக்கும் ஒரு குழந்தையால் எப்படி சபலத் தூண்டுதல்களையும் நோய்களையும் விபத்துகளையும் தவிர்க்க முடியுமென்று அவர்கள் அறிய விரும்புகிறார்கள். எனவே இங்கே மிகப்பெரிய ஆராய்ச்சி செய்கிறார்கள். இந்த வகை முன்னேற்றங்களை எடுத்துச் செல்ல அவர்கள் பூவுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் விஞ்ஞானிகள், உளவியலாளர்கள், மருத்துவர்கள் போன்றோரின் ஊடாக வேலை செய்கிறார்கள். இந்த எண்ணங்களையும் பரிந்துரைகளையும் பெரும்பாலும் அவர்களின் மனங்களிலே விழிப்புடன் இருக்கையிலும் கனவு நிலைகளிலும் அவர்களால் உட்புகுத்த இயலுமாக உள்ளது: ஒரு திருப்பு முனைக்கு வழி வகுக்கும் ஒரு மன உத்வேகம், ஒரு புதிய கருவியை உருவாக்குவதற்கான வரிசையான எண்ணக்கருக்கள் அல்லது கைகெட்டும் இடத்திலுள்ள புத்தகம், விழிப்பு நிலையிலிருக்கும் மனத்தினுள் லாவகமாகப் புகுத்தப்படும் எண்ணங்கள், அதே போல அரையுறக்க நிலையிலோ அல்லது உறக்கத்திலோ ஆழ்மனதில் புகுத்தப்படும் எண்ணங்கள். 
"பூவுலகில் நடைபெறும் சடுதியான முன்னேற்றங்கள் கூடுதலாக இங்குள்ள ஆத்மாக்கள் பிரச்சனைகளைப் பற்றி இங்கே ஆராய்வதால் தான் உருவாக்கப் படுகின்றன. இங்கே பிரச்சனைகளைப் பற்றியும் அவற்றின் தீர்வுகளைப் பற்றியும் பரந்த அளவிலான அறிவுகள் காணப்படுகின்றன. நான் சொல்லியது போல் நான் இப்போ இருக்கும் இடமானது சுறுசுறுப்பாக வேலைகள் நடக்கும் ஒரு இடமாகும். அழிவை உண்டாக்கக் கூடிய தீய கண்டு பிடிப்புகள் எப்படி உருவாகின்றன? அவையும் கூட நானிருக்கும் இந்தப் பக்கத்திலே தான் அநேகமாகத் தோற்றுவிக்கப் படுகின்றன. ஆனால் நல்ல கருத்துக்களை அழிவுக்காகப் பயன்படுத்தும் எண்ணங்கள் பூவுலகிலேயே உருவாக்கப் படுகின்றன. ஆத்ம உலகிலல்ல. எந்தக் கண்டு பிடிப்புகளுக்கும் நன்மை, தீமை என இரு வகைச் சாத்தியக் கூறுகளும் இருக்கும். அது யார் அவற்றைப் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்திருக்கிறது. அற்புதமான விஞ்ஞானக் கண்டு பிடிப்புகள் பெரும்பாலும் பிழையான மூளைகளிலும் கைகளிலும் அகப்பட்டுத் திரிபடைந்து மனிதகுலத்தின் முன்னேற்றத்துக்கு உபயோகப்படாமல் தீங்கு விளைவிக்கக் கூடிய விதமாக மாற்றப்படுவது மிக மிகப் பரிதாபத்துக்குரிய விஷயமாகும். கலகக்காரர்களையும் ஆர்ப்பாட்டக்காரர்களையும் எடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் தீயனவற்றை அடித்து உடைக்கையில் அவற்றுடன் எந்த நல்ல விஷயத்துக்காக ஆர்ப்பாட்டம் செய்கிறார்களோ அவற்றையும் சேர்த்து உடைக்கிறார்கள். அதற்குப் பதிலாக அவர்கள் ஒரு தீர்வை வழங்கினால் எவ்வளவு நன்மையாக இருக்கும்."

Sunday, August 23, 2020

பதின்மூன்றாம் அத்தியாயம் - மறு பிறப்பிற்கான உதாரணங்கள் (Examples of Reincarnation)

                                    

பெரிய வெள்ளி அன்று (Good Friday) காலையில் ஆர்தர் ஃபோர்ட் பின்வருமாறு டைப்ரைட்டரில் எழுதினார்: "இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கிட்டத்தட்ட இதே நாளில் நாஸரேத்திலிருந்து வந்த யேசு எனும் பெயருடையவர் முடிவற்ற வாழ்வின் அடையாளமாகச் சிலுவையில் மரித்தார். அவர் மேலுமொரு அதிசயத்தை வெளிப்படுத்து முகமாகத் தான் அன்று சிலுவையில் இருந்து அகன்றார் எனச் சிலர் எண்ணுகின்றனர். ஆனால் அவருள் இருந்த கிறிஸ்துவே உண்மையில் அன்று மரணத்தை வென்று எழுந்தது. எழுந்து, மீண்டும் மீண்டும் சூக்கும வடிவில் தோன்றி உயிர் என்றும் நிரந்தரமானது என்பதையும் பூதவுடலுடன் இருக்கும் மனிதன் உண்மையான மனிதனல்ல ஆனால் என்றும் இருந்து கொண்டே இருக்கும் ஆத்மாவின் பௌதீக வடிவம் மட்டுமே என்பதையும் நிரூபித்தார். அவரது போதனைகளின் உண்மையையும் அதன் மூலம் அவர் நிரூபித்தார். அதன் காரணமாக அவர் பூவுலகில் என்றுமே நிலைத்து நிற்கும் யேசுவாகவும் காலகாலமாக இறை சக்தியிலிருந்து கொண்டிருக்கும் இறையுணர்வாகவும் (Christ consciousness) பரிணமித்துக் கொண்டிருக்கிறார்.
"டமஸ்கஸ் (Damascus) செல்லும் வழியில் கிறிஸ்து அவர் முன் தோன்றிக் காட்சி கொடுத்த புனித பவுலின் (Saint Paul) விடயத்தைக் கருத்திற் கொள்வோம். யேசு என்ற ஒரு மனிதரைப் பற்றி அவர் அறிந்திருக்கவில்லை. ஆனால் அந்த ஆத்மவுருவத் தோற்றத்தைக் கண்டதும் உடனடியாக உள்ளுணர்வில்  அவரே யேசு என்றொருவரின் உடலில் வசித்த கிறிஸ்து என அவர் அடையாளம் கண்டு கொண்டார். அவருக்கு உரைக்கப்பட்ட வாசகங்கள் உண்மையானவை. இந்தப் பிரபஞ்சம் தோன்றுகையில் உருவாக்கப்பட்டுப் பின்னர் காலத்துக்குக் காலம் மனிதவடிவில் பிறப்பெடுத்துக் கொண்டிருக்கும் ஒரு ஆத்மாவின் பூவுலக வாசங்களின் நீண்ட வரிசையில் யேசுவானவர் மிக மேலானவராகும். அவர் தான் புத்தராக வந்தவர். அவர் தான் தேவதூதன். அவர் தான் எல்லாமாகவும் வந்தவர். அத்துடன் எமது ஆத்மாக்கள் உள்ளுக்குள்ளே எப்போதும் எவருக்காக எண்ணி ஏங்குகின்றனவோ அவரே இவர் - எம்மை வழி நடத்துபவர். என்றும் எமக்கு உதவுபவர். அமைதி தருபவர். நல்லனவற்றின் மொத்த உருவம். நிச்சயமாக அவர் இறைமகன் தான். ஆனால் நாம் அனைவருமே இறைவனின் புத்திரர்களும் புத்திரிகளும் இல்லையா? ஒரேயொரு வித்தியாசம் என்னவென்றால் யேசுவானவர் மனிதகுலத்தை அதனது அடிப்படை உண்மைகளுக்கு இட்டுச் செல்வதற்கு இறைவனால் அதிகாரம் அளிக்கப்பட்டவர்: ஒவ்வொருவரிலும் அன்பாயிருங்கள்; உங்களுக்குத் தீங்கு செய்பவனுக்குக் கூட நீங்கள் நன்மை செய்யுங்கள்; உங்களைப் பற்றி மற்றவர்கள் தீங்காகக் கதைக்க நீங்கள் விரும்பாவிடின் மற்றவர்களைப் பற்றி நீங்கள் தீங்காகப் பேசாதீர்கள்; உங்களை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டுமென எண்ணுகிறீர்களோ அவ்வாறே நீங்கள் மற்றவர்களை நடத்துங்கள். கிறிஸ்துவின் ஆத்மாவானது நாசரேத்தைச் சேர்ந்த யேசுவின் உடலில் பல காலங்களுக்கு வாழ்ந்து முடித்தது. ஆனால் நாமெல்லோரும் ஒன்றை நினைவில் வைக்க வேண்டும். அதாவது எமது உடலினுள் வாழும் ஆத்மாவும் அது போலவே இறைவனின் ஒரு பகுதி என்பதை நினைவில் வைக்க வேண்டும். அத்துடன் அதுவும் கூடத் தீமையை எதிர்க்கும் ஆற்றல் கொண்டது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். எனவே நாம் அனைவரும் எது ஆரம்பத்திலேயே தூய்மையாகவும் மாசற்றதாகவும் உண்மையாகவும் இருந்ததோ அது போலவே மாறுவதற்கு சற்றுக் கடுமையாக முயற்சிப்போம். உன்னைப் போலவே உன் அயலானையும் நேசி." 
உயிர்த்தெழுந்த ஞாயிறன்று காலையில் ஆர்தர் உபதேசம் செய்கையிலும் இதைப் போன்றதொரு கருத்தையே முன்வைத்தார் பின்வருமாறு: "இன்று வாழ்வு என்றும் சாஸ்வதமானது என்பதை நிரூபிப்பதற்காக உடலிலிருந்து விடுதலை பெற்ற கிறிஸ்துவானவர் கல்லறையிலிருந்து எழுந்த அந்த அழகான காலையைக் குறிக்கும் நினைவு நாளாகும். உடலிலிருந்து விடுதலையாகிப் பாலஸ்தீனத்தின் பல பாகங்களில் தனது சீடர்களுக்குக் காட்சியளித்தார். சந்தேகமுற்ற தாமஸுக்குத் தனது காயங்களைக் கூடக் காட்டினார். ஆனால் இதுவல்ல முக்கிய செய்தி. முக்கியமான விஷயம் என்னவென்றால், நாமனைவருமே எமது தனித்தன்மைகளுடனும் ஞாபகங்களுடனும் இறப்பைத் தாண்டிப் பிழைக்கிறோம் என்பதேயாகும். இதனையே இயேசு சிலுவையிலே மரித்ததன் மூலம் உலகிற்கு உணர்த்தினார். என்றுமே சாஸ்வதமான அவரின் ஒரு பகுதியானது - அதாவது கிறிஸ்துவானவர் - என்றுமே இருந்து கொண்டிருக்கும் ஆத்மாவின் ஒரு பகுதியாக எங்கள் பூதவுடல் இல்லை என்பதை நிரூபிப்பதற்காக உயிர் வாழ்ந்தார். நாம் யேசுபிரான் என்ற பெயரில் எமது நினைவில் இருந்து கொண்டே இருக்கும் அந்தக் கிறிஸ்துவானவரின் பற்பல பிறவிகளைப் பற்றி இன்று பார்ப்போம். அந்த அவதாரமெடுப்பதற்கு முன் வேறுபட்ட பல மனிதர்களாக அவர் பிறந்திருக்கிறார். அவை அனைத்திலுமே அவர் மனிதனின் பூரணத்துவத்தையே நாடினார். அவர் தனது தந்தைக்கும் அனைவருக்கும் பூதவுடலுடன் இருக்கையிலேயே சபலத் தூண்டுதல்களை எதிர்த்து நின்று ஒரு பூரணமான வாழ்வு வாழ முடியுமெனக் காட்ட விரும்பினார். யேசுவும் எம்மைப் போல ஒரு மனிதர் தான் என்பதனைச் சில நேரங்களில் நாம் மறந்து விடுகிறோம். அவருள்ளே வாழ்ந்த கிறிஸ்துவே அவரை மேன்மையானவராக ஆக்கியது. பூவுலகில் வாழும் எந்தவொரு மனிதனுக்கும் இருக்கக் கூடிய உடல் சார்ந்த அதே சபலங்களும் மயக்கங்களும் யேசுவைத் தொந்தரவு செய்திருந்தாலும் அவற்றை எல்லாம் அவர் எதிர்த்து நின்றார். எனவே அவர் விரும்பியவாறே நேர்மையாக நாம் ஒவ்வொருவரும் வாழ முடியுமென்பதை ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டும். ஏனெனில் பூதவுடலோடு இருக்கும் மனிதனாலும் பூரணத்துவம் பெற முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது."
அவர் தொடர்கையில் பின்வருமாறு சொன்னார்: "இப்போ பூவுலகில் ஒரு பிறவியிலேயே பூரணத்துவம் பெற முயன்ற ஒரு மனிதரைப் பற்றிப் பார்ப்போம். அவர் கூடுதலான முன் கர்மவினைப் பயன்களைத் தீர்க்க வேண்டிய நிலையில் இருந்ததால் அது சாத்தியமில்லாதது போல் இருந்தது. 'அது சாத்தியமில்லையா?' என்று நீ கேட்கலாம். ஆம் என்றும் சொல்லலாம்; இல்லை என்றும் சொல்லலாம். பல கூடாத முன் ஜென்ம வினைகள் இருப்பின் அவர் நிச்சயம் தானே தனக்குப் பரிகாரம் செய்யவேண்டும். ஆனால் ஏனைய அனைவரையும் மன்னித்து விட்டுப் பின் தன்னையும் மன்னித்து விட்டால், அவர் கருணையின் விதிகளுக்குக் கீழே கொண்டு வரப்படுவார். கருணையின் விதி என்பது நாம் உண்மையிலேயே மனம் வருந்தினால் கடந்த காலப் பாவங்கள் அனைத்தையுமே துடைத்து அழித்து விடும். இதைத் தான் நாஸரேத்தின் யேசுவானவர் தன்னுள்ளே வந்திறங்கக் கூடிய பரிசுத்த ஆவி என்று உரைத்தார். இந்தக் கருணையினால் உருவான பரிசுத்த ஆவியினாற் பலன் பெறுங்கள். இந்தப் பரிசுத்த ஆவியுடன் தொடர்பு கொள்வதற்கு முக்கியமாக மற்றவர்களை மன்னித்தால் மட்டும் போதாது எம்மை நாமே மன்னிக்கவும் வேண்டும் என்பதை நினைவில் கொள். 'அன்பு' என்பது தான் முக்கியமான சொல். மற்றவர்களை உன்னைப் போல் நேசி. அத்துடன் உன்னையும் நேசிக்கப் பழகிக்கொள்."
எனது 'இங்கும் இதற்குப் பின்னரும்' (Here and Hereafter) என்னும் நூல் எழுதுவதற்கான முயற்சிகளில் நான் ஈடுபட்டுக் கொண்டு இருக்கையில் நான் இவ்வுலகில் பிறப்பதற்கு முந்தைய எனது வாழ்வை அறிவதற்காக, ஹிப்னாட்டிஸம் மூலம் எனது வாழ்க்கையில்  பின்னோக்கிச் செல்கையில் (prenatal hypnotic regression) எனது பல முந்தைய பிறவிகளை நான் மறுபடியும் வாழ்ந்து பார்த்தது போல் தோன்றியது. அவற்றுள் இரண்டை இங்கு விபரிப்பது பொருத்தமாக இருக்குமென எண்ணுகிறேன். ஏனெனில் அதன் பின்னர் நடந்த நிகழ்ச்சிகள், நான் ஹிப்னாட்டிஸத்தின் போது கண்டவற்றுக்கு நம்பகத்தன்மையைக் கொடுத்தன. அதில் ஒன்றில் நான் இமயமலைச் சாரலில் ஒரு ஆச்சிரமத்தில் பத்மாசனத்தில் அமர்ந்திருக்கக் கண்டேன் (sitting in the lotus position at an ashram in the lower Himalayas). எனது கைகள் சிறியதாகவும் சற்றுக் கறுப்பாகவும் இருந்தன. கேள்விகளுக்குப் பதிலளிக்கையில், ஆச்சிரமத்தில் எனது உணவை விபரித்தேன் - சிறு கனிகள் (berries), பழங்கள், கொட்டை வகைகள் (nuts) - அத்துடன் கீழேயுள்ள கிராமத்திலிருந்து வரும் சிறுவர்களுக்கு நான் ஒரு குருவாக இருப்பதாகவும் ஆனால் அதே நேரம் மலையில் மேலே வசிக்கும் ஒரு உயர்ந்த குருவின் கீழ் நான் பயின்று வருவதாகவும் சொன்னேன்.
என்னை ஹிப்னாட்டிஸம் செய்தவர் (hypnotist) - எனது 'ஹியர் அண்ட் ஹியர் ஆஃப்டர் என்ற புத்தகத்தில் ஜேன் வின்த்ரோப் (Jane Winthrop) என்று அழைக்கப்பட்ட பெண் விஞ்ஞானி - என்னை இருபத்தைந்து வருடங்கள் முன்னோக்கி அழைத்துச் சென்ற பின் நான் இன்னும் ஆச்சிரமத்திலே தான் இருக்கிறேனா எனக் கேட்டார். முதலில் நான் கலவரத்துடன் காணப்பட்டேன். பின்னர் தான் அதற்கான காரணம் புரிந்தது. எனக்கு மேலிருந்த குருவானவர் இறந்து விட்டதாகவும் நான் அவரது கடமைகளைப் பொறுப்பெடுத்துக் கொண்டதாகவும் நான் விளக்கமளித்தேன். ஜேன் எனக்கென்று ஒரு மந்திரம் (mantram) இருக்கிறதா எனக் கேட்டதற்கு நான் "நிச்சயமாக; ஒவ்வொருவருக்கும் ஒரு மந்திரம் உள்ளது" என உரத்த குரலில் சத்தமிட்டேன். எனது மந்திரத்தை உரைக்கும் படி சொன்னதற்கு நான் முன்னர் எப்போதுமே கேள்விப்பட்டிராத இரு சத்தங்கள் ஒன்றாகச் சேர்ந்த ஒரு உச்சாடனத்தைத் திரும்பத் திரும்ப உச்சரித்தேன். வெளிப்படையான காரணங்களுக்காக நான் ஒருவருக்குமே இந்த அனுபவத்தைப் பற்றிச் சொல்லவில்லை. இதனது நம்பகத்தன்மையைச் சோதித்து அறிவதென்பது மிகவும் கடினம். இரு மாதங்களின் பின்னர் எனக்கு முன்னர் அறிமுகமில்லாத ஒரு மனிதர் வேர்ஜீனியாக் கரையிலிருந்த (Virginia Beach) எனது வீட்டுக்கு வந்தார். அவர் இந்தியாவில் இருக்கும் உதய்பூர் நகரத்தைச் சேர்ந்த டாக்டர் ஐ. ஸி. ஷர்மா எனத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அவர் வேர்ஜீனியாவில் இருக்கும் சிறிய பல்கலைக்கழகத்தில் பரிமாற்றம் செய்யப்பட்ட (exchange) தத்துவவியல் பேராசிரியராக அப்போ இருந்தார். அவர் எனது மறைவியல் சம்பந்தமான (psychic) புத்தகங்களை வாசித்திருக்கிறார். அவர் அவற்றைப் பற்றி என்னுடன் கலந்துரையாட விரும்பினார். அவர் கிளம்புகையில் எனது மந்திரம் என்ன என நான் அறிய விரும்புவதாகச் சொன்னேன். ஏனென்றால் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் இறைவனுக்கும் இடையில் ஒவ்வொரு தனிப்பட்ட அலையதிர்வு இருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது. அதற்கு அவர் எனது மந்திரத்தை வேண்டித் தான் தியானம் செய்வதாகச் சொன்னார்.
இரு கிழமைகளின் பின்னர் தனது மனைவியை அழைத்துக் கொண்டு மீண்டுமொரு முறை அவர் வந்தார். அவர்கள் புறப்பட ஆயத்தமாகையில் நான் சற்று ஆவலுடன், "எனது மந்திரத்தை எண்ணித் தியானம் செய்வதற்கு உங்களுக்கு நேரம் கிடைக்கவில்லைப் போலும்" எனக் கேட்டேன். டாக்டர் ஷர்மா, "உண்மையில் கிடைத்து விட்டது. நான் அதனை உங்களுக்கு எழுதித் தருகிறேன்" என்று சொல்லி என்னிடம் ஒரு சிறிய காகிதத்தை நீட்டினார். அதில் இரு ஒலிகள் ஒன்று சேர்ந்து எழுதப்பட்டிருந்தன. அவை எனது வியப்புக்கேற்ப நான் ஹிப்னாட்டிஸம் செய்யப் பட்டிருக்கையில் மீண்டும் மீண்டும் உரைத்த அதே மந்திரமாக ஒரு வித்தியாசமும் இன்றியிருந்தது. அன்றிலிருந்து நான் நாளாந்தம் தியானம் செய்கையில் அந்த மந்திரத்தையே உபயோகித்துக் கொண்டு வருகிறேன் என்று சொல்ல வேண்டியதில்லை.
நான் இந்த விஷயத்தை மீண்டும் சொல்லியதற்குக் காரணம் மறுபிறப்பைப் பற்றிச் சொல்கையில் ஆர்தர் ஃபோர்ட்டின் ஆத்மாவானது, "நீ இந்தியாவின் இமயமலையில் முன்னொரு தரம் ஒரு குருவாக இருந்தாய். அந்தப் பிறவியில் நான் உன்னை அறிவேன். ஏனெனில் நான் உனது குருவாக இருந்தேன். நான் அவ்வுலகை விட்டு ஆத்ம உலகுக்குச் செல்லும் வரையும் என்னிடம் நீ கற்றறிந்தாய். பின்னர் நீ எனது பொறுப்புகளை ஏற்றுக்கொண்டாய். நீ ஒரு நல்ல தகுதியான மாணாக்கனாக இருந்தாய். நீ ஒரு இளைஞனாகவும் நானொரு வயதானவராகவும் நாமிருவரும் ஒருவரில் ஒருவர் மிக அன்பாகவும் இருந்தோம்" என்றது.
எனது இரண்டாவது 'மறுபிறப்பு' அனுபவத்தைப் பற்றி மீளவும் சொல்கையில் எனக்குச் சற்றே சங்கடமாக உள்ளது. ஆனால் சிலவேளை அது மற்றவர்கள் தங்களது ஆழ்மனத்தின் எண்ணங்களை ஆய்ந்தறிவதற்கு ஊக்குவிக்கக் கூடும். இந்த நினைவு கூரலானது ஐந்து வருடங்களுக்கு முன் நான் தியானத்தில் இருக்கும் போது தான் ஆரம்பித்தது. அதில் நான் ஒரு ஐந்து அல்லது ஆறு வயதுச் சிறுமியாக இருக்கக் கண்டேன். பெத்தலஹேமில் (Bethlehem) இருக்கும் எமது குடிலுக்குச் சற்றுத் தொலைவில் இருந்து சில விவேகமுள்ள மனிதர்கள் வருவதைக் கண்டேன். அருகில் ஒரு இடத்தில் ஒரு குழந்தை பிறந்துள்ளது எனக்குத் தெரிந்துள்ளது. சிறிது நேரத்தில் அந்தக் குழந்தைக்கு பெத்தலஹேமுக்கும் ஜெருஸலேமுக்கும் இடையில் இருக்கும் ஒரு குளத்தில் ஸ்நானம் செய்விப்பதைப் பார்ப்பதற்கு அந்த மனிதர்களைப் பின் தொடர்ந்து செல்வதற்கு என்னை அனுமதிக்குமாறு நான் எனது தந்தையைக் கெஞ்சிக் கேட்கிறேன். அவர் முதலில் என்னைத் தடுத்தார். ஆனால் நான் அவ்வளவு தீவிரமாக அவரைக் கெஞ்சிக் கேட்டதனால் கடைசியில் நாம் தெரு வழியே நடக்கத் தொடங்கினோம். அப்போது நான் எனது சிறு கரத்தை அவரது கரத்துள் செலுத்துகையில் அவர் தான் ஆர்தர் ஃபோர்டின் அதே ஆத்மா என்பது எனக்குத் தெரிய வந்தது.
மறுநாள் தியானம் செய்கையில் நான் என்னை ஒரு பெண் மணியாகக் கண்டேன். அக்குழந்தை இப்போ வளர்ந்து பெரியவனாகி சாக்கடலின் (Dead Sea) அருகே உபதேசம் செய்து கொண்டிருப்பதாக அப்போது தான் அறிந்திருக்கிறேன். நான் அவர் சொல்வதைக் கேட்பதற்கு மிகவும் ஆசைப்பட்டேன். ஆனால் எனது கணவர் நான் அங்கு செல்வதற்கு அனுமதி வழங்கவில்லை. எனவே நான் எனது கைக்குழந்தையையும் விட்டு விட்டுப் பாலைவனத்தினூடே ஓடுகிறேன். பின்னர் ஜேன் வின்ராப் என்னை ஹிப்னாடைஸ் செய்த பொழுது இவற்றுள் சிலவற்றை நான் மறுபடியும் வாழ்ந்து பார்த்திருக்கிறேன். நான் பாலைவனத்தில் யேசுவைச் சூழ்ந்திருந்த மக்கள் கூட்டத்தைக் கண்டு பிடித்து அவரைப் பின்பற்றும் பெரிய கூட்டத்தில் நானும் ஒருத்தியாகச் சேர்ந்து விட்டேன். பின்னர் பெத்தனி (Bethany) என்னும் இடத்திலுள்ள வீடொன்றில் அவருடன் இருக்கையில் நான் லாஸரசின் (Lazarus) ஒரு தங்கையாக இருப்பதை உணர்ந்தேன். ஆனால் எனக்கு நான் மேரியுமல்ல மார்த்தாவுமல்ல (Martha) என்று தெரிகிறது. ஏனெனில் அவர்கள் இருவருமே அங்கே இருந்தார்கள்.
இந்த விஷயமானது மேற்கொண்ட சிந்தனைக்கு இடமின்றி நகைப்பிற்கிடமாக இருந்ததால் நான் இதை எனக்குள்ளேயே வைத்திருந்தேன். ஆனால் எனது 'இங்கும் இதன் பின்பும்' (Here and Hereafter) என்ற புத்தகத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து ஆரம்பத்தில் வந்த விசிறிகளின் கடிதங்களில் ஒன்று எனக்குத் தெரியாத ஒருவரிடமிருந்து வந்திருந்தது. அக்கடிதத்தில்  நான் முன்னர் லாசரசின் ஒரு தங்கையாக இருந்திருக்கிறேன் என்று தனது உள்ளுணர்வு மூலம் (psychically received the impression) தெரிய வந்ததாக எழுதியிருந்தார். மேலும் சில வாரங்கள் கடந்த பின் ஒரு நாள் நான் அகத்தூண்டுதலால் உந்தப்பட்டு லீவை (Levi) என்பவர் எழுதிய யேசு கிறிஸ்துவின் 'அக்வாரியஸ் காலத்துக்கான நற்செய்தி' (The Aquarian Gospel of Jesus the Christ) என்ற புத்தகத்தின் பிரதியொன்றை வாங்கினேன். இப்புத்தகமானது நூற்றாண்டின் தொடக்கத்தில் அமானுஷ்யமான முறையில் (psychically) லீவை என்பவருக்குச் சொல்லப்பட்டது. அப்புத்தகமானது விவிலிய வேதத்தின் பாணியில் எழுதப்பட்டு இருந்ததனால் நான் மெதுவாகவே அதனை வாசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் எனது குழப்பத்தை அதிகரிக்கும் முகமாக அதில் ஒரு இடத்தில் லாஸரசையும் அவரது மூன்று சகோதரிகளையும் பற்றி - மார்த்தா, மேரி, ரூத் - சொல்லப்பட்டிருந்த பகுதியை நான் வாசிக்கையில் சொல்லொணா வியப்பில் ஆழ்ந்தேன். அப்புத்தகத்தில் அதன் பின்னர் பல இடங்களில் இந்த 'பைபிளில் உரைக்கப்படாத' மூன்றாவது சகோதரியைப் பற்றிச் சொல்கையில் லீவை என்பவர் அப்பெண் யேசுவைப் பின்பற்றுவதற்காகத் தனது கணவரையும் இரு பிள்ளைகளையும் கைவிட்டுச் சென்றதாகவும் ஏனெனில் அப்பெண்ணின் கணவருக்கு யேசுவின் இயக்கத்தில் எந்தவொரு அனுதாபமும் இருக்கவில்லை எனவும் எழுதியிருந்தார். ஆனால் இறுதியில் யேசு அவள் மனதை மாற்றிக் குடும்பத்துடன் சேர அனுப்பி வைத்ததாகவும் அவள் அப்படிச் செய்ததனால் அவளது கணவர் மனம் மாற்றமடைந்து பின்னர் இருவருமே அவரது சீடர்களில் தீவிரமானவர்களாகச் செயற்பட்டார்கள் எனவும் அப்புத்தகத்தில் எழுதியிருந்தார்.
1971 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஏழாம் திகதி ஆர்தர் ஃபோர்ட் எனது டைப்ரைட்டரில் பின்வருமாறு எழுதினார்: "நீ எனது முந்தைய பிறவிகளில் உன்னுடன் எனக்கு இருந்த சம்பந்தங்களைப் பற்றி அறிய ஆர்வமாக உள்ளாய். அவற்றுள் சிலவற்றை என்னால் ஞாபகப்படுத்த முடியும். அதாவது ஆர்தர் ஃபோர்டாக நான் வாழ்ந்த வாழ்வில் நேரடியாகத் தம் தாக்கங்களை ஏற்படுத்தியவற்றை மட்டுமாவது என்னால் நினைவு படுத்த முடியும். ஒன்றில் நான் தாய்லாந்தில் பௌத்த பிக்குவாக இருந்தேன். இன்னொரு பிறவியில் நான் ஃபிரான்ஸ் நாட்டில் எங்கோ ஒரு இடத்தில் டொமினிக்கன் துறவியாக இருந்தேன். இவை ஒரு சில பிறவிகளுக்கு முன்னர் தான் நடந்தவை. அத்துடன் நான் புண்ணிய பூமியில் (Holy Land) ரூத் என்னும் பெயர் கொண்ட ஒரு சிறுமியினதும் அத்துடன் மேரி, மார்த்தா, லாஸரஸ் என்பவர்களினதும் தந்தையாகவும் இருந்திருக்கிறேன். அது ஒரு கடினமான ஆனால் அதே நேரம் உயர்வான வாழ்க்கை (அப்போது என்னால் எனது முழு வல்லமையையும் - யேசுவின் பாதிரியார் ஆவதன் மூலம் - வெளிக்கொணர முடியாமற் போனாலும் கூட). ஆனால் நான் யேசுவிற் பார்க்கக் கணிசமாக வயதிற் பெரியவனாக இருந்தேன். அத்துடன் அவர் சிலுவையில் மரிக்கும் போது நான் உயிருடனில்லை. அவர் பிறக்கையில் நீ சிறுமியாக இருந்தாய். எனது ஏனைய பிள்ளைகளும் அதே போல சிறுவர்களாக இருந்தார்கள். சிலர் உன்னில் பார்க்க மூத்தவர்களாகவும் சிலர் இளையவர்களாகவும் இருந்தார்கள். நாம் பெத்தலஹேமிலிருந்து பெத்தனிக்கு இடம் (Bethany) பெயர்ந்தோம். ஆனால் அதன் பின் நீண்ட நாட்கள் நான் உயிர் வாழவில்லை. மகன் லாஸரஸ் குடும்பப் பொறுப்பை ஏற்கும் படி விட்டு விட்டு நான் இறந்து விட்டேன்.
லாஸரஸ் உயிருடன் புதைக்கப்படவில்லை. நையாண்டி செய்பவர்கள் என்ன தான் நையாண்டி செய்தாலும் அவர் உண்மையிலேயே இறந்து பின் உயிர்ப்பிக்கப்பட்டார். நான் இந்தப் பக்கத்தில் அவருடன் இருந்தேன். பின்னர் அவர் மீண்டும் பூதவுடலுக்குத் திரும்புவதைப் பார்த்தேன். இறைவனின் சங்கற்பம் இருப்பின் இதுவும் சாத்தியம் என்பதை நிரூபிக்கும் முகமாகத்தான் அவர் திரும்பினார். ஒருவரும் என்னை இம்முறை அங்கு மீண்டும் அழைக்காததில் எனக்கு மிக மகிழ்ச்சியே. ஏனென்றால் நான் பூதவுடலினுள் இருப்பதிலும் பார்க்க ஆத்ம உலகில் மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்தக் கடைசித் தரத்தில் இருந்தப் பூதவுடலைப் பொறுத்தவரையிலாவது அப்படித் தான் சொல்லவேண்டும். நீ மார்த்தா போலவோ அல்லது மேரி போலவோ கூடக் கீழ்ப்படிவான பெண்ணாக இருக்கவில்லை. உன் கணவன் யேசுவைப் பின்பற்றுவதற்காக அனைத்தையும் விட்டு விட்டு வர மறுத்ததால் நீ உனது கணவரை விட்டு விட்டு ஓடி விட்டாய். இப்போ இருப்பது போலவே அப்போதும் எதுவும் உனது விருப்பப்படியே நடக்க வேண்டுமென நினைப்பாய். உனது இந்தக் கட்டுக்கடங்காத தன்மையைத் தள்ளி வைத்து விட்டுக் குடும்பத்தை முன் வைக்கும் படி யேசுவே உனக்குப் புத்தி சொல்லி உனது மனதை மாற்றிய பின்னர் தான் நீ உனது குடும்பத்துடன் சென்று மீண்டும் சேர்ந்து கொண்டாய். இந்தப் படிப்பினையானது இன்னமும் உனக்குக் கற்பதற்குக் கஷ்டமாக உள்ளது, ஏனெனில் நீ 'நாம்' 'நீங்கள்' என்பவற்றில் பார்க்க 'நான்' என்பதற்கே எப்போதும் முதலிடம் கொடுப்பதாகத் தெரிகிறது. இந்தப் போக்கை மாற்றுவது நல்லது. அல்லது நீ உயர்ந்த தீர்மானங்களை எடுத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டு அதே தவறுகளை என்றும் இழைத்துக் கொண்டிருப்பாய்."
பின்னர் ஆர்தர் 'நான்' என்பதற்கு முன்னால் 'நாம்' அல்லது 'நீங்கள்' என்பவற்றை வைப்பதைப் பற்றிச் சற்றுக் கடுமையாக எடுத்துரைத்தார் பின்வருமாறு: "சிறிது காலத்துக்கு பாப் (Bob) இடம் கடிவாளங்களைக் கொடுத்து விட்டு ஒரு ஜப்பான் மனைவியைப் போல இருந்து பார். சிறிது காலத்துக்கு அவரை நடத்த விட்டு விட்டு நீ அவரைப் பின்பற்று. இதன் மூலம் நீ பணிவைப் பயிலலாம். அத்துடன் அது கருணைக்கான சோதனையாகும்." அவர் எனது முகத்தை வெட்கத்தில் எரியும் படி செய்தார். ஏனெனில் எனக்குத் தெரியும் அவர் எனது மிகவும் மோசமான குறைகளைச் சுட்டிக் காட்டுவது. எனக்குத் தலைமை தாங்குவதென்றால் மிக மிக விருப்பம்.
ஏப்ரல் மாதத்தில் எமது டைப்ரைட்டர் அமர்வுகளில் ஒரு நாள் எமது பாலஸ்தீன வாழ்க்கையைப் பற்றி வேறு ஏதாவது இருந்தால் சொல்ல முடியுமா என நான் ஆர்தரைக் கேட்டேன். அதற்கு அவர், "உனக்கு முதலிலேயே தெரிந்தது போலவே தான் - நீ லாஸரசின் சகோதரி. நான் அந்தச் சிறார்களுக்குத் தந்தையாக இருந்தேன். நாம் லாஸரஸ் மாதிரியோ மேரி மாதிரியோ அல்லது மார்த்தா மாதிரியோ அவ்வளவு உயர் சிந்தனை உள்ளவர்களாக இருக்கவில்லை. அதனால் தான் பைபிளில் நாம் குறிப்பிடப்படவில்லை. அது எப்போதும் ஒரு குறைதான். ஏனெனில் ஏனையவர்களைப் போலவே எமக்கும் அதே மாதிரியான வாய்ப்புகளிருந்தும் நாம் அவற்றைச் சரியாகப் பயன்படுத்தத் தவறிவிட்டோம். யேசுவின் போதனைகள் நான் இறந்ததன் பின்னரே ஆரம்பித்ததனால் நான் அவரின் சீடர்களில் ஒருவனாக இருக்கவில்லை. ஆனால் சேவை செய்யும் சந்தர்ப்பங்கள் பல இருந்தும் நான் அவற்றைச் சரியாகப் பயன்படுத்தவில்லை என நினைக்கிறேன். சரியான வழிகளை விடப் பாரம்பரிய முறைகளைப் பின்பற்றும் ஒரு கடுமையான கட்டுக்கோப்பான யூதனாக நான் இருந்ததும் அதற்கு ஒரு காரணமாகும்.
நீ ஒரு குதூகலமான பெண்ணாக இருந்தாய். அத்துடன் எனது மற்றப் பிள்ளைகளில் பார்க்க எனக்கு உன்னைத் தான் நிரம்பப் பிடிக்கும். ஆனால் நீ உனது கணவரையும் குழந்தைகளையும் விட உனக்கே முதலிடம் கொடுத்ததனால் அளப்பரிய சேவைகளுக்கான சந்தர்ப்பங்களை இழந்து விட்டாய். கிறிஸ்துவாகிய யேசு என்னும் மனிதருடைய சிஷ்யையாக வருவதற்கு நீ மிகவும் விரும்பியது உண்மையே. ஆனால் அவரைப் பின் தொடர்ந்து அவரின் விவேகம் நிறைந்த உரைகளைச் செவி மடுத்து மகிழ்ந்ததற்குப் பதிலாக நீ உனது குழந்தைகளின் நலனைக் கருத்திற் கொண்டிருந்தால் நீ நன்றாக இருந்திருப்பாய். யேசுவுக்கு நிச்சயமாக இது தெரிந்ததனால் தான் கடைசியில் உன்னை உனது வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அங்கு உனது திறமையினால் நீ கொஞ்சம் கொஞ்சமாக உனது கணவனின் மனத்தை அவரது போதனைகளின் பக்கம் திருப்பினாய். பின் யேசுவின் இறுதி வாழ்நாட்களில் நீங்களிருவரும் உங்கள் சிறு குழந்தைகளுடன் அவரின் சீடர்களாகி விட்டீர்கள்" என்று பதில் அளித்தார். ஆர்தர் உண்மையில் எனது ஏனைய பல பிறவிகளைப் பற்றியும் அவரது பிறவிகளைப் பற்றியும் அத்துடன் இப்போ வாழ்ந்து கொண்டிருக்கும் சில உறவினர்கள், நண்பர்களுடனான முன்னைய தொடர்புகள் பற்றியும் எழுதியிருந்தார். ஆனால் இப்புத்தகமானது பொதுவானதாக எழுத இருப்பதால் அவற்றை இங்கு நான் சேர்க்கவில்லை. 
நாம் பிறவி எடுக்கையில் நாம் பிறக்கப் போகும் இனத்தையும் பூகோள வரை படத்தில் பிறக்கப் போகும் நாட்டையும் எப்படித் தீர்மானிக்கிறோம் என்று ஒரு நாள் நான் கேட்டேன். அதற்கு அவர் "உண்மையில் இது மிக உணர்வு பூர்வமான பிரச்சனைகளில் ஒன்றுக்கு வழி வகுக்கும். ஏனெனில் எமது பழைய கர்ம வினைகளைக் களையக் கூடிய விதமாகவும் அத்துடன் உயர் குணங்களை அபிவிருத்தி செய்யக் கூடிய விதமாகவும் என்று எல்லாவற்றையும் அடக்கக் கூடிய ஒரு சூழ்நிலையாக அது அமைய வேண்டும். சிறுபான்மை இனங்களான கறுப்பு இனமக்கள் அல்லது யூத இன மக்கள் சம்பந்தமாக நாம் சகிப்புத்தன்மை இழந்து இனத் துவேஷத்துடன் நடந்திருந்தால் அந்த இனத்திலேயே அடுத்த முறை பிறந்தால் எமக்கு நல்லதா? பெரும்பாலும் இது தான் நிலைமை. சிவிலுரிமைப் போராட்டங்களில் முன்னணியிலே நின்ற சில நீக்ரோக்கள் முற்பிறவியில் அடிமைகளுக்குச் சொந்தக்காரர்களாக இருந்த வெள்ளையர்கள் ஆகும். அவர்கள் தங்கள் அடிமைகளினதும் தங்களுக்குக் கீழே இருந்த மக்களினதும் மனித உரிமைகளை மறுத்தவர்களாகும். எனவே அவர்கள் வெளியே இருந்து மேம்படுத்துவதிலும் பார்க்க உள்ளே இருந்து உதவுவதற்காக இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தித் தாங்களே கறுப்பர்களாக வந்துள்ளார்கள். ஹிட்லர் ஆட்சியில் இறந்த சில யூதர்கள் முன்னர் விட்ச் ஹண்ட் (witch hunts) எனப்படும் படுகொலைகளின் போது யூதர்களைக் கொடுமைப் படுத்தியவர்கள். தங்களது தவறுகளைத் திருத்தத் தாமாகவே அவர்கள் முன் வந்து யூதர்களாகப் பிறந்து இருக்கிறார்கள். அவர்கள் தங்களது உயிர்களை இழந்ததன் மூலம் மிகக் கடுமையான தண்டனையை அனுபவித்து இருக்கிறார்கள். ஆனால் அதன் மூலம் மனித குலத்தின் மனச்சான்றைத்  தூண்டி விட்டிருக்கிறார்கள். அத்துடன் அதன் மூலம் பல மைல் கற்கள் ஆத்மீகத்தில் முன்னேறி விட்டனர். இது ஒரு இனத்துக்கான கர்ம வினையுமாகும் (race karma). ஏனெனில் பழைய ஏற்பாடே (Old Testament) சில இடங்களில் பழைய யூதர்களை யுத்தகுணம் கொண்டவர்களாகச் சித்தரிக்கிறது. அதாவது தங்கள் மதத்தின் பெயரால் மற்றவர்களை அடக்கியதாகச் சித்தரிக்கிறது. எனவே இனத்துக்கான கர்ம வினையும் தனிப்பட்ட கர்மவினைகளும் ஒரே நேரத்தில் அங்கே நிறைவேற்றப்பட்டு இருப்பதை நாம் காணலாம். ஆனால் அதற்காக ஹிட்லரதும் அவரது லெப்டினென்ட்களினதும் செய்கைகள் சிறிதளவும் மன்னிக்கக் கூடியனவல்ல. அவர்கள் தாமிழைத்த பாவங்களுக்கான விலையைத் (தீர்ப்பானது எங்களால் வழங்கப்படுவதல்ல என்பதன் காரணமாகப்) பல நூறு அல்லது சிலவேளை ஆயிரம் வருடங்களுக்கு அடைய வேண்டிவரும்" என்று பதிலிறுத்தார்.
"நாம் ஒவ்வொருவரும் எம்மைப் பூவுலகிலும் அதே போல இந்த மிக இயல்பான ஆத்ம தளத்திலும் சந்திக்க வேண்டிவரும். அப்போது நாமே எமது மிக மிகக் கடுமையான நீதிபதியுமாகும். பூவுலகில் இருக்கையில் அபாயகரமான பாவங்களென நாம் நினைப்பவை இங்கு வந்த பின் மிக அபூர்வமாகத் தான் உண்மையான பாவங்களாக இருக்கும். எமது செய்கைகளால் யாருக்குத் தீங்கு விளைவித்தோம் என எம்மை நாமே கேட்டுக் கொள்வோம். அந்தச் செய்கைகள் எமது தன்னலத் தேவைகளுக்காகச் செய்யப்பட்டனவா அன்றிப் புலன் இன்பங்களுக்காகச் செய்யப்பட்டனவா அல்லது வேறு ஒருவருக்காகச் செய்யப்பட்டனவா? உண்மையில் அவருக்குத் தீங்கு விளைவிக்கும் நோக்கில் செய்யப்படவில்லையா? தன்னல மறுப்பானது இங்குள்ள பல சிறந்த நற்பண்புகளில் ஒன்றாகும். ஏனெனில் அது எம்மிலுள்ள அன்பிற் பார்க்க மற்றவர்களின் மேலுள்ள அன்பை முன்னே வைக்க எமக்குக் கற்றுத் தருகிறது. நல்லொழுக்கமானது என்றும் ஆத்மாவுக்கு நன்மை பயக்கும். அது எமக்கு எப்போதும் அவசியமாகும். ஆனால் இங்கே அதனைப் பயில்வதற்கான சந்தர்ப்பங்கள் மிக மிகக் குறைவாதலினால் எமது சுயதேவைகளைப் பூர்த்தி செய்யும் பழக்கங்களை அடியோடு துடைத்தெறிந்து தன்னலம் இன்மையைப் பயில்வதற்காக நாம் மீண்டும் மீண்டும் பூவுலகுக்குத் திரும்புகின்றோம்.
எமது முந்தைய பிறவிகளைப் பற்றிய நினைவுகள் எமக்கு இருப்பதில்லை என்பதைப் பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில் ஃபோர்ட் பின்வருமாறு எழுதினார்: "எமது பூதவுடலின் நினைவுகளுக்குக் கூடுதலாக நாம் கொண்டு வருபவையாவன இந்த ஆத்ம உலகின் சில நினைவுகளும் சிலவேளைகளில் முந்தைய பிறவிகளின் திடீர் நினைவுக் கீற்றுகள் - கூடுதலாக நாம் அப்படி நடக்க வேண்டுமென்று எண்ணியிருந்தாலும் அத்துடன் முந்தைய பிறவியிலே தொடர்ந்த அதே பாதையிலே இப்பிறவியிலும் தொடர வேண்டுமென்று முடிவு செய்திருந்தாலும் தான். இந்த நினைவுகள் எமது செய்கைகளையும் எண்ணங்களையும் நாம் அங்கிருக்கையில் பாதிக்கும். இந்தப் பின்னோக்கிய நினைவுகளானவை (ப்ளாஷ் பேக்) பெரும்பாலும் கனவுகளின் போது - அதாவது எமது உடல் இயக்கங்கள் நிறுத்தப்பட்டிருக்கும் போது வரும். இந்தக் கனவுகள் பெரும்பாலும் கடந்த காலத்துடன் தொடர்புள்ளவையாக இருக்கும். நாம் அவற்றில் கவனம் செலுத்தும் போது எமது முன்னேற்றங்கள் மேலும் இலகுவாக்கப் படலாம். அவை ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத மாயத் தோற்றங்களல்ல. ஆனால் உணர்வு நிலையின் அல்லது எண்ண அலைகளின் ஒரு சீரான பிரவாகமாகும். இந்த எண்ண அலைகளானவை ஒன்றில் எம்முடன் இருந்து கொண்டே இருப்பவைகளாகவோ அல்லது பழைய தவறுகளுக்கு நாம் சரியான பரிகாரங்களைக் காலப்போக்கிற் செய்திருந்தால் எமது நினைவிலிருந்து அழிக்கப்பட்டவையாகவோ கூட இருக்கலாம். உங்களைப் போலவே நாமும் எமது ஆத்மாவைப் பூரணமானதாக்க முயன்று கொண்டே இருக்கிறோம். பல ஆத்மாக்கள் நற்பண்புகளின் காரணமாக வெளித் தோற்றங்களில் அப்படி ஒரு மாறுதலடைந்ததை நாம் கண்ணுற்றதன் காரணத்தால் நாமும் அவர்களைப் போல மாறுவதற்கு மிகவும் விரும்புகிறோம். ஆனால் இன்னொருவரைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதென்பது முன்னேற்றத்துக்கு உகந்த வழியல்ல. ஒவ்வொரு ஆத்மாக்குள்ளும் நல்லது, தீயது என்பவை பற்றிய அறிவுகள் இருக்கின்றன. அத்துடன் நாம் ஒவ்வொருவரும் சபலத் தூண்டுதல்களாலும் நற்கருணைகளாலும் வெவ்வேறு விதமாகவே பாதிப்படைகின்றோம். அதனால் நாமனைவரும் அந்த முழுமுதலின் ஒரு பகுதியாக இருந்தாலும் கைரேகை அடையாளங்கள் எப்படி ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றனவோ அவ்வாறே நாமும் ஒவ்வொருவரில் இருந்து மற்றவர் வேறுபடுகின்றோம். கால்விரலின் செயற்பாடானது கைவிரலின் செயற்பாட்டை விட வேறுபடுவது போல எம் ஒவ்வொருவருக்கும் எமக்குரிய பங்குகள் இருக்கும். அத்துடன் நாம் பூரணத்துவம் அடைவதற்குரிய எமது சொந்தப் பாதையைத் தேடிக் கண்டு பிடிக்க வேண்டும். விரற் கணுவானது மூக்கினது வேலையைச் செய்ய முயலக்கூடாது. எனவே எதுவும் எமது கையிலே தானுள்ளது. எமக்கு எது சரி எது பிழையென நன்றாகத் தெரியும். எனவே ஏன் நாம் அதற்கேற்ற படி நடக்கக் கூடாது?"
பூவுலகில் மீண்டும் பிறப்பெடுப்பதைத் தெரிவு செய்யும் 'மேலுலகக் கணனி'களைப் பற்றிய ஆர்தரின் முந்தைய கலந்துரையாடலைப் பற்றி இன்னும் வியப்புக் குறையாத நான் அவரை அதனைப் பற்றி மேலும் விபரிக்கக் கேட்டேன். அதற்கு அவர் பின்வருமாறு எழுதினார்: "அதைப் பற்றி ஆரம்பத்தில் இருந்து சொல்வதானால் பூவுலகப் பிறவிகளுக்கு இடைப்பட்ட காலமானது உலகநேரப்படி ஆயிரம் அல்லது நூறு வருடங்களாக இருக்கலாம். அல்லது சில மணித்தியாலங்களாகவோ நாட்களாகவோ வாரங்களாகவோ வருடங்களாகவோ இருக்கலாம். சிலருக்கு அவசரமாகப் பரிகாரம் தேட வேண்டியிருக்கும். உலகவாழ்க்கையின் இன்னல்களில் களைத்துப்போன வேறு சிலரோ நீண்ட நாட்களுக்கு ஓய்வெடுக்க விரும்புவார்கள். எப்படியென்றாலும் ஒருவருக்குத் தான் எப்போ பூவுலகுக்குத் திரும்புவதென்று தானே தனியே முடிவெடுக்க இயலாமல் இருப்பார். ஏனெனில் வேறு சில விஷயங்களையும் கருத்திற் கொள்ள வேண்டும். உதாரணமாகத் தாயாவதற்குத் தயாராகும் ஒரு பெண்ணிடம் திரும்புவதற்கு ஒரு சில வாய்ப்புகளே இருக்கும். ஏனையவர்கள் தங்கள் சந்தர்ப்பத்துக்காகக் காத்திருப்பதால் சொல்லப் போனால் மீண்டும் பிறப்பதற்கு விரும்பும் ஆத்மாக்களிடையே தாய்மார்களைப் பங்கீடு செய்வதற்கு ஒரு ஒழுங்கு முறை (சிஸ்டம்) உள்ளது. ஒரு பெண் கருத்தரிக்கும் ஒவ்வொரு தடவையும் அந்த சிஸ்டமானது தொழிற்படத் தொடங்கும்.
"அப்பெண்ணானவள் ஒரு உயர்ந்த ஆத்மாவாக இருக்கும் பட்சத்தில் ஒரு உயர்ந்த ஆத்மாவைப் பூவுலகப் பிள்ளையாக வளர்க்கும் உரிமையும் தகுதியும் அவளுக்கே உள்ளது. வெறும் உடலின்பத்தைப் பற்றி மட்டும் நினைப்பவளிலும் பார்க்க இப்பெண்ணுக்கே முன்னுரிமை வழங்கப்படும். இந்த உயர்வான ஆத்மாக்களுக்காக இங்கே ஓரு விதமான வகைப்படுத்தும் முறைமை (சிஸ்டம்) அமைக்கப்படும். அந்த சிஸ்டமானது தகுதியுடையவர்களில் யார் அந்தப் பூவுலகப் பெற்றோரின் தேவைக்கேற்ற வகையிலும் அதே நேரம் தனது குறிக்கோள்களை நிறைவேற்றும் வகையிலும் இருக்கிறார் என்பதைத் தீர்மானிப்பதற்காகச் சில வேளைகளில் ஒரு பரிசோதனைக் காலம் நடாத்தக் கூடும். இவையெல்லாம் உங்களால் கொம்பியூட்டர் முறைத் தொழிற்பாடுகள் என்று உங்கள் உலகில் அழைக்கப்படக் கூடிய ஒரு முறையிற் தான் செயல் படுத்தப்படுகின்றன. ஆனால் இங்கே அது தானாகவே நடைபெறும் ஒரு தொழிற்பாடாகும். அதாவது பெற்றோரும் பிறப்பெடுக்கப் போகும் ஆத்மாவும் சம்பந்தமான எல்லாவிதமான தகவல்களையும் ஒரு சேரப் பொருத்தும் ஒரு முறையாகும். எந்த இரு ஆத்மாவும் ஒரே மாதிரி இருப்பதில்லை ஆதலினால் அந்தக் குறிப்பிட்ட பூவுலகப் பிறவியில் யார் பூரணமான பலனை அடைவார்கள் என்பதில் அரிதாகவே சந்தேகம் எழும். பெற்றோராக வரப்போகும் அந்த இரு ஆத்மாக்களையும் ஏற்கனவே தெரிந்திருந்தால் அல்லது அன்புக்குரியவர்களாக இருந்தால் அத்துடன் குறிப்பிட்ட அந்தத் தம்பதிகளுடன் தீர்ப்பதற்கு ஏதாவது பூர்வ ஜென்ம கர்ம வினைகள் இருந்தால் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
"பிறக்கும் உரிமையைப் பெற்ற அதிர்ஷ்டசாலியான அந்த ஆத்மா அந்தக் கருவுள், பிறக்கும் தருணத்திலோ அல்லது அதற்குச் சற்று முன்னரோ புகும். அதே நேரத்தில் ஏனையவர்கள் ஏனைய சந்தர்ப்பங்களைத் தேடுவார்கள். தங்களது குறிக்கோள்களுக்குப் பொருத்தமான சந்தர்ப்பம் வரும் வரையும் அவர்களின் தேடல் இருக்கும். அதற்கான சாத்தியக்கூறு இப்போ அதிகரித்திருக்கும். ஆத்மீக வளர்ச்சி அதிகம் அடையாதவர்களோ அன்றிக் கூடுதலான கர்மவினைகள் ஈடு செய்யவேண்டி இருப்பவர்களோ வனப்புக் குறைவான சூழ்நிலைகளில் பிறப்பார்கள். சிலபேர் பணிவுடைமையைப் பயிலவோ அன்றித் துன்பத்தை அறியவோ சேரிப் பகுதிகளிலோ அல்லது பின் தங்கிய நாடுகளிலோ தாமே விரும்பிப் பிறப்பார்கள். அவர்கள் இந்தத் தடைகளை வென்று மென்மேலும் ஆத்மீக முன்னேற்றமடைந்து உயரிய நிலையை அடையும் உறுதியான தீர்மானத்துடன் அப்படியான இடங்களில் பிறப்பார்கள். பூவுலகுக்குத் திரும்பும் படி ஒருவரையும் கட்டாயப்படுத்துவது இல்லை என்பதை அழுத்தமாகச் சொல்கிறேன். இங்கே முன்னேறுதல் கடினம் என்றாலும் கூட நாம் விரும்பினால் காலகாலமாக இங்கேயே வேண்டுமென்றாலும் இருக்க முடியும். ஆனால் அதி சீக்கிரத்தில் மீண்டும் பூதவுடலை எடுப்பவர்கள் அதாவது கிடைக்கக் கூடிய எந்தச் சந்தர்ப்பத்தில் என்றாலும் பிறப்பவர்கள் பூவுலகில் அதிகமாகக் கஷ்டப்படுவார்கள். ஏனெனில் அவர்கள் இங்கே பெரிதாக ஒன்றுமே கற்காததுடன் இன்னொரு பூவுலகப் பிறவிக்கான காரணங்களை அவர்கள் சீர்தூக்கி ஆராயவில்லை. இதன் காரணமாகத் தான் பல ஊனமுற்ற, முடமாகிய பிச்சைக்காரர்களும் திருடர்கள், கொள்ளைக்காரர்களும் கூடக் காணப்படுகிறார்கள். அவர்கள் பொருத்தமான பௌதீக உடல் கிடைக்கும் வரையில் காத்திருக்க முடியாமல் கண்ணில் படும் ஏதாவதொரு கருவியைப் பற்றிக் கொள்கிறார்கள்".
ஆர்தர் ஒரு நாள் ஒரு தாய் தன் இளம் வயதில் தன் குழந்தைகளை எல்லாம் விட்டு விட்டு இறந்து போன விடயத்தைப் பற்றி விபரிக்கையில் இவ்விஷயத்தில் கர்மா எப்படிச் சம்பந்தப்படுகிறது என்று நான் கேட்டேன். அதற்கு அவர் பின்வருமாறு பதிலளித்தார்: "இதனை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். அப்பெண்ணானவள் முதலொரு பிறவியில் தனது பிள்ளைகளை விட்டு விட்டு இன்னொரு ஆணுடன் ஒடியிருந்திருப்பாள். இந்தக் கடைசிப் பிறவியில் அதற்குரிய தண்டனையாகத் தன் குழந்தைகளுடன் இருப்பதற்கு மிகவும் ஆசைப்படுகையில் அவர்களை விட்டு விட்டு நீங்கவேண்டி வந்து விட்டதெனலாம். இது தான் தன் பேரேட்டைச் சரி செய்வதற்குரிய அவளின், அவளின் ஆத்மாவின் வழியாகும். ஆனால் அப்பிள்ளைகள் என்ன செய்தவர்கள்? அவர்களும் முன்னொரு பிறவியில் தம்மைக் கண்காணிப்பவர்களை இகழ்ந்திருக்கலாம். அன்பான பெற்றோரின் கட்டுப்பாடுகளுக்குக் கட்டுப்படாமல் அவர்களை எதிர்த்திருக்கலாம். இந்தக் கடைசிப் பிறவியில் அவர்கள் தம் தாயை அன்புடன் நேசித்தாலும் தாய் இப்பக்கத்துக்கு வருகையில் அவர்கள் தாயில்லாமல் தனித்தியங்கும் படி கட்டாயப்படுத்தப் படுகிறார்கள். கர்மாவின் விதிகள் மாற்ற முடியாதவை. நாம் உண்மையிலேயே மனம் வருந்தினால் இறைவனின் கருணையால் அதனது பிடியிலிருந்து சற்றே விடுபடலாமே தவிர முற்றாகத் தவிர்க்க இயலாதவை.
"இந்த உதாரணமானது நிச்சயமாக இதே போன்ற எல்லாச் சந்தர்ப்பங்களுக்கும் சரி என்பதல்ல. சில வேளைகளில் ஒரு தாயானவள் மேலதிகமான கர்ப்பங்களாலும் அதீதமான பாசத்தாலும் அதிகமான சுமைகளை ஏற்றியிருக்கலாம். அதனால் அவளது உடலெனும் கோவிலானது அழுத்தங்களைத் தாங்கக் கூடிய வல்லமையை இழந்திருக்கலாம். சில சமயம் ஒரு விபத்து அவளின் இறப்பிற்குக் காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் இப்படியான சந்தர்ப்பங்களில் பெரும்பாலும் கர்மவினைகள் தான் அதற்கான காரணிகளாக இருப்பதுண்டு. ஏதாவது முற்பிறவி ஒன்றில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த ஒரு இளம் தாயில் இவர் பரிவு காட்டாது இருந்திருக்கலாம். அல்லது அப்பிறவியில் அவர் தனது உடலை அவ்வளவு தூரத்துக்கு உதாசீனப்படுத்தி இருப்பதால் இப்பிறவியின் அழுத்தங்களைத் தாங்கக் கூடிய வல்லமை அவளுடலுக்கு இல்லாமல் இருந்திருக்கலாம். இந்தத் தாய் முற்பிறவியில் ஒருவரின் உயிரைத் தெரிந்தே கொன்றிருந்தால் இப்பிறவியில் தன்னுயிரைத் தியாகம் செய்ய வேண்டி வந்திருக்கலாம். இது ஆராய்வதற்கு சற்று மனச்சோர்வான விஷயம் தான். ஆனாலும் மிக அவசியமாகக் கற்க வேண்டிய பாடம் இது.
இன்னொரு நாள் அவர் பின்வருமாறு எழுதினார்: "தாய் பிள்ளைகளின் உறவுகளின் நோக்கங்கள் என்னவென்று சொல்ல முடியுமா? சில தாய்மார்களுக்குத் தங்களின் சில பிள்ளைகளுடன் அவர்களாற் போற்றப்படும் அளவுக்குக் கூடுதல் நெருக்கமும் பிணைப்பும் இருந்து கொண்டிருக்கும் அதே வேளையில் மற்றப் பிள்ளைகளுடன் தொடர்ச்சியான முரண்பாடுகள் காணப்படுகின்றன. அதன் காரணம் என்ன? ஒருவர் பலமான அன்புப் பிணைப்புகளின் காரணங்களால் அந்தப் பெண்ணின் வயிற்றில் பிறப்பதற்குத் தீர்மானித்திருக்கலாம். அதே நேரம் வேறொருவர் தனது பழைய எதிராளியிடமோ எதிரியிடமோ வந்து பிறப்பதன் மூலம் பழைய கர்மவினைகளைத் தீர்ப்பதற்கு உடன்பட்டிருக்கலாம். அல்லது இருவருக்குமிடையில் முன்பின் தொடர்பொன்றும் இல்லாமலும் அத்துடன் இருவருக்கும் பொதுவான விஷயமொன்றும் இல்லாமலும் இருக்கலாம்.
"சரி இந்த வகையான அறிவானது வயோதிப வயதில் உங்களை இங்கு வருவதற்கு எப்படித் தயார் செய்கிறது? 'வீட்டை அடைதல்' எனத் துதிப்பாடல்கள் உரைக்கின்றன. உண்மை தான். இங்கே நாம் வீட்டை அடைந்துள்ளோம். அங்கே நாம் சாகசங்கள் புரியும் அதே நேரத்தில் எமக்கு அந்நியமான வழி முறைகளைக் கைக்கொள்வோம். ஆத்மீக முன்னேற்றம் அடைவதற்காக இப்படியாக நாம் எல்லாவற்றையுமே பணயம் வைக்கிறோம். இங்கே எடுக்கப்பட்ட உயரிய உறுதி மொழிகளும் மற்றும் விரைவாக முன்னேறுவதாகவும் அதே நேரம் பூமியின் இழு விசைகளாலும் சலனங்களாலும் பாதிப்புறுவதில்லை என எடுக்கப்பட்ட தீர்மானங்களும் கேட்பதற்கு இனிமையாகத் தான் இருக்கும். அந்தோ பரிதாபம்; ஆத்மாக்கள் கூடுதலாகத் தாம் தோற்கடிக்கப் பட்டு விட்டதாக வேதனைப் பட்டுக் கொண்டே தான் இங்கே வந்து சேர்கிறார்கள். தாம் நிறைவேற்றுவதாக உறுதி எடுத்துக் கொண்டு வந்தவற்றை நிறைவேற்ற முடியாமற் போனதை இட்டு மிகவும் மன வேதனை உறுவார்கள். தமது முன்னேற்றத்தில் தடங்கல் ஏற்பட்டதற்கு அவர்கள் சூழ்நிலைகளையோ அல்லது ஏனையவர்களையோ தான் ஆரம்பத்தில் குற்றம் சாட்டுவார்கள். ஆனால் காலப்போக்கில் இங்கே அந்த ஆத்மாவானது உள்ளார்ந்த அக்கறையுடன் தியானத்தில் தன்னை ஈடுபடுத்த ஈடுபடுத்தத் தானே தான் சிக்கலை ஏற்படுத்தியதென உணரத் தலைப்படுவார்கள். 
"அப்போ என்ன செய்யலாம்? பூதவுடலுடன் நீங்கள் இருக்கையிலேயே உங்களால் இழைக்கப்பட்ட ஒவ்வொரு தவறுகளையும் நேர்மையான முறையில் மறுபரிசீலனை செய்ய உறுதி எடுங்கள். இந்தப் புறத்தில் உறுதியாக நீங்கள் செய்ய இருப்பது போல் அங்கே இருக்கையிலேயே உள்ளார்ந்த அக்கறையுடன் மறுபரிசீலனை செய்யுங்கள். இங்கு வந்ததன் பின் மறுபரிசீலனை செய்வதாய் இருந்தாலும் கூட அங்கிருக்கையில் மறுபரிசீலனை செய்வதன் மூலம் நீங்கள் சென்று கொண்டிருக்கும் பாதையில் மாற்றத்தை ஏற்படுத்தி அதன் மூலம் மேன்மையான உயரங்களுக்குச் செல்லக் கூடிய வாய்ப்புக்களை நீங்கள் ஏற்படுத்தலாம். இந்தப் புறத்தில் ஒரு ஆத்மாவால் மிஞ்சி மிஞ்சிச் செய்யக்கூடியது என்னவென்றால் மறுபரிசீலனை செய்தல், மதிப்பீடு செய்தல், கற்று அறிதல், தீர்மானங்களை எடுத்தல், பின்னர் பூவுலகில் அடுத்த சுற்று வருவதற்காகத் தன்னைத் தயார் செய்தல் அவ்வளவுதான். அங்கே என்றால் எந்த விஷயத்தை மேற்கொள்ள என்று ஆரம்பத்தில் நீங்கள் திட்டமிட்டீர்களோ அப்பணியை நிறைவேற்றுவதற்குப் போதுமான நிறைய வாய்ப்புகள் இருக்கும். அல்லது இன்னொருவரின் வாழ்க்கைப் பாதையில் ஒளியை உண்டாக்கவாவது இயலும். அப்படிச் செய்யும் போது நிச்சயமாக உங்களுக்கு முன்னேற்றமேற்படும்"
அப்போது லிலி இடையிற் புகுந்து பின்வருமாறு சொன்னார்: "மனிதவுடலின் சபலங்களையெல்லாம் வென்று எப்படி நாம் வளர்ச்சியுறலாம்? உங்களுக்குள்ளிருக்கும் சிறு குரலைச் செவிமடுப்பதன் மூலமே."

Monday, August 10, 2020

பதினான்காம் அத்தியாயம் - உயர்ந்த தளங்களும், ஏனைய கிரகங்களும் (Higher Planes and Other Planets)

                          
ஆர்தர் எப்போதும் எட்கர் கேஸி (Edgar Cayce), யோகானந்தா, பெற்றி வைற் போன்ற மிகவும் முன்னேறிய ஆத்மாக்களைப் பற்றிச் சொல்கையில் எமது ஆவலைத் தூண்டும் விதமாக 'உயரிய தளங்கள்' 'ஏனைய கிரகங்கள்' போன்ற பதங்களைக் கையாள்வார். அப்பதங்களை விளக்குமாறு நான் கேட்டதற்கு ஆர்தர் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி பின்வருமாறு எழுதினார்: "நீ கேட்கும் அந்த உயரிய தளங்கள் உண்மையில் உயர்வான உணர்வு நிலைகள் தான். அதாவது இடம் ஒரே மாதிரியானது தான். ஆனால் அவர்களின் உணர்வு நிலைகள் மிகமிகத் துல்லியமானவை. எனவே எமது நிலையில் உள்ளவர்கள் போதுமான தயாரிப்பின்றி அவர்களின் நிலைக்கு முன்னேற முடியாது. ஆனால் அதே நேரத்தில் சில உயரிய தளத்தில் இருப்பவர்கள் எவ்விதக் கஷ்டமுமின்றி எமது தளத்திலும் அவர்கள் தளத்திலும் ஒரே நேரத்தில் வசிக்கக் கூடியதாக இருப்பார்கள். இது எப்படியென்றால் கிட்டத்தட்ட எங்களது நிலைக்கும் உங்களது நிலைக்கும் இடையேயுள்ள வித்தியாசம் தான். எமக்கு நேர் மேலுள்ள தளத்தில் இருப்பவர்களின் இருப்பை நாம் உணர்வதிலும் பார்க்கக் கூடுதலாக அவர்கள் எமது இருப்பை உணர்வார்கள். அந்த நிலைக்கு முன்னேறுவதற்கு முன் சிற்சில வழிகளில் அவர்கள் தங்களைத் தயார் செய்ய வேண்டும். முதலாவது உலகியல் சம்பந்தமான எதிர்மறை எண்ணங்கள் ஏதாவது இருப்பின் அவற்றைச் சீர்செய்ய வேண்டும். அதன்பின் படிப்படியாக அவர்கள் மனநிலை வளர்ச்சியும் ஆத்மீக வளர்ச்சியும் அடைவார்கள். பின்னர் மறைபொருளை உணரக்கூடிய உயர்ந்த அறிவைக் கற்பதற்கு அவர்கள் தயாரென்றால் அந்த நிலைக்கு முன்னேறுவார்கள். பூவுலகில் மீண்டும் பிறப்பெடுப்பதன் மூலம் தங்களது முன்னேற்றமானது விரைவாக்கப்படக் கூடுமென எண்ணுபவர்கள் மிக அபூர்வமாகவே அடுத்த உயர் நிலைக்கு முன்னேறிச் செல்வார்கள். ஏனெனில் அப்போது பூவுலகில் மீண்டும் பிறப்பதற்கான நேரடியான வழி முறைகளிலிருந்து விலகி விடுவார்கள்.
தான் பூவுலகுக்கு ஆர்தர் ஃபோர்டாகப் பிறப்பெடுப்பதற்கு முன்னர் உயரிய தளத்தில் சில காலங்களைக் கழித்ததாக முன்பு ஒரு தரம் ஆர்தர் ஃபோர்ட் குறிப்பிட்டிருந்ததை நினைவு படுத்திய நான் அவருக்கும் லிலிக்கும் அந்தத் தளம் நன்கு பரிச்சயமா எனக் கேட்டேன். 'ஆம்' என்ற அவர் மேலும் தொடர்ந்து பின்வருமாறு சொன்னார்: "லிலி கூடுதலான நேரத்தை அந்த உயர் அலை வரிசையில் உள்ள தளத்திலேயே கழிக்கிறார். அதைப் பற்றி உங்களுக்கு அதிகம் சொல்ல அவரால் இயலாது. ஏனெனில் உங்களின் வரையறுக்கப்பட்ட அறிவால் அவர் சொல்வதை அதிகம் புரிந்து கொள்ள இயலாது. முதலிலேயே சொன்னது போல் அது வேறு ஒரு தளம் என்பதிலும் பார்க்க உயரிய உணர்வு நிலை என்பதே சாலப்பொருந்தும். ஏனெனில் பிரபஞ்சம் ஒன்றே தான். அவர் அநேகமாக பூவுலகில் மீண்டும் பிறவியெடுக்க மாட்டார். ஆனால் அவர் விரும்பின் மீண்டும் பிறவி எடுக்கக் கூடிய தகுதி அவருக்கு உள்ளது.
"அவரது கடைசிப் பிறவியில் அவர் ஒரு எழுத்தாளராக இருந்தார். இப்போது பல எழுத்தாளர்கள் அங்குள்ளதால் இங்கு வேறு பலரால் ஆற்ற முடியாத சில விஷயங்களை அவர் முயல்கிறார். அதாவது இங்கு வந்துள்ள அப்படியான எழுத்தாளர்களின் முன்னேற்றத்துக்கு ஆலோசனைகள் வழங்குதல், பூவுலகில் உயர்வான ஆத்மீக ஆய்வுக் கட்டுரைகள் எழுதுபவர்களுடன் நேரடியாக வேலை செய்வது போன்ற வேலைகளில் அவர் ஈடுபடுகிறார். உணர்வு நிலைகளின் (consciousness) வேறுபாடுகளைச் சொற்களிலே விபரிப்பதென்பது மிக மிகக்கடினம். ஹீலியம் என்னும் வாயுவினால் நிரப்பப்பட்ட ஒரு பலூனை ஒரு கணம் எண்ணிப் பார்ப்போம். பூமியிலிருக்கும் போது அதனை அனைவரும் பார்த்துத் தொட்டு உணரக்கூடிய விதமான ஒரு சிறந்த பௌதீக உருவமாக அது இருக்கும். ஆனால் அதனைப் பிணைத்திருக்கும் கயிறு அறுக்கப்பட்டவுடன் அது பூமியின் பிணைப்புகளிலிருந்து விடுபட்டு உயரே செல்கிறது. இதனை இறப்பின் போது ஆத்மாவைப் பூதவுடலிலிருந்து விடுவிக்கும் அந்த வெள்ளி இழையுடன் ஒப்பிடலாம். அந்த பலூனானது வளிமண்டலத்துக்கு மேலுள்ள மெல்லிதான அடுக்கு வளி மண்டலத்தை அடையும் வரை உயரே உயரே போனாலும் இன்னும் அது பூமியில் இருக்கும் போது இருந்தது போலவே தெளிவானதாகவும் தொட்டு உணரக்கூடியதாகவும் தான் இருக்கும். இருந்தாலும் இனிமேல் மனிதர்களால் பூமியிலிருந்து அதனைப் பார்க்கவோ உணரவோ முடியாது. அது மானிடரின் பார்வையில் இருந்து மறைந்து வானில் உயர உயரப் பறந்து மனிதரின் உடனடிப் புலனுணர்வுக்கு எட்டாததாகப் போய் விடினும் இன்னமும் அது உயிர்ப்புள்ளதாகத் தான் இருக்கும். சிறிது காலம் சென்றபின் அது பூமியுடனான அனைத்துத் தொடர்புகளையும் இழக்கிறது. அந்த பலூனுக்கு அதனது ஞாபகத் திறனாலும் அறிவாற்றலாலும் கீழே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது நன்றாகத் தெரியும். எனினும் பூமியில் இருப்பவர்களுக்கு அதனுடன் எந்த விதமானதொரு தொடர்பும் இருக்காது. நான் இப்போ கூறிய இந்த உதாரணமானது ஒரு முழுமையான உதாரணமில்லைத் தான். ஆனால் வரையறைக்கு உட்பட்ட அறிவால் விளங்கிக் கொள்ளக் கூடியவாறு புரிய வைப்பது மிகவும் கடினம்.
"இந்த உயர்வான உணர்வு நிலையில் உள்ள மனித ஆத்மாவானது எப்படிப் பூதவுடலுடன் இருக்கையில் உயிர்ப்புள்ளதாகவும் விழிப்புள்ளதாகவும் இருந்ததோ அவ்வாறே இப்போதும் இருக்கும். ஆனால் பூதவுடலுக்குரிய பந்தங்களில் இருந்து முழுமையாக விடுபட்டிருக்கும். நாம் இப்போ இருக்கும் இடைப்பட்ட நிலையில் எமக்குப் பூவுலக பந்தங்களும் மன அழுத்தங்களும் உள்ளன. ஆனால் லிலி அந்த உயர்வான உணர்வு நிலைக்குப் போகையில் பூவுடல் சம்பந்தப்பட்ட அனைத்து வகையான சலனங்களையும் விட்டு விடுவார்."
பூவுலக வாழ்க்கைக்கு இடைப்பட்ட காலத்தில் யுரேனஸ் கிரகத்துக்கோ அல்லது வேறு கிரகங்களுக்கோ உணர்வு நிலையில் ஒரு ஆத்மாவானது செல்லலாம் என எட்கர் கேஸி கூறியதன் அர்த்தமென்ன என நான் கேட்டேன். அதற்கு அவர் பின்வருமாறு பதிலளித்தார்: "பல கிரகங்கள் பல்வேறு உணர்வு நிலைகளில் உள்ள ஆத்மாக்களினால் இடம் பிடிக்கப் பட்டுள்ளன. அவற்றுள் சில பூமியில் வசிப்பவர்களிலும் பார்க்க உயர்வான உணர்வு நிலைகளாயும் சில தாழ்வான உணர்வு நிலைகளாயும் இருக்கும். ஆனால் முன்னேறும் நிலைகளுக்கு இடையேயுள்ள வேறுபாடுகளினால் சில அதிர்வு நிலைகளில் உள்ளவர்கள் மற்றவர்களிலும் பார்க்கக் கூடிய விரைவில் வளர்ச்சியுறுவார்கள். எனவே சிலர் சிறிது காலத்துக்கு வீனஸ் கிரகத்திலோ யுரேனஸ் கிரகத்திலோ செவ்வாய்க் கிரகத்திலோ அல்லது வேறு கிரகங்களிலோ சென்று இருக்கலாம். எப்போதாவது உங்களால் கிரகிக்கப்படும் வேறு கிரகங்களுக்கு இடையேயுள்ள தகவல் பரிமாற்றங்கள் உண்மையில் அதிர்வு நிலைகளில் அவர்களால் விண்வெளியில் அனுப்பப்படக் கூடிய எண்ண வடிவங்களே ஆகும். சாதாரணமாக அவை உங்கள் கருவிகளில் பதிவு செய்ய முடியாத அளவுக்கு உயர் அதிர்வெண்களைக் கொண்டவையாகும். ஆனால் சில சமயங்களில் சில வளிமண்டல நிலைகளால் அவற்றின் வலிமை போதிய அளவு குறைக்கப்படும் பட்சத்தில் உங்களது மிக நுணுக்கமான கருவிகள் அவற்றாற் பாதிக்கப்படுவது உண்டு." 
இன்னொரு நாள் ஃபோர்ட் உயர் நிலைகளைப் பற்றி இவ்வாறு சொன்னார்: "எனது நினைவுக்கு எட்டிய வரையில் அங்கேயிருக்கும் வேலைகள் சற்றே வேறுபட்டவை. அதாவது புதிய ஆத்மாக்கள் வருகையில் அவர்களுக்கு உதவுவது மற்றும் தத்துவசாஸ்திரம் கற்பது என்பவற்றுக்குப் பதிலாக அந்த முன்னேற்றமடைந்த ஆத்மாவானது இந்தக் கோட்பாடுகளைப் பரிசீலித்து அவற்றை உண்மையென நிரூபிக்கும் அதே நேரம் உயிர் வாழ்க்கை உள்ள ஏனைய கிரகங்களுக்குச் சென்று அவர்களுக்கு எமது வாழ்க்கை முறைகளைச் சொல்வது போன்ற சுவாரஸ்யமான பணிகளைச் செய்யலாம். ஆரம்பத்தில் இங்கே அனைவருமே ஒன்றாகத் தான் இருந்தோம்.
அட்லாண்டிஸ் என்ற அழிந்து போன கண்டத்தில் வாழ்ந்தவர்களான அட்லாந்தியர்களில் (those from the lost continent of Atlantis) பலர் மிக முன்னேற்றம் அடைந்தவர்கள் என்பதால் வேறு தளங்களிலும் கிரகங்களிலும் வாழ்ந்தாலும் இவ்வுலகில் நடப்பவற்றைக் கூர்ந்து கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஏனெனில் அட்லான்டிஸின் ஒரு பகுதியானது இன்னும் பத்து வருடங்களில் மேலே வருகையில் கண்களுக்குப் புலப்படும். இந்த அட்லாந்தியர்கள் தாம் எல்லாரிலும் பார்க்கச் சிறந்த வர்க்கமாக இருந்திருக்கிறார்கள் என்பதை நிரூபிப்பதில் மிகவும் ஆர்வமாக உள்ளனர். இப்போ நடைபெறும் காலமான கும்பராசிக்குரிய காலத்தில் (Aquarian Age) மனித இனமானது அந்த எளிதில் புரியமுடியாத அறிவை மீண்டும் சிறிது பெறமுடியும். இந்த அட்லாந்தியர்களில் பலர் மீண்டும் மீண்டும் பூவுலகில் பிறந்திருக்கிறார்கள் என்பதைச் சொல்ல வேண்டிய தேவையில்லை. மிக மிக உயர்வான அலை அதிர்வுகளைக் கொண்ட சில அட்லாந்தியர்கள் மீண்டும் பூவுலகுக்குத் திரும்பவில்லை என்றாலும் நீயும் நானுமே முன்னர் ஒரு காலத்தில் அட்லாந்தியர்களாக இருந்திருக்கிறோம். அந்த உயர்வான அலை அதிர்வுள்ளவர்களை மனிதர்களில் ராஜகுமார்கள் என நாம் உரைக்கலாம். அவர்கள் உயர்ந்த ஆத்மாக்களின் வரிசையிலேயே மிக உயர்வான இடத்தில் உள்ளவர்கள். அவர்கள் இனிமேல் பூவுலகுக்கு வரத்தேவையில்லை. ஆனால் அட்லாண்டிஸ் மேலே வருகையில் சிலர் மீண்டும் வர ஆர்வமாக உள்ளனர். ஏனெனில் மிக மிக உன்னத மதிப்புகள் கொண்ட பொருட்கள் சிதைவுறாமல் பாதுகாப்பாக மறைத்து வைக்கப்பட்டுள்ள இடங்களுக்குப் பூவுலக மக்களை இட்டுச் சென்று வழி காட்டுவதில் பலர் ஆர்வமாக உள்ளனர். அதே வேளையில் அவர்கள் நான் இப்போ இருக்கும் நிலையில் பார்க்க மேல் நிலைக்கு முன்னேறிய ஆத்மாக்களுக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதாவது பிரபஞ்சத்தின் ரகசியங்களை அவர்கள் புரிந்து கொள்ள அவர்களுக்கு உதவி புரிகிறார்கள். பூவுகில் வாழும் ஆத்மாக்களுக்கு முன்னர் தானாகவே தெரிந்த ரகசியங்களே அவை"  
ஒரு வாரத்தின் பின் உயர்வான உணர்வு நிலைகளைப் பற்றி லிலி நேரடியாகச் சொல்வாரென ஃபோர்ட் அறிவித்த பின் லிலி பின்வருமாறு எழுதினார்: "இந்த இடைப்பட்ட நிலையில் நாம்  கற்கையில் எமது அடுத்த கட்டத்தைத் தீர்மானிக்கும், அதாவது மீண்டும் பிறப்பெடுப்பதா அல்லது மேல் உணர்வு நிலைகளுக்குச் செல்வதா எனத் தீர்மானிக்கும் தகுதி தரப்படுகிறது. நான் செய்தது போல் சிலர் அடுத்த கட்டத்தைத் தெரிவு செய்திருக்கிறோம். எமது தத்துவரீதியான கருத்துப் பரிமாற்றங்களை முடித்து, அத்துடன் பூவுலகிலிழைத்த தவறுகளை மீண்டும் பரிசீலித்து முடிய நாம் தயாரானதும் நமது ஆத்மாவில் நாம் ஒரு இலகுத் தன்மையை உணர்வோம். அப்போது எமது எண்ணத்தின் மிகச் சிறிய முயற்சியாலேயே நாம் எம்மைப் புதியதொரு உணர்வு நிலைக்கு உயர்த்த இயலுமாக இருக்கும். அப்புதிய உணர்வு நிலையில் இங்கு இருப்பவர்களுடனும் பூவுலகில் இருப்பவர்களுடனும் சிறிது காலத்துக்குத் தொடர்புகளேதும் இன்றி இருப்போம்.
"நாம் பின்னர் மிக மிகத் தூய்மையான நுட்பம் வாய்ந்த நிலைக்குச் செல்வோம். அப்போது ஏனைய ஆத்மாக்களுடன் சில காலத்துக்கு எந்த விதமான தொடர்பும் அற்றிருப்போம். இந்த நிலையானது ஓரளவிற்குத் தனிமை வாய்ந்த அனுபவமாகும். ஏனெனில் இங்கேயும் பூவுலகிலும் கூடுதலாக எண்ணங்களையும் சிந்தனைகளையும் நாம் பகிர்ந்து கொண்டே இருக்கிறோம். அதன் பின் சில காலத்துக்கு விண்வெளி என்று சொல்லக்கூடிய இடத்தில் நாம் மிதக்கலாம். ஆனால் அது அவ்வளவு உயர்ந்த அலை அதிர்விலுள்ளது. எனவே பூவுலக மனிதனுக்குப் புரியும் படி எந்த வழியிலும் சொல்ல இயலாது. நாம் யுரேனஸ் கிரகத்தின் ஆதிக்கத்தின் கீழே இருக்கிறோமெனில் அங்கேயுள்ள மிகப் பயங்கரமான அதிர்வுகளின் காரணமாக ஆரம்பத்தில் எமது அடிப்படையே அதிரும். அது மிகவும் உக்கிரமான வளிமண்டலமாகும். அல்லது அங்கே வளிமண்டலம் இல்லை எனலாம். அதாவது கதிர்கள், கதிர்வீச்சுகள் மற்றும் அதிர்வுகளில் இருந்தும் எந்த விதமான பாதுகாப்புக்களும் இல்லை. எம்மால் அந்தச் சூழ்நிலையைத் தாங்க இயலுமென்றால் அங்கே நாம் சிறிது காலத்துக்குத் தங்கியிருப்போம். அந்த வேளையில் எமது முன்னேற்றப் பாதையின் அடுத்த கட்டத்துக்கு எம்மைத் தயார்ப்படுத்திக் கொண்டும் இருப்போம்.
"அதன் பின்னர் நாம் வெள்ளிக் கிரகத்துக்கோ செவ்வாய்க் கிரகத்துக்கோ அல்லது எமது சூரிய குடும்பத்தின் ஏதாவது ஒரு கிரகத்தின் உணர்வு ஆளுமைகளுக்கோ செல்வோம். நாம் அந்தக் கிரகங்களின் அதிர்வலைகளின் ஆதிக்கத்தின் கீழே தான் இருப்போம். அந்தக் கிரகத்தின் ஒரு பகுதியாக இருக்க மாட்டோம். நீங்கள் பூமியில் எவ்வாறு நடமாடித் திரிவீர்களோ அவ்வாறே நாமும் இக்கிரகங்களின் மேற்தளங்களில் நடமாடித் திரிவோம். ஆனால் எமது சூட்சும சரீரத்துக்கு எடை கிடையாது. அத்துடன் தூல வடிவமும் இல்லை. நாம் கூடுதலாக எண்ண வடிவங்களே. எங்களைப் போன்ற ஏனைய ஆத்மாக்களும் அங்கு வருவதால் நாம் அவர்களுடன் ஒன்று கலப்பதாகச் சொல்ல முடியும். ஆனால் எல்லாம் எண்ண வடிவங்களிலேயே. சில கிரகங்களின் அலை அதிர்வுகள் அமைதியாகவும் சாந்தமாகவும் இருக்கும். மற்றும் சில கனல் பறக்கும் எதிர் மறையான தள்ளுகை, இழுவைகளுடன் இருக்கும். அனைத்து உயிர்களும் ஒன்று என்ற உண்மையைப் புரிந்து கொள்ளும் பொருட்டும் அதே நேரம் எம்மை ஆளும் விதிகளைப் புரிந்து கொள்ளும் பொருட்டும் நாம் இவற்றையெல்லாம் அனுபவிக்க வேண்டும்.
மறுநாட் காலை லிலி பின்வருமாறு தொடர்ந்தார்: "ரூத், இங்கே லிலியும் குழுவினரும் உள்ளோம். ஆர்தரும் பங்கேற்கிறார். எந்த இடைப்பட்ட நிலையிலிருந்து நாம் உங்களுடன் தொடர்பு கொள்கிறோமோ அந்த இடைப்பட்ட நிலையிலிருந்து ஆத்மாக்கள் முன்னேறுகையில் என்ன நடக்கிறதென்பதை இன்னும் கூடுதல் விளக்கமாகச் சொல்வதற்கு மிகவும் ஆவலாக உள்ளோம். இந்த உயரிய நிலையில் இப்படியான இருவழித் தகவல் பரிமாற்றமானது சாத்தியமற்றது. எட்கர் கேஸி போன்ற சில ஆத்மாக்கள் இதற்கு விதிவிலக்காகும். அவர் பூமியிலிருக்கையில் அவரும் தனது அலையதிர்வுகளை அதிகரிக்க நாமும் எமது அலையதிர்வுகளை அதற்கேற்றவாறு குறைத்து அவரை நாம்  இடைவழியில் சந்தித்ததாகச் சொல்லலாம். எங்களுடன் உரையாடக் கூடிய விதமாக ஒருவரைத் தயார் செய்வதற்கு நான் உயர் நிலையிலிருந்து இந்த இடை நிலைக்கு இறங்கி வரவேண்டும். ஆனாலும் அதற்காகத் தாங்கள் மனமிரங்கி ஆசனத்திலமர்ந்து எனது செய்தியை ஏற்கத் தயாராகும் வரை உனக்குப் பின்னால் சுற்றிக் கொண்டு திரிய இயலாது. நான் உன்னைக் குத்திக் காட்டுவதாக எண்ணாதே (அட கடவுளே! என நான் என்னுள் எண்ணிக் கொண்டேன்). ஆனால் நீ நேரத்துக்கு எழுந்து இந்தக் காலை அமர்வுகளுக்குத் தயாராகிறாயா என்று காத்துக் கொண்டு இருப்பதிற் பார்க்கக் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்த பல விஷயங்கள் உள்ளன என்பதை உனக்கு உணர்த்த விரும்புகிறேன்.
"நான் எனது வாழ்நாளைக் கூடுதலாகச் செலவழிக்கும் இந்த அடுத்த நிலையில் நான் உருமாற்றம் அடைந்திருப்பேன் எனச்சொல்லலாம். நிழலுருவை எடுப்பதற்குப் பதிலாக நான் ஒளி வடிவை எடுத்திருப்பேன். எம்மைப் படைத்தவனின் அற்புதங்களில் நாம் கொள்ளும் பக்தியின் தீவிரமே இதற்குக் காரணமாகும். நாம் ஒரு கிரகத்தின் அதிர்வலைகளிலிருந்து வேறொரு கிரகத்தின் அதிர்வலைக்கு வெகு இலகுவில் நழுவிச் செல்வதால் நாம் ஒளிக்கற்றையாக இருப்பதே பொருத்தமாகும். நாம் எந்த வடிவை எடுத்தாலும் நாம் இல்லாமற் போக மாட்டோம். ஏனெனில் நாம் ஒரு போதும் எம்மிலிருந்து விலகிச் செல்ல மாட்டோம். மிகவும் பரிமாண வளர்ச்சி அடைந்த ஆத்மாக்கள் பூவுலகில் என்றும் அன்புடனும் பரிவுடனும் எப்போதும் உதவிக்கரம் நீட்டக் கூடியவர்களாகவும் நுண்ணறிவு மிக்கவர்களாகவும் அழகானவர்களாகவும் மனிதருள் மாணிக்கங்களாகவும் இருக்கும் அதே நேரம் ஏன் வேறு சில ஆத்மாக்கள் தங்கள் பேராசையாலும் காட்டுமிராண்டித் தனங்களாலும் சுயநலப் போக்காலும் கிட்டத்தட்ட விலங்குகளைப் போலவே நடந்து கொள்கிறார்கள் எனச் சிலர் வியக்கலாம். ஒருவர் எப்போதுமே தனக்குரிய தனித்தன்மை மாறாமல் இருப்பாரா என நீ கேட்கலாம். ஆம் என்பதே அதற்குரிய பதிலாகும். அது முறையற்றது என நீ நினைப்பதற்கு முன் மேலுமொன்று சொல்ல விரும்புகிறேன். அதாவது ஆரம்பத்தில் அவர்களும் இறைவனின் சுடர்ப் பொறிகளாகவே தான் ஆரம்பித்தனர். ஆனால் பூவுலகிலும் இங்கேயுமாக மாறி மாறி வாழ்க்கை தொடர்கையில் குறிக்கப்பட்ட சூழ்நிலைகளில் ஒவ்வொருவரும் நடந்து கொள்ளும் விதங்களிலிருந்து ஒவ்வொருவருமே தமக்குத் தமக்கென ஒரு தனித்தன்மையை வளர்த்துக் கொள்கிறார்கள். அத்துடன் எப்படிப்பட்ட சூழ்நிலைகளில் பூவுலகில் நாம் பிறப்பதென்பதை நாமே தீர்மானிப்பதால் பூவுலகின் ஒரு பிறவியிலிருந்து இன்னொரு பிறவிக்குப் போகையில் அந்தச் சூழ்நிலைகளில் ஏற்படும் மாற்றங்களினாலும் தாக்கங்கள் ஏற்படும். சுவாரஸ்யமாக இருக்கிறதல்லவா? ஆரம்பத்தில் இறை அன்பின் பூரணக் கதிர்வீச்சுகளாக ஒவ்வொருவரும் ஏனையோரின் நகல்களாக இருந்தவர்கள் பூவுலக வாசனைகளினால் எப்படி மாறி இருக்கின்றனர் பார்! இது உலக ஆசைத் தூண்டுதல்களை எப்படி நாம் எதிர்கொள்கிறோம் என்பதையும் குறிப்பதாகும். எனவே ஒருவர் மூடனாக இல்லாமல் திறமை வாய்ந்தவராக இருந்தால் அவரே தன்னைப் பற்றியும் தான் ஆசைகளின் தூண்டுதல்களுக்கு எப்படிப் பதிலளிக்கிறார் என்பதைப் பற்றியும் ஆராய்ந்தறிய வேண்டும். மாற்றுவதற்குக் கடினமாக இருக்கக் கூடிய பழக்கங்களைப் பழகாமலிருங்கள். பிறர் உதவியென்று கேட்டால் அவர்களுக்கு உதவுங்கள். அத்துடன் என்றும் இறையுணர்வுடன் செயற்படுங்கள்."
மே தினத்தன்று மிக முன்னேறிய நிலைகளைப் பற்றி அவர்கள் மிக விபரமாகப் பின்வருமாறு கூறினார்கள்: "இங்கு நாம் மீண்டும் பூவுலகுக்குச் செல்வதா அல்லது நீங்கள் சொல்வது போல் மூன்றாம், நான்காம் நிலைகளுக்குச் செல்வதா எனத் தெரிவு செய்ய முடியும் என நான் முதலிலேயே உனக்குச் சொல்லியிருக்கிறேன். இந்த நிலைகளானது ஒன்றிலிருந்து ஒன்று அதிகம் வேறுபட்டவையல்ல. ஒரேயொரு வித்தியாசம் என்னவென்றால், மூன்றாவது நிலையில் நாம் உயர் அதிர்வலைகளில் நன்கு தேர்ச்சியடைகிறோம். அத்துடன் உங்களால் ஒலி, ஒளி என்று அழைக்கப்படும் இன்னும் கூடுதலான அதிர்வலைகளுக்கு உயர்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். ஒலிவாங்கியை (ஆன்டெனா) ஒலியதிர்வுக்குத் தகுந்தவாறு பூவுலகில் நாம் மாற்றியமைப்பது போல் இங்கே ஒலி, ஒளி ஆகியவற்றின் அலைகளுக்கேற்ப எம்மை ஒத்திசைக்கச் செய்ய இயலும். அந்த அலைகளானவை பூவுலகில் வாழும் மனிதனுக்கு மின்னதிர்ச்சி அளிக்கக் கூடிய அல்லது அவனது காதுகளை நிரந்தரச் செவிடாக்கக் கூடிய மிகச் சக்தி வாய்ந்த கதிர் வீச்சுகளாகும். நாம் மிக மெல்லியதொரு கதிர்வீச்சின் மூலமாகத்தான் இவ்வாறான உயர்ந்த சக்திகளுக்கு இசைவாக்கமடைகிறோம். சூட்சும சரீரத்துடனிருக்கையில் கதிர் வீச்சுகளிலிருந்து எம்மை நாம் பாதுகாக்கத் தேவையில்லை. இப்படிப்பட்ட உயர்வான அதிர்வலைகளுக்கு இசைவாக்கமடையும் போது நாம் கிட்டத்தட்டத் திரவம் எனச் சொல்லப்படக் கூடிய மாதிரியான ஒரு நிலைக்கு மாற்றமடைகிறோம். உண்மையில் திரவமாக இல்லாவிடினும் பிரபஞ்சத்தின் வடிவங்களுள் நாம் ஊற்றப் படுகின்றோம் எனச்சொல்லலாம். நாம் பிரபஞ்சத்துடன் ஏறக்குறைய இரண்டறக் கலப்பதால் நாம் எமது தனித்தன்மையை அல்லது 'நான்' எனும் அகந்தையைச் சிறிது காலத்துக்கு இழக்கிறோம். நாம் பிரபஞ்சமெனும் மகா சமுத்திரத்தின் ஒரு பகுதியாக இருக்கிறோம். அது நான் உனக்கு முதலில் உரைத்த விடயமான நாம் முழுமையான பரிபூரணத்தின் ஒரு பகுதியாக உள்ளோம் என்ற உண்மையை இங்கு நாம் உணர்வதற்கு எமக்கு உதவுகிறது.
"மூன்றாவது நிலையைப் பற்றிச் சொன்னேன். நான்காவது நிலையைப் பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்: செவ்வாய்க் கிரகம், ஜுப்பிட்டர் கிரகம், யுரேனஸ் கிரகம், வீனஸ் கிரகம் (வெள்ளி) மேலும் இவை போன்ற வேற்றுக் கிரகங்களில் சூட்சும வடிவில் உயர்வான உணர்வு நிலையில் வசிப்பது; இக்கிரகங்கள் உயிரினங்களைக் கொண்டிருப்பினும் அவை பூவுலகில் வாழும் பௌதீக மனிதனின் அறிவுக்கெட்டிய முறைகளால் முற்றிலுமாக அடையாளம் காணப்பட முடியாதவாறே உள்ளன. இக்கிரகங்கள் எல்லாம் ஒன்றிலிருந்து ஒன்று முற்றிலுமாக மாறுபட்டது. ஒவ்வொன்றும் உயிர் வளர்ச்சியின் ஒவ்வொரு நிலைகளைக் கொண்டுள்ளன. அதாவது மிகத்தாழ்ந்த நிலைகளாகிய உயிரணுக்களிலிருந்து (protoplasm) மிகவும் உயர்ந்த நிலைகளாகிய எண்ண வடிவங்கள் வரை மாறுபடுகின்றன. யுரேனஸ் கிரகமானது தீவினையிலிருந்து நல்வினைக்குச் செல்பவர்களுக்குக் குறிப்பாக மிகவும் தீங்கு விளைவிக்கக் கூடிய கிரகமாகும். ஆனாற் சனிக்கிரகமானது மிக மிக முன்னேற்றமடைந்த கிரகமாகும். மிகவும் கீழான உணர்வு நிலைகளினால் உண்டாகும் குழப்பங்கள் ஏதுமின்றி அங்கு தூய எண்ண அலைகளே நிரம்பியிருக்கும். இந்தக் கிரகங்களில் எண்ண வடிவில் சிறிது காலத்துக்கு வசிப்பவர்கள் சில நேரங்களில் பூமியில் வசிப்பவர்களின் மனநிலைக்கு சற்றே மாறுபட்ட மனநிலையில் இருப்பார்கள். அதாவது நல்ல, நியாயமாகச் சிந்திக்கக் கூடிய மனநிலை எனப் பூமியிலிருப்பவர்கள் நினைக்கக் கூடியதான மனநிலைக்கு முற்றிலும் மாறுபட்ட மனநிலையில் உள்ளதால் அவர்கள் அதன் பின் எப்போதாவது பூவுடலுடன் பிறப்பதற்குத் தீர்மானித்தால் அவர்கள் அந்த நேரத்தில் கூடப் பிறக்கும் சக மனிதர்களுடன் சற்றே இணக்கம் குறைவாகக் காணப்படுவார்கள். சில நேரங்களில் அவர்கள் தங்கள் வாழ்வில் அவ்வளவு தூரத்துக்கு ஒன்றி விட்டதனால் அங்குள்ள ஏனைய ஆத்மாக்களுடன் ஒத்துப் போக இயலாமலிருக்கலாம்; அல்லது செவ்வாய்க் கிரகத்திலோ அன்றி வேறெதிலுமோ உள்ள பகைமை உணர்வுகள், போர்க்குணங்கள் போன்றவற்றின் தாக்கங்களினாற் பூவுலகின் சௌகரியமான வாழ்க்கையை ஏற்க இயலாத விதமாக ஒரு விரோத மனப்பான்மையைக் கொண்டிருக்கலாம்".
இந்தக் கட்டத்தில் ஆர்தர் இடைமறித்துப் பின்வருமாறு உரைத்தார்: "தற்போது நான் இருக்கும் இந்த நிலையில் நான் இன்னும் மற்றைய கிரகங்களுக்குச் செல்லவில்லை. ஆனால் ஏனைய பிறவிகளுக்கு இடையில் மூன்று கிரகங்களில் நான் வசித்தது எனக்கு நினைவில் உள்ளது. நான் மீண்டும் அங்கு செல்வேனா இல்லையா என்பதோ அல்லது எனது பிறப்பிறப்புச் சுழற்சியை நிறைவு செய்வதற்காக மீண்டும் பூவுலகிற் பிறப்பேனா இல்லையா என்பதோ எனக்கு இன்னும் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் தெரியும். அதாவது யுரேனஸ் கிரகத்துக்கு மீண்டும் செல்வதற்கு எனக்கு விருப்பமில்லை."
மற்றைய கிரகங்களிலே எதிலாவது பூவுலகில் வசிப்பவர்களின் உடலமைப்புக்கு நிகரான உடலமைப்பைக் கொண்டவர்கள் இருக்கிறார்களா என்று நான் லிலி, ஆர்தர், குழுவினரைக் கேட்டேன். அதற்குரிய பதில்: இல்லை. பூமியில் இருப்பவர்கள் போல் இரத்தமும் தசையும் கொண்டவர்கள் அவ்விடங்களில் இல்லை. அந்தக் கிரகங்கள் சுவாராஸ்யமான உருவங்களுடனான எண்ண வடிவங்களைக் கொண்டிருக்கின்றன. அதாவது இறகுகளைக் கொண்ட முள்ளங்கிக் கிழங்குகள் (radishes with wings), வால்களுடனான கோசுக்கிழங்குகள் (turnips with tails), சிரிக்கும் இலைக்கோசு (lettuce that laughs) என்பவற்றுடன் காற்றிலும் நீரிலும் கூட நடக்கக் கூடியவிதமான விலங்கு வடிவங்களும் உள்ளன. அத்துடன் பூவுலகவாசிகளை அதி பயங்கரமாகத் திகிலூட்டக் கூடிய விதத்தில் ஆனால் அதே நேரத்தில் அங்குள்ளவர்களுக்குச் சாதாரணக் கடற்கரைக் கற்கள் போல இருக்கக் கூடிய விதமான பல விகாரமான உருவங்களைக் கொண்ட கனிம வடிவங்களும் உள்ளன. அவர்கள் பல்வேறு விதங்களில் ஒருவருடன் மற்றவர் தொடர்பு கொள்ள இயலும். அத்தொடர்பு முறைகள் பூவுலக வாசிகளை விட உயர்ந்த அல்லது தாழ்ந்த அதிர்வெண்களில் இருக்கக்கூடும். நாம் எவ்வாறு பூவுலகில் மறுபிறவிகள் எடுக்கிறோமோ அவ்வாறே அவர்களுக்கும் தங்களது கிரகங்களுக்குத் திரும்பும் சுழற்சிகள் உள்ளன. சில நேரங்களில் கூடுதல் தைரியசாலிகளிற் சிலர் பூவுலக வாழ்வை முயற்சி செய்ய நினைக்கலாம். ஆனால் அது அநேகமாகத் துயர் நிறைந்த முடிவாகத்தான் இருக்கும். உதாரணமாக ஆப்பிரிக்காவிலோ அல்லது வேறு இடத்திலோ ஒரு ஒதுக்குப் புறமான பகுதியில் ஒரு ஆதிவாசி காணப்பட்டால் அது அநேகமாக இப்படியான ஒரு வேற்றுக்கிரகவாசி பூவுலகில் உடலெடுத்து வசிப்பதற்குச் செய்த முயற்சியாகத்தான் இருக்கும். சில நேரங்களில் மனிதர்களைப் போற் பேசவியலாத சிறு குழந்தைகள் விலங்குகளுடன் வசிக்கையிற் கண்டு பிடிக்கப் படுவதும் இவ்வாறே இருக்கும். அவர்கள் வேற்றுக் கிரகத்தில் இருப்பவர்கள் ஆர்வத்தால் உந்தப்பட்டுப் புதுவகை உடலை முயன்று பார்க்கிறார்கள். ஒரு ஓநாய் செம்மறியாட்டின் உடையை அணிவது எப்படிப் பொருந்தாதோ அவ்வாறே அவர்களுக்கும் இது பொருந்தாது. பூவுலகவாசிகளும் சனிக்கிரகவாசிகள் போலவோ வேறு கிரகவாசிகள் போலவோ முயன்று பார்த்திருக்கிறார்கள். ஆனால் விளைவுகள் சாதகமாக அமையவில்லை. அதாவது இது வெவ்வேறு இரு விலங்குகளை இணைத்து இனப்பெருக்கம் செய்வதைப் போன்ற மடமைத் தனமாகும். நாம் மற்றைய கிரகங்களுக்குச் சென்று சிறிது நாட்கள் வசிப்போமென்று நான் சொல்வது நாம் அங்கு உயிர் வாழும் உயிரினங்கள் போல அங்கு உடலெடுத்து வசிப்பதையல்ல. நாம் அங்கு எண்ணக்கரு (thought forms) வடிவங்களாகவே செல்வோம். நாம் எண்ண வடிவில் அங்கு செல்வது பிரபஞ்ச விதிகளை அறியவும் அத்துடன் 'நாமனைவரும் ஒன்றே' என்ற என்றுமே மாறாத விதியை விளங்கிக் கொள்ளவும் தான்.
இன்னொரு நாள் பின்வருமாறு அவர்கள் எழுதினார்கள்: "மற்றைய நட்சத்திரங்கள் பூமியென்ற கிரகத்தை விட முழுக்க முழுக்க வித்தியாசமான விதங்களில் வளர்ச்சிக்கு உதவுகின்றன. இந்த இடைப்பட்ட நிலையில் இருப்பவர்களில் அதிகம் பேருக்குப் பரிச்சயமான ஒரேயொரு கிரகம் பூமியாகும். நாமனைவரும் பூமிக்குப் பயிற்றுவிக்கப்பட்ட ஆத்மாக்களாகும் (earth-trained souls). பூமியில் பௌதீக நிலையிலிருந்து சமீபத்தில் நாம் வந்த அதே நேரத்தில் வானமண்டலம் பூராவிலுமுள்ள வேறு கிரகங்களிலிருந்து எண்ணிலடங்காத வேறு பல ஆத்மாக்கள் முன்னேற்றம் அடைந்திருக்கும். சில கிரகங்கள், அங்குள்ள ஆத்மாக்கள் பௌதீக உடலை அணியாமல் எண்ணங்களால் ஆன உடலை அணியும் தூய்மையான ஆத்மீக வாசஸ்தலமான கிரகங்களாக இருக்கும். சில நட்சத்திரங்கள் பௌதீக உடலுடன் வசிக்கக் கூடியதாக இருக்கும். ஆனாற் பூமி எனும் கிரகத்தில் இருப்பதைப் போன்ற பௌதீக உடலுடன் தான் அங்குள்ள ஆத்மாக்கள் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஒரு ஆத்மா எடுக்கும் பௌதீக உடலானது அது இங்கு என்றாலும் பூமியில் என்றாலும் அல்லது வேறு கிரகங்களில் என்றாலும் அது சூழலுக்கு ஏற்புடையதாகவே அமையும். எனவே ஒரு நட்சத்திரத்துக்குப் பொருந்தக் கூடியது பெரும்பாலும் இன்னொன்றில் உள்ள முன்னேற்றங்களுக்குப் பொருந்தாது.
"நாம் மனிதனை இரு கண்கள், இரு காதுகள், ஒரு மூக்கு, ஒரு கழுத்து, கால்கள், கைகள், உடல் என்பவற்றுடன் தான் கற்பனை செய்வோம். ஆனால் ஒரு ஆத்மா தனது ஆத்மீக வளர்ச்சியை நிறைவு செய்வதற்காக மீண்டும் வெவ்வேறு வடிவங்களில் தன்னை வெளிக்கொணர்வதற்கு இது தான் ஒரேயொரு வழியென்பதல்ல. ஆம் இது பூமிக்குரிய வடிவம். அது உண்மை தான். ஆனால் அது செவ்வாய்க் கிரகத்துக்கோ, சனிக்கிரகத்துக்கோ அல்லது வான் வெளியின் எண்ணிலடங்கா நட்சத்திரங்களில் எதற்கோ பொருந்த வேண்டுமென்று அவசியமில்லை. நாம் உடலுடனிருக்கையில் எமக்கு சுவாசிப்பதற்கு நுரையீரல்களும் தொடர்ந்து இயங்குவதற்கு ஒரு இருதயமும் இருந்தன. ஆனாற் சில கிரகங்களுக்கு அப்படிப்பட்ட ஒரு இருதயமோ அன்றி நுரையீரல்களோ அவசியமில்லை. சில கிரகங்களில் அன்றாடச் செயற்பாடுகளைக் கொண்டு செலுத்தவும் சிந்திப்பதற்கும் உயிர் வாழ்வதற்கும் ஒன்றில் மிக எளிமையான அல்லது மிகச் சிக்கலான ஒரு தொழில் நுட்பம் தேவையாயிருக்கிறது.
"மற்றைய கிரகங்களிலும் நட்சத்திரங்களிலும் உள்ள ஆத்மாக்கள் முன்னேற்றங்களின் வெவ்வேறு கட்டங்களில் உள்ளார்கள். சில மிகத் தொடக்க நிலைகளிலும் இன்னும் சில மிகவும் முன்னேறிய நிலைகளிலும் உள்ளன. ஆயினும் அவையனைத்தும் இறைவனின் துடிப்பையும் அவனது அன்பு ஒளியையும் தம்மகத்தே கொண்டுள்ளன. ஒவ்வொன்றும் தனது வளர்ச்சிக்குத் தானே பொறுப்பாளிகளாகவும் சிருஷ்டி கர்த்தாவுடன் மீளவும் இணைவதற்கான பயணத்தை மீளவும் தொடர்வதற்குள் தமது பிழைகளைத் திருத்தி சீர்செய்யும் பொறுப்புகளுடனும் உள்ளன.
"ஒரு ஆத்மா பூவுலகில் மிகக் கொடூரமான அளவுக்கு வழி தவறியதனால் இன்னொரு ஆத்மாவுக்கு இழைத்த அந்தக் கொடுமையைச் சீர்செய்வதற்கு அது ஓரு நூறு கோடிப் பிறவிகள் எடுக்க வேண்டியிருந்தால் என்ன செய்வது? சில சமயம் தண்டனையைத் துரிதப்படுத்தும் முகமாகக் கடுமை வாய்ந்த ஒரு கிரகத்திலோ அல்லது நட்சத்திரத்திலோ முற்றிலும் வித்தியாசமான ஒரு உயிர்வாழ் வடிவத்தை எடுக்கக் கூடிய சந்தர்ப்பம் அவருக்கு வழங்கப்படலாம். அங்கு உள்ள சூழ்நிலைகளின் படி பாவமேதும் புரியாத புதிதாக உருவாக்கப்பட்ட ஆத்மா போல அவர் அந்தக் கடினமான சூழ்நிலைகளுக்கு ஈடுகொடுத்து நிற்பாரேயானால் பூமியென்று சொல்லப்படும் குறைந்த அளவிலான கஷ்டங்கள் நிரம்பிய கிரகத்தின் பற்பல பிறவிகளின் பாவங்களைப் போக்கக் கூடிய அளவில் அவற்றுக்குப் பரிகாரங்கள் தேட முடியும். நான் என்ன சொல்கிறேன் என்று உனக்குப் புரிந்ததா? அதாவது எல்லை மீறிப் போய் விட்ட பாவங்களுக்கான பரிகாரங்களைப் பூவுலகிற் தேடுவதில் முற்றிலுமாக நம்பிக்கையை இழந்து விட்ட அந்த ஆத்மாவானது தானே விரும்பிக் கடினமான சூழ்நிலைகள் நிறைந்த ஒரு கிரகத்தின் குடியாளராகப் பிறவி எடுப்பார். அப்போது அதன் வடிவமானது பூவுலகில் இருக்கும் உங்களைப் போன்றவர்களால் மனிதனென்று சொல்ல இயலாதவாறு இருக்கும்.
"சில ஆத்மாக்கள் மனித உருவில் இப்படியொரு வகை உயிரினங்கள் இருக்கின்றன என்பது தெரிய வர ஒரு காரணமும் இல்லாமலே வெவ்வேறு நட்சத்திரங்களிலும் கிரகங்களிலும் உயிர் வாழ்ந்து மடிந்து போகின்றன. மீண்டும் சில கிரகங்களில் பௌதீக உடலெடுக்காமல் தனி ஆத்ம உடலெடுத்துத் தூய எண்ணத் தளங்களில் (thought planes) ஆத்மாக்கள் உயிர் வாழும் என்பதையும் தெரிந்து கொள். பூவுலகில் நாம் காணும் உடலுடன் கூடிய ஆத்மாக்களைக் காட்டிலும் இவை சில சமயம் முன்னேற்றத்தின் மிக மிக உயர்ந்த தளத்தில் இருக்கும்.
"உயர் நிலைகளுக்குச் செல்வதற்காகத் தெரிவு செய்யப்பட்ட முன்னைய பூவுலகவாசிகள் பூவுலகில் துறவிகளின் மடத்துக்குச் செல்லு முன் எவ்வாறு பயிற்றுவிக்கப் படுவார்களோ அவ்வாறே மிகக் கவனமாகப் பயிற்றுவிக்கப் படுவார்கள். அவர்கள் தங்களை அதிர்வலைகளின் ஊடாகச் சில மண்டலங்களில் முன் நிறுத்துவதற்குப் பயில்வார்கள். அப்பிரதேசங்கள் சில நேரங்களில் அவர்களால் முன்னே ஆராயப் படாதவைகளாக இருக்கும். அதாவது இந்த நேரத்தில் அவர்கள் சூக்கும சரீரத்தில் பிரயாணம் செய்வது மட்டுமன்றி (பூவுலகிலிருக்கும் உணர்திறன் கூடியவர்களின் பார்வைக்குச் சில சமயம் தெரியலாம்) நாம் முதலிலேயே உரைத்தது போல் ஏனைய கிரகங்களுக்கும் பிரயாணம் செய்வார்கள். இவ்வகைப் பிரயாணமானது பிரபஞ்ச விதிகளை அவர்கள் அறிவதற்கு மிகவும் உதவுகின்றது. அத்துடன் அவர்கள் நான்காவது அல்லது ஐந்தாவது நிலைகளில் இருக்கும் போது ஒரே நேரத்திற் பல கிரகங்களிற் காணப்படுவது சகஜம். ஏனெனில் உயர் உணர்வு நிலையிலுள்ள ஆத்மாவுக்குத் தன்னை ஒரே சமயத்திற் பல இடங்களில் முன்னிறுத்த இயலும்.
"இப்போ நாம் திரையின் இப்பக்கத்தின் இறுதி நிலை அதாவது மிக மிக உயர்வான பரிபூரண நிலையைப் பற்றிப் பார்ப்போம். அதாவது இறுதியாக ஆத்மாக்கள் இறைவனுடன் இரண்டறக் கலக்கும் நிலை. அந்தப் பேரின்ப நிலையை நாம் இன்னும் அடையவில்லை என்பது தெரிந்ததே. ஆனால் இங்கே நாம் கற்றதன் படி அந்தக் கடைசிப் பூர்ணத்துவ நிலையை ஆத்மாக்கள் அணுகும் போது அவர்கள் மீண்டுமொரு முறை தமது கடந்த பிறவிகளை மறுபரிசீலனை செய்வது மட்டுமன்றி ஆதியிலிருந்து தம்மைத் தொட்ட அல்லது தாம் தொட்ட ஒவ்வொரு எண்ணங்கள், கருத்துகள், யோசனைகளையும் மறுபரிசீலனை செய்வார்கள். இது ஆறாவது நிலையின் போது நடப்பதாகும். கடைசியில் அவர்கள் தாம் புரிந்த ஒவ்வொரு தவறுக்கும் ஏதோ ஒரு விதத்திலோ எண்ணத்தாலோ அன்றி ஏதோ ஒரு வழியிலோ ஈடு செய்து எல்லா வகையான தவறுகளுக்கும் பிராயச்சித்தம் செய்து விட்டோம், எந்த விதமான ஒரு குறையும் விட்டு வைக்கவில்லை என முடிவு செய்தால் அவர்கள் இறைவனுடன் இணைவதற்குத் தயாராவார்கள். இம்முடிவில் எந்த விதமான கர்வமுமில்லை. ஆனால் ஆதியிலிருந்து வாழ்ந்த வாழ்வைப் பற்றிய மிக நுட்பமான மதிப்பீடாகும். அதன் பின் அவர்கள் நிர்மலமாக இறைவனுடன் இரண்டறக் கலப்பதற்கு ஈர்க்கப்படுவார்கள். அந்தப் பூரண நிலையை அடைந்ததன் பிற்பாடு அவ்வாத்மாக்கள் பிறப்பிறப்புச் சுழற்சிக்கு மீண்டும் திரும்பவோ தொடரவோ மாட்டார்களென்று கேள்விப்பட்டுள்ளோம் என்று தான் சொல்ல வேண்டும்."
இறைவனுடன் ஒன்றுபடுவதைப் பற்றிய இப்படிப்பட்டதொரு உன்னதமான கலந்துரையாடலுக்குப் பின் பறக்கும் தட்டுகளைப் (flying saucers) பற்றிக் கேட்பது அபத்தமாகப் பட்டாலும் எனது வாசகர்கள் கேட்பார்களே என்பதாற் கேட்டேன். எதற்கும் உடன்படும் ஃபோர்ட் இதற்குப் பின்வருமாறு பதிலளித்தார்: "ஆம் பறக்கும் தட்டுகள் உள்ளன. அவை வேற்றுக் கிரகவாசிகளின் எண்ணங்களிலே தான் தோற்றுவிக்கப்பட்டன. ஆனால் தாம் அதனைத் தொட்டதாகவோ அதற்குள் சென்றதாகவோ பூவுலகவாசிகள் எண்ணும் அப்படியான ஒரு பௌதீக உரு வெளித்தோற்றங்கள் உண்மையாக இல்லை. அவை பூமியில் நாம் உணரும் திண்மப் பொருட்களைப் போலல்ல. ஆனால் ஒளி, ஒலி ஆகிய சக்திகளின் பரிமாற்றங்களினால் உருக்கிரும்பால் (ஸ்டீல்) உருவாக்கப்பட்டவை போன்ற உண்மைத் தோற்றத்தை எமது பார்வைகளுக்குத் தருகின்றன. சிற்சில சூழ்நிலைகளின் போது அவை பார்வைக்குப் புலப்படலாம். அத்துடன் மிக அண்மையாக வரும் போது புவியின் வளிமண்டலத்தினூடாக விரையலாம். ஆனாற் பூவுலக மனிதர்கள் அவற்றுட் செல்ல இயலாது. அவ்வளவு தான்!